இராவணா 24

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 244
Thread starter  

அத்தியாயம் 24

 

சிவஞானம் நெஞ்சை பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்க…

 

“போடி போக்கத்தவளே.. என் வீட்டு பொண்ணை புரிஞ்சு வர்றவ எங்களுக்கு மருமகளா வந்தா போதும்” என்று உள்ளே வந்தவர்,

 

கணவனின் நிலையை கண்டு அவரின் உடல்நிலையை புரிந்தவர் சட்டென்று “ஆம்புலன்ஸூக்கு ஃபோன் பண்ணு அபிராமி” என்று பதறியவர் கணவனிடம் ஓடினார். 

 

“என்னங்க.. என்னங்க.. என்ன செய்யுது?” என்று அவரின் நெஞ்சை நீவி விட்டுக் கொண்டே, மகனுக்கு ஃபோன் செயதார்.

 

வாசல் கேட்டிலிருந்த பிரக்யாவை கெஞ்சி கொஞ்சி பின் அதட்டி அழைத்து வந்தவன், ஃபோன் அட்டென்ட் செய்து “என்னம்மா?” என்று கேட்க..

 

அவர் விவரம் சொல்ல “ஆம்புலன்ஸ் வேண்டாம் நானே வண்டி எடுக்கிறேன்” என்று துரிதமாக செயல்பட்டு அப்பாவை மருத்துவமனையில் சேர்த்தான். 

 

“மைல்ட் அட்டாக் தான்..! கொஞ்சம் கவனமா பார்த்துக்கோங்க” என்று அப்சர்வேஷன்ல வைத்தனர் சிவஞானத்தை..! மறுநாள் சரியான மருந்துகள்.. முறையான உணவு முறைகள் கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர்.

 

அதற்குள் விஷயம் தெரிந்து விசாலினி குடும்பமும் வந்துவிட்டனர்.

 

சிவஞானத்திற்கு உடல்நிலை சரியில்லை என்று

நீலகண்டனும் ஊர் வாய் சொல்லுக்காக வந்தார், அங்கே அபிராமி வாய் மூலம் பெண்ணின் விஷமும் தெரிந்துவிட அவ்வளவுதான்..!! அடித்து வெளுத்து விட்டார் அவளை. இடையில் புகுந்து தடுத்தான் கதிர்நயனன். 

 

“நீ குறுக்க வராத..! இவளோட இப்ப நிலைக்கு காரணம் நீங்கதான்.. என் வீட்ல இருந்தா ஒழுக்கமாக வளர்த்து இருப்பேன். ஏற்கனவே கொஞ்சம் கூட அடக்க ஒடுக்கம் இல்லாம திரிஞ்சா.. கற்பு மட்டும் தான் இருந்துச்சு, இப்போ அதுவும் இல்லாம போச்சு..! நீ வீட்டுக்கு வா உன்னை அடிச்சே கொல்றேன். இப்படிப்பட்ட பொண்ணு எனக்கு தேவையில்ல..” அவரின் வார்த்தைகளில் அத்தனை கோபம் முகிழ்த்தது கதிர்நயனனுக்கு.

 

“ஏன் யாருமே அவளை புரிந்துக் கொள்ள மாட்டேங்குறீங்க?” என்று‌ கத்தினான். 

 

எல்லோரிடமும் தனக்காக சண்டை போடும்.. தன்னை நம்பும் மாமனை கண்டு விரக்தியாக சிரித்தாள் பிரக்யா.

 

காலையில் இவ்வளவு பிரச்சனைகள் மாறி மாறி நடந்துக் கொண்டு இருந்தது. கூடவே அபிராமியும் எரிகின்ற தீயை அணையாமல் வார்த்தைகளால் எண்ணெய் ஊத்தி பார்த்துக்கொண்டார். 

 

பொதுவான பேச்சுகள் கொஞ்ச நேரத்தில் தகராறாய் மாறி நீலகண்டனுக்கும் அபிராமிக்கும் மாறி மாறி நடந்தது. 

 

பூர்ணசுந்தரியும் மெதுவாக பிரக்யாவின் கையை பிடித்து “என்னடா மா இதெல்லாம்?” என்று கண்ணீர் சிந்த..

 

“சித்தி..” என்று விசும்பியவள் அப்பாவுக்கு பயந்து அவர் கையை விலக்கி விட்டாள்.

 

அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த சிவஞானத்தின் மனது அந்த ஜோசியரின் சொல் வந்து போக..

 

“ம்ஹீம்..‌ இப்படித்தான் நடக்கணும்னு இருக்கு போல..!” என்று கண்மூடி யோசித்தவர், மனைவியின் காதில் ஏதோ சொல்ல அவர் திடுக்கிட்டு பார்க்க.. 

 

“செய்..!” என்றார் கட்டளையாய்..!

 

மெல்ல எழுந்து வந்தவர் “இங்க வா நயனா..” என்று மகனை அருகில் அழைத்தார். 

 

இருவருக்கும் இடையில் நின்று மத்துஸம் பேசி அவர்களின் தேவையற்ற பேச்சுக்களை குறைத்துக் கொண்டு இருந்தவன்,  

 

தந்தை அழைத்தவுடன் அவரிடம் சென்று “இப்ப நீங்க ஏன் எழுந்து வந்தீங்க.. போய் ரெஸ்ட் எடுங்கப்பா” என்றான் அக்கறையாக..!

 

அவன் கையில் தாலியை திணித்தவர் “என் பேத்தி கழுத்துல கட்டு..!” என்றார் உரத்த குரலில்..!

 

“ப்பா.. நான்.. எப்படி? அவ.. அவ..” 

 

“அவ தப்பானவனு நீயும் நினைக்கிறியா நயனா?” என்று மகனின் கண்களை கூர்ந்து பார்த்து சிவஞானம் கேட்க..

 

“ச்சீ.. ச்சீ.. நான் அப்படி சொல்ல வரலப்பா..! நாங்க எல்லாருமே உங்க வளர்ப்பு பா. எப்படி தப்பாவோம்? ஆனா விசாலினி.. அவ குடும்பம்.. பாவம் இல்லையா?” என்று அவன் தயங்க..

 

“ஒரு பொண்ண கல்யாணம் வரை கொண்டு வந்து நிறுத்துறது பாவம்தான் இல்லைன்னு சொல்லல..! அந்த பாவம் என்னை சேரட்டும்..! இப்போ எனக்கு என் பேத்தி தான் முக்கியம். அவ மானம் முக்கியம். அங்க பாரு ரெண்டு பேரும் அவ மானத்தை ஏலம் போடறதை..” என்று அருவருப்போடு அவர்களைப் பார்த்தார் சிவஞானம். 

 

நீலகண்டனும் அபிராமியும் மிக மிக முக்கியமாக ஒருவரை ஒருவரை தாக்கிக் கொண்டு பேசிக்கொண்டிருந்தனர்.

 

“நீ தான் மோசம்” 

 

“நான் தான் மோசம்”

 

“உன் வளர்ப்பு சரியில்லை”

 

“என் வளர்ப்பு சரியில்லை”

 

“உன் பொண்ணு அப்படி போனா”

 

“உன் பொண்ணும் அப்படி போவா..” என்று கேட்கவே நாரசமாக இருந்தது.

 

எல்லாருமே அவர்களைத்தான் பார்த்து முகம் சுளித்தனர். 

 

ஏதோ சிவஞானம் மகனிடம் பேசுகிறார் என்பது போல விசாலினியின் குடும்பத்தார் பார்த்து இருக்க…

 

“தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை..!” என்று நினைத்தவன் விசாலினியை ஒரு முறை பார்த்து மனதார மன்னிப்பு கேட்டுக் கொண்டவன்,

 

விடு விடு என்று பிரக்யா அருகே வந்து அவளை கைபிடித்து பூஜையறைக்கு அழைத்துச் சென்றவன், அவள் என்ன ஏதென்று உணரும் முன்பே, தந்தை கொடுத்த பொன் தாலி கோர்த்த மஞ்சள் கயிற்றை அவள் கழுத்தில் கட்டி இருந்தான்.

 

“அய்யய்யோ.. இது என்ன அநியாயம்? என் பொண்ணுக்கு துரோகம் பண்றீங்க.. அய்யோ ஆண்டவா.. என் பொண்ணு வாழ்க்கை..” என்று விசாலினி அம்மா கத்தியதில் தான் அனைவரும் இங்கே திரும்பிப் பார்க்க..

 

பூர்ண சுந்தரியை தவிர்த்து அனைவர் உள்ளமும் வெடித்து சிதறிய எரிமலையாய் இருந்தது. 

 

விசாலினி கலங்கும் விழிகளோடு கதிர்நயனனை பார்க்க.. அவனோ அவள் பார்வையை தவிர்த்தான். அவனுக்கு தெரிந்தது, தான் அவளுக்கு செய்தது துரோகம் என்று..!

 

குடும்பம் ஒரு கதம்பம் என்பது போல மாத்தி மாத்தி ஆளாளுக்கு பிரக்யாவுக்கு விதவிதமான சாபங்கள் விட்டு.. கூடவே அவள் வயிற்றில் வளரும் பிள்ளைக்கும் சாபத்தை அள்ளி வழங்கியே சென்றனர். 

 

சிவஞானத்திற்கு மனது சற்று நிம்மதியாக இருந்தது. இன்னும் தாலி கட்டிய அந்த கணத்திலிருந்து மீளாமல் சமைந்து நின்றவளை இழுத்து வந்து தாய் தந்தையரிடம் ஆசிர்வாதம் வாங்க.. அப்படியே அமர்ந்து குலுங்கி குலுங்கி அழுதாள் பிரக்யா. 

 

“சின்னுவை பாரு..” என்று மனைவியிடம் கூறியவர்,

 

அதன் பின் முக்கியமான இந்த விஷயத்தை எந்த நபரிடம் கூறினால் உறவுக்குள் எல்லோருக்கும் பரவும் என்பதை அறிந்து அப்படியே செய்து முடித்தார். 

 

அடுத்த ஒரு மாதம் அவர்கள் வீட்டுக்கு அத்தனை தூது அத்தனை உறவினர்களை அனுப்பினார் நீலகண்டன்.

 

“இந்த திருமணம் செல்லாது. என் மகள் எனக்கு வேண்டும்” என்று பாசத்தை காட்டி முடியாததால் ஆட்களை கொண்டு மிரட்டியும் பார்த்தார். 

 

ஆனால் எதற்கும் சிவஞானமும் நயனனும் மசியவில்லை..!

 

இதற்கிடையில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த விசாலினியின் அம்மா அப்பாவை தூண்டிவிட்டு “எங்க பொண்ண ஏமாத்திட்டான்.. வழக்கு போடுவோம்.. போலீஸில் கம்ப்ளைன்ட் செய்வோம்னு மிரட்டுங்க.. அப்போ கதறிக்கிட்டு உங்க கால்ல விழுவான் அந்த கதிர்நயனன்” என்று அவர்களை அங்கே ஏற்றி விட்டார். 

 

நீலகண்டன் பக்கம் தூதுவந்த உறவினர்களை எல்லாம் பார்வையாலையே விரட்டி அடித்தான் நயனன், ஆனால் விசாலினி வீட்டில் இருந்து வரும் பொழுது ஒன்றும் பேச முடியாமல் வாய் அடைத்து நின்றான். காரணம் தவறு இவர்களோடது தானே..

 

அவர்களிடம் சிவஞானம் “என் பேத்திய வெளிய கொடுக்க இஷ்டமில்லைங்க.. அதனால என் மகனுக்கே கட்டி வைச்சிட்டேன். அவ தாய் இல்லாத பொண்ணு. இந்த பொண்ணுக்கு என்ன பண்ணனும்னு சொல்லுங்க நாங்க பண்றோம். ஆனா போலீஸு கேசு கோர்ட்டுன்னு போனாங்கன்னா நாங்களும் பதிலுக்கு பண்ணுவோம்” என்று தன்மையாகவே பேச அவர்களும் என்ன சொல்வது என்று தெரியாமல் திரும்பி விட்டனர். 

 

மழை விட்டும் தூவானம் விடாதது போல மகனுக்கும் பேத்திக்கும் திருமணம் முடித்ததும், அந்த பிரச்சனை முடிந்து விடும் என்று பார்த்தால்.. முடியாமல் தொடர்ந்துக் கொண்டே இருக்க.. நொடிந்து போனார் சிவஞானம்.

 

இன்னும் எவ்வளவுதான் இந்த இதயம் தாங்கும்? இந்த அழுத்தத்தை கணத்தை தாங்காமல் ஒருநாள் இரவில் படுக்கையிலேயே சிவலோக பதவியை அடைந்தார் சிவஞானம்.

 

தந்தை இழந்த துக்கத்திற்கு வந்த அபிராமி வாயிலும் நெஞ்சிலும் அடித்துக் கொண்டு அப்பாவுக்காக அழுததை விட “இவளால் தான் அப்பா இறந்தாரு” என்று பிரக்யாவை வசை பாடியது தான் அதிகம்.

 

அது மட்டுமல்லாமல் தந்தையின் இறந்த உடலை காண இயலாமல் நயனன் வெளியில் அமர்ந்திருக்க.. அவனுக்கு ஆறுதல் கூறாமல்,

 

தனியாக தவிக்க விட்டுச் சென்ற கணவனை கண்டு உறைந்திருந்த அம்மாவுக்கு ஆறுதல் அளிக்காமல்..

 

ஓரமாக அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தவளின் கை பிடித்து எழுப்பி தரதரவென்று இழுத்து “வெளில போடி ராசிகெட்டவளே.. உன் கழுத்துல என் தம்பி தாலி கட்டின நேரம்தான் என் அப்பா இறந்துட்டாரு.. நீ இந்த வீட்ல இருந்தா அடுத்தது என்னென்ன நடக்குமோ?” என்று அத்தனை வசை பேசினார்..

 

“நடந்தது நடந்து போச்சு..! அதையே பேசிட்டு இருந்தா எப்படி அபிராமி? அதான் புருஷன் பொண்டாட்டினு ஆயாச்சே.. வீட்டை விட்டு போக சொன்னா அந்த பொண்ணு அடுத்து எங்க போகும்?” என்று உறவினர்கள் பிரக்யாவுக்கு ஆதரவாய் பேச.. 

 

அவ்வளவு தான்..! அவர்களை எதிர்த்து ஆட்டமே ஆடி விட்டார். அபிராமியின் அமில நாக்கை கண்டு அங்கு உள்ளவர்களை ஒதுங்கிக் கொண்டனர். 

 

நயனனுக்கு இந்த விஷயம் தெரியாது. வாயிலேயே தள்ளிவிட்ட படியே வெகு நேரம் அப்படியே கிடந்தாள் பிரக்யா. 

 

பர்வதத்தம்மாளோ பதியை இழந்த தூக்கம் தாங்காமல் அழுது அழுது கண்களில் நீர் வற்றி வெறித்த பார்வையோடு அமர்ந்திருந்தார். 

 

அடுத்தடுத்து அப்பாவின் காரியத்தை செய்ய உள்ள வந்தவன் கீழே வெறித்த பார்வையோடு கிடந்த பிரக்யாவை கண்டு அதிர்ந்து அவளை தூக்கச் சென்றவனுக்கு உறவினர்கள் நடந்ததை கூற, 

 

அவளை அழைத்து பூர்ண சுந்தரியிடம் ஒப்படைத்தவன் “அக்கா.. இரண்டு மூணு நாளைக்கு நீங்க தான் இவளை பார்த்துக்கணும்” என்றான். 

 

அதன்பின் அப்பாவின் காரியம் முடித்து வீடு திரும்பும் சம நிலைக்கு வரவே ஒரு வாரத்துக்கு மேலானது. பூர்ணசுந்தரி, பூர்வா, ஆதிரா, ஆர்யன் எல்லோரும் அங்கே தான் இருந்தார்கள். 

 

தன் பேர் ஏதும் கெட்டுவிடக் கூடாது என்று மனைவியையும் மகளையும் அங்கே விட்டு வைத்திருந்தார் நீலகண்டன். பின் அழைத்துச் சென்று விட்டார்.

 

கதிர்நயனன் தன்னறையில் உறங்க, அம்மம்மாவோடு பிரக்யா தங்கிக் கொண்டாள்.

 

அடுத்து வந்த ஒரு இரவில் வயிற்று வலியால் கத்திய பிரக்யாவை அழைத்துக் கொண்டு அவன் மருத்துவமனை செல்லும் முன்பே வயிற்றில் இருந்த குழந்தை கலைந்து போனது.

 

அதன்பின் பேச்சே இல்லை அவளிடம். சிவஞானத்தின் முப்பதாவது நாள் காரியம் முடிய..

 

“கதிரு.. அதுதான் வயித்துல உள்ள குழந்தையும் இல்லாம போயிடுச்சே.. அவளை அத்துவிட்டுட்டு விசாவை கல்யாணம் பண்ணிக்கோ” என்று அடுத்த பிரச்சனை ஆரம்பித்தார் அபிராமி. 

 

“நீ வாய மூடு இல்லன்னா.. அக்கான்னு கூட பார்க்க மாட்டேன்.!” என்று பேசியவன், விடு விடு என்று உள்ளே சென்று விட்டான்.

 

ஆனால் அவனைத் தொடர்ந்து சென்ற விசாலினி அவனிடம்‌ நியாயம் கேட்க “அவ வாழ்க்கையை நான் தான் சீரமைச்சி கொடுக்கணும். அவ என்னோட பொறுப்பு” என்று கூறியதை கேட்டு உள்ளம் உடைந்தவள்,

 

மறுநாள் கணவனின் முன் நின்றாள். ஆம் கணவன் தானே கதிர்நயனன்..!

 

“எனக்கு பழைய காலேஜுக்கு போக பிடிக்கல.. என்னை யூ.எஸ்ல படிக்க வைங்க மாமா. நான் காலேஜ் அதுக்குண்டான ப்ராசஸஸ் எல்லாம் பார்த்துட்டேன்” என்றாள்.

 

இப்போதைக்கு அவளுக்கும் ஒரு மன மாற்றம் தேவை என்பதை உணர்ந்தவன், அவளின் மீதமுள்ள ஒரு வருடத்தை படிக்க அங்கே அனுப்பி வைத்தான் நயனன்.

 

அங்கே படிப்பை தொடர்ந்தவள் அனைவரிடமும் தொடர்பை கத்தரித்துக் கொண்டாள். 

 

எப்போதாவது ஆர்யன் ஆதிராவிடம் மட்டும் பேசுவாள். வெகு சொற்ப சமயங்களில் பூர்வாவிடம் பேசுவாள்.

 

கதிர்நயனன் ஃபோன் செய்யும் போதெல்லாம் அதை கட் செய்து விடுவாள் ஒரு வாரம் பார்த்தவன் பின்பு வாய்ஸ் நோட் போட்டான்.

 

“நீ என்னை அவாயிட் பண்றேன்னு தெரியுது. உனக்கான வலியும் ரணமும் பெருசு. அது ஆற உனக்கான காலத்தை நான் கொடுப்பேன். ஆனா எனக்கான காலம் வரும்போது உன்னை எடுத்துப்பேன் அதுக்கு உன் சம்மதம் தேவையில்லை..!” என்றவன் அதன் பின் அவளை தொந்தரவு செய்யவில்லை.

 

பெரிதாக யாரிடமும் தொடர்பு இல்லாமல் சென்றது அவளது கடந்த மூன்று வருடங்கள்..!

 

அனைத்தையும் நினைத்து பார்த்தவள் ஒரு பெரு மூச்சோடு கண் விழிக்க.. அருகில் அவளது அம்மம்மா இல்லை..!

 

“என்ன ப்ளாஷ் பேக் எல்லாம் போயிட்டு வந்தாச்சா? இப்ப ப்ரஸண்ட்டுக்கு போகலாமா பொண்டாட்டி..?" என்றவனின் குரலில் அவள் திடுக்கிட்டு பார்க்க.. அவளை கூர் பார்வையோடு கை கட்டியபடி பார்த்திருந்தான் நயனன்.. கதிர்நயனன்..!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top