அத்தியாயம் 23
“ம்ம்.. உடம்பு முடியாம வரல.. புள்ள உண்டாயிட்டு வந்திருக்கா” என்றவனின் கடுங்கோபத்தில் இருவரும் அதிர்ந்து திகை பூண்டை மிதித்தாற் போல சமைந்து நின்றனர்.
நயனன் அடித்த அடியில் சுருண்டு கீழே விழ இருந்தவளை தூக்க வந்த சிவஞானம் நயனன் கூறிய வார்த்தையில் அதிர்ந்து நின்று விட, அடித்த நயனனே அவளைத் தாங்கி பிடித்தான்.
அப்படியே நின்றுவிட்ட தாத்தா அம்மம்மாவை கண்ட பிரக்யா மடிந்து அமர்ந்து ஓவென்று வாய் விட்டு கதறியவளை கண்ட நயனனுக்கும் பாவமாகத்தான் இருந்தது.
அமர்ந்த வாக்கிலேயே மெல்ல தவழ்ந்து சென்றவள், தாத்தா அம்மம்மாவின் கால்களை இரு கைகளால் பற்றியவள் “என்னை மன்னிச்சிடுங்க.. என்னை மன்னிச்சிடுங்க..” என்று கதறி அழுக..
சிவஞானம் தான் முதலில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவர் அவளை எழுப்பி சோபாவில் அமர வைத்து தானும் அருகே அமர்ந்து அவள் கண்களை துடைத்து விட்டார்.
“காதலா சின்னு? எங்க கிட்ட சொல்லி இருக்கலாம்ல.. சரி யார்னு சொல்லு. பேசுவோம்” என்று தளர்ந்த குரலில் பேச..
அவளோ பேந்த பேந்த விழித்தபடி “லவ்வு எல்லாம் இல்ல தாத்தா.. படிப்பை மீறி என் மனசை நான் அலைப்பாய விட்டது இல்ல தாத்தா..” என்றாள்.
“ஓஹ்..! லவ் இல்ல..! தென் ஹவ்? யாரு?” என்று கூர்ந்து கேட்ட மாமனை, கண்டு எச்சில் விழுங்கியவள்,
“அது.. அது.. இதுக்கு காரணம்.. காரணம்.. வந்து.. தெரியல” என்றாள், நடுங்கியப்படி.
அதுவரை தெரியாமல் காதல் செய்து வயது கோளாறில் அக்கா பெண் தப்பு செய்திருக்கிறாள் என்று நினைத்து, தனது கோபத்தை அடக்க முடியாமல் நின்றிருந்தவன், இவள் கூறியதைக் கேட்டவனுக்கு பெரும் அதிர்ச்சி..!
“என்..என்ன சொல்ற? என்ன சொல்ற?” என்று கோபம் மிகுதியில் அவளை உலுக்க..
“யய்யா.. அவ புள்ள தாங்கி இருக்கா.. இப்படி போட்டு உலுக்குற?” என்று பர்வதத்தம்மாள் நயனனை தடுத்து மறுபக்கத்தில் அமர்ந்து,
“என்னடா ஆச்சு சின்னு.. யாருன்னு சொல்லுடா தங்கம்.. நாங்க பேசி பார்க்கிறோம். எங்களுக்கு பயந்து இப்படி சொல்லாத டா” என்று விசும்பலோடு அவள் தாடையை பற்றி கேட்டார்.
“நிஜமா தெரியல அம்மம்மா..” என்று உதடு பிதுக்கி அழுத பேத்தியை கண்டு இருவருமே தலையில் அடித்துக் கொண்டு அழுதனர்.
“சின்னு.. மாமா உன்னை அடிக்க மாட்டேன். ஒன்னும் சொல்லல மாட்டேன். என்கிட்ட மட்டும் சொல்லு டா சின்னு. என்ன நடந்தது யாரையாவது லவ் பண்ணியா? அவன் இப்போ இல்லனு சொல்றானா? அவன் எத்தனை பெரிய கொம்பனா இருந்தாலும் மாமா அவனுக்கே உன்னைய கட்டி வைக்கிறேன்.. இல்ல.. அவனை என்ன செய்யணும்னு சொல்லு செஞ்சிடுவோம்” என்று அவள் முன் அமர்ந்து பொறுமையாக கேட்டான்.
அவளோ விரக்தியாக சிரித்து இரு பக்கமும் தலையாட்டினாள்.
“என்னன்னு சொல்லுமா?” என்று மீண்டும் அவள் தாடையை பற்றி மெதுவாக கேட்டவன், அவள் மறுத்து தலையாட்ட,
அடுத்த நிமிடம் பொறுமை பறந்து போக, “இப்ப சொல்லப் போறியா இல்லையா?” என்று அவள் தாடையை அழுத்தமாக பற்றி கேட்க, அவளுக்கு வலித்தாலும் கண்ணீர் பெருக மாமனை தான் கண் சிமிட்டாமல் பார்த்தாள்.
ச்ச… என்று அவள் தாடையை விட்டவன் “இங்க பாரு சின்ன வயசுல இருந்து உன்னை நாங்க தான் வளர்த்து வரோம். இப்போ இந்த மாதிரி விஷயம்னா.. எல்லாரும் என்ன சொல்லுவாங்க? உன்னை வளர்த்த அம்மம்மாவுக்கும் தாத்தாவுக்கும் நல்ல பேரு வாங்கி கொடுத்துட்ட இல்ல.. உன்னை அவ்வளவு தூரம் படிக்க வைக்க கூடாதுன்னு ஒத்த கால நின்னாரு உங்க அப்பாரு.. அவரை மீறி நான் போய் சேர்த்துட்டு வந்தேன் பாரு.. எனக்கும் நல்ல பேரு வாங்கி கொடுத்திட்டல” என்று தொண்டை அடைக்க பேசிய மாமனை கண்டவளுக்கு இன்னும் அழுகை பெருகியது.
“அது.. அது.. ஒரு த்ரீ மன்த்ஸ் முன்ன எஜுகேஷன் டூர் கூட்டிட்டு போயிருந்தாங்க.. அங்க.. அங்க.. நைட் ஹோட்டல்ல.. ஸ்டே பண்ணியிருந்தோம்..”
“அங்கையா? அந்த ஹோட்டலையா? ஹோட்டல் பேரு என்ன? என்னைக்குன்னு சொல்லு நான் சிசிடிவி செக் பண்ண சொல்றேன்” என்று பரபரப்பாக கேட்டவனை கண்டு, இல்லை என்று வேகமாக மறுத்தவள்,
“மறுநாள் ட்ரெக்கிங் போயிட்டு அன்னைக்கு அந்த மலையிலேயே நாங்க எல்லாம் டென்ட் போட்டு தங்கி இருந்தோம்.. அங்க.. அங்க.. தான்.. யாருன்னு தெரியலையே அம்மம்மா..” என்று அம்மம்மாவை கட்டிக் கொண்டு அழுதவளை கண்ட மூவருமே கலங்கி போயினர்.
அவள் பேச பேச கண்களை இறுக்க மூடி அந்த நிகழ்வை கடக்க முடியாமல் தவித்தான் நயனன்.
பருவ வயதில் காதல் மோகத்தில் ஹார்மோன்கள் உணர்ச்சி தூண்டலில் தப்பு செய்யவில்லை அவள்..!
திமிர் எடுத்து போய் ஆண்களோடு பழகி வயிற்றை நிரப்பிக் கொண்டு வரவில்லை அவள்..!
எங்கோ.. ஏதோ ஒரு இடத்தில்.. தன்னை அறியாமல் தன் கற்பையும் இழந்து சிசுவையும் சுமந்துக் கொண்டிருக்கும் அக்கா பெண்ணை நினைத்து அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
தன்னை இழந்து விட்டோம் என்று தெரிந்த அக்கணத்தில் அவள் எவ்வாறு துடித்து இருப்பாள்? எத்தனை அழுதிருப்பாள்? எத்தனை துடித்திருப்பாள்?
அவளை காக்க தவறிட்டேனே என்று கை முஷ்டியை மடக்கி அருகில் இருந்த கண்ணாடி மேசையில் குத்த அது சில்லாக சில்லாக உடைந்து சிதறியது.
மூவரும் அவனின் செயலில் திகைத்து நின்றனர்.
“சரி போ.. ரூம்ல தூங்கு போ” என்றான் துக்கம் தொண்டையை அடைக்க..
“இல்ல இல்ல வேணாம்.. அவ இன்னைக்கு எங்க கூடவே படுத்துக்கட்டும்” என்று பர்வதத்தம்மாள் அவளை தங்களோடு அழைத்துச் சென்றார்.
சோர்ந்து நடந்துச் செல்லும் மூவரையும் பார்த்து ஒரு பெருமூச்சு விட்டபடி தன்னறைக்கு வந்தான் நயனன்.
ஃபோனை பார்க்க ஏகப்பட்ட மிஸ்டு கால்கள் விசாலினியிடமிருந்து..
திருமணம் என்று முடிவான பிறகு அடிக்கடி பேச ஆரம்பித்திருந்தாள் விசாலினி. முதலில் வேலை அது இது என்று ஒதுக்கியவன், ‘அவளுக்கும் ஆசை இருக்கும் தானே.. நேரம் கிடைக்கும் போது பேசுடா மடையா’ என்று அவன் அறிவு அறிவுறுத்த, அவ்வப்போது பேசிக் கொண்டு இருந்தான். தினமும் இரண்டு முறையாவது பேசி விடுவாள் விசாலினி.
பெரிதாக காதல் மொழிகளை எல்லாம் கொட்டுவதில்லை அவள்.. அதை அனுமதிப்பதில்லை அவன்..!
“என்ன செஞ்சீங்க? என்ன சாப்பிட்டீங்க? நான் இன்னைக்கு இதெல்லாம் பண்ணினேன்..” என்று இப்படியாகத்தான் இருக்கும் இருவரின் சம்பாஷணைகளும் ஏனென்றால் ஒரு முறை கூட வழிந்து பேச மாட்டான் அவளிடம்.
ஒருமுறை இவளாகவே நிச்சயதார்த்த நேரத்தில் “நான் இந்த டிரஸ்ல நல்லா இருக்கேனா? அந்த காஸ்ட்யூம் எனக்கு நல்லா இருக்கா?” என்று இவளாக கேட்டும்,
“ம்ம் நல்லா இருக்கு..!” என்று பட்டும் படாமல் அவன் பதில் அளித்ததில் அவள் முகம் வாடி நின்றாள்.
ஆனாலும் விடாமல் “இந்த டிரஸ்ல நீங்க ரொம்ப ஹாண்ட்சமா இருக்கீங்க..” என்று பாராட்டும் பொழுது, “ஓஹ்..” என்று முடித்துக் கொண்டான்.
அவளும் விடாமல் பேச பேச… நயனனும் கொஞ்சம் கொஞ்சமாக மாறினான்.. அவளிடம் பேசினான், ஆனால் எல்லையோடு..!
ஆனால் கல்யாணமே முடிவாகிவிட்டது இனி என்ன வெட்கம்.. கூச்சம் என்று இவள் சற்று எல்லையை கடக்க முயல,
ஒருமுறை நேரடியாகவே சொல்லி விட்டான். “எல்லாத்தையும் கல்யாணத்துக்கு முன்னாடியே பேசினினா.. கல்யாணத்துக்கு அப்புறம் நாம என்ன பேசுவோம்? அப்ப பேசவும் கொஞ்சம் இல்ல நிறைய ஸ்வீட் நத்திங்ஸ் வேணும் விசா சரியா?” என்று மென்மையாக அவன் பேசிய பேச்சில் அதுக்கு பின் வெறும் நடப்புகளை மட்டுமே பேசுவாள் விசாலினி.
இன்று ஏகப்பட்ட மிஸ்ட்டு கால்களை கண்டு அவனுக்கும் அவளுடன் பேசுவது நன்றாக இருக்கும் போல தோன்ற, அவளுக்கு அழைத்தான்.
“என்னங்க ஊருக்கு வந்துட்டீங்களா? நீங்க வந்ததும் ஃபோன் பண்ணுவீங்கன்னு ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கேன்?” என்று கேட்டாள்.
‘இந்த அம்மாட்ட சொல்ல வேணாம்னு சொன்னா சொல்லி வச்சிருக்காங்க பாரேன்..!’ என்று பல்லை கடித்தான்.
“யாரு அம்மா சொன்னாங்களா?” என்று இவன் எதார்த்தம் போல கேட்க..
“இல்ல.. இல்ல.. நான் அபி அண்ணிக்கு தான் ஃபோன் பண்ணினேன். அவங்க தான் நீங்க உமையாவை கூப்பிட்டு வர போயிருக்கீங்கன்னு சொன்னாங்க.. அவளுக்கு ஏதோ உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்க.. என்ன ஆச்சு அவளுக்கு? இப்போ ஓகேவா?” என்று சற்று அக்கறையுடன் கேட்டவளிடம் என்ன சொல்வது என்று சிறு தடுமாற்றம் அவனுக்கு.
“ம்ம்.. வைரல் ஃபீவர். அதனால அங்க மத்த ஹாஸ்டல் பிள்ளைகளுக்கும் ஸ்பிரட் ஆகும்னு கூட்டிட்டு போக சொல்லிட்டாங்க”
“ஓ அப்படியா? நாளைக்கு டாக்டர்ட்ட கூட்டிட்டு போய் காட்டுங்க. நீங்களும் அவகிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இருங்க..” என்றதும் அவனுக்கு சுர்ரென்று கடுப்பேற
“என்ன சொன்ன? கம் அகைன்?” என்று அவன் சத்தமாக கேட்க.. அதில் அவள் முதுகு தண்டு சில்லிட்டது.
“இல்ல.. இல்ல.. கல்யாண நாள் நெருங்கிட்டு இருக்கு. நீங்க.. அவ.. ஃபீவர்.. உங்களுக்கு ஒட்டிக்கிச்சுன்னா.. அதனாலதான்.. சாரி..!” என்று மெல்லிய குரலில் மன்னிப்பு கேட்டவளின் குரல் இளம் சாரலாய் அவன் மனதின் வெம்மைக்கு குளிர்ந்தது.
இவளும் மாறிவிட்டாள் என்று எண்ணி அவளிடம் சிறிது நேரம் பேசியே ஃபோன் வைத்தான்.
வெகு நேரம் கழித்து உறங்கியதால் காலையில் சற்று தாமதமாக விழித்த கதிர்நயனன் காதில் விழுந்தது என்னவோ அவள் அக்காவின் ஆக்ரோஷ கத்தல் தான்.
“போச்சு..! காலையிலேயே வந்துட்டா? அம்மாவும் சொல்லிட்டாங்களா?” என்று வேகமாக கீழே இறங்கி சென்றான்.
“நீ எங்க வீட்டுக்கு வந்த சாபம் டி..! பீடை..! தரித்திரம்..! நீ இருக்கிறதை விட செத்து ஒழிஞ்சிருக்க வேண்டியது தானே.. இப்படி வயித்த தள்ளிட்டு வந்து நிக்கிற.. போ போய் எங்கேயாவது செத்து தொலை..” என்று அபிராமி அவளின் முடியை பிடித்து தரதரவென்று இழுத்து தள்ளிவிட வேகமாக வந்து பிரக்யாவை தாங்கினான் நயனன்.
“அவளை விடுடா.. அவளை விடு.. அவளை நீ தொட்டாலே.. ச்சீ.. பார்கவிக்கா பேர் கெடுக்கன்னே வந்து பொறந்திருக்கா.. அவளுக்கு வந்த கேன்சர் உனக்கு வந்து நீ போய் தொலைஞ்சு இருக்கலாம்..!” என்று அபிராமி திறந்த வாய் மூடவே இல்லை.
“படிக்க தானே போன… இல்ல.. படுத்து…” என்று அவர் அடுத்து சொல்லும் முன், "அபிராமி" என்று பெத்தவர்கள் கத்த..
“வாய மூடு கா.. அவ எந்த தப்பும் செய்யல..!” என்று கதிர்நயனன் அபிராமியிடம் பிரக்யாவுக்கு ஆதரவாக பேச இன்னும் அவர் கோபம் பெருகியது தான் மிச்சம்.
“உனக்கு எப்படி தெரியும்? அவ சொன்னா நீ நம்புவியா? அப்படியே இவ உண்மை விளம்பி.. இவளுக ஸ்கூல் வயசிலேயே ஆம்பள புள்ளகள பார்த்தவளுங்க தானே?” என்றோ பிரக்யாயின் தோழி செய்த தவறுக்கு, இன்று இவளை குற்றம் சாட்டும் சித்தியின் ஒவ்வொரு வார்த்தைகளும் எரிமலை லாவா குழம்பாய் அவள் மீது பட்டு மாறாத ரணங்களையும் வலியையும் கொடுத்தது.
“போதும் அபிராமி பேசாத.. உன்னோடது வாயா இல்ல அமில குப்பியா? எங்க பேத்திய நாங்க நம்புவோம். நீ என்ன வேணாலும் சொல்லிக்கோ.. இஷ்டம் இருந்தா இங்க வா இல்லன்னா வராதே..!” என்றவர் வேகமாக சென்று மகன் அருகில் நின்ற பேத்தியை “நீ வாடா தங்கம்..!” என்று உள்ளே அழைத்து வர அம்மாவினை மறைத்தாற் போல் நின்றார் அபிராமி.
“முடியாதுமா முடியவே முடியாது..! அவ நம்ம வீட்டுக்குள்ள இருக்க கூடாது.. நாளைக்கு தம்பியை கல்யாணம் பண்ணிக்க போற என்னோட நாத்தனார்.. அந்த பொண்ணு இவ கூட எப்படி ஒரே வீட்டுக்குள்ள.. சீச்சி.. எனக்கே உடம்பு கூசுது.. இவ இந்த வீட்ல இருக்கக்கூடாது. அவ்வளவு தான்.! இவளை கொண்டு போய் அவங்க அப்பா வீட்டுல விடுங்க.. இல்ல எங்கயாவது ஹாஸ்டலில் கொண்டு போய் சேருங்க..” என்று அத்தனை ரகளை செய்துக் கொண்டிருந்தார்.
“அம்மம்மா நான் ஹாஸ்டலுக்கே திரும்ப போறேன்” என்று மெல்லிய குரலில் கூறிய பேத்தியை கண்டு கண் கலங்கினார் பர்வதத்தம்மாள்.
கலங்கிய பேத்தியின் தலையை வருடியவர், முதல் பேர குழந்தை என்று இவள் அத்தனை செல்லமாய் வளர்ந்தது என்ன.. இன்று அத்தனை பேரிடமும் பேச்சு வாங்குவது என்ன? என்று மனம் துடிக்க “இல்லமா நீ எங்கே போகக்கூடாது..! நானும் தாத்தாவும் இருக்கிறவரை நீ எங்க கூட தான் இருப்ப.. யாருக்கு இஷ்டம் இல்லையோ அவங்க இங்க வர வேணாம்” என்று அவர் கைப்பிடித்து மகளை முறைத்தவாறு உள்ளே சென்றார்.
“இல்ல.. இல்ல.. நான் வரல.. நான் எங்கேயாவது போறேன்..” என்று அவளோ அவர் கையை விடுத்து வேகமாக ஓடினாள் வாயிலை நோக்கி…!
பின்னால் ஓட போன அம்மாவின் கையைப் பிடித்து தடுத்த அபிராமி “அவ போனால் போகட்டும், எங்கேயோ போய் தொலையட்டும்.. நீ போய் வேலையை பாரு.. கல்யாணம் வேற தலைக்கு மேலே இருக்கு” என்றவரின் கையை உதறி தள்ளியவர்,
“எனக்கு என் பேத்தி தான் முக்கியம்” என்று வாயிலை நோக்கிச் சென்றவரை தடுத்த நயனன்,
“நீங்க உள்ள போங்க மா.. நான் கூட்டிட்டு வர்றேன்..” என்றான் நயனன்.
நயனன் அந்த பக்கம் சென்றதும் “அவன் வாழ்க்கையும் சேர்த்து அழிச்சிறாதீங்க.. இவளை இப்படி வச்சி இருந்தீங்கனா.. அவனுக்கு எப்படி கல்யாணம் நடக்கும்? வரவ எப்படி அவனோட சந்தோஷமா குடும்பம் நடத்துவா?” என்று அவர் பேச பேச இங்கே சிவஞானத்திற்கு ஏற்கனவே மனதில் அழுத்திக் கொண்டிருந்தவை எல்லாம் இப்பொழுது பெரிதாக உருவெடுத்து இன்னும் அவரை
அழுத்தமாக அழுத்த.. நெஞ்சை நீவிக் கொண்டு அமர்ந்திருந்தார்.
உடல் எல்லாம் வியர்த்துக் கொட்டியது..! கண்கள் மெல்ல சொருக ஆரம்பித்தது..!
