அத்தியாயம் 22
“பரு.. பரு..” என்று அழைத்தப்படியே வந்த கணவனை கண்டு சந்தோஷ முகமாக வேகமாக சென்றார் பர்வதத்தம்மாள்.
காரணம் கதிர்நயனன் விசாலினி கல்யாணத்திற்கு தேதி குறித்து வர சென்றிருந்தார் சிவஞானம், அவர்களது ஆஸ்தான ஜோதிடரிடம்.
கணவன் வந்ததும் முகம் கொள்ளா புன்னகையோடு “வாங்க.. வாங்க.. ஜோசியர் என்ன சொன்னாருங்க.. இந்த மூணு மாசத்துக்குள்ள கல்யாணம் வச்சுக்கலாமா? விசாலினிக்கு வேற கல்யாணம் யோகம் முடிய போகுதாம். அடுத்து கல்யாணம் யோகம் வர அவளுக்கு அஞ்சு வருஷம் ஆகுமாம்” என்று வருத்தத்தோடு பகிர்ந்தார், அபிராமி அவரிடம் கூறியவற்றையெல்லாம்..
“அந்த பொண்ணுக்கும் இப்ப என்ன வயசு ஆகுது? நம்ம சின்னுவோட இரண்டு வயசு தானே பெரியவ..” என்றார் பர்வதத்தம்மாள் கொடுத்த குளிர்ந்த மோரை வாங்கி குடித்துக் கொண்டே..
"எதே? அப்படி சொல்லாதீங்க.. நம்ம சின்னு சின்ன பொண்ணு..” என்றார் பேத்தி இன்னும் சிறு பெண்ணாகவே அவர் கண்களுக்கு தெரிந்தாள் போலும்..
“ஹா.. ஹா.. உன் பேத்தி இப்போ டாக்டரு.. ஞாபகம் இருக்கா?” என்று சிரித்தார்.
“க்கும்.. முதல்ல நல்ல விஷயத்தை பேசுங்க.. தேதியை காட்டுங்க” என்றதும் சிவஞானம் முகத்தில் ஒரு வருத்தம் வந்து போக, அதை மறைத்து ஜோசியர் குறித்துக் கொடுத்திருந்த தேதிகளை காட்டினார்.
“இதுல நாலஞ்சு தேதி இருக்கு.. மூணு தேதி ரொம்ப நல்லா இருக்கு வளர்பிறை முகூர்த்தம். அந்த நாளு மருமகளுக்கு சரி வருதானு கேட்டு சொல்லு” என்றார்.
“சரிங்க இதை இப்பவே பேசுறேன்” என்றதும் அவர் கையைப் பிடித்த சிவஞானம் “என்ன பரு வயசானாலும் எல்லா பழக்கவழக்கங்களும் மறந்து போகுதா? இல்ல புள்ள கல்யாண விஷயத்தை கேட்டதும் சந்தோஷத்துல கண்ணு மண்ணு தெரியலையா உனக்கு?” என்றதும் அவர் யோசனையாக பார்க்க..
“முதல்ல இதை கொண்டு போய் சாமியறையல வச்சு மனசார கும்புட்டுட்டு அப்புறம் எடுத்துட்டு வா..” என்று கணவன் சொன்னதும்..
“அட..! ஆமா பாருங்களேன் மறந்துட்டேன்” என்று லேசாக தன் தலையில் தட்டி கண்களை சுருக்கிக் கொண்டே சென்ற மனைவியை ரசனையாக பார்த்தார் சிவஞானம்.
காதலுக்கு வயது ஏது? ஆத்மார்த்தமாக வாழ்ந்த தம்பதிகள் என்றுமே காதலர்கள் தான். அதிலும் கணவனுக்கு எப்பொழுதுமே மனைவி அழகி தான். ரசிப்பது தவறும் இல்லையே?
சாமியறை நோக்கிச் சென்றவர் “அந்த சாக்குல எனக்கு வயசு ஆயிடுச்சுன்னு சொல்லிக் காட்டுறீங்களா?” என்று கணவனை செல்லமாக முறைத்துக் கொண்டே சென்றார். அந்த சீட்டினை கடவுள் முன் சமர்ப்பித்து “என் மகனுக்கு நல்லபடியாக திருமணம் நடக்க வேண்டும்.!” என்று மனதார பிரார்த்தித்து அதன் பின்னே விசாலினி அம்மாவுக்கு அழைத்து அந்த தேதிகளை அவர் சொன்னார்.
விசாலினி அம்மாவிடம் இருந்து ஃபோனை வாங்கி “அத்தை ரொம்ப சந்தோஷம்.. எவ்வளவு சீக்கிரம்.. பக்கத்துல இருக்கும் நல்ல நாளா நான் பார்த்துட்டு உங்களுக்கு சொல்றேன். நம்ம வீட்டுக்கு நான் சீக்கிரமே வரணும்” என்றதும்,
மருமகள் மகன் மீது கொண்ட இந்த அதீத அன்பினால் தான் சொல்கிறாள் என்று புரிந்தவரும்
“சீக்கிரம் வாடியம்மா.. உன் கையில குடும்பத்தை கொடுத்துட்டேனா நானும் கொஞ்சம் ஓய்வெடுப்பேன்” என்றார் பெருந்தன்மையாகவே..!
அதன்பின் விசாலினி தனக்கு ஒத்துவரும் தேதி, அதேசமயம் அருகே உள்ள மூன்று தேதியை அவர்களிடம் கூற.. அதில் ஒன்றை சிவஞானம் தம்பதி உறுதி செய்து அவர்களுக்கு கூற அதன் பின் திருமண வேலைகள் கொஞ்சம் வேகமாக நடந்தது.
வயல் வெளிகளை ஒட்டி ஒரு என்டர்டைமைண்ட் பார்க் போல அப்பொழுது தான் செய்து முடித்து இருந்தான் கதிர்நயனன். அதன் திறப்பு விழா வேலைகளில் அவன் மும்முரமாக இருக்க திருமண வேலைகள் மாப்பிள்ளை வீட்டாரின் பக்கம் தேங்கி நின்றது.
“என்னயா.. இன்னும் கல்யாணத்துக்கு ஒரு மாசம் தான் இருக்கு. அதுக்குள்ள எல்லா வேலையும் பார்க்கணும். நீ இப்படி வீட்லயே தங்காம இருந்தா எப்படியா?” என்று அம்மா வருத்தப்படுவதை பார்த்து அவர் கன்னத்தை தட்டி,
“ஒரு மாசம் இல்லமா.. ஒரு மாசம்ம்ம்..” என்று இழுத்து கூறியவன், “பத்திரிக்கை அடிக்க அன்னைக்கே மாடல் எல்லாம் அப்பா கிட்ட செலெக்ட் பண்ணி கொடுத்துட்டேன் மா.. எப்படியும் டெக்கரேஷன் இதெல்லாம் ஈவன்ட் ஆள் கிட்ட தான் விடப் போறீங்க.. முக்கியமானவங்களுக்கு நீங்களும் அப்பாவும் சேர்ந்து பத்திரிக்கை வச்சுருங்க.. பர்சேஸும் என்னைக்கு வரணும்னு சொல்லுங்க அன்னைக்கு நான் வரேன். நம்ம வீட்டு சார்பாக யார் யாருக்கு ட்ரெஸ் எடுக்கணுமோ அதெல்லாம் எடுத்துடலாம். அவ்வளவுதானேமா? தவிர, என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கூப்பிட ஜஸ்ட் ஒரு ஃபோன் கால் போதும். அதுதான் பிரண்ட்ஸ்” என்று அவன் சிரிக்க மகனின் சிரிப்பில்
“என் ராசா.. எப்பொழுதும் இதே சந்தோஷத்தோடு இருக்கணும்யா” என்று இரு கைளாலும் திருஷ்டி எடுத்தார்.
“அம்மா.. அம்மா..” என்று தோளை அணைத்து சிரித்தவன் “அம்மா சின்னுவுக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டீங்களா? நானுமே இந்த வேலை நடக்கிறதுல பிஸி.. அவகிட்ட பேசியே நாளாச்சு..”
“ம்ம்.. எங்கே.. முன்ன மாதிரி சரியாவே பேச முடியல.. வீடியோ கால் அடிக்கடி வருவா.. இப்போ ஏதோ வாரத்துக்கு ஒரு நாள் தான் வரா. அப்போவும் அவசரமாக பேசிட்டு அங்க போறேன்.. இங்க போறேன்.. படிக்க நிறைய இருக்குன்னு சுத்திக்கிட்டே தான் இருக்கா. உன் கல்யாண விஷயத்தை சொன்னேன். முன்ன மாதிரி ஒரு வாரம் எல்லாம் வர முடியாது அம்மம்மா.. இரண்டு நாள் லீவு போட்டுட்டு வரேன்னு சொல்றா.. புள்ள மனசுல ஏதோ வேதனை இருக்கு.. அவ பேச்சிலேயே எனக்கு புரியுது” என்றார்.
இவர்கள் கல்யாணம் முடிந்ததும் பிரக்யாவை கொஞ்சம் கொஞ்சமாக இந்த வீட்டிலிருந்து தனித்து வைத்து விட வேண்டும் என்று சொந்த அக்கா மகளை பற்றிய அபிராமி பேசியதை மகனிடம் பகிர்ந்து இருந்தார் சிவஞானம்.
“உன் வாழ்க்கை எங்களுக்கு முக்கியம் தான்பா.. அதுக்காக உன் பொண்டாட்டிகிட்ட சண்டை போட்டு அவளை பார்த்துக்கணும்னு நாங்க சொல்ல வரல.. ஆனா எக்காலத்திலும் எந்த ஒரு நேரத்திலும் சின்னுவை விட்டுடாத நயனா” என்று குரல் தழுதழுக்க கேட்ட தந்தை கலங்குவதைக் கண்டு அவரை அணைத்துக் கொண்டவன்
“கண்டிப்பாக மாட்டேன் பா..! அது என்ன பொண்டாட்டி கிட்ட சண்டை போட்டு? எனக்கு வரவ என் குடும்பத்தை பார்க்கணும். அதே சமயம் அவ குடும்பத்தை நானும் பார்த்துப்பேன். என் குடும்பம்னா அதுல சின்னுவும் சேர்த்து தான்” என்று நம்பிக்கை கொடுத்திருந்தான்.
அதை இப்போது நினைத்துப் பார்க்க “ஒருவேளை வேற ஏதாவது அக்கா சின்னுகிட்ட பேசி இருப்பாங்களோ?” என்று மனது வண்டாய் குடைந்தது.
“எப்படியும் கல்யாணத்துக்கு இங்க வரட்டும். ஒரு வாரம் அவளை லீவ் போட சொல்லி என்ன ஏதுன்னு பேசிட்டு நான் அணுப்பணும்” என்று அவன் யோசிக்க..
“ஏன்டா உனக்கு கல்யாணமான புது பொண்டாட்டியோட பிஸியா இருப்ப, இதுல நீ அவளிடம் பேச போறியோ?” என்று மனது நக்கல் அடிக்க சிரித்துக்கொண்டே மற்ற வேலைகளை பார்க்கச் சென்றான் நயனன்.
திருமண வேலைகள் ஒரு புறம் விறுவிறுப்பாக கதிர்நயனன் சொன்னது போல திட்டமிடலில் நடந்துக் கொண்டிருந்தது.
திருமணம் பட்டு எடுக்க அனைவரும் ஒரு நாள் கும்பகோணம் பக்கத்தில் இருக்கும் திருபுவனத்திற்கு சென்றனர். சிவஞானத்தின் நண்பரின் சொந்த தறியில் தயாரித்த அழகு பட்டு புடவைகள் அங்கே குவிந்திருக்க…
முதலில் கல்யாணம் பெண்ணுக்கு தேவையான பட்டுப்புடவைகளை எடுத்து முடித்தனர். அதன் பின் நயனன் அவளை தன் அருகில் வைத்துக் கொண்டு “எங்க வீட்டு பக்கமும் எல்லாருக்கும் புடவை எடுத்து கொடுக்கணும் இல்ல.. முதல்ல எங்க அக்காவுக்கு செலக்ட் பண்ணு” என்று விசாலினி மூலமே எடுக்க வைத்தான். அதில் அபிராமிக்கு முகம் லேசாக மாறினாலும் தம்பிக்காக வாய்மூடி நின்றார்.
அவள் பார்த்து பார்த்து எடுத்ததும், “அடுத்த முக்கியமான ஆளு பிரக்யா” என்றதும், அவள் முகம் சட்டென சூம்பி போனது. அபிராமிக்கு பார்த்து பார்த்து எடுத்தது போல் இல்லாமல் முதல் அலசலிலே ஒரு புடவை எடுத்து அவள் வைக்க.. அடுத்து ஆதிராவுக்கு எடுக்க சொன்னான். ஆதிராவுக்கும் பார்த்து பார்த்து எடுத்தாள் விசாலினி.
'அப்போ அக்காவோட விஷக்காத்து இவளுக்கும் அடிச்சிருக்கு' என்று நினைத்தவன், அந்த புடவைகளை அப்படியே வேண்டாம் என்று திருப்பிக் கொடுத்தான். விசாலினிக்கு முகத்தில் அடித்தாற் போல இருக்க..
“ஏங்க வேணாம்?” என்று திணறி கேட்க..
“எங்க பெரிய அக்கா இல்லனாலும் அவங்க பொண்ணு.. நல்லா கேளு அவங்க பொண்ணு சின்னு எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். நீ புடவை எடுத்த லட்சணத்தில் தெரிஞ்சது உன்னோட மன குப்பைகள்.. எங்க வீட்டுக்கு வரதுக்கு முன்னால அந்த குப்பை எல்லாம் தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு நல்ல மனசோட வரணும். புரியுதா?” என்று முகம் சிரித்த வாக்கில் இருந்தாலும் அவன் குரலில் இருந்த கோபத்தை கண்டு கொண்ட விசாலினிக்கு மனம் திடுக்கிட்டது.
அதன் பின் அம்மா மூலமே அனைவருக்கும் புடவை எடுத்து வைத்தவன், அடுத்தடுத்து அவர்கள் எடுத்த அனைத்திற்கும் பணத்தை செலுத்தி சென்று விட்டான்.
விசாலினி அதை அபிராமிடம் பகிர்ந்துக் கொள்ள “விடு விசா எல்லாம் தாலி கட்டுற வரைக்கும் தான். அதுக்கப்புறம் எல்லாமே நம்ம கையில தான். அவன் இப்ப சொல்ற எல்லாத்துக்கும் ஆமா மட்டும் போட்டுக்கோ.. அப்புறம் பார்த்துக்கலாம்” என்று விசாலினிக்கு இன்னும் ஏற்றி தான் விட்டார்.
அபிராமி தான் கெட்டது மட்டுமல்லாமல் விசாலினியையும் சேர்த்துக் கெடுப்பதை கண்டு சிவஞானத்திற்கு மனம் வருந்தியது.
“அன்னைக்கு தான் அவ்வளவு சொல்லி இருக்கோம்.. தம்பியும் அவ்வளவு சொல்லி இருக்கான்.. ஆனா மீறி ஏன் தான் இவ இப்படி இருக்கானு தெரியலையே?” என்று வருந்தினார்.
‘பேத்தியின் வருங்காலம் எப்படி இருக்கும்? தந்தையும் அந்த பக்கம் சரியில்லை.. தாயும் இல்லாத பிள்ளை.. நாங்களோ வயதானவர்கள்.. எங்களுக்கு பின்னர் அவளை யார் பார்த்துக் கொள்வார்கள்?’ என்று அந்த எண்ணமே அவர் மனதை அரித்துக் கொண்டே இருந்தது.
கல்யாண வேலைகளுக்கு பெரிதாக அலைச்சல் இல்லை என்றாலும் ஒரே ஆண் பிள்ளையின் திருமணம்.. அதுவும் அவர்கள் வீட்டு கடைக்குட்டியின் திருமணம்.. அதனால் சற்று பெரிதாகவே அனைவரையும் அழைக்க எண்ணினார் சிவஞானம்.
கூடவே அவர்களின் ஒன்று இரண்டு விட்ட வழி முறையில் வரும் உறவினர்களுக்கு எல்லாம் துணிமணிகளும் எடுத்துக் கொடுக்க என்று சற்று அலைச்சல் தான் அவருக்கு.
அவ்வப்போது சோர்ந்து சோர்ந்து அமரும் கணவனைக் கண்டு பர்வதத்தம்மாளும் பரிதவித்தார்.
“அட விடு பரு.. அதெல்லாம் சரியாயிடுவேன். தொடர்ந்து அலைச்சல் வேலையா இருக்கா. அதனால கொஞ்சம் உடம்பு இப்படி படுத்துது” என்று சிரித்துக் கொள்ளும் கணவனை கண்களில் பயத்தோடு பார்ப்பவரின், கன்னத்தை தட்டி விட்டுச் செல்வார் சிவஞானம்.
“யய்யா ராசா.. அதுதான் திறப்பு விழா எல்லாம் முடிஞ்சிடுச்சு இல்ல.. கொஞ்சம் எங்க கூட நீ பத்திரிக்கை வைக்க வாயேன். எனக்கு அப்பாவோட உடல்நிலை நினைச்சா கொஞ்சம் பயமாவே இருக்கு தம்பி” என்று அவர் மகனிடம் கலவையாய் கூற, அதற்குப் பின் அவனும் அவர்களோடு சேர்ந்துக் கொண்டான்.
அப்பாவை எதுவும் யோசிக்க விடாமல் ஏதாவது பேசிக் கொண்டே வருவான். அதனால் முன்னை போல சோர்ந்து இருக்காமல் கொஞ்சம் சுறுசுறுப்பாகவே சிவஞானம் இருந்தாலும், அவர் கண்மணிகள் அலைபாய.. மனது ஏதோ ஒன்று நினைக்க.. அவ்வப்போது யோசனையோடு சமைந்து உட்காரும் அப்பாவை கண்டு கொண்டவன்,
“சின்னு என்னோட பொறுப்புனு ஏற்கனவே சொல்லிட்டேனேப்பா” என்றதும் அவர் முகம் அப்பொழுது தெளிந்தாலும் மனம் ஏதோ நடக்கக்கூடாதது நடக்கப் போகிறது என்று அறிவுறுத்திக் கொண்டே இருந்தது சிவஞானத்திற்கு.
அபிராமி ஒரு காரணம் என்றாலும் அது மட்டுமே கிடையாது..
இவர் திருமணத்திற்கு தேதி குறிக்கும் போது அவர்களது ஆஸ்தான ஜோதிடரோ “நினைப்பதெல்லாம் நடந்து விடாது. நடப்பது அனைத்தும் இறைவன் கட்டளை அப்படின்னு எடுத்துக்கோங்க..!” என்று சிறு இக்கு வைத்து அவர் கூற… அதன் பொருள் என்ன என்று புரியாமல்.. யாரிடமும் பகிராமல் உள்ளுக்குள் தத்தளித்துக் கொண்டிருக்கிறார் சிவஞானம்.
கும்பகோணத்திற்கு அருகில் இருக்கும் அன்றைய மாயவரம் இன்றைய மயிலாடுதுறை, அங்கே
சிவஞானத்தின் முக்கிய பங்காளி ஒருவருக்கு பத்திரிக்கை வைக்க குடும்பத்தோடு சென்று திரும்பிக் கொண்டு இருந்தனர்.
வெளிப்பார்வைக்கு சிவஞானம் சந்தோஷமாக தெரிந்தாலும்.. அவர் உள்ளே பல யோசனைகள்.
அதைவிட ஏதோ ஒன்று தவறுதலாக நடக்கப்போகிறது என்று உள்ளுணர்வு உறுத்திக் கொண்டே இருக்க அவரால் இயல்பாகவே இருக்க முடியவில்லை.
முன்னால் டிரைவரோடு அமர்ந்திருந்த கதிர்நயனன் அவ்வப்போது பெற்றோரின் நலத்தை கவனித்துக் கொண்டுதான் வந்துக் கொண்டிருந்தான்.
அவனுக்கோ இயல்பான ஒரு திருமணம் நடக்கப் போகும் மணமகனுக்கான சந்தோஷம் இல்லை.. பூரிப்பு இல்லை..!
ஒன்று இப்பொழுது ஆரம்பித்திருக்கும் அந்த ரெசார்ட் உடன் சேர்ந்து என்டர்டெயின்மென்ட் பார்க் அதை பார்க்க முடியவில்லை என்று ஒரு பக்கம் வேலை பற்றிய கவலை.
மறுபக்கம் பெற்றோர்கள் உடல் நலத்தின் மீதான கவலை. அடுத்தது அபிராமி அக்கா எங்கே பிரச்சனை செய்து சின்னுவை இன்னும் வருத்த வைத்து விடுவார்களோ என்று..!
'ஏன் இந்த சின்னு ரெண்டு நாளா நான் ஃபோன் பண்ணா எடுக்க மாட்டேங்கறா?' என்று அவனுமே பல வித யோசனைகளோடு இரு விரல்களுக்கு இடையே ஃபோனை சுற்றிக் கொண்டே வந்தான்.
அப்பொழுது அவனுக்கு பிரக்யா படிக்கும் கல்லூரி விடுதி காப்பாளரிடமிருந்து ஃபோன் வந்தது, இதுவரை இதுபோல் வந்தது இல்லை..!
“என்ன சின்னு காலேஜ் ஹாஸ்டல் வார்டன் கிட்ட இருந்து போன் வருது?” என்றவன் சத்தமாக கூற..
ஏற்கனவே பேத்தி கவலையிலிருந்த சிவஞானம் “தம்பி முருகா வண்டியை ஓரமா நிறுத்து. பேசு யா.. புள்ள எப்படி இருக்கா என்னன்னு கேளு?” என்ற தந்தையின் பதட்டத்தை கண்டவன்,
சத்தமாக சொல்லிய தன் மடத்தனத்தை எண்ணி கடிந்துக் கொண்டு “இருங்கப்பா பேசுறேன்” என்றவன்,
“இட்ஸ் கதிர்நயனன் ஹியர்” என்றான்.
“சார் பிரக்யா பிஜி, அவரோட கார்டியன் தானே நீங்க?” என்று அந்த பக்கம் ஆங்கிலத்தில் கேட்கப்பட,
உள்ளுக்குள் பிரக்யா பற்றி படங்கள் ஓட “எஸ்.!" என்றான்.
“ஒரு சின்ன பிரச்சனை அது வந்து.. அவங்க பிரக்னண்டா இருக்காங்க அதோட கொஞ்சம் ஹெல்த் இஸ்ஷூஸ் நீங்க.. வந்து.. அவங்கள.. கூட்டிட்டு போக முடியுமா?” என்றதும்
“வாட்?? நோ.. இட்ஸ் இம்பாஸிபிள்.!” என்று அதிர்ந்து கத்தினான் கதிர்நயனன்.
“இல்ல.. இருக்கவே இருக்காது நீங்க வேற ஏதோ ஸ்டூடண்ட மாத்தி பேசுறீங்க நினைக்கிறேன்? கொஞ்சம் செக் பண்ணுங்க..!” என்று இவன் சற்று கடினத்தோடு கூற,
அந்த பக்கம் இருந்த விடுதி காப்பாளரோ “சார் நல்லா விசாரிச்சு தான் சொல்றேன். உங்களுக்கு நம்பிக்கை இல்லைனா பிரக்யாவோட ஃப்ரெண்ட் இங்கதான் இருக்காங்க நீங்க பேசுங்க” என்றார் விடுதி காப்பாளர்.
“யாரு லீனாவா?” என்று இவன் கேட்க.. அதற்குள் ஃபோன் லீனா கைக்கு மாறி இருக்க “ஆமா நான் லீனா தான் சார்” என்றாள் அவள்.
“உங்க ஹாஸ்டல் வார்டன் என்னென்னமோ சொல்றாங்களே மா?” என்று பதட்டத்தோடு அவன் கேட்க.. அதற்கு மேல் பதட்டம் பின்னால் அமர்ந்து இருந்த அவன் பெற்றோர்களுக்கு.
“சார்.. அது.. வந்து.. அவங்க சொல்றது உண்மைதான் இன்னைக்கு க்ளாஸ்ல மயங்கி விழுந்ததுக்கு அப்புறம் செக் பண்ண போய் தான் இந்த விஷயம் வெளியில தெரிஞ்சது. என்கிட்ட இவ்ளோ நாளா ஒண்ணுமே சொல்லவே இல்ல அவ. இப்போ என்ன கேட்டாலும் பதிலே சொல்லாம இருக்கா.. மாத்தி மாத்தி ரெண்டு ப்ரொஃபசர் வார்டன் யார் கேட்டாலும் பதில் பேச மாட்டேங்குறா.. அவ நிலைமையை நினைச்சா எனக்கு கொஞ்சம் பயமாயிருக்கு சார். நீங்க கொஞ்சம் சீக்கிரம் வரீங்களா?” என்றாள்.
“ஓகே எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ.. நான் அவ்ளோ சீக்கிரம் வரேன். நீ அவளை கொஞ்சம் பார்த்துக்கோ மா” என்றான்.
“என்னப்பா என்ன ஆச்சு?” என்று இங்கே பெற்றோர் பதற..
இப்பொழுது இவர்களிடம் சொல்லி மேலும் அவர்களை பயமுறுத்த விரும்பாமல் “உங்க பேத்தி சரியா சாப்பிடாம மயக்கம் போட்டு விழுந்திட்டாளாம். கொஞ்சம் வைரஸ் ஃபீவராம். அதுதான் கொஞ்சம் வீட்டில் வைச்சு பார்த்துக்கோங்கனு அவங்க ஹாஸ்டல் வார்டன் ஃபோன் பண்றாங்க” என்றான்.
“சரிப்பா நீ போய் அவளை கூட்டிட்டு வந்துடுறியா?” என்று சிவஞானம் கேட்க.. பர்வதத்தம்மாளோ “எப்படிங்க கல்யாணம் நெருங்கிட்டு இருக்கு..?”
“ஒரு நாளுல என்னமா வந்திடுட போகுது.. காலைல போயிட்டு அடுத்த ஃப்ளைட்ல வந்துருவேன்..” என்றான் நயனன்.
மனதில் பலவித எண்ணங்கள்.. ‘எப்படி? எப்படி சின்னு இப்படி? யாரையும் காதலித்தாளா என்ன? ஆனால் படிக்கும்போதே வா?’ என்று என்னென்னவோ எண்ணங்கள் அவனை அலைகழிக்க உறங்க முடியாமல் தவித்தான்.
மதியம் போல் தான் பாண்டிச்சேரிக்கு விமானம் என்று தெரிந்து, அதிகாலை விமானத்தில் முதலில் சென்னைக்கு சென்று அங்கிருந்து பாண்டிக்கு சென்றான்.
ஆனால் அங்கேயோ.. வீட்டில் என்ன சொல்வது? மாமாவை எப்படி எதிர்கொள்வது? அம்மம்மா தாத்தா முகத்தில் எப்படி விழிப்பது? என்று தெரியாமல் தவித்துக் கொண்டே இருந்தாள் பிரக்யா.
லீனாவும் அவளோடு அன்று இருக்க விடுதி காப்பாளர் வந்து அழைக்க கால்கள் பின்ன வந்தவள்... பெரும் தயக்கத்தோடு மாமன் முன் தலை குனிந்து நின்றாள் பிரக்யா.
“உமையா.. என்னை பாரு” என்றவனின் அழுத்தமாக குரலில்.. அவள் உடல் உதறியது. மெல்ல நிமிர்ந்து பார்த்தவளோ அவன் கூரிய கண்கள் கூறிய செய்தியை அதை தாங்க முடியாமல் மீண்டும் தலை கவிழ்ந்தாள். கண்களில் கண்ணீர் கரை புரள..
“ஃபர்ஸ்ட் அவங்கள என்னன்னு பாருங்க.. இப்படி படிக்கும் போதே..” என்று காப்பாளர் ஆரம்பிக்க..
கை உயர்த்தியவன் “நான் பார்த்துக்குறேன்” என்று அன்றே அவளை கல்லூரி விடுதியில் இருந்து காலி செய்து அழைத்து வந்தான்.
வரும்பொழுது அபிராமியிடம் ஏதும் கூறாதீர்கள் என்று கூறி தான் வந்திருந்தான் கதிர்நயனன்.
இரவு பொழுது தான் வீட்டிற்கு சென்ற இருவரையும் பார்த்த பர்வதத்தம்மாள் “சின்னு.. வா டா” என்று அழைக்க அவர் வரும்முன், விட்டான் ஒரு அறை அவளது கன்னத்தில் பளாரென்று..!
“டேய் என்னடா.. ஏன் டா?” என்று அதிர்ந்த சிவஞானம் ஓடி வர.. அவன் அடியில் சுருண்டு விழப் போனவளை தாங்கி பிடித்தவனும் அவன் தான்.
“ஏன் யா.. ஏன் புள்ளைய அடிக்கிற அவளே உடம்பு முடியாம வந்து இருக்கா” என்று பர்வதத்தம்மாள் பதற..
“உங்க பேத்தி உடம்பு முடியாம வரல.. உண்டாயிட்டு வந்து இருக்கா..!” என்றதும் இருவருக்கும் இந்த அதிர்ச்சியை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை.
