இராவணா 31

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 244
Thread starter  

அத்தியாயம் 31

 

“நஷா’னா பொதுவா போதை மயக்கம் அல்லது போதைப்பொருள் பழக்கம்னு அர்த்தம்..” என்றதும் அவன் அவளை முறைக்க..

 

“என்ன என்ன ரொம்ப தான் முறைக்கிறீங்க.. அந்த வயசுல நீங்க.. உங்க அன்பு.. உங்க கண்டிப்பு.. உங்க பாசம்.. உங்க நேசம்.. ஏன் உங்க திட்டு கூட எனக்கு போதை தான்.‌ எப்படி ஒரு போதை பழக்கம் ஒருவனின் சிந்தையை முடக்கி எதுவும் சிந்திக்க விடாமல் செய்யுதோ.. அதே போல் தான் உங்க நினைவும் என் சிந்தையை மயக்கி முயக்கி கிறக்கி..” என்றவள் அன்றைய நாளின் அதி கிறக்கத்தோடு கூறிக் கொண்டிருக்கும் போத.. அவளது அதரங்களை கொய்தான் மாயவன்..!

 

திட்டுவான், அறிவுரை கூறுவான் என்று அவள் எதிர்பார்க்க… அதற்கு மாறாக அவனது நடவடிக்கை கண்டு இன்னும் இன்னும் அவனில்.. அவள் இராவணின் மீது நஷா அதிகரித்தது..!

 

அவள் இதழ்களை கொய்தவனின் கண்களில் தெரிந்த காதல் மயக்கத்தில் அவளது விழிகளும் தன் போல மூடிக் கொண்டன..!

 

இவர்கள் இருவரும் தங்கள் அன்பை அது கொண்ட காதலை.. இங்கே மடை திறந்த வெள்ளமாய் பொழிந்துக் கொண்டிருக்க…

 

அங்கே தஞ்சாவூரில் அபிராமி வீட்டில்..

 

“ஐயோ ஆண்டவா..!” என்று அபிராமியின் சத்தத்தில் வெளியில் ஃபோனில் தொழில் ரீதியாக யாரிடமா பேசிக் கொண்டிருந்த ரவீந்திரன் “என்ன ஆச்சு அபி?” என்று வேகமாக உள்ளே வந்து பார்க்க.. அவரிடம் தன் ஃபோனை காட்டினார் விரல்கள் நடுங்க..

 

அதில் ஒரு லிங்க் அனுப்பப்பட்டிருந்தது. கூடவே ஒரு ஸ்கிரீன்ஷாட்டும்.

 

“முதல்ல அந்த லிங்க்ல போய் பாருங்க” என்றார் குரல் நடுங்க.. தொண்டை அடைக்க..

 

டெல்லியில் நடைபெற்ற ஓரினச் சேர்க்கையர்களுக்கான மாநாடு என்று அதைப் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.

 

“இதை யார் உனக்கு அனுப்பினா?”

 

“வல்லத்தில் இருக்கிற என் ஒன்னு விட்ட மாமா பொண்ணு தான்” என்றார் அழுகையோடு.

 

ஒரு காலத்தில் அவரை எல்லாம் “எனக்கு நிகரா நீ?” என்று இளக்காரமாக நினைத்து நடந்துக் கொண்டவர் தான் அபிராமி.

 

“இது ஏதோ தேவையில்லாத விஷயம் நமக்கு” என்றார் ரவீந்திரன்.

 

“கீழே உள்ள ஸ்கிரீன்ஷாட்டையும் பாருங்க” என்றதும் அதில் ஆர்யன் அருகில் இருப்பவனின் தோளில் கை போட்டு நடந்துச் செல்வது போல இருக்க..

 

“ஆரு.. ஏன்.. அங்க.. அதுல.. இது யாரு..?” புரிந்தும் புரியாமலும் அவர் அதிர்ச்சியுடன் மனைவியை பார்க்க.. அவரோ வெடித்து அழுதார்.

 

“அய்யோ ஆண்டவா… ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது. ஒருத்தி என்னன்னா கல்யாணமே வேணாம்ன்னு லிவ் இன்னில் இருக்கா.. இவன்.. அய்யோ ஆண்டவா..” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதார். ரவீந்திரன் சொன்ன எந்த சமாதானமும் அவர் ஏற்கவே இல்லை. அவரை ஆற்றுப்படுத்தவும் முடியவில்லை.

 

அதற்குள் அந்த வல்லத்து மாமன் மகளும் இவ்விஷயத்தை உறவினர்களுக்கு எல்லாம் பரப்பி தன் வெகுநாளைய வன்மத்தை கொட்டி தீர்த்துக் கொண்டார்.

 

அடுத்தடுத்து உறவினர்களின் விசாரணை அபிராமியை அமைதியாக இருக்க விடவில்லை.

 

கதிர்நயனன் வரன் பார்த்து கொடுத்த இடத்திலேயே மகளுக்கு திருமணம் முடித்த விசாலினி அம்மா கூட அபிராமியை இந்நேரத்தை பயன்படுத்தி குத்தி காட்டியே பேசினார்.

 

“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்பது எவ்வளவு உண்மை..!!

 

இந்த சித்ரவதைகள் கொடுக்கும் மரண வலியை தாங்க முடியாமல் தற்கொலைக்கு அவர் முயற்சி பண்ண.. அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்திருந்தார் ரவீந்திரன். 

 

இப்பொழுது அவருக்கு இருக்கிற ஒரே உற்ற துணை நயனன் தான். அதனால் உடனே அவனுக்கு அழைத்துக் கூறிவிட்டார்.

 

‘என்ன சித்தி தற்கொலைக்கு ட்ரை பண்ணாங்களா?’ என்று பிரக்யாவும் பழையவற்றை மறந்து சித்தியின் உடல் நிலையை காண கணவனோடு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தாள்.

 

கழிவறை சுத்தம் செய்யும் ஆசிட்டை அவர் குடித்திருந்ததார். பெருங்குடல் சிறுகுடல் வெந்து போயிருந்தது. 

 

“உயிரை காப்பாத்திட்டோம்.. பட் அவங்க கண்டிஷன் கொஞ்சம் சிக்கல் தான்” என்று மருத்துவர்கள் கூற, ரவீந்திரன் ஒடுங்கி போய் அமர்ந்திருந்தார். 

 

அதன் பின் வீட்டிலேயே ஒரு செவிலியரை வைத்து அபிராமியை பராமரித்தார்கள். அவரால் சட்டென்று எதுவும் காரமாக ஏன் திட உணவுகளையே சாப்பிட முடியாது. வெறும் நீர் ஆகாரங்கள் மட்டும் இப்பொழுது உண்டு உயிர் வாழ்ந்துக் கொண்டிருந்தார்..!

 

ஆம்.. வெறும் உயிர் மட்டும் வாழ்ந்துக் கொண்டிருந்தார்..!

 

அவரின் அகங்காரம், ஆணவம், தான் உயர்ந்தவள் என்ற எண்ணம் எல்லாம் தவிடு பொடி ஆனது, அவர் பெற்ற பிள்ளைகளாலேயே..!!

 

விஷயம் தெரிந்து அன்னையை பார்க்க வந்த ஆர்யனை அவர் பார்க்க மறுக்க.. ரவீந்திரனும் அவனை திட்ட..

 

“உங்களுக்கு எப்போது எங்கள பார்க்கணும்னு தோணுதோ.. அப்போ கூப்பிடுங்க உங்க மருமகனோட வரேன்” என்று சென்றான்.

 

“என்ன? மருமகனா?” இன்னும் அதிர்ந்து போய் பார்த்தார்கள் பெற்றோர்கள்.

 

அவ்வப்போது அபிராமியை நினைத்து அழும் பர்வதத்தம்மாளை பிரக்யா தான் தேற்றுவாள்.

 

அன்று காலையிலும் “இரண்டு பொண்ணுங்கள ஓவியமா பெத்து வளர்த்து ஒன்ன ஆல்ப ஆயுஸூல வாரி கொடுத்துட்டேன்.. இன்னொன்ன இப்படியா பார்ப்பேன்? நான் நல்லா இருக்கும் போதே அவ இப்படி படுக்கையில் கிடக்கிறாளே..” என்று அழுது புலம்பியவரை சமாதானப்படுத்தி சுத்துமாவு கஞ்சியை புகட்டிக் கொண்டிருந்தாள் பிரக்யா.

 

காலை பூஜையறையில் பூஜை முடித்து வெளியில் வந்த கதிர்நயனன் வழக்கம் போல மனைவிக்கு குங்குமத்தை வகுட்டில் வைத்துவிட்டு, அன்னைக்கும் திருநீரை இட்டவன்,

 

“யார் யாருக்கு என்ன விதிச்சிருக்கோ.. அதுதான் நடக்கும். இப்படி நீங்க அழுதழுது உடம்பை கெடுத்துக்கிட்டீங்கனா அடுத்து உங்க பேரபிள்ளைய யார் பார்ப்பா?” எதை கூறினால் அன்னையின் அழுகை நிற்கும் என்று புரிந்து கூறினான்.

 

“இல்ல.. நான் அழுகல” என்று கண்களை துடைத்துக் கொண்டு “நானும் உனக்கு ரொம்ப வேலை வைக்கிறேனா தங்கம்?” என்று மருமகளை கன்னத்தை வருடி கேட்டார். 

 

ஆம்.. பிரக்யா இப்பொழுது ஐந்து மாத கர்ப்பமாக இருக்கிறாள்.

 

அவர்களை விட்டுச் சென்ற அவர்களின் குழந்தையே தற்பொழுது தங்களிடம் வந்து சேர்ந்திருப்பதாக எண்ணி இருவரும் பூரிப்பில் இருக்கின்றனர்.

 

அந்நேரம் “க்கா.. மாமா..” என்று வந்தாள் பூர்வா முழு அலங்காரத்தோடு…!

 

இன்று வீட்டோடு பூர்வாவுக்கு மாப்பிள்ளை வீட்டார் வந்து பூ வைத்து செல்கின்றனர் என்று ஏற்கனவே பூர்ண சுந்தரி பிரக்யாவிடம் தெரிவித்திருந்தார். ஆனால் நீலகண்டனோ முறையாக யாருக்கும் அழைக்கவில்லை. 

 

அதனால் இவர்களுக்கு விஷயம் தெரிந்தாலும் விசேஷத்திற்கு செல்லவில்லை..

 

“என்னடி இன்னைக்கு மாப்பிள்ளை வீட்டில் இருந்து உனக்கு பூ வைக்க வராங்கன்னு சித்தி சொன்னாங்க.. நீ இப்படி இங்கே வந்திருக்க.. அப்பாவுக்கு தெரிஞ்சிச்சு.. அவ்வளவுதான், அதுவும் இல்லாம உடம்பு சரியில்லாம இருக்குற மனுசன் டி அவரு, பாவம்” என்று பிரக்யா கவலைப்பட..

 

“அக்கா.. உன்னோட அன்புக்கு ஒரு அளவே இல்லையா?” 

 

“அன்பே ஸ்வாசிதம் டா பூர்வா குட்டி.. நீ ஒரு பங்கு அன்பை கொடுத்தினா இயற்கை உனக்கு பல மடங்கா அந்த அன்பை திருப்பித் தரும்” என்று அவள் கன்னத்தை தட்டினாள் பிரக்யா. 

 

“யக்கோவ்.. அழுதுடுவேன் பார்த்துக்கோ..! நானே இந்த கல்யாணம் வேண்டாம்னு ஓடி வந்து இருக்கேன் இப்பதான் நீ அட்வைஸ் பண்ற? எங்க மாமா?” என்று அவள் கேட்டுக் கொண்டிருக்க..

 

“இதோ இங்க தான் இருக்கேன்” என்றபடி வந்தான் கதிர்நயனன். 

 

"மாமா.. நீங்க என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது.. இந்த கல்யாணம் நடக்கக்கூடாது..!” என்றாள் பிடிவாதமாக.

 

“என்னடா இது புது பிரச்சனை? ஏன் வேண்டாம் உனக்கு?” என்று அவளை அமர வைத்து இவனும் எதிரில் அமர்ந்து கேட்க..

 

அதற்குள் உணவு முடித்து பிரக்யாவும் வந்து பூர்வா அருகில் அமர்ந்தாள்.

 

“ஏன்னா.. அந்த மாப்பிள்ளை என் அப்பாவோட வெர்ஷன் 2 மாமா” என்றாள் விழி விரிய.. இருவரும் புரியாமல் அவளை பார்க்க…

 

“அவனுக்கு நான் வேலைக்கு போகக்கூடாதாம்.. வீட்டோட இருக்கணுமாம்.. பிறக்குற புள்ள குட்டிகளை பார்த்துக்கணுமாம்.. வயசான அவன் அம்மா அப்பாவை பார்த்துக்கணுமாம்.. இதைத்தவிர ஊர்ல சொந்த பந்தங்களையும் பார்த்துக்கணுமாம்..” என்ற ராகம் இழுத்தவளை கண்டு இருவரும் புன்னகைத்தனர், 

 

“உங்க அக்காவும் இதை எல்லாம் செய்றா தானே?” என்று நயனன் கூற..

 

“நீங்களும் அந்த கன்னிங் ஃபெலோவும் ஒண்ணா மாமா?” என்றவள் எகிற வர..

 

“போதும் போதும், உன் மாமா புராணம். ஃபர்ஸ்ட் என்ன நடந்துச்சுன்னு சொல்லு..” பிரக்யா முறைக்க..

 

“லைட்டா கருகுற வாசனை வருதுல மாமா” என்று அக்காவை வாரியவளைக் கண்டு இப்பொழுது மாமனும் முறைக்க..

 

“அப்பாட்ட இருக்கிற ஃபேக்டரி ஷேர்ஸ் எல்லாம் அவன் பேருக்கு மாத்தி கொடுக்கணுமாம். அது மட்டுமல்ல என் பேர்ல உள்ள கம்பெனி ஷேர்ஸூம் அவனுக்கு கொடுக்கணுமாம். அவன் எல்லாத்தையும் மெயின்டெய்ன் பண்ணுவானாம்.. நான் அவன் வீட்டை மெயின்டெயின் பண்ணனுமாம்.. இதுக்கு தான் நான் போய் பிளானியில படிச்சிட்டு வந்தேனா மாமா?” 

 

“அவன் சொத்து அவன் உரிமை..! அதுல நான் எதுவும் கேட்கல. அதே மாதிரி எங்கப்பா சொத்து என்னுடைய உரிமை. அந்த நார நாய் என்ன கேட்கிறது?” என்று வீரபாண்டியனாய் கேள்வி கேட்டவளை கண்டு மனம் மகிழ்ந்தது பிரக்யாவுக்கு. 

 

பிரக்யாவுக்கு சிறுவயதில் இருந்தே இந்த கம்பெனி ஷேர் இதுல எல்லாம் சிறிது கூட இஷ்டமே இல்லை. இதனால்தான் அப்பா அம்மாவுக்குள் பிரச்சனை என்று புரிந்ததும் அதன் மீது ஒரு வெறுப்பு. கூடவே மருத்துவத்தின் மீதுள்ள ஈடுபாடு அவளை மருத்துவம் படிக்க வைத்தது. 

 

ஆனால் பூர்வாவோ அப்படியே நேர் எதிர்..! 

 

'தன் அம்மாவை அப்பா இப்படி போனா போ.. வான்னா வான்னு அதிகாரம் பண்ணுவதற்கு காரணம் அவர் தன் சொந்த காலில் சுய சம்பாத்தியத்தில் இல்லாததுதான். 

 

நானும் அப்படிப்பட்ட ஆண் வர்க்கத்திடம் மாட்டிக் கொள்ளக் கூடாது.. என் சொந்தக்காலில் சுய சம்பாத்தியத்தில் தான் இருக்க வேண்டும்' என்று முடிவெடுத்தவள் தன்னுடைய படிப்பை வணிகவியலுக்கு மாற்றி எம்.பி.ஏ முடித்து, இதோ அவர்களின் கம்பெனி பொறுப்பை கடந்த ஆறு மாத காலமாக அவள் தான் நிர்வகித்து வருகிறாள். 

 

பெண்ணுக்கு திருமண வயது ஆகிவிட்டது என்று நீலகண்டன் மாப்பிள்ளை பார்க்க.. வந்த சம்பந்தமும் நல்ல சம்பந்தமும் தான். இவர்களைப் போல அவர்களும் தொழில் நடத்துபவர்கள் தான்.

 

ஆனால் மணமகனின் எண்ணமும் நீலகண்டனுக்கு அதி மேல் இருந்தது. 

 

“சரி வா வீட்டுக்கு போலாம்”

 

“என்னது வீட்டுக்கு போலாமா? இப்ப போனா எனக்கு பூ வச்சு அவனுக்கு நான் தான் வைஃப்னு கன்ஃபார்ம் பண்ணிடுவாங்க மாமா.. நான் வரல” என்று விழி விரித்து பேசியவளிடம்

 

“அதெல்லாம் பண்ண மாட்டாங்க.. நான் இருக்கேன் வா போகலாம்” என்று மனைவியையும் அழைத்துக் கொண்டு சென்றான். 

 

கொஞ்ச நாள் முன்புதான் ஐந்தாம் மாதத்திற்கு சித்ரான்னங்கள் சமைத்து சொந்த பந்தங்களோடு வந்து மகளுக்கு உணவு ஊட்டி விட்டுச் சென்று இருந்தார் பூர்ணசுந்தரி.

 

நீலகண்டனுக்கு பிடிக்கா விடினும் சில பழக்கவழக்கங்களை ஊர் உறவுக்காக நின்று செய்து விடுவார். 

 

அங்கே பெண்ணை காணோம் என்றதும் நீலகண்டன் நரம்பில்லா நாக்கால் பூர்ணசுந்தரியை வசைப்பாடிக் கொண்டிருக்க..

 

மூவரும் ஒன்றாக வந்து நின்றதை கண்டதும், இன்னும் கோபம் தான் “என்ன பொண்ண பெத்து வச்சிருக்க?” என்று கடிந்தார்.

 

“மூத்த மாப்பிள்ளை நான் இல்லாம இந்த வீட்ல ஒரு விசேஷம் நடக்குமா என்ன? யாரோ கம்பெனி ஷேர்ஸ் எல்லாம் கேட்டதா கேள்விப்பட்டேனே? என் பொண்டாட்டிக்கும் அதுல எல்லாம் பங்கும் உரிமையும் உண்டு தெரியுமில்ல?” என்று ஆளுமையாக அமர்ந்தவனின் தோற்றம் அங்குள்ளோர்களை அசைத்துப் பார்த்தது. 

 

“உங்க மூத்த பொண்ணுக்கு தான் கம்பெனி ஷேர்ஸ்ல எல்லாம் பங்கு இல்லன்னு சொன்னீங்களே?” என்று அந்த மாப்பிள்ளையாகப்பட்டவன் வருங்கால மாமனாரிடம் டீல் பேச…

 

நீலகண்டனோ இப்பொழுது பெரும் தயக்கத்தோடு கதிர்நயனனை பார்த்தார்.

 

“என் பொண்டாட்டி.. அவரோட லீகல் வாரிசு. அப்படி இருக்கும்போது அதுவும் அவர் சுய சம்பாத்தியம் கிடையாது.. தாத்தா வழி சொத்தில் அவளுக்கு பங்கு தரமுடியாதுனு சொல்ல முடியுமா? கம்பெனி ஷேர்ஸ்ல பாதி என் பொண்டாட்டிக்கு.. மீதி என் மச்சினிச்சிக்கு. இதில் வெளியாள் எவன் உள்ளே வர முடியும்?” என்று அவனின் அதிகாரத்தில், வந்தவனுக்கோ இங்கு தான் அதிகாரம் செய்ய முடியாது கோலோச்ச முடியாது என்று புரிந்து விட.. இந்த சம்பந்தம் வேண்டாம் என்று சென்றார்கள். 

 

நீலகண்டன் கதிர்நயனனை முறைத்து “என்ன உங்க வீட்டு திமிரை காமிக்கிறியா.. இவன் இல்லைனா வேறு மாப்பிள்ளை கொண்டு வருவேன்” என்று சவால் விட..

 

அவனுக்கு பற்றிக் கொண்டு வந்தது ஆனாலும் எதிரில் இருக்கிறது எவ்வளவு சொன்னாலும் புரிந்துக் கொள்ளாத ஜந்து, அவருக்குப் புரிகிற வகையில் தான் பதில் கொடுக்க முடியும் என்று நினைத்தவன் எழுந்து அவர் முன்னே தன் முழு உயரத்திற்கும் நின்றான். 

 

“தாராளமா எத்தனை மாப்பிள்ளை வேணாலும் கொண்டு வாங்க.. ஆனா.. சின்னுவுக்கும் இந்த சொத்துல பங்கு உண்டு. அது மட்டுமில்ல உங்க பொண்ணுக்கு பொருத்தமான மாப்பிள்ளைய பாருங்க.. உங்க கம்பெனியை நிர்வாகிக்க ஆள தேடாதீங்க..!” என்றவனின் பேச்சில் முகம் சுருக்கினார் நீலகண்டன்.

 

“உங்க பொண்ணு தானே பூர்வா..?

 

“என்ன தம்பி இப்படி கேட்குறீங்க!” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார் பூர்ண சுந்தரி. 

 

“நீங்க வேற கா.. சும்மா இருங்க அக்கா” என்றவன் “உங்க பொண்ணுக்கு உங்களுக்கு இருக்குற தொழில் திறமைல கொஞ்சம் கூட இருக்காதா என்ன? எவனையோ ஒருத்தனை நம்பி சொத்தை தூக்கி கொடுக்குற நீங்க உங்க பொண்ண நம்பி கொடுக்க மாட்டீங்களா என்ன?” என்றவனை கண்டு நெற்றியை சுருக்கினார்.

 

பின் ‘தன் பொண்ணு தன்னைப் போல இருப்பாளா? நன்றாக நிர்வாகம் செய்வாளா?’ என்று பல வருடங்கள் கழித்து பூர்வாவை அவர் கூர்ந்து பார்த்தார். 

 

இவள் பெண்ணாயிற்றே..!! ஆனாலும் அவருக்கு மனம் முரண்டியது.

 

‘பெண்கள் கையில் எப்படி தொழிலை கொடுக்க முடியும்? அவங்க வீட்ட பார்த்துக்க தான் லாயக்கு’ என்று அவரின்‌ அந்த காலத்து மட்டமான புத்தி எட்டிப் பார்க்க..

 

“இல்ல அதெல்லாம் சரி வராது” என்று அவர் ஆரம்பிக்க, 

 

“என்ன சரி வராது? ஏன் சரி வராது? எல்லாம் சரிவரும்..! உங்களால இப்ப இருக்குற நிலைமையில கம்பெனியை பார்த்துக்க முடியாது தானே? நீங்க மறுத்தீங்கன்னா நானே கோர்ட்ல ஆர்டர் வாங்கி கம்பெனியை பார்த்துப்பேன். தெரியுமில்ல?” என்று மிடுக்காக பதில் சொன்ன பூர்வாவின் உருவத்தில் அவர் கண்டது என்னவோ பார்கவியை தான்.

 

“எனக்கு கண்டிப்பா மாமா சப்போர்ட் பண்ணுவாங்க.. ஆனாலும் மாப்பிள்ளைய நீங்களே பாருங்க. பெத்தவரா அது உங்க கடமைதான். எனக்கு புடிச்சிருந்தா கண்டிப்பா நான் கல்யாணம் பண்ணிப்பேன்..! ஆனா கம்பெனியை நான் தான் பார்த்துக்குவேன் அதுல மாற்றமில்லை..!” என்ற அவளின் நிமிர்வில் அடிபட்டு தான் போனார் நீலகண்டன்.

 

அதன் பின் தொழில் ரீதியாக என்ன உதவி வேணாலும் எப்பொழுது வேண்டுமானாலும் தன்னிடம் கேட்க சொல்லிவிட்டு கதிர்நயனன் பிரக்யாவோடு சென்றுவிட,நயனன் இருக்கும் தைரியத்தில் தொழில்களை கையெடுத்து திறம்பட நடத்த ஆரம்பித்தாள் பூர்வா..!

 

“ஆனாலும் இந்த பூர்வாகுள்ளும் ஏதோ ஒன்னு இருக்கு பாரேன் சின்னு?” என்று கதிர்நயனன் ஆச்சரியப்பட..

 

“எனக்கு இருந்த அதே வலி வித்தியாசமா அவளுக்கும் இருந்துச்சு மாமா.. அதுதான் அவளை இப்படி மாற்றி இருக்கு” என்றதும் அவன் அவளை கார் ஓட்டியபடியே திரும்பி பார்க்க…

 

“என்னை தப்பா சொன்னவங்க முன்னாடி நான் அப்படி இல்ல அப்படின்னு என் நிலையை உயர்த்திக்க எல்லாராலும் பெருமையா பார்க்கப்படுற டாக்டர் படிப்பை படிக்கணும்னு நினைச்சு அதை கைல எடுத்தேன்”

 

“ஆனா.. அவளுக்கு தன் அம்மாவை மட்டமா நினைக்கிற அப்பா முன்னால தான் திறமையா தொழில் நடத்துற தைரியமான பொண்ணா இருக்கணும்னு அவ நினைச்சு இருக்கா” என்றாள் தங்கையை நினைத்து பெருமிதமாக..!

 

“ஆக மொத்தம் அக்கா தங்கச்சி இரண்டு பேருமே நினைச்சதை சாதிச்சிட்டீங்க” என்றான் நயனன்.

 

“ஆமா நாங்க சாதிக்க பிறந்தவங்க தான்..!” என்று நிமிர்ந்து தோரணையாக அமர்ந்து கணவனை பார்த்தாள் பிரக்யா.

 

நாட்கள் வேகமாக செல்ல.. பிரக்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. 

 

அக்குழந்தைக்கு தந்தையின் ஞாபகமாக சிவநந்தன் என்று பெயர் சூட்டினான் கதிர்நயனன்.

 

குழந்தை பெயர் சூட்டு விழாவிற்கு வந்திருந்த உறவினர்களிடம் குழந்தையை கையில் வைத்து பேசிக் கொண்டிருந்தான் மகிழ்ச்சியாக கதிர்நயனன்.

 

அபிராமியும் ரவீந்திரனும் வந்திருந்தார்கள். அபிராமி ஒடுங்கிய கன்னத்தோடு ஒளி இழந்த கண்களோடு இவர்களின் மகிழ்ச்சியைத்தான் வெறுமையாக பார்த்து இருந்தார். 

 

நீலகண்டனுக்கு ‘ஆடு பகை குட்டி உறவு’ என்பது போல ஏனோ ஆண்மகவு இல்லாதவருக்கு பேரன் மீது கொஞ்சமே கொஞ்சம் பிரியம் இருந்தது. 

 

பூர்ணசுந்தரியோடு வந்து பேரனுக்கு நகைகள் சீர் போட்டவரை இப்பொழுது குடும்பம் கொஞ்சம் விசித்திரமாக தான் பார்த்தது. 

 

ஆனால் நயனனுக்கு அவர் உள்ளம் புரிந்தது. இந்த ஆளெல்லாம் திருந்தவே மாட்டார் என்பது போல மனைவியிடம் நயனங்களால் பேசினான்..! அவளும் பதிலுக்கு அதரங்களால் பேசினாள்..!

 

அன்றிரவு மகனுக்கு பசியாற்றி விட்டு கணவன் கையில் அவனை கொடுத்துவிட, மகனை மார்பில் போட்டு மெல்ல தட்டிக் கொடுத்தவாறே நடந்துக் கொண்டு இருந்த கதிர்நயனனின் கூர் நயனங்கள் தன்னவளை தான்.. 

 

பெரும் காதலாய்..

வளர் நேசமாய்..

நனி மோகமாய்.. பார்த்தன..!

 

இருவரும் ஈருடல் ஓர் உயிராய் முன்னர் காதல் செய்யவில்லை.. கல்யாணம் நடந்தது என்னவோ கட்டாயத்தில் தான்..

 

ஆனாலும் பிரக்யாவுக்கு ஒன்று மட்டும் நிச்சயம்..!

 

'அவனுக்கு என்னை பிடித்திருக்கிறது..

என் காதலை பிடித்திருக்கிறது..

என்னுள் ஒளிந்திருக்கும் குட்டி பெண்ணை அவனுக்கு பிடித்திருக்கிறது... 

என் பெண்மையை அதன் மென்மையை பிடித்திருக்கிறது…

என் பெண்மையை சீண்ட பிடித்திருக்கிறது…

என்னை தீண்ட பிடித்திருக்கிறது..

என் காதல் பார்வை பிடித்திருக்கிறது…!

என் தேக ஸ்பரிசம் பிடித்திருக்கிறது..

என் முத்தம் மட்டுமல்ல! 

என் மூச்சும் பிடிக்கிறது! 

என்னை மூச்சுமுட்டவும் பிடித்திருக்கிறது…!'

இவள் தன் போல சிந்தித்துக் கொண்டிருக்க, சற்றென்று அவள் இடையை வளைத்து இறுக்கியவனின் இதழ்களோ அவள் இதழ்களுக்குள் பொதிந்தது.

 

எத்தனை நேரம்..?? எத்தனை சுகம்..??

பூவில் தேன் குடிக்கும் வண்டாக.. தன்னை மறந்து நீண்ட நேரம்.. அவளின் இதழ்களில் மூழ்கி இருந்தான்.

 

காதல் நிறைந்த இரண்டு உள்ளங்கள் தங்களுக்குள் அடக்கி வைத்திருந்த நேசத்தை தயக்கமின்றி வெளிப்படுத்திக் கொண்டிருந்தன..

 

முத்தங்களால்..!

 

முத்தம் வெறும் காமத்தின் தேவை மட்டும் அல்ல‌‌..!

 

நேசத்தின் தேடல்..!

ஆசையின் தடவல்..! 

காதலின் தீண்டல்..!!

அன்பின் சீண்டல்..!

 

தன்னவளின் பெண்மைக்குள் தொலைந்து விடவே விரும்பினான் 

ஒரு சிறு பனித்துளியாகி.. அவளுக்குள் உருகிக் கரைந்து… அப்படியே காணாமல் போய் விடவேண்டும்..!

 

இந்தப் பிறவியின் பயன்நிலை தன்னவளுடன் தான் நிறைவு பெறுகிறது என்ற ஆழமான ஒரு இதயத் தவிப்பை உணர்ந்தான் நயனன்.

 

அந்தத் தவிப்பின் வெளிப்பாடாய் பிரக்யாவினுள் தன்னை ஒப்படைத்தான்..!

 

அவனது ஏக்கமும்.. தவிப்பும்.. மிக ஆழமாக அவளுக்குள் பாய.. அவனைத் தழுவிக்கொண்டு கண்மூடிக் கிறங்கிக் கிடந்தாள் பாவை.

 

அவள் இதழ்கள் மெதுவாக முணுமுணுத்தன..

 

“உன்னில் ஒரு நஷா இராவணா…!”

 

இது முடிவல்ல..!

 

முடிவிலி.. அவர்கள் காதலை போல..!

 

சுபம்..!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top