அத்தியாயம் 26
பிரக்யா அந்த அறைக்குள் ஏதோ புதிதாய் மணம் முடித்த மணமகளாய் நாணி கோணி நின்றாள். கூடவே பதட்டமும்..! அவ்வப்போது சுடிதார் ஷாலால் நெற்றி கழுத்தை துடைத்துக் கொண்டே இருந்தாள்.
அவளின் செயல்களை ஒருவித சுவாரசியத்தோடு ரசித்து இருந்தான் கதிர்நயனன்.
“சாப்பிட்டியா சின்னு?” குளித்து முடித்து தலையை துவட்டிக் கொண்டே வந்தவன் அவள் அருகே நின்று கேட்க.. அவளுக்கோ அவன் அருகாமை மூச்சு முட்டியது.
இருவரும் கடந்த சில நாட்களாக ஒரே அறையைத் தான் பயன்படுத்துகிறார்கள். இவ்வளவு நாளில் இவன் குளித்து வருவதை இயல்பு போல ஏற்றிருந்தாள் பெண். ஆனால் இன்று ஏனோ அந்த இயல்பை தொலைத்து இருந்தாள் பிரக்யா.
“இல்ல..” மென் குரலில் கூறியவளின் கண்கள் அலை பாய்ந்தன.
“கேட்கல… சாப்பிட்டியா இல்லையா?” என்றவனின் கண்களைச் சந்தித்ததும் நெஞ்சுக்குள் பெரும் நடுக்கம் வந்தது..!
அது ஏன்? தெரியவில்லை..! சட்டென அடைத்துக் கொண்ட மாதிரி பேச்சு தடைப்பட்டது. வார்த்தைகள் எழவில்லை..!
இமைகளைச் சரித்து பார்வையைத் தழைத்தாள்.
அவள் நிலை அவனுக்கு வெகு சுவாரசியமாக இருந்தது.
“சாப்பிட போவோமா?” அவனே கேட்டான்.
“ம்ம்” நிமிர்ந்து அவன் கண் பார்த்தாள்.
அவள் உதடுகளில் மெல்லிய நடுக்கம்..!
“டெம்ப்ட் ஏத்துறா.!” என்று முணகியவன், “போலாம் வா?” என்று முன்னே நடக்க.. கால்கள் பின்ன அவன் பின்னே நடந்தாள் பாவை.
இருவருக்குமான உணவு டைனிங் டேபிளில் இருக்க, அதை எடுத்து சூடு படுத்தி வந்தாள் பிரக்யா. இவன் இருவருக்குமான தட்டுகள் தண்ணீர் எல்லாம் எடுத்து வைத்தான்.
இருவரும் உணவினை அவனே இருவருக்கும் பரிமாறினான்.
“மாமா.. நானே…” என்றவள் குரலில்,
“ம்ம்.. நீயே என்ன?” குறும்பு கொப்பளிக்க கேட்டான்.
“ஒன்னுமில்ல” என்றவள் தலையை நிமிர்த்தவே இல்லை. மெதுவாக உணவை உண்டாள்.
அவன் பார்வை அவளின் மார்பின் மேல் தவழும் தாலியையும் அவளின் சோபையான அழகையும் தொட்டு தொட்டு மீண்டது..! ஒரு பெரு மூச்சு
அவனுள் எழுந்தது..!
அவளின் பதட்டத்தை உணர்ந்தவன் எதுவும் கூறாமல் “குட் நைட் சின்னு” என்று அவளின் கன்னத்தை தட்டி விட்டு படுத்துவிட..
“உஃப்” என்று அதுவரை அடைத்து வைத்திருந்து மூச்சினை விட்டவள், அவன் அருகே படுத்து உறங்கியும் விட்டாள்.
காலையில் எழுந்தவள் அருகில் கணவன் படுத்திருந்த இடத்தை பார்க்க, அது வெறுமையாக இருந்தது.
“இன்னைக்கு சண்டே.. மத்த நாளில் லேட்டாக முழிப்பு வருது.. இந்த சன்டேயில மட்டும் சீக்கிரம் முழிப்பு வந்துடுது.. இட்ஸ் டூ பேட்” என்று சிணுங்கிக் கொண்டே குளித்துவிட்டு வந்தாள்.
காலை நேரம் மெல்லிய பனியோடு ரம்யமாய் இருக்க.. மெல்ல இறங்கி தோட்டத்தில் நடை பயின்றாள்.
“குட் மார்னிங்..” என்ற குரலும் தட் தட் என்ற சத்தமும் அவளை நெருங்க, டிராக் பேண்ட் டீசர்ட்டில் வியர்வை வழிய, அவளை கடந்து ஜாக்கிங் ஓடியவனோ அவளை பார்த்து கண்சிமிட்டி விட்டுச் சென்றான்.
ஜாக்கிங் முடித்தவன் தோட்டத்திலேயே நின்று வார்ம் அப் எக்சர்சைஸ் செய்துக் கொண்டிருக்க..
“மாமா.. டீ எடுத்து வந்திருக்கேன்” என்று அவன் பின்னே நின்று அழைத்தாள்.
“ம்ம்.. இல்ல எனக்கு வேணாம் சின்னு.!” என்று மறுத்தவன், மீண்டும் உடற்பயிற்சியை தொடர.. பெண்ணவள் உள்ளமோ காலையில் இருந்த புத்துணர்ச்சி போய் சோர்ந்து போனது.
மாமன் தன்னை நெருங்கி வரும் போது, அவளும் தன் மன விருப்பமாய் தன் பக்கத்தில் இருந்து முதலடி எடுத்து வைக்க ‘இப்படியா பொசுக்கென்று வேணாம்னு சொல்வாரு’ என்று மனம் வெதும்ப.
“ஏன்.. என் கூட டீ குடிக்க பிடிக்கலையா?” என்றாள். சட்டென்று திரும்பி அவளைப் பார்த்தான். அவள் கண்களும் குரலும் அவளின் பெண்மைத் தவிப்பை அவனுக்கு உணர்த்த முயன்றன..!
அலைபாயும் அவள் விழிகளையும் ஏங்கும் அவள் உதடுகளையும் பார்த்தான். அவனுள் அது ஆண் எனும் உணர்வலைகளை எழுப்ப..
“உன் கூட டீ…” சிரித்தபடி பாதியில் நிறுத்தினான்.
“ம்ம்..!” முகம் தூக்கி விழி கூர்ந்து பார்த்தாள்.
“என் கூடத்தான். கம்பெனி கொடுக்கலாமில்ல மாமா?”
“கம்பெனி கொடுக்கணுமா?” என்றவனின் பேச்சோ சற்றே இரட்டை அர்த்தத்தில் வர, காலை நேரத்தில் அவனோடு கழிக்கும் இந்த பொழுதை தவற விட விரும்பாத பிரக்யாவோ அதனை உணராமல்,
“ஆமா என்னோட தான். அப்புறம் வேற யாரோட?” என்று சற்று முறைத்தபடி கேட்டாள்.
“நானெல்லாம் எப்பவோ ரெடி மா” என்றவன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து டேபிளில் இருந்த தேநீரை பார்த்தவன், அவளையும் கைகாட்டி அமர சொல்லி எடுத்துக் கொண்டான்.
அவனின் கண்கள் விரக தாபத்துடன் அவள் முகத்தின் அழகை ரசித்தன.
அவள் கன்னங்களோ காலை பனியில் சிவந்திருக்க.. அதை ரசித்தான்..!
மூக்கில் அணிந்திருந்த வளைவு மூக்குத்தி அவளுக்கு ஒரு கவர்ச்சியை கொடுக்க.. அதனை விரும்பினான்..!
தேநீர் ஒட்டியிருக்கும் அவளது உதடுகளின் ஈரமும்.. இளம் நரம்புகளுடன் சிலிர்த்திருக்கும் மென் கழுத்தும்.. அவனை ஈர்த்தன..!
அவள் பெண்மையின் இளமைகள் யாவும் அவனின் விழிகளுக்குள் அளவில்லா ஆனந்த கற்பனையை நிறைத்தன..!!
கணவன் தன்னை விடாமல் பார்க்கிறான் என்று அவளுக்கும் புரிந்தது. அவள் கண்கள் அவன் கண்களைச் சந்தித்து மெல்ல வெட்கிச் சரிந்து நிலம் நோக்கின.
அவள் இமைகளின் துடிப்பை துல்லியமாக அறிய முடிந்தது..!
இத்தனை ஆண்டுகளில் இது போல ஒரு இனிமையான காலை பொழுது இருந்திருக்க வாய்ப்பில்லை என்பது போலத்தான் சொட்டு சொட்டாக அந்த தேநீரை அருந்திக்கொண்டு தன்னவளின் அழகையும் பருகினான் கதிர்நயனன்..!
காலையில் மகனும் பேத்தியும் இல்லையில்லை… மகனும் மருமகளும் தோட்டத்தில் அமர்ந்து தேநீர் குடித்துக் கொண்டிருப்பதை வெகு திருப்தியோடு பார்த்தார் பர்வதத்தம்மாள்.
எப்பொழுதுமே கதிர்நயனன் உடற்பயிற்சி முடித்து குளித்து பூஜை அறையில் ஏக இறைவனுக்கு நன்றி தெரிவித்துவிட்டு தான் மற்ற எதுவுமே உண்பான்.
இன்று அவன் உடற்பயிற்சி செய்வதையும் தள்ளி நின்று அவனையே பார்த்துக் கொண்டிருந்த மருமகளையும் கண்டவருக்கு,
இவர்கள் இருவரும் இனி வாழ்ந்து விடுவார்கள் என்று நம்பிக்கையும் புது தெம்பும் தோன்ற சுகந்தியிடம் இருவருக்கும் சேர்த்து தேநீரை கொடுத்து அனுப்பினார்.
மகன் மறுக்கிறானா இல்லை மருமகளோடு அமர்ந்து தேநீர் அருந்துகிறானா என்று அவதானித்துக் கொண்டே தான் இருந்தார்.
அவன் சரி சொல்லும் வரை பிரக்யாவை விட அதிகமாக பதட்டத்தோடு இருந்தவர் பர்வதத்தம்மாள் தான்.
இருவரும் அமர்ந்து தேநீர் அருந்துவதை கண்கள் கலங்க பார்த்தவர், பின் கணவன் புகைப்படத்தை ஏக்கத்தோடு பார்த்து “வாழ்ந்துடுவாங்கல்ல” என்று அவரிடம் கேட்க…
“அது எப்படி வாழ்ந்துடாம போவாங்க? கண்டிப்பா நம்ம பிள்ளைகள் நல்லா வாழ்வாங்க பர்வதம்!” என்று அவரின் சிரிப்பின் மூலமே பதில் கூறினார் போலும்..
கண்ணாடியை கழட்டி கண்களைத் துடைத்துக் கொண்ட பர்வதத்தம்மாள், காலை உணவுக்கு பின் இருவரையும் எங்காவது அனுப்பி வைக்கும் திட்டத்தையும் யோசித்தார்.
அதன்படி குளித்து காலை உணவுக்கு வந்த மகனிடம் “ரெண்டு பேரும் இன்னும் சேர்ந்து எந்த கோயிலுக்குமே போல.. இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை தானே ரெண்டு பேருமே ஃப்ரீ தானே? காலையில பெரிய கோயிலுக்கு போயிட்டு வந்தா தான் என்ன?” என்று கேட்க… நயனனோ பிரக்யாவை பார்த்தான்.
பிரக்யாவுக்கும் மிகப் பிடித்த கோவில்தான். சரி என்று அவனோடு கிளம்பி கோயிலுக்கு சென்றாள்.
பெருவுடையாரின் தரிசனத்தை நிறைவாக பெற்று, அவரின் பிரசாதத்தை ஏற்றுக்கொண்டு கோவிலை சுற்றி வலம் வந்தனர்.
இவள் அமைதியாக வர, இவனே சிறுவயதில் இங்கே வந்த நாட்கள், செய்த குறும்புகள் என்று சிறிது சிறிதாக பேச்சு கொடுக்க.. அவளும் தன் கூட்டை விட்டு வெளியே வந்து அவனோடு பேசி சிரித்தபடியே நடந்தாள்.
இம்முறை பெரியநாயகி அம்மாளை தரிசித்து குங்குமப்பிரசாதம் வாங்கிக் கொண்டு வந்து அவன் அவளிடம் நீட்ட…
அன்று புரியாதது இன்று அவளுக்கு நன்றாக புரிந்தது..!
ஆனாலும் அதைவிட தன் மனதை அவனுக்கு புரிய வைத்துவிடும் நோக்கில்.. இப்பொழுது தன் கையில் இருந்த குங்கும பிரசாதத்தை அவனை நோக்கி நீட்டினாள் பிரக்யா.
“அட..!” என்று அதிசயத்தான்.
மனைவியிடம் இதை சற்றும் எதிர்பார்க்காத கதிர்நயனனோ காரிகையை கண்கள் மின்ன பார்த்தவன், பின் கையில் இருந்த குங்குமப்பிரசாதத்தை எடுத்தவன்..
அதி உரிமையோடு..
வளர் நேசத்தோடு..
பெரும் காதலோடு.. அவள் நெற்றி வகுட்டில் இட்டு விட்டான்.
பின் அவளே பொன் தாலி சரடை எடுத்து அவன் முன் நீட்ட.. அதிலும் குங்குமம் வைத்து விட்டவனின் அகமும் முகமும் பொன் குறு நகையில் வசீகரித்தது..!
அங்கே வார்த்தைகள் பகிரப்படவில்லை..!
ஆனால் உணர்வுகள் பகிர்ந்துக் கொள்ளப்பட்டன..!
மனைவியின் மனமாற்றம் மெல்லிய சாரலாய் அவன் உள்ளம் குளிர்விக்க துள்ளல் நடையோடு வந்தவன், அருகில் நாணத்தில் சிவந்த கன்னங்களோடு அன்ன நடையிட்டு வந்தவளை ரசித்துக்கொண்டே வந்தான்.
“வேற எங்காவது வெளியில் போகலாமா?” என்று அவன் கேட்க
‘இதே மனநிலை இன்னும் சற்று நீடித்தால் நல்லாயிருக்குமே?’ என்று பிரக்யாவின் மனமும் எதிர்பார்க்க சரி என்று தலை அசைத்தாள்.
அவர்களின் பண்ணை நிலத்திற்கு தான் அழைத்து வந்தான்.
“இங்கையா? இங்க எதற்கு?” என்று அவள் விழி கேட்ட கேள்வியில்..
“நம்ம ஊருல இருக்கிற எல்லா இடத்தையும் நீயும் நானும் சின்ன வயசுல இருந்து நல்லா சுத்தி பார்த்தாச்சு.. நீ வராத இடம் இங்கே நம்ம நிலம் தான். ரொம்ப நாளாச்சு இல்ல? வா.. வா.. அப்படியே ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம்” என்று அவள் கையை பிடித்து அழைத்துச் சென்றான்.
அங்கு பல வகை கீரைகள் தானியங்கள் பூக்கள் பயிர்கள் பயிரிடப்பட்டு பெரும்பண்ணையாக விரிந்து பரந்திருந்தது.
“இவ்வளவும் சுத்தி பார்க்க போறோமா?” என்று அவள் கண்களை விரிக்க..
“ஹா ஹா..” வாய்விட்டு சிரித்தவன் “இல்ல.. இல்ல.. கொஞ்ச தூரம் அப்படியே நடந்து போயிட்டு, அங்க நம்ம கிட்ட வேலை செய்யறவங்களை எல்லாம் பார்த்துட்டு வருவோம்” என்றவன் சில பல வகைகள் பூக்கள் பதிய பட்டிருந்ததை அவளிடம் காட்டிக் கொண்டே அருகில் இருந்த தென்னந்தோப்புக்குள் நுழைந்தான்.
தென்னந்தோப்புக்கு அருகிலே இப்பண்ணைகளை பார்த்துக் கொள்பவர்களுக்கான வீடுகளும் இருந்தன.
அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சந்தோஷ புன்னகையோடு நெருங்கி வந்து வணக்கம் வைத்து குசலம் விசாரித்தார்கள்.
இவர்களைப் பார்த்து வணக்கம் வைத்தவர்களுக்கு.. மனைவியின் கைகளில் பணத்தை கொடுத்து கொடுக்க வைத்தான் நயனன்.
முதலாளியம்மாவின் கையால் வாங்கும் பணத்தை பெரும் மகிழ்வோடு பெற்றுக் கொண்டனர். அதைவிட முதலாளி இப்படி தம்பதி சமேதராய் வந்து காட்சி அளித்தது அவர்களுக்கு பெரு மகிழ்ச்சி..!
அவர்களோடு சிறிது நேரம் உரையாடிவிட்டு, அவர்கள் வற்புறுத்தி கொடுத்த இளநீரையும் பருகி விட்டு வீட்டுக்கு வந்தனர் இருவரும்.
ஆனால் வீட்டிலோ நீலி காளி போல உக்கர தேவியாக அமர்ந்திருந்தார் அபிராமி தேவி.
“என் பிள்ளைங்க இன்னைக்கு தான் சந்தோஷமா கொஞ்சம் வெளியில போயிட்டு வந்தாங்க.. அது இவளுக்கு பொறுக்காதே..! மூக்குல வேர்த்திடுமே..!” என்று கோபமாக அமர்ந்திருந்த மகளை கண்டு பொறுமிக் கொண்டிருந்தார் பர்வதத்தம்மாள்.
நேற்று ஆதிரா கல்லூரியை கட்டடித்துவிட்டு பிரக்யாவோடு சாப்பிட்டதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
மதியம் போல வீட்டுக்கு வந்த மகளை நடு வீட்டில் வைத்து அத்தனை பேச்சு..!
“அவளோட பழகாதே.. பழகாதேனு எவ்வளவு சொல்லியிருப்பேன்? கேட்டியா?? இப்ப உடம்பு சரி இல்லைன்னு பொய் சொல்லிட்டு அவளோட போய் ஹோட்டல்ல கொட்டிக்கிட்டு உட்கார்ந்து இருக்க… இவளுக்கு இங்க நான் ஒண்ணுமே ஆக்கி போடலையா? இங்க என்ன இல்லேன்னு அவளோட போகணும்? எதுக்கு அவளோட போய் ஹோட்டல்ல திங்கணும்?” என்று விலாசியவர் நிறுத்தவே இல்லை.
அதோடு மட்டுமல்லாமல் வேலை முடிந்து வந்த ரவீந்திரனிடமும் கல்லூரி முடித்து வந்த ஆர்யாவிடமும் சொல்லி சொல்லி மாய்ந்து போனார்.
ஆதிரா முகம் இறுக்கமாகவே இருந்தது. ஆர்யனுக்கு கடுப்பாக இருந்தது அன்னையின் இந்த செயல்.
சிறுவயதில் எதற்காக பிரக்யாக்காவை அம்மா திட்டுகிறார் என்று புரியாமல் இருந்தவர்களுக்கு போக போக சில விஷயங்கள் அவர்களின் அம்மம்மா மூலம் இருவருக்கும் தெரிய வர.. அன்று முதல் அன்னை மீதும் அவரின் பேச்சின் மீதும் எரிச்சல்தான்.
ஆனாலும் அன்னையை மீறி வார்த்தையை விட அன்று தயங்கியவன், இன்று தயங்கவில்லை..!
“சும்மா எப்ப பார்த்தாலும் எதுக்கெடுத்தாலும் திட்டிட்டே இருக்காதீங்க..! நாங்க இன்னும் சின்ன பிள்ளைங்க கிடையாது. எங்களுக்கும் எது சரி எது தப்புனு புரியும்” என்று வேகமாக கூறிவிட்டான்.
அவ்வளவுதான்..!
“அச்சோ.. அச்சோ.. என்னைக்கும் என் வார்த்தையை மீறி பேசாத புள்ளைங்க இன்னைக்கு பேசுறாங்க.. அதுக்கு தான் அவளோட சேராதீங்கன்னு சொன்னேன். அந்த திமிரு புடிச்சவ மாதிரியே ரெண்டு பேரும் திமிரு எடுத்து அலையுறீங்களா?” என்று மகனுக்கும் ஒரு டோஸ் பாட்டு இருந்தது.
ஆதிராவுக்கு சிரிப்பு பொங்கியது. ‘இவன் வாய மூடிட்டு இருக்க வேண்டியதுதானே? எதுக்கு வாய் கொடுத்து வாங்கி கட்டுகிறானோ?’ என்று நினைத்தவள், ஓரக்கண்ணால் அவனைப் பார்த்து சிரித்தாள்.
‘எல்லாம் உன்னால தான் டி.!’ என்று அவனும் பதிலுக்கு முறைத்தவன்
“போதும் மா..! எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு” என்று அவரைக் கண்டு கொள்ளாமல் அறைக்குள் சென்று உறங்கி விட்டான்.
மகன் தன் பேச்சை மீறி சென்றது அவருக்கு பெரும் கோபத்தை கொடுத்தது. ஆனால் மகள் இன்னும் தன் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறாள் என்று அவள் அமைதியாக நிற்பதிலேயே கண்டு கொண்டவர்,
எங்கே அவளும் முகத்தை திருப்பிச் சென்று விடுவாளோ? என்று பயந்து, “சரி சரி உடம்பு சரி இல்லனு சொன்னல தூங்கு போ..” அவளை அனுப்பி வைத்தார்.
தன் பேச்சை தட்டாமல் கேட்டு வளர்ந்து, தான் சொன்ன படிப்பை படித்து இப்பொழுதும் படிக்கும் தன் மக்கள், இன்று இப்படி தன்னை எதிர்த்து பேசுவதற்கு காரணம் பிரக்யாவே என்று தீர்மானமாக தீர்மானித்தார் அபிராமி.
இதில் இன்னும் ஆதிராவின் காதலை அறிந்தால்??
“வா கா..” என்றவன் மனைவியை பார்க்க அவளும் வேண்டா வெறுப்பாக “வாங்க சித்தி.” என்றவள் உள்ளே சென்று விட்டாள்.
“அவ என்னை மதிக்கவே இல்ல..!” என்று அம்மாவிடமும் தம்பியிடம் அவர் ஆரம்பிக்க..
“அதுக்கு மதிக்கும்படி நீ நடந்துக்கணும்..!” என்றவன் அக்காவுக்கு எதிரே அமர்ந்தான். ஆனால் அவருக்கோ தம்பி தனக்கு எதிராக இருக்கிறானோ என்று எண்ணம் துளிர்த்தது.
“இங்க பாரு கதிரு.. உன் பொண்டாட்டி கிட்ட சொல்லி வை. என் பொண்ண காலேஜ் கட்டடிச்சு ஹோட்டலுக்கு சாப்பிட கூட்டிட்டு போய் இருக்கா நேத்து.. இதெல்லாம் நல்ல பழக்கமா?” என்று புகார் கூறியதும் அவன் யோசனையாக அம்மாவை பார்க்க.. அவரோ மகனைப் பார்த்து இடவலமாக தலையாட்டினார்.
“என் பொண்டாட்டி என்ன உன்னை மாதிரி வீட்ல வெட்டியா உட்கார்ந்து இருக்காளா? அவ ஒரு டாக்டர்.! காலைல மாலைல ரெண்டு வேளையும் அவளுக்கு பேஷண்ட்ஸ் அவ்வளவு வராங்க.. அவ செம பிஸி..! இதுல இவ ஹாஸ்பிடலை விட்டுட்டு உன் பொண்ணு படிக்குற காலேஜுக்கு போய் அவளை வான்னு கைய புடிச்சு இழுத்தாளா என்ன?” அவன் கேட்க..
“இரண்டு பேரும் ஹோட்டல்ல சாப்பிடுவதை நானே என் கண்ணாலே பார்த்தேன்” என்றார் அபிராமி.
“ச்ச.. இங்க பாரு கா..! நீ எனக்கு அக்கா உறவுக்கான மரியாதை என்கிட்ட உனக்கு இருக்கும். ஆனா எப்ப பார்த்தாலும் என் பொண்டாட்டி பத்தி ஏதாவது ஒன்னு நீ பேசிக்கிட்டே இருந்தேனா.. அப்புறம் நான் இந்த உறவை நீட்டிக்கணுமானு யோசிக்க வேண்டி இருக்கும்” என்று கட்டன் ரைட்டாக பேசிய தம்பியைக் கண்டு, அவர் அம்மாவிடம் குறை சொல்ல போக..
“அம்மா.. நாங்க லஞ்ச் வெளியிலே சாப்பிட்டோம். நான் ரெஸ்ட் எடுக்க போறேன். நீங்களும் சாப்பிட்டீங்கனா ரெஸ்ட் எடுங்க” என்று சென்ற தம்பியை தான் வெறித்துப் பார்த்தார்.
ஆனால் அடுத்த இரண்டாவது நாளில் ஆதிரா காதலனுடன் சென்று விட்டதற்கு காரணம் பிரக்யா தான் என்று பிரசன்னம் வந்தவர் போல ஆடிக் கொண்டிருந்தார்.
