அத்தியாயம் 14
“என்னை நம்பு மாமா.. நான் தப்பு பண்ணல” தீனமாக முணகி மயங்கி சரிந்தவளை கைகளில் அள்ளிக் கொண்டான் கதிர்நயனன்.
“சின்னு.. சின்னு.. ஏய் கண்ண திறடி.. சின்னு கண்ண திறமா.. மாமா உன்னை நம்புறேன் டி..! யாரு என்ன சொன்னா என்ன.. என் சின்னுவை பத்தி எனக்கு தெரியாதா? கண்ண முழிச்சிக்கோ டி சின்னு..! மாமாவை இப்படி பயமுறுத்தாத..!” என்று அவள் கன்னத்தில் பட் பட் என்று தட்டி எழுப்ப முயன்றான் கதிர்நயனன். அவன் மனமோ அத்தனை பயந்திருந்தது அவளது மயக்கத்தில்..
“என்னம்மா நடிக்கிறா? நீயும் அதை உண்மைனு நம்பு..!” என்று முகத்தை சுழித்த அபிராமியை அருவருப்பாக பார்த்த கதிர்நயனனோ, அவரை ஒரு பொருட்டாக மதிக்காமல் கையில் வாகாக மனைவியை அள்ளிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான்.
“டேய்.. நான் சொல்லிக்கிட்டே இருக்கேன் நீ கேட்காம அவளை தூக்கிட்டே உள்ள போற.. அவளை அங்கேயே விட்டுட்டு வாடா.. அவ அப்பனுக்கு ஃபோன் பண்ணி வந்து அள்ளிட்டு போ சொல்லு அவளை” என்று பின்னால் கத்திக் கொண்டே வந்த அக்காவை திரும்பி கண்களில் கனல் கக்க முறைத்தான்.
அந்த கண்களில் சுட்டெரியும் நெருப்பில் பயந்து வாயை மூடிக்கொண்டார் அபிராமி..!
அதற்குள் பர்வதத்தம்மாள் “என்ன ஆச்சு நயனா? என்ன ஆச்சு சின்னுவுக்கு?” அவரும் கண்ணீரோடு மகனையும் மகன் கையில் ஏந்தி இருக்கும் மருமகளையும் மாறி மாறி பார்த்தார்.
“ஒன்னும் இல்லமா சின்ன மயக்கம் தான்..!” என்றவன் அங்கிருந்த நீள் இருக்கையில் அவளை படுக்க வைத்து விட்டு அவர்களது குடும்ப வைத்தியரை அழைத்தான்.
அபிராமியும் தான் இத்தனை கூறியும் ஆதாரங்களை காட்டியும் தம்பி நம்பாமல் இவளை இப்படி தாங்குகிறானே என்று அத்தனை கோபம் வந்தது.
“நாய குளிப்பாட்டி நடு வீட்ல வச்சாலும்.. அதோட குணம் மாறாதுன்னு சொல்லுவாங்க.. அப்படித்தான் இங்க நடந்துக்கிட்டு இருக்கு..!” என்று அவர் சற்று சத்தமாகவே முணுமுணுக்க..
“இப்ப நீ அடங்க போறியா இல்லையா?” என்று கர்ஜித்த தம்பியின் இந்த புது அவதாரத்தில் ஆடி போய் அமர்ந்தார்.
“டாக்டர் வந்துட்டு போற வரைக்கும் உன் வாய திறக்க கூடாது. அதுக்கப்புறம் எல்லாம் விவரமா உனக்கு சொல்றேன்” என்று அமர்ந்திருந்த அக்காவிடம் குனிந்து கோபக் குரலில் பேசிய கதிர்நயனனை கண்டு அவர் அமர்ந்திருந்த இருக்கையிலேயே குறுக்கி அமர்ந்துக் கொண்டார்.
ஆனாலும் அவரது வாய் ஓயாமல் தனக்குத்தானே புலம்பி தீர்த்துக்கொண்டு தான் இருந்தது.
“அப்படி என்ன நான் தப்பா செஞ்சிட்டேன்? இவ தப்பு பண்ணுனதை வந்து இங்கு சொன்னா.. எல்லாரும் என்னமோ நான் தப்பு பண்ண மாதிரி என்னையே பேசுறாங்க முறைக்கிறாங்க..” என்று புலம்பிக் கொண்டே தான் இருந்தார்.
காலையில் ஆதிராவும் ஆர்யனும் கல்லூரிக்கு கிளம்பி விட, அவர்களை வழி அனுப்பி வைத்து விட்டு சற்று ஆறுதலாக அமர்ந்திருந்த அபிராமிக்கு அழைப்பு வந்தது விசாலினி இடமிருந்து.
விசாலினி அவளது கணவன் ரவீந்திரனின் சொந்த சித்தியின் மகள்..!
ரவீந்திரனின் சித்திக்கு சில காலம் குழந்தை இல்லாமல் அதன் பிறகு பல்வேறு வேண்டுதல்களுக்கு பின் வரமாய் இவள் பிறந்ததால் அவளுக்கு வீட்டில் அதிகச் செல்லம் தான்.
ஏன் அபிராமியின் மாமியார் கூட அமெரிக்காவில் இருக்கும் அவரது மகளை விட தங்கையின் மகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்.
அதனால் விசாலினி எப்பொழுதும் அங்கு உரிமையாக.. அந்த வீட்டு பெண்ணாகத் தான் நடந்துக் கொள்வாள்.
அதன் பொருட்டே தான் இவளை தம்பிக்கு திருமணம் செய்து வைத்தால் நன்றாக இருக்குமே என்று நிச்சயதார்த்தம் வரை கொண்டு சென்றதே அபிராமி தான்..!
நிச்சயதார்த்தம் முடிந்து பலவித பிரச்சனைகள் நடந்ததாலும்.. பிரக்யாவை நயனன் திருமணம் செய்தாலும்.. விசாலினிக்கு இன்னும் நம்பிக்கை கொடுத்து அவளின் மனதில் கதிர்நயனனின் ஆசையை வாடவிடாமல் அவ்வப்போது அதற்கு நீர் ஊற்றிக்கொண்டே இருப்பது அபிராமி தான்.
“என்ன விசா காலையிலேயே அண்ணி ஞாபகம் உனக்கு வந்து இருக்கு?” என்று ஃபோனை எடுத்து கிண்டலாக கேட்ட அபிராமியிடம்,
“நான் என்னைக்கு உங்களை மறந்தேன்? உங்களுக்கும் உங்க தம்பிக்கும் தான் என் ஞாபகமே இல்லை.. ஞாபகம் இருந்து இருந்தா போனவளை திரும்ப கூட்டிட்டு வந்து இப்ப குடும்பம் நடத்திட்டு இருப்பாரா? போதாக்குறைக்கு இவரோட ஹாஸ்பிடலேயே வேலைக்கு வேற சேர்த்து விட்டு இருக்காரு” என்று அனைத்தையும் அழுகையோடு அவள் ஒப்பிக்க..
“நானும் எல்லாம் கேள்விப்பட்டேன் விசா. இதுக்கெல்லாம் ஒரு நாள் நான் முடிவு கட்டுறேன்” என்றார் அபிராமி.
“நீங்களா ஒன்னும் முடிவு கட்ட வேணாம் அண்ணி. அதற்கான ஒரு வாய்ப்பு நமக்கே அமைந்திருக்கு. நான் உங்க வாட்ஸ்அப்புக்கு சில போட்டோஸ் அனுப்புறேன். அதை எல்லாம் பாருங்க.. நீங்களே உங்க அக்கா மக லட்சணத்தை பார்த்துட்டு அதுக்கப்புறம் அவ அந்த வீட்டுக்கு மருமகளா வேணுமா? உங்க தம்பிக்கு பொண்டாட்டியா இருக்கணுமானு முடிவு பண்ணுங்க…” என்று ஃபோனை கட் செய்தாள் விசாலினி.
‘என்னாச்சு இவளுக்கு ஏன் காலையிலேயே தாம் தூம்னு குதிக்கிறா?’ என்றபடி அவள் அனுப்பிய புகைப்படங்களை பார்த்த அபிராமிக்கும் ஏக அதிர்ச்சி தான்.
அடுத்த சில வினாடிகளிலே திரும்பவும் அவருக்கு அழைத்த விசாலினி “என்ன அண்ணி நல்ல கண் குளிர பார்த்தீங்களா உங்க அக்கா மக நடத்தைய..?? அப்பப்பா..! நானும் பார்த்தாலும் பார்த்தேன் இப்படி ஒரு ஒழுக்க கேடான பொண்ண பார்க்கவே இல்ல சாமி.. அங்கதான் கண்ணுக்கு தெரியாம அமெரிக்காவில் இருக்கும் போது அந்த ஆட்டம் போட்டா.. இப்ப ஊர்ல அதுவும் சொந்த ஊருல புருஷனை பக்கத்தில் வச்சிக்கிட்டே இந்த ஆட்டம் போடுறானா? ஆத்தி.. இவ என்ன மாதிரியான பொண்ணு?” என்று ஏகத்துக்கும் குதித்து அபிராமியை ஏத்திவிட்டவளே விசாலினி தான்.
அதன்பின் கிளம்பி அம்மா வீட்டுக்கு வந்தவர், காலை பூஜையை முடித்துவிட்டு வந்த பர்வதத்தம்மாளை பிடி பிடி என்று பிடித்துக் கொண்டார்.
இப்பொழுது தம்பியிடம் கடிபட்டு முணங்கிக் கொண்டே அமர்ந்திருக்கிறார்..!
தெருவில் குரைக்கின்ற நாய் கல்லடி பட்டாலும் முழுவதாக குரைப்பதை விடாமல் மெல்லிய குரலில் கத்திக்கொண்டு இருக்குமே அது போல..!!
விசாலினியோட வம்பு காலையில் அபிராமியோடு முடிந்து விடவில்லை. அடுத்து பிரக்யாவின் அப்பா நீலகண்டனுக்கும் அந்த புகைப்படங்களை அனுப்பி வைத்து, ‘பாருங்க உங்க பொண்ணோட லட்சணத்தை’ என்று வியப்பு குறியோடு அனுப்பி வைத்திருக்க…
அடுத்து அவரும் கிளம்பி வந்து விட்டார் பூர்ண சுந்தரியோடு. அவருக்குமே விஷயம் என்னவென்று தெரியாது கணவன் அழைத்ததும் வள்ளுவனுக்கேத்த வாசுகியாய் அவர் பின்னே ஓடி வந்து விட்டார்.
“எங்க அவ? எங்க அந்த திமிரு புடிச்சவ?” என்று சக்கர நாற்காலியில் இருந்தாலும் அவர் சத்தத்துக்கு ஒன்றும் குறைவே இல்லை..!
‘அடுத்து இவரா?’ என்று நெற்றியை நீவிக் கொண்டவன், அவரை திரும்பி பார்த்தானே தவிர, வா என்று அழைக்கவில்லை.
ஆனால் பின்னால் வந்த பூர்ண சுந்தரியிடம் கண்களாலேயே என்னவென்று விசாரிக்க..
அவரும் ‘எனக்கு ஒன்றும் தெரியாது தம்பி’ என்று உதட்டைப் பிதுக்கினார்.
இப்பொழுது அபிராமி நன்றாக அந்த இருக்கையில் அமர்ந்து நீலகண்டனை ஒரு ஏளன பார்வை பார்த்தார். ‘பாரு.. நல்லா பாரு.. உன் பொண்ணு லட்சணத்தை.!’ என்று அதில் பொருள் இருந்தது.
நீலகண்டனும் அபிராமிக்கு சளைத்தவர் கிடையாது. ‘என் பொண்ணு என் வீட்டில் இருந்த வரைக்கும் நல்லாத்தான் இருந்தா.. எப்ப நீங்க இங்க கூட்டிட்டு வந்தீங்களா அப்பொழுது இருந்து தான் எப்படி ஒழுக்க கேடா இருக்கா.. எல்லாத்துக்கும் உங்க வளர்ப்பு தான் காரணம்' என்று பதில் பார்வை பார்த்தார்.
பர்வதத்தம்மாள் பேத்தியின் அருகில் மண்டியிட்டு அமர்ந்து அவள் தலைமுடியை மெதுவாக வருடி விட்டுக் கொண்டிருந்தார்.
கண்களிலோ அத்தனை கண்ணீர்.. மனதில் கடவுளிடம் அத்தனை பிரார்த்தனைகள்..
சிறிது நேரத்தில் வந்த மருத்துவரும் “என்ன ஆச்சு?” என்று கேட்டார்.
“காலைல கொஞ்சம் பிரச்சனை டாக்டர் மயங்கி விழுந்துட்டா” என்றான் கதிர்நயனன்.
உடனே பூர்ண சுந்தரி “கங்கிராஜுலேசன் தம்பி.. சந்தோஷமான விஷயமா?” என்று கேட்க..
மொத்த குடும்பமே அவரை இப்பொழுது முறைத்து பார்த்தது.
‘என்ன மகள் திரும்பவும் கர்ப்பமா?’ என்று சந்தோஷப்பட முடியாமல் அதிர்ச்சி அடைந்தார் நீலகண்டன்.
‘அவளது ஒவ்வொரு குட்டும் இப்பொழுது தான் வெளிப்பட்டு வருகிறது’ என்று அருவருப்பாக பார்த்தார் அக்கா மகளை அபிராமி.
பிரக்யாவை சோதித்த மருத்துவர் “ஒரு டாக்டரையே டாக்டர் வந்து பார்க்க வச்சிட்டீங்களே..!” என்று சிரித்தவாறு, அவளது வைட்டல்ஸ் எல்லாம் செக் செய்தார்.
“நத்திங் டு வொர்ரி கதிர்நயனன்.. ஜஸ்ட் ஷாக்கிங்ல வந்த மயக்கம் தான். வேற ஒன்னும் இல்ல.. ஆனா ரொம்ப அனிமிக்காக இருக்காங்க. கூடவே..” சுற்றி இருந்த சொந்த பந்தங்களை பார்த்தவர் “கொஞ்ச நாளைக்கு அவங்கள மைண்ட் ரிலாக்ஸா உள்ள இடத்துக்கு கூட்டிட்டு போங்களேன்.!” என்று அறிவுரை கூறியே சென்றார்.
மருத்துவர் செல்லும் வரை அங்குள்ள அனைவரும் தங்கள் வாய்க்கு பூட்டு போட்டு தான் அமர்ந்திருந்தனர். எந்த வகையிலும் குடும்ப மானம் வெளியில் போகக்கூடாது என்று வந்த அமைதி..!
மருத்துவரை வாயில் வரை அனுப்பி வைத்து விட்டு வந்த கதிர்நயனன் வீட்டுக்குள் வரும்போதே நீலகண்டனின் குரல் உரத்து கேட்டது.
“அவளை என் கூடவே அனுப்பி வைங்க.. நீங்க வச்சு பார்த்துக்கிறேன்னு சொல்லி அவ பேரை நார அடித்ததே போதும்..” என்று மாமியாரிடம் முறையிட்டுக் கொண்டிருந்தார்.
உள்ளே வந்த கதிர்நயனன் அவரை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தபடி “சின்னு..” என்று மெதுவாக அவளது கன்னத்தில் தட்ட.. அவன் கையைப் பிடித்து தன்னில் பொதித்து வைத்துக் கொண்டு “நான் தப்பு செய்யல மாமா..” என்று மீண்டும் தீன குரலிலே அதுவும் மயக்கத்திலேயே கூறிய மனைவியவளை கண்டதும் கணவனாக அவனுக்கு மனது மிகவும் வலித்தது.
‘மனதளவில் எவ்வளவு பாதிக்கப்பட்டிருந்தால்.. மயக்கத்தில் கூட தான் தப்பு செய்யவில்லை என்பதை அழுத்தி அழுத்திக் கூறுவாள் என்னவள்’ என்று உடைந்து போனான் மாமனாய்.. கணவனாய் நயனன்..!
அவனை அறியாமல் கண்களில் நீர் கோர்த்தது. கண்களை சிமிட்டி அதை உள்ளிழுத்துக் கொண்டவன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு “எந்திரி சின்னு ஏதாவது கொஞ்சம் சாப்பிடு” என்று மெல்ல அவளை எழுப்பினான்.
பிரக்யா எழுவதற்குள் பேத்திக்கு வெதுவெதுப்பாக சத்து மாவில் காய்த்த பாலை கொண்டு வந்து கொடுக்க.. அதை அவனே மெல்ல புகட்டினான்.
“நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்..” என்று கத்திய நீலகண்டனை திரும்பி ஒரு பார்வைதான் நயனன். அதில் இனி நீ வாயை திறந்து பேச கூடாது என்று கட்டளை இருந்தது.
“இந்த குடும்பத்துக்கே உள்ள பார்வை.. இந்த பார்வை.. இந்த ஆளுமை.. இந்த நிமிர்வு..! ஜஸ்ட் ஐ ஹேட் திஸ்” என்று அந்த சக்கர நாற்காலியிலேயே உள்ளங்கையை மடித்து குத்திக் கொண்டார்.
அவள் குடித்து முடித்து அவளுக்கு சற்று சோர்வு நீங்கும் வரை மகனும் அன்னையும் அவள் அருகிலேயே அமர்ந்திருந்தனர்.
“ஆர் யூ ஓகே நவ்?” என்று கணவன் கேட்டதும் அவள் மெல்ல தலையாட்டினாள்.
“உபச்சாரம் எல்லாம் முடிஞ்சிட்டா? நான் பேசலாமா?” என்று திடீர் என்று கேட்ட தந்தையின் கோபமான குரலில்.. அவள் உடல் திடுக்கிட்டு உலுக்கி போட.. அருகில் இருந்த மாமனின் புஜத்தை இறுக்கமாக பற்றிக் கொண்டாள் பிரக்யா.
“ரிலாக்ஸ் சின்னு..!” என்று அவளது கை மீது தன் கை வைத்து ஒரு அழுத்தம் கொடுத்தவன்,
எதிரே இருந்த மாமனை பார்த்து “என்ன விஷயம் காலையிலேயே மாமியார் வீடு தேடி வந்து இருக்கீங்க?” என்றான் சற்று அதிகாரமாகவே.. அதில் கொஞ்சம் நக்கலும் கலந்து இருந்ததுவோ?
“கொஞ்சமாச்சும் அக்கா புருஷன்னு மரியாதை கொடுக்குறானா பாரு? மரியாதை தெரியாதவன்..!” என்று சிறு குரலில் பேசியவர், தன் கையில் இருந்த ஃபோனில் உள்ள புகைப்படத்தை பூர்ண சுந்தரியிடம் கொடுத்து “இதை காட்டு..!” என்றார் அவனிடம் காட்ட முடியாத அதிகாரத்தை இரண்டாவது மனைவியிடம் காட்டி..
குடுகுடுவென்று கணவன் கொடுத்ததை வாங்கிக் கொண்டு கதிர்நயனனை நோக்கி ஓடி வந்தவரை “நீங்க அதை அவர்கிட்டேயே திருப்பி கொடுங்க கா.. ஏற்கனவே எனக்கும் வந்துடுச்சு” என்றான் அலட்சியமாக கதிர்நயனன்.
“உனக்கும் வந்திருச்சா? அப்ப ரொம்ப சந்தோஷம். இப்படித்தான் இவளை ஊர் சுத்த விட்டு பேரை நாரடிக்க விட்டு பார்த்துட்டு இருப்பியா?” என்று சற்று கோபமாக கேட்டார்.
பிரக்யாவுக்கு மனம் பதறியது. “இல்லப்பா.. அது.. வந்து..” என்று மெல்லிய குரலில் கூற வந்தவளின் கையை அழுத்தியவன், அவள் திரும்பி பார்த்ததும் கண்களை மூடி ‘நான் பார்த்துக்கிறேன் நீ அமைதியா இரு.!’ என்று நயனங்களால் பேசினான் கதிர்நயனன்.
“அதுதான் உங்க பொண்ணோட லட்சணம் ஊர் பூரா சிரிக்குதே.. கூட்டிட்டு உங்க வீட்டுக்கே போங்க.. இங்கே இருந்து எங்க குடும்பமும் அசிங்கப்படுது..” என்று அபிராமி எள்ளலாக கூற
அதில் நீலகண்டனின் தன்மானமும் ஈகோவும் இன்னமும் சீண்டப்பட, “அதுக்கு தான் வந்து இருக்கேன் ஒரேடியா இந்த உறவை முடிச்சிட்டு என் பொண்ண கூட்டிட்டு போயிடலாம்னு. என் வீட்ல அவளை கொன்னு புதைச்சா கூட நீங்க யாரும் வந்து கேள்வி கேட்கக் கூடாது” என்று அவர் முடிக்கும் முன்,
அவர் எதிரே இருந்த டீப்பாய் பறக்க… ருத்ர மூர்த்தியாய் அவர் முன்னே நின்றிருந்தான் கதிர்நயனன்.
“அவ்வளவுதான் உங்களுக்கு மரியாதை..! இன்னொரு முறை என் பொண்டாட்டிய பத்தி ஏதாவது தப்பா பேசுனீங்க..” குறிப்பாக அந்த டீப்பாயை பார்த்தான் அவன்.
“என்ன எல்லாம் ரொம்ப திட்டுறீங்க? அந்த போட்டோல இருக்கிறது அவ தான்..!” என்றதும்,
“மாமா..” என்று அவள் பதற
“கொஞ்ச நேரம் சும்மா இருடி எதையும் தைரியமா ஃபேஸ் பண்ண தெரிய வேணாம்? எதுக்கு பயந்து சாகுற?” என்று பிரக்யாவுக்கும் ஒரு திட்டு விழுந்தது.
“நேத்து நாங்க எல்லாம் ரிசார்டுக்கு போயிருந்தோம். அங்க தான் ஏதோ நடந்திருக்கு” என்று நயனன் பேசி முடிக்கும் முன்,
“ஐயோ.. ஐயோ.. பாவி.. பாவி.. உன் கூட, உன்னை நம்பி என் புள்ளைங்களையும் அனுப்பி வச்சேனே.. உன்னால இப்போ அவங்க பேரும் கெடப்போகுதே” என்று அபிராமி அலற..
“இன்னொரு முறை என் மருமகளை பத்தி தப்பா பேசின பொண்ணுனு கூட பார்க்க மாட்டேன், நல்லா தோசை திருப்பிய அடுப்புல போட்டு வாயிலேயே சூடு வச்சுடுவேன்” என்று பர்வதத்தம்மாள் எகிறவும் தான் அவர் அமைதியாக அமர்ந்தார்.
ஜான் அனுப்பி இருந்த வீடியோ ஃபுட்டேஜை நயனன் வீட்டில் இருந்த டிவியில் போட்டு காட்டினான்.
இவர்கள் நால்வரும் சந்தோஷமாக பேசி சிரித்துக்கொண்டு செல்லும் பொழுது, அவ்வப்போது அந்த பசங்க இவர்கள் வழியில் குறுக்கிடுறதும்.. ஒருமுறை ஆர்யா அவனை அடிக்கச் சென்றதையும்.. ஒரு முறை பூர்வாவே திமிறிக் கொண்டு செல்ல இருவரையும் கட்டுப்படுத்தி அழைத்து வந்த பிரக்யாவின் வீடியோவும் அதில் தெரிந்தது.
“எனக்கு தெரியாம இவளை எப்ப டி அவங்க கூட அனுப்பின?” என்று இப்பொழுது பூர்ண சுந்தரியை கடுப்போடு கேட்டார் நீலகண்டன்.
‘எனக்கென இப்படி விவகாரமாகும்.. வீடியோ ஃபுட்டேஜை இவரே பார்ப்பார்னு ஜோசியமா தெரியும்.. ஐயோ ஆண்டவா.. காப்பாத்து’ என்று மனதில் புலம்பியவர் “மன்னிச்சிடுங்க..!" என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார்.
“வீட்டுக்கு வா.. உனக்கு இருக்கு..!” என்று பல்லைக் கடித்தார் நீலகண்டன்.
அப்பொழுது அடுத்த முறை அவன் வந்து பிரக்யாவின் மேல் வேண்டும் என்று விழுந்து, அவள் இடுப்பை பிடிக்கவும்.. பின்பு பிரக்யாவிடம் இருந்தும் ஆர்யாவிடம் இருந்தும் அறை வாங்கியது எல்லாமே அதில் தெரிந்தது.
“இப்ப தெரியுதா யாரோ வேணும்னு அந்த பசங்கள அனுப்பி இவ மேல மோத வச்சு போட்டோ எடுத்து இருக்காங்க? அந்த போட்டோவை எல்லாருக்குமே அனுப்பி இருக்காங்க? அப்போ இதுல இருந்து என்ன தெரியுது?” என்று நீலகண்டனையும் அபிராமியையும் பார்த்தான்..
அவர்களும் பதில் பேச முடியாமல் அமர்ந்திருந்தனர். அபிராமிக்கு வாயை திறக்கவே முடியவில்லை..!
அதுவும் இல்லாமல் அவன் பிரக்யாவை அணைத்திருந்த இடத்தில் வீடியோவை பாஸ் செய்து.. தன் கையில் இருந்த போட்டோவையும் அதன் அருகே காட்டி..
“அவ போட்டிருக்கிற டிரஸ் பின்னால இருக்கிற பேக்ரவுண்ட்.. இதெல்லாம் வச்சு எனக்கு போட்டோ வந்த உடனே கண்டுபிடிச்சிட்டேன். இத்தனைக்கும் நேத்து நானும் அங்க தான் இருந்தேன். என்னை மீறி ஒருவன் என் வீட்டுக்குள் ஆட்டம் காட்டி இருக்கான்னா.. அவனை சும்மா விடுவேனா? அந்த பயலுகள மொத்தமா தூக்க சொல்லிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்துல இதெல்லாம் செஞ்சவங்க யாருன்னு எனக்கு தெரிஞ்சிடும்.. அப்ப இருக்கு கதிர்நயனனோட ஆட்டம்..!”
பிறகு அக்காவையும் அக்கா கணவனையும் பார்த்தவன் “இதுதான் உங்க ரெண்டு பேருக்கும் லாஸ்ட் வார்னிங்.. இன்னொரு முறை என் குடும்ப விஷயத்துல நீங்க ரெண்டு பேரும் தலையிட்டீங்கன்னா…” என்றவன்,
அபிராமியின் புறம் திரும்பி “உன்னை அக்கானு பார்க்க மாட்டேன் அத்து விட்டுருவேன்” என்று விரல் நீட்டி எச்சரித்தவன்,
திரும்பி நீலகண்டனை பார்த்தவன் “ஏற்கனவே உங்க குடும்பத்துக்கும் என் குடும்பத்துக்கும் ஒன்னும் இல்ல.. திரும்ப ஏதாவது பேசிட்டு வந்தீங்கன்னா நல்லா இருக்காது சொல்லிட்டேன்..!” என்று வெளிப்படையாகவே மிரட்டினான்.
“என்ன மிரட்டுறியா நான் அவ அப்பா..!” என்றார்.
“நான் அவ புருஷன்..! சட்டப்படி தர்மப்படி.. வேதப்படி.. எனக்கு தான் முழு உரிமை இருக்கு. உங்களுக்கு இல்லை..!” என்றான் நெஞ்சை நிமிர்த்தி..!
இப்படி மாமா தனக்காக ஒவ்வொருவரிடம் வாதாடுவதையும்.. தன் மேல் கொண்ட நம்பிக்கையையும் கண்ட பெண்ணவளுக்கோ இப்பொழுது சந்தோஷத்தில் மயக்கமே வரும் போலானது..!
