அத்தியாயம் 13
மறுநாள் காலையில் படுக்கையில் தன் கழுத்து அருகே உணர்ந்த கூச்சத்தில் நெளிந்தாள் பிரக்யா தூக்கத்திலேயே..!
மீண்டும் மீண்டும் ஏற்பட்ட அதே கூச்சத்தில் மெல்ல கண் திறக்க, அவள் கண்ணில் பட்டது அடர்ந்த அலை அலையென சிகை... தன் போல கோத அவள் கை செல்ல, சட்டென்று கையை இழுத்துக் கொண்டாள்.
வேறு யாராம்?! நயனன் தான்..!
‘ஏன் இப்படி? இவர் இவ்வளவு நெருக்கத்தில்??’ ஒன்றும் புரியாமல் அவள் மனது தத்தளித்தது.
‘இவர் தலையை எப்படி நகர்த்துவது?’ என்ற யோசனையை கலைத்தது, கழுத்தின் அடியில் அவள் உணர்ந்த அந்த வெப்ப மூச்சுக் காற்று.. அதுவும் காதுமடல் ஓரத்தில் அவனின் மூச்சுக் காற்றின் வெப்பம் அவளுள்ளும் இறங்கியது..!
அவளின் சுவாசம் எக்கு தப்பாக மாற.. இதை எதையும் அறியாமல் நன்றாக அவளின் கழுத்து வளைவில் தன் முகம் புதைத்து உறங்கிக் கொண்டிருந்தான் நயனன்.
உணர்வு குவியல்கள் கழுத்து நரம்புகளில் மிக மிக அதிகமாம்..!
மிக எளிதாக தூண்டி விட முடியும் நரம்புகள் அப்பகுதியில் இருக்குமாம்..!
எங்கோ படித்தது அசந்தர்ப்பமாக அவளுக்கு ஞாபகம் வந்து தொலைத்தது..!
“அச்சோ.. ஆண்டவா..!” என்று முறையிட்டவள், மெல்ல அவன் தலையை எடுத்து அருகில் தலையணையில் வைத்து விட்டு,
"ஸ்ஸ்ப்பா... எப்படி இப்படி இவரால் தூங்க முடியுது? ஆனா நமக்கு மட்டும் வயித்துல ஏதோ செய்யுதே... என்னவா இருக்கும்? எதற்கும் பாத்ரூம் போயிட்டு வரலாம்" என்று சத்தமாக தனக்குத்தானே பேசிக் கொண்டே சென்றாள்.
அவளின் செயல்கள் யாவையும் ரசித்துக் கொண்டே கண்களை மூடி படுத்திருந்தான் அந்த கள்வன்.
குளித்து முடித்து வந்தவள், ஜன்னல் அருகே சென்று தோட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தாள்.
சமீப காலமாக கணவனின் இந்த புது நெருக்கம் ஏதோ செய்தது அவளை.
வேண்டாம் வேண்டாம் இந்த நெருக்கம் வேண்டாம்..!
அவனின் இந்த ஸ்பரிசம் வேண்டாம்..!
அவனின் இந்த அன்பு வேண்டாம்..!
அவனின் அக்கறை வேண்டாம்..!
அவனின் இந்த குறும்பு பேச்சு வேண்டாம்..!
வேண்டாம்.. வேண்டாம்…!
எதுவுமே வேண்டாம்..!
என்று அலறியது அவளது மனம்.
தான் இதற்கு தகுதியானவள் இல்லை என மனம் அலட்டியது. இனி அவனை விட்டு விலகி இருப்பது தான் அவருக்கும் தனக்கும் நல்லது என்று மீண்டும் தவறான வழியில் சென்றுக் கொண்டிருந்தாள்.
குளித்து வந்தவன், பிரக்யாவின் குழப்பமான முகத்தை பார்த்து, ’ஆரம்பிச்சிட்டா.. திரும்பவும் தேய்ஞ்சு போன ரெக்கார்டு மாதிரி பழசையே பேசுவா, இனி இவளை சிந்திக்க விடவே கூடாது… ’ என்று நினைத்துக்கொண்டே அவள் அருகில் சென்றவன், தன் தலையை சிலுப்பி அவன் முடிக் கற்றையில் உள்ள குளிர்ந்த நீரை அவள் மீது தெளிக்க..
தன்மீது பட்ட குளிர்ந்த நீரால் பதறி திரும்பியவள், அங்கே நின்றிருந்த அவளது கணவனை பார்த்து ஆவென வாய் பிளந்தாள்.
அகன்று விரிந்த மார்பும், திண்ணிய தோள்களும், உருண்டு திரண்ட புஜங்களும், சிறுத்த இடையில் கட்டிய துண்டோடு, வசீகரமாய் பல்லவன் சிற்பம் போல நின்றவனை தான் தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனின் சிக்ஸ் பேக்குகளை அப்பட்டமாக காட்டும் படி வெற்று மார்போடு, அங்கங்கே நீர் துளிகள் மின்ன கந்தர்வனாய் நின்றவனை மெய் மறந்து பார்த்தவளை கண்டு கொடுப்புக்குள் சிரித்தவன்,
“குட் மார்னிங் சின்னு..!” என்று புன்னகைக்க..
அவன் குரலில் திடுக்கிட்டு அதில் சற்று முன் தான் எடுத்த சபதங்கள் எல்லாம் இவனை கண்ட நொடி சபலங்களாக போனதை நினைத்து தன்னைத்தானே கடிந்துக் கொண்டு அவ்விடம் விட்டு அவள் அகல முயல..
“குட் மார்னிங் சொன்னேன் சின்னு..!” என்றவன் குரல் அழுத்தத்தில்..
அவளும் “க்..கு..குட்.. மார்னிங் ம்மா.. மாமா..” என்று தடுமாறினாள்.
அவள் அருகே வந்தவன் அவள் முகத்தில் துள்ளி விளையாடிய கற்றை முடிகளை ஒற்றை விரலால் அவள் காதோரம் ஒதுக்கினான். அவன் விரலின் வெம்மை அவளுள் குளிரை நிரப்பியது.
“அழகா இருக்க” என்றான் கரகரத்த குரலில்.!
“இன்னிக்குத்தான் இதெல்லாம்.. என் அழகெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியுதாக்கும்?” லேசான வெட்க நகையுடன் பார்வையை திருப்பினாள் பாவை.
“அப்படித்தான் நினைக்கிறேன்” என்று மெல்லிய புன்னகையுடன் அவளின் ஏற்ற இறக்கங்களின் வடிவை முழுதாய் பார்த்தபடி கூறினான் நயனன்.
அவள் காதோரம் நின்றிருந்த அவனது விரல் லேசாக கீழே இறங்கி, தங்கச் சங்கிலியுடன் பிணைந்திருந்த தாலி கொடியினை வருடியது.
“எப்படி நினைக்கிறீங்க?” அவன் விரல் உரிமையில் பயந்த பாவை பின்னால் நகர்ந்தாள்.
“இத்தனை நாளா நிஜமாவே உன் அழகு என் கண்ணுக்கு தெரியல சின்னு” என்றான் ஹஸ்கி வாய்ஸில்..!
“ம்ம்ம்?” முறைத்தாள்.
“அட நிஜமா சின்னு. நம்ம வீட்டு பொண்ணுகள நாம தப்பா பார்க்க மாட்டோமில்ல? அந்த மாதிரி இவ்வளவு நாளா நினைச்சிட்டேன்”
“ம்ம்.. சரி இன்னிக்கு மட்டும் எப்படி தெரிஞ்சுதாம் என் அழகு?”
“அதான் தெரியல” சிரித்தான்.
“அப்ப நான் அழகுதானே?” பெருமிதமாய் கேட்டாள்.
“அழகிதான் டி.. என்னை கொல்லுற அழகி..!”
“ரொம்ப தான்..!” முகம் சுழித்தாள்.
“ஆமா ரொம்பத்தான்..! ரொம்பத்தான் பிடிச்சிருக்கு..!” என்றான்.
“நிஜமாவா?” விரிந்தது அவளது சிப்பி இமைகள்.
“பிடிச்சா என்ன தர போற?” சட்டென அவள் இடையை தன்னருகில் இழுத்துக் கேட்டான்.
“என்ன வேணும்?” கேட்கும்போதே அவள் மனம் பதறியது.
பெண்மையில் ஒரு விம்மல் எழுந்தது. இது உள் உறையும் பெண்மைத் தவிப்பின் விம்மல். அவள் உள்ளத்திலிருந்து வெளி வர முடியாமல் முட்டிக் கொண்டிருக்கும் வார்த்தைகளை சொல்லி விட இதுவே நல்ல வாய்ப்பு.
‘உங்கள விட்டு போய்டுறேன்’ என்று சொல்ல வந்தவள், அவனின் பார்வை வீச்சில் அமிழ்ந்து போனாள்.
அவனோ எதுவும் பேசாமல் அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தான்.
இருவரின் முகம் ஒரு சேர பார்த்துக் கொள்ள இருவரின் மூக்கும் ஒரு சேர உரசிக் கொள்ள..
மெல்ல அவனின் அடர் அதரங்கள் அவளின் மெல்லிய அதரங்களை நோக்கிச் சென்றன..
இருவரின் உதடுகளும் மெல்ல உரசி.. பின் ஒரு சேர பிணைந்துக் கொள்ள.. யாரின் உதடு யாரிடம் இருக்கிறதென தெரியாத அளவிற்கு பின்னி பிணைந்திருந்தன..!
அவனின் இதழணைப்பு அவளை வேறொரு உலகத்திற்கு இட்டுச் சென்றது.
“போதும் மாமா..!" என்று அவள் அவனிடமிருந்து விலகி ஓட..
பல்லி நாக்கை நீட்டி பூச்சை பிடிப்பது போல், நயனனின் விரல்கள் அவள் அணிந்திருந்த ஸ்கர்ட்டில் நுழைந்து வேகமாக பிடித்து இழுத்தது. சுவற்றில் அடித்த பந்து போல் கணவனின் மேல் வந்து மோதினாள் காரிகை.
“சின்னு..!” என்று அழைத்தவனின் குரலில் இருந்த பேதத்தை கண்டு அஞ்சினாள் அஞ்சுகம்.
ஏனெனில் அவள் எடுத்த முடிவை தகர்த்தவென இருப்பவனின் செயல்களில்.. காதலில்.. அவளது உள்ளம் தடுமாற..
“ஹாஸ்பிடலுக்கு டைம் ஆச்சு மாமா” என்று ஏற்கனவே குளித்ததை மறந்து குளியலறை புகுந்தவளை கண்டவன் வெடித்து சிரித்தான்.
அவன் சிரிப்பில் அவளோ நாக்கை கடித்து “அச்சோ..!” என்று முகத்தை மூடிக் கொண்டவளின் கரங்களோ இந்த புதிதாய் பூத்த சலனங்களை தாங்க இயலாமல் ஷவரின் திறப்பை திறந்தது.
இப்படி மெல்லிய காதல் பூத்த அழகிய காலை வேளை அவள் சற்றும் எதிர்பாராத வகையில் மாற போகிறது என்பதை அறியாமல்.. மன மகிழ்ச்சியில் பிரக்யா அதரங்களோ ஆசையாக தன் போல விருப்ப பாடலை பாடியது..!
மீண்டும் ஒரு முறை குளித்து வந்தவள், அறையில் இருந்து ஏதோ கோபமாக பேசி செல்லும் கதிர்நயனனை கண்டு 'ஏதோ வேலை டென்ஷன் போல..' என்று நினைத்துக் கொண்டாள்.
“இங்க பாரு விசா.. தேவையில்லாம சின்னுவை பத்தி தப்பா பேசாத..” என்றவனின் கடுமையில் அந்த பக்கம் இருந்த விசாலினி தேகமே நடுங்கியது.
ஆனாலும் விடாமல் “நெருப்பில்லாமல் புகையாது கதிர்.. ஏற்கனவே அவ அப்படி தானே.. அப்படி போய் தானே குழந்தைய வயித்துல வாங்கிட்டு வந்தா..” என்றவள் முடிக்கும் முன்..
“ஜஸ்ட்.. ஷெட் அப் யூ ஸ்கவுண்ட்ரல்..! இனி ஒரு வார்த்தை பேசின.. அவ்வளோ தான்..!” என்றவனின் சீற்றத்தில்,
“அதில்ல கதிர்.. ஏற்கனவே அவளால குடும்ப மானம் சந்தி சிரிக்க இருந்திச்சு..”
“நிறுத்து டி..! என் குடும்ப மானத்தை பத்தி நீ கவலைப்படாதே. நான் பார்த்துக்குறேன்.. இனிமே எனக்கு ஃபோன் பண்ணாதே..!” என்றவன் அவளின் அந்த பக்க கெஞ்சலை, எல்லாம் கண்டுக் கொள்ளாமல் ஃபோனை அணைத்தவனுக்கோ கோபம் குறையவே இல்லை..!
திரும்ப திரும்ப விசாலினி அனுப்பிய புகைப்படத்தையே உற்று பார்த்தவனின் கண்களில் சிவப்பு ஏற..
ஏதோ யோசித்தவன் சட்டென்று அந்த போட்டோவை எடிட் செய்து ரிசார்ட் மேனேஜருக்கு அனுப்பி வைத்தான்.
“ஜான்.. இந்த ஃபோட்டோவுல இருக்கிறவன் நேத்து நம்ம ரிசார்ட் வந்து இருக்கான். அவன் என்னென்ன பண்ணுனான்னு ஃபுல் வீடியோ ஃபுட்டேஜூம் எனக்கு வேணும்.. ஜஸ்ட் ஃபிப்டீன் மினிட்ஸ்ல..” என்று உத்தரவிட்டவன், மீண்டும் மீண்டும்
அதி யோசனையோடு..
பெரும் கோபத்தோடு..
அணையா ஆத்திரத்தோடு..
அதனை வெறித்தான்.
பிரக்யாவை ஆரத் தழுவியது போல ஒரு ஆடவன் இருந்த புகைப்படம் நயனன் வாட்ஸ் அப்பிற்கு விசாலினி மூலம் வந்து குதித்து இருந்தது.
‘எப்படி இவளுக்கு இந்த ஃபோட்டோ கிடைச்சிச்சு? எங்கள ஃபாலோ பண்ண ஆளு வைச்சி இருக்காளா என்ன?’ என்றவனின் எண்ணங்கள் பலவாறு பல கோணங்களில் சுற்று சுழல, அவனின் எண்ணத்தை தடை செய்தது ஒரு ஆங்கார குரல்..!
“எங்க உங்க அருமை பேத்தி?” என்று கீழே சத்தம் கேட்க.. அதுவும் அவனின் அக்கா அபிராமியின் குரல் உரத்து கேட்டது.
“போச்சு இந்த விசாலினி அங்கேயும் பத்த வைச்சிட்டா போல..! அவளை.. இருக்கு ஒரு நாள் செமத்தியா..!” என்று கோபமாக மாடியில் இருந்து விறுவிறுவென்று இறங்கினான்.
கதிர்நயனன் வருவதை கண்ட அபிராமி “வாடா நல்லவனே.. இப்ப திருப்தியா உனக்கு? அவளை திருப்பி கூப்பிடாத.. போனவ போனவளாவே இருக்கட்டும்னு எத்தனை தடவை அடிச்சிக்கிடடேன்.. கேட்டியா எங்கையாவது? இப்ப பாரு.. நம்ம வீட்டு மானம் சந்தி சிரிக்குது..!” என்று ஏகத்துக்கும் கத்தும் மகளை புரியாமல் பார்த்தார் பர்வதத்தம்மாள்.
“ஏன்யா நயனா? என்ன சொல்றா இவ? எதுக்கு இப்ப சின்னுவை திட்டிட்டு இருக்கா? வந்ததுல இருந்து காச்சு மூச்சுனு கத்தறாளே ஒழிய.. கொஞ்சம் கூட என்ன விஷயம்னு சொல்ல மாட்டேங்குறா? என்ன தான்யா நடக்குது நயனா?” என்று பதட்டத்தோடு பேசிய அன்னையை அழைத்து அருகில் இருந்த இருக்கையில் அமர வைத்தவன்,
“நீங்க இப்படி பதட்டப்படாதீங்க மா.. உங்களுக்கு பிபி எகிறிடும்” என்று வேலையாளை அழைத்து தண்ணீர் கொடுத்தான் அன்னைக்கு.
“நான் இங்க எவ்வளவு கோபத்துல மன ஆதங்கத்துல இருக்கேன். குடும்பம் மானம் போனதை பத்தி கொஞ்சம் கூட கவலை இல்லாமல் இப்பதான் அம்மாவை சமாதானப்படுத்திட்டு இருக்க.. இந்நேரம் அந்த சிறுக்கிய இழுத்து வைச்சு இரண்டு அடி போட்டு வீட்டை விட்டு துரத்திருக்க வேண்டாமா?” என்று அலறினார்.
அத்தனை ஆத்திரத்தோடு மண்டை ஓடு இல்லாத பத்திரகாளி ஆகவே நின்று இருந்தார் அபிராமி..!
“என்னயா நயனா இவ இப்படி ஆங்காரமா கத்துறா? என்னயா என்ன நடந்துச்சு சின்னுவுக்கு? என்ன பிரச்சனை சின்னுவுக்கு? பெருவுடையா.. அந்த சின்ன மண்ணுக்கு இன்னும் எத்தனை பிரச்சனை தான் கொடுப்ப?” என்று கலங்கினார்.
“ஒன்னும் இல்லம்மா.. ஒன்னும் இல்ல..! ஒரு தவறான புரிதல் தான். அக்காட்ட அதை நான் பேசி சரியாகிக்கிறேன். நீங்க கவலைப்படாதீங்க” என்று இவன் இந்த பக்கம் அன்னைக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க..
குளித்து முடித்து புது மலராய் கண்களில் கனவு மின்ன மருத்துவமனைக்கு செல்ல தயாராகிக் கீழே வந்தாள் பிரக்யா.
சித்தியை கண்டு எப்பொழுதும் போல ஒட்ட வைத்த சிரிப்போடு “வாங்க சித்தி” என்று அழைத்தாள்.
அவ்வளவுதான் எங்கிருந்துதான் அத்தனை ஆங்காரம் வந்ததோ அபிராமிக்கு வேகமாக எட்டெடுத்து அக்கா மகளை நெருங்கியவர், விட்டார் ஒரு அறை அவளது கன்னத்தில்..
“எங்க குடும்ப மானத்தை கெடுக்கனே பொறந்திருக்கிறியா டி? சிவஞானம்.. எங்க அப்பா எப்படிப்பட்ட அருமை பெருமையா வாழ்ந்தவர் தெரியுமா? அவர் கட்டி காத்த மானம் மரியாதைய அடிச்சு உடைக்க வந்திருக்கிற கோடாரிகம்பு நீ டி..!” என்றார்.
எதற்கு சித்தி அடித்தார் என்ன பேசுகிறார் என்று புரியாமல்
“என்ன சித்தி சொல்றீங்க எனக்கு ஒண்ணுமே புரியலையே?” என்று உதடுகள் துடிக்க அழுத விழிகளோடு நின்றவளிடம், தனது ஃபோனை பிடித்து தூக்கி காட்ட அதிலிருந்த புகைப்படத்தை கண்டவளுக்கு தலை சுற்றிக்கொண்டு வந்தது.
“இதெப்படி சாத்தியம்? இல்ல.. இல்ல.. இது நான் இல்ல..! இது ஏதோ எடிட் பண்ணி இருக்காங்க சித்தி.. நம்பாதீங்க..!” என்ற அபிராமியிடம் அவள் கெஞ்ச..
அதை கொஞ்சம் கூட காதில் வாங்காமல் அவள் தலை முடியை இறுக்கமாக பற்றி வெளியே இழுத்துச் சென்றார்.
“ஐயோ சின்னு..!” என்று பர்வதத்தம்மாள் அலற.. கதிர்நயனனுக்கு அக்காவின் இந்த வெறி செயலில் அத்தனை ஆத்திரம். கூடவே 'இந்த அக்கா எப்போ தான் புரிந்துக் கொள்ளுமோ?' என்று ஆற்றாமை..!
“அக்கா.. அக்கா.. விடு அவளை..” என்று அவர்கள் பின்னாடியே ஓடினான் கதிர்நயனன்.
“இல்ல சித்தி.. சத்தியமா அது நானில்லை..! அது போல நானில்லை சித்தி.. என்னை நம்புங்க..!” என்று கதறியவளின் வார்த்தைகளை எல்லாம் கேட்கவே இல்லை அவர்.
“அப்பவே அந்த கதிர் கிட்ட தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன்.. போனவள திரும்பி கூட்டிட்டு வராதடானு.. அவ வந்தா திரும்ப வீட்டு மானத்தை தான் வாங்குவானு.. இந்தா அதை நிரூபிச்சிட்டா இல்ல..! இனி இந்த வீட்டுக்கு நீ தேவையில்லை.. உன் அப்பன் வீட்டுக்கே போடி..!” என்று அவளைப் பிடித்து கீழே தள்ளினார் அபிராமி..!
தன் வலிய கரங்களால் அவளை இறுக பற்றினான் கதிர்நயனன், பிரக்யா கீழே விழாதவாறு..!
“மாமா.. நான் தப்பு செய்யல மாமா.. என்னை .. என்னை.. நம்புங்க..!” என்று தீனமாக முணுங்கியவள் மயங்கி சரிந்தாள்.
