இராவணா 12

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 244
Thread starter  

அத்தியாயம் 12

 

 

“சோ.. சொல்ல மாட்ட.. குட்..! அப்படியே உனக்குள்ளே புதைச்சு வைச்சிக்கோ” என்று கோபமாக சீறியவன், பைக்கில் ஏறி அமர்ந்து அவளை ஆழமாக பார்க்க.. அவளது கால்கள் தன் போல அவனை நோக்கி நடந்தது.

 

இப்போது சற்று அவனிடம் இருந்து அவள் தள்ளி அமர்ந்துக் கொள்ள.. மீண்டும் ஒரு சீற்றப் பார்வை அவனிடமிருந்து. 

 

அவன் பார்வை புரிந்த பாவையவள், மெல்ல நடுங்கும் விரல்களால் அவனது இடுப்பை பற்றிக் கொள்ள.. அவனோ அவளது விரல்களை தன் விரல்களோடு கோர்த்துக் கொண்டே வண்டியை ஓட்டினான்.

 

அதுவும் அவ்வளவு அழுத்தமாக அவன் கோர்த்திருக்க.. அவள் தளிர் விரல்கள் அவனின் அழுத்தத்தில் வலித்தது. ஆனாலும் அதனை காட்டிக் கொள்ளாமல் அமைதியாகவே வந்தாள்.

இவர்கள் ரிசார்ட் உள்ளே போய் பைக்கை நிறுத்த ஆர்யாவும் ஆதிராவும் ஏற்கனவே வந்திருந்தவர்கள், யாருடனோ அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தாள் பிரக்யா.

 

“கையை விடுங்க மாமா இறங்கணும்..” என்றாள்.

 

“அப்படியே இறங்கு.!” என்றான் அந்த நல்லவன்.

 

‘இப்படியே எப்படி?’ என்று அவள் புரியாமல் விழித்தாள்.

 

“இப்படித்தான்..!” என்று அவள் கோர்த்த கையை விடாமல் இறங்கியவன் ஒரு சுழற்று சுழற்றி தன் அருகே வந்து நிறுத்திக்கொள்ள, தலையே சுற்றி சுழன்றது அவளுக்கு.

 

பிரக்யாவுக்கு என்ன நடந்தது என்று புரியும் முன் “ஹேஏஏ” என்ற சந்தோஷ கூச்சல் அவளின் காதை கிழித்தது. 

 

ஆதிரா மற்றும் ஆர்யனோடு சேர்ந்து பூர்வாவும் நின்றுக் கொண்டிருந்தாள்.

 

பூர்வா, பிரக்யா அப்பாவின் இரண்டாம் தாரத்தின் மகள்..!

 

ஆடு பகை குட்டி உறவு என்பது போல அவளது அப்பா தான் இவர்களோடு முட்டிக்கொண்டு இருப்பார். ஆனால் பூர்வாவிற்கு பிரக்யா என்றால் அதி பிரியம். அப்படியே பூர்ண சுந்தரியின் குணத்தைக் கொண்டு..!

 

“அக்கா..!” என்று ஓடி வந்தவள் அணைத்துக் கொண்டாள். ஆனால் பிரக்யாவின் கரமோ கதிர்நயனனிடம் மாட்டிக் கொள்ள.. அவளின் கெஞ்சல், கொஞ்சல் கோபப்பார்வை எதற்கும் அசராமல் கையை இறுக்கப் பற்றியப்படியே நின்று இருந்தான் கதிர்நயனன் வேண்டுமென்றே..!

 

“ஹாய் மாம்ஸ்.. என்னை கண்டுக்கவே மாட்டேங்கறீங்க?” என்று அக்காவின் தோளில் சாய்ந்து மாமாவை வம்பு இழுத்தாள் பூர்வா.

 

“சமூகம் எப்பவும் பெரிய இடம்.. நாம கண்டுகிட்டாலும் ஒன்னுமில்ல.. இல்லைனாலும் ஒன்னுமில்ல தான்..!” என்று அவள் அப்பாவை வைத்து பூர்வாவை கேலி செய்தான் நயனன்.

 

“ஆனாலும்.. எங்க அப்பாவை இழுக்காம உங்களால் பேசவே முடியாதா மாம்ஸ்?” என்று இப்பில் கை வைத்து முறைத்தவளின் தலையில் செல்லமாக தட்டினான் நயனன்.

 

“அச்சோ என்ன அடிக்கிறீங்க? அவ்வளவு தைரியம் வந்திடுச்சா? அதுவும் பொண்டாட்டிய பக்கத்துல வைச்சிக்கிட்டே? இருங்க.. இருங்க.. எங்க அக்காவை விட்டு வீட்டுக்கு போய் உங்களுக்கு இதுக்கு வட்டியும் முதலுமா கொடுக்க சொல்றேன்” என்றாள்.

 

“யாரு உங்கக்காவா? கொடுத்திட்டாலும்..??” என்றவனின் பேச்சும், பெரு மூச்சும் வேறு கதை சொன்னது. 

 

''இவ்வளவு நாள் கழிச்சு பார்த்திருக்கோம், ஒரு ஹக் கூட கிடையாதா மாம்ஸ்'’ என்று அக்காவை ஓரப் பார்வையில் பார்த்து நயனனை மாட்டி விட முயன்றாள்.

 

''ஆஹான்.. அதுக்கு வேற ஆள பாரு? நான் என் சின்னுவுக்கு மட்டுமே..!” என்றவனின் பேச்சில் பூர்வா முகம் சுருக்க,

 

“தாயே.. ஆள விடு..! ஏற்கனவே எனக்கு ரெண்டு வீடுனு ஊரு ஃபுல்லா பேச்சா இருக்கு.. இதுல நீ வேற ஏதாவது செஞ்சு.. அதை எவனாவது ஃபோட்டோ எடுத்து ஊருல பரப்பி.. உறவுக்குள் போட்டு கொடுத்து.. நெட்டுல போட்டு, எனக்கு ஆப்பு வைக்கவா?!'' என்றவனின் பேச்சில் இப்பொழுது நால்வரும் சிரித்தனர்.

 

“ஓகே ஓகே.. கைஸ்… எனக்கு இங்க கொஞ்சம் வேலை இருக்கு. நீங்க கேம்ஸ் போகணும்னா போயிட்டு வாங்க..” என்றவன் நால்வரும் நடக்கும் பொழுது “சின்னு..” என்று அழைத்து அவள் கையில் தனது டெபிட் கார்டை திணித்தான்.

 

அவள் “இல்லை மாமா.. என்கிட்ட போன்ல..” என்று ஆரம்பிக்க அவள் உதட்டில் விரல் வைத்தவன்,

“எதையும் பேசாத.. அவங்க என்னெல்லாம் கேம்ஸ்ல விளையாடணும்னு ஆசைப்படுறாங்களோ எல்லாத்துக்கும் கூட்டிட்டு போ.. பை.. பீ ஸேஃப்.!” என்று இவர்கள் சென்ற எதிர் திசைக்கு சென்றான் நயனன்.

 

‘வந்ததே அவுட்டிங்கு.. இங்க என்ன வேலை மாமனுக்கு?’ என்று யோசித்தபடி சென்றவள் அடுத்தடுத்து மூவரின் கலாட்டாக்கள் அலப்பறையில் மாமனை மறந்து அவர்களோடு நேரத்தை செலவிட்டாள்.

 

அந்த ரிசார்ட் இன்டோர் அவுட்டோர் கேம்ஸ் மட்டுமின்றி சிறு சிறு குடில்கள் போன்ற அமைப்பு தங்குவதற்கு என்றும் இருந்தது. அதைவிட மூன்று வேளை உணவுகளும் பஞ்சமின்றி விதவிதமாக அங்கு கிடைக்கப்பெற்றது. 

 

கூடவே வயல்வெளிகளோடு இணைந்த பாரம்பரிய விளையாட்டுகளும்.. மாட்டு வண்டி.. குதிரை ரேக்ளா வண்டி.. போன்ற வண்டிகள் பயணம் கூட காலை வேளைகளில் களைகட்டி வாடிக்கையாளர்களின் கவனத்தை ரொம்பவே ஈர்த்தது. 

 

அனைத்தையும் ஒருவித ஆச்சரியத்தோடு பார்த்த பிரக்யா “ஏ ஆதி நீ சொன்ன போது கூட நான் நம்பல டி. நிஜமாகவே ரொம்ப நல்லா இருக்கு. ரெண்டு விதமா இருக்கு பாரேன். ட்ரெடிஷனலாவும் இருக்கு இப்போ ஏத்த மாதிரி மாடர்ன் என்டேர்டைன்மென்ட் எல்லாமே இருக்கு. பாரு இந்த மாட்டு வண்டி ரேக்ளா குதிரை ரேஸ் இதெல்லாம் இப்ப உள்ள குழந்தைகள் பார்த்திருக்கவே மாட்டாங்க.. அவங்களுக்கு ஏத்த மாதிரி இருக்கு இல்ல..! இன்னும் வயசானவங்க வந்தா கூட அவங்களுக்கு தகுந்த மாதிரியான ரிலாக்சேஷனும் இருக்கு. ரொம்ப நல்லா இருக்குல.. நிஜமாவே இதை யோசிச்சு பண்ண ஓனருக்கு பெரிய சல்யூட் தான்..!” என்று மெச்சுதலாக உதட்டை சுழித்தவளை மூவரும் பார்த்து அர்த்தம் புரிந்த சிரிப்பை சிரித்துக் கொண்டு மெதுவாக நடந்தனர்.

 

ஏனென்றால் இந்த ரிசல்ட்டின் ஓனரே அவளின் கணவன் தான்..!

 

“என்ன நினைச்சிட்டு இருக்கீங்க நீங்க எல்லாம்? காசு பணம் கொடுத்தா எவனா இருந்தாலும் உள்ள அலோவ் பண்ணிடுவீங்களா? அவனை செக் செய்யலாம் மாட்டீங்களா? செக்யூரிட்டி கார்ட்ஸ் எல்லாம் என்ன பண்றாங்க?” என்று அங்கிருந்த மேலாளர்களை நிற்க வைத்து காய்ச்சி எடுத்துக் கொண்டு இருந்தான் நயனன்.

 

கடந்த சில நாட்களாக இங்கே வரும் இளைஞர்களில் சிலர் தங்கள் கையோடு மதுவை எடுத்து வருவதும், குடித்துவிட்டு வரும் குடும்பத்தாரிடமும் இளம்பெண்களிடம் தவறாக நடந்துக் கொள்வதாக இவனுக்கு புகார்கள் வர அதனை நேரே சென்று விசாரிக்க வேண்டும் என்றே அக்கா மக்களோடு இன்று நயனன் வந்தது..!

 

“இனியொரு‌ முறை இந்த மாதிரி கம்ப்ளைன்ட் எனக்கு வந்துச்சுன்னா.. எல்லாரையும் ஃபயர் பண்ணிடுவேன்..! அதோடு லீகலா ஆக்ஷன் எடுப்பேன்” என்று அத்தனை கடுமையாக சாடியவனை கண்டு அங்குள்ள மேலாளர்கள் பயந்து திக்கி திணறி,

 

“சார் வர்றவங்க எல்லாம் கொஞ்சம் பெரிய இடத்துப் பசங்க.. அதுவும் இல்லாம பாலிடிக்ஸில் வேற..” என்றதும் 

 

“ஜஸ்ட் ஸ்டாப் இட்..!” என்று கர்ஜித்தவன், “ஏன் பெரிய இடத்துப் பசங்கனா அவங்க இஷ்டத்துக்கு நடக்குறதுக்கு இது ஒன்னும் அவங்க வீடு கிடையாது. என்னுடைய ரிசார்ட்..! நான் ஃபேமிலி என்டர்டைன்மெண்டுக்காக தான் இதை கட்டியது. இங்க இது தான் டெர்ம்ஸ், இதுதான் கண்டிஷன்னா அதை தான் அவனுங்க ஃபாலோ பண்ணனும்..! அப்படி ஃபாலோ பண்ணாத எவனும் இங்க வரணும்னு அவசியம் இல்ல..! காட் இட்..!” என்றவனின் பேச்சுக்கு மறு பேச்சு இல்லாமல் சரி என்று தலையசைத்து அனைவரும் கலைந்து சென்றனர். 

 

செக்யூரிட்டி அறையில் அமர்ந்து சிசிடிவி ஃபுட்டேஜ்களை அங்கே இருந்து பார்வையிட்டுக் கொண்டிருந்தான் கதிர்நயனன்.

 

இவர்கள் மூவரும் சிரித்து பேசி கூடவே ஆர்யனையும் கிண்டல் செய்துக் கொண்டு நடக்க..

 

இவர்களை எதிர் கொண்டு கடந்துச் சென்ற ஒரு இளைஞர்கள் கூட்டமோ “வாவ்.. ப்யூட்டி ஃபுல் கேர்ள்ஸ்..!” என்று விகற்பமாக சிரித்தனர்.

 

அதில் ஒருத்தன் “என்ன கேர்ள்ஸ்.. மூணு பேருக்கு ஒருத்தனை கூட்டி வந்து இருக்கீங்க? நாங்க நாலு பேரு இருக்கோம். கம்பெனி தரட்டுமா?” என்று சற்று இரட்டை அர்த்தத்தில் கேட்க சுறுசுறுவென்று கோபம் பெண்களுக்கு.

 

ஆர்யனோ அவர்களை அடிக்கவே பாய்ந்து விட்டான். பிரக்யா தான் அவன் கையைப் பற்றி இழுத்து “டேய் சும்மா இருடா.. நீயும் பிரச்சனை பண்ணாத. லூசுங்க.. அவனுங்க ஏதாவது பேசிட்டு போகட்டும் நாம கண்டுக்காம போலாம்” என்று தம்பியை வலுக்கட்டாயமாக கையை பிடித்து இழுத்து வந்தாள்.

 

“கொஞ்சம் கூட இது இல்லாம பேசுறானுங்க.. ஒரு ஆண் பெண் கூட வந்தா அது வேற அர்த்தமா தான் இருக்குமா? அண்ணன் தம்பியா இருக்கக் கூடாதா? இவனுங்களுக்கெல்லாம் அக்கா தங்கச்சி இல்லையா? இல்ல அவங்களோட இவனுங்க வெளியே போனதே கிடையாதா?” என்று திட்டிக்கொண்டே வந்தான். 

 

“இங்க பாரு ஆரு.. உலகத்துல இருக்குற முக்காவாசி பேரு இப்படித்தான்..! வீட்ல ஒரு முகம், வெளியில் வந்தா வேறு முகம். இன்னும் இந்த சோசியல் மீடியாக்குள்ள போனா அங்க யாரு நம்மள கண்டுபிடிக்க போறாங்கன்னு தைரியத்துல அவங்களோட கீழ்த்தரமான முகம் அதுல தான் இன்னும் நல்லா தெரியும். இதெல்லாம் இந்த காதுல வாங்கி அந்த காது வழியா விட்டுட்டு போயிட்டே இருக்கணும். மண்டையில ஏத்துனா மனசிலுள்ள நிம்மதி சந்தோஷம் போய்விடும் டா. வா நம்ம அந்த பக்கம் கேம்ஸ் போலாம்” என்று தம்பிக்கு அறிவுரை கூறி அழைத்து சென்றாள்‌.

 

அதன் பிறகு அவர்கள் அவ்வப்போது கண்ணில் பட்டாலும் இவர்கள் ஒதுங்கி செல்வதை பார்த்து அவர்கள் நக்கலாக ஊஊஊ.. ஏய்ய்.. என்று சிரித்தனர்.

 

“டேய் என்னங்கடா நினைச்சுட்டு இருக்கீங்க?” என்று குர்தியின் மேல் கையை மடக்கி விட்டுக் கொண்டு சண்டைக்கு பூர்வா செல்ல.. 

 

“அவளை பிடிச்சு அமுக்குடி” என்று பிரக்யா குரலுக்கு ஆதிரா அவள் வாயை பொத்தவும், அவள் துள்ளி குதித்தவாறே அவர்களிடம் சண்டைக்கு போக, அவர்கள் கண்களில் கண்ட கயமையில் தங்கையை இழுத்துக் கொண்டு நகர்ந்து விட்டாள் பிரக்யா. 

 

“ஒரு நாள் நிம்மதியா வெளில வந்தா எங்கயாவது நிம்மதியா இருக்கு முடியுதா? இந்த மாதிரி ஆட்களை எல்லாம் ஏன் உள்ள விடறாங்கன்னே தெரியல.. இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்ன இந்த ஓனரை ரொம்ப புகழ்ந்து பேசுனேன்.. அந்த ஆள் மட்டும் என் கைக்கு இப்ப கிடைக்கட்டும் சட்டையை புடிச்சு இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் ஏன்யா உள்ள விடுறேனு கேட்கிறேன்” என்று பொரிந்துக் கொண்டே வந்தவளைக் கண்டதும் அதுவரை இருந்து ஒருவித மன அழுத்தம் போய் நால்வரும் வாய்விட்டு சிரித்தனர். 

 

“நீ பொங்குறதெல்லாம் நல்லா தான் இருக்கு.. ஆனா அதெல்லாம் எங்க கிட்ட மட்டும் தான் பொங்குவ?” என்று பூர்வா அக்காவை வார

“நீ மட்டும் என்னடி ரொம்ப ஒழுங்கா? இங்க தான் அத்தனை வாய் அடிக்கிற.. சண்டைக்கு போற.. அந்த குதி குதிக்கிற.. ஆனா வீட்ல அவர் பேசுனாருனா எல்லாத்துக்கும் தலையாட்டிட்டு தானே இருக்க..? ஹே நீ பேசாத டி..!” என்று பிரக்யாவும் பூர்வாவை கேலி செய்ய..

 

“அது வேற ஒன்னும் இல்ல அக்காச்சி.. எல்லாம் மேனுஃபேக்சரிங் டிஃபெக்ட் தான். நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே தந்தை அல்லவா?” என்றவளின் பேச்சில்..

 

சிரிப்பு பொங்கினாலும் “அடிங்க ராஸ்கல்..!” என்று பூர்வாவை துரத்திக்கொண்டு பிரக்யா ஓட அப்பொழுது அந்த நால்வர் கூட்டத்தில் ஒருவன் வேண்டுமென்றே பிரக்யா மீது மோதி அணைத்த வாக்கில் அவள் இடுப்பை அழுத்தமாக பற்றினான்.

 

“ஏய்..!” என்று பிரக்யா அதிர்ந்து பதறி அவனிடமிருந்து விலக முயல..

ஆனால் அவன் கையின் அழுத்தமோ மிக இறுக்கமாக இருந்தது. 

 

“விடுடா.. ராஸ்கல்..! ஹவ் டேர் யூ..!” என்று விடுபட்டவள், விட்டாள் ஒரு அறை அவனின் கன்னத்தில். அதற்குள் ஆர்யாவும் வந்து மற்றொரு கன்னத்தில் ஒன்று விட்டு “ஒழுங்காக வீடு போய் சேர மாட்டீங்கடா..!” என்று உறுமினான்.

 

அதற்குள் அவன் நண்பர்களும் வந்து “ஏதோ வேணும்னே கட்டி புடிச்ச மாதிரி ரொம்ப சீன் போடுறீங்க.. நீங்களும் ரொம்ப ஒழுக்கமா என்ன? ஒருத்தனை தள்ளிட்டு தானே மூணு பொட்டச்சிகளும் வந்து இருக்கீங்க..?” என்று எகத்தாளமாக கேட்டவனின் வாயிலேயே ஒரு குத்து விட்டான்.

 

“நான் இவங்களோட தம்பி டா..!” என்று விரல் நீட்டி மிரட்டினான்.

 

அடி வாங்கியவனோ கொஞ்சம் கூட சலிக்காமல் “ஓஓ.. இப்போ இந்த மாதிரி பேர் சொல்லிக்கிட்டு இப்படி சுத்துறீங்களோ? குட் ஐடியா ப்ரோ.. எங்களுக்கும் கொஞ்சம் கோர்த்து விடேன்” என்றனர் ஒரு மாதிரியாக சிரித்துக் கொண்டு.

 

“ஆர்யா சாக்கடை மேல கல் எறிஞ்சா நமக்கு தான் அசிங்கம்.. வா போகலாம். இதெல்லாம் எப்படி ஒரு பொம்பளைக்கு பொறந்ததுன்னே தெரியல..! அம்மா அப்பா ஒழுக்கமா இருந்தா அவங்க புள்ளைங்களும் ஒழுக்கமா இருக்கும்?” என்று முகத்தில் அடித்தாற் போல பேசி சென்றவளை,

“ஏய் யாரடி பேசுற? நீ ரொம்ப ஒழுங்காடி..” என்று அவர்கள் கத்தி இன்னும் இன்னும் அசிங்கத்தை வாரி இறைக்க.. அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் அங்கே இருந்து உணவு குடிலுக்கு வந்து விட்டனர். 

 

இங்கே பிரக்யாவுக்கு நடந்தது நயனனுக்கு தெரியவில்லை. இவன் சிசிடிவி ஃபுட்டேஜ் பார்த்துக் கொண்டிருக்கிற வேளையில் “சார் அந்த ஜிப் லைன்ல கொஞ்சம் ப்ராப்ளமா இருக்குனு ஆள வர சொல்லி இருந்தீங்களே.. அவங்க வந்திருக்காங்க..!” என்றதும்,

 

“ஓ எஸ் மறந்துட்டேன்” என்றபடி அவன் எழுந்துச் சென்ற பிறகுதான் இங்கே இந்த கூத்து அரங்கேறி இருந்தது. 

 

பிரக்யா ஒரு வித பதட்டத்தில் மேலே கம்பளி பூச்சி ஊறினால் அந்த இடம் எப்படி அருவருக்குமோ அதுபோல அமர்ந்து இருந்தாள். ஆர்யா அவள் தோளை தொட்டு “ஃபீல் பண்ணாத அக்கா..! மாமா வரட்டும் அப்புறம் இருக்கு அவனுங்களுக்கு..!” என்று கோபத்தில் பல்லை கடிக்க..

 

சட்டென்று அவன் கையை பிடித்து “தயவு செய்து இதை உன் மாமா கிட்ட சொல்லி தொலைஞ்சிடாத.. அவ்வளவுதான் மனுஷன் மனுஷனா இருக்க மாட்டாரு” என்று கெஞ்சினாள்.

 

‘மீண்டும் ஒரு பிரச்சனையை என் மனம் தாங்காது’ என்று உள்ளுக்குள் மருகினாள்.

 

“சரி சரி நம்ம சாப்பிடலாம் லஞ்ச் முடிச்சுட்டு நம்ம கிளம்பிடலாம். இன்னொரு நாள் ரிலாக்ஸா வரலாம்” என்றாள்.

 

அவளின் மனநிலையை புரிந்துக் கொண்ட மற்ற நால்வரும் தங்களுக்கான உணவை ஆர்டர் செய்துவிட்டு அமைதியாக உண்டனர்.

 

பிரக்யாவுக்கு கால் செய்தான் நயனன். தம்பி தங்கைகளை பார்த்து “உஷ் உங்க மாமா தான் பேசுறாரு.! அவர்கிட்ட யாரும் எதுவும் சொல்லக்கூடாது. சரியா?” என்றவள்,

ஃபோனை அட்டென்ட் செய்து “சொல்லுங்க மாமா?” என்று கேட்க..

 

“எங்க இருக்கீங்க எல்லாரும்?” என்று கேட்டான். அவள் இடம் சொல்ல அவனும் வந்து அவர்களோடு உணவை முடித்துவிட்டு, “அடுத்து என்ன பிளான் என்ன கேம்ஸ் போகலாம்?” என்று கேட்டான் ஆர்வமாக நயனன்.

 

அக்காவின் நிலையை புரிந்த பூர்வா “இல்ல மாம்ஸ் ஆல்ரெடி லேட் ஆயிடுச்சு.. இதுக்கு மேல லேட் ஆனா எங்க நைனா கத்துறதை என் காது தாங்காது..!” என்று அவள் காதை பொத்திக்கொண்டு அலற..

 

“ஆமா மாமா.! எனக்கு ஒரு மாதிரி டயர்டா இருக்கு. இவளுக்கும் கொஞ்சம் வொர்க் இருக்குன்னு சொல்றா.. நாம இன்னொரு நாள் ஃப்ரீயா ஸ்டே பண்ணற‌ மாதிரி வரலாம் மாமா” என்றான் ஆர்யன்.

 

ஆனால் பிரக்யாவோ எதுவும் வாய் திறக்கவே இல்லை. அமைதியாகவே இருந்தாள்.

 

‘நேற்று சரியாக தூங்காதது காரணமாக இருக்கும்’ என்று நினைத்து, அதை பெரிது படுத்தாமல் விட்டுவிட..

 

ஆனால் இந்த விஷயம் பெரும் பூதாகரமாய் அவர்கள் வீட்டில் வெடித்தது. 

 

ஒரு இடத்திலிருந்து இல்லை.. மூன்று இடத்திலிருந்து வந்து குதித்தது அந்த அணுகுண்டு..!

 

பிரக்யாவை ஆரத் தழுவியது போல ஒரு ஆடவன் இருந்த போட்டோ நயனன் வாட்ஸ் அப்பிற்கு விசாலினி மூலம் வந்து குதிக்க..

 

அதற்கு அடுத்து, அபிராமி பிரக்யாவின் தந்தை என்று ஒவ்வொருத்தராய் அவன் வீட்டுக்கு படையெடுத்தனர்..!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top