அத்தியாயம் 11
காரில் ஏறியதிலிருந்து ஆதிராவும் ஆர்யனும் நடுவில் பிரக்யாவை அமர்த்திக்கொண்டு காலேஜில் நடக்கும் அட்டகாசங்கள் முதல் அவர்களின் கலாட்டாக்கள் அது இது என்று மாறி மாறி அவளிடம் பேச்சுக் கொடுக்க.. இருவரின் பேச்சில் கலகலவென்று சிரித்துக் கொண்டே வந்தாள் பிரக்யா.
அவளின் சிரிப்பை கார் ரிவியூ கண்ணாடி மூலமாக பார்த்துக்கொண்டே வந்த கதிர்நயனனின் முகத்திலும் மெல்லிய புன்னகை.
ஆனாலும் நேரம் செல்ல செல்ல அவளின் அழகிய சிரிப்பு பெரும் அவஸ்தையாகி போனது அவனுக்கு.
'என்கிட்ட மட்டும் மூஞ்ச காட்டுறா? இப்ப மட்டும் சிரிச்சு சிரிச்சு பேசுறா?' என்று அவனது மனமோ பொருபொரு என்று இருக்க..
அதனை மேலும் நீட்டிக்க அவளும் “யு.எஸ்ல.. அபினு..” தனக்கு இருந்த நண்பன் அபிஜித் பற்றி அவர்களிடம் பகிர்ந்துக் கொண்டாள்.
அதுவும் அபிஜித்தை அபி என்று சுருக்கமாக அவள் குறிப்பிட.. அதுவோ அவனுக்கு செல்லமாய் வெல்லமாய் கேட்டது..!
‘எவ்வளவு தைரியம் இருந்தா எனக்கு முன்னாடியே அவனை பத்தி பேசிட்டு வருவா.. அதுவும் செல்ல பேராம் அபி..!’ என்று பல்லை கடித்தான் கதிர்நயனன்.
ஆனால் இதுவே அவன் அவளிடம் விசாலினியை பற்றி பேசியதும், உனக்கு டிவோர்ஸ் கொடுத்துவிட்டு அவளை கல்யாணம் செய்துக் கொள்ளப் போவதாய் கூறியதும், வாகாய் மறந்து போனது கதிர்நயனனுக்கு..!
அவனும் ஆண் தானே.!!
‘உமையா.. தன்னவள்..! தன் மனைவி..!’ என்ற பொஸசிவ்னஸ் பொங்க, சட்டென்று காரை பிரேக் அடித்து வேகமாக நிறுத்தினான் கதிர்நயனன்.
பின்னால் நடுநாயகமாக அமர்ந்திருந்த பிரக்யாவோ அந்த அதிரடி கார் நிறுத்தத்தில் உடல் தள்ளாடி எங்கே பிடிக்க என தெரியாமல் தடுமாறி.. முன்னால் வந்து முட்டினாள். அதில் அவன் கன்னத்தோடு அவள் கன்னம் ஒரு நொடி உரசி சென்றது..!
“ம்ம்ம்.. நல்லா இருக்கே…!” என்றவனின் கண்களில் கள்ளத்தனம் புக..
“என்ன மாமா? என்ன ஆச்சு?" என்று ஆர்யன் கேட்க..
“என்னன்னு தெரியல டா காரு நின்னுடுச்சு.. இருங்க பார்க்குறேன்” என்றபடி இறங்கி பேனட்டை திறந்து பார்த்தவன், சிறிது நேரம் அமைதியாக நின்று வேடிக்கை பார்த்து விட்டு வந்தான்.
“ம்ப்ச்.. காரை இப்ப எடுக்கறது கஷ்டம் வேற வண்டி தான் வர சொல்லணும்” என்றபடி நெற்றியை நீவிக் கொண்டான்.
அத்தனையும் நடிப்பு என்று பாவம், அப்பாவி அவனின் அக்கா மக்களுக்கு தெரியவில்லை..!
“சிறப்பு.. வெகு சிறப்பு..! காலையில சீக்கிரமாக கிளம்பி வந்தா.. இந்த அக்காடி தூங்குமூஞ்சி தூங்கிட்டு நேரம் வளர்த்துனா.. பத்தாததுக்கு எங்க தாய்க்குலம் வேற அபிராமி அந்தாதிய பாடி முடிச்சு தான் வழி அனுப்புச்சு.. இப்ப வர வழியில கார் மக்கர் பண்ணுது..! இன்றைய நாள் இதைவிட நல்லா இருக்காது..! நல்லாவே இருக்காது..!” என்று புலம்பித் தீர்த்தாள் ஆதிரா.
“ஏன் டி இப்படி பொலம்புற? பக்கத்துல தானே அந்த ரிசார்ட் இருக்கு. இன்னைக்கு இல்லன்னா இன்னொரு நாள் போக வேண்டியது தானே?” என்று தங்கையை பிரக்யா சமாதானம் செய்தாள்.
“நல்லா போனோம் போ..! அது எப்படி அக்காடி உன் சித்திய பத்தி தெரிஞ்சுக்கிட்டும் எங்கள இந்த மாதிரி தனியா அனுப்புவாங்கன்னு நீ நம்புற?” என்று கன்னத்தில் கை வைத்து அதிசயித்து கேட்டவளின் பாவனையை கண்டதும் சிரிப்பு பீறிட்டது பிரக்யாவிற்கு.
“இந்த இடத்துக்கு போகணும்னு ரெண்டு மூணு தடவை பர்மிஷன் கெஞ்சி கேட்டும் உன் சித்தி தரவே இல்ல.. அதுக்கு தான் உன்னை புழுவா தூண்டில்ல போட்டு மாமா என்கிற அந்த சுறா மீன் புடிச்சு.. அவரு மூலமா போலாம்னு பிளான் போட்டு வந்தா… எல்லாம் சொதப்பிக்கிட்டு நிக்குது..!” என்ற தலையில் கை வைத்தான் ஆர்யன்.
“ரெண்டு பேரும் இருக்கீங்களே.. எப்பா.. எமகாதகங்க டா.. பாரு எனக்காக வந்தீங்கன்னு பார்த்தா கடைசில உங்களுக்காக என்னை இழுத்துட்டு வந்து இருக்கீங்க.. வாலுங்களா..!” என்று இரண்டு கைகளாலும் தம்பி தங்கையின் காதை பற்றி திருகினாள் பிரக்யா.
அபிராமி போல அரட்டிக் கொண்டே இருக்க மாட்டார்கள்.. அதே சமயம் ரவீந்திரனை போல அமைதி என்றும் கிடையாது..!
அவர்களின் அன்னையின் கண் பார்வைக்கு ஏற்ப நடந்துக் கொள்வார்கள். மற்ற நேரங்களில் எப்படியோ.. ஆனால் பிரக்யாவிடம் இருக்கும் போது இரண்டு பேரின் வாயும் சலசலத்துக் கொண்டே தான் இருக்கும்.
அதுவும் அவர்களுக்கு மனதில் பட்டதை எதையும் மறைக்காமல் பகிர்ந்துக் கொள்ள முடியும் அக்காவிடம்.
அக்காவுக்கு அக்காவாய் நல்ல தோழியாய் தான் பழகுவாள் இருவரிடமும் பிரக்யா.
அதனால் இருவருமே எந்த பாகுபாடும் இன்றி கல்லூரியில் நடந்தவற்றிலிருந்து அனைத்துமே பகிர்ந்துக் கொள்வர். இடையில் இந்த மூன்றாண்டு காலத்தில் அவள் குடும்ப உறுப்பினர்களில் யாரிடமாவது தொடர்பில் இருந்தாள் என்றால்.. அது இவர்களோடு மட்டும் தான்..!
அதற்குள் எங்கிருந்தோ இரண்டு பைக் வந்து நிற்க.. அதிலிருந்து இறங்கியவர்களை பார்த்து “காரை ரிப்பேர் செஞ்சுட்டு இங்க பக்கத்துல இருக்குற ரெசார்ட்டுக்கு கொண்டு வந்துருங்க சரியா?” என்றபடி ஒரு வண்டியில் ஏறியவன்,
திரும்பி மனைவியை பார்க்க 'அச்சோ பைக்கிலா?? இவரோடையா?' என்று அவள் பதறினாள் என்றால்…
“அய்யா.. பைக்கிலா? வாவ் சூப்பர்..!” குதூகலித்தாள் ஆதிரா.
வேறு வழியின்றி கணவனை தொட்டும் தொடாமலும்.. பட்டும் படாமலும்.. ஒட்டி உரசாமலும் சற்று விலகியே அமர்ந்தாள் பிரக்யா.
சைடு கண்ணாடியை அவள் முகம் தெரியுமாறு வசதியாக வைத்தவன் “போலாமா?” என்று இன்னொரு வண்டியில் ஏறிக்கொண்ட ஆர்யனையும் ஆதிராவையும் பார்க்க..
“போலாம் மாமா..” என்றவளின் உற்சாக கூக்குரல் அவனையும் தொற்றிக் கொள்ள பைக் சீறி பாய்ந்தது அந்த சாலையில்..!
எப்பொழுதுமே குளிரூட்டப்பட்ட மூடிய காருக்குள்ளேயே பயணித்து வந்த ஆதிராவுக்கும் ஆர்யனுக்கும் இந்த பைக் பயணமானது புது அனுபவத்தை தந்தது என்று சொல்லலாம்..!
ஆர்யனாவது அவ்வப்போது கல்லூரியில் நண்பர்களுடன் பாட வேளையைக் கட்டடித்து விட்டு அவர்களோடு பைக்கில் சென்ற அனுபவம் உண்டு.
ஆனால் ஆதிராவுக்கு கிடையவே கிடையாது..! பாவம் அன்னையின் லிட்டில் பிரின்ஸசாய் பொத்தி பொத்தி வளர்க்கப்பட்டவள்..! அதிலும் பிரக்யாவோடு தன் மகளை ஒப்பீடு செய்து ‘எப்படி நான் என் பெண்ணை வளர்த்திருக்கிறேன் பாருங்க..!’ என்று ஊர் உறவுக்கு காட்ட..!
“வீட்டிலேயே ஸ்கூட்டி ஓட்டுகிறேன்.. வாங்கி தாங்க மா..” என்று கேட்டால்.. அவ்வளவுதான் அபிராமி பக்கம் பக்கமாய் பேசி தள்ளி விடுவார். அதற்கு பயந்து ஆதிரா வாயை திறப்பதில்லை.
இன்று மாமன்காரன் புண்ணியத்தில் கூட பிறந்தவனோடு என்றாலும் பைக்கில் செல்வது அத்தனை அவளுக்கு சந்தோஷத்தை நல்கியது.
அவ்வப்போது இரு கைகளை விரித்து “ஆஆஆஆ” என்று கத்திக் கொண்டே செல்லும் தங்கையை பார்த்து சிரித்துக்கொண்டு இடவலமாக தலையாட்டினாள் பிரக்யா.
காலநிலையும் இவர்களுக்கு வெகு சாதகமாக இருக்க.. கடும் வெயிலை காட்டாமல் மேகங்கள் அவ்வப்போது அந்த கதிரவனை மூடி மறைக்க.. கூடவே மெல்லிய காற்றும் சற்று ஈரப்பதமாய் வீச.. அதை அனுபவித்துக் கொண்டே பயணித்தனர் நால்வரும்.
உடலில் ஊடுருவிப் பரவி பற்களையும் விரல் நுனிகளையும் இறுகச் செய்யும் இளங்குளிர் காற்றில் பேசியபடியே மிதமான வேகத்தில் அவர்களின் பயணம் தொடர்ந்தது.
பிரக்யா குளிரைத் தவிர்க்க நயனனுடன் அணைத்தது போல அவன் முதுகின் பின்னால் நன்றாக மறைந்திருந்தாள். மிதமான வேகம் என்றாலும் அவ்வப்போது அவளின் மென்மைகள் முன்னால் போய் அவன் முதுகில் மெல்ல முத்தமிட்டு முத்தமிட்டு திரும்பிக் கொண்டிருந்தன.
அது அவளுக்கு சற்று அவஸ்தையாய் இருக்க.. தள்ளி உட்கார முயன்றும் முடியவில்லை..!
காற்றில் கலைந்த தன் தலைமுடியை ஒதுக்கி துப்பட்டாவை சீர் செய்து நன்றாக போர்த்திக் கொண்டாள், சற்று குளிரை விரட்ட…
அவளின் இந்த மென்மையான மென்மைகளின் தீண்டலில் உள்ளே அவன் ஆண்மையோ அவளின் பெண்மையால் கிளர்ந்து விட்டிருப்பதை அவள் உணரவில்லை. உடல் கிளர்வின் கிறக்கத்தில் அவனின் உள்ளமும் கிளர்ந்திருந்தது. மென் மோகம் அவன் குளிருடலைத் தழுவி இதமளித்துக் கொண்டிருந்தது.
“கொல்றாளே..!” என்று ஆழமாக மூச்சை இழுத்து விட்டபோது, அதில் கூட ஒரு சுகம் இருப்பதாய் தோன்றியது கதிர்நயனனுக்கு.
இந்த உள்ளக் கிளர்ச்சி கூட அவனுக்கு இன்னும் இன்னும் அவளோடு தேவையாயிருந்தது..!
ஏன் அவளே தேவையாய் இருந்தாள்..!
முதன் முறை மனைவியுடனான இந்த நெருக்கம் கூட அவனுக்கு கிறக்கத்தை கொடுத்தது..!
இன்னும் இறுக்கமாய் வேண்டும் இந்த நெருக்கம் என்று ஆணவனின் மனது ஏங்கி தவித்தது..!
ஆணுக்கு மட்டுமல்ல பெண்ணுக்கும் உணர்வுகளும் உணர்ச்சிகளும் பொது தானே..!
அவன் முதுகில் கண் பதித்து தன்னை மறந்து அவன் வண்டி ஓட்டுவதையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் பிரக்யா, தன் பிரக்ஞை மறந்து..!
அவன் வளைவில் திரும்பும் போதெல்லாம், அவள் மேனியும் அவனோடு வளைந்து நெளிந்து போக.. தனது நெஞ்சில் கனமேற்றியிருக்கும் மென்மைகள் விம்மியெழ ஒரு ஆழப் பெருமூச்சு எழுந்தது அவளுள்..!
‘அம்மாடி.. என்ன இப்படி இருக்கு இவரோடனான நெருக்கம்..!’ என்று மனதினுள் இரயில் வண்டி போல இதயம் தடத்தடத்தது அவளுக்கு.
காற்றில் பரவியிருக்கும் பனியின் குளிரை உணர்ந்து ஷாலை மார்பில் அணைத்து கைகளைக் கட்டிக் கொண்டாள்.
“குளிருதா சின்னு?” என்று நயனன் அக்கறையாக கேட்க.. அந்த அக்கறைக்கு பின்னாடி இருக்கும் சர்க்கரையை அவள் கவனிக்கவில்லை.
“லைட்டா மாமா” என்றவளது குரலும் லேசாக தடத்தடத்தது அவளது மனதினை போல…
சட்டென அவளது கையைப் பிடித்து தன் முன்னே கொண்டு வந்தவன், “இப்படி கட்டுபிடிச்சிக்கோ டி சின்னு.. குளிராது..!” என்றவன் அவள் கையை பிடித்து தன் நெஞ்சோடு அழுத்தமாக அணைத்துக் கொள்ள…
“என்னது..?!!” விழி விரிய முதலில் அதில் அதிர்ந்தவள், பின் அவனிடம் இருந்து கையை பிடிங்கிக் கொள்ள முனைய..
அவனோ விடாப்பிடியாக அவளது கையை பிடித்து வைத்துக் கொண்டு “கொஞ்சம் நேரம் சும்மா டி.. ரொம்ப பண்ற..! அப்புறம் ஏதாச்சும் க்ரீனீஷா சொல்லிடுவேன்.. பார்த்துக்கோ..! கல்யாணமாகி மூணு வருசம் ஆச்சு.. இன்னும் நான் கன்னி கழியாம இருக்கேன். ஒரு சின்ன தொடுதலுக்கு ரொம்ப சீன் போடுற..!” என்றவனின் வார்த்தைகளில் அவள் அதிர்ந்தாள் என்றால் அவனின் உடும்பு பிடியில் அவள் மேனியோ அதிர்ந்தது.
அவனிடமிருந்து விடுபட முடியாது என்று புரிந்து அமைதியாக அவனோடு அணைந்தவாறே அமர்ந்திருந்தாள்.
இருவருக்குமான அந்த அணைவு அவளின் மேனிக்கு இதமளித்தது. அவளின் மனம் ஏனோ நிலையிழந்து தவிப்பதை உணர்ந்தாள். கூண்டுக்குள் அடைபட்ட சிறு குருவி போல அவள் மனது சிறகடித்து முட்டி மோதியது.
சில நொடிகளில் அவள் மனதில் எழுந்த அந்த தவிப்பின் உள்ளாழத்தை உணர்ந்த போது அவளுக்குள்ளேயே ஒரு திடுக்கிடல் எழுந்தது..!
'இல்ல..! இல்ல..! நான் அப்படி இல்ல..! மாமா எப்பவா இருந்தாலும் விசா அக்காவுக்கு தான். எனக்கு இல்ல. இதெல்லாம் மாயை..!' என்றவள் திடமாக முடிவெடுக்க, ஆனால் அந்த திடமும் மனதிடம் இல்லை.
ஆம்.. அவனின் அங்கத்தின் அடங்கா திமிரும்.. திண்ணிய மார்பும்.. முடி நிறைந்த நெஞ்சமும்.. அவள் கை வழி ஸ்பரிசமாய் அவள் உடலினை தாக்க, விதிர்த்து கை கால்கள் மெல்ல நடுங்கியதைப் போலிருந்தது பிரக்யாவுக்கு!
கைகளை இறுக்கி கால்களை அழுத்திக் கொண்டாள். உதடுகளை வாய்க்குள் இழுத்து அழுத்திப் புதைத்து மீண்டும் மூச்சை ஆழமாக உள்ளிழுத்து நெஞ்சு விம்மியெழ சீற்றத்துடன் பெருமூச்சு விட்டாள்.
அந்த பெருமூச்சின் உளத் தவிப்பை அவளே உணர்ந்தாள்..!
உணரப் பட்டதும் அவளின் தவிப்பு மெல்லத் தளர்வது போலிருந்தது..!
உடலின் இறுக்கத்தை தளர்த்தி தன்னைச் சுற்றிலும் அர்த்தமின்றி ஒரு பார்வை பார்த்தாள்..!
‘இது.. இது.. எனக்கு நிலையில்லை..! இது போகுற போக்கில் ஒரு வழி பயணம் மட்டுமே..! வழிப்பயணம் மட்டுமல்ல வலி மிகுந்த பயணம் கூட..!’ என்று கண்களை மூடிக் கொண்டாள்.
‘என்ன இருந்தாலும் நானும் பெண்தானே? சாதாரண ஆசா பாசங்கள் கொண்ட பெண் தானே? இப்படி தடுமாறுவது.. இதயம் இடம் மாறுவதெல்லாம் சகஜம்’ என்று அவள் மனம் தன்னை சமாதானப்படுத்திக் கொள்ள..
இதுநாள் வரை அவள் அனுபவித்த வலிகளும் ரணங்களும் மறந்து விட்டாயா உன்னை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் பிரக்யா என்று அறிவு அறிவுறுத்த...
அவளது உடலில் முன் இருந்த இலகு தன்மை மாறி ஒரு இறுக்கம் உண்டானது. அதை கதிர்நயனனின் அங்கமும் அறிந்துக் கொள்ள ஒரு விரக்தி புன்னகை அவனிடம்.
“ரொம்ப நேரம் உட்காரது ஒரு மாதிரியா இருக்கு மாமா.. கொஞ்சம் இறங்கி ஏறிக்கவா?” என்று மெல்லிய குரலில் அவள் கேட்க "சரி" என்றான்.
இவருடனான இந்த அணைப்பு இனிமேலும் வேண்டுமா? என்பது போல ஒரு பக்கம் நெஞ்சம் மறுதலிக்க.. மறுபக்கமோ ‘இது வேண்டுமே!’ என்று நெஞ்சம் தடுமாற.. அதனாலேயே சற்று இறங்கி இளைப்பாறி மனதை திடப்படுத்திக் கொள்ள அப்படி கேட்டாள்.
இவன் பைக் வேகத்தை குறைக்கவும் இவர்களை கடந்து வேகமாக கையாற்றியபடி “ஆஆஆக்ககூஊ” என்று கத்தியபடி ஆர்யாவும் ஆதிராவும் சென்றார்கள்.
“டேய் ஆரு.. பத்திரம். மெதுவா போகணும்” என்று மாமனாய் இருவரையும் கண்டித்தான் கதிர்நயனன்.
“ஏதாவது சூடா சாப்பிடுறியா சின்னு? குளுருக்கு நல்லா இருக்கும்” என்று இறங்கி நின்று மனையாளை பார்த்து அவன் கேட்க..
சுற்றுப்புறமும் ஆங்காங்கே சிறு சிறு கடைகள் இருக்கத்தான் செய்தது. ஏனோ அவளுக்கு அதில் விருப்பமில்லை.
இந்த குளிர்..
இந்த இதம்..
இந்த அணைப்பு..
இது தொடர வேண்டும் என்று மனம் விரும்பியது.
விரும்பியதெல்லாம் கிடைக்கப் பெறுமா என்ன??
சுடிதாரில் செழுமையாய் இருக்கும் அவளது இளமையை இயல்பாக ஒரு பார்வை பார்த்து விட்டு அவள் முகத்தைப் பார்த்தான் நயனன்.
களைத்திருந்தாலும் அவள் முகத்தில் சோர்வை மீறிய ஒரு மலர்ச்சி தெரிந்தது.
கன்னத்தில் வந்து விளையாடிய அவளது மென் முடி கற்றைகளை விரல்களால் பற்றி எடுத்து காதோரம் ஒதுக்கியபடி மெல்ல சிரித்தான் அவளை பார்த்து. அவனின் சிரிப்பில் குளிர்ந்திருந்தது அவள் உள்ளம்.
அவளும் சிரித்தாள் தான். ஆனால் அந்த சிரிப்பில் உயிர் இல்லை..! உயிர்ப்பு இல்லை.!
அவளின் மனம் என்ன நினைக்கிறது என்று அவளுக்கே புரியவில்லை.
அவன் பார்வை அவளை மீண்டும் மீண்டும் அவனிடம் கிறங்க வைத்தது.. மயங்க வைத்தது… அனைத்தையும் விட்டு விட்டு அவனுள் அடங்க சொல்லியது.
வெளியே இயல்பாக இருப்பதை போல காட்டிக் கொண்டாலும் உள்ளே அவள் மிகவும் தளர்ந்துக் கொண்டிருப்பதை உணர்ந்தாள்.
அவளின் மனதிற்குள் மறைந்திருக்கும் பெண் உணர்வுகள் வெம்பிச் சினந்துக் கொண்டிருந்தன. அவளை ஆழ்ந்து பார்த்தான் கதிர்நயனன்.
“என்ன மாமா அப்படி பார்க்கறீங்க?” பெண்மையின் கனிவில் விரியும் கன்னக் குழைவுடன் கேட்டாள்.
“மனசுக்குள்ள அப்படி என்னத்த போட்டு நினைச்சுக்கிட்டு இருக்கேனு எனக்கு தெரியல.. கொஞ்ச நேரம் நல்லா இருக்க.. அப்புறம் கொஞ்ச நேரத்துல உனக்குள்ளேயே சுருண்டுகிற? என்னதான் உன் பிரச்சனை சின்னு?” என்று அவளை ஆழப் பார்த்து கேட்டான்.
‘மாமன் தன்னை கண்டு கொண்டானோ?’ என்று அவளுக்கு மனம் அதிர, தொண்டை வரள அவனைப் பார்த்தாள்.
