27
தாமரையின் இளம் மெல்லிய இதழ்கள் சூடாக ஜெர்ரிக்கின் இதழ்களுக்குள் சென்று மறைய..
கண் கிறங்கியப்படி அவன் அணைப்புக்குள் வாகாக நின்றிருந்தாள் தாமரை.
நொடிகளோ.. நிமிடங்களோ..
யாருக்கும் காத்திராது சென்று கொண்டே இருக்க.. அப்போது அவ்வழியே ரெஸ்ட் ரூம் வந்த ஆடவன் ஒருவன் கண்களுக்கு இவர்களின் அந்நியோன்யம் விருந்தானது. அவன் வாய்க்கு மெல்ல அவலானது.
அடுத்தவன் ஒருவன் பார்ப்பதை அறியாத காதல் புறாக்கள் தங்கள் இணையோடு இணைந்து இருந்தன..
ஜெர்ரிக்கு ஒரு முத்தம் மட்டும் போதவில்லை!!
மொத்தமும் தேவையாயிருந்தது!!
வாய் மொழியாய் கேட்கவில்லை!!
வாய் வழியாய் கேட்டுக்கொண்டிருந்தான்!!
இறுக்கி பிடித்த இடுப்பும்..
இதழ்களைக் சுவைத்திடும் அவன் இதழ்களும்..
இணையை தழுவி நின்ற கைகளும்..
நிறைய சங்கதிகள் பேசின!!
விரகதாபத்தில் அவன் மூச்சு காற்று வேகமாக.. அவள் இதழ்களை இன்னும் ஆவேசமாக சுவைக்க ஆரம்பித்தான் ஜெர்ரிக். கிடைக்காத அமிர்தம் கிடைத்து விட்ட சந்தோஷத்தில்..
சில நிமிட ஆவேச முத்தத்தில் இருவருமே கிறங்கினர். ஆழ முத்தத்தில் மூச்சு முட்டி முகம் விலகியவளை.. நெற்றியோடு நெற்றி முட்டி அந்நேரத்தை ரசித்து இருந்தான் ஜெர்ரி.
மெல்ல கண்களைத் திறந்து ஒரு நொடி அவனைப் பார்த்தவள், மீண்டும் அவன் மார்பில் முகத்தை புதைத்தாள். அதில் அளவு கடந்த அவள் காதலும்.. அவன் மீதான நம்பிக்கையுமே அவன் கண்டான்.
அதற்கு மேல் அலுவலகத்தில் இருக்காமல் "லெட்ஸ் கோ ஹனி!!" என்று அவனது வார்த்தையில் அவள் தன் பகுதிக்கு ஹாண்ட் பேக்கை எடுக்க வர போக, அலுவலகம் மொத்தமே காலியாக இருந்தது. ஆனால் அதை எதையும் ஆழ்ந்து கவனிக்கவும் ஆராயும் நிலையில் அவள் இல்லை. நினைவு முழுவதும் ஜெர்ரியும்!! அவன் மீதான காதலும்!!
அதற்குள் அவனும் தன் லேப்டாப் பேக்கை எடுத்து வந்து இருக்க, இருவரும் அமைதியாக லிஃப்டில் ஏறி, இன்று அவளாகவே அவன் அருகில் வந்து அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். அவனும் அவளது நெற்றியில் மெல்லிய முத்தமொன்றை பதிக்க.. இணைபிரியாமலே கார் வரை சென்றனர்.
அவன் அவளை அழைக்கவில்லை மாறாக கார் கதவை திறந்து விட ஒரு சின்ன சிரிப்புடன் ஏறி அமர்ந்தாள்.
இவர்கள் வந்து கொண்டிருந்த நேரம் பின் மாலை பொழுது சற்றே இறங்கி இருள் ஆரம்பித்த நேரம். ஆனால் முற்றிலுமாக இருளாக தொடங்கியிருந்தது வருண தேவனின் வரவால்...
சுழல் காற்று சுழன்றடித்தது.
மென் மழை தூறலாக ஆரம்பித்த மழை சற்று வலுவானது.. ஏசி ஆப் செய்துவிட்டு ஜன்னல்களை அவன் திறந்துவிட.. மழைச் சாரலுடன் கூடிய ஈரக் காற்று வேகமாக வந்து மோதியதில் உடம்பு சிலிர்த்தாள் தாமரை!!
சிறு சிறு தூறல்கள் வந்து வஞ்சயின் வதனத்தில் விழ..
சட்டென தோளை குறுக்கி முகத்தை இன்னும் மேலேற்றி அந்த சுக அனுபவத்தை அனுபவித்தாள் மாது!!
உடம்பின் மெல்லிய பூனை முடிகள் எல்லாம் நட்டுக் கொண்டது. இது ஒரு புது வகை அனுபவம் வெகு நாளைக்குப் பிறகு..
அவளின் இந்த சிறுசிறு செயல்களை சிரித்தபடி மெதுவாகவே காரை ஓட்டிக் கொண்டிருந்தான் ஜெர்ரி.
சில நிமிடங்களில் சின்னச் சின்னதாக விழுந்த மழைத்துளி பெரியபெரிய துளிகளாக அவள்மீது விழ, சற்று வலிக்க முகத்தை அவள் சுருக்க.. அதைக் கண்டவன் சட்டென்று அவளை உள்ளே இழுத்து "போதும்டா அப்புறம் கோல்ட் பிடிக்கும்!" என்றவன் கண்ணாடியை பாதிவரை ஏற்றிவிட்டான் அதுவும் அவளுக்காக!!
வீடு வந்ததும் வழக்கம் போல அவள் லிஃப்டில் ஏற, இவனும் அவளை உரசிக்கொண்டே நின்றான். மெல்ல சிரிப்புடன் அவள் கீழ் உதட்டை பற்களால் கடித்துக் கொண்டு நிற்க அந்த அழகிய தருணத்தை அவளை அறியாமல் தனது செல்போனில் பதிவு செய்து கொண்டான் காதலன்!!
அவள் வீடு இருக்கும் தளம் வந்ததும் இறங்கி அவனை பார்க்க, அவள் பின்னே வந்தவன் அன்று பார்த்த அதே பால்கனிக்கு அவளை அழைத்து சென்றான்.
மழைக் காற்றை உடம்பில் வாங்கி சிலிர்த்துக் கொண்டு இருளில் மழையின் சத்தத்தை ரசித்தபடி நின்றிருந்தார்கள்.
இருவரிடையே எந்தவித பேச்சு வார்த்தையும் இல்லை மௌனங்களிலேயே கழிந்தது.
அவன் மூக்கை அவள் காதோரம் வைக்க சூடான அவனது மூச்சு அவளுக்கு உள்ளுக்குள் தகிக்க..
அவனின் இறுக்கமான அணைப்பு அவளுக்கு தேவைப்பட.. அதை உணர்ந்தவன் போல அவளை நெருங்கியவன் அணைத்து நிற்க, அதில் உடல் கதகதப்பை அனுபவிக்கத் தொடங்கினாள்.
"ஹனி!!" என்ற அவனது மென்மையான அழைப்பில் இவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க.. அவள் கன்னங்களை தாங்கி முகம் முழுவதும் முத்தம் வைத்தான்.
வள்ளலாக அவன் கொடுக்கும் முத்தங்களை வாங்கிச் சிலிர்த்தாள் தாமரை! அவனாக விடும் வரை அமைதியாக இருந்தவளின் முகம் அந்த தாமரையை ஒத்து இருந்தது.
நிறைய முத்தங்கள் கொடுத்த பின்னும் நித்தலம் அவளை விலக்கவோ.. அவன் விலகவோ மனமற்று இருந்தான்.
ஆனால் நேரம் கடந்து கொண்டிருக்க மெல்ல அவனிடம் இருந்து விலகியவள் "போகலாம்!!" என்று கூற, மனமற்று அவனும் "ம்ம்ம்" என்று மறுமொழி மொழிந்து அவளோடு கூட நடந்தான்.
அவள் வீடு வரை கூட வந்தவன் அவள் வீட்டுக்குள் நுழைந்து அவனிடம் மெல்லிய தலையசைப்பு கொடுத்து கதவைச் சாத்தும் வரை அங்கேயே நின்றிருந்தான் கண்களால் அவளை விழுங்கியப்படி.. பின்பு தலைகோதி சிரித்து விட்டு தன் வீட்டை நோக்கி நடை போட்டான்.
நேற்று முதல் எதையோ பறிகொடுத்தவள் போல் பின்பு எதையோ யோசித்தவள் போல் இருந்த தாமரையின் முகமாய் இது? என்று கேட்கும் அளவு.. அவ்வளவு தேஜஸுடன் இருந்தது தாமரையின் முகம் வித்யா பார்க்கும் போது.
"தாமரை.. ஏய்.. ஏய்.. தாம்ம்மமமரைய்ய்ய்!!" என்று அவனிடம் ஏதோ சொல்ல விளைந்த வித்யாவின் குரல் எங்கோ தூரத்தில் ஒலித்தது தாமரைக்கு.
நேற்று போல் இன்றும் அவளை கண்டுகொள்ளாமல் தாமரை தன் அறைக்குள் நுழைந்து கொள்ள, "இவ கூட எல்லாம் ரூம் மெட்டா இருக்கேன் பாரு.. என்னை சொல்லணும்?" என்று மீண்டும் தலையில் அடித்துக்கொண்டு தன் அறைக்குச் சென்றுவிட்டாள் வித்யா.
இரு இளம் இதயங்களும் இன்று தங்கள் காதல் முழுவதாக பரிமாறப்பட்டதை நினைத்து நினைத்து புளங்கிதம் அடைந்து இரவு தூக்கத்தைத் தொலைத்து கனவுகளில் உழன்று காதல்கொண்டு தாபம் ஏறி மோக ராகம் படித்தனர்.. கனவுகளில் தான்!!
ஆனால் நாளை அவர்களுக்கு என்ன வைத்திருக்கிறது என்பதை அறியாமல்?!
வருகிற கஷ்டம் தனியாக வராது என்பார்கள்.. அதுபோலத்தான் அலுவலகத்தில் உள்ளவர்கள் தங்களை அவதூராக கற்பனை பண்ணி பேசுவதை அறியாத தாமரைக்கும் ஜெர்ரிக்கும் காலையில் விடிந்தபோது அந்த நாள் என்னவோ நல்லாத்தான் இருந்தது.
ஆனால் அதையெல்லாம் கலைக்க.. குலைக்கவென்றே ஒருத்தன் வந்தான். அவன் மகேஷ்!!
சாதாரண ஒரு டிகிரி முடிக்கவே தட்டுத்தடுமாறி தான் முடித்தான் மகேஷ் என்கிற மகேஷ்வரன்!! தாமரையோட ஊரின் பக்கத்து ஊர் தான் இவனுக்கும். அப்பன் சேர்த்து வைத்த சொத்து இருக்க, ஏதோ பேருக்கு என்று டிகிரி. அதுவும் அவர் அப்பாவின் நிலத்தில் கொஞ்சம் டவுன் பக்கமாய் நான்கு கடைகள் கட்டி வாடகை விட்டான். அதில் ஒன்றில் கம்ப்யூட்டர் சென்டர் என்ற பெயரில் ஒன்றை நடத்தி வருகிறான்.
அப்போது தான் காலேஜ் போக ஆரம்பித்த தாமரையை பார்த்தவனுக்கு, முதலில் எல்லாம் ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் அடுத்தடுத்து அவள் ப்ராஜெக்ட் பிரவுசிங் என்று அவன் கம்ப்யூட்டர் சென்டரை நாட.. அவளின் திறமையை அறிந்தவன் வார நாட்களில் அந்த கம்ப்யூட்டர் சென்டரில் வேலை போட்டு கொடுத்தான்.
'வாழ்வின் உயர்வு!' ஒன்றே நோக்கமாக கொண்ட தாமரையும் அதைப் பற்று கோலாக பற்றிக்கொண்டு தான் முன்னேற.. அழகு திறமை எதிர்கால வளங்களை கருத்தில் கொண்டு அப்பாவி அவளிடம் காதல் வசனங்கள் பேச அவளோ மறுத்துவிட அதன் பின்னே தான் சம்பந்தம் பேச சென்றது அன்னையோடு!
ஆனால் அவன் அம்மாவோ "முடியாவே முடியாது" என்று மறுத்தார்.
"அம்மா இன்னைக்கு சொத்து கொண்ட ஒரு பொண்ணுக்கு அந்த நகை மட்டும் தான். ஆனா இவள மாதிரி திறமை உள்ள பொண்ணுதான் பொன் முட்டையிடும் வாத்து. இந்த மாதிரி சென்டர் பக்கத்து பக்கத்துல நாலஞ்சு தொடங்கிடலாம் இவள வச்சுக்கிட்டு" என்று அவன் அடுக்கடுக்காக பேச அதில் ஒத்துக்கொண்ட அவனது தாயும் சம்பந்தம் பேசி முடித்தார்.
அதுவும் இரண்டு வருடம் போகட்டும் என்ற கணக்கோடு.. முதல் ஆறு மாதம் சென்னையில் வேலை செய்து போக்கிட.. அடுத்த சில மாதங்கள் சான்பிரான்ஸிஸ்கோவிலும் மீண்டும் சென்னையிலும் ஆக இப்படியே ஒன்றரை வருடங்கள் ஓடிவிட்டது. ஆனால் கொஞ்சம் கூட திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஆணுடன், எந்த ஒரு பிடிப்பும் இல்லாமல் இருக்கும் அவளை கண்டதும்.. எங்கே இவளை விட்டு விடுவோமோ என்று இப்போது எல்லாம் பயங்கர பயம் மகேஷுக்கு.
முன்னைப்போல இரவில் போன் செய்வது பேசுவதெல்லாம் இல்லை. கேட்டால் "நீங்களும் பேச வேண்டியதுதானே? அப்போது சான்பிரான்ஸிஸ்கோவில் இருந்தேன் ஐஎஸ்டி. இப்ப லோக்கல் அதுவும் சென்னை தானே" என்று இவளும் எதிர்த்து கேள்வி கேட்க உஷாரானவன், அதன்பின் காய்களை வேகமாக நடத்தி திருமணத்துக்கு முன் அட்லீஸ்ட் நிச்சயத்தையாவது சீக்கிரம் முடித்து விட வேண்டும் என்று அம்மா மூலம் இவன் அவர்கள் குடும்பத்துக்கு நெருக்கடி கொடுக்க..
முன்னை எப்படியோ ஆனால் ஜெர்ரியின் காதலால் மலர்ந்த உள்ளம், அதன்பின் இவன் பெயரைக் கூட உச்சரிக்கக் மறுக்கிறது. பின் எப்படி திருமணத்திற்கு ஒத்துக் கொள்வாள் நிச்சயித்துக்கு? இதோ அதோ என்று அவளும் இரண்டு வருடங்களை போக்கிவிட்டு வேறு எங்காவது சென்று விடலாம் என்ற நினைப்பில் இருக்க, இதை இங்கே சென்னையில் ஜெர்ரியின் தரிசனம் அதுவும் அவளுக்காகவே!!
இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் மட்டுமே இரண்டு வருடம் முடிய இருந்தது. இப்போதிலிருந்து அவளுக்கு சோப்பு போட்டால் தான் முடியும் என்று நினைத்த மகேஷ் இது ஊரிலிருந்து கிளம்பும் வந்திருந்தான். பிரிவுத்துயர் தாங்காமல் பசலை கொண்ட தலைவியை போல..
நல்ல நேரம் காலம் பார்த்து வந்தான் இவனும்!!
அவர்கள் டீம் அதாவது குரு கீழ் வேலை செய்யும் அந்த 10 நபர்களுக்கும் வேலை மதியத்தில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. அதனால் குருவைத் தவிர அனைவரும் வரவில்லை அப்போது அலுவலகத்திற்கு..
பேரழகன் இல்லை என்றாலும் ஓரளவு பார்ப்பதற்கு நன்றாகவே இருப்பான் மகேஷ். அதுவும் பேச்சில் ஆளை மயக்கி பேசுவதில் கெட்டிக்காரன். இதோ வெளி காவலாளியிடம் பேசி உள்ளே வந்து ரிசப்ஷன் பெண்ணிடமும் அவன் பேசி, தாமரையை பார்க்க வேண்டுமென்று கேட்டான். உள்ளே நடப்பது எதுவும் தெரியாமல் அவளும் அவனை காத்திருக்க சொன்னாள் இன்னும் தாமரை வரவில்லை என்று..
ஆனால் உள்ளே அந்த வதந்தி ஒன்றாய் இரண்டாய் என்று வைரசை விட வேகமாக பரவிக் கொண்டிருந்தது.
சான்பிரான்ஸிஸ்கோவில் அவங்க ரெண்டு பேருக்கும் தொடர்பு இருந்ததாம். அதான் அவளைப் பிரிந்து இருக்க முடியாமல் இங்கே வந்திருக்கிறான்!!
நேத்து ஈவ்னிங் ஸ்டாஃப் எல்லாம் போன பிறகும் செம ஆட்டமாம் ரெண்டு பேரும்! அதனால காலையில் வர லேட் ஆகும்னு தாமரைக்காக அவங்க டீமுக்கே மதியம் வரைக்கும் லீவு கொடுத்து இருக்கிறாருன்னா பாரேன்!!
கண்ணுக்கு முன்னாடியே இந்த ஆட்டம்! அப்போ தெரியாத வெளிநாட்டில் என்னன்ன ஆட்டம் போட்டு இருப்பாங்களோ!!
பார்க்கும் போது ஆம்பளையே பாக்காத மாதிரி புடிக்காத மாதிரி நடக்க வேண்டியது.. ஆளுங்க போனதுக்கு அப்புறம்.. ச்சீ.. ச்சீ.. இதெல்லாம் ஒரு பொழப்பு!!
ஏற்கனவே ஸ்டீபன் அவ பின்னாடி தான் சுத்திட்டு இருக்கான். அடுத்து இப்போ இவன்.. ம்ம்ம்.. எப்படித்தான் இப்படி பெரிய கொம்பா பார்த்து பிடிக்கிறாளோ?? தெரியல!!
இம்மாதிரியான வதந்திகள் பரவி கொண்டு இருப்பதை அறியாத தாமரையும் ஜெர்ரியும் காலையில் எழுந்தது முதல் நேற்று இருந்த உணர்வுகளில் லயித்து சந்தோசமாக தங்கள் காலை வேலையை செய்து கொண்டிருந்தனர்.
அதே நேரம் வெளியில் தாமரைக்காக காத்திருந்த மகேஷை பார்த்து ஒவ்வொருவரும் தங்களுக்குள் ரகசியமாக சிரித்துக் கொள்ளுவதும், அவளை கண்களால் காட்டிக் கேலி செய்வதையும் முதலில் பார்க்காமல் கவனிக்காமல் இருந்த அவனுக்கும் புரிந்தது.
அதன்பின் அவனிடம் வந்த ஒரு நல்லவன் புட்டுப்புட்டு எல்லாத்தையும் விளக்கி வைத்தான்.
ஏற்கனவே எங்கே தாமரை நம் கையை விட்டு போய் விடுவாளோ என்று எண்ணி பயந்து தான் இங்கே வந்து இருந்தான் மகேஷ். இப்போது அவன் கேட்ட விஷயங்கள் அவ்வளவு ஒரு கோபம் வந்தது.
அவன் மட்டும் அவ்வளவு நல்லவன் கிடையாது. ஊராருக்கு தெரியாமல் அன்னைக்கும் தெரியாமல் அங்கொன்று இங்கொன்று என்று தொடுப்பு வைத்திருப்பவன், ஆயிரம் தான் இந்த மாதிரி சின்ன வீடு வைத்திருந்தாலும்…. அழகு திறமையோடு அதுவும் வசதி கம்மியான வீட்டிலிருந்து மனைவி கிடைத்தால், அல்வா போல அள்ளி கொள்ளலாம் என்று அவன் நினைத்திருக்க.. ஆனால் இங்கே தாமரைக்கு பரப்பப்பட்டு உள்ள பெயரை கண்டவனுக்கு அவ்வளவு கோபம் வந்தது.
தான் எவ்வளவு தான் ஊர் சுற்றியாக இருந்தாலும் தனக்கு மனைவியாக வருபவள் அடக்க ஒடுக்கமாக படி தாண்டா பத்தினியாக இருக்க வேண்டும் என்பது தான் இவன் மாதிரியான ஆண்களின் எண்ணப்போக்கு! அதை விடவும் அவர்கள் சொல்வது உண்மையா? பொய்யா? என்று ஆராய மாட்டார்கள்! ஒருவேளை நம்மை போல இவளும் நமக்கு தெரியாமல் செய்கிறாளோ என்று எண்ணம் போகும்! தான் திருடன் பிறரை நம்பான் என்ற குணம் தான்!
வித்யாவுக்கு இன்று முதல் இரவு நேர பணி என்பதால் அவள் காலையில் அலுவலகத்துக்கு வரவில்லை. அப்படி வந்திருந்தால் இங்கே நடக்கும் இந்த விஷயங்களை எல்லாம் கேள்விப்பட்டு தோழிக்கு முன்னரே எச்சரிக்கை கொடுத்திருப்பாள். அதுமட்டுமல்லாமல் குருவோ இம்மாத நடவடிக்கைகளை ஜெர்ரிக்கு அனுப்ப வேண்டும் என்ற மும்முரத்தில் அவன் கணினியை கட்டிக்கொண்டு தனி அறையில் வேலை செய்ய.. அவனுக்கும் இந்த வதந்தி தெரியவில்லை.
ஸ்டீபன் முதலில் இதைக் கேள்விப் பட்டாலும் "ஜஸ்ட் ரூமர்!!" என்று அதை துடைத்தெறிந்து விட்டு தன் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டான்.
அவன் கணித்த வரை தாமரை இதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள மாட்டாள் என்பது அவனது எண்ணம்.
இந்த உலகம் எவ்வளவுக்கெவ்வளவு பெண்மையைப் போற்றுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு தூற்றவும் தான் செய்கிறது!
அதிலும் அந்த பெண்ணுக்கு வலிக்க வேண்டும் என்றால்.. அது அவள் ஒழுக்கத்தையும் மானத்தையும் கற்பையும் தான் கூறு போட்டு விற்கிறது. அவளது பலஹீனமான இடம் அதுதான் என்று அறிந்து அடிக்கிறது. மற்ற எது சொன்னாலும் அவள் துடைத்துவிட்டு போய்விடுவாள் இந்த ஒரு விஷயத்தில் மட்டுமே அவளை அடக்கி வைக்க முடியும் என்று பலமான நம்பிக்கை ஒன்று இந்த சமூகத்தில் பரவி விரவி நஞ்சு போல கலந்திருக்கிறது.
தாமரை அதற்கு விதிவிலக்காக இருப்பாளா? இல்லை அது தான் விதிதான் என்று இருப்பாளா?
காலையில் மெதுவாகவே கண்விழித்த தாமரைக்கு ஜெர்ரியை நினைக்கவும் அவ்வளவு லேசாக மகிழ்ச்சியாக இருந்தது. கண்ணாடி முன்னாடி நின்று தன் வதனத்தை பார்த்தவளுக்கு, எப்பொழுதோ இம்மாதிரி ஒரு முறை மகிழ்ச்சியாக இருந்த ஒரு தருணம் நினைவில் வந்து போக சிரித்துக்கொண்டாள்.
வித்யாவும் வீட்டில்தான் இருந்தாள்.
சிரித்த முகமாக வளரும் தாமரையைப் பார்த்து வித்யாவுக்கும் ஏதோ புரிந்தாற் போல் இருக்க.. அவள் முன் நின்று இவள் முகத்தை உற்று உற்றுப் பார்க்க எங்கிருந்தோ ஒரு வெட்கம் வந்து ஒட்டிக்கொண்டது தாமரை முகத்தில். அதில் அவள் முகம் இன்னும் தாமரையென சிவக்க "ஐயோ தாமரை!! யூ ஆர் ப்ளஷிங்!!" என்று அதற்கும் அவள் கிண்டலடிக்க.. "போடி?!" என்று அவள் முதுகில் தட்டி விட்டு இருவருக்குமான சமையலை உற்சாகத்துடன் செய்து கொண்டிருந்தாள் தாமரை.
ஏற்கனவே ஜெர்ரியின் இந்த தன்னலமில்லா காதலில் கட்டுண்டு கரைந்தாலும் கல்லென வெளியில் காட்டிக் கொண்டிருந்தவளுக்கு..
நேற்று ஸ்டீபன் பேச்சு ஓரளவு தெளிவை தந்திருந்தது.
எப்படியாயினும் மகேஷை திருமணம் செய்து கொள்ள முடியாது. ஏன் இவ்வளவு நாட்களாக வீட்டுக்கு உழைத்தும் கொடுத்தாகி விட்டது. இன்னும் ஒரு ஆறு மாதம் மட்டும் அவள் ஏற்கனவே சேமித்து வைத்திருக்கும் தொகையோடு கொஞ்சம் சேமித்து சித்திரம் கொடுத்துவிட்டு ஒரேடியாக பிரிந்து சென்று விட வேண்டும். அதன்பின் எங்கேயாவது ஏதாவதொரு வேலையில் சேர வேண்டும் என்று நினைத்தவளுக்கு, அது ஏன் ஜெர்ரியுடன் சேர்ந்து ஒரு அழகான வாழ்வை வாழக்கூடாது என்று எண்ணம் பிறக்க.. காதலும் முகிழ்க்க மனம் தெளிவு பெற்றது.
ஆதவனை கண்ட தாமரை போல ஜெர்ரி கண்டதும் தாமரையின் முகம் மலர இதற்கு முன் அவளின் இந்த மலர்ச்சியை பார்க்காதவனுக்கு அப்படி ஒரு ஆசை கட்டிக்கொள்ள.. ஆனால் லிப்ட் அருகே நின்றுகொண்டு செய்யமுடியாது என்று அமைதியாக கையை கட்டுப்படுத்திக்கொண்டு நின்றவன் லிஃப்ட் வந்தும் ஆவலாக உள்ளே சென்று பார்க்கலாம் என்றால், அங்கு இன்னும் மக்கள் இருக்க, கஷ்டப்பட்டு கட்டுப் படுத்திக் கொண்டிருந்தான் தன் உணர்வுகளை.
அவனின் முகத்தின் அழுத்தமும் கையின் இறுக்கமும் கண்டவளுக்கு சிரிப்பு கூட வந்தது. எப்பொழுதும் பூனைக்குட்டி போல அவளை உரசிக்கொண்டே நிற்பவன் இன்று பத்தடி தள்ளி நிற்கிறான் என்றால் இன்னும் அவளுக்கு சிரிப்பு வர உதட்டை கடித்து கொண்டாள்.
"இரு இரு தனியா மாட்டுவவ!" என்று அவளை பார்த்து உதட்டை அசைத்தவனை, கண்டவளுக்கு முகம் செம்மை பூசிக் கொண்டது.
இதுவரை அவளை சீண்டி கோபமூட்டி என்று காதல் செய்து கொண்டிருந்தவன் இன்று 10 அடி தள்ளி நின்று அவளை காதல் செய்ய வைத்தான். ரசிக்க வைத்தான்.. இந்த நிமிடம் கூட அவ்வளவு அழகாக இருந்தது தாமரைக்கு.
இனி அவன் தான் என்று முடிவெடுத்த பின்னால் அவன் உடனே காரில் பயணித்து இவள் அலுவலகம் வர.. இவர்கள் சேர்ந்த வந்ததை பார்த்த பல கண்கள் தங்களுக்குள் ரகசியம் பேசிக் கொள்ள..
'இவள் எப்பொழுது வருவாள்.. தன் கோபத்தை காட்டலாம்?' என்று கனன்று கொண்டிருந்த மகேஷுக்கு அவள் வரவும் அதுவும் ஜெர்ரியோடு அவள் வரவும் அதற்குபின் சொல்லவும் வேண்டுமா அவனது கோபத்தை?
தாமரையிடம் ரிசப்ஷனில் இருந்த பெண் மகேஷை சுட்டிக்காட்டி "அவர் உங்களுக்காக காத்து இருக்கார்" என்றாள். அவளுக்கு உள்ளுக்குள் சற்று பயந்தாலும் என்றாவது ஒரு நாள் இதை எதிர்கொண்டு தானே ஆக வேண்டும் என்று முகத்தில் வரவழைக்கப்பட்ட புன்னகையோடு அவனை நெருங்க.. முன்னால் சென்றுகொண்டிருந்த ஜெர்ரியோ ஒரு நிமிடம் நின்று அவளைப் பார்த்தான். அவனுக்குத்தான் தெரியுமே அவளின் மனதை அதனால் அவள் பேசட்டும் என்று இவன் தன் கேபினை நோக்கி செல்ல ஆரம்பித்தான்.
தன்னை கண்டவுடன் முகம் மலரவில்லை.. அந்த கண்களில் சந்தோசம் இல்லை.. ஏன் வியப்பாக புருவங்கள் கூட மேலே எழவில்லை.. ஒருவித பயமும், எதுவும் முடிவு செய்துவிட்ட அவளது முகமும் இனி தாமரை அவனுக்கு இல்லை என்பதைத் தெளிவாக உணர்த்தியது.
இரண்டு வருடங்களாக அவளுக்காக காத்திருந்த இன்று எப்படி விட்டு செல்வது? ஆனால் இவள் வேண்டாம் என்றால் என்ன செய்வது? என்று யோசித்தவன், முதலில் பேசிப் பார்ப்போம் அதற்குப்பின் பார்த்துக்கலாம் என்று "என்ன தாமரை இது? உன்னை நம்பி நான் இங்கே உன்னை வேலைக்கு அனுப்பினால் எல்லாரும் என்னென்னமோ பேசிக்கிறாங்க?" என்று கூற அவளுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை..
"என்ன? என்ன ஆச்சு மகேஷ்?" என்றால் அவன் அருகே நெருங்கி..
"என்னாச்சா? எல்லாம் நாசமாப் போச்சு!! உன் குடும்பத்தை பற்றி நன்றாக தெரிந்தும் நீ நல்லவள் என்ற ஒரே காரணத்துக்காகவும், நீ ஏழையாக இருந்தாலும் பரவாயில்லை என்று கல்யாணம் செய்து கொள்ள சம்மதித்தேன். ஆனால் இப்படி ஒரு துரோகத்தை நீ எனக்கு செய்யக்கூடாது" என்று அவன் ஆரம்பிக்க "ஜஸ்ட் ஸ்டாப் இட் மகேஷ்! என்ன துரோகம் உங்களுக்கு நான் செஞ்சிட்டேன்? என்ன சொல்றீங்க நீங்க?" என்று கேட்க, அங்கே அவனுக்கு சொல்லப்பட்ட வதந்திகளை இவனும் கொஞ்சம் நாலு பிட்டை சேர்த்து போட்டு தான் கூறினான்.
அவன் பேச பேச அதன் கணமும் வலியும் தாங்காது அவள் "மகேஷ்!!" என்று கத்த கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைய இருந்த ஜெர்ரியும் அந்த சத்தத்தில் திரும்பி பார்க்க..
ருத்ர காளியென நின்றுகொண்டிருந்தாள் மகேஷை இந்த வார்த்தை சொன்னா அவர்களை வதம் செய்ய..
அதற்குள் அருகில் இருந்தவர்கள் எல்லாம் கூட்டம் கூடிவிட இப்பொழுது அவளுக்கு நேராகவே கிசுகிசுத்தனர். அதுவும் மகேஷை சுட்டி காட்டி "இவன்தான் முதலாம் ஊரில் இருக்கும்போது.. அப்புறம் சென்னையில ஒருத்தன்! வெளிநாடு போனதுக்கப்புறம் இன்னொருவன். மூணு பேரில் யாரை செலக்ட் பண்ணுவா?" என்று அவளுக்கு காதில் விழும்படி..
அவள் கத்தியதில் எதோ விபரீதம் என்று ஓடிவந்த ஜெர்ரிக்கும் இவர்கள் பேசியது எல்லாம் காதல் கேட்க.. "என்ன மனிதர்கள் இவர்கள்??!!" என்று அருவருப்பு தான் கொண்டான்.
"இந்த ஒழுக்கம் கெட்டவள்.. இனி உனக்கு வேண்டாம்! நீ கெளம்பலாம் மகேஷ்!!" என்று அவனிடம் சீற்றத்துடன் கூறினாள், "ஓஹ் கடைசியா நீயும் உங்க அம்மா போல தானே.. ச்சீ தாயை போல பிள்ளை நூலை போல சேலை.. என்று அவளை அசிங்க அசிங்கமாக இன்னும் பேசிவிட்டு மகேஷ் செல்ல.. அவள் கண்களில் வழிந்த கண்ணீர்
ஜெ
ர்ரியை பார்த்து "எல்லாம் உன்னால் தான்!! உன்னால் தான்!!" என குற்றம் சாட்டியது.
அதற்குப்பின் நிமிடமும் அங்கே நிற்காமல் தன் இடத்தை நோக்கி ஓடியவளை வலி மிகுந்த பார்வையோடு பார்த்து இருந்தான் ஜெர்ரி!
