என் கூடவா…
வக்கீலின் அந்தப் பிரம்மாண்டமான அறையில் நிலவிய அமைதியை விஜய்யின் அந்த ஒரே ஒரு வார்த்தை உடைத்தெறிந்திருந்தது.
"நான் இருக்கிற வரைக்கும் உன்னால இனி அவளோட நிழலைக் கூடத் தொட முடியாதுடா!"
விஜய்யின் தொண்டையிலிருந்து வெளிப்பட்ட அந்த கம்பீரமான அதிகாரமும், உரிமையும் நிறைந்த குரல், அங்கிருந்த சுவர்களில் எதிரொலித்து ஆத்மிகாவின் இதயத்தை நேரடியாகச் சென்று தாக்கியது.
ஆத்மிகா சட்டென்று நிமிர்ந்து விஜய்யைப் பார்த்தாள்.
அவளது விழிகளில் அளவற்ற அதிர்ச்சியும் ஆச்சரியமும் அலைமோதின. 'திடீரென்று இவருக்கு நம் மீது ஏன் இவ்வளவு அக்கறை? இத்தனை உரிமையோடு பேசுறாரே?' என்ற கேள்வி அவளது மனதிற்குள் எழுந்தது.
ஆனால், அடுத்த கணமே அவளது ஆழ்மனம் அவளுக்கு உண்மையை உணர்த்தியது. இது ஏதோ திடீரென்று வந்த அக்கறை இல்லை. இந்த ஊருக்கு அவளது கால்கள் அடிஎடுத்து வைத்த நாளிலிருந்தே, மீண்டும் விஜய்யைச் சந்தித்த அந்த முதல் நொடியிலிருந்தே அவன் அவளிடம் இப்படித்தான் நடந்துகொள்கிறான்.
ஆத்மிகாவுக்கு விஜய் யாரென்று தெரியும். அவளது நெருங்கிய தோழி திவ்யாவின் சொந்த அண்ணன்! அந்த ஒரே ஒரு நம்பிக்கையில்தான் அவளது கணவன் சுரேஷின் கொடுமைகளிலிருந்து தப்பிக்க உதவி கேட்டபோது, அவளும் விஜய்யை முழுமையாக நம்பினாள்.
ஆனால், இன்று ஒரு பெற்ற அப்பாவிற்குப் பிறகு, தன் மீது அளவற்ற பாசத்தையும் அக்கறையையும் பொழியும் ஒரு ஆணாக விஜய் நிற்பதைப் பார்த்தபோது அவளது கண்கள் அறியாமல் கலங்கின.
நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்த அந்த உணர்ச்சிப் பெருக்கை, வக்கீல் முன்னிலையில் காட்டக் கூடாது என்பதற்காகத் தன் கீழ் உதட்டைக் கடித்துக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
ஆனால், சுரேஷால் விஜய்யின் இந்த அதிகாரத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவனது உடம்பெல்லாம் ஆத்திரத்தில் எரிந்தது.
"டேய் ! நீ யாருடா அவளைப் பத்திப் பேச? இவளை மாதிரி ஒழுக்கம் இல்லாத பொம்பளைக்குச் சப்போர்ட் பண்ண உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா..." சுரேஷ் வார்த்தைகளை எல்லை மீறி விடத் தொடங்கிய அந்த நொடி…
"பளார்!"
விஜய் சோபாவை விட்டு மின்னல் வேகத்தில் எழுந்து சுரேஷின் இன்னொரு கன்னத்திலும் ஓங்கி அறைந்தான்.
அந்த அடியின் வேகத்தில் சுரேஷ் நிலைகுலைந்து சுவரில் மோதி கீழே விழுந்தான். அவனது வாயிலிருந்து ரத்தம் வழியத் தொடங்கியது.
"இன்னொரு வார்த்தை... ஒரே ஒரு வார்த்தை அவளைப் பத்தித் தப்பா பேசுன, உன்னை உயிரோட இந்த அறையை விட்டு வெளியே போக விடமாட்டேன்!" என்று விஜய் உறுமினான்.
அவனது கண்கள் கோபத்தில் சிவந்து தீப்பிழம்பாகக் காட்சியளித்தன.
வக்கீல் பதறிப்போய் எழுந்து விஜய்யின் தோளைப் பிடித்தார்.
"விஜய்! கண்ட்ரோல் யுவர்செல்ஃப்! அமைதியா இருங்க!" என்று விஜய்யைச் சாந்தப்படுத்தியவர், கீழே விழுந்து கிடந்த சுரேஷைப் பார்த்து அருவருப்போடு பேசத் தொடங்கினார்.
"யோவ் சுரேஷ்! இங்க பாரு... நீ கம்பெனில பண்ணின பிராடுத்தனம், மோசடி, கையாடல்னு எல்லா ஆதாரமும் என் டேபிள்ல இருக்கு. நீ ஆத்மிகாவுக்கு எதிரா இனிமே சின்னதா ஒரு காய் நகர்த்தினாக்கூட, அடுத்த நிமிஷம் நீ லைஃப் லாங் ஜெயில்லதான் களி சாப்பிடணும். உனக்கு ஜாமீன் கூடக் கிடைக்காது!"
வக்கீல் தன் முன்னிருந்த ஆவணங்களைக் காட்டி பிளாக்மெயில் செய்ய, சுரேஷின் முகம் பயத்தில் சாம்பல் நிறமாக மாறியது. சுரேஷிற்குள் கோவமும் வன்மமும் தலைக்கேறியது.
இப்போதைக்கு இவர்களை எதுவுமே செய்ய முடியாது என்பதை அவன் உணர்ந்தான். 'சரிதான்... தக்க சமயம் பார்த்து இவங்க ரெண்டு பேரையும் வச்சு செஞ்சுட வேண்டியதுதான். பழி வாங்காம விடமாட்டேன்!' என்று மனதிற்குள் விஷத்தைக் கக்கினான்.
விஜய் அவனைப் பார்த்து நக்கலாகச் சொன்னான், "மரியாதையா இந்த டிவோர்ஸ் பேப்பர்ல கையெழுத்தைப் போட்டுட்டு ஓடிப் போயிடு! இல்லைன்னா, நீ உயிரோட வீடும் போய் சேர மாட்ட, ஜெயிலுக்கும் போக மாட்ட!"
வேறு வழியே இல்லாமல், ஜெயிலுக்குப் போவதைத் தவிர்க்க சுரேஷ் நடுங்கும் கரங்களால் அந்த விவாகரத்துப் பத்திரங்களில் வேகவேகமாகக் கையெழுத்திட்டான்.
மனதிற்குள் வன்மத்தைச் சுமந்தபடி, அங்கிருந்து ஆத்திரத்துடன் வெளியேறிச் சென்றான்.
காரை நோக்கி விஜய்யும் ஆத்மிகாவும் நடந்தார்கள். காரில் ஏறியதும் கார் விடுதியை (Hostels) நோக்கிப் பறந்தது.
காரின் முன்சீட்டில் விஜய்யின் பக்கத்தில் அமர்ந்திருந்த ஆத்மிகா, அமைதியாக வெளியே சென்று கொண்டிருக்கும் இரவுக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே வந்தாள்.
இருவருக்கும் இடையே ஒரு நிசப்தம் நிலவியது.
ஆனால், விஜய்யின் மனதிற்குள் ஒரு மிகப்பெரிய சந்தோஷப் புயல் மையம் கொண்டிருந்தது.
ஆத்மிகாவுக்குத் தெரியாத ஒரு ரகசியம் அவனிடம் இருந்தது!
ஆத்மிகா அறியாமல், வக்கீல் மூலம் தயாரிக்கப்பட்ட அந்த விவாகரத்துப் பத்திரங்களோடு சேர்த்து, விஜய்யும் ஆத்மிகாவும் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொண்டதற்கான 'ரிஜிஸ்டர் மேரேஜ்' ஆவணங்களிலும் அவள் கையெழுத்திட்டிருந்தாள்!
அஃபிஷியலாக ஆத்மிகா இப்போது விஜய்யின் தர்மபத்தினி! அவனது மனைவி!
அந்த அப்யூசிவ் கணவன் சுரேஷிடமிருந்து அவளுக்கு முழு விடுதலை கிடைத்துவிட்டது. இனிமேல் அவள் தனக்கு மட்டுமே சொந்தமானவள் என்ற எண்ணமே விஜய்யின் நெஞ்சில் பேரானந்தத்தைக் கொடுத்தது.
பக்கத்தில் அமர்ந்திருக்கும் தன் மனைவியைப் பெருமையோடும் ஆசையோடும் அவன் அடிக்கடி திரும்பிப் பார்த்தான். ஆனால், இந்த உண்மையை இப்போது அவளிடம் சொல்ல முடியாத ஒரு தவிப்பும் அவனுக்குள் இருந்தது.
ஆத்மிகாவின் முகத்தில் ஒருபுறம் விடுதலை கிடைத்த சந்தோஷம் இருந்தாலும், இன்னொரு புறம் ஒருவிதக் கவலை நிழலாடியது.
சுரேஷ் ஒரு ஆபத்தான விஷப்பாம்பு. ஒருமுறை அடிபட்ட பாம்பு சும்மா இருக்காது; நிச்சயம் பழிவாங்கத் துடிக்கும் என்பது அவளுக்குத் தெரியும்.
அவளது முகத்தில் சந்தோஷமும் கவலையும் மாறி மாறி வருவதைக் கவனித்த விஜய், காரை ஓரங்கட்டி நிறுத்தினான்.
"என்னாச்சு ஆத்மிகா? ஏன் ஒரு மாதிரி இருக்க?" என்று மென்மையான குரலில் விசாரித்தான்.
ஆத்மிகா மெதுவாக அவன்பக்கம் திரும்பி, "நீங்க... நீங்க எனக்குப் பெரிய உதவி பண்ணியிருக்கீங்க விஜய். நான் இந்த ஊருக்கு வந்ததே சுரேஷோட பிரச்சனையோடதான். ஆனா, நான் வந்ததில் இருந்து உங்களால எனக்கு எல்லாமே நல்லதாத்தான் நடந்திருக்கு. இப்போ எனக்கு ரொம்ப ரிலீஃபா இருக்கு... ஆனா, அவன் ஒரு விஷப்பாம்பு . எப்ப வந்து என்ன செய்வானோன்னு நினைச்சாதான் பயமா இருக்கு," என்று தன் மனதிலிருந்த பயத்தைக் கொட்டினாள்.
விஜய் அவளது கண்களை நேராகப் பார்த்தான். "நீ இப்போ வரைக்கும் என்கிட்ட ஒரு விஷயத்தைச் சொல்லிட்டே இருக்க... என்னை முழுசா நம்புறேன்னு சொல்ற, இல்லையா?"
ஆத்மிகா சட்டென்று நிமிர்ந்து பார்த்து, சம்மதமாகத் தலையசைத்தாள்.
"அப்போ நான் சொல்றதைக் கேள். உன்னை நான் பார்த்துப்பேன். எந்தக் கொம்பனாலும் உன்னைத் தொட முடியாது," என்று விஜய் அழுத்தம் திருத்தமாகக் கூறியபோது, ஆத்மிகாவிற்குள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு புதிய உணர்வு அரும்பியது.
அந்த உணர்வு என்னவென்று அவளுக்குப் புரியவில்லை. 'ஒருவேளை விஜய்யின் இந்த அன்பிலும் பாதுகாப்பிலும் மயங்கி, அவன் மீது நமக்கு காதல் வந்துவிடுமோ?' என்ற பயம் அவளைச் சூழ்ந்தது.
ஏனெனில், திவ்யாவின் குடும்பத்தினர், அதாவது விஜய்யின் வீட்டார்களும் ஆத்மிகாவைத் தங்கள் வீட்டு மருமகளாக ஆக்கவே விரும்புகிறார்கள் என்பது அவளுக்குத் தெரியாது.
மாறாக, தான் ஒரு விவாகரத்தான பெண், தன் பின்னணி மோசமானது, அதனால் விஜய் குடும்பத்தினர் தன் மீது விஜய் வைத்திருக்கும் அக்கறையைத் தவறாக நினைத்துத் தன்னை வெறுத்து ஒதுக்கிவிடுவார்களோ என்று அவள் தவறாக எண்ணியிருந்தாள். அதனால் விஜய்யிடமிருந்து தள்ளி நிற்கவே அவள் நினைத்தாள்.
ஆனால், விஜய்யின் பாசமும், அக்கறையும் அவளது எண்ணங்களை உடைத்து, அவளை அவன் பக்கமாக மெல்ல இழுத்துக் கொண்டிருந்தது.
கண்களில் வழியத் துடித்த கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டு, ஆத்மிகா அமைதியாகத் தலையைக் குனிந்து கொண்டாள்.
விஜய்க்கு அவளை அணைத்து ஆறுதல் சொல்ல வேண்டும் போலக் கைகள் துடித்தன. தன் கைகளை உயர்த்தியவன், நிலைமையை உணர்ந்து தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
"பயப்படாதே... நான் இருக்கேன்," என்று மட்டும் கூறிவிட்டு காரை மீண்டும் எடுத்தான்.
விடுதியின் வாசலை அடைந்தபோது, அங்கே அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது!
விடுதியின் காம்பவுண்ட் சுவருக்குள் நுழையும்போதே, விடுதிக் காப்பாளர் ஆத்மிகாவை நோக்கி விரைந்து வந்தார்.
"ஆத்மிகா! உன்கிட்ட கொஞ்சம் பேசணும்," என்றார் கண்டிப்பான குரலில்.
"என்ன ஆச்சு மேடம்?" என்று ஆத்மிகா கேட்க,
"இங்க பாரு ஆத்மிகா... உன்னால இந்த ஹாஸ்டலுக்குத் தினமும் ஏதோ ஒரு பிரச்சனை வருது. புருஷன்னு சொல்லி ஒருத்தன் வந்து வாசல்ல கத்துறான், சண்டை போடுறான். இதனால நம்ம ஹாஸ்டலோட பெயர் கெட்டுப் போகுது. ஹாஸ்டல் ஹெட் ரொம்ப கோபமா இருக்காங்க.
'ஆத்மிகா திரும்ப வந்தா அவளைச் சேர்க்கக் கூடாது, அவ பணத்தைத் திருப்பிக் கொடுத்து அனுப்பிடுங்க'னு சொல்லிட்டாங்க. சோ, நீ உடனே காலி பண்ணியாகணும்!" என்று குண்டைத் தூக்கிப் போட்டார்.
அங்கிருந்த மற்ற விடுதிப் பெண்கள் சிலர், "மேடம், ஆத்மிகா மேல எந்தத் தப்பும் இல்லை மேடம்... அவளுக்கு சப்போர்ட் பண்ணுங்க," என்று பரிந்து பேசினாலும், மேனேஜ்மென்ட் முடிவை மாற்ற முடியாது என்று வார்டன் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
ஆத்மிகா அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். இந்த இரவில் எங்கே போவது என்று புரியாமல் தவித்தாள்.
ஆனால், விஜய்யின் மனதிற்குள் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன! 'அப்பாடா... நல்லவேளை இவங்க இவளை வெளியே அனுப்புனாங்க. இனி தைரியமா இவளை நம்ம வீட்டுக்கே கூட்டிட்டு போயிடலாம்!' என்று உள்ளுக்குள் மகிழ்ச்சியில் துள்ளினான்.
இருப்பினும், வெளியே தன் முகத்தைச் சோகமாக வைத்துக்கொண்டு, "இப்போ என்ன பண்ணப்போற ஆத்மிகா? இந்த ராத்திரில எங்கே போவ?" என்று கேட்டான்.
"நான்... நான் வேற ஏதாவது ஹாஸ்டல் தேடிப் போறேன்," என்று தளர்ந்த குரலில் சொன்னாள் ஆத்மிகா.
"அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை! இந்த நேரத்துல எந்த ஹாஸ்டலும் கிடைக்காது. கொஞ்ச நாளைக்கு நீ எங்க வீட்லயே இரு. அதான் உனக்குப் பாதுகாப்பானது," என்றான் விஜய்.
"ஐயோ... வேண்டாம் ! அது நல்லா இருக்காது. உங்க வீட்டாளுங்க என்ன நினைப்பாங்க? நான் வேற எங்கயாவது..." என்று ஆத்மிகா மறுத்துப் பேச முயன்றாள்.
விஜய் அவளது வார்த்தைகளை இடைமறித்து, அவளது கண்களை ஆழமாகப் பார்த்துச் சொன்னான், "உண்மையாவே என் மேல உனக்குக் கொஞ்சம் கூட மரியாதையும் நம்பிக்கையும் இருந்தா... மறுப்பு பேசாம என் கூட வா ஆத்மிகா!"
விஜய்யின் அந்த அன்பான அதட்டலிலும் உரிமையிலும் ஆத்மிகாவால் மேலும் மறுக்க முடியவில்லை.
வேறு வழியில்லாமல் அமைதியாகத் தலையசைத்து அவனுடன் செல்லச் சம்மதித்தாள்.
இது விஜய்க்கு மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஆத்மிகாவின் உடமைகளை எடுத்துக்கொண்டு, காரில் ஏற்றித் தன் வீட்டை நோக்கிப் பயணமானான்.
விஜய்யின் அந்த வில்லாவில்.
இரவு நேரம் என்பதால் வீட்டில் அமைதி நிலவியது. கார் சத்தம் கேட்டு விஜய்யின் தங்கையும் ஆத்மிகாவின் தோழியுமான திவ்யாவும், அவளது குடும்பம் ஹாலில் தான் அமர்ந்திருந்தார்கள்.
வீட்டின் கதவு திறக்கப்பட்டு, விஜய்யும் அவனுக்குப் பின்னால் லேசான தயக்கத்துடனும் கவலையுடனும் ஆத்மிகாவும் வீட்டிற்குள் அடியெடுத்து வை
ப்பதைப் பார்த்ததும்…
அங்கிருந்த விஜய் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார்கள்!
தொடரும்…
