உயிரே 40

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 233
Thread starter  

40

 

என்னது தாலியை தனக்கு தானே கட்டிக் கொண்டாளா?" என்று ஏக அதிர்ச்சி சுற்றியிருந்த சொந்தங்களுக்கு!!

 

அஸ்திராவுக்கு பின்னால் ஓடிவந்த மருத்துவரும் செவிலியரும் அவளை இழுக்க.. "விடுங்க.. விடுங்க என்னைய.. இப்ப நான் பேசணும். இந்த வலிய விட அந்த வலி பெருசு இல்ல!" என்று நெஞ்சத்தை தொட்டு காட்டி அவர்களை தவிர்த்தாள்.

 

அவளின் இந்த செய்தியில் அங்கிருந்தவர்கள் ஒவ்வொருவரின் மனநிலையும் ஒவ்வொரு மாதிரியாக இருந்தது. ஆச்சரியம்.. அதிர்ச்சி.. சந்தோஷம்.. கோபம் என்று பல உணர்வுகளின் கலவைகளாக அவர்களின் முகங்கள் கலந்து இருந்தது.

 

'அப்போ இவ்வளவு நேரம் நாம தம்கட்டி பேசின அத்தனையும் வீணா ஆபீஸர்!?' என்றபடி பார்த்தார் யோகலட்சுமி.

 

அந்தக் கூட்டத்தில் ஒரு ஓரத்தில் தான் நின்று கொண்டிருந்தார் அஸ்திராவின் அம்மாவும். அம்பலவாணனுக்கும் அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்ததால் என்று மற்றவர் நினைக்க.. ஆனால் உண்மைக் காரணம் அஸ்திராவைப் பார்க்கவே அவர் வந்திருந்தது.

கணவனின் இந்த இழிசெயலை அவரால் தாங்க முடியவில்லை. 

 

புகுந்த வீட்டிற்கு பலக்காரத்தோடு சென்ற அந்த பூங்கொடி அஸ்திரா தாயானதை அனைவருக்கும் தெரிவித்து இனிப்பு கொடுத்தாள். வடிவாம்பாள் சொன்னதை நினைத்து அஸ்திராவின் வீட்டிற்கும் சென்று அவள் இனிப்பு கொடுக்க.. அப்படியொரு‌ சந்தோஷம்‌ அவர் முகத்தில்.. தான் செய்த பெரும் தப்பு தான் மகளை தாக்குகிறது என்று நினைத்தவருக்கு, வீராவுடன் மகள் வாழும் வாழ்வு மலர்ந்து விட்டதை புரிந்து அகமகிழ்ந்து போனார்.

அந்த நேரத்தில் தான் இந்த விஷயம் கேள்விப்பட்டு அனைவரும் மருத்துவமனைக்கு வந்தது.

 

மகளுக்கும் அவள் மகவுக்கும் ஆபத்து இல்லை என்றவுடன் தான் அவருக்கு நிம்மதியே!!

 

ஆனால்.. தன் பெண் கைம்பெண் இல்லையென்று தெரிந்த அந்த நொடி.. அவருள் அப்படியொரு நிம்மதி. இல்லையென்றால் யோகலட்சுமி மாதிரி ஆட்கள் காலம் முழுக்க இந்த ஒரு வார்த்தை சொல்லி சொல்லயே.. அவளது மனதை கொத்தி கிழிப்பார்கள். இன்று அது இல்லை என்று தெரிந்து ஆசுவாசம் அடைந்தாலும், என் மகள் ஏன் இப்படி பொய் சொன்னாள் என்று தெரிந்துகொள்ள அனைவருக்கும் முன் பாய்ந்து வந்தவர் அவளின் இரு தோள்களை பற்றி "ஏண்டி இப்படி பொய் சொன்ன? ஏன் பொய் சொன்ன? இதுனால எவ்வளோ மனக்கஷ்டம் தெரியுமா எனக்கு? உங்க அப்பா கிட்டேயும் பகிர்ந்துக்காம? யாருகிட்டயும் சொல்ல முடியாம.. நான் பட்ட கஷ்டம் எனக்குத்தேன் தெரியும்!" என்று ஆத்திரத்தோடு அழுகையும் அவருக்கு சேர்ந்து வந்தது.

 

ஆனால் அஸ்திரா அமைதியை தத்தெடுத்து இரு கைகளையும் தன் அன்னையிடமிருந்து விடுவித்துக் கொண்டு அவரை அழுத்தமாக பார்த்தவள் "பின்ன.. உன்னைய மாதிரி இருக்க சொல்றியா?" என்றாள். 

 

அதை கேட்டதும் அவர் செய்த குற்றம் அவரை சுட.. அவளை விட்டு விலகி பின்னே இரண்டடி வைத்தார். மகளிடம் இந்த வார்த்தையை கேட்டதால் கண்கள் கண்ணீரை பொழிந்தது.

 

அதற்குள் பெரியம்மா மரகதம் "அஸ்திரா என்ன இருந்தாலும் அம்மாவ…" என்று அவர் மகளை கண்டிக்க முயல.. 

 

"வேணாம் பெரியம்மா.. அவுக செஞ்ச தப்பை நீங்க நியாயப்படுத்தாதீக... எந்த சூழ்நிலை வந்தாலும் மனசுல ஒருத்தன் இருக்கும்போது அவன விட்டுட்டு மத்தவன் கைத்தாலிய ஏற்கிறது தப்பு!! அப்படி ஏத்துக்கிட்டா.. அந்த தாலிக்கு மதிப்பு கொடுத்து அவனோடு ஒழுங்காக குடும்பம் நடத்தியிருக்கனும். இது இரண்டுமே இல்லாம.. இவுக செஞ்சு செயல் தான் இப்ப வரைக்கும் யேன் வாழ்க்கையில பல குளறுபடிக்கு காரணம்!! இவுக ஒழுங்காக இருந்திருந்தா.. யேன் வீரா மீதான யேன் நேசத்தை அவுகக்கிட்ட என்னால தைரியமா சொல்லியிருக்க முடியும். தேவையில்லாம ஒரு சூழ்நிலைக் கைதியாகி இருக்கத் தேவையிருந்திராது" என்று குமுறி அழுதவளை இம்முறை கோதை அணைத்துக்கொண்டாள்.

 

"அன்னைக்கு என்ன நடந்துச்சு புள்ள.. ஏன் அதுக்கு நீயி ஒத்துக்கிட்ட.. இப்பவாச்சும் உண்மைய சொல்லு?" என்று அவளருகே மண்டியிட்டு கேட்ட பெரியப்பா அசோகனை நிமிர்ந்து பார்த்தவள், "பெரியப்பா…" என்ற கதறலோடு அவர் கையைப் பிடித்துக்கொண்டு மீண்டும் கண்ணீரை சொரிந்தாள் காரிகை.

 

"இங்கே பாரு ஆத்தா அஸ்திரா.. நீயி இதுவரைக்கும் வடித்த கண்ணீர் எல்லாம் போதும்! வயித்துப்புள்ளகாரி இப்படி கண்ணீர் வடிக்கிறது உனக்கும் நல்லதில்ல உன் புள்ளைக்கு நல்லதில்ல.. முதல்ல என்ன நடந்ததுச்சுனு பெரியப்பா கிட்ட சொல்லு ஆத்தா.. என்னன்னு எங்களுக்கு புரியாம நான் என்னத்த சொல்றது?" என்று அவர் கேட்க கண்ணைத் துடைத்துக் கொண்டாள் அஸ்திரா.

 

மெல்ல அவளை எழுப்பி அருகில் நாற்காலியில் அமரவைத்து சுற்றியும் சுற்றங்கள் நின்றுகொண்டு அன்றைய நிகழ்வை பற்றி கேட்டன..

 

அஸ்திரா கல்லூரியின் இறுதி ஆண்டில் இருந்த பொழுது.. 

 

இப்பொழுதெல்லாம் அவள் கண்களில் ஒரு கனவு.. நடையில் ஒரு துள்ளல்.. மனதில் எப்பொழுதும் இருக்கும் மன்னவன் என்று தனக்குள்ளாக ஒரு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். அவன் காதல் சொன்ன போது ஏற்காத மனம்.. அதன் பின்னே இந்த இரண்டு வருடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அவனை மறக்க வேண்டும் என்று நினைத்து நினைத்து அவன் நினைவே மனது முழுவதும். 

 

கூடவே.. 'அவேன் யேன் முறை மாமன் தானே.. அவனை காட்டிக்கொள்ள நான் எதற்கு தயங்கனும்?' என்று நினைத்தவளுக்கு அன்னை தந்தையின் திருமண விவகாரம் பற்றி தெரியாது. ஏதோ இரண்டு குடும்பத்துக்கும் தகராறு. அன்னை தந்தையை காதலித்து இங்கே வந்துவிட்டார் என்பது மட்டுமே தெரியும்.

 

ஒருமுறை இவள் தங்கள் தென்னந்தோப்பை மேற்பார்வையிட செல்ல.. அப்போது இரண்டு வயசான கிழவிகள் இவள் செல்வதைப் பார்த்து தங்களுக்குள் பேசிக் கொண்டதை இவை கேட்க நேர்ந்தது.

 

"அஸ்திரா ஆளு அப்படியே அவுக அம்மாவாட்டம் அத்தன அழகு இல்லை பெரியாச்சி.."

 

"ஆளு அழகா இருந்து என்ன புண்ணியம்? சொத்து தேன் இருக்கு. ஆனா அதுக்கு ஏத்த மாதிரி மாப்பிள்ளை கிடைக்கனுமே சின்னாச்சி.."

 

"அவங்க அப்பாவுக்கு இருக்கு இருக்கிற சொத்து பத்துக்கு வந்து அள்ளிக்கிட்டு போயிடுவான் பெரியாச்சி.."

 

"சொத்துக்காக இவள காட்டினால்தான் உண்டு. சொந்தக்காரன் எவனும் இவள காட்ட மாட்டானுக" என்றதும் சுருக்கென்று இருந்தது இதைக்கேட்ட அஸ்திராவிற்கு.

 

"இந்த பொண்ணுக்கு எல்லா விதத்திலேயே பொருத்தமானவனா நம்ம சற்குணபாண்டியன் ஐயா மகன் வீர நெடுமாற பாண்டியன் தேன். என்னதேன் முறை இருந்தாலும்.. இரண்டு பேருக்கும் பொருத்தம் இருந்தாலும்.. இந்த பொண்ண போயி அவக வீட்ல காட்டுவாகளா?" என்று அவள் அன்னை செய்த செயல் அங்கே பேச்சாகி போக கண்களை கட்டிக் கொண்டு வந்தது அவளுக்கு.

 

"அது மட்டுமல்ல உனக்கு இன்னொரு விஷயமும் சொல்றேன் கேளு.. இவர் வளர்த்துக்கிட்டு வராரே சஞ்சயன்.. அவேன் அப்பா அம்மா எப்படி செத்தாகனு நினைக்கிற? எல்லாம் இவ அப்பாவோட கைங்கரியம் தேன். இந்த அஸ்திரா புள்ளையோட அப்பா சொத்த மட்டும் மூட்டை மூட்டையாக சேர்த்து வைக்கல.. இவளுக்கு பாவத்தையும் தான் மூட்டை மூட்டையாய் சேர்த்து வைத்திருக்கிறாரு" என்றதும் அதுவரை இருந்த அவளது துள்ளல் அனைத்தும் வடிந்து போக தன் போல வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

 

அடுத்த வாரத்தில் அவளுக்கு பெரிய இடத்தில் மாப்பிள்ளை பார்த்திருப்பதாகவும் வரும் வெள்ளியன்று அவர்கள் பெண் பார்த்து பூ வைக்க வருவதாகவும் சொன்னவர், மனைவியிடம் அந்த குடும்பத்து அருமை பெருமைகள் எல்லாம் சொன்னார். கிட்டத்தட்ட அம்பலவாணன் வெர்ஷன் டூவாக இருந்தான் அந்த மாப்பிள்ளை.. 

 

அப்பா சொன்ன மாப்பிள்ளையை கட்டிக்கொள்ளவும் அவளால் முடியாது. ஏனென்றால் மனதில் இருப்பதோ வீரா!! அதே நேரம் வீராவிடமும் இவள் சென்று பேச முடியாது. இவள் அன்னை செய்த காரியத்தால்.. இரு கொல்லி எறும்பாக தவித்தாள் அஸ்திரா!!

 

எப்படியும் இக்கிராமத்தில் பெண்ணை கன்னியாகவே வைத்திருக்க விடமாட்டார்கள் ஒன்று கல்யாணம் பண்ணி அனுப்பி விடுவார்கள் இல்லை கன்னி தெய்வமாக போட்டோவில் அடைத்து விடுவார்கள். என்ன செய்வது? என்று குழம்பி இருந்த வேளையில்.. வெள்ளிக்கிழமை துர்க்கைக்கு விளக்கு போவதாக சொல்லி சென்ற அஸ்திராவோடு இணைந்து கொண்டான் சஞ்சயன்.. 

 

இது புதிதல்ல.. இவள் வெளியில் செல்லும்போது இவளுக்கு துணைக்கு வருபவன் தான். இன்று அவள் முகத்தில் இருந்த பொலிவின்மையை கண்டு "என்னாச்சு அஸூ?" என்று கேட்க தன் மனதில் இருந்ததை நண்பனாகிய அவனிடம் பகிர்ந்து கொண்டாள். அவள் நினைத்தது நண்பன் என்று தான்.. அதற்கு அவன் சொன்ன அந்த ஐடியா தான். அவர்கள் திருமணம்!!

 

"எங்க அப்பா அம்மாவும் கலப்புத்திருமணம் தானே.. எனக்கும் யாரும் பொண்ண எல்லாம் சட்டென்று கொடுக்க மாட்டாக. கல்யாணத்துல எனக்கு பெருசா இஷ்டமில்ல.. நீயோ வீராவ லவ் பண்றேனு சொல்ற.. இந்த மாதிரி நாம கல்யாணம் பண்ணிக்கிட்டா நமக்குள்ள நாம தனித்தனியாய் இருக்கலாம். விஷயமும் வெளியே தெரியாது. எப்படி ஐடியா?" என்று அவன் கேட்க, அனுபவமில்லாத வயசு.. ஆட்களை சரியாக எடை போட தெரியாத அஸ்திராவும் சரி என்று சம்மதித்தாள்.

 

துர்க்கை அம்மன் சன்னதியில் விளக்கேற்றினாள். அம்மனின் கழுத்தில் இருந்த தாலியை சஞ்சய் எடுத்து இவள் கழுத்தில் கட்ட வர.. அது என்னவோ அவளுக்கு ஒப்பவில்லை. அவன் கட்ட வரும் போது சட்டென்று தடுத்தவள், "நானே கட்டிக்கிறேன்" என்று அதை வாங்கி தானே கட்டிக்கொண்டாள்.

 

இருவரையும் ஜோடியாக பார்த்த அம்பலவாணன் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்க.. அதற்குள் விஷயம் கேள்விப்பட்டு அசோகனும் வந்துவிட.. தங்கை மகன் தானே என்று அவரும் சஞ்சயன் அஸ்திரா திருமணத்தை ஆதரிக்க.. வேறுவழியின்றி அம்பலவாணன் பொறுமை காத்தார். ஆனால் நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டும் என்று இருவரையும் பிரித்து தான் வைத்தார். அதில் இரண்டு பேருக்குமே பெரிய கவலை இல்லாமல் தங்கள் போக்கில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர்.

 

எப்படியாவது பெண்ணின் மனதை மாற்றி டைவர்ஸ் வாங்கி தான் பார்த்த மாப்பிள்ளைக்கு கட்டி வைத்து விட வேண்டும் என்று பல தில்லுமுல்லுகளை செய்து கொண்டிருந்தார் அம்பலவாணன். அதே நேரமும் பெண்ணிடம் மூளைச்சலவை வேலையும் ஆரம்பித்திருந்தார்.

 

சஞ்சயனும் அஸ்திராவும் ஒன்று நினைக்க.. அம்பலவாணன் ஒன்று நினைக்க.. ஆனால் விதியோ வேறு நினைத்தது!! எமன் ரூபத்தில் வந்து சஞ்சயனின் உயிரை பறித்தது. யாரை மாப்பிள்ளையாக இந்த வீட்டுக்கு வர விடக்கூடாது என்று நிறைய தகடுதித்த வேலைகளை அம்பலவாணன் செய்தாரோ.. அவனே.. அந்த வீராவே அவர் மகள் கழுத்தில் தாலி இறங்கிய முப்பதாம் நாள், தாலிகட்டி மனைவியாக தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டான்.

 

நடந்து முடிந்ததை கேள்விபட்டதும் அனைவர் மனதிலும் மெல்ல ஒரு பாரம் இறங்கிய உணர்வு. என்ன தான் சொந்தம் சிறு பெண்ணாக இருந்தாலும் கைம்பெண் என்று அவர்கள் மனதில் ஒரு எண்ணம் இருந்தது என்னவோ உண்மை!!

 

கிராமம் நகரம் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. பெரும்பான்மையான மக்கள் மனதில் இது உண்டு. வெளிப்படையாக பெண்ணியம் பேசினாலும்.. ஏதோ ஒரு வக்கிரத்தில்.. கோபத்தில்.. ஆத்திரத்தில்.. "ஏற்கனவே ஒருத்தன் கூட வாழ்ந்தவ தான நீ.. இவன் உனக்கு இரண்டாவது தானே!!" என்று அப்பெண்ணின் மானத்தை.. மனத்தை.. ஒழுக்கத்தை குத்திக் கிழிக்காமல் இருப்பதில்லை இந்த மனித மனமும்.. சமூகமும்!!

 

இனி அஸ்திரா விஷயத்தில் அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை என்று அவளது அன்னை முதல் வீராவின் அன்னை வரை சற்று முகம் தெளிவடைந்து அமைதியாக இருந்தனர். 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top