அத்தியாயம் 12
தன் கழுத்தில் ஏறிய தாலியைப் பார்த்தவளுக்கு, மனதில் கணம் ஏறிப் போனது..
“இது தான் என் வாழ்க்கையா?.. முறையில்லா உறவில் தான் வாழப் போகிறோமா?..” என நினைக்கும் பொழுதே அதீத வலியை அனுபவித்தாள் யாதிரா..
எனக்கு இவன் அண்ணன்?.. இவனுடன் மனைவி என்கின்ற பந்தத்தில் இணைந்திருக்கிறேனா?.. என்றவளுக்கு, மனதில் பெரும்பாரம் ஏறிக் கொண்டது..
“என்னடி மூஞ்சியை இப்படி உர்ராங்கொட்டான் மாதிரி வச்சிருக்க?..” என்ற சயந்தனை திரும்பிக் கூட பார்க்கவில்லை..
எரிச்சல், அழுகை, இயலாமை என அனைத்து உணர்வுகளும் கலந்த நிலையில் அமர்ந்திருந்தாள் யாதிரா..
“பார்க்கலைன்னா, போடி..” என்பதை போல் தோளை உலுக்கிக் கொண்டான்..
“குங்குமம் வைங்க தம்பி..” என்றதும், அவளுக்குக் குங்குமம் வைத்து விட்டு, மளுக்கென்ற கண்ணீர் அவள் கண்களில்,
அவளால் இந்த உறவை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..
சொந்த அண்ணனை திருமணம் செய்திருக்கிறாள்.. யாரால் இதை ஏற்றுக் கொள்ள முடியும்?.. கண்ணீர் தான் வந்தது..
அழுகையுடனே திரும்பி தன் வீட்டாரைப் பார்க்க, அவர்களோ எரிமலைக் குழம்பு போல் கொதித்துக் கொண்டிருந்தனர்..
கொதித்து என்ன ப்ரோஜனம், ஒரு அண்டா சோற்றை அள்ளி குழம்பின் மேல் போட்டு விட்டானே பாவிப்பய..
அத்தனை பேரையும் கடத்தி, மிரட்டி, அவன் என்ன நினைத்தானோ அதை நடத்திக் கொண்டானே?..
“எல்லாரும் இருந்து என்னை இந்த அரக்கனிடம், மாட்டிவிட்டு விட்டீர்களே” என கண்ணீர் ததும்ப அவர்களை எல்லாம் பார்த்தாள்..
அவளின் கண்ணீரைக் கண்ட ஒட்டுமொத்த குடும்பமும், அப்படியே திரும்பி கோபத்துடன் சயந்தனை முறைக்க..
“இதுக வேற?. நம்மளை டிஸ்டர்ப் பண்ணுதுங்களே?.. எப்போ பார்த்தாலும் முறைச்சிக்கிட்டு..” என முணுமுணுத்துக் கொண்டே சென்றவனின் பார்வை தன்னருகில் இருந்த இளம் மனைவியை தான் பார்த்தது..
அழகிய வட்ட முகம், அதில் கனிவைத் தாண்டி கவலையே அதிகமாக தெரிந்தது..
“ப்ச்ச்ச. அழகா வேற இருக்காளே?..” என முணுமுணுத்துபடி எழுந்து நின்றவன், தன் கழுத்தில் இருந்த மாலையை சரி செய்து.. வேஷ்டியை சரி செய்துக் கொண்டிருக்க.. ஒட்டுமொத்தக்கூட்டமும் இவனைத் தான் மொய்த்தது..
“விட்டா, நம்மளை சுத்துப் போட்டுருவாங்க.. சிக்கீரம் தப்பிச்சி ஓடிடலாம்..”
“வா பாவை.. நாம சாமி கும்பிட்டு வரலாம்..” என அவள் கைப்பிடிக்க, பட்டென்று அவன் கையை உதறினாள் பெண்ணவள்..
“பார்றா.. என் பொண்டாட்டிக்கு வீரம் எல்லாம் வருது.. வாடிய்ய்ய்..” என அவளின் கையை அழுத்தமாகப் பற்றிக் கொண்டே, இழுக்காத குறையாக அவளை இழுத்துச் சென்றான்..
இருவரும் ப்ரஹாரத்தை சுற்றி வர, மற்றவர்கள் அனைவரும் ஒரு தூணில் அருகே அமர்ந்துக் கொண்டனர்..
மஹாலெட்சுமிக்கோ அழுகையோ அழுகை..
“இப்படியா என் பொண்ணு வாழ்க்கை அமையணும்?.. என் பொண்ணுக்கு நான் எப்படியெல்லாம் கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்பட்டேன்?..” என புலம்பிக் கொண்டே வழியும் கண்ணீரை துடைத்தார்..
“சித்திய்ய்..” என்ற குரலில், வேகமாக எழுந்தவருக்கு ஆத்திரம், ஆத்திரமாக வந்தது..
“எதுக்கு இப்போ அழுதுட்டு இருக்க?..” என கேட்ட சயந்தனை அடித்து துவம்சம் செய்யும் ஆத்திரம் தான் வந்தது..
“ஓஹ்.. இப்போ நான் சந்தோஷத்துல சிரிக்கணுமா?..” என வாய் விட்டு நகைத்தவரைக் கண்டு, அனைவருக்குமே சற்று பயமாகிப் போனது..
அவரின் நடவடிக்கை ஒன்றுக்கொன்று முரண்பட்டதே..
“மஹா..” என அஞ்சலி அவரை அணைக்க,
“பார்த்தீங்களா அக்கா, அவன் என்ன பேசுறான்னு?..” என விசும்பினார் மஹா..
“எல்லாத்தையும் காதுல வாங்கிட்டுத் தானே இருக்கேன்..” என அஞ்சலி தன் மகனின் தோளிலேயே அடித்து விட்டு, மறு நிமிடமே அவர் தான் கையை தேய்த்துக் கொண்டிருந்தார்..
“எதுக்கு டா இப்படி உடம்பை வளர்த்து வச்சிருக்க?..” என சிடுசிடுத்தார் அஞ்சலி..
“நீ உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க ம்மா?.. இப்பவும் அஞ்சு வயசு பையன்னா.. என்னை அடிச்சா, உனக்குத் தான் வலிக்கும்.. மரியாதையா எல்லாரும் முன்னாடிப் போய் பால், பழம் ரெடி பண்ணி வைங்க.. நானும், என் செல்லமும் வேற ஒரு இடத்துக்குப் போயிட்டு வர்றோம்..” என்றவன், மறுக்காமல் ஒரு கையில் ப்ரணவ்வையும், மறுகையில் யாதிராவையும் அழைத்துக் கொண்டுச் சென்றான்..
“ஏங்க.. இவன் எங்கேப் போறான்?..”
“ஹான்.. சுடுகாட்டுக்கு..” என்றார் கெளதம் வேண்டா வெறுப்பாக,
ஆனால் அவர் சொன்னதைப் போல் அவன் சுடுகாட்டுக்குத் தான் வந்து இறங்கியிருந்தான்..
“இறங்கு மாமா..” என்றவனைக் கண்டு திருதிருவென விழித்தார் அவர்..
“இங்கே எதுக்கு டா வந்திருக்கோம்?..” என்ற ப்ரணவ்வின் பார்வை, அங்கு சுற்றியிருந்த சுடுகாட்டை தான் பார்த்திருந்தது..
யாருமே இல்லை.. மதிய வேளை நெருங்கிக் கொண்டிருந்தது..
பகலவன் தன் கதிர்களை வீசிக் கொண்டிருக்க, பார்ப்பவர்களுக்கு பகல் நேரம் கூட சற்று பயமுறுத்தத் தான் செய்தது..
யாதிராவோ பயத்தில் மிரண்டு ப்ரணவ்வைக் கட்டிக் கொண்டாள்..
“மாமா பயமா இருக்கு?..” என்றவளின் பார்வை, அங்கு சுற்றியிருந்த சுடுகாட்டைத் தான் பயத்துடன் ஒரு முறை சுற்றி வந்தது..
“இரு ம்மா.. எனக்கும் பயமா தான் இருக்கு.. இந்த பேப் பய.. எப்போ எதை பண்ணுவான்னு தெரியலையே, கல்யாணம் முடிஞ்சதும் எல்லாரும் கோவிலுக்குப் போவாங்க.. பெரியவங்கக்கிட்ட ஆசீர்வாதம் வாங்குவாங்க.. ஆனா இவன் மட்டும் தான் வித்தியாசமா, சுடுகாட்டுக்கு அழைச்சிட்டு வந்திருக்கான்.. ஒரு வேளை பேய்க்கிட்ட ஆசீர்வாதம் வாங்க வந்திருக்கோமோ?..” என்றவரைக் கண்டு பயப்பார்வை பார்த்தாள் யாதிரா..
“மாமாஆஆ..” என்றவளுக்கு நின்ற கண்ணீர் மீண்டும் வருவதைப் போன்று இருந்தது..
“என்னம்மா?..” என்றார் தயக்கத்துடன்..
இதுவரை யாதிராவுடன் பெரியதாக அவர் பேசியதில்லை.. பேசுவதற்கு நேரமும் கிடைத்ததில்லை.. விசேஷ காலங்களில் பார்ப்பார்.. சிறு சிரிப்பு, சின்ன பேச்சு வார்த்தையுடன் கடந்துச் சென்று விடுவார்..
ஆனால் இன்று தன்னையே துணையாக எண்ணி அணைத்திருக்கும் பெண்ணைக் கண்டு பாவமாகிப் போனது அவருக்கு..
“என்னைக் கொல்லப் போறானா?..” என்றாள் சிறு தயக்கத்துடன்,
திடுக்கிட்டு அவளை திரும்பிப் பார்த்தார் ப்ரணவ்..
“லூசு மாதிரி பேசாதே.. அவன் நீ தான் வேணும்னு கல்யாணம் பண்ணியிருக்கான்.. உன்னைப் போய் கொல்லுவானா?..” என்றார் கடுமையாக..
“ம்ம்.. ஆமா கொல்ல மாட்டான்.. ஆனா சித்திரவதை பண்ணுவான்.. முத்தம் கொடுப்பான்.. கட்டிப்பிடிப்பான்..” என பயத்துடனே முன்னே ஓரெட்டு எடுத்து வைத்தாள்..
“இதை எல்லாம் வேற பண்றானா?..” என்ற ப்ரணவ்விற்கு ஆற்றாமையாக இருந்தது..
அங்கு சயந்தன் கண்மூடி ஒரு கல்லறையின் முன்பாக நின்றிருந்தான்..
சிறு மணிமண்டபம் போன்று கட்டி வைக்கப்பட்டது.. சமீபத்தில் தான் சீரமைத்திருக்கின்றனர் என்பது புரிந்தது..
மல்லிகைப்பூ, ரோஜாப்பூ மாலை என அலங்கரித்து வைத்திருந்தனர் அந்தக் கல்லறையே..
நிர்சலனமான முகத்துடன் நின்றிருந்தான் சயந்தன்..
“யாதிரா..” என்றழைத்தான்..
நிதானமாக அவன் அருகில் வந்து நின்றாள்..
“கும்பிடு..” என அவன் கல்லறையின் முன்பாக இரு கரம் கூப்பி நிற்க, பார்த்துக் கொண்டிருந்த ப்ரணவ்விற்கே சற்று திகைப்பு தான்..
பெற்ற தாய், தந்தை காலில் கூட விழாதவன் இன்று இந்தக் கல்லறையின் முன்பாக வந்து விழுகின்றான்..
இந்தக் கல்லறை யாருடையது?.. என பெரும் வினா எழும்பியது அவருக்குள்..
ஏனோ அவன் குரலில் இருந்த காந்தசக்தியில் ஈர்க்கப்பபட்டு, அவளும் இரு கரம் கூப்பி நின்றாள்..
“உங்களுக்கு கொடுத்த வாக்கை நான் காப்பாத்திட்டேன்..” என மனதோடு பேசிய சயந்தன் மெல்ல விழிகளை திறக்க, அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் யாதிரா..
அவளைப் பார்த்து ஒற்றைக் கண்ணை சிமிட்டிட, சட்டென்று முகத்தை திருப்பிக் கொண்டாள் யாதிரா..
“பொறுக்கி..” என முணுமுணுத்தபடி அங்கிருந்து வேகமாக காரினுள் ஏறியமர்ந்தாள்..
ப்ரணவ் டிரைவர் சீட்டில் அமர்ந்தார்.. சயந்தன் வந்து அமர்ந்ததும் காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்..
“நான் கண்டு பிடிச்சிட்டேன்..” என சந்தோஷமாக கூவினார் அஞ்சலி..
காரில் சென்றுக் கொண்டிருந்தவர்கள் திரும்பி அஞ்சலியைப் பார்த்தனர்.. கெளதமும், அஞ்சலியும் முன்னால் அமர்ந்திருந்தனர்..
சந்தோஷ், மஹாலெட்சுமியை அணைத்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்..
“என்ன கண்டுபிடிச்ச?..” என்றார் கெளதம் சற்று காட்டமாக,
கோவிலில் சயந்தன் நடந்துக் கொண்ட முறை எதுவுமே அவருக்குப் பிடிக்கவில்லை..
அவரின் எரிச்சல், அவர் பேச்சிலேயே தெரிந்தது..
“சயந்தன் நமக்குப் பொறந்த பையனே இல்லை..” என்றதும் க்ரீச்சென்று கார் சாலையில் சறுக்கிப் போய் நின்றது..
“வாட்ட்ட்ட..” என அலறினார் கெளதம்..
“ஆமா, சயந்தன் நமக்குப் பொறக்கலை..” என்ற அஞ்சலியை அனைவரும் தீயாய் முறைக்க ஆரம்பித்தனர்..
“என்னடி உளறிட்டு இருக்க?..” என்றார் கெளதம் சற்று காட்டமாக,
“உளறலைங்க.. நல்லா யோசிச்சுப் பாருங்க.. சயந்தன் நம்ம ரெண்டு பேர் மாதிரியும் இருக்கானா?..”
“இல்லை.. அதுக்கு?..”
“வேற என்ன?.. அவன் நம்மப் பையன் இல்லை.. அந்த உண்மை அவனுக்கு தெரிஞ்சிருக்கு..”
“சரி.. அப்புறம்?..” என்றார் கைகளை கட்டியபடி,
“அந்த உண்மை தெரிஞ்சதும், நம்மளை விட்டு சயந்தன் பிரிய நினைச்சிருக்கான்..”
“சரி..” என்றார் மஹாலெட்சுமி, கண்ணீரைத் துடைத்துக் கொண்டே,
“அவனால நம்மளை விட்டுப் பிரிய முடியலை?..”
“ஏன்..” என்றார் கெளதம், நரநரவென பல்லைக் கடித்தபடி,
“ஏன்னா.. அவன் யாதிராவை லவ் பண்றான்?..”
“அது தான் எல்லாருக்கும் தெரியுமே?..” என்றாள் மஹாலெட்சுமி எரிச்சல் கலந்த குரலில்,
“அதைத்தான் நானும் சொல்லுறேன்.. யாதிராவை அவனுக்குப் பிடிச்சிருக்கு.. அந்தப் பிடித்தம் காதலாவும் மாறியிருக்கு.. அப்போ தான்.. அவன் எங்கப் புள்ள இல்லைங்கிற உண்மை தெரிஞ்சிருக்கு.. அதுனால தான் நாம எல்லாரும் சொன்னதுக்கப்புறமும் கேட்காம யாதிராவை காதலிச்சு, கல்யாணம் பண்ணியிருக்கான்..” என அஞ்சலி சொல்லி முடிக்கவில்லை.
விட்டார் ஒரு அறை கெளதம்.. செவிப்பறை கிழியும் அளவிற்கு..
“பைத்தியக்காரி.. பைத்தியக்காரி.. நீ என்ன சினிமாவுக்கு ஸ்கிரிப்ட் எழுதப் போறீயா?.. நல்லா கதை எழுதிட்டு இருக்க?.. அவன் நமக்குப் பிறந்த பையன் தான் டி.. நான் தான் உன் கூட பிரசவ வார்டு ல நின்னேன்.. எனக்குத் தெரியாது.. எனக்குப் பிறந்த பையன் யாருன்னு..”
“ஆமால்ல..” என்றார் அஞ்சலி, வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே,
“ஆமா தான்.. அவன் நமக்குப் பிறந்தவன் தான்.. கோக்குமாக்கா பொறந்தாலும், அவன் நம்மப் புள்ள தான்.. போதுமா?..”
“அவன் நமக்குப் பிறக்கலைன்னு நினைச்சு ஒரு நிமிஷம் ச்நதோஷப்பட்டேன் தெரியுமா?..” என்றார் அஞ்சலி அழுகையுடன்..
“ஏன்..” என்பதாய் அனைவரும் அவரைப் பார்க்க..
“பின்னே என்ன, என் பையன் அவன் தங்கச்சியைக் கல்யாணம் பண்ணியிருக்கான்னு வெளியே சொல்ல முடியுமா?.. இந்தக் கல்யாணத்தை காதும், காதும் வச்ச மாதிரி நமக்குள்ள முடிச்சிட்டோம்.. இந்த விஷயத்தை வெளியே தெரிஞ்சா, ஊரும், உலகமும் நம்மளைக் காறி துப்பாது..”
“பேசாம யாதிராவை மஹாவுக்குப் பிறக்கலைன்னு சொல்லிடுவோமா?.” என்றார் அஞ்சலி அப்பொழுதும் அடங்காமல்,
“அப்படியும் சொல்ல முடியாது.. ஏன்னா யாதிரா தான் மஹாவை உரிச்சு வச்சிப் பிறந்திருக்காளே.. எங்கே இருந்து சொல்ல முடியும்?.. சொன்னா எல்லாரும் மஹாவை தான் தப்பா பேசுவாங்க.. என்ன பண்றதுன்னே தெரியலையே.. கடவுளே… தலைவலிக்குதே.. இந்தப் பையனை பெத்ததுக்கு பத்து நிமிஷம் தள்ளியே படுத்திருக்கலாம்..”
“நீ அந்த பத்து நிமிஷத்துலேயே குறியா இருடி..” என கெளதம் மெல்லிய குரலில் முணங்கிக் கொண்டே வீட்டின் வாசலில் வந்து இறங்கினார்கள் அனைவரும்..
அங்கு கைகளைக் கட்டியபடி வரவேற்றது என்னவோ சயந்தன், யாதிரா தான்..
அனைவரையும் தீயாய் நின்று முறைத்துக் கொண்டிருந்தான்..
