அத்தியாயம் 3
இல்ல ராகவ்.. நேரமாகாது சீக்கிரம் வந்துருவேன்..” என்றாள் கெஞ்சலாக ரதி.
“ரத்னா அக்கா உன் கூட இருக்காங்களா..?” கேள்வியாய் ராகவ்.
“ஆமா ஆமா ரத்னாவும் என் கூட தான் இருக்கா.. நீ வேணா பேசுறியா? தரட்டுமா?” என்று பவ்யமாய் அவள்.
“ஆனாலும் இதெல்லாம் வேண்டாத வேலைனு தோணுது ரதி. நம்ம கிட்ட தான் படிப்பு இருக்கே.. அது போதாதா?” என்று அவன் ஆரம்பிக்க..
“என்னடா திரும்பவும் அதே சொல்ற? நம்ம அம்மா நமக்காக கஷ்டப்பட்டு வாங்குன வீடு டா இது. எப்படிடா அவங்க கைல தூக்கி கொடுக்க சொல்ற?” என்று அழுகையும் ஆத்திரமாக அவள் கேட்க..
“ரதி உன்னோட மனசு எனக்கு புரியுது. ஆனா பிராக்டிகலா யோசிச்சு பாரு.. அத்தனை பெரிய கார்ப்பரேட் அவனுங்களோடது. நம்மளால போராட முடியுமா?” என்றான் அவளுக்கு புரிய வைத்துவிடும் நோக்கில்..
“அதெல்லாம் முடியும் டா. பெரிய மலைய கூட சிறு உளி தான் பொளக்குது. அதுக்குத்தானே ஒரு பெரிய வக்கீலை பார்க்க வந்திருக்கேன்” என்றாள் கதர்காமன் என்ற பெயரில் கிடைத்த புது தெம்பில்..
“அய்யோ ரதி.. நீ ஒரு வக்கீல் தான் பார்க்க முடியும். ஆனா அவனுங்க? ஒரு லீகல் அட்வைஸ் டீம்ங்குற ஒரு வக்கீல் பட்டாளத்தையே வைச்சிருப்பானுங்க..” என்று ராகவ் சொன்ன வார்த்தை அவளுக்கும் ஏற்புடையதாக தான் இருந்தது.
ஆனாலும்..??
“சரிடா இருக்கட்டும்..! அவனுங்க ஒரு படையே வச்சு இருக்கட்டும். தாராளமா பல வக்கீல்கள் இருக்கட்டும்.. ஆனா எதையுமே போராடி பார்க்காம தோல்விய ஒத்துக்க கூடாது. இவ்வளவு தூரம் நான் போராடினேன்னு ஒரு மன சாந்தியாவது எனக்கு கிடைக்கும்ல” என்று அக்கா சொல்வதை கேட்டதும் தம்பிக்கும் அவளது மனம் முழுவதும் அன்னையின் மீது கொண்ட பாசமும் புரிந்தது.
அதற்காக அன்னையின் மீது அவனுக்கு பாசம் இல்லை என்றோ.. இந்த வீட்டின் மீது பற்று இல்லை என்றோ.. கூறி விட முடியாது.
தந்தையும் விட்டுச் சென்றுவிட்டார். தாயோ இப்பொழுது இந்த உலகிலேயே இல்லை.. அக்காவை காப்பாற்ற வேண்டிய கடமை தனக்கு இருக்கிறது என்று பதின்ம வயதிலேயே புரிந்துக் கொண்டவன், எதிராளியின் பலம் புரிந்து மோதுவதை விட பின்வாங்குவது புத்திசாலித்தனம் என்று முடிவு எடுத்தான்..!
“ஆனாலும் ரதி.. திரும்ப சொல்றேன் கேட்டுக்கோ அவங்க பெரிய பட்டாளத்தையே வச்சிருப்பாங்க. நீ ஒரே ஒரு வக்கீலை நம்பி போற..?” என்று அவன் முடிக்கும் முன்,
“அவ்ளோ பெரிய படையோடு வந்த தி கிரேட் கிரேட் அலெக்சாண்டரை எதிர்த்த இந்திய சிற்றரசன் போரஸ் பத்தி நீ கேள்விப்பட்டதில்லையா?”
“ம்ப்ச் ரதி.. எனக்கு இப்போ ஹிஸ்டரி கிளாஸ் உன்னை எடுக்க சொன்னேனா நானு? ஏதோ பண்ணு.. ஆனா சீக்கிரம் வீடு வந்து சேரு.. இல்ல.. பார்த்துக்கோ..” என்று ராகவ்சந்தர் ஃபோனை கட் செய்ய.. ஒரு பெருமூச்சோடு ஃபோனை பார்த்தவள் ரத்னாவை தேடிச் சென்றாள்.
கதிர்காமனை காண்பதற்காக ஒரு மிகப்பெரிய ஹோட்டலுக்கு ரத்னாவோடு வந்திருந்தாள் ரதி.
பார்த்திவ் ஏற்கனவே இவளை பற்றி சொல்லி இருப்பதாகவும் இன்று இங்கு வரும்போது அப்பாயின்மென்ட் இல்லாமல் அவனை பார்க்க, தான் உதவி செய்வதாய்.. கூறியதால் தான் இவ்விடத்திற்கு ரதியை கூட்டிக்கொண்டு வந்தாள் ரத்னா.
“கதிர்காமன் சாரை சாதாரணமா ஆபீஸ்ல போய் பார்த்து அப்பாயின்மென்ட் வாங்க அவ்வளவு சீக்கிரம் இப்ப முடியாது. பட் இங்கே ஒரு கான்ஃபரன்ஸ்காக வந்து இருக்காரு.. அந்த கான்ஃபரன்ஸ் முடிஞ்ச கேப்ல நாம போய் பார்த்து விடலாம்.. நமக்கும் ரொம்ப டைம் இல்லயில்ல..” என்று ரத்னா கூறிக்கொண்டு செல்ல அவள் பின்னே ஆட்டுக்குட்டி போல தலையாட்டிக் கொண்டு சென்றாள் ரதி.
பெரிய மாளிகை போன்ற அமைப்புடைய அந்த ஹோட்டலோ.. அதன் அழகான அலங்காரங்களோ.. வியக்கும்படியான உள் கட்டமைப்போ.. எதுவுமே ரதியை இப்பொழுது கவரவில்லை..!
அவள் நினைவில் இருப்பதெல்லாம் அந்த ஆயிரம் சதுரடி உள்ள மனைக்கட்டில் இருக்கும் அவர்களது சின்னஞ்சிறிய வீடு மட்டுமே..!!
அது எலி வலையே ஆனாலும் அச்சிறிய வீடு அவள் அன்னையின் அன்பின் வெளிபாடு..!
இத்தனை வருட அன்னை உழைப்பின் மாளிகை..!
அதை தவற விடக்கூடாது.. விடவே கூடாது, மகளாய் அது அவள் கடமை என்று தனியாளாக அதற்காக போராடிக் கொண்டிருக்கிறாள்.
“ஏய் பார்த்திவ் போன் பண்ணுனான்.. இன்னும் கொஞ்ச நேரத்துல மீட்டிங் முடிஞ்சு அவங்க இந்த பக்கம் வருவாங்களாம்” என்று ரத்னா விவரம் சொல்ல,
“ஓகே.. ஓகே..” என்ற ரதி அங்கே ஓரமாக நின்று வருவோர் போவோரை எல்லாம் அவதானித்துக் கொண்டிருந்தாள். அவர்கள் உடைநடை பாவனை உடல் மொழி பேச்சு மொழி அனைத்துமே ஒரு எலைட்டை ஒத்திருந்தது.
“ம்ம்ம்.. இங்க எல்லாம் பெத்த பணக்காரங்க தான்.. ஆனா நாம…” குனிந்து தன்னையும் பார்த்துக் கொண்டாள். காலேஜ் முடிந்து அதே உடையோடு வந்திருந்தாள். ஆனாலும் அவள் போட்டு இருந்த அந்த சுடிதாருக்கு மேலான கருப்பு கோட் அவளை சற்று கம்பீரமாகவே காட்டியது.
எல்லாம் எலைட் குடிமக்கள் ம்ம்.. என்று சிறு நகைப்பு வேறு..!
அங்கே வர போறவர்களை பார்த்ததும் அவளுக்கு சுவாரசியமாகத்தான் இருந்தது.
காத்திருக்கும் நேரத்தில் அவர்களுக்கு எதிர்ப்புறத்தில் வந்த ஒரு ஆண்கள் கூட்டத்தை தான் பார்த்தாள்.
வெளிநாட்டவர்கள் நம்மவர்கள் என்று ஒரு கூட்டமே வந்துக் கொண்டிருந்தது. அவர்கள் நடுவே நடுநாயகமாக அவன்..!
அதிலும் முக்கியமாக அவன்..!
நெடுநெடுவென்ற உயரம்.. கருப்பு சூட்டில் சில வெள்ளைக்காரர்களுடன் கலந்துரையாடியபடி வரும் அவனை மறுபடியும் மனதுக்குள் நிறுத்தி பார்த்தாள்.
“ம்ம்ம்.. நாட் பேட்..! நிஜமாகவே ஆள் அழகன் தான்..! ஆண் அழகன் தான்..!” என்று அவளின் ரசிகை மனம் அவனை ரசித்துக்கொண்டது ரகசியமாக..!
அயல் நாட்டவர்களுக்கு மேலே உயரமும்.. திண்ணிய நெஞ்சமும்.. அகன்ற தோளும் அவர்களையே பொறாமை பட வைக்கும் பொன் பழுப்பு நிறம் கருகருவென்று அலையடிக்கும் கேசம் என மிக கம்பீரமான தோரணை..!!
அதில் அவன் வேகமும்.. கூர் கண்களும்.. அப்பப்பா
கருப்பு சூட்டில் ஒரு கருஞ்சிறுத்தை ஒத்திருந்ததான்
அவனது நடை.. எத்தனை வேகமும் விறுவிறுப்பும்..!!
ஒரு அந்நிய ஆணின் வசீகரத்தை தன்னை மறந்து இப்படி ஆவென்று வாய் பிளந்து பார்ப்போம் என்று இந்த ஹோட்டலுக்கு வருவதற்கு முன்னே சொல்லியிருந்தால்..
சொன்ன அந்த வாயிலேயே இரண்டு போட்டு இருப்பாள் பட் பட் என்று..!
ஆனால் இப்பொழுது அத்தனையும் மறந்து அவனைத்தான் பார்த்திருந்தாள்.. ம்ஹூம் ரசிந்திருந்தாள்..!
அவன் யார் என்று தெரியாது ஆனால் அவனை பார்த்ததுமே தெரிந்தது ஆள் மிகவும் பலமான ஆள் என்று. அந்த பலம் என்பதற்கு பொருள் பணம்..!
இந்த காலத்தில் மிகவும் சத்தியம் வாய்ந்த ஆயுதம் என்னவென்று கேட்டால்…
அணுகுண்டோ.. ஆராய்ச்சி கூடங்களோ.. இயல்பியலை நடுங்க வைக்கும் ஆயுதங்களோ இல்லை..!
அது பணம்.. பணம் தான்..!
அந்த பணம் இல்லாமல் தானே இவளும் இந்த பாடுப்படுகிறாள்.. எங்கேயும் யாராவது உதவ மாட்டார்களா என்று ஓடி ஓடி கலைக்கிறாள்..!
பணம் ஒரு மனிதனுக்கு அதிகாரத்தை பளப்பளப்பை வருகிறது என்பது உண்மை..!
அதிலும் அவனே அப்பணத்தை உழைத்து சம்பாதித்திருந்து அதன் ருசியை அறிந்திருந்தால்.. அது அசாத்திய கவர்ச்சியையும் ஒரு தனி தோரணையையும் ஆளுமையையும் தருகிறது..!
அவனைப் பார்த்தபடி நின்றிருந்தவளுக்கு கண்டிப்பாக இவன் பெரும்புள்ளியாகத்தான் இருப்பான் என்பது ஐயமில்லை.
வெறும் உழைப்பது மட்டுமே வெற்றியாக மாறிவிடாது. அந்த உழைப்பை வெற்றியாக மாற்றத் தெரிந்த தந்திரமும்.. சாணக்கிய அறிவும் தேவை. அவனது ஒவ்வொரு அசைவுகளையும் அது தெரிந்ததை அவள் கண்டாள்.
கண்ணசைவில் அவன் தன் பாதுகாப்பாளர்களுக்கு கொடுக்கும் கட்டளைகளையும் கவனித்தவள் ரசித்தாள்.
“ஏய் ரதி அங்கு என்னடி பாத்துட்டு இருக்க?" ன்று ரத்னா கேட்க
“ஒரு பணம் ஒரு ஆளுக்கு எவ்வளவு மிடுக்கையும் தோரணையும் கொடுப்பது பாரேன். அதுதான் பார்த்துட்டு இருக்கேன்”
“யாரு? இங்கு நிறைய பாலிவுட் ஸ்டார்ஸும் வருவாங்கடி..."
"சேச்சே அவங்களாம் இல்ல. அதோ அந்த கருப்பு சூட்டை போட்டுட்டு வரானே அவன் தான்..
பாரேன் பணம் கொடுக்கும் கவர்ச்சியும் அந்த தோரணையும் வேறு தான் இல்லை.. எப்படி ஃபாரினர்ஸ்ருக்கு ஈகுவல்லா இருக்கான் பாரு.. அதுவும் பாடி லாங்குவேஜை பாரு..." என்று பாராட்டவே செய்தாள் ரதி.
“அது என்ன ஃபாரினருக்கு ஈக்குவலான சொல்ற? ஒரு காலத்துல அவங்களே நம்ம நாட்டுல இருந்து தான் பொன்னையும் பொருளையும் தூக்கிட்டு போய் அவன் நாட்டை வளர்த்தான்” என்று சற்று உதட்டை இகழ்ச்சியாக வளைத்தாள் ரத்னா.
அவள் சொல்வதும் உண்மை தானே? ஆனாலும் இன்றைய காலகட்டத்தில் நாகரீக உலகத்தில் நாம் மேற்கத்திய கலாச்சாரத்தை தான் அதிகம் பின்பற்றுகிறோம் என்கிற நிலையில்.. அவர்களுக்கு நிகராக நம்முடன் ஒருவன் நடந்து வருவதை அவர்களுடன் கலந்துரையாடுவதை ஒரு ரசிப்பு தன்மையோடு பார்த்திருந்தாள் ரதி.
கணை தொடரும்.
