அத்தியாயம் 10
ப்ரணவ் விட்ட அறையில், ஒரு நிமிடம் தான் திகைத்து நின்றான் சயந்தன்..
மறு நிமிடமே கன்னத்தை துடைத்து விட்டு, ‘நீதானே அடிக்கிற.. அடிச்சுக்கோ..” என்பதை போல் மிக சாதாரணமாக கடந்து விட்டான்..
டேபிளில் இருந்த பேக்கை எடுத்துக் கொண்டு வெளியேறிவனைக் கண்டு எரிச்சலாக வந்தது ப்ரணவ்விற்கு..
“போறதை பாரு.. எருமை மாட்டுல மழை பெஞ்ச மாதிரி.. இவனையெல்லாம் பெத்ததுக்கு, பெக்காமலே இருந்திருக்கலாம்..” என வரிசையாக அவனை திட்டித் தீர்த்தவருக்கு, சத்தியமாக சயந்தன் செய்து வரும் எதுவுமே பிடிக்கவில்லை..
சொன்னால் கேட்கும் ரகமா அவன்?.. நிச்சயமாக கேட்கமாட்டான்..
வீட்டிற்குள் நுழைந்த யாதிராவை அனைவரும் புரியாமல் பாரத்தனர்..
“என்னாச்சி யாதுக்குட்டி?.. ஏன் அழுகிற?..” என்றாள் அஞ்சலி..
அவரை நேருக்கு நேராக பார்த்த யாதிராவிற்கு, இன்னும் அழுகை தான் வந்தது..
“என்னம்மா, ஏன் அழுகிற?.. சயந்தனை எங்கேயாவது பார்த்தீயா?..” என்றவரைக் கண்டு ஒரு நிமிடம் திடுக்கிட்டுப் போனாள்..
தன் மகனை விட, தன் மேல் ஒரு படி மேல் பாசம் வைத்திருப்பரைக் கண்டு நெஞ்சம் நெகிழ்ந்து போனது அவளுக்கு..
“நான் உங்க எல்லார்க்கிட்டையும் ஒரு விஷயம் சொல்லணும்..” என்றாள், அங்கிருந்த மகாலெட்சுமியை பார்த்தபடி,
தன் மகள் ஏதோ சொல்ல வருகிறாள் என்பதை போல் மகாலெட்சுமியும் அங்கு நின்றிருந்தார்..
அப்பொழுது தான் வாக்கிங் முடித்து விட்டு வந்திருந்த சந்தோஷூம், கெளதமும்..
“என்னம்மா என்ன விஷயம்?..” என தனக்குப் பின்னால் கேட்ட குரலைக் கண்டு ஒரு நிமிடம் திடுக்கிட்டுப் போனாள் மீனாட்சி..
தன் தந்தையைக் கண்டதுமே ஒரு வித பதட்டத்துடன், பாசமு் சேர்ந்து ஒட்டிக் கொண்டது..
“நாளைக்கு வடபழனி கோவில்ல எனக்கும், சயந்தனுக்கும் கல்யாணம்..” என அனைவர் தலையிலும் இடியை இறக்கினாள் யாதிரா..
“ஏய்ய்ய்.. நீ என்ன லூசா?..” என்றார் அஞ்சலி சீற்றமாக,
“என்னம்மா பண்ணிட்டு வந்திருக்க?..” என ஆற்றாமையில் கேட்டார் கெளதம்..
அதற்கும் அமைதியே யாதிராவிடம்..
“எனக்காகத் தான் இதை பண்றீயா ம்மா?..” என்ற சந்தோஷின் இறங்கிய குரலில், அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை வர ஆரம்பித்தது..
அவளின் அழுகையும், சந்தோஷின் மர்மமான பேச்சும் கெளதமை புருவம் முடிச்சிட வைத்தது..
“என்ன சந்தோஷ் நடக்குது இங்கே?.. உனக்காக யாதிரா என்ன பண்ணா?..”என்ற கெளதமின் முன்பாக சந்தோஷின் தலை தானாக கவிழ்ந்தது..
அவரின் தலைகுனிவு இவருக்குள் ஏதோ செய்தது..
நிச்சயமாக அதில் நல்லதில்லை என்பது மட்டும் புரிந்தது..
“என்ன நடந்ததுன்னு இப்போ சொல்லப் போறீயா இல்லையா டா?..” என்றவரின் அதட்டலில், யாதிரா பயந்து அழ ஆரம்பித்தாள்..
“அது அண்ணா..” என இழுத்தார் சந்தோஷ்..
எப்படி அண்ணாவிடம் சொல்வதென்றே அவருக்குத் தெரியவில்லை.
“சொல்லு டா.. என்ன பிரச்சினை?..” என்றார் கெளதம்..
“அப்பா ஐடி பிரச்சினையில மாட்டியிருக்காங்க..” என்றாள் யாதிரா மெல்லிய குரலில்,
“ஐடி யிலையா?.. என்னடா சொல்லுற?.. நாம தான் சரியா டேக்ஸ் கட்டுறோமே?..”
“இல்லை பெரியப்பா.. நீங்க டேக்ஸ் கட்ட கொடுத்த காசை, அப்பா.. அப்பா..” என ஒரு நிமிடம் திக்கித் திணறியவள், தன் தந்தையை ஏறிட்டுப் பார்க்க..
அவரோ அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தார்..
இதற்கு மேல் மறைக்க முடியாதே?.. சொல்லிவிடு என்பதாய் அவர் தலையசைத்தார்..
“என்ன பண்ணான்னு சொல்லு யாதிரா?..” என உறுமினார் கெளதம்..
“அப்பா வேற ஒரு இன்வெஸ்ட்மெண்ட்ல கொடுத்து ஏமாந்துட்டாரு..” என்ற யாதிராவை புரியாமல் பார்த்தனர் அனைவரும்..
“வேற ஒரு இன்வெஸ்ட்மெண்ட் னா.. எதுல இன்வெஸ்ட் பண்ணின?..” என அழுத்தமாக கேட்ட கெளதமை சந்தோஷ் சிறு தயக்கத்துடன் பார்த்தார்..
மஹாலெட்சுமி, அஞ்சலி இருவருக்குமே அங்கு நடப்பது ஒன்றுமே புரியவில்லை..
“என்ன நடந்ததுன்னு சொல்லு யாதிரா?..” என அதட்டினார் அஞ்சலி..
“சூதாட்டத்துல அப்பா காசை இழந்துட்டார்..” என்றாள் யாதிரா..
மஹாலெட்சுமி உடைந்து விட்டார்..
அஞ்சலிக்கும், கெளதமிற்கும் அப்படியொரு திகைப்பு..
“என்ன சந்தோஷ் இது?.. யாதிரா என்னவெல்லாமோ சொல்லுறா?..” என்ற அண்ணனை ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை சந்தோஷால்..
“என்ன கெளதம் இதெல்லாம்?.. சூதாட்டம் எல்லாம் நம்மளுக்குத் தேவையா?..” என்ற அஞ்சலியை தலைதூக்கிப் பார்க்க முடியவில்லை..
நீண்ட நேரம் அங்கு கனத்த மெளனம் தான் நிலவியது..
யாருக்கும் என்ன பேசுவதென்றே தெரியவில்லை..
சந்தோஷை அப்படியே விடவும் மனமில்லை.. தவறு ஒன்று செய்தாலும், அவனை மன்னிக்கத் தான் அனைவரும் தயாராக இருந்தனர்..
இதுவரை தவறே செய்யாதவன், இன்று செய்திருக்கிறானே, அதனால் தான்
“சரி டா.. ஐடி ல தானே மாட்டியிருக்க?.. நான் காசு கொடுத்து க்ளீயர் பண்ணி விடுறேன்..” என கெளதம் கூறிய பின்பு அமைதியாக அப்படியே நின்றிருந்தார் சந்தோஷ்..
அவரின் அமைதி மேலும் ஏதோ வரப் போகிறது என்பதை தெளிவாகக் கூறியது..
“என்னாச்சி சந்தோஷ்?.. வேற எதை மறைச்சு வச்சிருக்க?..”
“அது.. ஐடி ல காசு கட்டணும்னு, நான் என் ப்ரண்ட் கிட்ட காசு கேட்டேன் கெளதம்.. அவனும் காசு கொடுத்தான்.. அதை நான் ஐடிக்கு அனுப்பி வச்சிட்டேன்..” என்ற பின்பு தான் அனைவருக்கும் மூச்சே வந்தது..
“அதான் காசு கட்டிட்டீயே டா.. அப்புறம் என்ன?..” என்றார் கெளதம்..
“அது தான் பிரச்சினையாகிடுச்சு.. என் ப்ரண்ட் கொடுத்தது கள்ள நோட்டு.. அது எனக்குத் தெரியாம, நான் ஐடீக்கு அனுப்பிட்டேன்..” என்றதும், தலையிலேயே கை வைத்து அமர்ந்து விட்டார் கெளதம்..
“என்னடா பண்ணி வச்சிருக்க?.. ஜெயிலுக்குப் போகலாம்னு முடிவு பண்ணிட்டீயா?.. எவ்வளவு சாதாரணமா சொல்லுற?.. சூதாட்டம் ஆடுனேன்.. காசு தோத்தேன்.. ப்ரண்ட்க்கிட்ட காசு கேட்டேன்.. அவன் கள்ள நோட்டு கொடுத்தான்.. அதை ஐடீக்கு அனுப்பி வச்சேன்னு.. ஓஹ்.. காட்.. அறிவிருக்கா?.. இல்லையா உனக்கு?.. உன்னை இதுல இருந்து யாரு டா காப்பாத்த முடியும்?..” என்ற கெளதமுக்கு ஆற்றாமையாக இருந்தது..
“ஐடிக்கு அனுப்புனா, உடனே உங்களை அரெஸ்ட் பண்ணியிருப்பாங்களே..” என்றார் மஹாலெட்சுமி..
“அதை தடுத்து நிறுத்தியிருக்கிறது சயந்தன் தான்.. அவனோட ப்ரண்ட் கிட்ட சொல்லி, என்னோட கேஸை நகர்த்து வச்சிருக்கான்.. திங்கள் கிழமை என்னோட கேஸை கண்டிப்பா எடுத்துடுவாங்க.. அப்போ நான் கண்டிப்பா மாட்டிப்பேன்..” என்றார் சிறு அழுகையுடனே,
“இப்போ அழுது என்ன ப்ரயோஜனம்.. வா.. நாம உன் ப்ரண்ட்க்கிட்ட பேசலாம்.. அவன் உண்மையைச் சொன்னா போதும், உன்னை எப்படியாவது வெளியே கொண்டு வந்திடுவேன்..” என்றார் கெளதம் தீர்க்கமாக,
“என் ப்ரண்ட் இப்போ, சயந்தன் கைவசம் இருக்கான்?..” என்றதும், அப்படியே அமர்ந்து விட்டார்..
கிராதகன் ஸ்கேட்ச் போட்டு தூக்கி விட்டான் என்பதை அவர் அறிந்துக் கொண்டாரே, வேறு என்ன செய்ய?.. அவருக்கே ஒரு நிமிடம் தலை சுற்றியது..
“இது வேறையா?..” என தலையில் கை வைத்து அமர்ந்து விட்டார் கெளதம்..
“அண்ணா..” என்றழைத்த தம்பியைக் கண்டு கண்கள் கலங்கிப் போனது..
“இப்படி ஏமாந்துப் போயிருக்கீயே டா?..”
“சாரி அண்ணா.. ப்ளீஸ் அண்ணா.. நான் வேணும்னே பண்ணலை?..”
“நாம ஏன் என் தம்பிக்கிட்ட சொல்லக் கூடாது.. அவன் இந்தப் பிரச்சினையைப் பார்த்துப்பான்?..” என்றார் மஹாலெட்சுமி..
“நான் அவன்கிட்ட பேசிட்டேன்..”
“என்ன சொன்னான்?..” என்றார் அஞ்சலி..
“ப்ரண்ட் உண்மையைச் சொன்னா தான், என்னை வெளியேக் கொண்டு வர முடியும்னு சொல்லுறான்?..”
“ப்ரண்ட் தான் இப்போ, அவன் கை வசம் இருக்கானே?..” என்ற மஹாலெட்சுமிக்கு எரிச்சலாக வந்தது..
“யாதிராவைக் கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்லிக் கேட்கிறான்?.”
“அதெல்லாம் முடியாது.. இப்படி ஒரு கேவலாமான உறவை அங்கிகீகரிக்கிறதுக்கு.. நீங்க ஜெயிலுக்குப் போனாலும் பரவாயில்லை..” என்ற மஹாலெட்சுமியைப் பார்த்து திடுக்கிட்டுப் போனார் சந்தோஷ்..
“என்ன மஹா பேசுற?.. நான் ஜெயிலுக்குப் போனா உனக்கு சந்தோஷமா?..” என்றார் கோபமாக,
“நீங்க ஜெயிலுக்குப் போனா எனக்கு சந்தோஷம் கிடையாது.. ஆனா, அதே சமயம் என் பொண்ணை ஒரு முறையில்லாத உறவுக்கு நான் கல்யாணம் பண்ணிக் கொடுக்க மாட்டேன்..” என்றார் ஆணித்தரமாக,
“இங்கே பாரு நான் முதல்ல இந்த கேஸ்ல இருந்து வெளியே வர்றேன்.. இன்னும் யாதிராவுக்கு 18 வயசாகுறதுக்கு 3 மாசம் இருக்கு.. நான் கேஸ்ல இருந்து 1 மாசத்துக்குள்ள வெளியே வந்துட்டா.. அடுத்த நாளே யாதிராவோட கல்யாணத்தையே நாம செல்லாம ஆக்கிடலாம்..” என்றார் சந்தோஷ்..
கெளதமிற்கு இதில் சற்று உடன்பாடில்லை..
“என் பொண்ணு வாழ்க்கை என்ன உங்களுக்கு விளையாட்டா?. இன்னைக்கு கல்யாணம்.. நாளைக்கு டிவோர்ஸ்னு பேசிட்டு இருக்கீங்க?.. நீங்க ஜெயிலுக்குப் போனாலும் எனக்குப் பிரச்சினையில்லை.. ஆனா என்பொண்ணை நான் அவனுக்கு கட்டித் தரமாட்டேன்..” என்றார் மஹாலெட்சுமி..
“இது தான் உன் முடிவா மஹாலெட்சுமி?..”
“கண்டிப்பா இது தான் என் முடிவு..” என்று விட்டு, மஹாலெட்சுமியை தன் அறையை அடைத்துக் கொண்டார்..
சந்தோஷ் கெளதமைப் பார்க்க, “எனக்கு மஹாலெட்சுமி சொல்லுறது தான் சரின்னு படுது.. உன்னோட வாழ்க்கைகாக, யாதிராவை படுகுழியில தள்ள எனக்கு இஷ்டமில்லை..” என கெளதமும், அஞ்சலியும் சென்று விட்டனர்..
தனியாக நின்றது என்னவோ சந்தோஷ் தான்..
என்ன செய்து இதில் இருந்து வெளியே வருவது என்றே தெரியவில்லை..
நெற்றியை நீவிக் கொண்டே அங்கிருந்த சோபாவில் அமர்ந்தார்..
கண்களில் கண்ணீர் அவரையும் அறியாமல் வந்தது..
அவரையே மேல் மாடியில் நின்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் யாதிரா..
தன் தந்தையின் மனவருத்தம் அவளுக்குப் புரியாமல் இல்லை..
அவரின் கண்ணீரைப் பார்த்தவளுக்கு, சயந்தனின் மேல் ஆத்திரம், ஆத்திரமாக வந்தது..
அதை வெளிப்படுத்தத்தான் அவளுக்குத் தெரியாதே..
கண்களில் கண்ணீர் வழிய தன்னறைக்குள் ஓடினாள்..
ஓடியவளின் போன் அடிக்கும் சத்தம் கேட்டது..
வேகமாக திரும்பிப் பார்க்க சயந்தன் தான் அழைத்திருந்தான்..
வேகமாக அதை எடுத்தாள்.. தன் தந்தையை எப்படியாவது காப்பாற்றி விட முடியாதா?.. என்ற வேகம் அவளுக்குள்..
“ஹலோ.. ஹலோ.. நான் பேசுறது கேட்குதா?..” என தவிப்பான குரலில் பேசியவளைக் கண்டு சயந்தன் மகம் சுருங்கியது..
“இவ இப்படி பதறுற ஆளேக் கிடையாதே?..” என நினைத்தபடி,
“நான் ஹலோ சொல்லுறதுக்கு முன்னாடி, நீயா பதறுனா நானா பொறுப்பு?.. ஆமா என்னத்துக்கு இப்படி பதறுறு?.. உன் அப்பன் ஏதும் மண்டையைப் போட்டுட்டானா?..” என்றவனைக் கண்டு விறுவிறுவென வந்தது அவளுக்கு..
“என் அப்பாவை நீங்க காப்பாத்தி விட்டா மட்டம் தான் உங்க தாலி என் கழுத்துல ஏறும். இல்லை..”
“இல்லைன்னா என்னடி பண்ணுவ?..” என்றான் தன் மீசையை முறுக்கியபடி,
“உங்களை ஏதும் பண்ண மாட்டேன்.. நான் உயிரோட இருக்க மாட்டேன்..” என சொல்லி முடிக்கவில்லை.. அந்தப் பக்கம் ஒரே சிரிப்பு..
வாய் விட்டு சிரித்தவனைக் கண்டு பல்லைக் கடித்தாள் யாதிரா..
