அத்தியாயம் 5
நாளை மறுநாள் விடிந்தால் திருமணம் என்ற நிலையில் தான் வேதாந்த் கிருஷ்ணா வீட்டுக்கு வந்து சேர்ந்தான். அதற்குள் மாப்பிள்ளைக்கு தேவையான வேட்டி சட்டையிலிருந்து ரிசப்ஷனுக்கு தேவைப்படும் சூட் வரை அவனது பழைய உடைகளின் அளவு கொடுத்து தைத்து தயார் செய்து விட்டான் கண்ணன்.
ரிசப்ஷன் வேலை அனைத்தையும் ஒரு மேரேஜ் காண்ட்ராக்ட் இடம் கொடுத்து இருக்க.. பெரிதாக வேலை இல்லை இவர்களுக்கு. ரிசப்ஷனும் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தான் நடைபெற இருந்தது!
திருமணம் முடிந்து ஒரு வாரம் கழித்து தான் ரிசப்ஷன் என்பதால் இவர்கள் வீட்டுக்கு அதிக வேலை இல்லை. அதுவும் நண்பர்களுக்கு அனுப்ப என்று அத்தனை பத்திரிகையையும் கிருஷ்காக தயார் செய்து வைத்து விட்டான் கண்ணன்.
இந்த பக்கம் சங்கீதாவும் யசோதாவோடு அதாவது நாராயணனின் மனைவியோடும் அவரது இரண்டாவது மகள் ஸ்ரீ ராதாவோடும் சென்று கல்யாண பட்டு துணை பட்டு ரிசப்ஷனுக்கு என்று துணிக்கடலையே கடைந்து மருமகளுக்கு அழகாக அம்சமாக எடுத்து வந்தார். கூடவே உறவினர்கள் கொடுப்பதற்கும் எடுத்தார்.
மாங்கல்யம் சில நகைகள் என்று எடுக்க.. அனைத்தையும் ஒரே நாளில் ஷாப்பிங் முடித்து விட.. தீனதயாளின் வீட்டு பக்கம் திருமண வேலை ஓரளவு முடிந்து விட்டது.
அதுவும் திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பு சொந்தக்காரர்களுக்கு எல்லாம் மின்னல் வேகத்தில் பத்திரிகை வைத்து விட்டு வந்து விட்டார்.
கூடவே "கிருஷ்ணா ஆன்சைட் வேலையாக வெளிநாடுல இருக்கிறான். இப்போ அவனை கான்டாக்ட் பண்ண முடியாது" என்பதையும் கூடுதல் தகவலாக கூறி 'போட்டுக் கொடுத்திடாதீங்கடா பாடி சோடாகளா!' என்பது போலவே அவன் நண்பர்களிடம் சொல்லிவிட்டு வந்தான் கண்ணன்.
ஆக.. மாப்பிள்ளைக்கு தெரியாமலேயே கல்யாண வேலைகள் ஜரூராக களை கட்டியது தீனதயாளன் வீட்டில்.
கிருஷ்ஷை அழைக்க விமான நிலையத்துக்கு அவர் காரை அனுப்பி வைத்திருக்க.. "எப்பொழுதும் என் காரை தானே டிரைவரோடு அனுப்புவார் தகப்பர்! இது என்ன புதுசா இருக்கு?" என்று யோசித்தபடியே காரில் ஏறியவனின் குழப்பங்கள் வீட்டு முக்குலேயே, வீடு புது பெண்ணை போல பந்தல் அலங்காரங்கள் வண்ண வண்ண விளக்குகளால் அழகாக மின்ன, அதனை கண்டு இன்னும் விரிவடைந்தது.
அதுவும் நம் வீடு தானா என்று அவனே வியக்கும்படி அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு வேளையில் மின்னிக் கொண்டிருந்ததை கண்டவனுக்கு, ‘ஓ மை காட்..! அப்படியும் இருக்குமோ?’ என்று தோன்ற சுறுசுறு கோபத்தோடு உள்ளே நுழைந்தான் வேதாந்த் கிருஷ்ணா.
அவன் கொண்டு வந்த ட்ராலியை ஓரமாக தூக்கி போட்டு கையில் இருந்த லேப்டாப் பேக்கை மட்டும் பத்திரமாக சோபாவில் போட்டவன் "அம்மாஆஆஆஆ…" என்று அந்த வீடே அதிர அலற…
அவன் அன்னையைத் தவிர சொந்த பந்தங்கள் உறவினர்கள் அனைவரும் வந்து எட்டி எட்டிப் பார்த்தனர்.
‘என்னங்கடா எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகைனு பாட்டு போல எல்லாரும் ஒட்டுமொத்தமா வர்றீங்க?’ என்று நினைத்தவன் முகத்தில் அத்தனை திகில்!!
நெருங்கிய உறவுகள் மட்டும்தான் இருந்தனர். மற்றவர்களெல்லாம் கல்யாணத்திற்கு வந்து விடுவதாகவும் சிலர் கல்யாண மண்டபத்தில் முதல் நாள் வந்து தங்கிக் கொள்ளவதாகவும் கூறி இருக்க.. இவனின் சத்தம் மற்றவர்களுக்கு கோபமாக தெரியாமல்..
பல மாதங்களாக அன்னையைப் பிரிந்த பாசப்பிணைப்பாக தெரிய "ஹேய்.. மாப்பிள்ளை வந்துட்டான்!
"தம்பி வந்துட்டாரு.. மச்சான்!"
"என்ன மாப்பிள்ள… எனக்கு மாப்பிள்ளயா வராம போயிட்டீங்களே!" என்று அவனை தூக்கிக் கொண்டனர். கட்டிக்கொண்டனர். வைத்துக் கொண்டாடினர்.
உறவினர்களின் பாசத்தில் சிக்கி முக்கி வெளி வந்தவன் தனலாக
தகித்தான் பெற்றவரிடம்!
அவரிடம் தன் கோபத்தை காட்ட முடியாமல் "அம்மா எங்கே?" என்று அருகில் நின்ற கண்ணனை கண்ணில் கனலுடன் பார்த்து கேட்க…
"அம்மா.. ரூம்ல ரெஸ்ட் எடுத்துட்டு இருக்காங்க கிருஷ்" என்றான் பாவம் போல முகத்தை வைத்து கண்ணன்.
"உங்க ரீலு எல்லாம் அந்து போய் ரொம்ப நேரம் ஆச்சுடா. இரு வந்து வச்சிக்கிறேன் உன்ன” என்று கையிலிருந்த காப்பை ஏற்றியப்படியே உள்ளே நுழைந்தவன், சோகமாக அமர்ந்திருந்த அன்னையை பார்த்தான்.
அதுவும் எப்பொழுது இருக்கும் சேலை இல்லாமல் கொஞ்சம் விலையுயர்ந்த ஜரிகை சேலை கட்டி, உரிய நகைகளையும் போட்டு, முகத்தில் மட்டும் சோகத்தை காட்டி, உடம்பில் ஜொலிப்பை காட்டி அமர்ந்திருந்தவரை கண்டவனுக்கு அனைத்தும் புரிந்து போனது, இவர்களின் நாடகம் இது என்று..
"வாப்பா கிருஷ்ணா…" என்று அன்பொழுக கூறினாலும் அதில் தொணித்த சோர்வை கண்டவன் மெல்ல அருகில் அமர்ந்து அவர் கையைப் பிடித்துக் கொண்டு மேலும் கீழும் அவரை கூர்மையாக பார்த்தான்.
‘என்ன இவேன் என்னைய இப்படி ஜூம் பண்ணி பாக்குறான். சிக்கிடாத சங்கீ.. அப்பால உனக்கு சங்கு தான். உன் மருமவள வச்சே உன் இறுதி யாத்திரைய ஆர்கனைஸ் பண்ணு வச்சிடுவான் போல.. உஷார்..! உஷார்..!’ என்று பலவாறு தன்னை தயார்படுத்திக் கொண்டுதான் மகனை எதிர் நோக்கினார் சங்கீதா.
"வா பா கிருஷூ.. நல்லா இருக்கியா தங்கம்? இந்த பீபி மட்டும் எனக்கு வரலைன்னா…" என்று கண்கள் கலங்கினார். கிளிசரின் இல்லாமலே… அது மகனை வெகு நாட்கள் சென்று பார்த்ததின் தாக்கம்.
அவரைப் பார்த்து முகத்தில் இருக்கும் சோகம் சோர்வு எல்லாம் நடிப்பு என்பதை புரிந்து கொண்டவன், அன்னையின் கண்ணீருக்கு மட்டும் சற்று மனம் இறங்கினான். அவனுக்கு தெரியும் அல்லவா அன்னை கண்ணீர் எப்படி என்று!
“நான் நல்லா இருக்கேன். என்ன நடக்குது இங்க??” என்றான் சுதியை குரலில் ஏற்றி,
"அது.. அது.. ஆஹான். எனக்கு டிபி இல்ல இல்ல பிபி அதிகம் ஆச்சா…" என்று அவர் கதை சொல்ல ஆரம்பிக்க…
"எம்மா.. உங்க ரீல் எல்லாம் அந்து போய் ரொம்ப நேரம் ஆகுது! பட்டுனு விஷயத்துக்கு வாங்க" என்றான் பற்களை கடித்துக் கொண்டே…
"அது.. அது.. வந்து இந்த சால்வை நல்லா இருக்குல்ல.. " என்று தன் மீது போட்டிருந்த சால்வை காட்டி அவர் பேச்சை மாற்ற முயற்சிக்க…
அவரை கூர்மையாக பார்த்தவன் "எனக்கு கல்யாணம் வேண்டாம்னு ஏற்கனவே சொல்லிட்டு போனேன் தானே? எதுக்கு இப்படி ஏற்பாடு பண்ணியிருக்காராம் தகப்பர்?" என்று அவன் கத்த…
"இங்க பாருடா கிருஷூ.. பொண்ண மொத பாரு புடிச்சிருந்தா ஓகே சொல்லலாம்.."
"அப்ப புடிக்கலைன்னா..?" இந்த கல்யாணத்தை நிறுத்தி விடுவீங்களா என்று அர்த்தத்தில் அவன் கேட்க..
"புடிக்கலனாலும் ஓகே பண்ணி தான் ஆகணும்! ஏன்னா நாளன்னைக்கு விடிஞ்சா கல்யாணம்" என்ற குரலில் பக்கென்று திரும்ப அங்கே நின்றிருந்தார் தீனதயாளன்.
தந்தை வந்ததும் அவரை பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டு, கிருஷ் தனது கோபத்தை பதிவு செய்ய..
'நான் உனக்கு அப்பன் டா!' என்று நினைத்தவர் "என்ன நடந்தாலும் இந்த கல்யாணம் நடந்தே தான் ஆகணும். உன்னை இப்படியே விட முடியாது. ஏற்கனவே ரெண்டு தடவ கல்யாண பேச்சு முடிவுல வந்து வந்து தட்டிப் போச்சு.." என்றதும் அமைதியாக அமர்ந்திருந்தான் கிருஷ்.
"அதுக்கு முதல்ல நான் பொண்ணு கிட்ட பேசியே ஆகணும்!" என்றான்.
‘அங்க போய் இவன் என்ன களேபரம் பண்ணி வைக்க போறானோ?' என்று பயத்தோடு கணவனை பார்த்தார் சங்கீதா!
‘அதெல்லாம் பார்த்துக்கலாம் விடு’ என்று கண்ணு செவியில் மனைவிக்கு தைரியம் கொடுத்தவர், “பொண்ண இப்ப நடு இராத்திரியில போய் பார்க்க முடியாது. காலைல எழுந்து பார்க்கலாம். இப்ப வா வந்திருக்கிற உறவுக்காரவுக கிட்ட ஒத்த வார்த்தை பேசிட்டு போய் ரெஸ்ட் எடு” என்றார்.
தகப்பர் தகப்பர் என்று அனைவரிடமும் தீனதயாளனை பற்றி குறை கூறினாலும், அவர் முகத்திற்கு எதிரில் எதுவும் கூற மாட்டான் சட்டென்று கிருஷ்ணா.
ஒரு சில சம்பவத்திற்கு பின் அவரோடு நேரடியாக பேச்சையுமே குறைத்து விட்டான்.
அவன் முன்னே செல்ல கண்ணனிடம் கண்களை காட்டி அவனை பார்த்துக்கோ என்ற தீனதயாளன், மனைவியின் அருகே வந்து “அறிவு இருக்கா டி உனக்கு? அத்தன தடவை கிளாஸ் எடுத்தோம். கடைசில இப்படி சொதப்பி வச்சிருக்க” என்று கடித்துக் கொள்ள..
“நான் என்னங்க பண்றது.. மனப்பாடம் பண்ணி வச்சதெல்லாம் அவேன் கண்ண பார்த்த உடனே மறந்து போயிடுச்சு” என்று அப்பாவியாய் விழித்தவர்,
“ஏங்க.. ஏங்க.. நாளைக்கு அவேன் பொண்ண பார்க்க போறேன்னு சொல்லி இருக்கானே? அங்க போய் ஏதாவது களேபரம் பண்ணினா என்னங்க பண்றது?” என்று பயத்தோடு கேட்டார்.
“அதெல்லாம் பண்ண மாட்டான். அதுக்கு முதல்ல உன் புள்ள காலையில எந்திரிக்கணும். நாளைக்கு ஜெட் லாக்ல இருந்து அவன் எந்திரிக்கவே மதியத்துக்கு மேலாயிடும். அப்படியே அமுக்கி புடிச்சு நலுங்கு அது இதுன்னு சொல்லி இங்கே வைச்சிக்கலாம். விடு எதுவானாலும் பாத்துக்கலாம்’ என்று மனைவிக்கு தைரியப்படுத்தி விட்டு மகனை கண்காணிக்க சென்றார்.
அவனை சூழ்ந்து கொண்ட உறவினர்களிடம் தந்தை சொன்னது போல ஒரு வார்த்தை மட்டும் தான் பேசினான்.
“நல்லா இருக்கேன்!”
“சாப்பிட்டேன்!”
“வேலை ஜாஸ்தி!”
“டயர்ட்டு”
என்றவனை கண்டு, “அடபாவி பயலே.. ஒரு வார்த்தை பேசிட்டு போடா சொன்னா.. ஒரே ஒரு வார்த்தை மட்டும் பேசுறானே கஞ்ச பய மொவன்” என்றவர், தன்னறைக்கு செல்லுபவனை ‘எப்படி வழிக்குக் கொண்டு வரதுனே தெரியலையே?’ என்று விழிப்பிதுங்கினார் தீனதயாளன்
