அத்தியாயம் 4
இருவரையும் முறைத்தபடி இரு கைகளையும் இடுப்பில் வைத்தப்படி மலையேறிவிட்ட காளியாத்தாவாக நின்றிருந்தார் சங்கீதா.
"அச்சச்சோ.. போச்சு.. அப்பா.. அம்மா!"'என்று இவன் தீனதயாளனுக்கு பின்னே பதுங்க…
"அவன வர சொல்லணும்னா அதுக்கு எனக்கு உடம்பு சரி இல்லைனு ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்கேன்னு சொல்வீங்களா? ஏன் உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னு சொல்ல வேண்டியது தானே? வொய் மீ?" என்று சங்கீதா கோபத்தோடு கேட்க…
"என்ன இருந்தாலும் இந்த பசங்க எல்லாம் அம்மா புள்ளங்க சங்கீ.. எனக்குன்னு சொன்னா அந்த ஆளுக்கு என்ன நல்லா தான் இருப்பாரு.. அப்படின்னு பத்தாம் தேதி கல்யாணத்துக்கு அவன் 15ஆம் தேதி தான் வேணும்னே ரெண்டு நாள் எக்ஸ்ட்ரா லீவ் போட்டு ஊரெல்லாம் சுத்தி பார்த்துட்டு வந்து சேருவான்! இதே உனக்குனா.. ரெண்டு நாள் முன்னாடியே வந்துடுவான்! பாத்துக்கிட்டே இரு கல்யாணத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்து சேர்றானா இல்லையான்னு? ஏன்னா அவன் அம்மா புள்ளடி!" என்று மனைவியின் கன்னத்தை தட்டி விட்டு சென்றார் தீனதயாளன்.
மற்ற எல்லாவற்றையும் விட மகனுக்கு தன் மீது பாசம் அதிகம் என்பதே சங்கீதாவுக்கு சாந்தம் கொள்ள போதுமான காரணமாக இருக்க..
அமைதியாக சிரித்துக் கொண்டே அருகில் வந்த கண்ணனோ "மா ரொம்ப சந்தோசப்படாதீங்க! ஊர்ல இருந்து வந்தான்னா உங்களுக்கு தான் முதல் ஆப்பு! அப்பா கிட்ட எல்லாம் அவன் பாச்சா பலிக்காது! நீங்க ஏன் இப்படி செஞ்சீங்கன்னு சொல்லிட்டு உங்களை தான் சுத்த விட போறான்.. பீ கேர்ஃபுல்!" என்று அண்ணனின் நாடியை சரியாக பிடித்தபடி கண்ணன் கூற…
"அட ஆமாமில்ல கண்ணா.. இந்த மனுஷன பாரேன் என்னை கோர்த்து விட்டு அவர் பாட்டுக்கு போயிட்டாரு.. இப்போ இவன்கிட்ட மாட்டிக்கிட்டு நான் என்னடா பண்றது?" என்று அவர் கையை பிசைய..
"மா.. கண்ணன் இருக்க கவலை எதுக்கு? என்னிடம் ஒரு ஐடியா இருக்கு!" என்றான்.
"என்னடா ஐடியா?" என்று அவர் ஆர்வமாக கேட்க..
"நீங்க என்ன பண்றிங்கனா.. அண்ணன் வரும்போது.. அது என்னமோ ஒரு பழைய படத்துல கமல் மேல சால்வை எல்லாம் போட்டுக்கிட்டு வாழ்வே மாயம்னு பாட்டெல்லாம் பாடுவாரே அது என்ன படம் மா??" என்று சந்தேகம் கேட்டான்.
"டேய்.. இப்போ படமாடா முக்கியம்? என்று அவர் கேட்க..
கண்ணனுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. "அதானே படமா முக்கியம்.. நமக்கு இப்போ இங்க காட்சி தான் முக்கியம்! அதே மாதிரி நீங்களும் ஒரு பெரிய சால்வையை வாங்கி மேல போத்திகிட்டு அப்படிக்கா இருக்கிற அந்த சோஃபால இப்படிக்கா சோகமா உட்கார்ந்திருங்க அண்ணன் வரும்போது.. உங்கள பார்த்த உடனே அண்ணனுக்கு வேற எந்த கேள்வியும் மண்டைக்குள்ள ஞாபகமே வரக்கூடாது! அதுக்குள்ள நம்ம அம்மாவுக்கு ஒரு துணை வேணும் அது இதுன்னு சொல்லி அப்படியே தூக்கிட்டு போய் மணமேடையில உட்கார வைத்து விடலாம்!" என்றான்.
"கண்ணா ஐடியா எல்லாம் நல்லா தான்டா இருக்கு ஆனா…"
"என்னமா ஆனா.. ஆவணான்னு…"
"அப்படியெல்லாம் ஏமாற ஏமாளி இல்லையேடா கண்ணா.. உங்க அண்ணா…!"
"பார்றா இந்த ரணகளத்திலும் உங்களுக்கு ரைமிங் கேக்குது?
வேற வழியே இல்ல நான் இன்னைக்கு ஈவினிங் வரும்போது சால்வை வாங்கிட்டு வரேன்! ரெண்டு நாள் அதை போட்டு, அந்த கமல்ஹாசன் பாட்டையும் யூடியூப்பில் ரிப்பீட் மோட்டில் போட்டு, பார்த்து ரீகசல் பண்ணி ரெடியா இருங்க! அண்ணன் வரும்போது பர்பாமென்ஸ் பிச்சிக்கணும்" என்று விட்டு அவன் சென்று விட…
"டேய்.. என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலையே நீங்க எல்லாம்" என்று சங்கீதா தனியாக புலம்பி கொண்டு இருந்தார்.
சொன்னது போலவே அன்று இரவே சால்வை வாங்கிக் கொண்டு வந்திருந்தான் கண்ணன்.
யூடியூப்பில் தேடி அந்தப் பாடலின் லிங்கை அம்மாவிற்கு வாட்ஸ்அப் செய்து "பிராக்டிஸ் பண்ணிட்டே இருங்கமா. கண்ணா.. ஆன் தி வே!" என்று போட்டுவிட, "நீயெல்லாம் பிள்ளையாடா?? கல்யாண வேலை எவ்வளவு இருக்கு? இவன் என்னைய வச்சு கூத்தடிச்சிட்டு இருக்கானே" என்று நொந்து கொண்டார்.
கணவனே இப்படி ஒரு டிராமாவுக்கு துணை போகும் போது.. மகனை கேட்கவும் வேண்டுமா?
“ம்மா இப்படி இல்லம்மா.. கொஞ்சம் சோர்வா.. மூஞ்ச பாவமா வச்சுக்கிட்டு.. அப்பா காசு கொடுத்துட்டு அதை நீங்க காலி ஆகிட்டு, அப்பா கேள்வி கேட்கும் போது அப்பாவை பார்த்து ஒரு லுக்கு விடுவிங்களேமா.. அதே மாதிரி லுக்கு விடுங்கம்மா!" என்றான் அவரின் தத்து புதல்வன்.
'பயபுள்ள கோர்த்து விடுறத பாரு!' என்று மனதுக்குள் திட்டிக் கொண்டவர், "ஏன் டா கண்ணா.. கம்பெனி சீக்ரெட் எல்லாம் வெளியில சொல்ற!" என்று சின்ன மகனின் தலையில் ஒரு கொட்டு வைத்தவர், கணவனை ஓரக்கண்ணால் பார்க்க..
அவரோ 'உன்னை நான் அறிவேன்!' என்று அந்த கால சிவாஜி கணேசன் போல முக பாவனையோடு அமர்ந்திருந்தார்.
"டேய் தம்பி.. கண்ணா.. செல்லம்.. போதும்டா இதோட நாலஞ்சு தடவை ஆச்சு.. இப்படி அப்படி நடந்து சோகமா பர்பாமென்ஸ் எல்லாம் கொடுத்து டயர்ட் ஆயிட்டேன்டா" என்று பாவமாக சங்கீதா பேச..
"அப்படி எல்லாம் உங்கள விட முடியாது. பின்னே யாரு அந்த கிருஷ்கிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறது? கேள்வி கேட்டே சாகடிப்பான்! நீங்க இன்னொரு தடவை பெர்ஃபார்மான்ஸ் பண்ணியே ஆகணும்.. பண்ணுங்க!" என்று கட்டளையிட்டான்.
"இதெல்லாம் நிஜமாலுமே குடும்பம் நடத்துற வீடா? இல்ல பிக் பாஸ் வீடா டா! இப்படி என்னை பெர்ஃபார்ம் பண்ணி.. அதை ரெக்கார்ட் பண்ணி.. அப்பனும் புள்ளையும் வேற செக் பண்ணுறிங்களே!" என்று அழுகாத குறையாக அவர் பேச…
"எத பண்ணாலும் பர்ஃபெக்ட்டா பண்ணனுமா! இப்ப நான் உங்ககிட்ட பார்த்து இந்த எக்ஸ்பிரஷன் சரியில்லைன்னு சொன்னா நான் நல்லாதானடா பண்ணுனேன் சொல்லுவீங்க.. அதான் ரெக்கார்ட் செய்து சாட்சியோடு வச்சிருக்கேன் பாத்தீங்களா?" என்றான் அலைபேசியை கையில் பிடித்து ஆட்டிக் கொண்டே,
"இந்த மாதிரி எக்ஸ்பிரஷன் கொடுக்காதீங்கனு இதை பார்த்து சொன்னா.. அடுத்த டைம் இந்த மாதிரி நீங்களும் கொடுக்க மாட்டீங்க இல்ல.. எப்புடி?" என்று டீசர்ட்டின் காலரை அவன் தூக்கிவிட "சபாஷ் டா மகனே!" என்று தட்டிக் கொடுத்தார் தீனதயாளன்.
அடுத்த முறையும் அவரை இப்படி நட.. அப்படி நடி.. முகத்த இப்படி வை.. கண்ணு அப்படி பாரு.. என்று பாடாய் படுத்தி வைத்து நடிக்க வைத்து அதை போட்டோ வீடியோ என்று ஏகப்பட்ட அலப்பறைகள் செய்து ஒரு வழியாக அவன் முடித்து "இது பர்ஃபெக்ட்டா இருக்குமா! இதே மாதிரி செய்ங்க" என்றதும் அதை வாங்கி பார்த்த தீனதயாளனோ..
"செல்லாது..! செல்லாது..! இதெல்லாம் சொல்லவே செல்லாது..!" என்றார்.
"ஆமா இவரு பெரிய நாட்டாமை விஜயகுமாரு செல்லாதுனு தீர்ப்பு சொல்ல வந்துட்டாரு! போய்யா அங்கிட்டு…! உயிரை கொடுத்து பர்ஃபார்ம் பண்றது நானு.. நாட்டாமையா தீர்ப்பை மட்டும் நீர் சொல்லுவீரோ?" என்று வெகுண்டு எழுந்து விட்டார் சங்கீதா.
"அப்படி இல்ல சங்கீ.. இங்க பாரு இந்த ஆங்கில்ல எல்லாம் ஓகே உன் மூஞ்சி சோகமா இருக்கு. அது பாவமா இருக்கு! உன் கண்ணுல அப்படியே மகன் மேல பாசம் கொட்டுது.. எல்லாம் கரெக்டா இருக்கு! ஆனா ஒன்னே ஒன்னு மிஸ்ஸிங்.." என்று துப்பறியும் சாம்பு போல அவர் சங்கீதாவின் போட்டோவை கண்ணனின் ஃபோனில் ஜூம் செய்து பார்த்து சொல்லிக் கொண்டிருக்க…
அந்த ஃபோனை உத்து உத்து பார்த்துக் கொண்டிருந்த கண்ணனுக்கும் சங்கீதாவுக்கும் என்ன மிஸ் ஆனது என்று புரியவில்லை.
"உனக்கு புரியுதா?" என்று அவர் கேட்க "இல்லை!" என்றான்.
"ஏதாச்சும் புரியுதா அம்மா உங்களுக்கு?" என்று அவன் கேட்க "எனக்கும் புரியலடா மகனே!" என்றார் அவர்.
"அதானே உங்கள மாதிரி டர்ட்டிக்கலாம் அது எப்படி புரியும்? என்ன மாதிரி விசால கண்ணோடு பாருங்க.. நல்லா புரியும்!" என்றவர் "இந்த கண்ணுல அழுக மிஸ்ஸிங்! மகனை பார்த்ததும் பாசமா பார்த்தால் மட்டும் போதாது.. எனக்கு உடம்பு சரியில்லையே.. உன்னை எப்படி பார்த்துக்குவேன்? எப்படி பிடிச்சதை சமைத்துக் கொடுப்பேன்? அப்படின்னு தண்ணி வரணும்! அத பாத்து உன் மகன் அப்படியே நெகிழ்ந்து போகணும்!" என்று அவர் விவரிக்க.. விவரிக்க..
"பாரேன்!! இந்த மனுஷனுக்குள்ளேயும் ஒரு மணிரத்தினம் ஒளிஞ்சிருக்கிறத!" என்று கிண்டல் அடித்தார் சங்கீதா.
"விடுடி.. விடுடி.. எனக்கெல்லாம் இந்த சுய தம்பட்டம் தன்னைத்தானே பெருமையா பேசுகிறது எல்லாம் பிடிக்காது!" என்றவரை பார்த்த கண்ணன், "அப்பா.. உங்கள அம்மா கலாய்க்கிறாங்க! பெருமையா பேசலப்பா" என்று வெடித்து சிரித்தான். மகன் சிரித்ததும் மனைவியை அவர் முறைக்க.. அவரும் வாயை மூடி சிரித்துக்கொண்டார்.
"அப்போ அதுக்கு என்ன வழி?" என்றதும் தன் பாக்கெட்டில் இருந்த ஒரு சின்ன குப்பியை எடுத்து அவர் முன் நீட்டியவர் "இது கிளிசரின் இத லைட்டா இப்படி கண்ணுக்கு மேல தேய்ச்சா கண்ணு செம எரிச்சல் ஆகும்! அப்படியே கண்ணு கலங்கின மாதிரி நீ போஸ் கொடுத்துக்கலாம். சீரியலில் எல்லாம் இத தான யூஸ் பண்றாங்க.." என்றதும் சரி என்று அதை வாங்கி வைத்துக்கொண்டார் சங்கீதா.
"அம்மா இதையும் போட்டு ஒரு பர்பாமென்ஸ் செய்து காட்டுங்க" என்றவனை துரத்தி துரத்தி அடிக்க முயன்று தோற்றவர்,
"இருங்க... ரெண்டு பேருக்கும் நைட்டுக்கு இன்னைக்கு உப்புமா தான்!" என்று தன் பழிவாங்கும் முயற்சியை உப்புமாவில் காட்டச் சென்றார் வீர பெண்மணியாக சங்கீதா.
அன்றிரவு உப்புமா செய்து கொடுத்து கணவன் மகன் இருவரையும் பழிவாங்கி விட்ட திருப்தியில் திணையரிசி கஞ்சியோடு இஞ்சி துவையலை சாப்பிடும் மனைவியை முறைத்தார் தீனதயாளன்.
“அம்மா எனக்கு ஒரு டவுட்.. அண்ணிய ஃபர்ஸ்ட் டைம் பார்த்த உடனே நீங்க கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டீங்க நான் நினைச்சேன்” என்றான் கண்ணன்.
“ஏன் டா கண்ணா?”
“இல்ல.. ஈவண்ட் ஆர்கனைசருனு பேர் வைச்சிக்கிட்டு, எழவு வீட்டுல தானே பார்த்தோம். அதான்…”
“ஹா ஹா.. இப்ப நெனச்சா கூட எனக்கு சிரிப்பு தான்டா வருது. அதுவும் அவ ட்ரஸூம் அவ பேச்சும்.. கண்டிப்பா உனக்கு அந்த மாதிரி பொண்ண உங்க அப்பா பாத்து இருந்தா நான் வேணவே வேணாம்னு தான் சொல்லி இருப்பேன்”
“ஆனா.. உங்க அண்ணன் சரியான வியாக்யானம் பேசுறவன், அவனுக்கு இந்த மாதிரி வீம்பு பிடிச்ச பொண்ணு தான் சரி. மத்தப்படி அவ கருப்பா இருந்தாலும் களையா தான் இருக்கா..! என்கிட்ட போட்டு வாங்கி நாள பின்ன அவள்ட்ட என்னைய போட்டுக் கொடுக்கிற வேலையெல்லாம் ஆகாது டா மகனே..!” என்று சிரிப்புடன் சென்ற அன்னையை கண்டு அவன் வாய் பிளக்க..
“என்ன கண்ணா.. உங்க அம்மாவ புரிஞ்சுக்க முடியலையா?” என்று கேட்டதும் அவன் ஆமாமென தலையசைக்க..
“பொண்ணுங்களையாவது புரிஞ்சிக்கலாம்..! ஆனா பொண்டாட்டிங்கள… ம்ஹூம்.. புரிஞ்சுக்கவே முடியாது. பெட்டர்.. அவ போக்குலேயே போறது” என்ற தந்தையை அவன் குழப்பத்தோடு பார்த்தான்.
“அட போங்கயா.. நீங்களும் உங்க கல்யாணமும்..! நமக்கு சோறு முக்கியம்” என்று உப்புமாவை மொக்கினான்.
நாளை மறுநாள் விடிந்தால் திருமணம் என்ற நிலையில்.. அன்றிரவு வந்திறங்கிய கிருஷ்க்கு அப்போது தான் விஷயமே தெரிவிக்கப்பட்டது!
அவனுக்கு கல்யாணம் என்று!
தொடரும்.
