Share:
Notifications
Clear all

கிஷ்-மீ 3

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 225
Thread starter  

அத்தியாயம் 3

 

ஒப்பாரி பாடல் : தாய், தந்தை, மகன், மகள், கணவன், உற்றார், உறவினர் எவரேனும் இறந்து விட்டால் ஒருவருடைய உள்ளத்தில் எழுகின்ற துன்ப உணர்வே ஒப்பாரியாக வெளிப்படுகிறது.

 

 

“ஏம்மாமா.. உங்களுக்கு தெரியாத எங்க நைனா தான் கிராமத்த மறந்திட்டு நரகத்துல ச்ச.. நகரத்துல வாழ்றோம்ங்கிற மமதைய பேசுறார்னா.. யூ டூ ப்ரூட்டஸ்?? கிராமங்கள வயதானவங்க இறந்திட்டா அவங்களுக்கு ஒப்பாரி பாடல் பாடி அவங்க சாதனைகள வேதனைகளைச் சொல்லிதான் அனுப்பி வைப்பாங்க. ஒப்பாரி பாடல் தமிழ் மக்களின் வாழ்க்கையோடும் அவர்களின் உணர்வோடும் பின்னிப்பினைந்த ஒன்னு. ஆனா அது இப்போ இல்ல..” என்று மாமனுக்கு அவள் விளக்கவுரை ஆற்ற.. தேசிகனோ விளக்கெண்ணெயை வலுக்கட்டாயமாக அவர் வாயில் ஊத்தியது போல திருதிருத்தார். 

 

“இந்த பக்கம் பாரு மாமா..” என்று அவர் தாடையை தன் பக்கம் திருப்பியவள், “ஒரு மனுச கவரவல்ல உணர்ச்சி மிக்க பாடல்கள்னா தாலட்டும், ஒப்பாரி பாடல்களும் தான். தெரியுமா?”

 

“தாலாட்டு ஓகே? ஒப்பாரி கூடவா?” கடனே என்று கேட்டு வைத்தார்.

 

“ஆமா.. மனுசனோட தொடக்க காலத்தில் பாடுறது தாலாட்டு, அதே அவன் வாழ்க்கை முடிச்சு போகையில் பாடுறது ஒப்பாரி. ஃப்ரம் பர்த் டு டெத்!” என்றவள் சிலாகித்து பேச..

 

“இடையில சாப்பாடுனு ஒன்னு இருக்கு? அது தெரியுமா?” என்று‌ கேட்டப்படி வந்தார் யசோதா.

 

“எக்கா.. என்னைய காப்பாத்த வைத்த நாயகியே” என்று கை கூப்பி வணங்கிய தேசிகன் டைனிங் ஹாலை நோக்கி சென்றார்.

 

“என்ன வேடிக்க பார்த்திட்டு நிக்குறவ.. போ.. போய் சாப்பிடு. ஆனா குளிச்சிட்டு சாப்பிடு” என்று தன் வழியை‌ மறைத்து நிற்கும் அன்னையை முறைத்தவள்,

 

“யார கேட்டு கல்யாணத்துக்கு பார்க்குறாரு உம் புருஷன்?”

 

“ஒழுங்கா அப்பான்னு கூப்பிடு.. உம் புருஷனு சொன்ன.. அம்புடுதேன்” என்று எச்சரித்த அன்னையை கண்டு உதடு சுழித்தாள் மீரா.

 

“என்னைய பெத்த என் நைனா…” இன்று இரு கைகளாலும் தன் நெஞ்சில் அடித்துக்காட்டியவள் முறைத்தார் யசோதா.

 

“எதுக்கு.. இப்படி சட்டுனு மாப்பிள்ளை பார்க்குறாராம்?” யசோதா அமைதியாக மகளை பார்த்தபடி நின்று இருந்தார். 

 

“இந்த ராதா எதுவும் காதல் கீதல்னு மாட்டிக்கிட்டாளா அதனால எனக்கு முன்னாடி பாக்கறீங்களா?” என்று யோசித்தவள், “அப்படி எல்லாம் இருக்க வாய்ப்பே இல்லையே.. எனக்கு தெரிஞ்சா நான் ஆட்டைய கலைச்சு விட்ருவேன்னு அவளுக்கு தெரியுமே!” என்றவள் பின்னந்தலையில் ஒரு அடி போட்ட யசோதா,

 

“கண்டதை யோசிக்காம குளிச்சிட்டு வா டி. சாப்பிட்டுட்டு ரெடியா இரு அப்பா வந்துருவாரு” என்று அவளை மிரட்டியபடியே சென்றார்.

 

“வரட்டும்.. வரட்டும்.. அப்படி எந்த கொம்பன் வரான்னு நானும் பார்க்கிறேன்” என்று கைகளை நம்பியார் போலவே கசக்கியபடி குளிக்கச் சென்றாள் மீரா.

 

"சங்கீதாவுக்கு உடல்நிலை சரியில்ல.. சீக்கிரம் வா கிருஷ்ணா" என்று தீனதயாளன் வாய்ஸ் மெசேஜ் மட்டும் அனுப்பி வைத்து விட்டு அமைதியாக இருந்து விட்டார். ஃபோன் போட்டால் மகன் நோண்டி நோண்டி கேள்வி கேட்பான் என்ற அனுபவத்தில்…

 

அதற்கு மேல் மனைவியின் மொபைலை எடுத்து சுவிட்ச் ஆஃப் செய்து தன் பாக்கெட்டில் போட்டு விட்டார். என்ன ஒரு வில்லத்தனம்!

 

ஏனென்றால் இவரது வாய்ஸ் மெசேஜை கேட்டுவிட்டு அடுத்து மகன் அம்மாவுக்கு தான் அழைப்பான் என்று தெரியுமே அவருக்கு! அதேபோல சின்ன மகனையும் உஷார் படுத்தி விட்டார்.

 

"இங்க பாரு கண்ணா.. உங்க அண்ணனுக்கு ஒரு நல்லது நடக்கணும்னா.. நீ கொஞ்ச நேரம் வாயை மூடிக்கிட்டு அப்பா சொல்ற பேச்சை கேட்டு தான் நடக்கணும்! புரியுதா?" என்றதும் அண்ணன் என்பதை காட்டிலும் உயிர் தோழன் போன்றவன் தான் கண்ணனுக்கு கிருஷ், அதனால் "சரிப்பா நீங்க சொன்னபடியே செய்றேன்!" என்று விட்டான் நல்ல பிள்ளையாக.

 

வேலையெல்லாம் முடித்துவிட்டு ப்ராஜெக்ட் டீடைல்ஸை கம்பெனிக்கு அனுப்பி வைக்கும் வேலையில் இருந்தவனுக்கு அப்பாவின் இந்த வாய்ஸ் மெசேஜ் கொஞ்சம் இல்லை கொஞ்சம் நிறையவே அதிர்ச்சி அளித்தது.

 

வேலை முடிவுறும் தருணத்தில் இருக்கும் போது அதிகம் வீட்டுக்கு அதுவும் குறிப்பாக அம்மாவுக்கு தான் பேசாமல் விட்டுவிட்ட தன் மடத்தனத்தை நொந்து கொண்டவன், "எப்படி இருக்காங்கன்னு தெரியலையே? இந்த தகப்பன்ட்ட எப்படி போய் கேட்கிறது? வள்ளு வள்ளுனுல விழுவாரு மனுஷன்!" என்று நெற்றியை பிடித்துக் கொண்டவன் ஆபத்பாந்தவனாக கண்ணனை அழைத்தான்.

 

"டேய் கண்ணா.." என்றதும் அந்த பக்கம் சிறு அமைதி!

 

பின்னே அப்பாவும் அருகில் நின்று கொண்டு ஹெட் போனில் மறுமுனையை அவர் காதில் வைத்து கேட்டுக் கொண்டிருக்கிறார் அல்லவா?

 

அங்கே அவர் டைரக்டர் செய்ய அதுப்படியே வசனம் பேசி நடித்தான் ராகுல் கண்ணன்.

 

"ஹலோ கிருஷ்.. உனக்கு வேலை முடிஞ்சிடுச்சா? ரிப்போர்ட்லாம் சப்மிட் பண்ணிட்டியா?" என்று சுரத்தையே இல்லாத குரலில் அவன் கேட்க..

 

"ஏன்டா டேய்… என் வேலைய பத்தி பேசுறது தான் இப்ப ரொம்ப முக்கியமான விஷயமா? அறிவுகெட்டவனே…!! அம்மாவுக்கு என்னடா ஆச்சு? எதுக்குடா தகப்பர் இப்படி ஒரு வாய்ஸ் மெசேஜ் போட்டு இருக்காரு?" என்றதும் சட்டென்று சிரிப்பு வந்துவிட்டது அவனின் தகப்பரில் கண்ணாவுக்கு!

 

தீனதயாளன் முறைப்பில் வாயை மூடி பேசவில்லை என்பது போல சைகை செய்து தலையாட்டி கொண்டவன் பின்பு சோர்ந்த குரலிலேயே தொடர்ந்தான்.

 

"அம்மாவுக்கு கொஞ்சம் பிபி ஜாஸ்தியா இருந்திருக்கும் போல டா.. என்கிட்ட சொல்லவே இல்ல! அப்பப்போ தலை சுத்துற மாதிரி இருக்குன்னு சொன்னாங்க.. அன்னைக்கு சமையல் கட்டுலயே விழுந்துட்டாங்க. நானும் அப்பாவும் வேற கடைக்கு போயிட்டோமா… எங்களுக்கு தெரியவே இல்ல டா! மத்தியானம் எப்பொழுதும் சாப்பாடு வரும் நேரத்துக்கு அப்பா ஃபோன் பண்ணா அம்மா ஃபோன் அடிச்சுக்கிட்டே இருக்கு.. அம்மா முழிச்சிட்டு இருந்தா தானே ஃபோனை எடுக்க?" என்று அழுகுரலில் அவன் விம்ம அங்கேயோ கிருஷுக்கு மனம் பதறியது.

 

"அப்புறம்.. அப்புறம்..

 என்னடா ஆச்சு? எப்படிடா தெரியும் உங்களுக்கு?" என்று பதறினான்.

 

“அம்மா மயங்கி இருந்தாங்களே அப்புறம் எங்க மதியம் சாப்பாடு சாப்பிட?” என்றவன் தலையில் தீனதயாளன் கொட்டி “ஒழுங்கா பேசு.. இல்ல தொலைச்சிடுவேன்” எச்சரித்தார் மெல்லிய குரலில்.

 

“நான் இங்க கேள்வி கேட்டா அங்க என்னடா பேசுற கண்ணா?” கிருஷ் கத்த..

 

“இரு டா அண்ணா, இங்க ஒரே சத்தமா இருக்கு” என்றவன்,

 

"அப்புறம் நான் தான்டா மதிய சாப்பாடு எடுத்துட்டு வரலாம்னு வீட்டுக்கு வந்தேன். பார்த்த உடனே எனக்கு நெஞ்சுவலியே வந்துருச்சுடா.. உடனே நம்ம சிவராஜ் ஹாஸ்பிடல்ல தான் அட்மிட் பண்ணிட்டு அப்பாவுக்கு ஃபோன் பண்ணினேன். டாக்டர் பாத்துட்டு அம்மாவுக்கு ஹை பிபினு சொல்லிட்டாரு.. ரெண்டு நாளா அம்மா ஹாஸ்பிடல்ல தான் டா இருக்காங்க" என்றான்.

 

"ஏன்டா சின்னவனே.. உடம்பு சரியில்லைன்னு தான டா சொல்ல சொன்னேன்? என்னடா இத்தனை பிட்டெல்லாம் போடுற நீனு?" என்று கிசுகிசுப்பாக கேட்டார் தீனதயாளன் கண்ணனிடம்.

 

"கொஞ்ச நேரம் சும்மா இருங்கப்பா!" என்று அவனும் அதே போல் கிசுகிசுத்து விட்டு.. "சரிடா.. இங்கே டிரிப்ஸ் ஓடிட்டு இருக்கு அம்மாவுக்கு, மருந்து வாங்கணும்னு சிஸ்டர் கூப்பிடுறாங்க! வச்சிட்டுறேன் டா" என்று ஃபோனை வைத்து விட்டான்.

 

"என்ன நடிப்புடா?" என்று தீனதயாளன் கண்ணனின் முதுகில் தட்டி கூற..

 

"பின்ன இப்படி எல்லாம் பேசலைன்னா அவன் இன்னும் என்னை நோண்டி நோண்டி கேள்வி கேட்பான் தெரியுமா உங்களுக்கு?" என்று பேசிட்டு இருக்கும்போது இருவரையும் முறைத்தபடி இரு கைகளையும் இடுப்பில் வைத்தப்படி மலையேறிவிட்ட காளியாத்தாவாக நின்றிருந்தார் சங்கீதா.


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top