இராவணா 28

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 244
Thread starter  

அத்தியாயம் 28

 

“என்ன சொன்ன? என்ன சொன்ன? நான்… நா…நான்.. காரணமா? என்ன‌டி சொல்லுற?” என்று அவள் தோள்களை பற்றி கதிர்நயனன் உலுக்கியதும் தான் உளறியதே பிரக்யாவுக்கு புரிந்தது.

 

“இல்ல.. இல்ல.. நான் ஏதோ தெரியாம உளறிட்டேன்..” என்று இரு கைகளாலும் வாயை பொத்திக் கொண்டவள், பயந்த விழிகளோடு மாமனையும் அம்மம்மாவையும் மாறி மாறி பார்த்தாள். 

 

“பெருவுடையாரே.. இது என்ன சோதனை” என்று நெஞ்சில் கை வைத்து திகைத்து நின்ற அம்மம்மாவை கண்டவளுக்கு மொத்தமும் பதறியது. அதற்கு மேல் தீப்பிழம்பாய் கோபத்தில் முகம் சிவக்க நின்றிருந்தான் கதிர்நயனன்.

 

“ஆத்தாடி ஆத்தா.. பொய் பித்தலாட்டம் பேசுற எத்தனையோ பேரை நானும் பார்த்திருக்கேன் டி அம்மா.. ஆனா உன்னை போல ஒருத்திய பார்த்ததே இல்லடி..! அங்க தொட்டு இங்க தொட்டு என் தம்பி மேல் பழி சொல்ற.. எவனோ ஒருத்தன்ட்ட புள்ள வாங்கிட்டு என் தம்பினு வாய் கூசாம பொய் சொல்றா பாரு?” என்று தாடையில் கைவைத்து அதிசயத்தார் அபிராமி. 

 

அதுவரை உண்மையை எதுக்காகவும் யாருக்காகவும் வெளியே சொல்ல கூடாது என்று அமைதி காத்திருந்த பிரக்யாவின் பொறுமை எல்லாம் முள் பட்ட பலூனாய் வெடித்து சிதற..

 

“ஆமா ஆமா..! உங்க தம்பி தான் காரணம். உங்கள் தம்பி மட்டும் தான் காரணம்” என்று உறுதியாக கூறினாள்.

 

அவளின் இவ்வுறுதி நயனனை அசைத்துப் பார்த்தது. 

 

“சின்னு.. உண்மைய சொல்லு.. நான்.. நான் எப்படி? எப்போ டி?” 

 

‘நான் எப்படி உன்னிடம் தப்பாக நடந்து உன் கற்பை சூறையாடினேன்?’ எப்படி வார்த்தைகளால் கேட்பது என்று தெரியாமல் தவித்தான் அவன்.

 

அவனின் தவிப்பை கண்டவளுக்கு மனம் தாளவில்லை.‌ ஓடிச் சென்று அவனை இறுக்க அணைத்துக் கொண்டாள்.

 

தொட்டதுக்கெல்லாம் சட்டு சட்டு என்று அவளை அணைத்து இறுக்கிக் கொள்ளும் அவன் கைகள் ஏனோ இப்போது எழாமல் தொய்ந்து போய் கிடந்தது.

 

“மாமா.. மாமா.. ப்ளீஸ்.. நீங்க இவ்வளோ உங்கள டென்ஷன் பண்ணிக்காதீங்க. அது நடந்து முடிஞ்சிட்டு தானே? இனி அதை பத்தி நான் பேசமாட்டேன்” என்று அவன் தாடையை பற்றி தன் பக்கம் இழுத்து கூறியவளை கண்டு கனமானது மனம் நயனனுக்கு.

 

“சின்னு..!” என்று பர்வதத்தம்மாள் அவளை அதட்டி “என்ன நடந்துனு உண்மையை சொல்ல போறியா இல்லையா? உன் கர்ப்பத்துக்கு அவன் தான் காரணமா?” என்று கேட்டதும். ஆம் என்று தலையசைத்தாள் அவள்.

 

“ஏன் இவ்வளவு நாளா சொல்லல நீ?” 

 

“மாமாவுக்காக தான் அம்மம்மா..” என்றாள் மெதுவாக, கணவனை ஓரக் கண்களால் பார்த்துக் கொண்டே..

 

“அவனுக்காக நீ பார்க்காத.! இவ்வளவு நாளா உன்னை இந்த ஊரும் உலகமும் கொத்தி தின்னு கூறு போட்டுட்டு தானே இருந்துச்சு.. அப்ப எல்லாம் நீ ஏன் இதை சொல்லவே இல்ல..” என்று வெடித்தார் பர்வதத்தம்மாள்.

 

அம்மம்மா சொன்னதை கேட்டு விரக்தியாக சிரித்தவள், “தப்பே செய்யாமல் பழிய ஏத்து அதுக்கு திட்டி வாங்குறது எனக்கு ஒன்னும் புதுசு இல்லையே அம்மம்மா..” என்று நலிந்த குரலில் கண்கள் கலங்க கூறியவளை கண்டு கதிர்நயனனுக்கும் பர்வதத்தம்மாளுக்கும் இதயம் நொறுங்கியது. 

 

“சின்ன வயசுல இருந்தே எனக்கு பழகிப்போன ஒன்னு.. ஆனா.. மாமா பாவம் இல்லையா? அவர் தெரிஞ்சு தப்பு செய்யலையே..! அப்புறம் எதுக்காக அவர் மேல பழிய போட்டு அவரை ஊர் உலகத்துக்கு முன்ன தல குனிய வைக்கணும்னு நினைச்சேன், ஆனா இந்த குழந்தைக்கு அப்பான்னு வேற ஒருத்தரை கை நீட்டவும் எனக்கு பிடிக்கல. அதான் யாருன்னு தெரியலன்னு சொல்லிட்டேன்” என்றாள்.

 

பிரக்யாவின் கையை பிடித்து தன் புறம் திருப்பி “எங்க? எப்போ?” என்று குரலே வெளியே வராமல் கேட்டான் அவன். 

 

“அது.. அது.. உங்க நிச்சயதார்த்தம் முடிஞ்சு, நைட்டு பிரண்ட்ஸ்க்கு பார்ட்டி கொடுத்துட்டு நீங்க வந்தீங்க இல்ல.. அப்போ.. அன்னைக்கு தான்..” என்றாள் அவன் முகத்தை நிமிர்ந்து பாராமலே..

 

“ஆனா அன்னைக்கு நீ ஆதி எல்லாம் ஒன்னா தானே தூங்குற மாதிரி ஏற்பாடு பண்ணி இருந்தது?” என்று பர்வதத்தம்மாள் கேட்க..

 

“ஆமா அம்மம்மா.. நானும் ஆதிராவும் ஒரே ரூம்ல தங்கலாம்னு தான் இருந்தோம். ஆனா சித்தி வந்து அவளை அவங்க கூட கூட்டிட்டு போய்ட்டாங்க..” என்றதும் அபிராமியை அவர் முறைத்துப் பார்க்க, 

 

“என்னை ஏன் முறைச்சு பார்க்குறீங்க? தெரியாத ஏதோ ஒரு ஹோட்டல்ல எவளோ ஒருத்தி கூட என் பொண்ணை நான் தங்க வைக்க முடியுமா? அதான் என் கூட அழைச்சிட்டு போயிட்டேன்” என்றார். 

 

‘அன்று மட்டும் ஆதி இவளோடு தங்கி இருந்தால் அந்த விபரீதம் நடந்திருக்கவே.. நடந்திருக்காதே..!’ என்று கண்களை மூடி கைமுஷ்டியை இறுக்கிக் கொண்டான் கதிர்நயனன்.

 

“எனக்கு அன்னைக்கு அதுக்கப்புறம் இங்க இருக்க முடியல. உங்கள பார்த்தா அழுதுருவேன்னு தோணுச்சு. அதான் உடனே ஹாஸ்டலுக்கு கிளம்பி போயிட்டேன். அங்கேயும் போய் எனக்கு நான் பிரக்னன்ட் ஆனது சரியாவே தெரியல.. எனக்கு பீரியட்ஸ் இர்ரெகுலரா தானே இருக்கும். ப்ரெக்னென்ட் ஆனது 4 மந்த்ஸ்க்கு அப்புறம் தான் தெரிஞ்சுச்சு.. அதை நினைச்சு நினைச்சு சரியா சாப்பிட முடியல.. அதனால தான் அன்னைக்கு மயக்கம் போட்டு விழுந்தேன். அதுக்கப்புறம் தான் உங்களுக்கு ஃபோன் பண்ணி சொன்னாங்க” என்று அன்று நடந்ததை விவரித்தாள்.

 

“என்னே கட்டுக்கதை.. என்ன ஏற்ற இரக்கமான வசனம்.. என்ன திரைக்கதை.. என்ன உணர்ச்சிவசமான நடிப்பு? அற்புதம்.. அற்புதம்..!” என்று அபிராமி கைத்தட்ட..

 

இரண்டே எட்டில் அக்காவை நெருங்கியவன் அவள் கழுத்தில் கை வைத்து குரல்வளையை நெறித்து “உஷ்..! ஒரு வார்த்தை உன் வாயிலிருந்து இனி வரக்கூடாது..! என்னை பத்தியும் என் குடும்பத்தை பத்தியும்..!” என்று கண்கள் சிவக்க மிரட்டினான்.

 

“ஏலேய் ராசா விடுடா அவளை.. செத்து கித்து போய்ட போறா.. அந்த வீணான போன நாய கொன்னுட்டு நீ ஜெயிலுக்கு எதுவும் போயிடாத” என்ற அம்மாவையும் தன் குரல்வளையை நெறிக்கும் தம்பியை அவர் நம்ப முடியாமல் அதிர்ந்து பார்க்க..

 

“ச்சீ.. நீயெல்லாம் ஒரு பொம்பள.. மனுசபிறவி” என்று அபிராமியை கீழே தள்ளி விட்டவன் ரவீந்திரனுக்கு அழைத்து உடனே அபிராமியை வந்து அழைத்துப் போக சொன்னான். 

 

அடுத்த பத்தாவது இடம் ரவீந்திரனும் வந்து “நயனா விஷயம் தெரியுமா உனக்கு?” என்று அவர் ஆதியை பற்றி கூற வர..

 

“இங்க பாருங்க ஏற்கனவே அந்த பையன் குடும்பத்தை எனக்கு தெரியும். நான் அவங்க கிட்ட பேசுறேன். நீங்க முதல்ல உங்க பொண்டாட்டியை கூட்டிட்டு போங்க இனி இந்த வீட்டு பக்கம் இவ வரக்கூடாது” என்றவனின் கடுமையில் அவர் திகைத்து விழிக்க..

 

“என்னாச்சு? என்னாச்சு நயனா?” அவர் தவிக்க..

 

“உங்க வீட்ல எது நடந்தாலும் அதுக்கு என் பொண்டாட்டி தான் காரணம்னு இங்கே வந்து குதிக்கிறா.. அதான் இனி உங்க வீடு வேற எங்க வீடு வேற.. அவளை கூட்டிட்டு போங்க” என்று நடந்ததை அவன் சுருக்கமாக கூற..

 

“உனக்கேன் அபிராமி இப்படி புத்தி போகுது?” என்று தம்பி தன் கழுத்தை நெறித்ததை இன்னும் நம்ப முடியாமல் அதிர்ச்சியில் இருந்தவரின் கையை பிடித்து இழுத்துச் சென்றார் ரவீந்திரன். 

 

சூறாவளி அடித்து துவைத்து சென்றது போல் இருந்தது அவ்விடம்.

 

அமைதி என்னும் பேரரலை பேரிரைச்சலாய் அங்கே ஆட்சி செய்ய…

 

“யய்யா.. சின்னுவை அழைச்சிட்டு நீ போ” என்று பர்வதத்தம்மாள் கூற..

 

இனி எந்த தகுதியில் அவளை தொடுவேன்? என்ன யோக்கியதம் இருக்கிறது எனக்கு அவளை தொட?

எவ்வளவு பெரிய ஈன செயலை அவளுக்கு நான் செய்திருக்கிறேன்? அதை கொஞ்சம் கூட மற்றவர்களுக்கு காட்டாமல் எப்படி இவளால் நான் செய்ததை மறைத்து பலியை அவள் ஏற்றுக்கொள்ள முடிந்தது? என்னால முடியலையே.. சின்னு.. சின்னு.. இவ்ளோ பெரிய துரோகத்தை உனக்கு நான் செய்திருக்கிறேன்.. எனக்கு பாவ மன்னிப்பு கொடுப்பாயா? என்று மனதோடு அவன் மல்லு கட்டிக் கொண்டிருக்க..

 

அவன் அகம் புரிந்தவள் “வாங்க மாமா” என்று இவளே அவன் கைப்பிடித்து அழைத்துச் செல்ல பாவையின் பின்னே பதுமை போல சென்றான் அவன்.

 

அங்கே அறையில் அமர்ந்து எங்கோ வெறுத்திருந்தவனை தன் பக்கம் திருப்பி “ஃப்ரீயா விடுங்க மாமா. நீங்க தெரிஞ்சு எப்போதும் எனக்கு எந்த துரோகமும் பண்ணல.. அப்புறம் ஏன் இப்படி மூஞ்சிய வச்சிட்டு இருக்கீங்க பார்க்கவே சகிக்கல..” என்று அவள் சிரிக்க..

 

சட்டென்று அவளை இழுத்து இறுக்கி அணைத்தவனின் உடல் அழுகையில் குலுங்கியது. மெல்ல அவனது முதுகை வருடிக் கொண்டே இருந்தாள் அவள்.

 

ஆனாலும் அவனது மெல்லிய அழுகை ஓயவேயில்லை..!

 

தன் கண்ணீரால் அவளின் உடையை ஈரமாக்கி தன் பாவத்தை போக்க எத்தனித்தான் போல..

 

“அய்யே.. மாமா.. இதென்ன என் டிரஸ் எல்லாம் ஈரமாக்குறீங்க.. நகருங்க நகருங்க..” என்று அவள் அவனை விளையாட்டாய் தள்ள.. 

 

தன் அழுகையை நிறுத்த அவள் செய்வதை கண்டவன் உள்ளம் இன்னும் அவள் பால் உருகிற்று. அவன் மேலே கோபமும் பெருகிற்று..! அழுகையும் பெருகிற்று..!

 

“அச்சோ.. என்ன இன்னும் ஈரம் அதிகம் ஆகுது. ஈர கறை போகாது வேற.. ஹே க்ரையிங் பேபி ஸ்டாப் ஸ்டாப்..!” என்று அவள் கிண்டல் செய்ய..

 

நன்றாக அவளது உடையிலேயே அவனது முகத்தை துடைத்தவன், “இன்னும் ஈரமாகட்டும். கறையாகட்டும்..” என்று மீண்டும் மீண்டும் அவன் அவள் உடையிலேயே மார்பிலே முகத்தை துடைத்தான். 

 

அவள் சரிந்து அம்மெத்தையிலே படுத்து, “ஹா.. ஹா.. மாமா.. கூசுது மாமா..” என்றவள் கலகலவென்று சிரிக்க..

 

சிரிக்கும் அவளது அழகினை கண்களால் சிறையெடுத்தான் மாதவன்.

 

அவன் முகம் தெளியவில்லை.. கண்களில் பழைய குறும்புத்தனம் இல்லை.. ஆனால் அன்போ எல்லையில்லாமல் இருந்தது. 

 

அவன் பழைய மாமனாய் இல்லை என்பதை புரிந்தாள். இல்லையென்றால் இந்நேரம் சிரிக்கும் அவளது இதழை சிறையெடுத்து இருப்பானே..!

 

“மாமா ப்ளீஸ்..‌ இது போல இருக்காதீங்க. எல்லாம் கடந்து வந்தாச்சு.. அதை பத்தி இனி நினைக்கவே வேணாம்” என்று அவள் அவனை ஆற்றுப்படுத்த முனைய..

 

“இல்ல சின்னு.. என்னால முடியல.. அந்நேரம் நீ எவ்வளவு துடிச்சு இருப்ப.. போதையில பண்ணாலும் தப்பு தப்பு தானே..! சாரி டி சின்னு.. சாரி.. சாரி.. வெரி சாரி.. டி” என்றவன் அவளது பாதங்களை தன் மடியில் எடுத்து வைத்து தன் தலையை அதில் புதைத்து, “மன்னிச்சிடு உமையா இந்த மாமனை.. சத்தியமா தெரிஞ்சு நான் எதுவும் பண்ணல டி” என்று கதறினான்.

 

“அச்சச்சோ மாமா.. என்ன பண்றீங்க.. விடுங்க மாமா.. விடுங்க” என்று தன் பாதங்களை எடுத்துக் கொண்டவள்,

 

“எனக்கு உங்கள தெரியாதா மாமா? என் கிட்ட நீங்க தப்பா நடக்கணும்னு நினைச்சிருந்தா நம்ம வீட்டிலேயே ஏகப்பட்ட சந்தர்ப்பங்கள் கிடைச்சு இருக்குமே? இதே மாடியில தானே என்னோட ரூமும் இருக்கு. பல நாள் நான் ரூம் லாக் பண்ணாம தான் தூங்குவேன் நீங்க இருக்குற நம்பிக்கையில.. தைரியத்துல” என்று அவள் முடிக்கும் முன்..

 

“அந்த நம்பிக்கைய சுக்கு நூறா உடைச்சிட்டேனே சின்னு.. உடைச்சிட்டேனே..!” என்று அவன் மீண்டும் வருந்தி புலம்ப..

 

“என்ன மாமா.. நான் எப்படி பால் போட்டாலும் அவுட் ஆவேன்னே விளையாடுவீங்களா..?” என்று அவனை பரிதாபமாக பார்த்தாள்.

 

அவனோ அவளை கண்டு விரக்தியாக புன்னகைக்க..

 

“அது.. அது.. அன்னைக்கு உன்னை நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா?” என்று மென் குரலில் அவன் கேட்க..

 

“மாமா.. மாமா.. மாமா..!” என்றவள் அவன் நெற்றி முட்டி அப்படியே இருக்க..

 

“சின்னு.. நானு.. ரொம்ப மோசம் இல்ல…” என்று‌ அவன் மீண்டும் அடுத்த அழுகைக்கு தயாராக.. அவளோ ஆளுகைக்கு தயாராகி..

 

“இந்த அழுமூஞ்சி மாமா எனக்கு வேணாம்.. எனக்கு என்னை சீண்டி விளையாடுற என் பழைய மாமா தான் வேணும்” என்று அவனின் இதழ்களை தன் தளிர் இதழ்களால் சிறையெடுத்தாள் பெண்..!

 

இந்த காதலில் மட்டும்

காதலிப்பதை விட..

காதலிக்கப்படுவது 

ஒரு சுகம்..!!

 

 

ஏன் உச்சக்கட்ட போதை என்று கூட சொல்லலாம்..!!

 

அந்த சுகத்தை போதையை தந்தவளின் மீது அபரிமிதமான காதல் பொங்கியது கதிர்நயனனுக்கு..!

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top