இராவணா 27

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 244
Thread starter  

அத்தியாயம் 27

 

 

மாடியில் இருந்த பால்கனியின் அருகே சாய்வு நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடி கைகளை கண்களுக்கு மேல் வைத்திருந்த கதிர்நயனனுக்குள் ஏகப்பட்ட யோசனைகள் தீராத அலைகளாய் அலைமோதிக் கொண்டிருந்தது.

 

தற்போது மனைவியின் மன மாற்றம் அவனுக்கே வியக்க வைப்பதாய்..!

 

இருவரும் விருப்புடன் காதலுடன் வாழும் நாட்கள் வெகு தூரம் இல்லை என்று மனது இன்பகீதம் பாடியது. அதில் குறுநகை அவன் முகத்தில்..

 

மனைவியை நினைத்த மாத்திரத்தில் ஆதிராவும் ஆர்யனும் நினைவில் வந்தார்கள்.

 

அதுவும் முதல் நாள் தான் ஆர்யன் இவனை பார்க்க தஞ்சாவூருக்கு அடுத்து உள்ள அவனின் என்டர்டைன்மென்ட் பார்க்குக்கு வந்திருந்தான். யோசனையாய் மருமகனை பார்த்தான் நயனன். 

 

ஆர்யனுக்கு ஏதாவது வேண்டும் என்றால் மாமனுக்கு ஃபோன் செய்து கேட்பான் உரிமையாக.. அதே நேரத்தில் நண்பர்களோடு எங்கேயாவது வெளியே செல்ல வேண்டும் என்றால், அம்மாவிடம் அனுமதி வாங்கத் தர சொல்லி செல்லம் கொஞ்சுவானே தவிர மற்ற நேரத்தில் பெரும்பாலும் ஆதிராவோடும் சில நேரங்களில் மூவரும் ஒன்றாகத்தான் சுற்றிக்கொண்டு இருப்பார்கள். 

 

‘இப்படி தன்னைத் தேடி அவன் வந்ததே இல்லையே..?’ என்று யோசித்தப்படி அவனது அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றான்.

 

“என்ன சாப்பிடுற?” என்று உபசரிக்க..

 

“நல்லா கூலிங்கா எதாவது எடுத்துட்டு வர சொல்லுங்க மாமா” என்றான். 

 

இருவருக்கும் குளிர்ந்த பழச்சாறு எடுத்துட்டு வர சொல்லி பணியாளரை பணித்துவிட்டு “சொல்லு என்ன விஷயம்? என்ன கொடையுது உன்னை?” என்று நேரடியாக கேட்டான். 

 

“எல்லாம் உங்க கூட பொறந்த உங்க நொக்காவால தான்” என்று கடுப்போடு பேசின மருமகனை “ஆர்யா..!” என்று அதட்டினான்.

 

“சும்மா என்னை அதட்டாதீங்க மாமா..! சின்ன வயசுலயே அதட்டி மிரட்டி வளர்க்க வேண்டியவங்கள, நல்லா செல்லம் கொடுத்து வளர்த்து விட்டுட்டு, இப்போ நாங்க தான் அவங்ககிட்ட மாட்டி சின்னாபின்ன படுகிறோம்.. எங்கள விட பாவம் பிரக்யா அக்கா தான்..”

 

“உன் பிரக்யா அக்காவுக்காக இனி நீ கவலைப்பட வேணாம். அதை நான் பார்த்துக்கிறேன். இப்ப என்ன பிரச்சனைனு நேரடியா விஷயத்துக்கு வா?” என்ற மாமனை பார்த்தவன் சிறிது தடுமாறி, 

 

“அது.. ஆதி.. ஆதிரா லவ் பண்றா மாமா” என்றாள். 

 

“எனக்கு தெரியும்..!” என்ற கதிர்நயனன் அவனுக்கு அதிர்ச்சி அளித்தான்.

 

“என்ன.. என்ன? உங்களுக்கு தெரியுமா? உங்களுக்கு தெரியும்னு அவளுக்கு தெரியுமா?” என்று கேட்க..

 

இல்லை என்ற தலை ஆட்டியவன் “அந்த பையனோட பேக்ரவுண்ட் எல்லாம் விசாரிச்சிட்டேன்.. கும்பகோணத்தில் டெக்ஸ்டைல்ஸ் நடத்துறாரே அவரோட பையன் தான். யூ.எஸ்ல எம்.பி.ஏ முடிச்சிட்டு வந்திருக்கான்.. ஃபேமிலி பேக்ரவுண்ட் எல்லாம் ஓகே.. பையன் உங்கள மாதிரி தான் இந்த காலத்து பசங்களோட சில வேண்டாத விரும்பாத பழக்கவழக்கங்களாக கத்து வச்சிருக்கான்” என்றதும் மாமனை பார்த்து அசட்டு சிரிப்பு சிரித்தான் ஆர்யன்.

 

“அப்போ ஓகே மாமா.! எனக்கு அவள்ட்ட சில சேஞ்சஸ் அதான் கொஞ்சம் அவளை அப்சர்ப் பண்ணி தெரிஞ்சுக்கிட்டேன். அதுதான் உங்ககிட்ட இன்ஃபார்ம் பண்ணிடலாம்னு வந்தேன். அது மட்டும் இல்ல..” என்று ஏதோ சொல்ல வந்தவன்,

 

“அப்புறம் ஒன்னும் இல்ல மாமா..” என்று தடுமாற,

 

அந்நேரம் வந்த பழச்சாற்றை அவன் முன் நகர்த்தி வைத்தான் கதிர்நயனன்.

 

அவன் பழச்சாறு குடித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்த கதிர்நயனன், “நம்ம ஒரு விஷயம் செய்றோம்னா.. செய்வதற்கு முன்னாடி ஆயிரம் தடவை யோசிக்கணும் ஆர்யா. ஆனா முடிவு எடுத்த பின் அதிலிருந்து மாறக்கூடாது. அதனால வர எந்த ஒரு எதிர்ப்பையும் எதிர் நோக்க தைரியமும், மன பலமும் வேணும்..! அப்படி இருக்கிறவன் தான் எந்த விஷயத்திலும் தைரியமா இறங்கணும். இல்லனா…” என்று உதட்டை பிதுங்கி தோளை குலுக்கியவன் மீதம் இருந்த பழசாற்றை குடித்து முடிக்க..

 

ஆர்யனோ அவனின் பேச்சில் வெலவெலத்து போய் அமர்ந்திருந்தான்.

 

“மாமா… நான்… எனக்கு.. என்னை பத்தி தெரியுமா?” என்று அவன் தடுமாற..

 

“ம்ம்ம்..! ஏற்கனவே ஒருத்தியை சரியாக கவனிக்காம விட்டதுனால தான் குடும்பத்துல ஏகப்பட்ட குழப்பங்கள் பிரச்சனைகள். அதோட வலியும் ரணமும் இன்னும் மாறாம இருக்கு.. அப்படி இருக்கும்போது உங்கள நான் எப்படி கண்காணிக்காமல் விடுவேன்? மாமா வேலை பிசியா ஓடிட்டு மட்டும் இருக்கல.. உங்களையும் உங்க நடவடிக்கைகளையும் கண்காணிச்சிட்டு தான் இருக்கேன்” என்றான் அமர்த்தலாக அமர்ந்து..

 

அவன் கண்களோ தன் எதிரே இருந்த ஆர்யனை கூர்கூராக குத்தி கிழித்துக் கொண்டிருந்தது. 

 

மாமனின் விழி வீச்சை தாங்க முடியாமல் “நா..நான்.. க்கி..கிளம்புறேன் மாமா” என்று அவன் எழ..

 

“ஆர்யா.. எது செஞ்சாலும் நல்லா யோசிச்சு செய். நீங்கறது நீ மட்டும் கிடையாது..! உன்னோட குடும்பமும் அதில் உண்டு. நம் குடும்பத்தின் பாரம்பரியமும் கௌரவமும் அதுல கலந்து இருக்கு.. இந்த காலத்து பிள்ளைகளான நீங்க.. ‘நான்’ ‘எனது’னு சுயநலத்தோட இருக்கீங்க.. ஆனா அந்த நான்-ங்குற நீங்க தனியாக வானத்திலிருந்து வந்து குதிக்கல.. அப்பாவோட விந்தணுவில் அம்மாவோட கருவில் இருந்து தான் வந்தீங்க.. அப்போ நீங்க என்ன செஞ்சாலும் அது அவங்களையும் பாதிக்கும்னு யோசிக்கணும்..!” என்று பெரிதாக பாடம் எடுத்த மாமனை கண்டு கலங்கி நின்றான் ஆர்யன்.

 

“என்னால.. முடியல மாமா.. சாரி.. இதிலிருந்து வெளி வருவேனா தெரியல.. பட்.. ட்ரை பண்றேன் மாமா” என்றவனின் அருகே சென்று அணைத்துக் கொண்டான் கதிர்நயனன்..!

 

“ஆல் இஸ் வெல் டா..! எல்லாமே சீக்கிரம் சரியாகும்”

 

“வி ஹோப்.! நான் வரேன் மாமா..!” என்று விடைபெற்றான். 

 

நேற்று நடந்ததையே யோசித்தப்படி அமர்ந்திருந்தான் நயனன். இன்று அலுவலகத்திற்கோ பண்ணைக்கோ எங்குமே செல்ல தோன்றவில்லை. காலையில் பிரக்யா சென்றதும் வந்து அமர்ந்தவன் தான். இன்னும் அவ்விடத்தை விட்டு அசையாமல் அமர்ந்திருக்க.. அவனை தேடி வந்தார் பர்வதத்தம்மாள்.

 

“யய்யா.. என்னையா இன்னைக்கு எங்கயும் வெளியில கிளம்பலையா? வெளி ஜோலி ஒன்னும் இல்லையா?” என்றபடி அவன் அருகே அமர.. 

 

மெல்ல கண்களைத் திறந்து அன்னையைப் பார்த்து சோகையாக சிரித்தவன் “இல்லம்மா.. போகல. ஏதோ யோசனை” என்று கைகளை உயர்த்தி நெட்டி எடுத்தவன், பின் தோட்டத்தை வெறித்தான். 

 

“என்னையா சின்னுவை பத்தி யோசனையா?” என்று கேட்டதும்,

 

“ம்ம்ம்?” அன்னையை நோக்கி திரும்பி நெற்றியை சுருக்கி பார்த்தான். 

 

“இல்ல யா.. மூணு வருஷம் முன்னால படிக்கனு போனவ அதுக்கப்புறம் வராம அங்கேயே இருந்துட்டா.. இப்ப நீதான் வம்புடியா அவளை அழைச்சிட்டு வந்து இருக்க, சில நேரம் உன்கிட்ட அவ நெருங்குற போல தெரியுது.. பல நேரம் தள்ளி போற மாதிரி இருக்கு. அதான்.. அதை நினைச்சு நீ ஏதும் குழம்பிட்டு இருக்கியா?” என்று அவர் மகனை பார்க்க..

 

“முழுசா தான் சொல்லுங்களேன் ம்மா” என்று அம்மாவை பார்த்தான்.

 

பிள்ளையிடம் அவன் தாம்பத்தியத்தை பற்றி எப்படி நேரடியாக கேட்பது என்று தடுமாறியவர், தொண்டையைக் கனைத்து “சின்னுவை கட்டி வச்சு உன் வாழ்க்கைய நாங்க கெடுத்துட்டோம்னு ஏதும் யோசிக்கிறியா யா?” என்று தன் மனதில் இருந்ததை கேட்டு விட…

 

அன்னையை கூர்ந்து பார்த்தவன் “ஏன் இப்படி எல்லாம் கேட்குறீங்க?” என்று கேட்டான்.

 

“இல்ல உனக்கும் வயசு ஏறிக்கிட்டே போகுது. உன் வயசுல உள்ள பசங்க எல்லாம் குழந்தையும் குட்டியுமா இருக்காங்க.. நீ இன்னும் வாழவே ஆரம்பிக்கலன்னு..” என்று அதற்கு மேல் பேச முடியாமல் கோர்த்திருந்த கைகளை பார்த்து கண்ணீர் விட்டார் அவர். 

 

அவரின் கைகளை அழுந்த பற்றியவன் “என் கல்யாண விஷயம் உங்க பொறுப்புன்னு நான் ஏற்கனவே சொல்லிட்டேனே மா.. விசாலினி நான் பார்த்து காதலித்த பொண்ணு கிடையாது. நீங்களா எனக்கு பார்த்த பொண்ணு தான். ஒரு பொண்ண நம்ப வச்சு ஏமாத்திட்டோமேன்னு ஒரு பரிதவிப்பு என் உள்ளுக்குள்ளார இருந்தது உண்மை. அதுக்கு ஏத்த மாதிரி உங்க பொண்ணு விசாலினியை ஏத்திவிட்டு இத்தனை நாளா அவளுக்கு வந்த நல்ல வாழ்க்கையையும் கெடுத்துக்கிட்டு இருந்துச்சு.. அதுக்கு காரணம் நான் தானேனு எனக்கு ஒரு குற்ற உணர்ச்சி இருந்தது உண்மை..!”

 

“ஆனா.. ஆனா.. எந்த ஒரு காரணத்துக்காகவும் உமையா என் வாழ்க்கையில் வந்தத நான் வெறுக்கல.. அது விரும்பி ஏத்துக்கிட்ட ஒன்னு தான்” என்றான்.

 

பிரக்யாவை அவன் ஏத்துக்கிட்டது தந்தைவின் சொல்லுக்காகவா? கடமைக்காகவா? என்று அவரின் மனம் கேட்கத் துடிக்க..

 

“அம்மா.. அம்மா..” என்று எழுந்து வந்து அவர் தோள் மீது கை போட்டு அணைத்துக் கொண்டவன்,

 

“சின்னுவை சின்ன வயசுல இருந்து நாம தான் வளர்த்தோம். வளர்த்த பொண்ண எப்படி என்னால வேற விதமா பார்க்க முடியும்? அப்பா சொன்னதுக்காக தான் சின்னுவை கல்யாணம் பண்ணிட்டேன் இல்லைன்னு சொல்ல மாட்டேன்.. அதுக்கு அப்புறம் இந்த மூணு வருஷத்துல அவ தான்..! அவ மட்டும் தான்னு வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். மனசார அவளோட வாழணும்னு நினைக்கிறேன். கடமைக்காக இல்லை.. புரியுதா?” என்றதும் அவரின் கலக்கங்கள் மறைய, மகனை பார்த்தார்.

 

“இன்னும் ஏதோ இருக்குது போல.. அதையும் கேட்டு தெளிவாகிடுங்க” என்று சிரித்த மகனின் கன்னத்தை வருடியவர்,

 

“சின்னுவோட கடந்த காலம்.. அவள் கர்ப்பம்..” என்று ஆரம்பிக்க..

 

“மா அவ நம்ம வளர்த்த பொண்ணுமா.. தப்பா போவாளா? ஏதோ அவளுக்கே தெரியாம நடந்த ஒரு விபத்து அது. அந்த விபத்தை நினைச்சு என் பொண்டாட்டிய நான் சந்தேகப்பட மாட்டேன்..‌ அதை பத்தி ஒரு வார்த்தை கூட நான் அவளிடம் கேட்க மாட்டேன் போதுமா?” என்றதும் மனம் முழுக்க நிம்மதி பரவ மகனின் கைகளைப் பற்றி கண்களில் ஒற்றிக்கொண்டார். 

 

“அப்போ பிள்ளைக்காக பார்க்கல.. பேத்திக்காக தான் பார்த்திருக்கீங்க? ம்ம்ம்?” என்று கண்கள் கலங்கும் அம்மாவை சீண்டினான்.

 

“என் பேத்தி நல்லா இருந்தா என் புள்ள நல்லா இருப்பான்..! எந்த வீட்ல வீட்டுக்கு வந்த பொண்ணு சந்தோஷமா நிம்மதியா கவலை இல்லாம இருக்கிறாளோ.. அந்த வீட்டில் உள்ளவங்களும் அதே சந்தோஷத்தோட நிம்மதியோடு பெரும்பலத்தோடு இருப்பாங்க..! இது நான் கண்கூட கண்ட உண்மை. இப்போ சொல்லு.. என் பேத்தி நல்லா இருந்தா போதும் தானே?” என்று அவரும் மகனை வார…

 

“பர்வதம் தேவியே உங்க பேத்தி நல்லா இருந்தா போதும்.. உங்க குடும்பமும் உங்க பொண்ணுங்க குடும்பம் எல்லாமே நல்லா இருக்கும்..” என்று அவன் கையெடுத்து கும்பிட.

 

“கிண்டல் பண்ணாலும் உண்மை அது தான் யா.. என் பேத்தி நல்லவ. அவள் நல்ல மனசுக்கு எப்போதும் நல்லா இருப்பா.. அவளை சுத்தி இருக்கிறவங்களையும் நல்லா இருக்க வைப்பா..!” என்று‌ அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே பிரக்யாவிடம் இருந்து ஃபோன் வந்தது கதிர்நயனனுக்கு.

 

“உங்க பேத்திக்கு ஆயுசு நூறு. பாருங்க அவளே ஃபோன் பண்றா..” என்று அட்டென்ட் செய்து 

 

“என்ன மகாராணி.. வேலைக்கு இடையில புருஷன் ஞாபகமும் உங்களுக்கு வந்து இருக்கு?” என்று அன்னையைப் பார்த்து கண் சிமிட்டியப்படி அவன் பேச..

 

சிறுவர்களுக்குள் ஏதோ பேசிக் கொள்ளட்டும் என்று மெதுவாக எழுந்து அவர் செல்ல…

 

“மாமா.. மா… மா… வந்து.. ஆதி.. ஆதி..” என்று அவள் அந்தப் பக்கம் பதட்டத்தோடு திக்கி திணற..

 

“என்ன ஆச்சு சின்னு? ஆதிக்கு என்ன ஆச்சு?” என்று அவளின் பதட்டத்தில் இவன் இங்கே பதற..

 

விலகிச் சென்ற பர்வதத்தம்மாளும் மகனருகே ஓடிவந்து “என்னாச்சு ஆதிரா பெண்ணுக்கு என்ன ஆச்சு?” என்று கவலையோடு கேட்டார். 

 

“இருங்கமா.!” என்று கைகளால் அன்னைக்கு காட்டியவன்,

 

“சின்னு நீ சொல்ற எதுவுமே புரியல.. தெளிவா பேசுடி கொஞ்சம் தண்ணிய குடிச்சிட்டு பேசி தொலை” என்று கத்தினான். 

 

சிறிது நேரம் மூச்சு எடுத்து தன்னை நிலைப்படுத்தியவள் “ஆதிராவை வீட்டுல காணோமாம் மாமா.. சித்தி வந்து இங்கே ஹாஸ்பிடல்ல சத்தம் போட்டுட்டு போறாங்க.. அவ யாரையோ லவ் பண்றாளாம். அவனோட போயிட்டா, நீ தானே ஹெல்ப் பண்ணுன.. அது இதுன்னு சொல்றாங்க.. எனக்கு ஒண்ணுமே புரியல. இப்ப அங்க தான் வந்துட்டு இருக்காங்கன்னு நினைக்கிறேன்” கடகடவென்று ஒப்புவித்தாள்.

 

“என்ன ஆதிய காணுமா?” என்று பதறியவன், “அக்கா எதுக்கு உன்னை சத்தம் போடணும்? இங்க வரட்டும் நான் பார்த்துக்குறேன் நீயும் கிளம்பி வீட்டுக்கு வா” என்று ஃபோனை அணைத்தவன்.

 

“உங்க பொண்ணு இந்த ஜென்மத்துல திருந்தவே திருந்தாதா மா? ஹாஸ்பிடல்ல போய் நாரடிச்சிட்டு.. இங்க வரட்டும் இருக்கு அதுக்கு” என்றவன் வேகமாக கீழே இறங்க, தலையும் புரியாமல் வாலும் புரியாமல் மகனின் பின்னே ஓடினார் அவர்.

 

இவர்கள் கீழே செல்லவும், விரித்த தலைமுடியை கொண்டையிட்டுக் கொண்டே அபிராமி உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. 

 

“உன் பொண்டாட்டி.. இந்த வீட்டு மருமவ என்ன பண்ணி வச்சிருக்கா தெரியுமா? அவ தான் சின்ன வயசுல காதல் கீதலுனு அலைஞ்சா.. இப்போ என் பொண்ணுக்கும் சொல்லி கொடுத்திருக்கா.. இப்போ என் பொண்ண காணோம்” என்று ஆத்திரத்தோடு சீறினார்.

 

“அக்கா போதும் உமையா யாரையும் இதுவரைக்கும் காதலிச்சதே கிடையாது. அவளை பத்தி பேசுறதை விடுனு ஏற்கனவே உன்கிட்ட சொல்லிட்டேன்..” என்று தம்பி இந்நிலையிலும் மனைவிக்கு சப்போர்ட் செய்வதை கண்டு அவருக்கு ஆத்திரம் கண்ணு மண்ணு தெரியாமல் வந்தது. 

 

“ஆமா யாரையும் காதலிக்காம தான் வயித்த நொப்பிக்கிட்டு வந்தாளாக்கும். அவ சொன்னது சுத்த பொய்.. நீ அவளை நம்பு. நான் நம்ப மாட்டேன். இப்ப என் பொண்ணு எங்க இருக்கானு அவகிட்ட கேட்டு சொல்லு.. உடனே அவளுக்கு ஃபோன் போட்டு இங்க வர சொல்லு..” என்று நடு வீட்டில் கூடத்தில் கீழே அமர்ந்துக் கொண்டார் குத்தவைத்து..!

 

அதற்குள் வேலை ஆட்கள் எல்லாம் வந்து எட்டிப் பார்க்க… அனைவரையும் ஒரு பார்வை பார்த்தான் நயனன். அனைவரும் கல் விட்டெறிந்த காக்கா கூட்டம் போல கலைந்து சென்றுவிட்டனர். 

 

“நீ சின்னுவை வர சொல்லு ராசா” என்று பர்வதத்தம்மாள் கூற. 

 

“அம்மா.. நீங்களும் இவ பேச்சைக் கேட்டு ஆடாதீங்க..!” என்று அவன் பல்லை கடிக்க..

 

“நான் ஒன்னும் அவளுக்காக சொல்லல.. இங்கேயே இவ்ளோ கத்துறானா.. சின்னு கிட்ட என்னென்ன பேசினாளோ.. அவ இப்ப என்ன மனநிலைல இருக்கானு தெரியல? புள்ள பாவம்.. அவள வீட்டுக்கு வர சொல்லு” அம்மா மனைவிக்காக தான் பார்க்கிறார் என்று புரிந்து அவளுக்கு அழைக்க..

 

ஃபோனும் வீட்டு வாசல் அருகே ஒலித்தது. நிமிர்ந்து பார்த்தால் அழுத கண்களும் துடித்த இதழ்களோடு வேக நடையோடு உள்ளே வந்துக் கொண்டிருந்தாள் பிரக்யா. 

 

“மாமா..” என்று அவள் ஓடிவர இரண்டு எட்டில் முன்னேறி அவளை அணைத்து அரவணைத்தான் கணவனாய் கதிர் நயனன்.

 

“ஒன்னுமில்ல டா.. ஒன்னுமில்ல”

 

“நீயும் ஒன் பொண்டாட்டி அப்புறம் கொஞ்சுங்க.. முதல்ல என் பொண்ணு எங்கனு கேளு டா.. என் பொண்ண யாரு கூட அனுப்பி வச்சிருக்கானு கேளு.. ஊர் பேரு தராதரம் தெரியாதவன் கூட சிவஞானம் வீட்டு வாரிசு போறதா? கேட்டு சொல்லுடா.!” என்று பிரக்யாவை பார்ப்பதே பாவம் என்பது போல முகத்தை வைத்துக்கொண்டு பேசினார் அபிராமி.

 

“மாமா.. மாமா.. எனக்கு எதுவும் தெரியாது மாமா. அவ யாரை லவ் பண்ணுனானு கூட எனக்கு தெரியாது. ப்ராமிஸ் மாமா” என்று அவள் தன் தலையிலேயே கையை வைக்க அதை தட்டி விட்டவன்,

 

“உன்னை நான் நம்ப மாட்டேனா எதுக்கு சத்தியம் உன் மேலே பண்ற? லூசு” என்று திட்டியவன்,

 

அபிராமி புறம் பார்த்து "அந்த பையன் யாருன்னு எனக்கு தெரியும். வேற யாரும் இல்ல கும்பகோணத்துல ஜவுளி கடை வைச்சிருக்கிற வீட்டு பையன் தான். ஏற்கனவே விசாரிச்சு தான் வச்சிருந்தேன். ஆதி காதல்னு சுத்தும் போதே எனக்கு தெரியும்” என்றதும் திடுக்கிட்டு தம்பியை பார்த்தார். 

 

“அப்பவே அந்த நாய இரண்டு அறை விட்டு வீட்டுக்கு இழுத்துட்டு வரத விட்டுட்டு.‌ யாரு வீட்டு பையன் என்னனு விசாரிச்சிட்டு இருந்தியா நீ? நீ வா இப்பவே அந்த வீட்டுக்கு போவோம். முதல்ல நம்ம பொண்ண போய் கூட்டிட்டு வரலாம்” என்று ஒத்தை காலில் நின்றார். 

 

“நீயே நம்ம பொண்ணு வீட்ல இல்ல.. இப்படி ஓடிப் போயிட்டானு எல்லாருக்கும் தண்டோரா இல்லாம சொல்லி காட்ட போறியா அபிராமி? கொஞ்சம் பொறுமையா இரு..! எதையும் யோசிக்காம செய்றதே உனக்கு பழக்கம்” என்று மகளை அதட்டினார் பர்வதம்மாள். 

 

“எப்படி மா? எப்படி மா அமைதியா இருக்க? வயசு பொண்ணு எவனோ ஒருத்தனை நம்பி ஓடி போய் இருக்கா.. அப்படியே விட்டுட்டு எப்படி இருக்கிறது? பஞ்சையும் நெருப்பையும் பக்கத்திலேயே வைக்க சொல்றீங்களா? முடியாது மா.. கதிரு நீ கெளம்பு” என்று மீண்டும் தம்பியை அழைத்தார். 

 

“நான் விசாரிக்கிறேன் கா.. நீ அமைதியா இரு.. கண்டிப்பா அந்த பையன் வீட்டுக்கு போயிருக்க மாட்டாங்க.. அங்க போயிருந்தா எனக்கு இந்நேரம் தகவல் வந்திருக்கும். இவங்க வேற எங்கேயோ தான் போயிருப்பாங்க.. தேட சொல்றேன்” என்று அவரை ஆற்றுப்படுத்த முயன்றான் கதிர்நயனன்.

 

அவனுக்கும் ஆதிரா செய்த செயல் சிறிதும் பிடிக்கவில்லை.

 

“அவ எங்க இருக்கானு இவளுக்கு தெரியும். கண்டிப்பா இவளுக்கு தெரியாம இருக்காது. அன்னைக்கு இதுங்க ரெண்டும் ஹோட்டல்ல ஏதோ குசு குசுனு பேசிட்டு தான் இருந்துதுங்க.. இவளை கேளு..” என்று ஆடினார். 

 

“சத்தியமா எனக்கு தெரியாது சித்தி..! யாரையோ லவ் பண்றேன்னு மட்டும் தான் என்கிட்ட சொன்னா, நான் அதுக்கே அவளை திட்டுனேன்” என்று பிரக்யா தெளிவுபடுத்த..

 

“ஆகா… நீ தான் திட்டியிருப்பியே..” என்று கைகள் இரண்டையும் ஆட்டி வெறுப்பை உமிழ்ந்தார்.

 

“நிஜமா சித்தி. அவ என் தங்கச்சி.. நான் எப்படி இதை அனுமதிப்பேன்?” என்று தங்கைக்காக பிரக்யா பேச..

 

ஆனால் அக்கா மகள் என்று அபிராமி பார்க்கவில்லை. 

 

“யாரு நீனு? சாத்தான் வேதம் சொல்லுச்சாம்.. நீயும் எவனோடையோ ஊர் மேல போய் வயித்துல வாங்கிட்டு வந்தவ தானே? கேட்டா ஆள் தெரியல.. அடையாளம் தெரியலனு கூசாம பொய் சொன்னவதானே.. யாருக்கு தெரியும் ஒரு ஆளா இல்லை ஊர் முழுக்க ஆளானு..” அபிராமி அடர் அமிலத்தை வாரி இறைக்க…

 

‘என்ன!!! இவ்வளவு கீழ்த்தரமா பேசுவாரா?? இவர் என் சொந்த சித்தி தானே??’ என்று சிலையென சமைந்து நின்றாள் பிரக்யா. 

 

“அவ்வளவுதான் உனக்கு மரியாதை..!” என்று கதிர் நயனன் கர்ஜித்தவாறு அவரை நோக்கிச் செல்ல..

 

அதற்குள் அழுத்தமாக விழுந்தது ஒரு அறை அவரது கன்னத்தில்…

 

பர்வதத்தம்மாள் தான் அவரது கன்னத்தில் வலுவாக அடித்திருந்தார்.

 

அவரின் வயதைக் காட்டிலும் மனதில் இருந்த கோபம் அந்த அறையில் தெரிய.. அதிர்ந்து கன்னத்தைப் பிடித்துக் கொண்டு அம்மாவை பார்த்தார் அபிராமி. 

 

“இந்த அடிய நீ சின்னுவை முதல்ல பேசும்போதே கொடுத்து இருக்கணும்.. தப்பு பண்ணிட்டேன்..! ஆனா இனி.. ஒரு வார்த்தை ஒத்த வார்த்தை என் மருமகள பத்தி வந்துச்சு..” என்று கோபக் கனலாய் நின்றிருந்த அன்னையைக் கண்டு இரண்டடி பின் வாங்கினார். 

 

மாமாவும் அம்மம்மாவும் தனக்காக பேசுவது எல்லாம் அவள் காதில் ஏறவில்லை..!

 

“யார் யார் கூட போனியோ.. எத்தனை பேர் கூட படுத்தியோ?” என்ற வார்த்தைகள் திரும்பத் திரும்ப பிரக்யாவின் காதில் ஒலிக்க…

 

“இல்ல.. இல்ல.. நானா யார்கிட்டயும் போகல” என்று அவள் தன் காதுகளை பொத்திக்கொண்டு கத்தினாள்.

 

“விடு சின்னு.. விடுடா மா” என்று கண்கள் கலங்க அவளை ஆதரவாக நயனன் அணைத்துக்கொள்ள…

 

மாமனை வலு கொண்ட மட்டும் தன்னிடமிருந்து பிடித்து தள்ளிவிட்டவள்,

 

“இதோ.. இவர்.. இவர் ஒருத்தர் கூட தான் அன்னைக்கு நான் படுத்தேன்.. இவரால தான் நான் கர்ப்பமானேன்.. இந்த வீட்டு வாரிசை தான் நான் சுமந்தேன்..!!” என்று அந்த வீடே அதிர உரைத்தாள் உண்மையை..!

 

ஆனால் அந்த உண்மையை எதிர்பார்க்காத அனைவரும் நிலை குலைந்து நின்றனர் என்றால்…

 

கதிர்நயனன் மொத்தமாக வீழ்ந்து போனான் காரிகையின் நிதர்சன வார்த்தையில்..!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top