அத்தியாயம் 21
கதிர்நயனன் நிச்சயதார்த்தத்துக்காக தன் அறையில் பயண பொதிகளை தயார் செய்துக் கொண்டிருந்த பிரக்யாவின் அருகில் அமர்ந்திருந்த அவளது தோழி லீனா,
ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுத்து அவளுக்கு உதவி செய்துக் கொண்டே இருந்தவள், பிரக்யாவின் சின்ன டைரியை பார்த்து அவள் எடுத்து வைக்கும் முன், அதை பிடுங்கி பார்க்க “ஏய் அதை தொடாத.. அது என்னோட பர்சனல்” என்று அவளிடம் இருந்து பிடுங்க முயன்றாள் பிரக்யா.
“இரு.. இரு.. அப்படி என்னதான் இதுல நீ பர்சனல் வச்சிருக்கனு நானும் பார்க்கணும். இத்தனை வருஷமா அப்பப்போ நான் தூங்குறேன்னு நினைச்சு நைட்ல இதுல உட்கார்ந்து எழுதிட்டு இருப்ப தானே நீ?” என்ற தோழியிடம்
கெஞ்சல் பார்வை பார்த்தவள் “என் தங்கம் இல்ல.. வைரம் இல்ல கொடுத்துடு டி ப்ளீஸ்..!” என்று கொஞ்சினாள் பிரக்யா.
“நான் என் பாய் ஃப்ரெண்ட் பத்தி எங்களுக்குள்ள நடக்குற சின்ன சின்ன ஜில்பாங்ஸ் பத்தி எல்லாம் உன் கிட்ட சொல்றேன் தானே?” என்று லீனா கூற, காது மடல் சிவந்து போனது பிரக்யாவிற்கு.
லீனா தன்னை நம்பி.. தன்னிடம் பகிர்ந்துக் கொள்ளும் அவள் காதலன் உடனான அந்தரங்கங்களை சுட்டாலும் பிரக்யாவால் அதுபோல பகிர முடியாது.
“இங்க பாரு லீனு.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. கொடுத்துடுடி ஃபிளைட்டுக்கு டைம் ஆச்சு” என்று கெஞ்சினாள் பிரக்யா.
“அதெல்லாம் முடியாது நான் படிச்சிட்டு தான் தருவேன்” என்று அவசரமாக முதல் பக்கத்தை பார்க்க அங்கே சிவனும் சக்தியும் சேர்ந்த படம் இருந்தது.
“முதல் பேஜை பார்த்தா ஒரே பக்தி மயமா இருக்கே..” என்று வெளிப்படையாக பேசியவள், “ஒருவேளை எங்கள டைவர்ட் பண்ண உள்ளார வேறுவிதமான பக்தியா இருக்குமோ?” என்று கண்ணடித்து கேட்டாள்.
“ஐயோ.. கருமம்..” என்ற தலையில் அடித்துக் கொண்டாள் பிரக்யா.
அதன் அடுத்த பக்கங்களை திறக்கும் போது சற்றே அதிர்ந்து விட்டாள் லீனா.
“என்னடி இது?” என்று அதிர்ச்சி குறையாமல் லீனா கேட்க இப்பொழுது வெடித்து சிரித்தாள் பிரக்யா.
ஏனென்றால் அதில் அவள் எழுதி வைத்திருந்தது அனைத்தும் கவிதைகள். சிவஞானம் மூலம் சிறுவயதில் இருந்தே தமிழ் கதைகள் கவிதைகள் வாசிக்கும் பழக்கம் பிரக்யாவிற்கு.
படிக்க எழுத நிரம்ப பிடிக்கும் அவளுக்கு. தன் மனதில் தோன்றும் கற்பனைகளை கவிதையாக்கி அவ்வப்போது இப்படி எழுதி வைப்பாள் பிரக்யா. அதைதான் பார்த்துவிட்டு லீனா கேட்டது.
“எங்க இப்ப படி. பார்க்கலாம்? ம்ம் படியுங்கள் மன்னா?” என்று கைகளை கட்டிக்கொண்டு நக்கலாக நண்பியை பார்த்தாள் பிரக்யா.
ஏனென்றால் லீனா தமிழ் தான். சுத்த தமிழச்சி தான். அம்மாவும் அப்பாவும் தமிழ்நாட்டிலே பிறந்து வளர்ந்தவர்கள் தான். ஆனால் அவளுக்கு தமிழ் படிக்க தெரிந்தாலும் சாதாரண பேச்சுவழக்கு மட்டுமே புரிந்துக் கொள்ள முடியும் அபூர்வ தமிழ் உயிரினம் அவள்.
லீனா மட்டுமல்ல பெரும்பாலான இன்றைய குழந்தைகள் ஏதோ தமிழ் ஒரு பாட மொழி என்பதாய் மேலோட்டமாக கற்கிறார்களே ஒழிய.. அது நம் இனம்..! நம் வேர்..! அதன் சிறப்பை பெருமையை உணர்ந்து கற்க தவறுகின்றனர்.
“உனக்கு தான் தமிழ் படிக்க தெரியாது இல்ல கொடு கொடு” என்று முகத்தை சுளித்தவாறு லீனாவிடமிருந்து பிடுங்க, அவளோ தன் பின் மறைத்துக்கொண்டு “எனக்கு தான் டி தமிழ் தெரியாது. ஆனா என் பார்ட்னருக்கு தெரியும் தெரியுமா?” என்றதும்,
“யாரு உன் பார்ட்னர் ஆந்த ஹிந்தி காரன் தானே? பீடா வாயன்.. தமிழ் காரி உனக்கே வல்லினம் மெல்லினம்னா என்னனு தெரியாது இதுல அவன் உனக்கு ஐயம்திரிபற இலக்கணம் சொல்லித்தர போறானோ?” என்று நக்கலாக கேட்டாள் பிரக்யா.
“நான் சொன்னது அவனை இல்லடி இவனை..!” என்று கூகிளை காட்ட
“அய்யோ பாவி அவன் கிட்ட எல்லாம் போட்டு கொடுக்காதடி..! அந்த பாவி அதை டேட்டாவா மாத்தி இன்னும் நாலு பேருக்கு பரப்பி விடுவான் டி” என்று பயந்தாள் பிரக்யா.
“அதெல்லாம் கிடையாது” என்று லீனா மறுக்க..
“லூசு லூசு.. இந்த மாதிரி ஆட்களுக்கு நாமெல்லாம் வெறும் டேட்டா தான். நாம கொடுக்கிற இன்ஃபர்மேஷனை கலெக்ட் பண்ணி அதை டேட்டாவா ஸ்டோர் பண்ணிட்டு மத்தவங்க கேட்கும் போது இன்ஃபர்மேஷன் கொடுக்குது” என்றாள்.
நாமும் இதுபோல ஆப்களிடம் நம்மையும் மறந்து நம் பர்சனலை ஏன் சில சமயம் அந்தரங்கத்தை கூட தெரியாமலேயே அம்பலமாக்கிக் கொண்டிருக்கிறோம்..!
“இரு இரு இதற்கு உனக்கு அர்த்தம் தானே வேணும். இந்தா இந்த தமிழ் அகராதியில தேடி பாரு..” என்று தன் ஒரு கவிதையை மட்டுமே அவளுக்கு போட்டோ எடுத்து அனுப்பி “நான் வரதுக்குள்ள முடிஞ்சா கண்டுபிடிச்சு வை.!” கண் சிமிட்டி கிளம்பினாள் பிரக்யா.
ஏர்போர்ட்டுக்கே வந்து அழைத்த மாமனை பார்த்தவள் “வாழ்த்துக்கள் மாமா.. இனிமே லைஃப் ஜாலியா ஜிம்கானா தானா?” என்று அவள் சற்று சந்தோஷமாக பேச..
அதுவரை இல்லாத கல்யாண களை கதிர்நயனனின் முகத்தில் மெல்ல அரும்பு விட.. “தோடா.. மாமா வெட்கமெல்லாம் படுறாரே?” என்று வீடு வரும் வரை அவனை ஓட்டிக் கொண்டே வந்தாள்.
இறங்கும் போது அவளை நிறுத்தி “இங்க பாரு சின்னு.. ஏதோ புள்ள ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கேன்னு நீ பேச பேச அமைதியாக இருந்தேன். அதையே அட்வான்டேஜா எடுத்துக்கிட்டு வாய் அடிச்ச பிச்சிடுவேன் பிச்சு..!” ஒற்றை விரல் நீட்டி எச்சரித்த மாமனை பார்த்து முகம் சுணங்கியவள்,
“அதானே பார்த்தேன்.. மாமா மாறிடுச்சோன்னு கொஞ்ச நேரத்துல நான் பயந்தே போயிட்டேன்..! மாமா இப்பதான் எங்க மாமாவா பக்காவா இருக்கீங்க.. இதை இப்படியே மெயின்டெயின் பண்ணுங்க..!” என்றவள் சிட்டாக அம்மம்மா தாத்தா என்ற படியே உள்ளே ஓடிவிட்டாள்.
“இவ காலேஜுக்கு போன பின்ன இன்னும் நல்லா வாய் வளர்ந்துட்டு” என்று இடவலமாக தலையாட்டி சிரித்தபடியே உள்ளே சென்றான்.
நிச்சயதார்த்தற்கு முதல் நாள் காலையில் கிளம்பி மதியம் போல தஞ்சாவூர் வந்து சேர்ந்திருந்தாள் பிரக்யா.
ஆனால் நிச்சயதார்த்தத்திற்கு இரண்டு நாட்கள் முன்னாடியே வந்து அம்மா வீட்டில் டேரா போட்டு இருந்தனர் அபிராமியும் அவரது கணவன் ரவீந்திரனும். கூடவே ஆதிராவும் ஆர்யனும்..!
வேகமாக சந்தோஷமாக ஓடி வந்தவள் கையில் பலகார தட்டுடன் எதிரே வந்த அபிராமியை பார்த்து அதிர்ச்சியோடு நின்று விட்டாள்.
இவளைப் பார்த்ததும் முகத்தை சுழித்த அபிராமி, “இங்க பாரு இது கல்யாண வீடு பார்த்து நடந்துக்கோ.. பேச்சை குறைத்துக்கோ.. இங்கேயும் அங்கேயும் ஓடாம பொம்பள புள்ளையா பொறுமையா நடந்து போ.. அடக்க ஒடுக்கமா பேசு.. கத்தி பேசாதே.. உன்னோட சின்ன பிள்ளைகளோட சேர்ந்து கொட்டம் அடிக்காத.. பொறுப்பா பெரிய பொண்ணா எங்களுக்கெல்லாம் கொஞ்சம் உதவி செய்..” என்று அவர் அறிவுரைகளை பட்டியலிட்டுக் கொண்டே செல்ல ஐயோ என்று ஆனது பிரக்யாவிற்கு.
“அவ்வ்வ்.. வந்தவுடனே அட்வைஸா டா….!” என்று வடிவேல் பாணியில் மனதில் நினைத்துக் கொண்டு அவள் அமைதியாக நிற்க..
வீட்டுக்குள் நுழைந்த கதிர்நயனன் அபிராமியை பார்த்து ‘இந்த அக்கா திருந்தவே மாட்டா..’ என்று நினைத்தவன், “ஏய் சின்னு.. அப்பவே உள்ள வந்தவ என்ன இங்கேயே நின்னுட்டு இருக்க? சீக்கிரம் ரெஃப்ரெஷ் ஆகிட்டு வா.. அம்மா அப்பா உனக்காக தான் சாப்பிடாம காத்திருக்கிறாங்க” என்று ஒரு அதட்டல் போட “சரிங்க மாமா” என்று வேகமாக தன் அறைக்கு ஓடிவிட்டாள்.
அபிராமி, தம்பி தன்னிடமிருந்து அவளை காப்பாற்றுகிறான் என்று பார்த்திருக்க..
“அக்கா.. இந்த டெக்கரேஷன்..” என்று அவரின் எண்ணங்களுக்கு தடை போட்டு மடைமாற்றி வேறு விதமாக பேசிக் கொண்டே சென்றான்.
பிரக்யாவும் வந்துவிட அம்மம்மா தாத்தாவிடம் ஆசி பெற்று கொஞ்சி கெஞ்சி விளையாடி உணவு உண்டு அந்நேரம் சுகமாய் அவளுக்கு சென்றது. அபிராமியை வாய் திறக்க விடாமல் கதிர்நயனன் பார்த்துக்கொண்டான்.
வெகு நாள் கழித்து வந்திருப்பவளுக்கு இந்த மன நிம்மதியை கூட இந்த வீடு தரவில்லை என்றால் எப்படி என்று ஒரு பெருமூச்சு அவனிடம்..!
பிரக்யாவை இப்படி பேசுபவர்கள் வேறு யாராவது இருந்தால் இந்நேரம் அவர்களை உண்டு இல்லை என்று ஆக்கி இருப்பான்.. ஆனால் அபிராமி சொந்த அக்காவாக போயிட்டாரே..! வெட்டி விடவும் முடியாமல்.. அதே சமயம் அவர்களின் பேச்சை பொறுக்க முடியாமல் இருக்கொள்ளி எறும்பாய் தத்தளித்தான்..!
‘கூடவே அக்காவின் நாத்தனாரையே திருமணம் செய்துக் கொள்ளப் போகிறோமே.. அப்போ அவளது ஆட்டம் இன்னும் இங்கு அதிகமாகுமோ?’ என்று தீவிர சிந்தையில் இருந்தவனின் தோளை பற்றிய தந்தையை திரும்பி பார்த்தான்.
அவன் கண்களில் இருந்த கலக்கத்தை கண்டு கொண்ட தந்தையோ, “ஒரு முடிவு எடுக்கறதுக்கு முன்னாடி ஆயிரம் இல்ல இரண்டாயிரம் முறை கூட யோசிக்கலாம் தம்பி.. ஆனா எடுத்ததுக்கப்புறம் ஒரு முறை கூட இது சரியானு யோசிக்க கூடாது..!” என்றார் பூடகமாக..!
“நான் அபிராமிய பார்த்துக்குறேன் இதெல்லாம் உன் தலையில் ஏத்திக்காம சந்தோஷமா இரு” என்று அவன் தோளில் தட்டிச் சென்று விட்டார்.
அதற்குள் இங்கே பிரக்யா ஆதிரா மற்றும் ஆர்யனோடு இணைந்து நிச்சயதார்த்தத்திற்கு போடுவதற்கான உடைகளை ஆராய்ந்து, அணிகலன்கள் பார்லர் என்று பெண்களுக்கு ஆன முறையில் வெளியில் சுற்றிக் கொண்டிருக்க.
கன்னத்தில் கை வைத்து பார்த்திருந்த ஆர்யனுக்கு பொறுமை பறந்து போக “நீங்க தானே காஸ்ட்யூம் செலக்ட் பண்றீங்க.. என்ன எதுக்கு உங்க கூட இப்படி சுத்த வச்சுக்கிட்டே இருக்கீங்க..” என்று அலுப்புடன் பேச,
“எங்களுக்கு இருக்கிற ஒரே சகோதரன் நீ தானே டா.. நீ தானே எங்கள பார்த்துக்கணும்.. நாங்க போகும்போது கூட வரணும்.. ஷாப்பிங் பண்ணா பைய தூக்கணும்.. சாப்பிட்டா பில்லு பே பண்ணனும்.. இன்னும்..” என்று ஆதிரா அடுக்கிக் கொண்டே செல்ல
“நிப்பாட்டுடி நிப்பாட்டு..! இதுக்கு மேல ஒத்த வார்த்தை பேசாதே. ஆக மொத்தத்துல சம்பளம் இல்லாத வேலைக்காரனாய் இருக்கணும் அப்படி தானே..?”
“நீ ஏன் டா ஆரு தங்கம் அப்படின்னு நினைக்கிற? அக்காவுக்கும் தங்கச்சிக்கும் செய்ற சேவையா நினைச்சுக்க..” என்று பிரக்யா சிரிக்காமல் கூற..
“ஆனாலும் ஒரு ஆண்பாவம் உங்களை எல்லாம் சும்மா விடாது..!” என்று பொருமியவனைக் கண்டு சிரித்தவர்கள், அவர்கள் வாங்கி இருந்த பைகளை எல்லாம் அவன் கையில் திணித்து விட்டு முன்னால் ஓடினர்.
இவர்கள் வீடு வரவே இரவாகிவிட்டது.
“ஐயையோ வாசல்லேயே எங்கள் ஆத்தா.. மாரியாயி.. காவல் தெய்வம் காவல் காக்குதே..! இப்ப உள்ள போனா பக்கம் பக்கமா டயலாக் பேசுமே.. என்னடா பண்றது?" என்று ஆர்யன் பதற..
“இரு நான் மாமாக்கு போன் பண்ணி சொல்றேன்” என்று பிரக்யாவின் ஃபோனில் இருந்து ஆதிரா கதிர்நயனனுக்கு விஷயத்தை கூற சிரித்துக் கொண்டு “ஓகே.. ஓகே.. நான் அக்காவை டைவர்ட் பண்ணிடுறேன்.. நீங்க வீட்டுக்குள்ள ஓடிப் போயிடுங்க” என்றவன், அபிராமிக்கு ஃபோன் செய்தான்.
“அக்கா முக்கியமான ஒரு விஷயம். இதை செக் பண்ணு” என்றதும்,
தம்பி முக்கியமாக கூறுகிறான் என்று கதிர்நயனன் அறையை நோக்கி அவர் சென்றுவிட..
“அப்பாடா கிரேட் எஸ்கேப்..! மாமா நீர் வாழ்க..! உன் ஃபியான்சியும் வாழ்க..!” என்று மூவரும் பிரக்யாவின் அறைக்குள் ஓடி மறைந்தனர்.
அது இருக்கா.. இது இருக்கா. நாளைக்கு நிச்சயதார்த்தத்துக்கு உள்ள பொருள்கள்லாம் சரியா இருக்கா? ஒரு தடவைக்கு இரண்டு தடவை பார்த்திடு..! நீ தான் பொறுப்பான ஆசாமி. அப்படி இப்படி என்று ஒரு அரை மணி நேரம் அக்காவிடம் பேசி எல்லா வேலையும் சொல்லி..
“இதெல்லாம் செஞ்சுட்டு சொல்லு கா. நீ தான் இதெல்லாம் பொறுப்பா பார்த்துக்கணும்.. அக்கா.. உன்னை விட்டா எனக்கு வேற யாரு இருக்கா?” என்று கடைசியில் நான்கு பிட்டை நங்கூரம் போல சேர்த்து அவன் ஃபோனை அணைத்து விட.. மீண்டும் அடுக்கி வைத்த பொருட்களை எல்லாம் பிரித்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று செய்துக் கொண்டிருந்தார் அபிராமி மூன்று மணி நேரமாக…!
அதற்குள் இவர்கள் உண்டு உறங்கியே போயினர்..!
மறுநாள் நண்பகல் வேலையில் தான் நிச்சயதார்த்தம் ஆரம்பம். மதியம் விருந்துண்டு மாலை போல சங்கீத் போல ஆடல் பாடல் நிகழ்ச்சி முடித்து, அன்று இரவு அங்கேயே தங்கி விட்டு மறுநாள் தான் திரும்புவதாக ஏற்பாடாகி இருந்தது..!
இதில் விசாலினி குடும்பம் மற்றும் அவளது சொந்தங்கள் சிலருக்கும் சிவஞானம் வழி சொந்தங்களுக்கும்.. பர்வதத்தம்மாள் வழி சொந்தங்கள்.. அபிராமி கணவர் வழி சொந்தங்கள்.. பார்கவியின் கணவர் வழி சொந்தங்கள் என்று அனைவரையும் அழைத்து யாருக்கும் ஒரு குறை நேராது வைபவம் அழகாய் நடந்தேறிக் கொண்டிருந்தது..!
மனதில் பிடித்தம் இல்லாவிடினும் ஊருக்காகவும் உறவுக்காகவும் வேறு வழியின்றி நீலகண்டன் பூர்ண சுந்தரி மற்றும் பூர்வாவோடு அந்த வைபவத்தில் கலந்துக் கொண்டார்.
பூர்வாவை கண்ணசைத்து இந்த பக்கம் வா என்று பிரக்யா அழைக்க மெதுவாக ஓசைப்படாமல் நழுவி சென்றவளை, அழைத்துச் சென்று அவளுக்காக தாங்கள் எடுத்திருந்த லெஹங்காவை கொடுத்தாள் பிரக்யா..!
ஆதிராவும் பிரக்யாவும் ஒரே மாதிரியான உடை அலங்காரம் தலைஅலங்காரம் என்று இருக்க அவளுக்கும் அதே மாதிரி செய்து விட,
“அக்கா.. அக்கா எனக்கு ஏன்?” என்று பூர்வா தயங்க..
“ஏய் என்ன பேச்சு இது? நான் உனக்கு அக்கானா.. என்னோட மாமா உனக்கு மாமா தானே? ஒழுங்கா அமைதியா இரு.!” என்று அவளை கட்டாயப்படுத்தி உடைமாற்றி இப்பொழுது மூவரும் ஒரே போல் அழகாய் அப்சரஸாய் அங்கே வலம் வந்தனர்..!
முதலில் மகளை காணோம் என்று தேடிய நீலகண்டன் பூர்ண சுந்தரியிடம் விசாரிக்க அவரோ “ரெஸ்ட் ரூம் ஏதாவது போயிருப்பா” என்று சமாளிக்க.. அதன் பின் வந்த மூவரையும் கண்டவர் இப்பொழுது மனைவியை அப்பட்டமாக முறைத்தார்.
வழக்கம் போல அவர் கன்னத்தில் போட்டுக் கொண்டு “எனக்கு ஒன்னும் தெரியாதுங்க” என்று அப்பாவியாய் விழித்தார்.
ஆனால் அந்த அப்பாவிக்குள்ளும் ஒரு அடப்பாவி உண்டு..!
பிரக்யாவுக்கு இவர் எடுக்கும் உடைகள் மிகப் பிடித்தம். அதுவுமில்லாமல் அவ்வப்போது கல்லூரியில் படிக்கும் நேரத்தில் அவர் தேர்ந்தெடுக்கும் உடை அந்த காம்போ எல்லாம் கேட்டு அவருக்கு அவள் ஃபோன் செய்து விசாரிப்பாள்.
“சித்தி நீங்க சிவனேனு எங்க அப்பாவை டைவர்ஸ் பண்ணிட்டு ஒரு பெரிய பொட்டிக் வச்சு நடத்துங்க வாழ்க்கையில சூப்பரா வருவீங்க” என்பாள் பிரக்யா.
“ஏன் மா உமை.. உனக்கு நான் என்ன துரோகம் பண்ணுனேன்? ஹெல்ப் கேட்டா அதோடு ஓடிடு.. உங்க அப்பன் கிட்ட என்னை கோர்த்து விடாதே” என்று சிரித்துக் கொள்வார்.
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு தனித்திறமை உண்டு..! அப்படி திறமை இல்லாத ஆட்களே இல்லை. அதை கண்டுபிடிக்க தெரியாமல் வேண்டுமானால் இருந்திருக்கலாம்.
இப்பொழுது இவர்கள் மூவருக்கும் என்ன மாதிரி உடை உடுத்தலாம் தலை அலங்காரங்கள் என்று அனைத்து ஐடியா கொடுத்ததுமே பூர்ண சுந்தரி தான்..!
கணவனுக்கு தெரியாமல் மூன்று பேரையும் அவ்வப்போது தன் ஃபோனில் போட்டோ எடுத்து அதை ஜூம் செய்து ரசித்து பார்த்தார் பூர்ண சுந்தரி.
அங்கே கனவுகள் கண்களில் மின்ன அழகாய் முழு அலங்காரத்தோடு இருந்த விசாலினி, தன் எதிரே கந்தர்வனாய் காட்சி அளித்த கதிர்நயனனை தான் கண்ணெடுக்காமல் பார்த்து இருந்தாள்.
தான் ஏங்கிய தருணம்.. சில வருடங்களாக காத்திருந்த தருணம் இது... அது வந்து விட்டது என்பது போல அவள் முகம் அத்தனை மகிழ்ச்சியாய் இருக்க..
அருகில் நின்ற அபிராமியோ “போதும் விசா என் தம்பியை கண்ணாலே கடிச்சு சாப்பிடாதே” என்று கூற அவளோ வெட்கப்பட்டு சிரித்தாள்.
நிச்சய தாம்பூலம் வாசித்து நல்ல நேரத்தில் மோதிரம் மாற்றிக்கொள்ள அழைக்க.. விசாலினி சந்தோஷமாக கதிர்நயனனுக்கு வாங்கிய மோதிரத்தோடு காத்திருந்தாள்.
அப்போது சிவஞானம் “மோதிரம் மாத்திக்கிற பழக்கம் எங்களுக்கு இல்ல.. அதுக்கு பதில் பொண்ணோட நாத்தனார் பொண்ணுக்கு நகை அணிவிப்பாங்க” என்று ஒரு பெரிய நெக்லஸ் அதன் உடனான ஆரத்தை எடுத்து அபிராமியின் கைகளில் கொடுக்க.. அவர் பெருமிதமாக தன் கணவன் வீட்டாரை பார்த்து அதை விசாலினிக்கு அணிவித்தார்.
அதன் பின் மதியம் விருந்து தடபுடல் பட… அனைவரும் ஓய்வெடுத்து மாலை போல சங்கீத்கிற்காக வந்தனர்.
இப்பொழுது மூவரும் வேறு உடையில் இருந்தனர். ஆனாலும் அதே ஒன்று போல உடை அலங்காரம் என்று அனைவரையும் அன்று கவர்ந்தது இவர்கள் மூவரும் தான்.
அபிராமியோ பூர்ண சுந்தரியிடம் முறைக்கு கூட பேச மாட்டார். ஆனால் பர்வதத்தம்மாள் நன்றாகவே பேசுவார்.
முறைக்கு பூர்வாவும் அவருக்கு பேத்தி தானே மூவரின் அழகை கண்டு “பூர்ணா வீட்டுக்கு போன உடனே மறக்காம பூர்வாவுக்கு சுத்தி போடு” என்றார்.
“ஆமாமா நீங்களும் மறக்காம மத்த ரெண்டு பிள்ளைகளுக்கு சுத்தி போடுங்க.. இன்னிக்கு மூணு பேரும் தான் இங்கே கண்ணை நிறைக்கிறாங்க எத்தனை கொள்ளி கண்ணுங்களோ” என்று இருவரும் பேசிக் கொள்வதை ஒரு வெறுப்போடு பார்த்தார் அபிராமி.
அதன்பின் இரவு நேரம் இளையவர்கள் ஆடல் பாடல் என்று கழிய, சில தொழில்முறை நண்பர்களும் அப்போது வந்திருக்க அவர்களுக்கு தனியாக லிக்கர் பார்ட்டியும் அங்கே நடந்தது..!
பிரக்யாவோடும் பூர்வாவோடும் சேர்ந்து நடனமாடிய ஆதிராவை கண்டு கோபம் வந்தது
அபிராமிக்கு.
சின்னவர்களின் கட்டாயத்தினால் மெல்லிய சிரிப்போடு விசாலினியின் கைப்பற்றி ஒரு பாட்டின் சில வரிகளுக்கு நடனம் ஆடினான் கதிர்நயனன்.
மோதிரம் மாற்றிக் கொள்ளவில்லையே என்ற வருத்தம் அவன் கைதொட்டு ஆடியதும் பறந்து போனது விசாலினிக்கு.
அன்று முழுவதும் நீலகண்டனும் அங்கே தான் இருந்தார். காரணம் பெரிதாக ஒன்றும் இல்லை.. தொழில் வட்டாரங்கள் குடும்ப சொந்த உறவுகளுக்கு முன்னே தங்களுக்குள் நடக்கும் பனிப்போரை காட்ட விரும்பவில்லை அவர்.
பெண்கள் மூவரும் சிரித்து பேசுவது ஒரே மாதிரியாக அலங்காரம் செய்துக் கொள்ளவது நடனம் ஆடுவது என்று மூவரும் ஒன்றாக சுற்றிக்கொண்டு இருப்பதை நீலகண்டன் கண்கள் சற்று வெறுப்போடுதான் பார்த்தன.
“பூர்வாவை கூட்டிட்டு வா கிளம்பலாம்” என்று நீலகண்டன் ஆணைக்கு கீழ்ப்படிந்து வழக்கம் போல குடுகுடுவென்று ஓடினார்.
மகளோ “என்னம்மா அதுக்குள்ள?” என்று கோபப்பட, கண்களால் மகளிடம் கெஞ்சி கொஞ்சி மற்றவர்களிடமும் விடை பெற்று கிளம்பினார் பூர்ணசுந்தரி குடும்பத்தோடு.
அன்று இரவு பார்ட்டி சங்கீத் எல்லாம் முடிந்தது ஆட்டம் போட்ட உடம்பு எல்லாம் ஓய்வெடுக்க மறுநாள் நண்பகல் வேளையில் அனைவரும் வீட்டிற்கு திரும்பினர்.
அன்றே கல்லூரி திரும்ப போவதாக கூறிய பேத்தியை கண்டு சிவஞானமும் பர்வதத்தம்மாளும் திடுக்கிட, அவளோ அடமாக அங்கிருந்து கிளம்பினாள். கதிர்நயனனும் எவ்வளவோ கூறி பார்த்து விட்டான், அவள் கேட்கவே இல்லை.
“வர வர உன் பிடிவாதம் ஜாஸ்தியாகுது சின்னு. இதெல்லாம் சரியில்ல பார்த்துக்கோ” என்று மாமன் திட்டினாலும் அமைதியாக இருந்து நினைத்ததை சாதித்துக் கொண்டாள்.
“புள்ள மூஞ்சில ஒளியே இல்லங்க.. வந்தப்ப ஒரு வாரம் இருக்கிறேன்னு சொன்னா.. இப்போ இரண்டே நாளு இருந்துட்டு ஓடுறா? என்னதான் நடந்துச்சுன்னு தெரியலையே?” என்று பேத்திக்காக அழும் மனைவியை சமாதானப்படுத்திய சிவஞானம்,
“என்ன வழக்கம் போல உன் பொண்ணு தான் பேசி அவளை காயப்படுத்தினா” என்றதும் அவர் கேள்வியாய் பார்க்க “ஆமா நானே கேட்டேனே…”
“விசாலினி கிட்டயும் அவங்க அம்மா கிட்டயும் ‘நீ முதல்ல வீட்டுக்கு வந்ததும் இவளை தான் ஒளிச்சு கட்டணும்.. என் தம்பியோட பாதி வருமானத்தை இவ தான் தின்னு தீர்க்கிறா.. இந்த லட்சணத்திற்கு டாக்டர் படிக்க வேற லட்ச லட்சமா கொட்டி கொடுக்கிறான் என் தம்பினு’ அவங்க கிட்ட பேசிட்டு இருந்ததை கேட்டு எனக்கே ஒரு மாதிரி இருந்துச்சு. இப்பதான் புரியுது அவங்க பேசுனதை நான் மட்டும் கேட்கல சின்னுவும் கேட்டு இருக்கானு” என்று வருத்தமாக கூறினார் சிவஞா
னம்.
“நமக்கு பின்னால சின்னுவை யாருங்க பார்த்துக்குவா?” என்று அவர் வருத்தப்பட..
அவர் வருத்தப்பட்ட மாதிரி.. அடுத்த ஐந்தாவது மாதத்தில் பிரக்யா கர்ப்பம் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.
