அத்தியாயம் 17
“இங்கே பிரக்யான்றது யாரு மா?” என்று கேட்ட காவல் அதிகாரியின் அதிகார குரலில் கூடி இருந்த கூட்டமே சற்று மிரட்சியோடு பார்த்தது அவளை..!
கதிர்நயனனோ சிறிது நேரம் வந்து மருமகள் மருமகனை வாழ்த்தி விட்டுச் சென்று விட்டான்.
அனைவரும் அதிர “என்ன.. என்ன விஷயம்? எதுக்கு பிரக்யாவை தேடுறீங்க?” என்று சிவஞானம் தம்பதி பதற..
அபிராமியின் மாமியாரோ இதுதான் சமயம் என்று “ஏன் அபிராமி.. உன் அக்கா பொண்ணு என்ன தப்பு பண்ணுனா? போலீஸ் தேடி வர அளவுக்கு?” என்று மருமகளிடம் நக்கலாக பேச..
இதுவரை ஒரு சொல் சொல்லாத மாமியார் இன்று பிரக்யாவினால் தன்னை நக்கலாக கீழாக பார்க்கிறார் என்று அவமானமாக உணர்ந்தார் அபிராமி.
அக்கா மகள் அந்தளவு ஒன்றும் செய்திருக்க மாட்டாள் என்ற நம்பிக்கை இருக்க..
“ஒருத்தவங்கள போலீஸ் தேடி வந்தா அவங்க குற்றவாளினு அர்த்தம் கிடையாது. ஏதாவது விவரம் கேட்க கூட தேடி வரலாம்?” என்று மாமியாரிடம் பேசிவிட்டு,
“என்ன சார் விஷயம் சொல்லுங்க? இவ தான் பிரக்யா. என் அக்கா பொண்ணு” என்று தைரியமாகவே காவல்துறையை எதிர்கொண்டார் அபிராமி.
“ஓஹ் அப்படியா.. இந்த பொண்ண. கொஞ்சம் விசாரணை பண்ணனும்.. எங்க கூட ஸ்டேஷன் அனுப்பி வைங்க” என்றார், சற்று பெரிய மீசையுடைய காவல் துறை..!
“எதா இருந்தாலும் இங்கேயே விசாரணை பண்ணுங்க, ஸ்டேஷனுக்கு எல்லாம் அனுப்ப மாட்டோம்” என்று பிடிவாதமாக மறுத்தார் சிவஞானம்.
அந்த பெரிய மீசை காவல்துறையுடன் கூட வந்த மற்றொருவரோ “சார் பொம்பள புள்ளையா இருக்கு. எதுக்கு போலீஸ் ஸ்டேஷன் வீணா அழைச்சுட்டு போயி.. அது வேற பேராயிடும். இங்கேயே விசாரிப்போம்” என்றார்.
பெரிய மீசையும் சரியென்று “சரிமா.. இப்படி வா” என்று அழைக்கவும் பயந்து தாத்தா அம்மம்மாவின் கைகளை இறுக்கப்பற்றிக் கொண்டாள் பிரக்யா.
“நாங்க இருக்கோம் சின்னு நீ எதுக்கு இப்படி பயப்படுற? தைரியமா இருக்கணும் டா” என்று சிவஞானம் எவ்வளவு எடுத்துக் கூறியும், ரயில் பெட்டி போல் வேகமாக தடதடக்கும் இதயத்தை அவளால் தடுக்க முடியவில்லை.
முரட்டு தேகத்தோடு மீசையை முறுக்கிய அந்த காவல்துறை “இங்க வா மா.. நீ தான் பிரக்யாவா?” என்று சற்று அதட்டலாக கேட்க.. தொண்டையில் எச்சில் விழுங்கியபடி ஆமாம் என்று தலையசைத்தாள் பிரக்யா.
“ஆமா உன் கூட தான் எப்பொழுதும் சுத்திட்டு இருக்குமே அந்த பிரீத்தி பொண்ணு. அது எங்க இப்போ? யார் கூட போச்சு? நீதான் ஏதோ அதுக்கு ஹெல்ப் பண்ணினேனு பேசிக்கிறாங்க உங்க ஸ்கூல்ல” என்றதும் அவளுக்கு தூக்கி வாரி போட்டது.
‘அடிப்பாவி பிரீத்தி..! என்னடி பண்ணி தொலைச்ச?’ என்று மனதுக்குள் பயந்தவள்,
“சார் ப்ரீத்தி என் பிரண்டு தான். ஆனா என்ன பண்ணுனானு எனக்கு எதுவும் தெரியாது சார்” என்றாள் பயம் தெளியாமல்.
“என்னம்மா நீ ஒன்னும் தெரியாதுன்னு சொல்ற.. ஆனா யாரை கேட்டாலும் ப்ரீத்தி பத்தி என்ன தெரிஞ்சுக்கணும்னாலும் பிரக்யாவை கேட்டா தெரியும்னு சொல்றாங்க.. அந்த பொண்ணு கடைசியா உன்னை பார்க்க தான் வந்தேன்னு இன்னைக்கு காலையில கிளம்பி வந்து இருக்கு.. நேரமாகியும் வரலைன்னு அந்தப் பெண்ணோட பெத்தவங்க போலீஸ் ஸ்டேஷன்ல வந்து கம்ப்ளைன்ட் பண்ணி இருக்காங்க.. நாங்க ஸ்கூல்ல டீச்சர் கிட்ட விசாரிச்சா எல்லாரும் உன் பேரை தான் சொல்றாங்க..” என்றதும்,
பிரக்யாவுக்கு உலகமே தட்டாமாலை சுற்றியது.
ஒருத்தி கூட உண்மையா நட்பா இருந்தது தப்பா? அவ ஏதோ தப்பு செஞ்சா அந்த தப்புக்கு நான் துணை போன மாதிரி என்னை வந்து கேட்குறாங்களே? என்று உள்ளுக்குள் நடுங்கியவள்,
“சார்.. பரீட்சை முடிஞ்சு லீவ் விட்டு நாலு நாள் ஆகுது சார். இடையில ஒரு தடவை மட்டும் தான் என்கிட்ட அவ போன்ல பேசுனா. மத்தபடி நாங்க ரெண்டு பேரும் பார்த்துக்கவே இல்ல சார்.. நானும் எங்க அம்மம்மா வீட்ல தான் இருக்கேன். எங்க வீட்ல இல்ல..” என்றாள் தன்னை புரிய வைத்துவிடும் நோக்கில்..!
“ஓஹ்.. உன்னோட தாத்தா பாட்டி யாரு காட்டு?” என்றதும் அருகில் நின்ற இருவரையும் காண்பித்தாள்.
“நீங்க ??” சிவஞானத்தை பார்த்து கேட்க..
“நான் சிவஞானம்..!” என்று தான் செய்யும் தொழிலை எல்லாம் எடுத்துக் கூறி நீலகண்டனையும் அவரின் தொழிலை கூறி “அவர் தான் என்னுடைய மாப்பிள்ளை பிரக்யாவோட அப்பா. இப்போ வெளியூர் போயிருக்கார்” என்றார்.
மருமகன் இரண்டாவது மனைவியையும் இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தையையும் அழைத்துக் கொண்டு, அடுத்த தேன் நிலவுக்கு சென்றதை சொல்லாமல் மறைத்து..!
“உனக்கு தெரிஞ்ச எல்லாம் ஒன்னும் விடாம சொல்லுமா” என்று மீண்டும் பிரக்யாவிடமே அவர்கள் அதிகாரமாக கேள்வி கேட்க.. சற்றென்று பர்வதம் பேத்தியை தன் பின்னால் மறைத்து,
“சின்ன பிள்ளை கிட்ட இப்படி தான் அதிகாரமாக அதட்டலா பேசுவீங்களா? அவ என்ன குற்றவாளியா? விசாரிக்க தானே வந்தீங்க..” என்று பர்வதத்தம்மாள் கோபத்தோடு காவலர்களை கேட்க அதற்குள் அங்கே வந்த ரவீந்திரன்,
“சார்.. சின்ன புள்ள அதுவும் பொம்பள பிள்ளை கிட்ட பக்குவமா நீங்க விசாரிக்கலைனா.. நாங்களும் உங்க மேல கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டி இருக்கும்” என்றார்.
“சார்.. இது ஜஸ்ட் என்கொயரி தான். உங்க பொண்ணு மாதிரி தான் அவங்க பொண்ணும் சின்னப் பொண்ணு. அவங்க பதறுவதிலும் ஒரு நியாயம் இருக்குதானே? இந்த பொண்ணு தான் முழுமூச்சா அவங்க பொண்ணுக்கு ஃபோன் எல்லாம் கொடுத்து உதவி பண்ணி இருக்கு. நீங்களே ஆமாவா இல்லையானு கேளுங்க?” என்றதும் இப்பொழுது மொத்த குடும்பமும் திரும்பி குற்ற பார்வை பார்த்தது பிரக்யாவை.
இங்கே வந்து போலீஸ் விசாரிக்கவும் உடனடியாக மகனை அழைத்து விஷயத்தை கூறி “அபிராமி வீட்டுக்கு சீக்கிரம் வா” என்று தகவல் கொடுத்து விட்டார் சிவஞானம், கதிர்நயனனுக்கு.
“என்னது போலீசா? சின்னுவையா?” ஏன் எதற்கு என்று காரணம் தந்தை கூறாததால் பதறிப் போய் அவனும் வேகமாக வந்துக் கொண்டிருந்தான்..
இப்பொழுது அபிராமியின் மூன்றாவது கண்ணின் கோபம் பிரக்யாவும் மேல் விழுந்தது. பாட்டியின் பின்னால் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தவளின் புஜத்தை பிடித்து இழுத்து அனைவருக்கும் நடுவில் நிறுத்தி.. இரு தோள்களையும் பிடித்து உலுக்கி “சொல்லுடி ஃபோன் எல்லாம் கொடுத்தியா நீ? ஏன் டி ஃபோன் எல்லாம் கொடுத்த? சொல்ல போறியா இல்லையா?” என்று கேட்க..
ஏற்கனவே சின்ன பெண்.. பயந்திருந்த பெண் வேறு.. அம்மா இல்லாமல் போஷாக்கு இல்லாமல் வளர்ந்த பெண்.. இவரின் உலுக்குதலை தாள மாட்டாமல் துவண்டு போய் “இல்ல சித்தி.. நான் ஒன்னும் ஃபோன் கொடுக்கல.. அது ஸ்கூல்ல மிஸ் பர்மிஷன் ஓட தான் நான் யூஸ் பண்ணுவேன். ஒரு தடவை லஞ்ச் இன்டர்வல்ல அவ அர்ஜெண்டா வீட்டுக்கு பேசணும்னு சொல்லி பேசினா அதுக்கப்புறம் ஒன்னும் பேசல சித்தி” என்றாள்.
“அபிராமி புள்ளய விடு.. இந்த உலுக்கு உலுக்குற அவள.. ஏற்கனவே பயந்து இருக்கா” என்று பேத்தியை தன் முந்தானைக்குள் பொத்திக் கொண்டார் பர்வதத்தம்மாள்.
“இந்த வயசுல இவளுக்கு எதுக்குமா ஃபோன்? யாரு இவளுக்கு ஃபோன் வாங்கி கொடுத்தா?” என்றவர், பின் பிரக்யா புறம் திரும்பி “உனக்கு யார் ஃபோன் கொடுத்தா? யார் வாங்கி கொடுத்தா?” என்று அதட்டி கேட்டார்.
“போதும் நிறுத்து அபிராமி..! ஃபோன் நான் தான் வாங்கி கொடுத்தேன். அதுவும் அது பட்டன் ஃபோன். எந்த ஆப் நெட் எதுவும் யூஸ் பண்ண முடியாது. ஒரு அர்ஜென்ட்க்கு கைல எப்பொழுதும் இருக்கட்டும்னு நான் தான் வாங்கி கொடுத்தேன்” என்று பேசிய தந்தை முன் வாயை அவரால் திறக்க முடியவில்லை.
இல்லை என்றால் ஃபோன் மூலமாக இவள் கெட்டே போய்விட்டதாக கூறினாலும் கூறுவார்..!
அபிராமி இங்கே விசாரித்துக் கொண்டிருக்கும் நேரத்தில்..
அந்த இரண்டு காவலர்களில் ஒரு காவலருக்கு இன்ஸ்பெக்டரிடம் இருந்து ஃபோன் வர..
“ஐயா ஆமாங்கய்யா இங்கதான் இருக்கோம். அந்த பொண்ணு இங்க தான் இருக்கு. விசாரிச்சிட்டு இருக்கோம்யா..”
….
“அந்த பொண்ணுக்கு எதுவும் தெரியாதுனு சொல்லுதுங்க யா..”
….
“அந்த பொண்ணு விசாரிக்க கூட்டிட்டு போறோம்னு சொன்னா அனுப்ப மாட்டேங்கிறாங்கயா..” என்று சுற்று மட்டும் பார்த்தவர் சிறிய குரலில் “அந்த பெண்ணும் கொஞ்சம் பெரிய இடம்தானுங்கயா..”
….
“சரிங்கயா.. நீங்க வர வரைக்கும் நாங்க இங்கேயே இருக்கோம்..”
என்றவர் திரும்பி அங்கிருந்தவர்களிடம் “இந்த பொண்ண விசாரிக்க எங்க இன்ஸ்பெக்டர் ஐயா நேரா வர்றாரு. அதுவரைக்கும் நீங்க யாரும் இங்கிருந்து போகக்கூடாது” என்று பெரிதாக கட்டளையிட்டார்.
பிறந்தநாள் விழாவுக்கு என்று அழைத்திருந்த பலரும் இதனைக் கேட்டு முகம் சுளித்தனர்.
“இவங்க வீட்டு பொண்ணு தப்பு செஞ்சா.. அந்த பொண்ண தானே கூப்பிட்டு விசாரிக்கணும்? விழாவுக்கு வந்தவங்கள பிடிச்சு வைப்பீங்களா?” என்று ஒரு பெண்மணி முகத்தை சுளித்தார் பிரக்யாவை பார்த்து..
“கரெக்ட்..! நாங்களும் சமூகத்தில் நல்ல இடத்துல இருக்குறவங்க.. இந்த விஷயம் தெரிஞ்சா எங்க மேல யாரும் சந்தேகப்பட மாட்டாங்களா? நீங்க என்ன பேசினாலும் அந்த குடும்பத்தோட பேசுங்க.. நாங்க கிளம்புறோம்.!” என்ற ஒரு மாமனிதர் ரவீந்திரனிடம் “வீ ஆர் லீவிங் நவ்” என்று கிளம்பினார்.
வந்திருந்த காவலர்களாலும் ஒன்று சொல்ல முடியவில்லை. அவர்கள் சொல்வதும் உண்மைதானே? விசாரிக்க போவது பிரக்யாவை. அவளும் அவளுடைய குடும்பம் மட்டும் இருந்தால் போதும். விழாவுக்கு வந்தவர்களையும் கட்டுப்படுத்த அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லையே? என்று “சரி சரி நீங்க எல்லாம் போகலாம்” என்றார் ஏதோ பெருந்தன்மையாக கூற…
விழாவுக்கு வந்திருந்த மொத்த பேரும் பிரக்யாவை ஏதோ அயல் கிரகத்து ஜந்து போலவே பாவித்து அபிராமியிடம் விடைபெறும் போது “நீ எதுக்கும் ஜாக்கிரதையாக இருந்துக்கோ.. உனக்கும் ஒரு பொம்பள புள்ள இருக்கு” என்று எச்சரித்து விட்டு செல்ல..
ஒரே நாளில் இல்லையில்லை ஒரே இரவில்.. இத்தனை நாள் தான் சம்பாதித்து வைத்திருந்த சமூக அந்தஸ்து டமால் என்று கீழே போட்டு உடைந்தது போல உணர்ந்தார் அபிராமி.
‘அனைத்துக்கும் காரணம் இவள்..! இந்த சின்ன சிறுக்கி..! இந்த வயசுல என்னென்ன வேலை எல்லாம் பார்த்து இருக்கா.. ரெண்டு பேரை கோர்த்துவிட்டு மாமா வேலை பார்த்து இருக்கா..’ என்று கடுங்கோபம் கொண்டார்.
கோபம் மட்டுமா? எவ்வளவு ஆசை ஆசையாக தன் இரட்டை பிள்ளைகளுக்கு ஏற்பாடு செய்திருந்த பிறந்தநாள் விழாவையே கெடுத்து விட்டாளே பாவி..! வந்திருந்தவர்கள் எல்லாம் எங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்? இத்தனை நாள் சம்பாதித்து வைத்திருந்த அந்தஸ்தை நொடியில் போட்டு சுக்கு நூறாக உடைத்து விட்டாளே..! என்று ஆத்திரம் கண்ணு முன்னு தெரியாமல் வர.. சிறு பெண் என்றும் பாராமல்.. அவள் எந்த தவறும் செய்யவில்லை என்று புரிந்துக் கொள்ள இயலாமல்.. அவள் கன்னத்தில் மாறி மாறி இரண்டு அறைகள் விட்டார் அபிராமி.
ஏற்கனவே போலீஸ் வந்து தன்னை விசாரித்தது.. தான் ஏதோ குற்றம் செய்தது போலவே உள்ளுக்குள் பயந்து போயிருந்த பெண்ணவளுக்கு.. சித்தியும் தன்னை குற்றம் சாற்றி பேசியது.. செல்லும் மக்கள் அனைவரும் தன்னை ஏதோ குற்றவாளி போல பார்ப்பது.. என்று உள்ளுக்குள்ளையே நடுங்கிக் கொண்டிருந்தாள்.
அதில் அபிராமியின் அடி மிக வலிக்க.. தொய்ந்து போனவளை சட்டென்று தாங்கி பிடித்தான் கதிர்நயனன்.
“மாமா.. நான் தப்பு செய்யல மாமா..” என்று மெல்ல முணங்கியவாறு கண் மூடினாள் பிரக்யா..!
அங்கிருந்தவர்கள் பதற.. அபிராமியை திட்ட.. என்று வீடு அல்லோலகலப்பட்டது.
அங்கே வீடே ரணகளமாய் இருக்க, வந்து இறங்கினார் இன்ஸ்பெக்டர். கூடவே அந்த பெண்ணின் பெற்றோரையும் அழைத்து வந்திருந்தனர்.
