Thread starter 03/08/2026 4:50 pm
அத்தியாயம் 16
காவேரி ஆற்றின் வளமான மண்ணும், விவசாயிகளின் நீர் மேலாண்மையும், "தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்" என்று அழைக்கப்படும் தஞ்சை..! பார் போற்றும் பெருவுடையார் கோவிலை அகத்தே கொண்டது..!
அகரதிருநல்லூர்…!
தஞ்சை பெரு நகரில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஊர்..!
இன்னும் பல சிறப்பம்சங்களை கூறிக் கொண்டே செல்லலாம்.. தஞ்சையை பற்றியும் அதன் பெருமைகளை பற்றியும்..!
அகரதிருநல்லூரின் பெரும் தனக்காரரான, சிவஞானம் பர்வதம் தம்பதிகளுக்கு இரண்டு பெண் மக்கள்..!
சிவனின் மீது அதிக பக்தியும் ஈடுபாடு கொண்ட சிவஞானம் தன் பெண்களுக்கு சிவனின் சரிபாதியான பார்வதி தேவியின் பெயர்களான பார்கவி, அபிராமி என்று பெயர் சூட்டி அழகு பார்த்தார்.
“இவ்வளவு சொத்து சுகம் இருந்து என்ன பிரயோஜனம்? அதை கட்டியாள ஒரு ஆண் வாரிசு வேணாமா?” என்று ஊரே கேட்டாலும்…
ஒரு புன் சிரிப்போடு “எனக்கு இருக்குற சொத்தை என் பொண்ணுங்க ஆண்டா போதும். நம்மள எல்லாம் கட்டி ஆண்ட பரம்பரையின் வாரிசு இப்ப எங்க இருக்காங்கன்னு தெரியல?” என்பார்.
ஆண் என்ன? பெண் என்ன? தத்தம் வாரிசுகளை நன்முறையில் வளர்த்து ஆளாக்கி நல்ல பெயருடன் மற்றவர்களுக்கு உதவி செய்யும் எண்ணத்துடன் இப்புவிதனில் வாழ வைக்க வேண்டும் என்பதே அவருடைய பெரும் நோக்கமாகவே இருந்தது.
மூத்தது மூளை.. இளையது காளை..! என்பார்கள். அதுபோல பார்கவி அமைதியும் பொறுமையும் நிறைந்த குழந்தையாக இருக்க…
அதற்கு நேர்மாறாக அபிராமி சற்று துடுக்காக வாய் பேசும், அதே நேரத்தில் பொறுமையா? அது எங்கே கிடைக்கிறது? எவ்வளவு விலை? என்று கேட்கும் ரகமாக வளர்ந்தார்.
சில நேரங்களில் அவரின் இந்த துடுக்கான பேச்சுக்கு காரணம் நம் சமூகமும்.
“இவளாவது ஆம்பள புள்ளையா பொறந்து இருக்கலாம்.! ம்ஹீம்..!” என்றவர்களை கண்டு அவருக்கு சுருக்கு என்று உள்ளே நெருஞ்சி முள் குத்தும்.
அபிராமியும் சிறு குழந்தை தானே? “ஏன் நான் பொறந்ததுனால என்ன குறைச்சல்?” என்று சண்டைக்கு செல்லும் மன பாவனைக்கு வந்திருந்தார் அவர்.
அது முதல் யார் ஆண் வாரிசு பற்றி கேட்டாலும் அபிராமியின் துடுக்கான பேச்சே பதிலாய் வரும்.
இரவு குழந்தைகள் தூங்கியதும் கணவன் மனைவி இருவரும் அமர்ந்து, குழந்தைகள் பற்றி.. வருங்காலத்தை பற்றி.. குடும்ப நிலைமை தொழில் என்று அனைத்துமே பேசிக் கொள்வார்கள்.
“ஏங்க.. இந்த சின்ன குட்டி வரவர பேசுறது செய்றது எதுவுமே எனக்கு சரியா படலங்க.. முணுக்குனா மூக்குக்கு மேல அவளுக்கு கோபம் வருது. இதெல்லாம் சரி இல்ல.. போற இடத்துல எப்படி பிழைக்க போறாளோ? எல்லாத்துக்கும் இப்படி சண்டை போட்டு ரசவாதம் பண்ணா குடும்பம் எப்படி நல்லா இருக்கும்?” என்று அன்னையாய் அவர் கவலை..!
“ஏ பரு.. ரெண்டு பேருமே சின்ன பசங்க.. அதுக்குள்ள நீ என்ன கல்யாணம் குடும்பம்னு ஆரம்பிக்கிற?” என்று ஆதூரமாக உறங்கும் மகள்களின் தலையை மென்மையாக வருடினார் சிவஞானம்.
“ரொம்பத்தான்..! நான் குடும்பத்தை மட்டும் சொல்லல நீங்க சொல்றீங்களே என் பொண்ணுங்க தான் என் சொத்துக்கு வாரிசு வாரிசுனு. அந்த சொத்தை ஆளணும்னாலும் அதுக்கு பொறுமையும் நிதானமும் தேவை. அது உங்க சின்னப் பொண்ணு கிட்ட மருந்துக்கும் கூட கிடையாது. இவள நம்பி நீங்க தொழிலை கொடுத்தா தொழிலாளர்களை என்ன பாடுபடுத்த போறாளோ?” என்று தாடையில் கை வைத்து அதிசயத்தார் பர்வதம்.
“அதெல்லாம் போகப் போக என் பொண்ணு சரியா வளந்துருவா.. எனக்கு நம்பிக்கை இருக்கு..!” என்றவரின் நம்பிக்கையை பொய்யாக்கும் படி தான் நடந்துக் கொண்டாள் அபிராமி.
அவளது அந்த மூக்குக்கு மேல் கோபம் வெளியிடத்தில் மட்டுமல்ல அக்காவிடமே வர தொடங்கியது.
அக்காவாய் பார்கவி தங்கையிடம் “இது நீ படிச்சிட்டியா? “இந்த வேலை செஞ்சிட்டியா?” என்று ஒரு கேள்வி அவரை கேட்டு விடக்கூடாது..!
உடனே பாய்ந்துக் கொண்டு “நீ எப்படி என்னை கேட்கலாம்? நீ அக்கா தான் அம்மா இல்ல..!” என்று முகத்தில் அடித்தாற் போல் பேச ஆரம்பித்தார் அபிராமி.
அதுவும் இல்லாமல் ‘அமைதியான பொண்ணு, நல்ல அறிவு கூட.. ஆனா திமிருல்லாத அடக்கமான பொண்ணு’ சுற்றத்தாரிடையே பார்கவிக்கு நல்ல பெயர்..! அதெல்லாம் பார்க்க பார்க்க சிறு வயது முதல் அக்காவின் மேல் பொறாமை பெருந்தீயாய் வளர்ந்தது அபிராமிக்கு.
அந்தத் தீக்கு நெய் ஊற்றுவது போல பார்கவியின் 15 ஆவது வயதில் சிவஞானம் பர்வதம் எதிர்பார்க்காமல் அவர்களுக்கு உதித்தான் கதிர்நயனன்.
“அப்பாடி உங்களுக்கு ஒரு ஆண் குழந்தை வாரிசா வந்துருச்சு.. எல்லாம் கடவுள் புண்ணியம் நீங்க செஞ்ச தான தர்மம் வீண் போகல..!” என்று ஆண் பிள்ளையை உயர்த்தி பேசுவது கூட அபிராமிக்கு பொருபொரு என்று வந்தது.
சமூகம் சில நேரங்களில் நல்லவர்களை கூட மனதளவில் கெட்டவர்களாகவும் நியாயமற்றவர்களாகவும் மாற்றுகிறது..!
அந்த வகையில் வெறும் அக்கா மீது மட்டுமே கோபம் கொண்டிருந்த பொறாமைக் கொண்டிருந்த.. அபிராமியை இப்பொழுது மொத்த குடும்பம் மீதும் ஒருவித கோபத்தை வளர்த்துக் கொள்ள இந்த சமூகம் பெரும்பங்கு ஆற்றியது.
அன்னை என்ன கண்டித்தாலும் குற்றம்..
தந்தை என்ன பேசினாலும் குற்றம்..
அக்காவாகிய பார்கவி பார்த்தாலே குற்றம்..
ஏதோ தம்பி மேல் மட்டும் சிறிதாய் ஒரு பிரியம்..!
இப்படியாக சென்றுக் கொண்டிருந்த காலத்தில், பார்கவி மேலாண்மையில் முதுகலை முடித்து அவர்களது அரிசி ஆலை மற்றும் சர்க்கரை தயாரிக்கும் ஆலை ஆகியவற்றை நிர்வகிக்க தொடங்கினார்.
கூடவே சிவஞானம் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து மகளுக்கு கற்றுக் கொடுத்தார்.
காலையில் காட்டன் புடவையில் மிடுக்கோடு கிளம்பும் அக்காவை ஒருவித வெறுப்போடு பார்த்திருப்பார் அபிராமி.
அவருக்கென்று ஒரு பி.ஏ, தனி கார் என்று ஆளுமையாக இருக்கும் அக்காவை பார்த்து அநியாயத்துக்கு பொறாமை வந்தது அபிராமிக்கு.
இருவருக்கும் நான்கு வயது வித்தியாசம்.
அபிராமி தனக்கு இன்ஜினியரிங் வேண்டாம் அப்பாவின் தொழிலை பார்த்துக் கொள்வதற்கு எனக்கு மேலாண்மை படிப்பு தான் வேண்டும் என்று அதனை தேர்வு செய்தார்.
ஆனால் அவரை காட்டிலும் தான் அதிக முக்கியத்துவம் பெற வேண்டும் என்று இன்ஜினியரிங் படிப்பை தேர்ந்தெடுத்தார் அபிராமி.
மூன்றாம் வருடத்தில் இருக்கும் அவருக்கு எப்போது பாடத்தை முடிப்போம்? எப்போது அப்பாவின் தொழிலை கையில் எடுப்போம்? என்று பரபரப்பாக இருந்தது.
ஆனால் இவரின் தான் என்ற அகம்பாவம் ஈகோ பிடித்த மனதையும் கண்டு சிவஞானம் முதலில் சொல்லி திருத்தி பார்த்தார்.
பின் திருந்தவில்லை என்றதும் “நீ நல்லா படிச்சு லைஃப்பை கொஞ்சம் என்ஜாய் பண்ணுடா.. அதுக்கப்புறம் நீ பார்த்துக்கலாம்.!” என்று அவர் மனதுக்கு ஏற்றவாறு சொல்லி திசை திருப்பி விட்டார்.
அபிராமி நான்காம் வருடத்தை முடிக்கும் நேரத்தில் பார்கவிக்கு வரன் தானாக தேடி வந்தது. அதுதான் நீலகண்டன்..!
தொழில் முறையில் மட்டுமல்லாமல் ஏதோ ஒரு உறவு முறையில் கூட இருவரும் உறவினர்கள். சமூகம் அந்தஸ்து படிப்பு என்று அனைத்திலும் இருவரும் நிகராக இருக்க.. பார்த்து பார்த்து கோலாகலமாக திருமணம் செய்து வைத்தார் தனது மூத்த மகளுக்கு சிவஞானம்.
நீலகண்டன், பெருங்குடும்பம் அதிலிருந்து வரும் செல்வாக்கு படித்து அழகான மனைவி என்று பார்கவியை திருமணம் செய்துக் கொண்டார்.
படித்த செல்வாக்குள்ள சொத்து வசதி உள்ள அழகான பெண் வேண்டும். ஆனால் அந்த பெண் வேலைக்கு செல்லக்கூடாது..! தனக்கு நிகர் சம்பாதிக்க கூடாது..!
ஆளுமையாக நிமிராக இருக்கக் கூடாது..! சுய சம்பாதியத்ததில் திளைக்கக் கூடாது..! என்று ஏக கூடாதுகள் அவரின் எண்ணத்தில்..!
பின்ன என்ன தான் வேண்டுமாம் அவருக்கு?
காலம் முழுவதும் கணவனையே சார்ந்திருக்க வேண்டும்..!
கணவனின் பெற்றோர்களுக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும்..!
கணவன் உற்றார் உறவினர்களை மதிக்க வேண்டும்.. மரியாதை கொடுக்க வேண்டும்..!
பிள்ளைகளைப் பெற்று பேணி வளர்க்க வேண்டும்..!
தான் முகம் பார்த்தாலே அதை புரிந்துக் கொண்டு அதன்படி நடக்கும் வள்ளுவனுக்கேத்த வாசுகியாய் இருக்க வேண்டும்..!
இப்படியாகத்தான் அவரது வேண்டும்கள் எல்லாம் இருக்க..!
அவரின் அனைத்து வேண்டும்களையும் தவிடு பொடியாக்கி.. கல்யாணமான மூணாவது நாளே தன் கம்பெனியை நிர்விகிக்க கிளம்பிய பார்கவியை அவருக்கு பிடிக்காமல் போனது..!
அதிலும் அவர் சத்தம் போட்டு ஆர்ப்பாட்டமாக பேசும் பொழுது, அமைதியாக நிமிர்வாக தெளிவாக பதில் அளிக்கும் மனைவியின் இந்த புத்திசாலித்தனமும் பிடிக்காமல் போனது..!
கல்யாணம் ஆகி ஆறே மாதத்தில் பார்கவியின் இந்த நடவடிக்கைகள் பிடிக்காமல் சிவஞானத்திடம் வந்து முறையிட்டார் நீலகண்டன்.
“என்ன பொண்ணு வளர்த்து வச்சிருக்கீங்க? கொஞ்சம் கூட எங்களை மதிக்க மாட்டேங்குறா.. வீட்ல அடங்கி இருக்க மாட்டேங்குறா.. எப்பொழுதும் பேக்கை தூக்கிட்டு கிளம்பிடுறா? ஆபீசுக்குன்னு சொல்லிட்டு போனா வீடு, புருஷன், மாமனார், மாமியார் எல்லாத்தையும் மறந்துட்டு சாயந்திரம் தான் வர்றா.. வீட்ல எங்க அப்பா அம்மாவை பார்க்க வேண்டாமா? வீட்டை பொறுப்பா எடுத்து நடத்த வேண்டாமா?” என்று ஆண்களின் ஒட்டு மொத்த ஆணவமாய் பேசும் மாப்பிள்ளையை கைகட்டி அமைதியாக பார்த்தவர்,
“என் பொண்ண உங்களுக்கு கல்யாணம் தான் பண்ணி கொடுத்தேனே தவிர, உங்க வீட்டுக்கு வேலை செய்யும் வேலைக்காரியா இல்ல. கல்யாணத்துக்கு முன்னாலயே தெரியும் தானே என் பொண்ணு என்னோட ஆலையெல்லாம் நிர்வகிச்சிட்டு இருந்தானு.. அப்புறம் எதுக்கு விருப்பப்பட்டு வந்து கட்டிக்க கேட்டீங்க?” என்று சவுக்கடியாய் கேள்வி கேட்ட சிவஞானத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் நீலகண்டன்.
“உங்களுக்கு இப்படிப்பட்ட வேலைக்காரி தான் வேணும்னா அதுக்கு தகுந்த இடத்துல நீங்க கல்யாணம் பண்ணி இருக்கணும். என் மக இப்படித்தான் இருப்பா” என்று அழுத்தம் திருத்தமாக கூறிய மாமனாரின் அந்த ஆளுமை சுத்தமாக பிடிக்காமல் போனது நீலகண்டனுக்கு..!
அதிலும் மாமனார் பேச பேச தன்னையே முறைக்கும் அந்த சின்ன மச்சானையும் கூட ஒரு வித வெறுப்போடு பார்த்தார்..!
ஆனால் இதை பெரிய விஷயமாக அவர்கள் வீட்டில் சொன்ன போது கூட
“ஏன்டா சிவஞானம் எவ்வளவு பொறுப்பா பொண்ண வளர்த்திருக்கிறாரு. எனக்கு தெரியாம நீ போய் அவர்கிட்ட சண்டை போட்டுட்டு வந்தியா? இந்த மாதிரி வேலையெல்லாம் வச்சுக்காத..! எங்க மருமக எங்கள நல்லாத்தான் கவனிச்சிக்கிறா. இந்த மாதிரி எல்லா திறமையும் உள்ள பெண் கிடைக்கிறது அபூர்வம், ஏன் வரம் கூட. புரிந்து நடந்துக்கோ..!” என்று நீலகண்டனின் அம்மாவும் அப்பாவும் மருமகளுக்கு சாதகமாக பேசினார்கள்.
என்னதான் வெளியில் வேலை பார்த்தாலும், வீட்டுக்குள் மாமனார் மாமியாரை மரியாதை குறைவாக நடத்தியதோ பேசியதோ கிடையாது பார்கவி.
இப்படியாக பார்கவியின் மேல் அவரின் வெறுப்பு உச்சம் தொட்டாலும்.. குடும்பம் அதுபாட்டில் தான் சென்றுக் கொண்டிருந்தது..!
திருமணமான முதல் ஆண்டுக்குள்ளேயே பிரக்யாவை பெற்றெடுத்தார் பார்கவி.
சிவஞானம் ஆசையாக பேத்திக்கு உமையாள் என்று பெயர் வைக்க..
“அது என்ன உமையாள்? பழைய பெயரா இருக்கு. அதெல்லாம் வேண்டாம் நான் டிரெண்டா புதுசா தான் பேர் வைப்பேன் என் பொண்ணுக்கு” என்று அடம் பிடித்தவர் தேர்வு செய்ததுதான் பிரக்யா.
பின் பிரக்யா உமையாள் என்று நாமம் சூட்டப்பட்டாள்.
நீலகண்டனின் குணம் அறிந்து பெரும்பாலும் அவருடன் வாக்குவாதம் கொள்ளாமல் அமைதியாகவே அனைத்தையும் கடந்து வந்தார் பார்கவி.
முதல் மாப்பிள்ளை தான் இப்படி ஆகிவிட்டது. அடுத்த மாப்பிள்ளையாவது பார்த்து பார்த்து பார்க்க வேண்டும் என்று பார்த்தவர் தான் ரவீந்திரன்.
நீலகண்டவன் போல் எடுத்தெறிந்து பேசும் குணமும் மரியாதையின்றி பேசும் ரகமோ அவர் கிடையாது.
அமைதியாக பேசும் நல்லவர். ஆனால் என்ன திருமணம் ஆன இரண்டாவது மாதமே பொண்டாட்டி தாசன் ஆகிவிட்டார்.
ஒரு மாப்பிள்ளை அப்படி..! மற்றொரு மாப்பிள்ளை இப்படி..!
எல்லாம் விதியின் விளையாட்டு என நினைத்து சிரித்து, அது செல்லும் போக்கிலேயே சிவஞானம் சென்றுக் கொண்டிருந்த வேளையில் தான்.. அவர்கள் குடும்பத்தின் அனைத்து சந்தோஷத்தையும் புரட்டி போட்டது பார்கவியின் இழப்பு..!
யாருக்கும் தெரியாமல் உள்ளுக்குள் அரித்துக் கொண்டிருந்த ரத்தப்புற்று நோயை அதன் அறிகுறியை கண்டுகொள்ளாமல் விட்டதின் பலன் அவர் உயிரையே குடித்திருந்தது..!
‘அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போது காலியாகும்!’ என்பது போல பார்கவி இருந்த மூன்றாவது மாதமே பூர்ண சுந்தரியை திருமணம் செய்துக் கொண்டார் நீலகண்டன்.
ஏற்கனவே மகள் இழந்த துக்கம் அது முடியும் முன் மருமகனின் இந்த செயல் வெகுவாக வாட்டி விட்டது சிவஞானத்தை..!
நீலகண்டன் தன் முதல் மனைவியிடம் முடியாததை எல்லாம் இரண்டாம் மனைவியிடம் செய்ய சொல்லி அதிகாரம் பண்ண ஆரம்பித்தார்.
சற்றே வசதி குறைவான வீட்டில் வந்திருந்த, அதுவும் கணவனே கண்கண்ட தெய்வம் என்று சொல்லி வளர்க்கப்பட்டிருந்த பூர்ண சுந்தரியும் அவரின் ஆட்டத்துக்கு எல்லாம் ஆடினார்.
வெளி உலகத்துக்கு என்னவோ ‘பெண் பிள்ளையை வளர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இரண்டாம் திருமணம் செய்தேன்’ என்று கூறிய நீலகண்டன் கல்யாணமான இரண்டாவது வாரமே மகளை விட்டுவிட்டு அதுவும் வயசான அம்மாவை பார்த்துக்க சொல்லிவிட்டு தேனிலவு சென்று விட்டார்.
கேள்விப்பட்ட பார்கவியின் பெற்றோருக்கு மனது ச்சீ என்று ஆனது..!
முதல் வருடம் கணவனையும் அடுத்த வருடம் மருமகளையும் பறிகொடுத்திருந்த நீலகண்டனின் தாய்க்கோ உடம்பு முடியாமல் போக பிரக்யாவை சரிவர கவனித்துக் கொள்ள முடியவில்லை அவரால்.
அவ்வப்போது பர்வதத்தம்மாளும் நயனனும் தான் அவளை சென்று பார்த்துக் கொண்டனர்.
அபிராமியின் வாய்க்கும் நீலகண்டன் வாய்க்குமே ஏக பொருத்தம்..! அதனாலே பெரும்பாலும் அவர் வீட்டுக்கு விசேஷம் தவிர மற்ற நாட்களில் தலையை காட்டி விட மாட்டார் அபிராமி.
“அக்காவின் மூலம் தான் சொந்தமே.. இப்போது அக்காவே இல்லை. பிறகு இவர் என்ன சொந்தம்?” என்பது போல தான் அக்கா மகளையும் சேர்த்து தட்டிக் கழித்து விட்டு தன் வேலையை பார்த்தார் அபிராமி, சுயநலத்தின் மறு உருவமாய்..!
கண்டிப்பில்லா வளர்ப்பில் சற்றே மெத்தனமாய், கேள்வி கேட்பவர்களை எதிர்த்து பேசுபவளாய்.. அநேக வாயாடியாய் மாறிப் போனாள் பிரக்யா.
நீலகண்டனும் மகளை கண்டு கொள்வதில்லை. பூர்ண சுந்தரிக்கும் அவர் பின்னாலே சுற்றுவதே வேலையாக இருக்க.. வயதான பாட்டியாலும் முடியாமல் போக, பிரக்யாவின் படிப்பை அவளின் மற்ற விஷயங்களை கையில் எடுத்துக் கொண்டான் கதிர்நயனன்.
முதலில் அன்பும் கண்டிப்புமாக இருந்தால்.. அவளோ தூக்கிப்போட்டு சாப்பிட்டாள்.
பின் அன்பை விடுத்து வெறும் கண்டிப்போடு அவன் நடத்த “சரியான ஹிட்லர் மாமா..! டீமன் மாமா..!” என்று டீன் ஏஜில் இருந்தவளுக்கு அந்த கண்டிப்பு பிடிக்காமல், கண்டபடி பெயர் வைக்க ஆரம்பித்தாள் மாமனுக்கு.
“ஏம்மா நீ என்னை விட்டுட்டு போன? இப்ப பாரு யார் யாரோ என்னென்னவோ பேசுறாங்க..! திட்டுறாங்க. அப்பா என்னை பார்க்கிறதே இல்லை. பாவம் பாட்டிக்கு முடியல.. அம்மம்மாவாலேயும் அடிக்கடி வந்து என்னை பார்க்க முடியல... எனக்கு இங்க இருக்கவே புடிக்கலமா. என்னையும் உன் கூட அழைச்சிட்டு போயிருக்கலாம்ல?” என்று அவ்வப்போது தாய் புகைப்படம் முன் குறைப்பட்டு அழுவாள் மகள்.
சில சமயம் அதை பார்க்கும் பூர்ணசுந்தரியும் கண்களும் கலங்கும். ஆனால் நீலகண்டனுக்கு பயந்து அவர் இருக்கும் போது பிரக்யாவிடம் நெருங்க மாட்டார் பூர்ண சுந்தரி. கணவன் இல்லாதபோது அவரின் பாசம் வெளிப்படும்.
‘ஏதோ சித்தி கொடுமை பண்ணாம நல்லவங்களா இருக்கறதுனால என்னால இங்க இருக்க முடியுது’ என்று எண்ணிக் கொள்வாள்.
பத்தாவது அரையாண்டு விடுமுறையில் அவள் அம்மம்மா வீட்டில் இருக்கும் சமயத்தில் ஆர்யா மற்றும் ஆதிராவுக்கு பிறந்தநாள் வந்தது.
எப்பொழுதுமே பிள்ளைகளின் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடுவார் அபிராமி.
அன்றும் அனைவருக்கும் அழைப்பு விடுத்து கொண்டாட, பேத்தியையும் அழைத்துச் சென்றனர் சிவஞானமும் பர்வதமும்..!
அவ்வப்போது பேத்தி தனக்குள்ளே அன்னையை தேடி சுருண்டுக் கொள்வதை கண்டவருக்கு இவ்வாறு விழாக்களுக்கு அழைத்துச் சென்றால் மனம் மாறும் என்று நினைத்தார் பர்வதம்.
முதலில் சற்று சுணக்கமாக இருந்தாலும் “அக்கா.. அக்கா” என்று அவளுடன் ஒட்டி உறவாடும் தம்பி தங்கையை விலக்காது இவளும் அவர்களுடைய சேர்ந்துக் கொள்வாள்.
இப்படி அழகாக சென்றுக் கொண்டிருந்த நேரத்தில் பிரக்யாவை தேடி போலீஸ் வந்தது..!
