அத்தியாயம் 4
“அப்படி நடந்திருக்க வேணாம்ல மாமா… அப்படி நடந்திருக்க வேணாம்ல… பாவம் இல்ல பாப்பா…” என்று அவன் நெஞ்சத்தை மஞ்சமாக்கி அழுதுக் கரைந்த வஞ்சியவளின் தலையில் தன் தாடையை பதித்த கதிர்நயனனோ..
“ஆமா டா சின்னு.. அப்படி நடந்திருக்க வேணாம் தான்..!” என்று அவன் ஆறுதல் மொழி கூற…
''எனக்குனு யாருமில்ல மாமா.. அம்மா.. அப்பா.. நீங்க.. அட்லீஸ்ட் எனக்குன்னு என் குழந்தையாவது இருந்திருக்கலாம்ல மாமா…!” என்றவளது ஏக்க குரலில், உயிரோடு மரித்தான் கதிர்நயனன்.
“உனக்குனு நாங்க யாருமே இல்லையா சின்னு?” என்றவன் அவளது தாடையை தன் நெஞ்சத்தில் இருந்து நிமிர்த்தி கண்களை கூர்ந்து பார்த்து கேட்டான்.
“இல்லைன்னு யார் சொன்னா ..?? ஊரு முழுக்க உறவு தான்.. வீடு முழுக்க சொந்தங்கள் தான்.. ஆனா.. எனக்கே எனக்குன்னு ஒரு சொந்தம் கூட இல்லையே மாமா.. கடல் முழுக்க தண்ணி இருந்தாலும் குடிக்க தண்ணி இல்லாத மாதிரி தான் என்னோட நிலைமையும்” என்றவள் இப்பொழுது தானாகவே அவனை அணைத்து நெஞ்சத்தை மஞ்சமாக்கிக் கொண்டாள்.
அந்த அணைப்பில் காதல் இல்லை.. காமம் இல்லை.. மோகம் இல்லை..!
ஏக்கம் மட்டுமே..! அதுவும் தாய்மாமனாய் அவனிடம் உரிமையாய் கேட்கும் சிறு ஏக்கம் மட்டுமே அதில் பொதிந்திருந்தது..!
“ஏன் மாமா.. அந்த கடவுளுக்கு கொஞ்சம் கூட இரக்கம் என் மேல இல்ல? அப்போ அம்மா.. அடுத்து அப்பா.. அடுத்து என் குழந்தை...” என்றவளது ஒரு கை அதி மென்மையாக தன் வயிற்றை வருடிக் கொடுத்தது.
“அப்படியெல்லாம் இல்ல சின்னு..!” அவளை சமாதானப்படுத்த ஆறுதல் மொழி கூறினாலும் அவளால் அதை ஏற்க முடியவில்லை.
“இல்ல மாமா.. அந்த கடவுளுக்கு என் மேல இரக்கமில்ல..! இறைவனாம் பெரிய இறைவன் இரக்கம் இல்லாத இறைவன்..! இரக்கமில்லாதவனாய் என் குழந்தையையும் என்கிட்ட இருந்து எடுத்துக்கிட்டான்!''
என்று கதறியவளோ அவன் நெஞ்சத்தில் தன் உள்ளங்கையால் அடித்து அழுது கதற..
அவளை இழுத்து இன்னும் தன்னோடு இறுக்கமாய் அணைத்துக் கொண்டான் கதிர்நயனன்.
அழுது கரைபவளுக்கு ஆறுதல் மொழி கூறியும் பயனில்லாமல் போக செய்வதறியாமல் திகைத்தான் நயனன்.
“பாப்பாவுக்கு ரொம்ப வலிச்சிருக்கும்ல மாமா அப்போ.. எப்படி அழுது இருக்கும் மாமா? ஒரு அம்மாவா நான் காப்பாத்த தவறிட்டேன்ல என் பாப்பாவை... போச்சே மாமா என் பாப்பா.. போச்சே மாமா..” என்று திரும்பத் திரும்ப தவறிய குழந்தையை பற்றியே இவள் அரட்டிக் கொண்டே இருந்தாள்.
தேவையில்லாம இப்போ இதை ஞாபகப்படுத்தி விட்டோமோ என்று தன்னைத்தானே நொந்துக் கொண்டான் கதிர்நயனன்.
அன்று குழந்தை தவறிய போது கூட இவ்வளவு அழுகை இல்லை அவளிடம். வெறித்த பார்வையோடு தான் எங்கோ பார்த்திருந்தாள்.
அதன் பின் அவள் அமெரிக்கா சென்று விட.. அவள் அதிலிருந்து மீண்டு விட்டாள் என்று இவன் நினைத்திருக்க..
இல்லை.. இல்லை.. அக்கணத்திலிருந்து அவள்
இன்னும் மீளவே இல்லை என்று இப்பொழுது அவளது அழுகை காட்டிக் கொண்டிருந்தது.
“என் பாப்பா மாமா.. அம்மாவே பாப்பாவா வருவாங்கன்னு நினைச்சேன் மாமா. ஆனா அவங்களுக்கு என்னை புடிக்கலையா மாமா? திரும்பவும் என்கிட்ட வராம போயிட்டாங்க..” என்றபடி விகசித்தவளை நிமிர்த்தி நெற்றியில் அழுத்தமாக முத்தம் பதித்தவனோ,
“உங்க அம்மாவுக்கு நீனா உயிருடா சின்னு” என்று அவன் மென் மொழியில் கூற..
“அப்போ ஏன் போயிட்டாங்க..?” என்று சிறு குழந்தையாய் பரிதவித்து கேட்கும் அவளின் இந்த அழுகையை காண சகிக்கவில்லை அவனுக்கு.
“ஒரு பாப்பா போனா என்ன சின்னு.. நாம பத்து பாப்பா பெத்துக்கலாம்..! ஓகே வா?” என்றதும்,
“பத்து பாப்பாவா?” என்று விழி விரித்தவளின் விழிகளில் அழுத்தமாக முத்தமிட்டவன்,
“ஆமா டா சின்னு.. ஒன்னு இல்ல ரெண்டு இல்ல பத்து பாப்பா வதவதனு பெத்துக்கலாம்.. ஓகே?” என்று அவள் முக்கோடு மூக்கு உரசி கொஞ்சினான்.
“ஆனா நீ திரும்பவும் இப்படி அழுது ஆர்ப்பாட்டம் பண்ண கூடாது போனதை நினைச்சு யோசிச்சு இப்படி அழுது மருகக் கூடாது ஓகேவா?” என்று கேட்டான்.
“போனதை நினைச்சு வருத்தப்படக் கூடாதுன்னு சொல்றது ஈஸி மாமா..! எத்தனை குழந்தை வந்தாலும் முதல் குழந்தை போல வருமா மாமா? இறந்தது என் குழந்தை மாமா.. வலி எனக்குத்தான்..!” இப்பொழுது அவன் நெஞ்சத்திலேயே முகத்தை பொதித்துக்கொண்டாள்.
“இல்ல டா சின்னு..! பாப்பா நம்ம குலசாமி ஆகிட்டா..! இனிமே அவளை குல சாமினு நினைச்சுக்கோ.. மறுபிறப்பா அவ பிறந்து வரணும்னு வேண்டிக்கோ!! கண்டிப்பா உன்னைய தேடி வருவா நம்ம மக!!" என்றதும் சிறிது சமாதானம் அடைந்தாள்.
இப்படி கலங்கி தவிக்க நிற்கிறாளே என்று மனம் வலித்தது கதிர்நயனனுக்கு. மூன்று ஆண்டுகள் என்ன செய்திருப்பா.. குழந்தை ஞாபகம் வந்தபோதெல்லாம் எப்படி கதறி அழுதாலும் அதுவும் குழந்தை மருத்துவம் தான் எடுத்து படிக்கப் போகிறேன் என்று சென்றவள் அந்த குழந்தைகளிடம் தன் குழந்தையை தேடி இருப்பாளோ என்று நினைக்க நினைக்க வலி மிகுந்தது..! எப்படி இவளை இதிலிருந்து மீட்க போகிறேன் என்று கலங்கி நின்றான்..!
அதிலும் பிரக்யாவை இவனின்றி வேறு யார் பார்த்துக் கொள்ள முடியும்? இவனே கலங்கி நின்றால் அவள் நிலை என்னவாகுவது என்று உண்மை புரிய.. கண்களை தேய்த்து தனது கண்ணீரை நிறுத்தியவன் அவளின் முந்தானையில் முகத்தை துடைத்துக் கொண்டு சற்றே தெளிந்தான்.
இந்த மூன்று ஆண்டுகளாக எந்த குழந்தையை பார்த்தாலும் கண்களில் ஏக்கமும் மனதில் பாரமாக மெல்ல அக்குழந்தையின் கன்னத்தை வருடுவாள் பிரக்யா.
தொலைந்த மகள் திரும்பவும் கிடைப்பாள் என்ற நம்பிக்கை தான் பிரக்யாவின் உடம்பையும் மனத்தையும் தேற்ற ஆதாரம்!!
கஷ்டப்பட்டு கவலையிலிருந்து மனதை திசை திருப்பி தன்னை மற்ற விஷயங்களில் ஈடுபடுத்தி சந்தோசமாக இருக்க முயன்று இருந்தாள் அவள்..! இருக்க முயன்றாள் மட்டுமே!!
என்ன இருந்தாலும் அன்னை அல்லவா? பெற்றால் மட்டுமில்லை சுமக்கும் போதே பெண் அன்னையாக உள்ளுக்குள் பிறக்கிறாள். அவ்வளவு சாதாரணம் இல்லை தானே பிள்ளையின் இழப்பும்.. அதிலிருந்து மீள்வதும்?
ஆனால் இதையெல்லாம் கதிர்நயனன் அறியவில்லை. அவன் அறியவில்லை என்பதை விட தன்னை பற்றி யாருக்கும் ஒரு விஷயத்தையும் அறிய விடவில்லை பிரக்யா இந்த மூன்று ஆண்டுகளாக..!
''இதுதான் அந்த பழசை நினைச்சு நீ அழுகுறது கடைசி..! இதுக்கு மேலே குழந்தை விஷயத்துலே நீ அழறதை நான் பார்க்கவே கூடாது சொல்லிட்டேன் சின்னு..!” என்று சற்றே அதிகாரமாக கதிர்நயனன் கூற,
''பறித்த அந்த கடவுளையே திரும்ப என்கிட்ட என் குழந்தையை கொடுக்க சொல்லுங்க மாமா நான் இனிமே அழ மாட்டேன்” என்றாள்.
இவள் புரிந்து பேசுகிறாளா இல்லை கவலையில் தன்னை மறந்து இப்படி பேசுகிறாளா என்று கதிர்நயனனுக்கு புரியவில்லை..! இப்பொழுது அவள் மனதை சமாதானப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே ஒரே குறியாக இருக்க
''சரி, ஒன்னென்னே பத்து பெத்துக்கலாம்! நீ ஓகே சொல்லு! நாமே சேர்ந்து குழந்தை பெத்துக்கலாமா?!'' என்று கண் சிமிட்டி கேட்டவனை கண்டதும் ஒரு நிமிடம் அதில் திகைத்து விழித்தவள் சற்றென்று அவனிடமிருந்து விலகி நின்று சுற்று முற்றும் பார்த்தாள்.அப்பொழுதுதான் அவள் பேசியதெல்லாம் ஞாபகம் வர அச்சோ என்று உதட்டை கடித்துக் கொண்டவள் அதற்கு மேல் அங்கே நிற்காமல் கதவை திறந்து வெளியே ஓடினாள்.
“ஏய் சின்னு பதில் சொல்லிட்டு போ டி..! பத்து போதுமா இல்ல அதுக்கு மேல பெத்துக்கலாமா?!பதில் சொல்லிட்டு போடி..!” என்று இவனும் அவள் தெளிந்து விட்டாள் என்பதிலேயே அவளை கலாய்ப்பதற்காக சத்தமாக கூறிக் கொண்டு பின்னோடு சென்றான்.
மாடி வளைவில் வேகமாக சென்றவளை கைபிடித்து இழுத்தவன் அந்த மாடி சுவற்றிலேயே இரு புறமும் அவளை சிறை எடுத்தான்.
அவளுக்கும் அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் வெட்கம் பிடுங்கி தின்றது.
‘ஏற்கனவே இரண்டு மூன்று நாட்களாக அவனின் பேச்சு நடவடிக்கைகள் எல்லாம் ஒரு மார்க்கமாக இருக்கிறது.. இதுல அவனிடமே குழந்தை வேணும்னு கேட்டு இருக்கிறோமே? கொஞ்சம் கூட உனக்கு நிதானமே இல்லை பிரக்யா..!’ என்று தனக்குத்தானே மானசீகமாக தலையில் குட்டிக் கொண்டாள்.
நூலளவு இடைவெளியில் அவள் உடலோடு நெருக்கமாக நின்றான் நயனன். சிறிது அசைந்தால் கூட அவளது மென்மைகள் அவனது முரட்டு மார்பில் உரசும் என்ற நிதர்சனம் புரிய..
“மாமா.. நான் போகணும் ஆதியும் ஆருவும் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க” என்றாள் வெளி வராத குரலில்..
“தாராளமா போ..! ஆனா அதுக்கு முன்ன என்கிட்ட பதில் சொல்லிட்டு போ” என்றதும் என்னவென்று நிமிர்ந்து அவன் கண்களை பார்த்தாள் பிரக்யா.
“என்ன பதில் சொல்லணும்?” என்று அவள் கேட்க..
“பத்து ஓகேவா? இல்ல அதுக்கு மேல பெத்துக்கலாமா?” என்றதும் அவளுக்கு காது மடல் சிவந்து போக.. கால் கட்டை விரலை நிலத்தில் அழுத்தமாக ஊன்றி வெட்கச்சிவப்பை கட்டுப்படுத்த முயன்றாள்.
ஆனாலும் அதை தாண்டி அவளது காது மாடலும் மூக்கு நுனியும் அவளின் வெட்கத்தை சிவந்து பறைசாற்றி எட்டப்பனாய் அவளை காட்டிக் கொடுத்தது..!
“மாமா.. ஏன் இப்படி பேசுறீங்க?"
"எப்படி..?"
"அதான்... குழந்தை.. அது.. இதுனு” என்றவள் இடுப்பை தழுவியது அவன் கை.
“ஏன் வேணாவா?"
"நீங்க என்னை வேண்டாம்னீங்க.. விசா அக்காவை எங்கேஜ்மென்ட் பண்ணிக்க போறேன்னு சொன்னீங்க..?"
"ஆமா சொன்னேன். அதுக்கும் இதுக்கும் என்ன இப்போ?” என்று கேட்ட நல்லவனை பார்த்து அவள்தான் திகைத்தாள்.
"ஆசை தான்..! இரண்டு சவாரி எல்லாம் செய்ய முடியாது மாமா” என்றாள்.
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீ நான் கேட்டதுக்கு பதில் சொல்லு வேணுமா? வேணாமா?” என்று அவன் அதே பிடியில் இருக்க இவளோ தவித்து போனாள், அவன் நெருக்கத்திலும் அவன் கேள்விலும்..!
அதே நேரம் “ஹாய் கதிர்..!” என்றபடி சுவாதீனமாக அவர்களை நோக்கி நடந்து வந்தாள் இதுவரை விசா விசா என்று இவர்களால் அழைக்கப்பட்ட விசாலினி..!
ஏற்கனவே அதாவது இவர்கள் கல்யாணத்திற்கு முன்னே கதிர்நயனனுக்கு என்று நிச்சயிக்கப்பட்டவள்..!
“அப்பாடா ஒரு வழியா உங்க அக்கா பொண்ணு ஊர்ல இருந்து வந்தாச்சா?” என்று அவள் கேட்டாள் இருவரின் நெருக்கத்தையும் கூர்ந்து பார்த்தபடி..
அவள் வரும்பொழுது பிரக்யாவின் இடுப்பில் இருந்து கையை எடுத்தவன், மறு கையை அவளை சிறைபிடித்ததை போல அங்கே தான் வைத்திருந்தான்.
“ஆமா.. இன்னைக்கு காலைல தான் வந்தோம்..” என்றான்.
பிரக்யாவுக்கு தான் என்ன வினையாற்றுவது என்று தெரியாமல் இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு,
“சரி மாமா.. நீங்க விசா அக்காவோட பேசிட்டு இருங்க.. நான் போறேன்” என்று அவள் சொல்ல அவள் கையை பிடித்து தடுத்து நிறுத்தியவன்,
“நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்டு போ சின்னு” என்றதும் இவள் திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள்.
‘பாவி.. பாவி.. அவ முன்ன எப்படிடா பதில் சொல்றது?’ என்று இவள் தவித்து நிற்க..
விசாலினிக்கோ கதிர்நயனன் என்ன கேட்டான் என்பது பற்றி சிறு யூகம் கூட அவளிடம் இல்லை.
“என்ன உமையா.. உங்க மாமா கேட்டா பதில் சொல்ல மாட்டியா? இன்னுமே நீ பொறுப்பில்லாம தான் இருக்கியா? இப்ப நீ ஒரு டாக்டர் வேற..!” என்று அவள் ஏகத்துக்கும் பாடம் எடுத்தாள். இவளுக்கு ஐயோ என்று ஆனது.
"சரி.. இப்ப எதுக்கு வந்த விசா?" என்று விசாலினியிடம் கேட்டான் நயனன்.
"நீங்க அமெரிக்கா போனதை என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் இல்ல கதிர். எனக்கு உங்க மேல செம கோபம்.. அதான் திட்டிட்டு போலாம்னு வந்தேன்" என்றாள் கொஞ்சும் குரலில்..!
"சரி திட்டு.." என்றவன் கையோ சுவற்றில் இருந்து கீழ் இறங்கி சிற்றிடைகாரியின் இடையை இறுக்கி பிடித்தது.
பிரக்யா அதிர்ந்து அவனை பார்க்க.. அவனோ எதுவும் நடவாதது போலவே விசாலினியை பார்த்திருந்தான்.
"எல்லாம் மறந்து போச்சு" என்று சிரித்தவளிடம்
“அப்ப கீழே வெயிட் பண்ணு, நான் வந்துடுறேன்.. உமையா கிட்ட பேசிட்டு” என்றான்.
‘ஐயையோ இவன்கிட்ட இன்னும் தனியா மாட்டுவதா? இதுக்கு மேல என்னால முடியாதுடா சாமி..!’ என்று பயந்தவள்,
“இல்ல இல்ல மாமா.. நீங்க விசா அக்கா கிட்ட பேசுங்க. நாம அப்புறம் பேசலாம்.. பை அக்கா” என்று விடாப்
பிடியாக அவனது பிடியிலிருந்து இறங்கி வேகமாக கீழே இறங்கி ஓடினாள் பிரக்யா.
வேகமாக ஓடி சென்றவளின் பார்வையோ ஏக்கமாக இவர்கள் இருவரையும் தழுவி சென்றது..!
