உயிரே 44

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 233
Thread starter  

44

 

என்னது அஸ்திராவா???" என்று‌ அதிர்ந்த அம்பலவாணன், பின் வீராவை பார்த்து முறைத்து "நீயி தப்பிக்க யேன் மகளை இதில் மாட்டி விடுறியா?" என்று சிறைக் கம்பியை பிடித்து கோபத்தில் வேகமாக உலுக்கினார்.

 

"லூசாயா நீயி?? அஸ்திராவை மாட்ட வைக்கனும்னு நினைச்சிருந்தா அத கோர்ட்டிலேயே சொல்லி இருப்பேன். இப்போ உன்கிட்ட வந்து தனியா சொல்லணும்னு அவசியம் எனக்கு இல்ல. ஆனாலும் இதைப் பற்றி சொல்லும் அவசியம் இருக்கு!!" என்றவன் இலகு தன்மை மாறி இறுக்கமாகியது அவனது முகம். 

 

அம்பலவாணன் இன்னும் நம்பமுடியாமல் வீராவை பார்த்தார். "இப்போ ஏன் வந்து உன் கிட்ட சொல்றேன் தெரியுமா? இந்த விஷயம் உனக்கும் எனக்கும் மட்டும்.. மட்டும்தேன் தெரியனும். இந்த ஜென்மம் முடியும் வரை யாருக்கும் தெரியக்கூடாது. என்னைய பத்தி கவலை இல்லை யேன் பொண்டாட்டியே பற்றி யேன் மூச்சு போனாலும் மூச்சு கூட விட மாட்டேன். ஆனா நீயி.. நீந்தேன் ஜெயில இருக்கியே.. இனி ஜெயிலுக்குள்ள தேன் நீ காலம் தள்ளும் போறவரு. அதனால என்ன நடந்ததுச்சுனு உனக்கு தெரியனும். உன்னோட பாவம் எந்த அளவுக்கு பங்காற்றி இருக்குனு தெரிஞ்சுகிட்டு செத்துப் போ!!" என்றான் வெறுப்பாக வீரா.

 

சஞ்சயன்.. அசோகன் அம்பலவாணனின் செல்லத் தங்கை அன்னலட்சுமியின் மகன். பெயருக்கு ஏற்றார் போல அன்னம் போல அழகாக இருப்பார் கூடவே லஷ்மி கடாஷம் பொருந்தியவள், இவள் பிறந்த பிறகுதான் சொத்து பலமடங்கு பெருகியது என்று இன்னமும் அவர்களின் அப்பா கூறிக் கேட்டதுண்டு. அப்படிப்பட்ட அன்னலட்சுமி வளர்ந்து பருவ மங்கையாக அழகில் மிளிர்ந்தபோது எத்தனையோ மிராசுதாரர்கள் ஜமீன்கள் என்று பெண் கேட்க அத்தனையும் மறுத்து வேலவனை கல்யாணம் செய்து கொண்டார்.

 

வேலவன் இவர்கள் ஜாதிக்கு சற்று தாழ்ந்த ஜாதி என்று குறிப்பிடப்படுபவர். ஆனால் கல்வியை தனது ஆயுதமாக கொண்டு நன்முறையில் படித்து அந்த பகுதியின் வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு உத்தியோகத்தில் வேலை பார்த்தார்.

அடிக்கடி சந்திக்க வாய்ப்பு இல்லாத இவர்கள் இருவருக்கும் எங்கோ ஒரு மூலையில் காதல் தீ பற்றிக் கொள்ள அது சரசரவென வளர்ந்து மடமடவென பெரிதாக.. காட்டுத்தீயாய் விஷயம் அவ்வூருக்குள் பரவும் முன் கோவிலில் தங்கள் கல்யாணத்தை முடித்து இருந்தனர் காதல் கிளிகள்.

 

அன்னலட்சுமியின் அப்பாவும் அசோகனும் முதலில் அவரை திட்டி சண்டை போட்டாலும் அதற்குப்பின் தன் சகோதரி தானாக திருமணம் செய்து கொண்டாலும், அவருக்கு தகுதியான மாப்பிள்ளையை தான் பார்த்து இருக்கிறார் என்று அசோகன் சமாதானம் அடைந்து அப்பாவையும் சமாதானப்படுத்தி அவர்கள் வீட்டுக்கு சற்று தள்ளியே புதிதாக வீடு ஒன்றை கட்டி குடியமர்த்தினார். 

 

இதற்கிடையில் அம்பலவாணன் நண்பர்கள் அழகியல் நண்பனின் தங்கை தங்களை தவிர்த்து கீழ் ஜாதியை சேர்ந்தவனை திருமணம் செய்து கொண்டால் என்று காழ்ப்புணர்ச்சியில்..

 

 "என்னடா வாணா.. உன் மச்சான் அந்த ஜாதியாமே.. இனிமே நீயி எல்லாம் வீட்டுக்குள்ள வந்தாலே உன்னைய யோசித்தான் விட்டனும் போலவே!!"

 

"ஏன் டா அவனையும் சரிக்கு சமமாக உட்கார வைச்சு மாப்பிள்ளை விருந்து போடுவீகளா? இனிமேல் உம்ம வூட்டுல சமபந்தி போஜனம் தானா டா?" என்று பலவாறு கிண்டலடித்தனர். 

 

இந்நிலையில் அசோக்கனுக்கு ஜெகநாதன் பிறந்து விட, அடுத்த ஒரு வருடத்தில் அன்னலட்சுமிக்கும் சஞ்சயன் பிறந்துவிட, திருமணமாகி ஐந்து ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்த அம்பலவாணன் தம்பதியரை பார்த்து "எதற்கும் மருத்துவரிடம் காண்பித்து பாருக மச்சான்" என்று மிக மரியாதையாக தான் சொன்னார் வேலவன்.

 

ஆனால் அதையே தன் ஆண்மையை இழிவுபடுத்தி விட்டதாக அவர் மனதுக்குள் பகை ஒன்றின் விதை முளைக்க ஆரம்பித்தது. நாளாக நாளாக அது விருட்சமாக வளர்ந்தது.

 

அப்போது இளமையின் முறுக்கில் ஜாதி வெறி பிடித்த அம்பலவாணனும் அவரது கூட்டாளிகளும் ஒரு காதல் ஜோடியை பிரித்து அதிலும் அந்த தாழ்த்தப்பட்டவனை கும்பலாக போட்டு அடிக்க.. எதிர்பாராதவிதமாக அவன் இறந்து விட, அதுவே அவர்களுக்கு ஒரு போதையையும் கர்வத்தையும் கொடுத்தது. அங்கே ஆரம்பித்தது அவர்களது கௌரவக் கொலைகள்!!

 

அதன்பின் அவ்வூரில் காதல்.. அதுவும் கலப்பின காதல் என்று யாராவது கூறினால்.. இவர்களது குழு தனியாக கூட்டம் போட்டு அவர்களை எப்படி பிரிப்பது? யாரை அழிப்பது? பேசிப்பேசியே எப்படி தற்கொலை வரை தூண்டுவது? என பல்வேறு சதிகளை இலைமறை காயாக செய்து வந்தனர். 

 

ஒருமுறை இவர்கள் இந்த வெறி கூட்டம் ஒருவனை அடிப்பதை அவ்வழியே வந்த வேலவன் பார்த்து அவனை காப்பாற்றி.. "இந்த மாதிரி நீங்க இனிமே செஞ்சா.. நான் பெரிய மச்சானிடமும் மாமாவிடமும் சொல்லிபுடுவேன்!!" என்று மிரட்டி, அந்த பையனை காப்பாற்றி அழைத்து சென்றார். 

 

வேலவன் தன் மனைவியிடம் இதை பகிர்ந்துகொண்டார். ஆனால் அதுவே அவர்களுக்கு எமனாய் வந்தது. வேலவன் சொந்தத்தில் ஒரு திருமணத்திற்கு என்று மதுரை வரும் போனவர்கள் சஞ்சயனை அசோகன் இடம் கொடுத்துவிட்டு செல்ல, அதை பயன்படுத்திக் கொண்ட அம்பலவாணனும் அவனது ஆட்களும் அவர்கள் சென்ற வண்டியை லாரி வைத்து தூக்கி ஒரேடியாக அவர்களை அனுப்பி வைத்தார்கள். 

 

இவ்விஷயங்கள் எதுவும் தெரியாமல்தான் சஞ்சயன் இரு மாமாவிடம் வளர்ந்தது. அம்பலவாணனுக்கு சஞ்சயனை கண்டால் பிடிக்காது. ஆனாலும் தங்கையின் மகனாயிற்றே.. ஒதுக்கம் காட்டாவிடினும், பெரிதாக பாசம் கொள்ள மாட்டார்.

 

இப்படியே நாட்கள் செல்ல மேல் படிப்பு படிக்க வேண்டும் என்றவனை தன் தொழிலை பார்த்துக்கொள்ள சொல்ல, அதையும் திறம்படவே சஞ்சயன் செய்தான். ஒருமுறை அவ்வாறு கணக்கு வழக்குகளைப் பார்த்து, அதை அவரிடம் கொடுக்க சென்றவன் மில்லுக்கு சென்றவன், அவர் கூட்டாளிகளோடு பேசுவதை கேட்க நேர்ந்தது. 

 

"என்ன அம்பலவாணா.. உன் தங்கச்சி மகன பிடித்துவிட்டது போல.. வேல எல்லாம் கத்துக் கொடுக்கிற? அவனையே மாப்பிள்ளையாக்க போறியா என்ன?" என்று கேட்க சத்தமாக சிரித்த அம்பலவாணன், "அவேன் உடம்புல ஓடுறதுல யேன் தங்கச்சி ரத்தம் மட்டும் கிடையாது அந்தக் கீழ்ஜாதி நாதாரியோடதும் கலந்து இருக்கு. அவனை எப்படி நான் யேன் பொண்ணுக்கு கட்டுவேன்? இவனெல்லாம் நமக்கு என்னைக்குமே வேலைக்காரன் மாதிரி தேன்.. வேலையை செஞ்சா காசை தூக்கி போட்டா நம்ம காலையில் சுத்திகிட்டு கிடப்பான். நமக்கும் ஒரு நம்பகமான ஆளு ஆச்சு" என்று சிரித்தவர், அதோட விடாமல் "அந்த வேலவனைக் கட்டிக்கிட்டானு சொந்த தங்கச்சின்னு கூட பாக்காம அவளையே கொன்னு போட்டவன் நானு.. இவன யேன் மகளுக்கு கட்டி வைப்பேனா?" என்று கூறி இடி இடி என சிரிக்க.. மற்றவர்களும் சேர்ந்து சிரிக்க.. அச்சிரிப்பொலி அனைத்தும் தன் தாய் தந்தையின் மரணம் ஓலமாய் சஞ்சயன் மனதுக்குள் பதிந்தது.

 

பாம்புக்கு ஒன்றுக்கு பால் வார்க்கிறோம் என்பதை அறியாமலேயே அவனை வளர்த்துக் கொண்டிருந்தார் அம்பலவாணன். என்னதான் வேலவனின் இரத்தம் அவன் உடம்பில் ஓடினாலும், தாய்மாமனான அம்பலவாணனின் ஜீனும் அவன் உடம்பில் இருக்க.. அதுவும் வேலை செய்ய ஆரம்பித்தது. 

 

அப்போதுதான் ஊர் திருவிழாவில் அவன் பேச்சியை பார்த்து விரும்புவதை கண்டுபிடித்துவிட்டார். அவனை அம்பலவாணன் மிரட்டி அங்கிருந்து அனுப்பிவிட்டு.. பேச்சியை பேசிப் பேசி அதுவும் "காசுக்காக பணக்கார வீட்டுப்பிள்ளைகளிடம் படுக்க வந்தியா டி சின்ன சிறுக்கி.. அவேன விட யேன் கிட்ட பணம் காசு அதிகம் இருக்கு.. வர்றியா?" என்றும் இன்னும் ஏதேதோ காதால் கேட்க முடியாதவற்றையெல்லாம் அவளை நோக்கி பேசினார். கூடவே அவர்களது குடும்பத்தை பஞ்சாயத்தில் நிறுத்தி சந்தி சிரிக்க வைப்பதாக மிரட்டினார்.

 

அதை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டாள் பேச்சி. இதில் அன்று மிகவும் துவண்டு போனான் சஞ்சயன். தன் தாய் தந்தை மரணத்திற்கும் தன்னவளின் மரணத்திற்கும் தன் தாய்மாமன் தான் காரணம். என் வாழ்க்கையை அழித்ததே அவர்தான் என்று அவர் மேல் வன்மம் கூடியது.

 

இதுவரை நேரம் கிடைக்கும் போது அவரை வைத்து செய்யலாம் என்று எண்ணியவன், பேச்சின் மரணத்துக்கு பின் அந்த நேரத்தை வகுக்க ஆரம்பித்தான்.

 

அவரை கொல்லும் அளவுக்கு கூட துணிந்து விட்டான். ஆனால் அவரை கொன்றால், அந்த வேதனை ஒரு நாளில் போய்விடும். அப்படி விட முடியாது!! அவர் தவமாய் தவமிருந்து பெற்று சீரும் சிறப்புமாய் வளர்க்கும் அவரது பெண் மேல் அவனது கண் விழுந்தது.

 

அம்பலவாணனே வேறு ஒரு மாப்பிள்ளையை பார்த்து சஞ்சயனுக்கு வாகாக திட்டம் தீட்ட உதவினார்.

 

அதன்படி மாப்பிள்ளை பற்றி தப்பும் தவறுதலாக கூறி அவளை மடை மாற்றி தன்னிடம்‌ வர வைக்கலாம் என்று அவன் எண்ணினான்.

 

பழம் நழுவி பாலில் விழுந்தது போல அவளே அனைத்தையும் அவனிடம் ஒப்பிக்க, அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பேசிப்பேசியே கரைத்து அஸ்திராவை கோயிலுக்கு அழைத்துச் சென்றான். திருமணம் செய்து கொள்ளும் நேரத்தில் அவன் எதிர்பாராதது அவளே தாலி கட்டிக்கொண்டது. 

 

'யாரு காட்டினால் என்ன ஊர் கண்களுக்கு முன்னாடி இவள் என் பொண்டாட்டி என்று தானே தெரியும். இப்போதைக்கு அது போதும்!' என்று இருந்து விட்டான்.

 

அப்பனைப் போலவே செய்துவிட்டான் என்று அம்பலவாணன் ஆடி தீர்த்து விட்டார். ஆனால் அசோகனின் முயற்சியால் அமைதியாக இருப்பது போல வெளியில் இருந்தவர், பெண்ணுக்கு டைவர்ஸ் வாங்க ஏற்பாடு செய்தார். அதனை அறிந்து கொண்ட சஞ்சயன் வேறு ஒரு திட்டத்தை தீட்டினான். அதுவரை அவரது பெண்ணை கட்டி எந்த கீழ் சாதிக்காரனை வெறுத்தாரோ அவர் மகனின் மூலமாகவே அக்குடும்பத்திற்கு வாரிசை கொண்டுவந்து அவரை பழிவாங்க வேண்டுமென்று நினைத்திருந்தவனுக்கு அம்பலவாணன் இந்த டைவர்ஸ் முயற்சி பெரும் அடியாக இருந்தது.

 

'கிணத்து தண்ணியை ஆத்து வெள்ளமா கொண்டு போய் விடும்?' என்ற நம்பிக்கையில் அதேநேரம் தாலி கட்டி விட்டதனால் அடுத்தவன் பொண்டாட்டியை வீரா திரும்பி பார்க்க மாட்டான் என்ற தைரியத்தில் அவன் இருக்க.. அவனுக்கு இடியாக வந்து சேர்ந்தது அம்பலவாணரின் டிரைவர்ஸ் வாங்கும் முயற்சியும் கூடவே ஏற்கனவே பார்த்த மாப்பிள்ளையை அஸ்திராவுக்கு கட்டி வைக்கும் சதியும்.

 

கொஞ்சநாள் நல்லவனாக நடித்து.. அஸ்திராவின் நம்பிக்கையை பெற்று.. சில பல வேலைகளை முடித்த உடன் தனது ஆட்டத்தை தொடங்கலாம் என்று இவன் காத்திருக்க.. இவனுக்கு முன்னமேயே அம்பலவாணன் தொடங்கிவிட.. அதை முடித்து வைக்க தயார் ஆனான் சஞ்சயன்.

 

இவ்விரு குள்ளநரிகளும் ஒன்றை ஒன்று பழிவாங்க நேரம் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கையில் இவ்விரு கயவர்களின் வலையில் சிக்கினாள் அஸ்திரா எனும் சிறு‌ மான்!!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top