தேன்மழை 💞 - (28)

 

(@priyadinesh)
Member Moderator
Joined: 3 months ago
Messages: 31
Thread starter  

நண்பர்களின் அறிவுரையில் சம்மதம் தெரிவித்த போதும், மனமோ அவளையெண்ணி ஏங்கி தவிக்காத நொடிகள் இல்லை. அனைத்திற்கும் தானே கடிவாளமிட வேண்டுமென மூளை அவனை அடக்க முயல, ஒரே மனதாக நிந்தித்தவளை தூரம் விலக்கி வைத்தான்.

 

பாட்டிக்கும் சண்முகம் ஐயாவிற்கும் தான் பெரிய வாய்க்கா தகராறு ஓடிக்கொண்டிருந்தது. இறுதியில் தன் கணவர் என கூட பாராமல், வார்த்தையால் சபிக்க முனைந்தவர் மிக பிரயத்தனப்பட்டு வன்சொல் கூறாது தவிர்த்தார்.

 

பேரனிடம் பிருந்தாவை திருமணம் செய்து கொள் என கூற அவரால் திராணியில்லை. மனதில் இருந்த ஒருவளை சூனியக்காரர்கள் செய்த சதியால், விலகி சென்று விட்டாள் என்னும் வலியை அவன் வாடிய முகம் கண்டு அறிந்தவர்.

 

ஆதலால், மேலும் அவனை காயப்படுத்த வேண்டாம் என பேசாமல் விலகியிருந்தவரிடம், வேலை முடித்து வந்தவன் வழிய அடுக்களை தேடி வந்து பேசினான்.

 

"பாட்டி.."

 

நீர் சுரந்த விழிகளை படக்கென துடைத்துக் கொண்டு திரும்பினார்.

 

"நான் பிருந்தாவை கல்யாணம் பண்ணிக்கிறேன். எல்லாம் உங்க ஆசைக்கு தான். ஆனால், என்னை எந்த ஃபார்மாலிட்டிஸ்ன்னு அங்க இருக்க சொல்லக்கூடாது. சொன்னாலும் இருக்க மாட்டேன்." என இயலாமையோடு பேசியவனைக் கண்டு, வாஞ்சையாக கன்னம் வழித்தவர் கண்களில் நீர் தாரை தாரையாக கொட்டியது.

 

"சரி பா.. யாரும் உன்னை எதுவும் சொல்ல மாட்டாங்க. நீ வறுத்த படாதே பா. அந்த பொண்ணும் ரொம்ப நல்ல.." என அவர் கூறும் நேரம் அவன் அங்கிருந்து கடந்திருக்க, சாவித்திரி அவர்களுக்கு தான் கணவர் மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

 

அவன் உண்மையை கூறியும் ஆசையை கெடுக்கும் குரோத எண்ணம் கொண்டவரா தன் கணவர் என இத்தனை வருடங்களுக்கு பின், தான் ஏமாந்ததாக எண்ணி வெகுநேரம் அழுது கரைந்தார்.

 

அழுதாலும், புலம்பி தவித்தாலும் சில விடயங்களை கடந்து தான் ஆக வேண்டும். அதே போல் தான் அவனது திருமண நாளுக்கு ஒரு வாரமே இருந்தது. அனைத்து வேலையும் மிக துரிதமாக நடந்தது. பிரதீஷ் அப்பா, தாத்தாவிற்கு உலகையே தன் வசமாக்கியது போல் அப்படியொரு நெகிழ்ச்சி.

 

பட்டு எடுப்பது, பந்த கால் வைப்பது என அனைத்து ஏற்பாடுகளும் மும்மரமாக நடந்து கொண்டிருந்தது. பிரதீஷும், அவனது பாட்டியோடு பத்து நாட்கள் விடுப்பு எடுத்து விட்டு வீடு வந்து சேர்ந்தான். வந்தவன் யாரிடமும் பேசவில்லை.

 

ஆனால், சிலரின் பார்வை அவன் மீது ஏளனமாக பதிந்தது. தோற்று போய் விட்டானே என்னும் ரீதியிலான பார்வை தான் அது. அவன் எதையும் அலட்டிக் கொள்ளவில்லை. இயல்பாகவே இருந்தான்.

 

"ஒரு விஷயம் காதுக்கு வந்துச்சே ருத்ரா உண்மை தானா?" என மெல்ல காது கடித்தார் தெய்வானை.

 

அவளும் சுற்றி முற்றி யாரேனும் இருக்கிறார்களா என பார்த்து விட்டு, "ஆமா சித்தி.. யாரையோ லவ் பண்ணிருக்கான்.. இப்போ என்ன ஆச்சுன்னு தெரியல கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டான்.." என்றாள் நக்கலாக. உடன்பிறந்தவளுக்கே அவன் மீது ஒரு ஈகோ. எல்லாம் குஷி அவனோடு அதிகமாக ஒட்டிக்கொள்ளும்  காரணம் தான்.

 

"ஏன் என்ன ஆச்சு? உனக்கு எதுவும். தெரியாதா ருத்ரா?"

 

"இல்லை சித்தி எனக்கு எதுவும் தெரியாது.."

 

"ஏன் உங்க பாட்டிக்கு எல்லாமே தெரிஞ்சுருக்குமே.." என்றவர் பட்டுபுடவையை சூட்கேசில் எடுத்து வைத்திட, "க்கும்.. க்கும்.." என குரலை செருமி உள்ளே நுழைந்தார் சாவித்திரி பாட்டி.

 

செவியோடு சேர்த்து இருவரையும் அறைய வேண்டும் போல இருந்தது. கோவத்தை முஷ்டி மூடி அடக்கிக் கொண்டார்.

 

"மச மசன்னு நிக்காம மண்டபத்துக்கு போற வேலையை பாருங்க.." என்றவர் குரல் வழமைக்கு மாறாக எகிறிட..

 

"இதோ கிளம்புறோம் பாட்டி.." என பம்மிக் கொண்டு வெளியே நகர்ந்த ருத்ராவை வால் பிடித்துக் கொண்டு, பின்னாடியே நகர்ந்தார் தெய்வானை.

 

கணவன் பக்கவாதத்தில் இருக்க, மேக்கப்பும் வாய் திமிரும் குறையுதா என கடுப்புற்றவர் மருமகளை அழைத்தார்.

 

"அளவோடு ஆடுங்க எல்லாரும்.. ஏற்கனவே ஆடி தான் இந்த லட்சணத்துல இருக்கு.."

 

அவர் என்ன கூற விழைகிறார் என ஒன்றும் புரியாத தத்தியாக நின்றிருந்த மருமகளை மேலும் வன்மமாக பார்த்து கடந்திருந்தார்.

 

பிருந்தா வீட்டினர் நல்ல நேரம் பார்த்து மண்டபத்திற்கு வந்து விட்டனர். மணப்பெண்ணான பிருந்தாவிற்கு, ஜனனியே உடனிருந்து அனைத்து அலங்காரங்களையும் செய்தாள். தன் தோழியின் காதலனுக்கு அக்காவோடு திருமணம் என்பது அவளுக்கே வலிக்க தான் செய்தது.

 

எத்தகைய சூழ்நிலையிலும் உண்மையை உளறக் கூடாது என தோழியிடம் சத்தியம் வாங்கிக் கொண்டாள். தோழியின் வெறுப்பை சம்பாதிக்க கூடாது என யோசித்தவள், முடிந்த வரை வாயே திறக்கவில்லை.

 

ராசிகா வீட்டினர் முகத்தில் அப்படியொரு பூரிப்பு. தாங்கள் விரும்பிய வரனே தனது மகளுக்கு கணவனாக போகிறான் என பிரதீஷை சலிக்காது பாராட்டிக் கொண்டிருந்தனர். அவையெல்லாம் கேட்டு ராசிகா தான் வெகுவாக பெருமிதமடைந்தாள்.

 

முன்னாள் காதலனை பாராட்டிய பெருமை மட்டுமல்ல. தனது அக்கா குடுத்து வைத்தவள் என்னும் பெருமையே.

 

நேரம் செல்ல செல்ல உற்றார் உறவினர் என அனைவரும் வருகை தந்தனர். மாப்பிளை வீட்டினரும் வந்து சேர்ந்தனர். மாப்பிளை வீட்டார் வந்ததை அறிந்து கண்ணில் படாதபடி அங்கிருந்து நழுவி விட்டாள் ராசிகா.

 

மணமேடை அலங்காரத்தை கண்டு மாப்பிளை வீட்டினர் மெச்சு போயினர். எத்தனை நாள் அவா இது. இத்தருனத்திற்கு தான் எல்லோரும் காத்திருந்தனர். மிளிர்ந்த பெயர்பலகை கண்டு அனைவரின் முகத்திலும் பேரானந்தம் மணமகனை தவிர.

 

நண்பர்களோடு மணமகன் அறை நோக்கி சென்று விட்டான். இன்னும் சிறிது நேரத்தில் நிச்சயம் நடக்கவுள்ளது. பிருந்தாவை வெளிர் சிவப்பு நிற லெஹங்காவில் தயார் படுத்தியிருந்தாள் ஜனனி.

 

அக்காவின் மினிமினுப்பு கண்டு பாராட்டி கன்னம் வழித்தவள் கையும், வாயும் திடீரென செயலற்று நின்றது.

 

"டேய் முதல இந்த சாங்கை ஃப்ளே பண்ண வேணாம் சொல்லுடா. கேட்டாலே தலை வலிக்குது." என ஷெர்வாணியில் தயாராகியிருந்தவன் புலம்பி தவிக்க..

 

ஷாமிலி, "என்ன மச்சி பாஸ்ட் மெமோரிஸ் டிஸ்டர்ப் பண்ணுதா?" என்றாள் நக்கலான குரலில்.

 

பொசுக்கி விடுவது போல் பார்த்தவன் பார்வையில் எல்லோருமே ஒருக்கணம் அதிர, "ரிலாக்ஸ் மச்சி.. ஏன் இவ்வளவு எமோஷனல் ஆகுற? எல்லாம் சரியாகிடும்.." என ஷாமிலி நண்பனை தேற்ற முயல..

 

அவனோ, "இதோ வரேன்.." என்றவன் படக்கென எழுந்து வெளியேறினான்.

 

"டேய்.. எங்க டா போறான் இவன்?" என நண்பர்கள் ஒருபுறம் பதறி அவனை பின்தொடர்ந்தனர். அவனோ, வேக எட்டுகளில் ஆடியோஸ் ஃபிளே செய்யும் பக்கம் நோக்கி சென்றான்.

 

கார்த்திகை மாதம் வந்தால்

அன்பே அன்பே 

கண்ணுக்குள் சாரல் விழும்

அன்பே அன்பே 

உன்னோடு நனைவதற்கு

அன்பே அன்பே 

உள்நெஞ்சு துடிக்கிறதே

அன்பே அன்பே 

 

"டேய் மச்சான்.. நில்லு டா.. டேய்.. பிரதீஷ்.. எங்க டா போற?" என ஷியாம் ஒருபக்கம் அவனை அழைத்துக்கொண்டே பின் தொடர்ந்து வந்தவன் கால்கள் தானாக தடைப்பட்டு நின்றது. மணமகன் எதையோ பார்த்து சிலையாக நின்ற விதம்..

 

மணிக்கொரு தடவை

பசி நம்மை அழைக்கும்

இளமையின் விருந்தில்

இழை கூட இனிக்கும்

 

ஹோ மனரே.. ஹோ மனரே..

ஹோ மனரே.. ஹோ மனரே..

 

கார்த்திகை மாதம் வந்தால்

அன்பே அன்பே 

கண்ணுக்குள் சாரல் விழும்

அன்பே அன்பே 

உன்னோடு நனைவதற்கு

அன்பே அன்பே 

உள்நெஞ்சு துடிக்கிறதே

அன்பே அன்பே

 

ஹோ மனரே.. ஹோ மனரே..

ஹோ மனரே.. ஹோ மனரே..

 

அவளும் அதே பாடல் ஒலித்த இடம் நோக்கி தான் வேற பாடலை ஒலிபரப்ப கூற வந்தவள், மாப்பிளை கோலத்தில் ஷர்வாணியில் நின்றிருந்த காதலனை கண்டு திகைத்து நின்று விட்டாள்.

 

அன்று விலகி சென்றவள் இதுவரை அவனை எங்கும் கனவில்லை. கூடுமானவரையில் எங்கும் அவன் கண்ணில் படக்கூடாது என நினைத்தாள் மானினி.

 

இந்நொடி இருவருக்கும் எதிர்பாராத சந்திப்பாக அமைந்ததோடு, சொல்லொண்ணா வலியும் வேதனையும் ஒவ்வொரு அணு வரை பாய்ந்தது.

 

அவளோடு பின்னி பிணைந்து ஆடிய ஆட்டம் கண்டு அறையில் இருந்த ஜடப்பொருள் கூட நாணம் கொண்டிருக்கும். அப்படியொரு ஆட்டம் தான் இருவரும் ஆடியிருந்தனர் இப்பாடலுக்கு.

 

சற்று தொலைவில் இருவரின் விழிகளும் அதே காதலையும், உணர்வையும் தேக்கி நின்றதில் ஒரு நொடி சுகமான அந்நினைவிற்கே சஞ்சரித்தனர்.

 

மடியில் அமர்ந்திருந்தவளுக்கு தனது கல்லூரி கால புகைப்படத்தையும், டூர் சென்ற போது ஆடிய ஆட்டங்களை வீடியோவாக காண்பித்தான். அனைத்தையும் ரசித்து பார்த்தவள், அவனும் நண்பன் யாதவ் சேர்ந்து ஆடிய ஆட்டம் கண்டு வாவ் என்று வாய் பிளந்து விட்டாள்.

 

"செம சூப்பர் உங்க டான்ஸ்!"

 

"தாங்க்ஸ் டி.. இதெல்லாம் இப்போ வரை ஒரு மெமரபிள் டேஸ்.."

 

"ஏன் அதே டேஸ் திரும்ப வந்தா டான்ஸ் பண்ண மாட்டிங்களா?" என்றவள் ஆடவன் கழுத்தில், கரம் கொண்டு மாலையாக சுற்றிக் கொண்டு கேட்க..

 

"ஹ்ம்ம் தோணல.."

 

"ஏன்?"

 

"அடியே.. இப்போலாம் அந்த மூட் இல்லை.. ஒர்க் அண்ட் நீ மட்டும் தான் மைண்ட்ல ஓடிட்டே இருக்கும். அதெல்லாம் ஃபிரண்ட்ஸ் கூட ஜாலியா இருந்தது அவ்வளவு தான்.."

 

"எனக்காக ப்ளீஸ்.." என்றவள் அவன் கன்னம் கிள்ளி கொஞ்சி, காதோரம் "ப்ளீஸ்.. ப்ளீஸ்.." என வெகுவாக கெஞ்ச..

 

அவள் இடையை தளர்வின்றி இறுக்கியவன், "நிஜமா டான்ஸ் பண்ணுற மூட் இல்லை!" என கூறி அவன் குரல் தேய..

 

"ப்ளீஸ்.. எனக்காக.. ஒரே ஒரு தடவை.." என்றவள் அவனது அதரம் தீண்டமால், மூச்சு காற்று தீண்டி கேட்க, அவளது அந்த தீண்டலில் செய்வதறியாது கிறங்கி போனான்.

 

தோளில் சாய்ந்திருந்தவள் கன்னம் ஒற்றி கன்னம் தேய்த்தவன், "ஒன் ஸ்நொக்.." என்றான் காற்றுக் குரலாக.

 

"ம்ம்ம்.. ஒன்னு தானா.." என்றவள் அவனை விட்டு விலகி எழுந்து கொள்ள..

 

அவள் அணிந்திருந்த ரோஸ் நிற டாப்பும், வெள்ளை நிற லெகின்சில் அவளை உச்சி முதல் பாதம் வரை ரசித்தவன் பார்வையில்; ஏகத்திற்கும் அவள் தகித்து அசையாதிருக்க..

 

இறுக அணைத்தவன் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து, கன்னக்கதுப்பில் இருந்து காது வரை தீண்டி; அதே போல் வலக்கன்னம் காது மடல் வரையிலும் உரசியவன் புது சிருங்காரத்தில் அவள் பெயர் கூறியதில் குழலியவள் அந்நொடி அங்கில்லை.

 

"பிரதீஷ்.. போதும்.."

 

"நோ வே.."

 

மீண்டும் அவள் கன்னம் ஒற்றி உரசலில் தளிரவள் தளர்ந்து விட, தாமதிக்காது அவளின் செம்புற்று இதழை மிக இதமாக ருசி பார்த்தவன் விரலும் அதற்கேற்ப மேனியில் உலா வந்தது.

 

அவள் மூச்செடுக்கவே விடாது ருசித்தவன் முத்தம் சில நொடிகளுக்கு பின், ஃபிரன்ச் முத்தமாக மாறியிருக்க..

 

இருவருமே முத்தத்தில் மூழ்கி திளைத்திருந்தனர். சற்றே விலகியவன் அவள் சிவந்த அதரம் கண்டு, உதடு மடித்து கள்ளச் சிரிப்பு சிரிக்க; தன் உதட்டை காயமாக்கியவனை சும்மா விடக்கூடாது என எண்ணி பதிலுக்கு வன்முத்தமிட்டாள்.

 

கீழுதட்டை கவ்வி இழுத்து, மேலுதட்டை பதமாக கொய்து முத்தமிட.. திணறியவன், விலக முயற்சிக்க அவளோ விடுவதாக இல்லை. அவன் கேசத்திலிருந்து கைகளை விடுவித்து விலகியவள் மூச்சிரைக்க அவனை காண..

 

"அகைன் ஒன் ஸ்நொக்.." என்றான் அவள் மேலே அழுந்த சாய்ந்தப்படி..

 

"என்.. னால.. முடியாது.." என்றவள் மூச்சு வாங்க, "ஓகே லெட்ஸ் வீ டான்ஸ்!" என்றான் இறுக ஒட்டிக்கொண்டு அவள் கன்னத்தில் மேலும் கீழும் கன்னம் உரசியப்படி..

 

அருகிலிருந்த லேப்டாப்பில் அவனே பாடலை ஒலிக்க விட.. அது அவ்வறையை அதிர வைத்தது.

 

தயங்கி நின்றவளை கை நீட்டி அழைக்க; அவள் இன்னும் தெளியாத போதையில் இருப்பதை கண்டு மீண்டும் அவளை நோக்கி அடி எடுத்து வைகத்தான்.

 

"ஐயோ.. நானே வரேன்.." என்றவள் அவன் முன் முதுகு காட்டி ஒட்டி நின்று கொண்டாள்.

 

ஒருபக்கம் பாட்டு அதுவும் ரொமான்டிக்காக இருக்க, இருவரும் பின்னி பிணைந்து ஆடிய விதம் இன்று வரை மறக்க முடியாத நினைவானது. 

 

சில நொடிகள் இருவரும் அழகிய நினைவுக்குள் உட்புகுந்து மீள, பிரதீஷோ அவளை கடுமையான பார்வை பார்த்து வந்தவழி மீண்டும் திரும்பி விட்டான். அவளும் இதையெல்லாம் ஒரு விபத்தாக எண்ணிக் கொள்வோம் என வேறு வழித்தெரியாது, அங்கிருந்து நகன்று விட்டாள்.

 

அவனது உள்ளமோ வெறுப்பைக் காட்டி அங்கிருந்து நகர்ந்திருந்தாலும், 'தன் வாழ்வில் மறக்க முடியாதவள் என்றால் அது எப்போது அவள் மட்டுமே!' என மனதோடு புலம்பியவன் அமைதி எல்லோரையும் விழிகள் சுருக்கி குழப்பமாக பார்க்க வைத்தது.

 

ஷியாம், "மச்சான் நேரமாயிடுச்சு.. போலாமா?" என நண்பன் அழைக்க, இயந்திரம் போல் எழுந்து கிளம்பினான் மணமேடை நோக்கி.

 

"சமையல் வாசம் தூக்குது.." என ஜெயமோகனிடம் கூறிக்கொண்டே அடுக்களை பக்கமிருந்து வந்த சண்முகம் ஐயா கண்ணில் பட்டு விட்டாள்.

 

அவரை கண்டதும் சிறு குழந்தை போல் மிரட்சி கொண்டவள், "அம்மாடி நீயும் எனக்கு பேத்தி மாதிரி தான். என்ன உனக்கு முன்னாடி என் பேரனுக்கு உன் அக்காவை பாக்குற மாதிரி ஆகிடுச்சு. குடும்ப கவுரவம் முக்கியம்ன்னு புரிஞ்சுகிட்ட பாரு.. உன் மனசுக்கு நீ நல்லாருப்ப.." என்றார் நயவஞ்சனையாக.

 

அவள் எதுவும் பேசாது திரு திருவென முழிக்க, "நீ கவலை படாதே மா.. எனக்கு இன்னொரு பேரன் இருக்கான்.. அவன் பிரதீஷை விட நல்லா சம்பாரிக்கிறான்.." என்றார் மீண்டும் நக்கலாக.

 

ஏனோ, அவருக்கு தன் பேரன் யாரை காதலிக்கிறான் என அறிந்து கொண்டதில் இருந்து ராசிகாவை துளி கூட பிடிக்கவில்லை. ஆட்களை ஏவி தன் பேரன் நடவடிக்கையை கவனிப்பதே முழு வேலையாக இருந்தார்.

 

இருவரும் ஒன்றாக சுற்றி திரிந்த போட்டோ அனைத்தும் கைக்கு கிடைத்தது அவருக்கு. அவள் கதையை தீர்த்துக் கட்ட தான் நினைத்தார். அவள் விதியோ என்னவோ, அதிலிருந்து தப்பிக்க வைத்தது. அன்றைய தினம் குடும்பத்தாரோடு புடவை எடுக்க, தாலி ஆர்டர் குடுக்க கடைக்கு சென்றாள். அப்போது தான் பிரதீஷ் தாத்தா அவளை நேரில் கண்டதுமே அடையாளம் கண்டு யாரென ஜெயமோகனிடம் விசாரித்தார்.

 

அவர் தனது தங்கை மகள் என்றதும், அவளை தனியே அழைத்து அங்கேயே எச்சரிக்கை செய்தார். அதுவும் அவர் குடும்பத்தாரின் நிலை என்னவாகும் என்றதில் அவள் முகம் சுருங்க.. அதையே தனது யுக்தி ஆக்கிக் கொண்டார்.

 

பாவம் அவள் தான் ஜீவனில்லாது போல் நின்றிருந்தாள். அதில் மேலும் விஷமமாக பார்த்து நகைத்தவர், "புரிஞ்சுக்கோ மா.. ரெண்டு குடும்பம் கவுரவம் உன் கையில தான் இருக்கு.. அதுவும் உன் அக்கா வாழ்க்கையே உன் முடிவுல தான் இருக்கு.." என்று கூறி கடந்திருக்க, அவளோ வெகுவாக உடைந்து போனாள்.

 

வீடு வந்தவளிடம், ஜெயமோகன் அவர்களும் விஷயமறிந்து அறிவுரை கூற காதல் கொண்டவள் நெஞ்சமோ, அவனை விலகி செல்வது கடினம் என அடித்துக் கொள்ள..

 

அதை செய்யாவிட்டால் தன்னை போல் ஒரு சுயநலவாதி எவரும் இலர் என யோசித்தவள், மனதை கல்லாக்கிக் கொண்டு அவனை விட்டு விருப்பமின்றி சண்டையிட்டு விலகி விட்டாள்.

 

அவர் கண்ணில் இருந்து தப்பித்தவள் அஸ்வத் குடும்பத்தார் கண்ணில் எதிர்பட, தோழியவள் முழு எதிரியாகி முகத்தை திருப்பிக் கொண்டாள் அவளிடம் பேசாது.

 

விசாலாட்சி அவளை கன்னம் வழித்து நெகிழ்ந்தவர் அருகே இருந்த மகன் அஸ்வத்திடம், "உன் வருங்கால ஒய்ஃபை பாரு டா.." என கிசுகிசுக்க, அவனோ யாருக்கோ போன் செய்து கொண்டு அவள் முகம் கூட பாராது நகர்ந்து விட்டான்.

 

அவனது செயல் செருப்பில் அடித்தது போல் இருந்தது. பெண் கேட்டு வந்ததற்கு, காதலனிடம் கூறி நோகடித்து விட்டாளே என எண்ணி இப்போது தான் அதிலிருந்து ஓரளவு மீண்டு வந்திருக்கிறான். மீண்டும் அவளை காண அவனுக்கு விருப்பமே இல்லை. அதனால் அங்கிருந்து கழண்டு கொண்டான்.

 

நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்து முடிந்தது. வந்தவர்களும் மாப்பிளை மற்றும் பெண்ணின் ஜோடிப்பொருத்தத்தை மனதார மெச்சி சென்றனர். மணமக்களும் விருப்பு, வெறுப்புக்கு மத்தியில் போட்டோவிற்கு போஸ் குடுத்து முடித்தனர்.

 

காலைப் பொழுது புலர்ந்தது! மண்டபமே யாக வேள்வியின் மணத்தில் நிறைந்திருந்தது. சிறிது நேரத்தில் இருவருக்கும் திருமணம்.

 

மணமகன் கோலத்தில் தழைய தழைய வெள்ளை பட்டு வேஷ்டி சட்டையில், பிரதீஷ் ஏனோ தானோ என மந்திரம் கூற.. பிருந்தா பச்சை நிறப் பட்டு புடவையில் தங்க நகைகளுக்கு மத்தியில் ஜொலி ஜொலிக்க வந்து அவனருகே அமர்ந்தாள்.

 

அவளும் வாய்க்குள் நுழைந்தும் நுழையாமலும் ஏதேதோ கூறி, அவனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

அவன் தான் எவ்வித உணர்ச்சியற்று எரியும் வேள்வியை பார்த்திருந்தான்.

 

தன் மனமும் இதே போல் எரிந்து கொண்டிருப்பதை அவன் மட்டுமே அறிவான்.

 

இரு வீட்டினர் கண் குளிர.. அகம் மகிழ.. ஐயர் கட்டிமேளம் என்றிட..

 

உற்றார் உறவினர், நண்பர்கள், சுற்றத்தார் அனைவரும் அர்ச்சதை தூவ பிரதீஷ் பிருந்தா கழுத்தில் மங்கள நாணிட்டான். எல்லோர் விழிகளிலும் ஆனந்த நீர் சுரக்க, ராசிகாவோ வலி தாளாது கண்கள் கலங்க அங்கிருந்து ஓடி விட்டாள்.

 

 

தேன்மழை 💔💔

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top