அத்தியாயம்: 36
தண்ணீரை அவள் மீது ஊற்றி விட்டு சந்தோஷமா இருக்கா என்று கேட்டவனை என்ன பண்ணுவது என்று அவளுக்கு தெரியவில்லை. ஏனென்றால் அவள் செய்ததும் அப்படித்தான். நேற்று ஏதோ ஒரு உந்துதலில் ஏறி குதித்து விட்டாள். ஆனால் இப்போது நினைக்கையில் அது எவ்வளவு தவறு என்று புரிந்தது.
இவள் உயிரை மாயத்துக் கொள்வதால் மட்டும் நிகழ்ந்தது அனைத்தும் இல்லை என்று ஆகிவிடுமா? இல்லை இவள் மீது தப்பான புரிதல் கொண்ட தாத்ரி தன்னை மாற்றிக் கொள்வாளா? இல்லை அவள் மூலம் விஷயம் கேள்விப்பட்ட பெரியம்மா பெரியப்பா அண்ணன் எல்லாம் இவளின் இந்த தியாகத்தை போற்றுவார்களா? இல்லை தானே!
பின் எதற்கு உயிரை விட்டு இதையெல்லாம் புரிய வைக்க வேண்டும்? உயிரோடு இருந்து புரிய வைக்க வேண்டும் என்ற தீர்மானத்திற்கு அவள் வந்து விட்டிருந்தாள். ஆனால் அந்த எண்ணத்தை எடுக்கும் ஒரு வினாடி உணர்ச்சிவசப்பட்டதில் தான் இந்த தற்கொலை எண்ணம்.
ஆனால் அவள் அப்படி செய்வாள் என்று அதற்கு தக்க அவன் ஏற்பாடு செய்திருந்தது எண்ணி அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை. 'எனக்கு அவனை பிடிக்காது என்று தெரிந்தும் என்று இவ்வாறெல்லாம் செய்கிறான் என்றால்.. ஏன்? தாத்ரியிடம் அப்படி நடந்து கொள்கிறவன் என்னிடம் மட்டும் ஏன் இப்படி?' என்று எண்ணம் எப்பொழுது லேசாய் முளைத்தது.
அதிலும் தங்கள் மீது காட்டும் அவன் கோபம் பழி உணர்ச்சிக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று இப்பொழுது அவளது மூளை சற்று சரியாக சிந்திக்க ஆரம்பித்தது.
அதில் அவன் வேறு நேற்று இரவு முழுக்க வெளியிலேயே அவளை போட்டு சென்று விட… முதலில் இல்லாத பயம் எல்லாம் அப்போது தோன்றியது.
சிறு பூச்சுகளின் சத்தமும் அவளை மிரளச் செய்தது. இரவின் இருளின் அமைதியே பேரிசைச்சலாக அவள் காதை கிழித்தது. இத்தனைக்கும் மேல் இரவின் தனிமையும் அதில் அவ்வப்போது வந்து அந்த யட்சனின் குரலும் அவளை கதி கலங்க செய்தது. ஆனாலும்.. அதையும் மீறிய ஏதோவொரு சுக உணர்வு அவளை ஆட்கொள்ள.. மெல்ல கண்ணயர்ந்து விட்டாள்.
இப்போது மீண்டும் அவளை பார்த்தவன் அவளை அந்த வலையில் இருந்து தூக்கவோ காப்பாற்றவோ இல்லாமல் மீண்டும் உள்ளே சென்றுவிட.. சிறிது நேரம் அவஸ்தையில் இருந்தவளின் மனம் ஏதோ அமைதி பெற.. அந்த வலையிலேயே இங்கும் அங்கும் அழுத்த அது ஊஞ்சல் போல ஆடிக் கொண்டிருந்தது. மற்றதை மறந்து அதை மட்டும் நினைத்து மெல்ல ஆடிக் கொண்டிருந்தாள்.
எவ்வளவு நேரம் அப்படி இருந்தாளோ மென்கதிர்களால் அவளை அரவணைத்த சூரியன் இப்போது வன்கதிர்களால் அவளின் தேகத்தை சுட.. இதமான நிலை இப்பொழுது அசௌகரியமாக மாறியது.
"எப்படா என்ன வந்து இதிலிருந்து காப்பாத்துவ.. அரக்கா.. யேய் இராட்ஷஸா.." என்று வாய்விட்டு கத்திக் கொண்டிருந்தாள். அவளின் கத்தல் எல்லாம் காதில் விழுந்தாலும் எதையும் கண்டு கொள்ளாமல் காலை எழுந்தவன் தன் வேலைகளை முடித்து நிறுத்தி நிதானமாக காலை உணவை சாப்பிட்டு கொண்டு இருந்தான்.
காலையில் அந்த வீட்டில் முன்புறம் இருந்த வேலை ஆட்களும் வேலைக்கு என்று வந்தவர்களும் வலையில் சித்ரா கிடப்பதை பார்த்தும் அதிர்ந்து தங்களுக்குள் குசுகுசுத்துக் கொண்டு நகர்ந்து விட்டனர். அவனிடம் வாய் திறந்து கேட்கும் தைரியம் அவர்களுக்கு இல்லை.
உணவு உண்டவன் தனது வேலைகளை பார்க்க ஆபிஸ் ரூமுக்குள் நுழைந்து கொண்டான். அங்கிருந்தே அவனது வேலைகளை செய்ய.. நேரம் தான் சென்று சென்று கொண்டாருந்தது. இப்பொழுது நண்பகலை தாண்டி இருந்தது. இன்னும் சித்ரா வலைக்குள் அகப்பட்ட நண்டு போல அதிலிருந்து வெளியே வர முயல்வதும் பின் இயலாமல் சுருண்டு படுப்பதும்.. பின் முயற்சிப்பதுமாய் இருந்தாள்.
உச்சி வெளியில் அவளை வாட்ட மெல்லிய தேகம் கொண்டவளோ அதனை தாங்காமல் தவிக்க.. அப்போதும் இந்த இராவணன் வந்தானில்லை.
வெயிலில் அதிகம் புழங்காது ஏசி அறையிலேயே வளர்ந்து வாழ்ந்து விட்ட சித்ராவுக்கு.. இன்று உச்சி வெயில் மண்டையை மட்டுமல்ல உடம்பிலுள்ள ஒவ்வொரு அணுக்களிலும் குத்தி எரிச்சலையும் அதனோடு சேர்ந்த வியர்வையையும் தந்தது.
இதுவரை இந்த அரக்கன் இப்படி செய்வதற்கு ஏதேனும் காரணம் இருக்குமோ என்று யோசித்த அவளது மூளை.. இப்பொழுது இப்படி போட்டு படுத்துகிறானே இவனெல்லாம் நல்லா இருப்பானா என்று அவனை வசைப் பாட ஆரம்பித்தது.
ஒரு வழியாக தனது வேலைகளை முடித்தவன் கைகளை உயர்த்தி மணியை பார்க்க.. மணி இரண்டு. "இவ்வளவு தானா?" என்றபடி அவளை நோக்கி சென்றான்.
துள்ளித்துள்ளி அதிலிருந்து வெளிவர முயன்று பின் சோர்வாகி கருவறை பிள்ளை போல சுருண்டு படுத்து விட்டாள் அந்த வலையிலேயே சித்ரா.
"அம்மாயி.. சால சந்தோஷக்கனு உன்னாவா? எப்படி இருந்தது வலை பயிற்சி. போதுமா இன்னும் கொஞ்ச நேரம் எடுத்துகிறியா?" என்று கேட்டவனின் குரலில் வழிந்த நக்கல் அவளை உசுப்ப.. திரும்பி பார்த்து அவனை முறைத்தாள்.
அவனிடம் சண்டை பிடிக்கவோ எதிர்த்து விவாதம் செய்யவோ உடலில் வலிவேயில்லை. முதல் இரவும் சாப்பிடாமல் இருந்திருக்க காலையிலிருந்து இன்னும் கொலை பட்டினி.
அவளின் முக பாவனைகளை அறிந்தவன் மெல்ல அவள் அருகே நெருங்கி அவளை தூக்கி நிறுத்தினான்.
வா என்று அழைத்து அப்போது சாப்பாட்டு அறைக்கு அழைத்துச் சென்றான்.
அவளுக்கு எதுவும் சாப்பிட பிடிக்கவில்லை. உடலின் சோர்வும் மனதின் சோர்வும் அவளை படுத்த மெதுவாக சிறிது உண்டாள். அவனோ சில சூப்புகளையும் பின் பழச்சாற்றையும் அவளை பருக வைத்தே தங்கள் பகுதிக்கு அழைத்துச் சென்றான்.
செல்லும் வழியில் திடீரென அந்தரத்திலேயே அவள் மேனி இரு முரட்டுக்கரங்களால் அள்ளப்பட, இவள் திமிற திமிற இவளின் திமிர்கள் அவன் கரங்களால் தழுவப்பட மிக அந்தரங்கமான உணர்வு.. இப்போ நேராக கை இடையில் படிந்து தன் நெஞ்சோடு கோழி குஞ்சாக அணைத்து அவளின் கலைந்த முடிகளை ஒழுங்கு பண்ணியவனின் கண்ணில் வீழ்ந்தது..
அவளது காதுக்கும் கழுத்துக்கும் இடையில் உள்ள பிரதேசத்தில் இருந்த ஒரு மச்சம். அழகிய ஏகாந்த வேளை தன் கையில் இருந்த சித்ராவை பார்த்து கொண்டே அந்த மச்சத்தில் அழுத்தமாக இதழ் பதித்தான் யட்சிணி என்று அழைத்துக் கொண்டே..
சித்ராவின் உடல் சட்டென்று விறைப்புற.. மெல்ல அவனிடமிருந்து பிரிந்ததாள். பிரிந்தவளை ஆழ்ந்து நோக்கியவன், அவளின் மன எண்ணம் புரிய மென்னகையுடன் சென்று அவளை படுக்கையில் கிடத்தினான்.
"எமி ஆலோசிக்ககுண்டா.. நித்திரபோண்டி அம்மாயி (எதையும் யோசிக்காமல் தூங்கு பொண்ணே)" என்றவன் குரலில் தன் போல சித்ராவின் கண்கள் மூடின.
அதே நேரம் இராவணனிடம் சரியாக வாங்கிக் கொண்டு வீட்டுக்குச் சென்றிருந்த தாத்ரி.. சித்ரா நினைத்தது போல் தந்தைக்கும் அண்ணனுக்கும் அழைத்து அனைத்து விஷயங்களையும் கூறி அழுது தீர்த்து விட்டாள். அங்கு உள்ளவர்களுக்கு அவள் கூறியதை எப்படி எடுத்துக் கொள்வது என்று புரியவில்லை.
ஆனால் ஆகாஷ் தான் "கண்ணால் காண்பதும் பொய். காதல் கேட்பதும் பொய் பா. தீர விசாரிக்கணும் நான் நேரில் பார்த்துட்டு வரேன்.. நீங்க அம்மாவை பார்த்துக்கோங்க"
என்றவன் தங்கையை காண கிளம்பி வந்து கொண்டிருந்தான்.
தொடரும்…
