வஞ்சகன் - 23

 

(@madhusha-novels)
Member Moderator
Joined: 6 months ago
Messages: 29
Thread starter  

அத்தியாயம் 23

 

அபிஜித் கேட்டதைக் கண்டு உடல் விறைத்தது யாதிராவிற்கு… 

 

அதிர்ச்சியுடன் பார்த்தவள், ஒரு கணம் தன் இயல்பையும் மீறி, 

 

“உனக்கென்ன பைத்தியமா?.. அவனைப் போய் காதலிக்கிறேன்னு சொல்லுற, எனக்கு அவனை சுத்தமா பிடிக்காது..” என்றாள் ஆக்ரோஷமாக, 

 

“பொய்..” என்றான் அபிஜித் ஆணித்தரமாக, 

 

“நிஜம்.. அவனை எனக்குப் பிடிக்காது..” என யாதிரா, முகத்தை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டாள்.. 

 

“ஓஹ்..” என்றவன்,  அவளையே ஆழமாக ஊடூருவிப் பார்த்தான்.. 

 

“என்ன பிரச்சினை உனக்கு?.. ஏன் இப்படிப் பார்த்துட்டே இருக்க?..” என அவனின் விழிகளில் தடுமாறினாள் யாதிரா.. 

 

“நல்லாவே பொய் சொல்லி சமாளிக்கப் பார்க்கிற?..”

 

“இங்கே பாரு, என்னைக் கேள்விக் கேட்கிறதுக்கு நீ யாரு?.. ஹான்.. எப்போ பார்த்தாலும் வா.. போ ங்கிற.. நான் உன்னை விட 3 வயசு மூத்தவ.. மரியாதைக் கொடுத்துப் பேசிப்பழகு..” என சம்பந்தமேயில்லாமல் பேச்சை மாத்தினாள்.. 

 

“நல்லாவே பேச்சை மாத்துற யாதிரா.. வயசுல மட்டும் மூத்தவளா இருந்தா போதுமா?.. நடந்துக்கிறதுலையும் மூத்தவளா இருக்கணும்.. மூளை மந்தமானவ மாதிரியே பண்ணக்கூடாது..” என்றவனை அதிர்ந்து பார்த்தாள் யாதிரா.. 

 

தன்னை விட சிறியவன்.. தன்னை மட்டம் தட்டி பேசுவதைக் கண்டவளுக்கு எரிச்சலாக இருந்தது.. 

 

“இவனெல்லாம் பேசும் அளவிற்கா?.. தான் இருக்கிறோம்..” என கோபத்தில் விறுவிறுவென அங்கிருந்து செல்ல முயன்றாள்.. 

 

“சோ, நீ அவரைக் காதலிக்கலை.. உன் மனசில அவர் இல்லை..” என மீண்டும், ஆரம்பப்புள்ளிக்கே வந்து நின்றான்.. 

 

இப்போ உனக்கு என்ன பிரச்சினை?.. நான் அவரைக் காதலிக்கிறேன்.. இல்லை காதலிக்காம போறேன்.. உனக்கென்ன வந்தது?.. இது என்னோட பெர்சனல்.. நீ கேள்விக் கேட்காதே..” என சிடுசிடுத்தாள்.. 

 

“எஸ்.. எனக்கு எதுவும் இல்லை தான்.. ஆனா மனசுக்குள்ள இருக்கிற அழுத்தத்தை யார்க்கிட்டையும் சொல்லாம இருந்தா, கண்டிப்பா ஒரு நாள் நீ மெண்டலா தான் சுத்துவ?..” என்றான் கடினமான குரலில், 

 

“இப்போ மட்டும் நான் நார்மலா இருக்கேனா, பாதி பைத்தியம் பிடிச்ச நிலையில தான் இருக்கேன்.. ப்ளீஸ் அபி.. நான் ரொம்ப பலவீனமா இருக்கேன்.. என்னை நீயும் டார்ச்சர் பண்ணாதே..” என உடைந்து அழ தயாராகினாள்.. 

 

அவளின் ‘நீயும்..’ என்ற வார்த்தை அவனையும் காயப்படுத்தியது.. 

 

ஆனால், அவனுக்கு அவளின் வேதனையைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லையே.. 

 

ஏதாவது செய்து அவளை சிரிக்க வைக்க வேண்டுமென்று வெறியே ஏறியது.. 

 

தன்னைக் கடந்துச் சென்றவளின் கைகளைப் பிடித்தவன், “நீ என் கூட வா..” என்றான்.. 

 

அவனின் கைப்பிடிக்கு அசைந்து சென்றாள் பெண்ணவள்.. 

 

“சைக்கிள்ல ஏறு..” என்றான்.. 

 

“நான் உனக்கு மூத்தவ..” என்றாள், இறங்கிய குரலில், 

 

“மரியாதையெல்லாம் கொடுக்க முடியாது.. ஏறு.. நான் உன்னை அக்காவா மட்டும் தான் பார்க்கிறேன்.. நீ என்னை தம்பியா பார்த்தா, மரியாதையை எதிர்பார்க்காதே..” என்றான் அதட்டலாக..

 

அப்படியே சயந்தனை சிறு வயதில் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது..  

 

அவளும் பின்னால் ஏறிக் கொண்டாள்.. 

 

நீண்ட நேரம் சைக்கிளை அழுத்தினான்.. 

 

“எங்கே போறோம்?..” என்றாள் சோர்வான குரலில், 

 

“ம்ம்.. உன்னைக் கடத்தி உன் புருஷன் கையில கொடுக்கப் போறேன்..” என்றான் அபிஜித் சிரித்துக் கொண்டே, 

 

“அச்சோஓஓ. வேண்டாம்..” என நிஜமாகவே பயந்துப் போனாள் யாதிரா.. 

 

ஹ்ஹாஹாஆஆ.. என வாய்விட்டே சிரித்தான் அபிஜித்.. 

 

“அதெல்லாம் பண்ண மாட்டேன்.. ஏன்னா, உன் புருஷனை எனக்குப் பிடிக்காது..” என்றவனைக் கண்டு மலர்ந்து போனாள் யாதிரா.. 

 

அவளுக்கும் தான் அவனைப் பிடிக்காதே.. 

 

அவளைப் போலவே ஒருவன்.. ஆனால் அவனைப் பிடிக்காது என்கின்றான்.. 

 

“ஆமா, நீ எப்போ எங்க ஸ்கூல்ல வந்து சேர்ந்தே?..” 

 

“நான் சென்த் ல இருந்து இங்கே தான் படிக்கிறேன்.. நீ தான் பெருசா யாரையும் பார்க்க மாட்ட.. ஆனா எனக்குத் தெரியும்.. நீ என் அம்மாவோட ப்ரெண்டோட பொண்ணு.. சரி பெரிய பொண்ணா இருக்கீயேன்னு உன்னைப் பார்த்தாலும் நான் பேச மாட்டேன்..”

 

“ஓஹ்..” என்றவள், “சரி இப்போ நாம எங்கே போறோம்?..” என அவள் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே, ஒரு வளாகத்திற்குள் சைக்கிள் சென்றது.. 

 

“உள்ளே வா..” என்றான்.. 

 

அது ஒரு கராத்தே பயிற்சி நிலையம் என்பதை பார்த்ததுமே புரிந்தது. 

 

ஆங்காங்கே சில மாணவர்கள் நின்று பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தனர்.. 

 

“ஓஹ்.. கராத்தே க்ளாஸ் சேர்த்து விடப் போறீயா?..” என சலிப்பாக கேட்டுக் கொண்டே அவனுடன் நடந்தாள்.. 

 

“அப்படின்னு நான் சொன்னேனா?.. என் கூட வா..” என அவள் கைப்பிடித்து, அவன் சென்ற இடம் அங்கிருந்த ஒரு புத்த மடத்திற்குள்.. 

 

எங்கும் அமைதியாக இருந்தது.. 

 

பார்த்தவளின் இதயத்தில் சின்ன சலனம்.. 

 

அவன் வேறெங்கும் அழைத்துச் சென்றிருந்தாலும், அவளின் மனதில் ஒரு நெருடல் இருந்துக் கொண்டேயிருக்கும்.. 

 

ஆனால் இங்கு அழைத்து வந்ததும், அபியின் மேல் இருந்த நம்பிக்கை பல மடங்கு கூடியது.. 

 

“நீ கொஞ்ச நேரம் இங்கே தியானம் பண்ணு.. நான் கராத்தே க்ளாஸ் போயிட்டு வர்றேன்..” என அவளை புத்த மடத்திற்குள் விட்டுவிட்டு அவன் சென்று விட்டான்.. 

 

அவன் சென்றதுமே, தன் தோளில் தாங்கியிருந்த பையை ஓரமாக வைத்து விட்டு உள்ளே நுழைந்தாள்.. 

 

நேராக உள்ளே சென்றாள்.. புத்தர் சிலை 12 அடியில் இருந்தது.. 

 

அதையே அண்ணாந்துப் பார்த்தாள்.. கண்களில் ஏன் கண்ணீர் வந்ததோ?.. 

 

அவளுக்கே தெரியவில்லை.. 

 

நேராக சென்று அங்கு சம்மணம் இட்டு அமர்ந்தாள்.. விழிகள் தானாக மூடியது.. 

 

தன் கடந்த காலத்தைப் பற்றி நினைத்தாள்.. 

 

தன் எதிர்கால வாழ்வினைப் பற்றி யோசித்தாள்.. 

 

சயந்தனைப் பற்றிக்கூட யோசித்தாள்.. அவனுடன் உண்டான இந்த புதிய உறவைப் பற்றி யோசித்தாள்.. 

 

ஆனால் எதற்கும் விடையில்லை.. கண்களில் கண்ணீரைத் தவிர.. 

 

எதுவுமே அவளுக்கு தோன்றவில்லை.. தன் மனதில் ஏற்படும் ரணத்திற்கு மருந்தை மட்டும் தேடினாள்.. 

 

யாரோ தன் தோளைப் பற்றுவது போன்ற உணர்வு வரும் வரை, ஒரு வித அமைதி தான் அவளுக்குள்.. 

 

கண்களில் கண்ணீர் வழிய திரும்பிட, அங்கு அபி தான் இருந்தான்.. 

 

“என்ன தியானம் பண்ணியாச்சா, வா..” என்றான்.. 

 

“ஏன் அழுதாய்?..” என ஒரு வார்த்தைக் கேட்கவில்லை.. அவன்.. அதுவே அவளுக்கு இதமாக இருந்தது.. 

 

அவனுடன் மறுபடியும் ஒரு சைக்கிள் பயணம் ஆரம்பமானது.. இப்பொழுது மனம் சற்று லேசாக இருந்தது.. 

 

“அப்புறம் எங்கே போறோம்?..” என்றாள் உற்சாகமா, 

 

“பார்க்குக்கு போகலாமா?..” 

 

“ம்ம்ம்.. போகலாம்.. ஆனா இன்னைக்கு வேண்டாம்.. நாளைக்கு அழைச்சிட்டுப் போறீயா?..” என்றவள், ஒரு கணம் தயங்கி, 

 

“மால் போகலாமா?.. என்றாள்.. 

 

அவள் சொன்னதைக் கேட்டு வாய் விட்டு சிரித்தான் அபிஜித்.. 

 

“எதுக்கு சிரிக்கிற?..” என முகத்தை திருப்பினாள் யாதிரா.. 

 

“இந்தப் பொண்ணுங்களுக்கு ஆயிரம் இடம் இருந்தாலும்,  ஷாப்பிங் பண்றதுன்னாலே தனி சந்தோஷம் தான் என்ன?.. ம்ம்.. போகலாம்.. வா..” என்றவன், சைக்கிளிலேயே அவளை அருகில் இருந்த மால் ஒன்றிற்குள் அழைத்துச் சென்றான்.. 

 

அங்கு நுழைவு வாயிலுக்கு அருகிலேயே KFC இருந்தது.. 

 

“அதைப் பார்த்ததுமே யாதிராவின் நாக்கில் எச்சில் ஊறியது.. 

 

பக்கவாட்டாக திரும்பி அபியைப் பார்க்க, 

 

“நோ.. யாதிரா.. என்கிட்ட காசு இல்லை..” 

 

“அப்பாவுக்கு ஒரு போன் பண்ணா போதும், அவுங்களே ஜி பே பண்ணிடுவாங்க.. வா போகலாம்..” என அவனையும் இழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.. 

 

இருவருக்குமே நல்ல பசி போல திருப்தியாக சாப்பிட்டு விட்டு வெளியே வந்தனர்.. 

 

பில் பே பண்ணும் இடத்தில், யாதிரா அருகில் இருந்தவரிடம் போன் கேட்க, “நான் பே பண்றேன்..” என்றான் அபி.. 

 

கண்களை சுருக்கி யாதிரா பார்க்க, அதுவரை தன் பையினுள் மறைத்து வைத்திருந்த போனை எடுத்தான்.. 

 

அதிலிருந்து ஜிபே பண்ணினான்.. 

 

“அடப்பாவி..” என்பதை போல், யாதிரா பார்க்க..

 

“ஹிஹி.. அது ஒன்னுமில்லை.. யாதிரா.. அநாவசியமா, எதுக்கு வெளியில எடுத்துக்கிட்டு.. அதிகமா யூஸ் பண்ணமாட்டேன்.. ஆனா சேப்டிக்கு உள்ளே வச்சிருப்பேன்.. அம்மாவுக்கும் இது தெரியும்..” என்றவனை வியந்து பார்த்தாள்.. 

 

“நீ உங்க அம்மாக்கூட நல்ல பாண்டிங்ல..” 

 

“ஆமா, ஏன் நீ அப்படியில்லையா?.. வீட்டுக்கு ஒரே பொண்ணு வேற?.. உன் மேல பாசம் வைக்கலைன்னா தான் ஆச்சர்யப்படணும்?..” 

 

“அம்மாவுக்கும், அப்பாவுக்கும் ரொம்ப பாசம்.. பெரியப்பா, பெரியம்மாவுக்கும் நான் னா உசிரு..” 

 

“இவுங்க எல்லாத்தையும் விட, சயந்தன்க்கு நீ ன்னா உசிரு..” என்றவனைப் பார்த்து உதட்டைச் சுழித்தாள்.. 

 

“அவர் உசிரெல்லாம் எனக்குத் தேவையில்லை.. என்னை நிம்மதியா விட்டாப் போதும்..” என்றவாறே, 

 

கடை, கடையாக சுற்றிய யாதிரா எதுவுமே வாங்கவில்லை.. 

 

“சரி வா..” என அபியும் அவளுடனே சுற்றினான்.. 

 

“எதுவும் வாங்கலையா?..” 

 

“இல்லை.. என்கிட்ட தான் எல்லாமே இருக்கே?.. அப்பாவும், அம்மாவும் தேவைக்கு அதிகமாகவே எல்லாம் வாங்கிக் கொடுத்துடுவாங்க.. நான் எங்கே போகணும்னு ஆசைப்பட்டாலும், அழைச்சிட்டுப் போயிடுவாங்க..” 

 

“உனக்கு ப்ரண்ட்ஸ்னு யாருமே இல்லையா?.. அவுங்களுக்கு ஏதாவது வாங்கிக்கோ..” 

 

“ப்ரண்ட்ஸ் எல்லாம் சேர்த்துக்கிறது இல்லை.. அவுங்களா என்னைத் தேடி வந்து பேசினாலும், எனக்குப் பேச தோணுறதில்லை..” என்றவளின் முன்பாக ஒரு கவரை நீட்டினான்.. 

 

“என்னதிது?..” என ஆர்வமாக பிரித்துப் பார்த்தாள்.. 

 

“அழகான வாட்ச்..” 

 

“சூப்பரா இருக்கு அபி.. ஆனா, இது லேடீஸ் வாட்ச் மாதிரி இருக்கே.. உனக்கும் தேவைப்படாது.. உனக்கு அக்கா, தங்கச்சி யாரும் கிடையாது.. அப்போ, இது யாருக்கு?.. கேர்ள் ப்ரண்ட்க்கா?..” 

 

“அதான் நீ இருக்கல்ல.. எனக்கு அக்காவா?.. உனக்குத் தான்.. எனக்குப் புடிச்ச பொண்ணு இன்னும் கண்ணுல படலை..

 

“பட்டா..” 

 

“முறையா பொண்ணு கேட்பேன்.. முடியாதுன்னா, தூக்கிடுவேன்..” என்றபடி, அவன் சென்று விடடான்.. 

 

“ம்க்கும்.. அப்படியே, சயந்தன் ஜெராக்ஸ்..” என முணுமுணுத்துக் கொண்டே சென்றாள்.. 

 

அடுத்ததாக அவர்கள் சென்றது.. பீச்சிற்குத்தான்.. 

 

“நல்லவேளையா ஆட்டோவுல அழைச்சிட்டு வந்தே?.. இங்கேயும் சைக்கிள்லேயே கூப்பிட்டு வந்திடுவீயோன்னு பயந்துட்டேன்..” என்றவளைப் பார்த்து சிரித்தான்.. 

 

“நான் மட்டும் தனியா இருந்தா வந்திருப்பேன்.. நீ சைக்கிள்ல இவ்வளவு தூரம் வர்றது.. பெரிய ரிஸ்க்.. அதான் ஆட்டோ புக் பண்ணேன்..” என்றவன், அவளையும் அழைத்துக் கொண்டு கடல் மண்ணில் நடக்க ஆரம்பித்தான்.. 

 

ஆர்ப்பரிக்கும் கடல் அலையை பார்த்துக் கொண்டே, அங்கே அமர்ந்தாள்.. 

 

“விளையாடலையா?..” 

 

“பிடிக்காது அபி..” என்றபடி, அருகில் இருந்த மணலில் விளையாடிக் கொண்டிருந்தாள்.. 

 

அபியும் அங்கேயே அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.. 

 

“யோவ்வ்வ்.. மண்டை சூடேறுன மாதிரி இருக்கு.. வண்டியை பீச்க்கு விடு ய்யா..” என ஜீப்பில் ஏறியமர்ந்தான் சயந்தன்.. 

 

சிறிது நேரத்தில் பீச்சிற்கு வந்து சேர்ந்தனர்.. 

 

“என்ன சார்?.. இந்தப் பொண்ணு என்னவெல்லாமோ சொல்லுறா?..” 

 

“நாட்டுல நடக்கிறதை பார்த்தா, இப்படித்தான் இருக்கும்..” என புலம்பிக் கொண்டே, ஜீப்பின் மேல் ஏறியமர்ந்தான்.. 

 

“யோவ்வ்வ்வ்.. போய் சூடா சுக்குகாபி, சுண்டல், கடலைன்னு ஏதாவது வாங்கிட்டு வாய்யா.. வாய் நமநமங்குது..” என்றபடி சாய்ந்தமர்ந்து கண்களை மூடினான்.. 

 

கலகலவென ஒரு பெண் சிரிக்கும் சத்தம் கேட்டது.. 

 

“ப்ச்ச்ச.. இதுங்க வேற, எவன்கூடையாவது கடலைப் போட்டு சிரிச்சு, நம்ம காது ஜவ்வை பிளக்க வைக்கிறாளுக..” என சிடுசிடுப்பாக சொல்லிக் கொண்டே, கண்களை திறக்க.. 

 

“அபி முடிஞ்சா என்னைப் பிடி..” என வேகமாக ஓடி வந்தது, அவனின் ஆசை அருமைப் பொண்டாட்டியே தான்.. 

 

அதைப் பார்த்தவனின் விழிகளில் அப்பட்டமான அதிர்வு.. 

 

அவளின் சிரிப்பைப் பார்த்தவளின் விழிகள் இடுங்கியது.. 

  


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top