அத்தியாயம்: 14
மறுநாள் வரலட்சுமியிடம் ஊருக்கு சொல்லுவதை சொல்ல வந்தவளிடம் "ஜலஜாவிடமும் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு போ.. அவங்க எப்படியோ? ஆனா நாம சரியா நடந்து கொள்ளணும். எனக்கு அப்புறம் இதெல்லாம் நீ தான் பார்க்கணும்" என்றார்.
'எனக்கு அப்புறம் நீ தான்!' என்ற வார்த்தை தாத்ரியை புளங்கிதம் அடையச் செய்தது. சரி என்று தலையாட்டி விட்டு அவர்கள் பகுதியை நோக்கி சென்றாள் தார்தி.
ஜலஜாவிடம் அவளுக்கு சகஜமாக பேசும் அளவுக்கு உறவு உண்டு தான். காரணம் அவரது செல்ல மகன் சிவப்பிரசாத் நிறைய நாட்கள் இவளோடு இவளது வீட்டில் தான் சாப்பிட்டு இருக்கிறான் என்ற செய்தியை அவருக்கு தாத்ரி மீது நல்ல அபிப்பிராயத்தை கொடுத்தது.
இராவணன் இவளை திருமணம் செய்து கொண்டதும் முதலில் பயந்தவர் பின்பு நமக்கு தெரிந்த பெண் கண்டிப்பாக சிவாவிடம் கடுமையாக நடக்க மாட்டாள். கூடவே நம்மை விட சாதாரண குடும்பத்து பெண்தான் என்று சந்தோஷப்பட்டு கொண்டார். அந்த சந்தோஷத்தின் பின்னே இன்னொன்று அவருடைய மனநிறைவு ஒளிந்து இருந்தது.
என்னதான் இவர்கள் இரண்டு பேரும் நண்பர்கள் என்று கூறினாலும்… எங்கே தாத்ரியை காதலிக்கிறேன் என்று வந்து விடுவானோ சிவப்பிரசாத் என்று அவரது மனம் அவ்வப்போது இடி மழை மேகங்களை கொடுத்துக் கொண்டே தான் இருந்தது.
அதற்கு எல்லாம் விடிவாய் விஷ்ராவணன் இவளை திருமணம் செய்து கொண்டதும் பெரும் மன நிறைவு அவரிடம். ஆனால் அதனை அவர் வெளியில் ஒரு வார்த்தை கூட காட்டிக் கொள்ளவில்லை.
வரலட்சுமி கூட ஆச்சரியப்பட்டார் தான் இராவணன் கல்யாணத்திற்கு சிரித்த முகமாக வளைய வரும் ஜலஜாவை பார்த்து, ஒருவேளை அவர் மகனின் தோழி என்று இந்த சிரித்த முகம் போலும் என்று நினைத்தவர் அதிகமாக பேச்சு வளர்க்காமல் அமைதியாக இருந்து கொண்டார்.
தார்தியை பார்த்ததும் "வா தாத்ரி" என்று வாய் நிறைய புன்னகையோடு அழைத்தார். மனதில் அன்பு இருக்கோ இல்லையோ?
பொதுவாக புன்னகைக்க அதுவும் தேவை என்றால் புன்னகைக்கு ஜலஜாவிற்கு பஞ்சம் இருக்காது.
"ஹாய் ஆண்ட்டி.. நான் சென்னைக்கு போறேன்! எப்படியும் ஒரு ஒன் வீக் அங்கதான் இருப்பேன்" என்று கூறினார்.
"அதுக்கு சொல்லிட்டு போக வந்தியா?" ஆச்சரியமாக கேட்டார்.
அவள் ஆம் என்று சிரித்து
முகத்தோடு தலையாட்ட "உங்க அம்மா அப்பா உன்னை நல்லா வளர்த்து இருக்காங்க.. மாமியார் கிட்ட மட்டும் சொல்லகட்டு போகாம எங்கிட்டயும் சொல்லனும்னு உனக்கு தோணுது பாரு…" ஆனால் அந்த மாமியார் தான் சொல்ல சொன்னார் என்பதை இவள் இங்கே கூறவில்லை.
"பத்திரமா போயிட்டு வா! கொஞ்ச நாள் நல்ல அம்மா வீட்டில் சந்தோஷமா இருந்துட்டு வா.. ஆனா எப்படித்தான் இந்த ராவணனை கட்டிக்கிட்டு நீ சமாளிக்கிறியோ? தெரியல… எப்போதுமே முகத்தை அவ்வளவு இறுக்கமா வச்சிருக்கேன் உன்கிட்டுயாவது சிரிச்சு பேசுவானா?" என்று மெல்ல நூல் விட்டு அவளது அந்தரங்கத்தை அம்பலத்தில் ஏற்ற பார்த்தார்.
"என்ன ஆன்ட்டி கேள்வி இது? மத்தவங்களும் நானும் அவருக்கு ஒண்ணா? அவர் இருக்கிற பொசிஷனுக்கு அவர் அந்த மாதிரி கடுமையா இருந்தா தான் மத்தவங்க கிட்ட வேலை வாங்க முடியும். ஆனால் அதையே மனைவியாக என்கிட்ட செய்ய முடியுமா?" என்று அவள் வெட்கத்தில் சிவந்து குழைந்து பேசினாள்.
ஒரு பக்கம் இராவணன் சந்தோஷமாக இவளோடு குடும்பம் நடத்துகிறான் என்று எண்ணமே அவருக்கு பெரும் வயிற்று எரிச்சலை கொடுத்தது.
ஆனாலும் இவளும் நல்ல பெண்தான் என்று அமைதியாக இருந்து கொண்டார்.
கூடவே இப்பொழுது செய்திருக்கும் இந்த ப்ராஜெக்ட் இவளால்தான் இராவணன் கொடுத்தான் என்று சிவப்பிரசாத் ஒருமுறை கூறியிருக்க… அதனால் மனதுக்குள் இவர்களை பற்றி வன்மம் இருந்தாலும் அதை முகத்திலோ வாய் வார்த்தைகளையோ காட்டி விட மாட்டார்.
"சரி ஆன்ட்டி.. கிளம்புறேன். எனக்கு டைம் ஆயிடுச்சு" என்று அவள் எழுந்து கொள்ள புன்னகை முகமாக வழி கொடுத்தார்.
ஒருவேளை அங்கே சிவப்பிரசாத்துக்கு தன் தங்கையை இவள் மணம் பேசி முடிக்க போகும் விஷயமாகத்தான் சென்னை செல்கிறாள் என்று உண்மை தெரிந்திருந்தால்.. இத்தனை புன்னகை முகமாக இருந்திருப்பாரா என்பது கேள்வியே...
ஏனென்றால் சிவப்பிரசாத் அழகுக்கும் அவர்கள் குடும்பத்தின் பாரம்பரியத்திற்கும் கணக்கில்லாமல் இருக்கும் தொழிலுக்கும் இவர்களை போல சிறு குடும்பத்தில் இருந்து மருமகளை எடுக்க அவர் பிரியப்படவில்லை.
அந்தஸ்து பாரம்பரியம் என்று அனைத்திலும் அவர்களுக்கு நிகராக உள்ள ரெட்டி குடும்பத்தில் இருந்து மட்டுமே மருமகளை எடுக்க வேண்டும் என்று அவர் சங்கல்பமே செய்துள்ளார்.
அப்படி ஒன்றும் தாத்ரியின் குடும்பம் லேசுப்பட்டது இல்லை. வருடத்திற்கு கோடிக்கணக்கில் டேன்ஓவர் செய்பவர்கள் தான். ஆனால் இவர்களுக்கு அவர்கள் அற்பமாகத்தான் தெரிந்தார்கள். குறிப்பாக ஜலஜாவிற்கு…
ஆனால் மகனும் அவனது தோழியும் சேர்ந்து தனியாக ஒரு திட்டம் தீட்டி அதற்குள் அத்தனை பேரையும் சிக்க வைக்க போகிறார்கள் என்று அப்போது ஜலஜாவிற்கு தெரியாது.
ஆந்திராவை கடந்து சென்னையை நோக்கி வந்தது தாத்ரி என்னும் புயல். அது வட்டமிடப் போவது இராவணன் என்னும் மலையை. இந்த புயல் அந்த மலையை அசைக்கும் இல்லை தோற்று பின் வாங்கி ஓடுமா…????
சென்னையை நெருங்கியதும் நேராக அவள் சென்றது அவள அம்மா வீட்டுக்கு அல்ல.. இராவணன் தங்கி இருந்த ரிசார்ட்டுக்கு தான்.
அவளை அழைத்து சென்றது என்னவோ சிவப்பிரசாத். ஆனால் தானும் அங்கே இருந்தால் அண்ணன் ஏதாவது கண்டு கொள்வானா என்று பயந்து வேலை இருக்கிறது என்று எஸ்கேப் ஆகி வந்து விட்டான்.
அவளைக் கூர்மையாக பார்த்த இராவணன் "நேரா உன் தங்கச்சியை பார்க்க போவேனு நினைச்சேன்! என்ன இங்க வந்துட்ட?" என்று அப்பொழுதுதான் உடற்பயிற்சி செய்து ஆறாக ஓடிய வியர்வையை துடைத்த படி கேட்டான்.
அவளது கண்களோ கருத்தோ அவனது பேச்சில் இல்லை. படிக்கட்டு தேகம் கொண்ட தனது கணவன் நெஞ்சில் இருந்தது.
"சிக்ஸ் பேக்கா? எயிட்டு பேக்கா?" என்று தெரியாத வண்ணம் அத்தனை படிக்கட்டுகள் அவனது மார்பில் இருந்து வயிறு வரை. கூடவே புஜங்களோ வலிமையான தேக்கு மரத்தை ஒத்திருக்க அந்த கையணைப்பில் இருந்தால் என்ன? அவனது நெஞ்சில் சாய்ந்து சரசமாடினால் என்ன? என்று அவளது நினைப்பு முழுக்க அவர்கள் இருவர் பற்றிய இருக்க.. எப்படி தங்கையின் நினைப்பு வரும்?
மீண்டும் இராவணன் சொடுக்கிட்டு அவளை கூப்பிட அப்போது தான் அவளின் விழுங்கும் பார்வையை பார்த்தவன் கையில் இருந்த டவளை தூக்கி அவள் மீது எறிந்தான்.
"என்ன கேட்டீங்க?" என்று அவள் அதிர்ந்து விழிக்க.. "உன் தங்கச்சியை பார்க்க போகவில்லையானு கேட்டேன்" என்றான், அவளுக்கு முதுகு காட்டிக் கொண்டு நின்று. இப்படி திடீர் என்று வந்து நிற்பாள் என்று அவனுக்கு தெரியாது. தன்னை விழுங்குவது போல் பார்க்கும் அவள் பார்வை கண்டு கொண்டவன், அது உணர்வில் இருக்க பிடிக்காமலே திரும்பி நின்று கொண்டான்.
"நான் மட்டும் எப்படி தனியா போறது? நீங்களும் வந்தால்தான் அங்க போவேன் இல்லையா? நீங்க போற வரைக்கும் நானும் உங்க கூட இங்கேயோ தங்கிக்கிறேன்" என்றவளை திரும்பி பார்த்தவன் கண்களிலோ "நினைச்சேன் டி நீ இப்படித்தான் என்னை லாக் பண்ணுவேன்னு" என்று கோணல் சிரிப்பு அவனிடம் வெளிப்பட்டது.
"அதற்கு என்ன தாத்ரி… ரெடி ஆயிட்டு வந்ததும் ரெண்டு பேரும் சேர்ந்து உங்க வீட்டுக்கு போகலாம்" என்றான் வெகு சாதாரணமாக..
எப்படியும் ஒத்துக்கொள்ள மாட்டான் என்று நினைத்திருந்தவளின் எண்ணத்தை பொய்யாக்கி
மர்ம சிரிப்போடு குளியல் அறைக்குள் சென்றான் விஷ்இராவணன்.
தொடரும்….
