Share:
Notifications
Clear all

காமன் 32

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 2 years ago
Messages: 288
Thread starter  

32

 

 

 

தென்னரசுவின் இந்த அதிரடியில் அதிர்ந்து விழித்தாள் மஹிமா.

 

 

 

அவள் கண்களோ பயத்தை விட ‘நீயா மாமா இப்படி?’ என்று அவனை குற்றம் சாட்டின..!

 

 

 

அதனை விட அவனின் முரட்டுத்தனமான நெருக்கமும் செய்கையும் அவளுள் பதற்றத்தையும்.. இது வெளியில் தெரிந்தால் என்ன விபரீதம் நடக்குமோ என்று பயத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

 

 

 

அவளை சுவற்றோடு சுவராக அழுத்தி பிடித்து ஒரு கையால் அவளது இரு கைகளையும் பிடித்தவன் மறு கையால் அவளது வாயை அழுத்தி பொத்தி இருந்தவன் கண்களிலோ அத்தனை கனல்..!

 

 

 

‘ஆனாலும் இந்த மாமா மேல நான் தானே கோவப்படணும்? இந்த மாமா ஏன் என் மேல கோபப்படுது?’ என்று அவளுக்கு அவனின் நிலை புரியாத நிலை..!

 

 

 

அவனுக்கோ இத்தனை வருடங்களாக பாராட்டி சீராட்டி தூக்கி வளர்த்து மட்டுமல்ல சீண்டி கொஞ்சி விளையாடிய அக்கா மகள் ஏன் இன்னொருத்திக்காக.. அவள் என் மனைவியே என்றாலும் ஏன் ஒதுங்கி நிற்க வேண்டும் என்ற கோபம்?

 

 

 

அவ்வளவுதானா தாய் மாமனின் உறவு?

 

 

 

சுலோச்சனாவை தன் சொந்த அக்காவை போல தான் தென்னரசு பாவித்தான். வீட்டிலுள்ளவர்களும் பெரிதாக பிள்ளைகள் இடையே பாரபட்சமெல்லாம் பார்க்க மாட்டார்கள்.

 

 

 

அண்ணன், தம்பி, அக்கா தங்கையை மணந்து ஒரே வீட்டினில் ஒரே கூட்டினில் இருப்பதனால்..!

 

 

 

இன்னும் சொல்லப்போனால் படிக்கவென்று மும்பை சென்ற கதிர்காமனோ, படிப்பு முடித்து அதன் பின் வேலை என்று அங்கே நிலையாய் இருந்துவிட.. பெரிதாக ஊர் பக்கம் அவன் வருவதில்லை. அதனால் இங்கே அனைத்தையும் பார்த்துக் கொண்ட தென்னரசு தான், அனைவருக்கும் அதி நெருக்கம். சுலோச்சனா மஹிமா உட்பட..!

 

 

 

ஏன் வீரராகவன் கூட வரி கணக்கு ஜிஸ்டி சம்பந்தப்பட்ட எல்லவற்றுக்கும் இவனிடம் தான் சந்தேகம் கேட்பார்.

 

 

 

இப்படியாக ஒன்றுக்குள் ஒன்றாக இருக்க திடீரென்று மஹிமாவின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு கோபம் கொப்பளித்தது அவனுக்கு.

 

 

 

“என்னடி ஆச்சு உனக்கு? ஏன் வர வர இப்படி ஒரு மாதிரி.. வியர்டா நடக்குற?” என்று தென்னரசுவின் சீற்றத்தில் பயந்து கண்கள் அலைபாய..

 

 

 

“நான் என்ன மாமா வியர்டா நடக்கிறேன். நான் சரியாத்தானே மாமா நடக்கிறேன்?” என்று மெல்ல பதில் அளித்தாள் மஹிமா..!

 

 

 

“பொய் சொல்லாத டி..!! நீ எப்படி நடக்குறனு உனக்கு தெரியலையா?”

 

 

 

அவளோ பாவமாக முகத்தை வைத்து “தெரியலையே மாமா?” என்று உதட்டைப் பிதுக்கி இருபுறமும் தலையாட்டினாள்.

 

 

 

மஹிமாவின் பதிலில் தென்னரசுக்கு தான் கோபம் எகிறியது. அதுவும் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு அவள் பேசிய தினுசில் இன்னும் கோபம் பெருக, அழுத்தமாக அவளது தாடையைப் பற்றி “நான் ரதிய கல்யாணம் பண்ணிட்டாலும் நீ என்னோட அக்கா பொண்ணு தான். அதுல எந்த மாற்றமும் கிடையாது. அதுக்கு எதுக்கு பக்கத்துல வந்தா தள்ளி போற.. நீங்க பேசிட்டு இருக்கும் போது நான் வந்தா விலகி போற.. நீ என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல?” என்றவன் எகிறி எகிறி பேச.. அரண்டே விட்டாள் மஹிமா.

 

 

 

“சொல்லுடி கேட்குறேன்ல..! வாயை திறந்து சொல்லு?” என்று கேட்டவனோ அவள் தாடையை அழுத்திப் பிடித்திருக்க.. மீன் குஞ்சு போல வாயைத் திறந்து வைத்திருந்தவளால் ஊஊ என்று காற்றை மட்டுமே வெளியிட முடிந்தது..

 

 

 

பெருமுயற்சி கொண்டு தன் தாடையிலிருந்து அவன் கையை விடுவித்தவள் தாடையை தடவிக் கொண்டு “நீங்க ரொம்ப மோசம் மாமா.. இப்படி தான் அழுத்தமா புடிப்பீங்களா வலிக்குது..!” என்று கண்கள் கலங்க தாடையை நீவிக் கொண்டாள்.

 

 

 

“கேட்டதுக்கு பதில் சொல்லு?” என்று பல்லை கடித்தவன் மெல்லிய குரலில் ஆனாலும் அழுத்தமாக கேட்க..

 

 

 

“அது.. அது.. அம்மா தான் சொன்னாங்க. நீ இன்னும் சின்னப் பிள்ளை இல்ல.. இன்னும் மாமா கிட்ட பக்கத்துல உக்காந்து பேசுறது தொட்டு தொட்டு பேசுறது இந்த மாதிரி எல்லாம் வச்சுக்க கூடாது.. மாமாவுக்கு கல்யாணம் ஆக போது. ரதி அக்கா தான் மாமாவை கல்யாணம் பண்ணிக்க போறா.. நாளைக்கு உன் நடவடிக்கை பார்த்து அவளுக்கு ஏதும் வருத்தம் வந்துடக் கூடாது.. உங்களை ஏதும் அவ தப்பா நினைச்சிரக்கூடாதுனு…” என்று அவள் அடுக்கிக் கொண்டே செல்ல..

 

 

 

அதே நேரம் கட்டிலுக்கு அடியிலிருந்து ம்ஹூம் என்று ஏதோ ஒரு குரல் மெலிதாக கேட்டது.

 

 

 

அந்த மெல்லிய சத்தம் எங்கிருந்து கேட்கிறது?

 

 

 

வேற எங்கிருந்து? அந்த விருந்தாளி அறையின் கட்டிலுக்கு அடியில் மறைந்திருந்த மற்றொரு ஜோடியான ரதி மற்றும் காமன் இடம் இருந்து தான்..!

 

 

 

எதே?? என்று நாம் அதிர்ச்சியாக…

 

 

 

ஆம் கட்டிலுக்கு அடியில் தான் ஒளிந்து இருந்தார்கள் ரதியும் கதிர்காமனும், ஏற்கனவே அவர்கள் இந்த அறையில் இருக்க, திடீரென கதவு திறக்கும் சத்தத்தை கேட்டு..!

 

 

 

“அச்சோ.. யாரோ வராங்க போல நம்ம ரெண்டு பேரையும் இங்கே பார்த்தா அவ்வளவுதான்..!” என்று ரதி கலவரமாக…!

 

 

 

“ரொம்ப நல்லது..! நானும் இந்த கல்யாணத்தை நிறுத்து நிறுத்துன்னு சொல்றேன். நீ நிறுத்த மாட்டேங்குற இல்ல.. வர்றவங்க நம்ம ரெண்டு பேரையும் இந்த கோலத்துல நல்லா பார்க்கட்டும். அப்புறம் எல்லாம் தானா நடக்கும்” என்றான் கண்களில் சரசம் மின்ன..

 

 

 

“அப்படி எல்லாம் நடக்க விட மாட்டேன் லாயர் சார்..” என்றவள் அவன் சுதாரிக்கும் முன் அவனை இழுத்துக்கொண்டு அருகே இருந்த கட்டிலுக்கு அடியில் உருண்டு அவன் மீது ஏறிப் படுத்துக் கொண்டாள்.

 

 

 

“இப்போ போடா பார்க்கலாம்?” என்று செய்தி அவள் கண்களில்..

 

 

 

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா?’ என்பது போல அவள் கொடுத்திருக்க அதை மறுத்து எங்கனம் அவன் செல்வான்?

 

 

 

ஆனால் வந்த தென்னரசுவையும் அவன் கைப்பற்றி இழுத்து வந்த மஹிமாவையும் இருவருமே எதிர்பார்க்கவில்லை.. ஒருவரை ஒருவர் அதிர்ச்சி கலந்த முகத்தோடு பார்த்துக் கொண்டார்கள்.

 

 

 

“நீங்க குடும்பமே இப்படித்தானா டா?” என்று அவள் அதிர்ச்சி விலகாமல் கேட்க.. அவனோ மந்தகாசமாக சிரித்தான்.

 

 

 

அங்கே மஹிமா பேச பேச ‘நான் அப்படி எல்லாம் இல்லை.! அப்படி எல்லாம் யோசிக்கவே இல்லை..!’ என்று தன்னை நிரூபித்து விடும் வேகத்தில்.. தான் எங்கிருக்கிறோம் என்பதை மறந்து.. அவள் வாயை திறந்து பேச வர, சட்டென்று அவளது வாயை பிடித்து அழுத்தமாக அழுத்தி இருந்தான் கதிர்காமன். மற்றொரு கை விரலால் “உஷ்..! சத்தம் போடாதே..!” என்று கண்களால் எச்சரித்து..!

 

 

 

கட்டிலுக்கு அடியில் நடந்தவற்றை

 

தென்னரசு கவனிக்கிற நிலையில் இல்லை. அவன் கோபம் முழுவதும் தன் முன்னால் நின்றிருந்த அக்கா மகள் மீதும்.. அதைக் காட்டிலும் அவள் சொல்லிய காரணங்களை கேட்டும்.. அதையெல்லாம் விட இப்படி தப்பு தப்பாக மகளுக்கு போதித்த அக்காவின் மீதும்..!

 

 

 

“உன்னை எல்லாம்..” என்று பல்லை கடித்தான் அவன்..!

 

 

 

“அச்சோ.. உங்க தம்பி உங்கள விட மோசம். அங்கே என் தங்கச்சிய என்னவோ பண்றாரு.. உங்க குடும்பத்துக்கே இதுதான் வேலையா? தள்ளுங்க இப்ப போய் போய்.. நான் என்ன எதுன்னு கேட்க போறேன்?” என்றவளை பார்த்தவன்,

 

 

 

“அம்மாடி ரதி..! நீதான் உன் உடம்ப என் மேல பார்க் பண்ணி இருக்க.. கொஞ்சம் குனிஞ்சு பாருங்க மேடம்..” என்றவனின் நக்கலில் அவள் அசட்டு சிரிப்போடு,

 

 

 

“சாரி.. மறந்துட்டேன்” என்று எழப்போனவள் தலை கட்டிலில் மோதிக் கொள்ள.. ஸ்ஸ்ஆஆ என்று கத்த முயன்றவளின் இதழ்களை தன் இதழ் கொண்டு அணைத்தான் காமன்.

 

 

 

அவளோ முறைத்து மீண்டும் முண்டியடித்து பேச முயன்றவளின் தாடையை அழுத்தமாகப் பற்றி,

 

 

 

“கொஞ்ச நேரம் பேசாம இருடி அவங்க கண்டுபிடிச்சிட போறாங்க..! எனக்கு ஒன்னும் இல்லப்பா நீ கத்துறதுன்னா கத்து” என்று அடிக்குரலில் மிரட்டிய கதிர்காமன், இப்பொழுது அவள் தாடையில் வைத்திருந்த தன் கையை இடையில் டிரான்ஸ்ஃபர் பண்ணிக்கொண்டான்.

 

 

 

தென்னரசுவின் முழு கவனமும் மஹிமா மேல் இருக்க கட்டிலுக்கு இடையில் வந்து மெல்லிய சத்தத்தை எல்லாம் கேட்கவில்லை..! அவதானிக்கவே இல்லை..!

 

 

 

அவன் தான் அவளுக்கு பக்கம் பக்கமாக அறிவுரையை அள்ளி இறைத்துக் கொண்டு இருந்தானே..!

 

 

 

ஸ்ஸ்ப்ப்பா.. உங்க தம்பி ஏன் இவ்வளவு அறுக்க அறுக்க அட்வைஸ் பண்றாரு?” என்று கொட்டாவி விட்டவள்,

 

 

 

“எப்ப தான் இவங்க போவாங்க.. எனக்கு தூக்கம் தூக்கமா வருது” என்று அவன் நெஞ்சம் மீது மஞ்சம் கொண்டாள், கதிர்காமனின் வஞ்சியவள்..!

 

 

 

காலச்சக்கரத்தின் உதவியோடு.. அதாங்க.. டைம் டிராவல் பண்ணி..

 

வாங்க.. சில நிமிடங்களுக்கு முன்னால் சொல்லுவோம்..!

 

 

 

கல்யாணம் நிச்சயமான பெண், அதுவும் வீட்டில் விருந்தினர்கள் உறவினர்கள் வருவதும் போதுமாக இருக்க, அதனால் பெரிய மகளை தனியாக விடாமல் சின்ன மகளையும் ரதியோடு ஒரே அறையில் தங்க வற்புறுத்தியிருந்தார் சுலோச்சனா.

 

 

 

இருவரும் சில நாட்களாக ஒரே அறையை பகிர்ந்திருந்தாலும் பெரிதாக தன்னுடைய வலி துன்பம் மகிழ்ச்சி எதையும் மஹிமாவோடு பகிர்ந்துக் கொள்ள மாட்டாள் ரதி..!

 

 

 

அவள் பகிர்ந்துக் கொள்ளும் ஒரே ஆள்.. அவளது தம்பி ராகவ் மட்டுமே..!

 

 

 

அதிலும் இன்று கோவிலில் நடந்த சில விஷயங்கள் மனதை உறுத்திக் கொண்டே இருக்க அக்காவுக்கு அழைத்து விட்டான் ராகவ்.

 

 

 

“என்ன அக்கா அவரு.. அந்த கதிர்காமன் இப்படி எல்லாம் பேசுறாரு? இதை நாம அப்பாகிட்டயும் சுலோச்சனா அம்மாகிட்டயும் சொல்லிடலாம்” என்று அவன் வற்புறுத்த, ரதி வேண்டாம் என்று தடுத்தாள்.

 

 

 

“இங்க பாரு ராகவ்.. ஒன்னு அவர் அவங்களோட சொந்த தம்பி. அதுவும் இல்லாம அவரு எவ்ளோ பெரிய கிரிமினல் லாயர்னு உனக்கே தெரியும் தானே? கிரிமினல் லாயராக இருக்க முதல் விஷயமே கிரிமினல் மாதிரி யோசிக்கிறது தான். அவங்க கிட்ட நாம இதை சொல்ல போய் வேறு விதமாக இது திரும்ப, மும்பைல நடந்த விஷயம் எல்லாம் வெளியே வந்தா…??”

 

 

 

“அச்சோ.. என்னக்கா நீ பயமுறுத்துற?” ராகவ் பதற..

 

 

 

“அங்க நடந்தது தேவையே இல்லாத ஆணி..! அதுவும் இல்லாம என்னால உன்னோட லைஃப்ல எந்த பிரச்சனையும் வர்றதை நான் விரும்பல டா.. நீ நிம்மதியா தூங்கு இதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்” என்று பேசியை அணைத்தவள், அந்த காரிடரில் ஏதேதோ யோசனைகளோடு நடந்துக் கொண்டு இருந்தாள்.

 

 

 

சட்டென்று நடந்துக் கொண்டிருந்தவளின் இடையை பற்றி இழுக்கப்பட.. அவளோ

அதிர்ந்து கத்த,

 

 

 

“உஷ்..! கத்தாத..!” என்றவனை கண்டு விழிகள் பயத்தில் விரிந்தவை, பின் எதிரில் இருப்பவனை பார்த்து அதிர்ச்சியை காட்டி.. கடைசியாக நீ தானா என்று அலட்சியத்தை தத்தெடுக்க..

 

அவனின் நெருக்கம் அதிகரித்தது.

 

தொடரும்..

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top