34
மறுநாள் காலை விடிந்து வெகு நேரம் கழித்தே கண் விழித்த கதிர்காமன், இன்னும் தன் நெஞ்சில் உறங்கிக் கொண்டிருந்தவளை பார்த்தவனுக்கு முகத்திலோ அழகிய புன்னகை..!
அவன் எதிர்பார்த்த அழகிய காலை விடியல் இதுதான்..!
எத்தனை நாட்கள் இவளை தேடி தேடி அலைந்து.. காணக் கிடைக்காமல்.. தூக்கமில்லாமல் தவித்து.. காலையில் எழும்போது அவளை கண்ணில் கண்டுவிட மாட்டோமா என்று தவித்தவனின் தவிப்பை அதன் கனத்தை சொன்னால்.. இவளுக்கு புரியுமா?
“ம்ஹூம்.. கண்டிப்பாக புரியாது..! மரமண்டை.. அழுத்தம் புடிச்சவ.. கொழுப்பு எடுத்தவ.. ராங்கி..!” என்று வசை பாடியவனோ, “ஆனாலும் என் ஏஞ்சல் டி நீ..!” என்று இறுக்க அவளை கட்டிக்கொண்டு படுத்திருந்தான்.
சிறிது நேரம் கழித்து விழித்த ரதி முதலில் ‘எங்க இருக்கோம்? ஏன் இந்த ரூம் இவ்வளவு இருட்டாக இருக்கு? நம்ம ரூம் வெளிச்சமா தானே இருக்கும்?’ என்று விழித்தவளின் கன்னத்திலோ ஏதோ உரச என்னவென்று குனிந்து பார்த்தாள்.
சுருள் சுருளாய் முடியோடு இருந்த திண்ணென்ற நெஞ்சத்தை கண்டவள், “அய்யோ பேய்..!” என்று அலறி பயந்து எழ முற்படும் போது மீண்டும் அந்த கட்டிலிலேயே இடித்துக் கொள்ள போக.. சட்டென்று தன் கையை வைத்து அவள் தலையை காத்தவன்,
“ஆமா டி.. நான் பேய்..! நீ பிசாசு..! ரெண்டு பேரும் இருட்டுக்குள்ள கசமுசா பண்ணிக்கிட்டு இருக்கோம்” என்று சிரித்தான் கதிர்காமன்.
அப்பொழுது தான், தான் எங்கிருக்கிறோம்.. எப்படி இங்கு வந்தோம்.. எல்லாம் புரிய, பட்டென்று கட்டில் கீழே குனிந்து இரவு தென்னரசு மஹிமா நின்றிருந்த இடத்தை பார்த்தாள்.
“போயாச்சு.. போயாச்சு..! அவங்க இரண்டு பேரும் எப்பவோ போயாச்சு..! அம்மாடி உங்க உடம்பை கொஞ்சம் தள்ளி பார்க் பண்ணுனீங்கன்னா நாமளும் எழுந்து போகலாம். இல்லன்னா இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்ல உள்ளவங்க எல்லாம் எழுந்து நம்மளை தேட ஆரம்பிச்சிடுவாங்க.. வசதி எப்படி?” என்றதும் சட்டென்று அவள் உருண்டு கட்டிலுக்கு வெளியே வந்து எழுந்தாள். கதிர்காமனும் அதுபோலவே வெளியே வந்து எழுந்தவன்,
“உடம்பெல்லாம் ஒரே வலி.. நைட் முழுசா எவ்ளோ பெரிய பாரத்தை தாங்கி இருக்கேன்” என்று இரு கைகளையும் மேலே உயர்த்தி நெட்டி முறிக்க..
தான் அவன் மீது படுத்து இருந்ததை பெரும் பாரம்.. வலிக்கிறது என்று கூறுகிறான் என புரிந்தவள் அவனை முறைத்தாள்.
“முதலிரவு முடிச்சா கூட இவ்வளவு வலி இருக்காது போலயே? ஆமா அன்னைக்கு வலி இருந்துச்சு?” என்று அவளிடம் கேட்க.. அவளோ கண்களில் கனலை கக்க..
“மொதல்ல போய் எலும்பு சூப் வைத்து குடிக்கணும்.. புடிச்சி இன்னும் வலு ஏத்தணும் உடம்புல” என்று இன்னும் மேலே தூக்கிய கைகளை இறக்காமல், தன் தோள்பட்டையால் அவளது தோள்பட்டையில் ஒரு இடி இடித்தான் கதிர்காமன்.
“மானத்தை வாங்காம போங்க..!” என்று அவள் செல்ல முயல அவளது கைப்பற்றி தடுத்தவன்,
அவளை சீண்டவே கேள்வி கேட்டான் மனதளவில் அவளுடன் ஒன்றியிருந்த காரணத்தால்.. "நேத்து நைட்டு எப்படி இருந்துச்சு சொல்லுங்க ஜூனியர் லாயரே?" என்று கேட்டான் கிசுகிசுப்பாக.
இவ்வளவு சொல்லியும் திரும்ப அவன் அதே தான் புடிச்ச முயலுக்கு மூன்று கால் என்று நிற்கிறானே என்று சலிப்பாக இருந்தது அவளுக்கு.
“உங்களுக்கு தான் கல்யாணம் கமிட்மென்ட் இதெல்லாம் பிடிக்கவே பிடிக்காதே..! அப்புறம் இன்னும் ஏன் சும்மா என் மேல காதல் கீதல்னு உளறிட்டு இருக்கீங்க.. போங்க போங்க போய் பொழப்பை பாருங்க..” என்றவள் கூற்றில்,
"கண்டிப்பா பொழப்பை பார்க்க தான் போறேன். கூடவே பொண்டாட்டியும் பார்ப்பேன்” என்றவன் மனத்தில் இன்னும் அவனின் உரிமையை நிலைநாட்ட வேகம் இருந்தும் அடங்கா ஆண்மையை அடக்கிக் கொண்டான்.
இது என்ன பதின்ம வயசா? நான் ரெட் ரோஸ் பொக்கையோடு அவள் முன்னே குனிந்து 'என்னை ஏற்றுக் கொள்ளடி பெண்ணே!! உன்னை காதலிக்கிறேன்!!' என்றெல்லாம் வசனம் பேசுவதற்கு என்று மனதுக்குள் ஒரு அலுப்பு அவனிடம்..
காதலில் ஏது வயது? அங்கே நேசம் பிரியம் நம்பிக்கை மட்டுமே பிரதானம் அல்லவா!!
இதை யார் அவனுக்கு எடுத்துச் சொல்ல??
“இப்படியே யோசிச்சிட்டு இருங்க நான் போறேன்.!” என்றவள் மெதுவாக கதவை திறந்து வெளியில் யாரும் இருக்கிறார்களா என்று பார்த்து ஓசைப்படாமல் அவள் சென்றாள்.
அவள் சென்ற சிறிது நேரத்திலேயே கதிர்காமனும் வெளியே வந்தான். ஆனால் அவளை போல யார் பார்க்கிறார்கள் என்றெல்லாம் அவன் கவனிக்கவில்லை. அவன் நினைப்பு முழுவதும் இன்னும் ஒரு வாரத்தில் நடக்க இருக்கும் திருமணத்தை எவ்வாறு நிறுத்துவது என்பதை பற்றி தான்..!
இவர்கள் இருவரும் அந்த அறையை விட்டு வெளியே வர ஒரு ஜோடி கண்கள் முதலில் கோபமாகவும், பின் யோசனையாகவும் இருவரையும் பார்த்தன..!
அன்று காலையில் கதிர்காமன் குடும்பம் வீரராகவனிடம் உத்தரவு பெற்று கிளம்பியது.
“இருந்து மதியம் சாப்பிட்டு போலாம் மா” என்று சுலோச்சனா கூற,
“ஆமாடி.. இன்னும் கல்யாணத்துக்கு ஒரு வாரம் தான் இருக்கு. அங்கேயும் எங்களுக்கு வேலை இருக்குல்ல?” என்று பார்கவி கூற..
“இன்னும் என்ன வேலை? குலதெய்வ கோவிலுக்கு போய் முதல் பத்திரிக்கை வச்சு பொங்கல் வச்சாச்சு.. சொந்தக்காரவங்க அங்காளி பங்காளி பிரண்ட்ஸ் தொழில் பக்கம் இப்படி எல்லாருக்கும் பத்திரிக்கை வச்சாச்சு.. சாப்பாடு அலங்காரம் இது எல்லாம் ஈவன் ஆட்களிடம் விட்டாச்சு.. ஜவுளியும் நம்ம முன்னாடியே எடுத்துட்டு வந்தாச்சு.. இன்னும் என்ன வேலை இருக்கு மாமா? அப்படியே இருந்தாலும் மதியம் சாப்பிட்டு போறதுக்கு எவ்வளவு நேரம் ஆயிடும்?” என்று லோகநாதன் கேட்க வைரவேலும் ரத்னவேலும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள்.
“மாப்ள.. நீங்க இப்படி தான் சொல்லுவீங்க. அடுத்து வந்து சாயந்தரம் டீ பலகாரம் சாப்பிடுங்கன்னு சொல்லுவீங்க.. அது அப்படியே ராத்திரி சாப்பாடு நீளும். கல்யாணம் முடியட்டும் அதுக்கப்புறம் நம்ம வீடு தானே எப்ப வேணாலும் வருவோம் சாப்பிடுவோம்..” என்று வைரவேல் கூற..
“அதுவும் இல்லாம கதிர் நேரா நிச்சயதார்த்தத்துக்கு தோதா இங்க வந்திட்டான். அவனுக்கு டிரஸ் தைக்க அளவு கொடுக்கணும்.. கூடவே நம்ம பண்ணையில் வேலை பார்க்கிறவங்களுக்கு எல்லாம் நாளைக்கு விருந்து வைச்சு கல்யாணத்துக்கு அழைச்சு உடுப்பெல்லாம் கொடுக்கணும்னு ஏற்கனவே பேசி வச்சிருந்தோம் இல்லையா மாப்ள.. அந்த வேலை இருக்கு” என்றார் ரத்னவேலு.
“அதெல்லாம் இன்னும் நாலு நாளும் சொடுக்குறதுக்குள்ள ஓடிடும். அதனால காலை சாப்பாடே எங்களுக்கு திருப்தி தான். நாங்க கிளம்புறோம்” என்ற பைரவி கூற,
ரத்னவேல் குடும்பத்தினர் முறையாக அனைவருனிடமும் விடை பெற்று சென்றார்கள்.
ரத்னவேல் சொன்னது போல அவர்கள் ஊருக்கு சென்றதும் முதல் வேலையாக கதிர்காமனை அழைத்து “நீ உன் தம்பியோட போயி அவனுக்கு தைக்க கொடுத்த இடத்திலேயே உனக்கும் வாங்கி கொடுத்திருக்கு.. அதுக்கு அளவு கொடுத்துட்டு வா.. இன்னும் இந்த க்ரூமிங் ப்ளீச்சிங் என்னமோ சொல்றாங்களே.. அதெல்லாம் சீக்கிரமே முடிச்சிட்டு வந்துருங்க. நாளையிலிருந்து வேலை இருக்கு பந்தக்கால் நட்டுட்டாங்கன்னா நீ வெளில போக முடியாது தென்னரசு.. அதனால உன்னோட வேலையும் என்னென்ன பாக்கி இருக்கோ எல்லாத்தையும் முடிச்சுக்கோ” என்று கட்டளையிட்டார்.
முதலில் அசுவராசியமாக இருந்தவன் “இந்த கல்யாண மாப்பிள்ளை நான் தான்..!” என்று முடித்தவுடனே தம்பியோடு சென்று அவனுக்கு எடுத்து இருந்த சூட்டை பார்த்தான். அவனுக்கும் அந்த வண்ணம் பிடித்து போக.. தன் அளவுகளை கொடுத்தான்.
“முதல் நாள் ரிசப்ஷனுக்கு உனக்கு டிரஸ் எடுக்கணும் கதிரு.. திருச்சி போவோமா? தஞ்சாவூர் போவோமா?” என்று தென்னரசு கேட்க..
“நோ.. நோ..! நம்ம லெவலே வேற..! நமக்கு ஸ்பெஷலா மும்பையில் இருந்து வரும்” என்றவன் அதன்பின் மும்பையில் அவனுக்கு வழக்கமாக துணி எடுக்கும் கடைக்கு ஃபோன் செய்து தனக்கு வேண்டியவற்றை எல்லாம் பட்டியலிட்டு உடனே அனுப்ப உத்தரவிட்டான்.
அவன் கொடுத்த லிஸ்ட்டை அருகில் இருந்து பார்த்த தென்னரசு கன்னத்தில் கை வைத்து “அடேய் அண்ணா.. கல்யாணம் எனக்கு டா” என்றதும்,
“சோ வாட்..! அதுக்காக நான் அழகா இருக்க கூடாதுன்னு அவசியம் இருக்கா என்ன?” தோளை குலுக்கி ஸ்டைலாக கூறிய அண்ணனை பார்த்து கையெடுத்து கும்பிட்டான் தென்னரசு.
“சரி சரி வா.. இங்க பெஸ்ட் க்ருமிங் எங்க நல்லா இருக்கும்?” என்ற படியே இருவரும் அடுத்து அங்கு சென்றார்கள்.
கிட்டத்தட்ட தங்கள் வேலை எல்லாம் முடித்து மாலை போல இருவரும் திரும்பும்போது “அண்ணா அந்த நகைக்கடை கிட்ட கொஞ்சம் வேலை இருக்கு போயிட்டு போவோம்” என்று சென்றான் தென்னரசு.
“ஏன் டா உன் வருங்காலத்துக்கு ஏதாவது வாங்க போறியா?” என்று ரதியின் பெயரை கூறாமல் பொதுவாக கேட்டான்.
“ம்ம்.. ரதிக்கும் கிஃப்ட் கொடுக்கணும் தான். ஆனா இப்ப வந்தது மஹிமாவோட செயின் அறுந்திருச்சு. அது அவளுக்கு மாத்தி கொடுக்கலாம்ன்னு” என்றான் தென்னரசு..
நேற்று இரவு நடந்ததுதான் கதிர்காமனுக்கு தெரியுமே..! ஒருவேளை தம்பிக்கு மஹிமா மீது விருப்பம் இருக்குமோ? என்று அவனது கிரிமினல் குறுக்குத்தனமாக யோசிக்க..
“என்னடா அக்காவை கல்யாணம் பண்ணிட்டு இப்ப தங்கச்சிக்கு நகை வாங்கி கரெக்ட் பண்ண பார்க்குற?” என்று விளையாட்டு போல் கேட்க..
அண்ணனின் புஜத்தில் அடித்தவன் “சும்மா இர்றா.. ஏற்கனவே மாமா லைஃப்லையே ரெண்டு பேரு வந்து நடந்த களேபரம் எல்லாம் பத்தாதா? நேத்திக்கு தண்ணீ இறைக்கும் போது அவ செயின் அறுந்து விழுந்துட்டு. அதை கூட கவனிக்காம அந்த லூசு அது பாட்டுக்கு போயிட்டு.. எடுத்து வச்சு கொடுக்கணும்னு நினைச்சேன் மறந்துட்டேன்.. சரி எப்படியும் ரதிக்கு ஒரு பிரேஸ்லெட் வாங்கலாம்னு யோசிச்சேன் அப்படியே இவளோட செயினை போட்டுட்டு புதுசா வாங்கிடலாம்னு” என்றவன்,
அதுபோலவே ரதிக்கு ஒரு அழகிய பிரேஸ்லெட்டையும் மஹிமாவின் செயினை மாற்றி வேற செயின் எடுத்தவன், அதனோடு ஒரு சிறிய இதய வடிவ டாலரையும் எடுத்தான்..
தென்னரசு இங்கே பார்த்துக் கொண்டிருக்க.. கதிர்காமனும் ‘நாம ஏன் நம்ம ஆளுக்கு கிஃப்ட் பண்ண கூடாது?’ என்று யோசித்தவாரே வந்தவனின் கண்களில் ஒன்று பட அது என்ன ஏது என்று விவரம் கேட்டவன் உதட்டில் நெளிந்த விஷம புன்னகையோடு “பேக் திஸ்..!” என்றான்.
யாருக்கும் நில்லாமல் நாட்கள் சென்றுக் கொண்டே இருக்க.. திருமணத்துக்கு முதல் நாள் பெண் அழைப்பு நடந்தது.
அன்று காலையிலிருந்து ஏனோ ராகவ் அக்காவின் கையைப் பற்றியப்படி சுற்றிக் கொண்டிருந்தான். இருவரும் பெரும்பாலும் அருகருகே அமர்ந்திருப்பதும்.. கையை இறுக்கமாக பற்றிக் கொள்வதும்.. மதியம் கொஞ்ச நேரம் தூங்கி எழு சிற்பி என்று சுலோச்சனா சொல்லும்போது கூட இல்ல பரவாயில்ல என்று தம்பியின் அருகே தான் ஒரு தவிப்போடு அமர்ந்திருப்பதும்.. இருவருக்கும் மனதை பிசைந்தது..!
லோகநாதன் ஏதாவது வேலையாக ராகவ்வை அழைத்தால் கூட “இல்ல அவன் என் கூடவே இருக்கட்டும் நீங்க வேற யாரையாழது அனுப்புங்க” என்றாள்.
இருவரையும் சுலபமாக அப்பா அம்மா என்று அவளால் அழைக்க முடியவில்லை. அதனால் பொதுவாக வாங்க போங்க என்றுதான் அழைப்பாள்.
போகப் போக மாறிவிடும் என்று அவர்களும் முதலில் கவலைப்பட்டாலும் பின்பு அவள் போக்கிலேயே விட்டுவிட்டனர்.
அக்காவும் தம்பியும் காலையிலிருந்து பிரியாமல் இருப்பதைக் கண்ட சுலோச்சனாவுக்கும் மனம் கலங்கியது.
இத்தனை உறவுகள் இங்கே இருந்தும்.. இருவரும் மற்றவர்களை எதிர்பார்க்காமல் தங்களுக்குள்ளேயே ஆதரவையும்.. அரவணைப்பையும்.. அழுகையும் அன்பையும் கொடுத்தும் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்று..!
சில சமயம் லோகநாதன் கூட அவர்கள் இடையே செல்ல பார்க்க வேண்டாம் என்று தடுத்த சுலோச்சனா மஹிமாவை அனுப்பி அவர்களுடன் இருக்க வைத்தார்.
“அவங்க கிட்ட ஏதாவது பேசிக் கொண்டே இரு சரியா? அக்கா ரொம்ப ஃபீல் பண்றா.. நம்மளை எல்லாம் விட்டுட்டு போறது நினைச்சு” என்றதும்,
“ஏம்மா பொய் சொல்ற.. அக்காவுக்கு ராகவ்வை விட்டுட்டு போறதுக்கு தான் மனசு கஷ்டமா இருக்கும். நம்மள எல்லாம் இல்ல” என்றாள் மஹிமா.
“அது.. அது.. அதை நாம தப்பு சொல்ல முடியாது மஹி.. ஏன்னா நாமெல்லாம் இருக்கிறதே அவளுக்கு இந்த கொஞ்ச நாளா தான் தெரியும். அதுக்கு முன்ன அவங்க அம்மா இறந்ததிலிருந்து ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா தானே இருந்திருக்காங்க.. அப்ப அவளுக்கு ஒரு சங்கடம் சந்தோசம் எதுவா இருந்தாலும் அவனை தான் தேடுவா.. அதேபோலத்தான் அவனும். ஆனால் காலம் கொஞ்சம் கொஞ்சமா மாத்தும்.. நீ போய் அவங்களோட பேசிட்டு இரு சரியா?” என்று மகளை அனுப்பி வைத்தவர். மற்ற வேலைகளில் கவனம் எடுத்தார்.
தாய் வாக்கே வேதவாக்கு என்று மஹிமாவும் ரதியோடு இணைந்து ராகவ்வை வம்பிழுத்துக் கொண்டிருந்தாள்.
“அய்யய்யே.. என்ன இது பொட்ட புள்ள போல அழுறது? ஷேம் ஷேம்.. பப்பி ஷேம்” என்று ராகவ் முறைப்பை பெற்றவள், அதன் பின் அவனை வைத்து செய்தாள். அவளின் பேச்சில் இருவரும் சற்று நேரம் தங்கள் துக்கத்தை மறந்து அவளோடு சிரித்துக் கொண்டிருந்தனர்.
கடைசியாக “ஆமா.. கொஞ்ச நாளுல எனக்கு கல்யாணம் ஆகும். அப்பவும் இப்படி தான் அழுவியா?” என்று ஏக எதிர்ப்பார்ப்போடு கேட்டவளை கண்டவனுக்கு என்னவோ போலாக..
“அப்படி எல்லாம் என்னால இன்ஸ்டால்ட்மெண்ட்ல அழ முடியாது. வேணும்னா நாளைக்கே நீயும் கல்யாணம் பண்ணிக்கோ ரெண்டு பேருக்கும் சேர்த்து அழுது பிரியாவிடை கொடுக்கிறேன்
” என்று அவனும் சற்றே கேலி போல பேச..
“அடப்பாவி..!” என்று மஹிமா அதிர்ந்து பின் சிரிக்க.. மூவரும் மனம்
விட்டு சிரித்துக் கொண்டிருந்தனர்.
மூவரையும் சற்று தள்ளி நின்று பார்த்திருந்த சுலோச்சனா லோகநாதனுக்கு நிம்மதியாக இருந்தது.!
தொடரும்..
