அத்தியாயம் 8
தீனதயாளனுக்கோ "இப்ப எதுக்கு இவன் அங்க போறான்?" என்று யோசனை, பிரச்சனை ஏதும் கிளப்பிடுவானோ என்று பயம் வேறு.
அந்த யோசனையோடு ராஜநாராயணனுக்கு ஃபோன் செய்து ‘மாப்பிள்ளை வருகிறான் பொண்ணை பார்க்க’ என்று வத்தி ச்ச.. எச்சரித்து விட்டார்.
அங்கோ ராஜா நாராயணனுக்கோ கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. ஏனென்றால் திருமண ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க.. இங்கே மணமகளாக இருக்கும் ராஜமீராவோ முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள். இத்தனைக்கும் காலையில் தான் கல்யாண கால் ஊன்றி நலங்கு வைத்திருந்தார்கள்.
"நான் மாப்பிள்ள பையன நேரா பார்க்கணும். போட்டோ எல்லாம் பார்க்க மாட்டேன்" என்று முறுக்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள். இன்னும் சிறிது நேரத்தில் அவளது எண்ணம் பலிக்கப் போவது தெரியாமல்…
"வாயில இரண்டு போட்டேனா பாரு.. அது என்ன மாப்பிள்ளை பையன்னு மரியாத இல்லாம பேசுற" என்றார் யசோதா.
திரும்பி அன்னையை ஒருமுறை முறைத்தவர் "மாப்பிள்ள அங்கிள்.. இந்த மரியாத போதுமா?" என்றாள் கடுப்போடு.
"எதே அங்கிளா?" என்று அதிர்ந்து யசோதா நெஞ்சில் கை வைக்க.. அருகில் இருந்த ஸ்ரீ ராதாவோ வாயை பொத்திக்கொண்டு சிரித்தாள். வேகமாக சிரித்தால் அன்னையின் அன்பு பார்வை அவளை எரிக்க கூடும் என்று அறியாதவளா?
"அது எப்படி நீங்க என்ன கேட்காமல் நீங்களே எல்லாம் முடிவு செய்யலாம். மத்துக்கெல்லாம் உன் விருப்பம் உன் விருப்பம்னு சொல்லிட்டு இதை மட்டும் இறுக்கி பிடிப்பீங்களா? எனக்கு தெரியாது நான் மாப்பிள்ளைய பார்த்து பிடிச்சிருந்தா மட்டும் தான் கழுத்த நீட்டுவேன்.. இல்லேன்னா…??"
"இல்லைன்னா.. என்னடி பண்ணுவ?" என்றபடி கோபத்தோடு யசோதா வர…
"இல்லைன்னா.. மாப்பிள்ளை பிடிக்கலைனு நம்ம சொந்தக்காரவங்க whatsapp குரூப்பில் எல்லாம் மெசேஜ் போட்டுட்டு.. நான் ஓடிப் போயிடுவேன்" என்றவளின் கன்னத்திலே ஒரு குத்து குத்தினார் யசோதா.
அவளோ உதடு பிதுக்கி "பாருங்க மாமா உங்க அக்காவ.. என்னை கொடுமை படுத்துறா!" என்றாள்.
"ஏன் கா.. இப்படி பண்ற சின்ன பிள்ளைய.." என்று தேசிகன் கூறிக்கொண்டே அக்கா மகளை ஆதரவாக தட்டிக் கொடுக்க..
"நீங்க செல்லம் கொடுத்து கொடுத்து தான் இவள இப்படி கெடுத்து வைச்சியிருக்கிங்க.. கொஞ்சம் கூட யார் சொன்ன பேச்சையும் கேட்கவே மாட்டேங்குறா” என்றார் தேசிகனின் மனைவி ரூபிணி.
“நீ சும்மா இரு. அதெல்லாம் பாப்பா சொன்னா புரிஞ்சுப்பா..” என்ற தேசிகன் அக்கா மகளை கண்களில் கெஞ்சலோடு பார்த்தார். அவளோ மசிவேணா என்று முகத்தை வைத்திருந்தாள்.
கல்யாணம் வேண்டாம் என்று பிடிவாதம் பிடித்தால்.. கண்டிப்பாக நிறுத்தி விடுவார்கள் என்று எண்ணியவளின் எண்ணத்தில் கூடை மண்ணை அள்ளி போட்டுவிட்டு, இந்த பக்கம் குடும்பமாக சேர்ந்து கல்யாண வேலையை கவனிக்க.. இப்பொழுது மலை ஏறி இருந்தாள் மாரியாத்தாளாக மீரா.
“ஏன் டி, மாப்பிள்ளைக்கு என்ன குறைச்சல்? நல்ல வேலையில இருக்காரு.. பார்க்கவும் நல்லா இருக்காரு.. கூடவே எந்த கெட்ட பழக்க வழக்கமும் கிடையாது! சொந்தமா டிபார்ட்மெண்ட் ஸ்டோர் கூட இருக்கு. அடுத்தவன் கிட்ட வேலை செய்ய பிடிக்கலைன்னா சொந்த தொழில கூட கைல எடுத்துக்கலாம்.. எந்த பிக்கில் பிடுங்கலும் இல்லாத குடும்பம். இதுக்கு மேல என்ன வேணும்?" என்று கணவனை கண்டித்து விட்டு நாத்தனாரோடு கூட்டு சேர்ந்து கொண்டார் ரூபிணி.
"அத்த… யூ டூ…!" என்று கண்ணை கசக்கி கொண்டு உதட்டை பிதுக்கி கேட்ட மருமகளை பார்க்கும் போது சற்று பாவமாகத்தான் இருந்தது.
ஆனாலும் இன்னும் சிறு பிள்ளைத்தனமாக இருக்க முடியாதல்லவா? இவளுக்கு அடுத்தது ஸ்ரீராதாவும்.. அவர்கள் மகள் யாமினியும் இருக்கிறார்கள். அவளுக்கும் அடுத்தடுத்து பார்க்க வேண்டும் தானே?
"அக்கா.. ஆனாலும் என் மருமக கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு நீங்க கல்யாண வேலைக்கு ஆரம்பிச்சுருக்கலாம். நேர்ல தான் பார்க்க விடல.. அட்லீஸ்ட் போட்டோவாவது காட்டி இருக்கலாம் தானே?" என்று ஆதங்கப்பட்டார் தேசிகன்.
"மாமா.. சும்மா உங்க பெரிய மருமகளுக்கு குடை பிடிக்காதிங்க.. ஃபோட்டோ அந்தா கவர்ல அதோ டேபிள்ல தான் இருக்கு வந்த நாளா. கூடவே இவ வாட்ஸ் அப் நம்பருக்கும் அனுப்பி வச்சாச்சு.. ஆனா இவ தான் அடமா நேர்ல தான் பாக்கணும்னு நிக்கிறா" என்று அக்காவை குறை கூறினாள் ராதா.
"ஏங்க.. உங்க மருமகள பத்தி உங்களுக்கு தெரியாதா? இதுவர இவள பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டார் கிட்ட
பெண்ணியம் பேசுறதும், இவ செய்ற அந்த கருமம் பிடிச்ச ஆர்கனைஸர் வேலையும் சொல்லி.. இவ வேலைக்கு
மாப்பிள்ளை அப்படி சப்போட் பண்ணனும்.. இப்படி பர்ஃபாமன்ஸ் செய்யணும்னு ஏகப்பட்ட கண்டிஷன்களை போடுறதும்… அப்பப்பா.. முடியல இவளோட” என்றார் அலுத்துக் கொண்டார் ரூபிணி.
“அது மட்டுமா.. மாப்பிள்ளட்ட தனியாக பேசணும்னு சொல்லி, இவ ஆர்கணைஸிங் கதையெல்லாம் அள்ளி விட்டு அவங்கள கதறிக்கிட்டு ஓட வைக்கிறதுல.. உன் மருமக ஸ்பெஷலிஸ்ட்னு உனக்கு தெரியாதா தேசிகா?
இவளை வேற என்னதான் செய்றது? சொல்லு!" என்று எல்லாம் தெரிந்த தேசிகனிடம் மீண்டும் விம்போட்டு அனைத்தையும் விளக்கினர் ரூபிணியும் யசோதாவும்.
தேசிகனால் இதற்கு பதில் பேச முடியவில்லை. ஏனென்றால் அது தான் உண்மை என்பதால்…!
இப்படி பெண் பார்க்க வருபவர்களை விரட்டி அடிக்கும் பெண்ணைப் பற்றிய கவலையில் ராஜநாராயணன் இருக்கையில்...
அப்பொழுதுதான் ஒரு வர்த்தகக் கூட்டத்தில் சென்றிருந்த தீனதயாளனும் ராஜ நாராயணனும் அருகருகே அமர்ந்து கொண்டிருக்கும் பொழுது.. அங்கு நடந்த கூட்ட பேச்சுவார்த்தையில் சலிப்புத் தட்டி இவர்கள் தங்களுக்குள்ளாக பேசி ஆரம்பித்தனர்.
தீனதயாளனுக்கு ராஜநாராயணன் தான் ஆடிட்டர். அதனால் தொழிலை தாண்டியும் அப்பொழுது தங்கள் குடும்பத்தை பற்றியும் பகிர்ந்து கொண்டனர்.
இருவரும் தங்களின் பிள்ளைகளின் திருமணத்தை பற்றி வருத்தத்தோடு மற்றவரிடம் பகிர்ந்து கொள்ள.. இருவருக்கும் ஒரே சமயத்தில் உதித்தது தான் "வொய் டோன்ட் வீ பிக்கெம் சம்பந்தி?" என்ற அரிய சிந்தனை!!
அதன் பிறகு என்ன ஆன் சைட் சென்றவனை அப்படியே அப்பிட்டாக விட்டுட்டு இங்கு மாப்பிள்ளைக்கு பதில் இவரே சம்மதம் சொல்லிவிட..
அதேபோல் ஆர்கணைஸர் வேலையில் இருந்த மகளை திருவிழாவுக்கு சென்றதாக பொய் சொல்லி இராஜநாராணனும் பெண்ணிற்கு பதில் அவரே ஒப்புதல் அளிக்க…
இங்கே பெண் பார்க்கும் படலத்தையும் ஃபோட்டோவுடன் வீடியோ காலுடனும் முடித்துக் கொண்டர்.. காலத்திற்கு ஏற்றார் போல இரு தந்தைகளும்..! அதிலும் திருமணம் செய்து கொள்ளப் போகிறவர்கள் இருவரும் சந்திக்காமல்.. சம்மதம் சொல்லாமல்..!
இதில் என்ன கூத்து என்றால் இருவருமே மற்றவரிடம் 'தங்கள் பிள்ளைக்கு இந்த சம்பந்தத்தில் விருப்பமில்லை.. இணையோடு பேசி பார்க்க வேண்டும் என்ற ஒத்த கருத்தை கொண்டவர்கள்' என்பதை பரிமாறிக் கொள்ளவில்லை.
எங்கே பிள்ளைகள் இருவரும் நேராக பார்த்துக் கொண்டால்.. அவ்வளவுதான்…!! அதிலும் இருவரும் ஒருத்தரோடு ஒருத்தர் தனியாக பேசிக் கொண்டால்… மொத்தமும் நாமம்தான் என்று அறிந்த நாராயணன், பெண்ணை கூட திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்னர் வரை மச்சினனை மேற்பார்வையில் விட்டுயிருந்தார்.
இங்கே கிருஷ் வந்து இறங்கி அதே இரவு பொழுது தான் அவளும் ஆர்கணைஸிங் வேலை முடிந்து வீட்டுக்கு தாமதமாக வர..
விடியற்காலையில் தூங்கியவளை எழுப்பி சொந்த பந்தங்கள் சூழ எண்ணெய் வைத்து குளிப்பாட்டி.. பட்டு புடவை கட்டி.. நகைகளை பூட்டி.. நலங்கு வைத்து அலங்கார பொம்மையாக்கி உட்கார வைத்து விட்டார்கள் யாசோதாவும் ரூபிணியும்.
முதலில் தூக்க கலக்கத்தில் அவர்கள் சொன்னதை எல்லாம் செய்த மீரா, அதற்கு பின் தான் நிதர்சனம் புரிந்து இப்போது சாத பேத தண்ட மார்க்கங்களை கையாண்டு கொண்டிருக்கிறாள்.
இதில் அவளது நல்ல நேரமா கெட்ட நேரமா என்று தெரியவில்லை… மாப்பிள்ளையும் அதே நினைப்போடு தான் அவளை நோக்கி வந்து கொண்டிருக்கிறான்.
இங்கே மீரா வழக்கடித்துக் கொண்டிருக்க… தேசிகன் அவளுக்கு சப்போர்ட் செய்ய… யசோதாவும் ரூபிணியும் எதிரணியாக சேர்ந்து அவர்களை நாக் அவுட் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது அரக்கப்பறக்க ஓடி வந்தார் ராஜநாராயணன். "பொண்ணுக்கு கல்யாணம் வச்சுட்டு இப்பதான் ஏசியன் கேம்ஸ் ஓட்டப்பந்தத்தில் ஓட ரீகசல் பண்ணிட்டு இருக்கீங்களா?" என்று பெண் மீது உள்ள கடுப்பை கணவன் மீது காட்டினார், வழக்கமான மனைவிகளை போல யசோதா.
"இவ ஒருத்தி நேரம் காலம் தெரியாம ஜோக்ன்னு மொக்கையா போடுறா" என்று திட்டிக் கொண்டவர் "மாப்பிள்ளை வந்துட்டு இருக்கிறாராம்.. பொண்ண பார்க்கணும்னு!" என்றார் பதட்டத்தோடு.
பின்ட்ராப் சைலண்ட் அங்கே!!
யசோதாவும் ரூபிணியும் திகைத்த முகத்தோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள… ராஜ நாராயணனோ அதில் சேர்ந்து கொள்ள… தேசிகனோ இதுக்கு என்ன ரியாக்ஷன் கொடுக்கிறது என்று தெரியாமல் விழிக்க.. "ஹ்ர்ரே..!" என்று கத்திக்கொண்டு எழுந்து ஒரு சிறு குத்து நடனம் போட்டாள் மீரா.
அடுத்த நொடி அவள் தலையில் இரண்டு கொட்டுகள் விழ தலையை தேய்த்துக்கொண்டு அன்னையை முறைத்தவள் "ஆண்டவன் இருக்கான் குமாரு!" என்று கூறி வவ்வலம் சிரித்தாள்.
"ஆண்டவன் இருப்பான்டி..! ஆனா நீ ஒழுங்கா இருந்தா தான் வீட்டில இருக்க முடியும்… ஏதாவது எடக்கு மடக்கா மாப்பிள்ள கிட்ட பேசி கல்யாணத்துல குழப்பம் உண்டு பண்ணின.. ஊர்ல என் ஒன்னு விட்ட அண்ணன் ஒருத்தரு இருக்காரு.. அவரு புள்ள படிக்காம ஊற சுத்திட்டு தான் இருக்கான். அவனுக்கு பிடிச்சு கட்டி வச்சுருவேன். ஞாபகத்துல வச்சுக்கோ!" என்று விரட்டி விரட்டியே கிருஷ் பார்ப்பதற்கு முன் தயார்படுத்தினர் அவளை,
அதற்குள் தான் எத்தனை எத்தனை அறிவுரைகள்… எத்தனை எத்தனை எச்சரிக்கைகள்.. அத்தனையும் தகர்க்க கூடாதென உத்தரவு வேறு..!
ஒரு வழியாக கிருஷூம் கண்ணனும் வந்து சேர… அவர்களை வாயிலுக்கே வந்து வரவேற்றனர் ராஜநாராயணனும் தேசிகனும்.
கொஞ்சம் வெட்கமாகத்தான் இருந்தது நம் கிருஷ்வுக்கு இந்த மாப்பிள்ளை கோலமும்.. இப்படியேபட்ட வரவேற்புகளும் மரியாதையும்..
பெண்ணை தவிர ராஜநாராயணனின் மனைவி மச்சான் அவர் மனைவி, வீட்டில் இருக்கும் சொந்த பந்தங்கள் எல்லாம் வந்து அவனின் சேமபலன்களை விசாரித்து விட்டு சென்று விட்டனர்.
"டேய்.. இப்போ பொண்ண கண்ணுல காட்டுவாங்களா மாட்டாங்களா கேட்டு சொல்லு?" என்று அருகில் இருந்த கண்ணனின் காதை கடித்தான் கிருஷ்.
"நீ வேற ஏன் கிருஷ்.. எனக்கு ஏற்கனவே பதறிக்கிட்டு இருக்கு" என்ற கண்ணனை முறைத்தான் கிருஷ்.
"இரு டா.. அவசயப்படாத அண்ணிய காட்டுவாங்க காட்டுவாங்க!” என்று அவனிடம் சமாளிக்ததவன், மெதுவாக நாராயணன் பக்கம் திரும்பி "சார்..!" என்று அழைக்க..
"என்ன தம்பி சார்னு சொல்றீங்க மாமானு வாய் நிறைய கூப்பிடுங்க!" என்றார் பெரும் சிரப்போடு.
'அது என்ன ஜிலேபியா ஜாங்கிரியா வாய் நிறைய வைத்து கூப்பிட.. இவரு வேற நேரம் காலம் தெரியாம… இந்த மாமாவ நீங்க இருக்கிறதும் இல்லாம போறதும் இப்ப நீங்க உங்க பொண்ண காட்டுறதுல தான் இருக்கு' என்று மைண்ட் வாய்ஸோடு "வந்து ரொம்ப நேரம் ஆகுது மாமா... அண்ணிய பாக்கலாமா?" என்றான்.
இவர்களின் சந்திப்பை தள்ளிப் போட தானே இத்தனை நேரம் உறவுக்காரர் ஒவ்வொருவராய் வந்து இவனின் சேம பலன்களை விசாரித்து வாய்க்கும் வயிற்றுக்கும் வஞ்சனை இல்லாமல் கொடுத்து நேரத்தை கடத்திக் கொண்டிருந்தார்கள் என்ற உண்மை அவனுக்கு பாவம் தெரியவில்லை.
ஒருவழியாக பெண்ணை அழைத்து வர… முதலில் மாப்பிள்ளையை பார்க்க ஆர்வமாக மீரா இருந்தாலும்.. 'எங்கே நாம் ஆர்வமாக பார்த்து அவன் அதை தப்பாக புரிந்து கொள்ளக்கூடாது. அதனால் அடங்கியே வாசிக்க வேண்டும்' என்று மெதுவாக இவள் அவனை பார்க்க…
அதே சமயம் மீரா வந்து விட்டதை பார்த்த கண்ணன் கிருஷின் இடுப்பில் முழங்கையால் குத்த கிருஷ் மெல்ல திரும்பிப் பார்க்க…
இருவர் விழிகளும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ள… கூர்ந்து பார்த்தனர் இருவரும் ஒருவரையொருவர்..!
மறக்க கூடிய முகமா இது? என்ற ஒரே நினைப்பு இருவருக்கும்..!
அங்கே மலர்ந்தது காதல்.. அல்ல கலவரம்!!
"நீயா?" என்று கிருஷ் கத்த…
"நீங்களா?" என்று மீரா அதிர்ந்து கூவ…
நிலவரம் கலவரம் ஆகும் முன், கிருஷ்ணாவை பிடித்து உட்கார வைத்த கண்ணன் அவன் காதில் "என்னடா ஏற்கனவே உனக்கு அண்ணிய தெரியுமா?" என்று ஆச்சரியமாக கேட்டான்.
"தெரியும்..! தெரியும்..!" என்று பல்லை கடித்துக் கொண்டே கூறினான் க்ரிஷ்.
'ஒருவேளை இந்த படத்தில எல்லாம் வருவது போல இருவரும் ஏற்கனவே காதலித்து.. ஏதோ ஒரு சந்தர்ப்பவசத்தால் பிரிந்து.. இப்பொழுது இந்த திருமணத்தின் மூலம் தெய்வாதீனமாக சேர்கிறார்களோ' என்று கண்ணனின் மூளை தப்பாக வேகவேகமாக யோசித்தது. யோசித்தவற்றை அப்படியே ஒன்று விடாமல் கண்கள் மின்ன கிருஷிடம் கண்ணன் கேட்க…
"தொடப்பக்கட்ட!!" என்று பல்லை கடித்த படி கண்ணனை திட்டினான் கிருஷ்.
"அப்படி என்னடா நான் தப்பா கேட்டுட்டேன்?" என்று இவன் பாவமாக விழிக்க…
"இந்த மூஞ்ச போய் யாராவது லவ் பண்ணுவாங்களா டா? சரியான இவ…" என்று தனக்கு தெரிந்த சில பல நல்ல வார்த்தைகளால் அவளை திட்டினான்.
காதை பொத்திக் கொண்ட கண்ணனோ "எதா இருந்தாலும் வீட்டுக்கு போய் வச்சுக்கலாம் டா அண்ணா.. பாவம் டா இந்த கண்ணா..!" என்றான்.
"இவல நான் காதலிக்கல டா.. என் காதலை அதுவும் என் முதல் காதலை பிரிச்சதே இவ தான்டா! கிராதகி.. பாதகி..!" என்று அவளை வசைப்பாடி கொண்டே முறைத்தான் கிருஷ்.
கிராதகி.. காதலி ஆவளா???
தொடரும்…
