மாயவன் - 14

 

(@gayathri-senthil)
Member Moderator
Joined: 5 months ago
Messages: 13
Thread starter  

உரிமையும் அதிகாரமும் 

 
அந்தப் பெண்கள் விடுதியின் நுழைவு வாயில் அருகே நிலவிய அமைதி, ஏதோ ஒரு புயலுக்கு முன் வரும் பயங்கர நிசப்தத்தைப் போல் இருந்தது. விடுதியின் வெளியே வீசிய இரவுக் காற்றில் ஒருவிதக் கனத்த பாரமும், கண்ணுக்குத் தெரியாத பதற்றமும் நிறைந்திருந்தது. 
 
ஆத்மிகாவின் கண்கள் கோபத்திலும், பல வருடங்களாக அடக்கி வைத்த வலியிலும் சிவந்திருந்தன.
விடுதி வாசலுக்கு வெளியே அவளுக்கு எதிர்புறம் நின்றுகொண்டிருந்த சுரேஷின் முகத்தில் ஒருவித நக்கலும், திமிரும் தாண்டவமாடியது. 
 
ஆனால், அவனுக்கும் ஆத்மிகாவுக்கும் நடுவே ஒரு பெரும் மலையைப் போல கம்பீரமாக நின்று கொண்டிருந்தான் விஜய்.
 
சுரேஷ் தன் பார்வையை விஜய்யின் மீது திருப்பியபடி, ஆத்மிகாவைச் சுட்டிக்காட்டி வன்மத்தோடு பேசத் தொடங்கினான்.
 
 "இங்க பாருடா... இவ எதுக்காக என்கிட்ட இருந்து விவாகரத்து கேட்குறான்னு இப்போ எல்லாருக்கும் புரியும்னு நினைக்கிறேன். இவளுக்கு இந்த விஜய் கூட சுத்தணும், இவன் கூடவே வாழணும்! அதுக்காகத்தான் என்கிட்ட விவாகரத்து கேட்டு நாடகம் ஆடுறா!"
 
சுரேஷின் விஷம் தோய்ந்த வார்த்தைகள் அந்த இடத்தில் நின்றிருந்த அனைவரின் காதுகளிலும் ஈட்டி போலப் பாய்ந்தன.
 
"ஏய்!" என்று விஜய்யின் தொண்டையிலிருந்து ஒரு சிங்கத்தின் உறுமலைப் போன்ற குரல் வெளிப்பட்டது. அவனது கண்கள் கோபத்தில் சிவக்க, கைகள் இறுகின.
ஆனால், விஜய் மேற்கொண்டு பேசுவதற்குள் ஆத்மிகா குறுக்கிட்டாள். 
 
அவளது குரலில் அச்சமில்லை; மாறாக ஒருவித துணிச்சல் நிறைந்திருந்தது. "ஆமாம்டா! ஆமாம், அப்படி தான் வச்சுக்கோயேன்! எனக்கு அவரைப் பிடிச்சிருக்கு, அவருக்கு என்னைப் பிடிச்சிருக்கு. அவரை நான் கல்யாணம் கூடப் பண்ணிப்பேன்! அது என் இஷ்டம், என் வாழ்க்கை! உனக்கும் அதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை!"
 
ஆத்மிகாவின் வாயிலிருந்து வந்த அந்த வார்த்தைகள், அங்கிருந்த மற்றவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தன. அவளுடைய அம்மாவும் தம்பியும் உறைந்து போய் நின்றார்கள். 
 
ஆனால், விஜய்யின் இதயத்தில் அது ஒரு புதுவித உணர்வைத் தூண்டியது.
ஆத்மிகா எப்போதோ தன் மன கதவைத் திறந்து விட்டாள் என்பது விஜய்க்குத் தெரியும். ஆனால், அவளது சொந்த வாயாலேயே, மற்றவர்கள் முன்னிலையில், அதுவும் சுரேஷின் முகத்திற்கு நேராக "அப்படி தான் வச்சுக்கோயேன்" என்று உரிமையோடு சொன்ன அந்த வார்த்தை விஜய்க்கு ஒரு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி போல இருந்தது. 
 
தன்னிடம் அவள் எடுத்து வைக்கும் முதல் நம்பிக்கைப் படியாகவே விஜய் அதை நினைத்து உள்ளுக்குள் நெகிழ்ந்தான்.
 
"ஏய்! என்னடி சொல்ற? உனக்குத் திமிர் ஜாஸ்தியாயிடுச்சாடி?" என்று கத்திக்கொண்டே, ஆத்மிகாவின் அம்மா தேவகி பாய்ந்து வந்து அவளை அடிக்கக் கையை ஓங்கினாள்.
 
"போதும்! நிறுத்துங்க அம்மா!" என்று கத்தினாள் ஆத்மிகா. அவளது உரத்த குரல் விடுதி காம்பவுண்ட் சுவர்களில் எதிரொலித்தது. 
 
தாயின் ஓங்கிய கை காற்றில் அப்படியே நின்றது.
ஆத்மிகா மெதுவாகத் தன் பார்வையை விஜய்யின் பக்கம் திருப்பினாள். அவளது கண்களில் இப்போது கோபத்திற்குப் பதிலாக ஒருவித எதிர்பார்ப்பும் ஏக்கமும் நிறைந்திருந்தன. 
 
"உண்மையாவே... உண்மையாவே விவாகரத்து ஆகிடுச்சா?" என்று தழுதழுத்த குரலில் கேட்டாள்.
விஜய் அமைதியாகத் தன் தலையை ஆட்டினான் “ஆம்” என்று. 
 
அவனது விழிகளில் ஆத்மிகாவிற்கு ஆறுதல் அளிக்கும் ஒரு மென்மை இருந்தது.
 
 "ஆமாம் ஆத்மிகா... அதை உன்கிட்ட கொடுக்கத்தான் வந்தேன்," என்று கூறியபடி, அவளை நோக்கி மெதுவாக நடந்து சென்றான். தன் கோட் பாக்கெட்டிலிருந்து அந்த விவாகரத்துப் பத்திரங்களை எடுத்து அவளிடம் நீட்டினான். 
 
"இனிமேல் உனக்கும் இந்த சுரேஷுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை. நீ முழுமையா சுதந்திரமானவ."
அந்தப் பத்திரத்தைக் கையில் வாங்கிய ஆத்மிகாவின் கைகள் நடுங்கின. 
 
அதில் இருந்த எழுத்துக்களைப் பார்த்தவள், அடுத்த நொடி சட்டென்று விடுதி வாசலிலேயே மண்டியிட்டு அமர்ந்து விம்மத் தொடங்கினாள். பல வருடங்களாக அந்த நரக வாழ்க்கையில் அனுபவித்த கொடுமைகள், அவமானம், வலி அத்தனையும் ஒரேடியாகக் கண்ணீராக வெளியேறியது.
 
"ரொம்ப... ரொம்ப நன்றி விஜய்! இந்த நரகத்துல இருந்து எனக்கு விடுதலை வாங்கித் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி!" என்று கதறியபடியே, சாலையில் அமர்ந்தபடியே விஜய்யை நோக்கித் தன் இரு கைகளையும் கூப்பி வணங்கினாள்.
 
அவள் தன்னிடம் கைகூப்பி நன்றி சொல்வதைப் பார்த்த விஜய்க்கு நெஞ்சம் கனத்தது. அவனுக்கே ஒரு மாதிரியாகச் சங்கடமாகிவிட்டது. அவளை இந்த நிலையில் பார்ப்பதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
 
"ஹேய் ஆத்மிகா... அதெல்லாம் ஒன்னும் இல்லை. நீ முதல்ல எழுந்திரு," என்று பதற்றத்தோடு கூறிய விஜய், அவளது தோள்களைப் பற்றித் தூக்க முயன்றான்.
 
ஆனால், அதற்குள் சுரேஷ் மீண்டும் குறுக்கிட்டான். "ஆஹா! என்ன ஒரு நாடகம்! நீயும் இவனும் சேர்ந்து நடத்துற அருமையான நாடகம்டா இது!" என்று நக்கலாகச் சிரித்தான். 
 
"உன்னோட ஒழுக்கக்கேடான நடத்தைக்காகத்தானே என்கிட்ட இருந்து விவாகரத்து வாங்கின? இவன் கூட ஓடிப் போறதுக்குத்தானே போலி கையெழுத்து போட்டு, ஃபோர்ஜரி பண்ணி டிவோர்ஸ் பேப்பர் தயார் பண்ணியிருக்க?"
சுரேஷ் எல்லை மீறிப் பேசுவதைக் கண்ட விஜய்யின் பொறுமை பறந்தது. 
 
ஆத்மிகா சொல்வதற்கு முன், விஜய் மின்னல் வேகத்தில் பாய்ந்து சுரேஷின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான்!
 
"பளார்!" என்ற சத்தம் அந்த இரவில் பலமாக எதிரொலித்தது. சுரேஷ் தடுமாறிச் சுவரில் போய் மோதி விழுந்தான். அவனது உதட்டோரத்திலிருந்து ரத்தம் கசிந்தது. மற்றவர்கள் அதிர்ந்து போய் பார்த்தார்கள்.
 
"இதோ பாரு சுரேஷ்! இதுக்கப்புறம் நீ ஒரு வார்த்தை தப்பா பேசினாலும், அடுத்த நிமிஷம் போலீஸ் தான் வரும்!" என்று எச்சரித்தான் விஜய். 
 
அவனது குரலில் மரண பயத்தைக் காட்டும் ஒரு கம்பீரம் இருந்தது.
 
சுரேஷ் தன் கன்னத்தைப் பிடித்தபடியே, "போலீஸ் வருவாங்களா? கூப்பிடுடா! நானும் சொல்றேன்! என் பொண்டாட்டி இவன் கூட சேர்ந்து சுத்தறதுக்காக விவாகரத்துக்கு அப்ளை பண்ணி, ஃபோர்ஜரி பண்ணி விவாகரத்து வாங்கியிருக்கான்னு நானும் போலீஸ்கிட்ட சொல்றேன்!" என்று ஆத்திரத்துடன் கத்தினான்.
 
சுரேஷின் இந்த அயோக்கியத்தனத்தைக் கேட்ட ஆத்மிகாவிற்குள் அதுவரை அடக்கி வைத்திருந்த தீப்பொறி வெடித்துச் சிதறியது. 
 
தரையிலிருந்து வேங்கையைப் போல் எழுந்தவள், சுரேஷை நோக்கிப் பாய்ந்து அவனது இன்னொரு கன்னத்தில் ஓங்கி ஒரு அறை வைத்தாள்!
 
"பளார்!"
 
"இன்னொரு முறை அவரைப் பத்தி ஒரு வார்த்தை தப்பா பேசினா தொலைச்சிடுவேன் உன்னை!" என்று ஆத்மிகா கத்தினாள். 
 
"போலீஸுக்குப் போலாமா? வாடா போலாம்! என் உடம்புல நீ ஏற்படுத்தின காயத்தையெல்லாம் போலீஸ்கிட்ட காட்டட்டுமா? நீ எனக்குக் கொடுத்த சித்திரவதையை எல்லாம் ஒவ்வொன்னா நிரூபிக்கட்டுமா?" என்று அவனது சட்டையைப் பிடித்து உலுக்கினாள்.
 
ஆத்மிகா "என் உடம்பில் இருக்கும் காயங்கள்" என்று சொன்னதைக் கேட்டதும், அங்கிருந்த விஜய்க்கும் அவளது அம்மா தேவகிக்கும் நெஞ்சில் 'திக்கு' என்றது.
 
விஜய்யின் கண்கள் கணநேரத்தில் கோபத்தில் இருண்டன. 'இவள் இந்த அளவுக்குக் கொடுமையை அனுபவித்திருக்கிறாளா?' என்ற எண்ணம் அவனது இதயத்தை ஊசியாகத் தைத்தது.
 
"என்னடி சொல்ற ஆத்மிகா?" என்று பதற்றத்துடன் ஓடிவந்தார் தாய் தேவகி. பெற்றவள் மனம் மகளின் வார்த்தைகளில் நிலைதடுமாறியது.
 
ஆனால், ஆத்மிகாவின் தம்பியோ, அக்கா தன் வீட்டிற்குச் சுமையாக வந்துவிடுவாளோ என்ற சுயநல எண்ணத்திலேயே மூழ்கியிருந்தான்.
 
 "அம்மா! அவ ஏதோ உளறிக்கிட்டு இருக்காமா! கணவன்-மனைவினா ஆயிரம் பிரச்சனைகள் வரத்தான் செய்யும். அதுக்காக யாரோ ஒருத்தன் கூடச் சேர்ந்துக்கிட்டு புருஷனுக்குத் தெரியாம டிவோோர்ஸுக்கு அப்ளை பண்ணுவாங்களா?" என்று கோபமாகக் கேட்டான்.
 
"டேய்! நீ வாயை மூடுடா!" என்று தம்பியைப் பார்த்துச் சீறினாள் ஆத்மிகா. "என்ன உன் தலைக்கு பாரமா வந்துடப் போறேன்னு பயமா இருக்கா? நான் சாகுற நேரமா வந்தாலும், நீங்க இருக்கிற பக்கம் தலைவச்சுக் கூடப் படுக்க மாட்டேன்டா!" என்று ஆத்திரமும் அழுகையுமாகச் சொன்னாள்.
 
"ஏன்டி இப்படிப் பேசுற?" என்று தாய் தேவகி பதறினார்.
சுரேஷ் லேசாகத் தயங்கினாலும், மீண்டும் தன் சுயரூபத்தைக் காட்டினான். 
 
"போலீஸுக்குப் போறியா? சரி, போ! ஆனா நீ பண்ணது ஃபோர்ஜரிதானே? சட்டப்படி இது செல்லாது!" என்று மீண்டும் விஜய்யையும் ஆத்மிகாவையும் மிரட்டப் பார்த்தான்.
 
அப்போது விஜய் அவனுக்கு முன்பாகப் போய் நிமிர்ந்து நின்றான். அவனது உதடுகளில் ஒரு நக்கலான புன்னகை அரும்பியது.
 
"அப்படியா சுரேஷ்? நீ பண்ண ஃபோர்ஜரி எல்லாம் நான் லிஸ்ட் போடவா?" என்று விஜய் கேட்கவும், சுரேஷின் முகம் வெளிறிப்போனது.
 
"பி.கே. குரூப்... எம்.என். கார்பரேஷன்..." விஜய் ஒவ்வொரு பெயராகச் சொல்லச் சொல்ல, சுரேஷின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. அவனது தொண்டை வறண்டு போனது.
 
"யார்... யார் நீ?" என்று திணறியபடி வந்தது சுரேஷின் குரல்.
 
"நான் யாரா இருந்தா உனக்கு என்னப்பா?" என்று கூலாகக் கேட்டான் விஜய். 
 
"உனக்கு இப்போ என்ன வேணும்? லீகலா உன் கண்ணு முன்னாடி டிவோர்ஸ் ஆகணும், அவ்வளவுதானே?"
சுரேஷால் பதிலொன்றும் பேச முடியவில்லை. ஆத்மிகாவைக் கொடுமைப்படுத்திய சுரேஷ், விஜய்யை ஒரு சாதாரண நபர் என்று நினைத்திருந்தான். ஆனால், விஜய் சாதாரணமானவன் அல்ல; தன் தொழிலையும், தன் பின்புலத்தையும் விரல் நுனியில் வைத்திருக்கும் ஒரு பெரும் சக்தி என்பதைப் புரிந்துகொண்ட போது சுரேஷின் கால்கள் நடுங்கத் தொடங்கின.
 
விஜய் ஆத்மிகாவைப் பார்த்தான். "கொஞ்சம் என் கூட வர முடியுமா ஆத்மிகா?" என்று கேட்டான்.
 
ஆத்மிகா லேசான தயக்கத்துடன், "இந்த டைம்லயா?" என்று கேட்டாள்.
 
"வேணும்னா மார்னிங் கூட போகலாம். ஆனா இவன் போனானா இழுத்தடிச்சு டைம் வேஸ்ட் பண்ணுவான்னு நினைக்கிறேன்," என்றான் விஜய்.
 
ஆத்மிகா சுரேஷை அருவருப்போடு முறைத்தபடியே, "சரி விஜய்... எனக்கு இவன் கிட்ட இருந்து கம்ப்ளீட்டா ஒரு ஃபிரீடம் வேணும். நான் வர்றேன்," என்றாள் உறுதியாக.
 
விஜய் ஆத்மிகாவின் அம்மாவையும் தம்பியையும் பார்த்தான். "நீங்க கூட வரதுனா வரலாம்," என்று அழைத்தான்.
 
ஆனால், தம்பி உடனடியாகத் தன் சுயரூபத்தைக் காட்டினான். "இவ பண்ற வேலைக்கெல்லாம் நாங்க கூடவே சுத்தணுமா? நீ என்ன வேணா பண்ணித் தொலை, ஆனா வீட்டுப் பக்கம் வந்துடாத!" என்று கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் கத்தினான்.
 
தாய் தேவகியின் கண்களில் கண்ணீர் வழிந்தது. மகள் உடம்பில் காயம் என்று சொன்னதுமே தாய் உள்ளம் பதறிவிட்டது. 'தன் பெண் எந்த அளவுக்குக் கொடுமைகளை அனுபவித்திருப்பாளோ?' என்ற பயமும் பதற்றமும் அவரைச் சூழ்ந்தது. 
 
இத்தனை நாட்களாக "புருஷனோடு சேர்ந்து வாழ்" என்று சொன்ன தன் வாயை நினைத்து அவரே நொந்து கொண்டார். மகளுக்குப் பாதுகாப்பாக நிற்க வேண்டும் என்று அவர் நினைத்தார்.
 
"வேணும்னா நான் வர்றேன்மா..." என்று தாய் அடியெடுத்து வைக்க முயன்றார்.
 
"அம்மா!" என்று கத்தினான் மகன். "நீ இவ கூடப் போறதா இருந்தா அப்படியே போயிடு! திரும்பவும் என்கிட்ட வரக் கூடாது! புருஷன்கிட்ட அட்வைஸ் பண்ணி வாழ வைக்கிறதை விட்டுட்டு, நீயும் அவ கூடச் சேர்றியா?" என்று தாயை மிரட்டினான்.
 
தாய்க்கு யார் பக்கம் நிற்பதென்றே புரியவில்லை. மகளும் வேண்டும், மகனும் வேண்டும். இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்தார்.
 
தாயின் தவிப்பைப் புரிந்துகொண்ட ஆத்மிகா, "அம்மா... நீ கவலைப்படாதே. நான் பார்த்துக்கிறேன், நீ போம்மா," என்று தாயை அனுப்பி வைக்க முயன்றாள்.
 
அந்தச் சமயத்தில் சுரேஷ் மெதுவாக அங்கிருந்து நழுவி எஸ்கேப் ஆகப் பார்த்தான். ஆனால், விஜய்யின் கண்கள் அவனைத் தப்பவிடவில்லை. 
 
சட்டென்று பாய்ந்த விஜய், சுரேஷின் சட்டை காலரைக் கொத்தாகப் பிடித்தான்.
தன் மற்றொரு கையால் போனை எடுத்த விஜய், ஒரு எண்ணைச் சொடுக்கி காதில் வைத்தான். 
 
"ஹலோ சார்... இருக்கீங்களா? ஆமா, இப்போ அவங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு வர்றேன். அவங்க கண் முன்னாடியே அந்த கேஸ கொஞ்சம் கிளியர் பண்ணிட்டீங்கனா நல்லா இருக்கும். உங்களுக்குப் பிராப்ளம் இல்லையே?" என்று பேசிவிட்டு போனை வைத்தான்.
ஆத்மிகாவைப் பார்த்து, "போலாமா?" என்று கேட்டான். அவள் சம்மதமாகத் தலையாட்டினாள்.
 
சுரேஷைத் தள்ளி இழுத்து வந்த விஜய், "வா இன்னையோடு உனக்கு என்ட் கார்ட்!" என்று அவனைக் கிண்டலாக அழைத்தான். 
 
ஆத்மிகாவின் தம்பி தன் தாயை அழைத்துக் கொண்டு அங்கிருந்து விறுவிறுவென்று சென்றுவிட்டான்.
 
சுரேஷால் அங்கிருந்து போகவும் முடியாமல், இருக்கவும் முடியாமல் நெருப்பின் மேல் நிற்பது போல நின்றான். "காரில் ஏறுடா திருடா!" என்று விஜய் அதட்டவே, சுரேஷ் வேறு வழியின்றி காரின் பின்சீட்டில் போய் அமர்ந்தான்.
 
விஜய் டிரைவர் சீட்டில் அமர, ஆத்மிகா பின்சீட்டில் சுரேஷின் பக்கத்தில் அமர்வாள் என்று சுரேஷ் நினைத்தான். ஆனால், ஆத்மிகா தயங்காமல் முன்சீட்டில் விஜய்யின் பக்கத்திலேயே வந்து அமர்ந்தாள்.
 
"சரி, போலாமா?" என்று விஜய் கேட்க, அவள் புன்னகையுடன் தலையசைத்தாள். கார் வக்கீலின் வீட்டை நோக்கிப் பறந்தது.
வக்கீலின் பிரம்மாண்டமான அலுவலக அறை.
 
"வாங்க மிஸ்டர் விஜய்!" என்று வரவேற்றார் வக்கீல்.
"சாரி சார், இந்த நேரத்தில் உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?" என்று விஜய் கேட்க, "அதெல்லாம் இல்லை விஜய். நாங்க இருக்கிறதே உங்களுக்கெல்லாம் சர்வீஸ் பண்ணத்தானே? ஒன்னும் பிரச்சனை இல்லை," என்று புன்னகைத்தார் வக்கீல்.
 
பிறகு சுரேஷைப் பார்த்த வக்கீல் லேசான நக்கலுடன், "ஆமாம், இவன்தானா அது?" என்று கேட்டார்.
 
"ஆமா சார், இவனேதான்! இவனுக்கு நிறைய விளக்கங்கள் எல்லாம் தேவைப்படுதாம். நாம ஃபோர்ஜரி பண்ணிக்கிட்டோமான்னு கேட்குறான். கொஞ்சம் நீங்களே பேசுங்க," என்று கூறிய விஜய், எதிரில் இருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்.
 
பிறகு ஆத்மிகாவைப் பார்த்து, "ஆத்மிகா, இங்க வந்து என் பக்கத்துல உட்காரு," என்றான் சற்று அழுத்தமான குரலில்.
ஆத்மிகா லேசான தயக்கத்துடன் நிற்கவே, விஜய் மீண்டும் தன் பார்வையால் அழைக்க, அவள் தயங்காமல் வந்து விஜய்யின் அருகிலேயே அமர்ந்து கொண்டாள்.
 
அதைப்பார்த்த வக்கீலுக்கு லேசான சிரிப்பு வந்தது. விஜய்யின் மனம் கவர்ந்தவள் இவள் தான் என்பது அவருக்குப் புரிந்துவிட்டது. 
 
ஆனால், அவளது நலிந்த தோற்றமும், கண்களில் இருந்த சோகமும் வக்கீலைச் சற்று உறுத்தியது. 'ஒரு உருவிழந்த சிற்பத்தைப் போல இருக்கும் இந்தப் பெண் மீது விஜய் ஆசைப்பட்டதில் வியப்பில்லை. இப்போதுதான் இவள் கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பழைய நரகத்திலிருந்து மீண்டு வருகிறாள்' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.
 
வக்கீல் சுரேஷைப் பார்த்து, "சரிப்பா... நீ ஏதோ நிறையச் சொன்னியாமே? இதோ இதுல எல்லாம் சைன் பண்ணிடு," என்று சில டாக்குமெண்ட்டுகளை எடுத்து சுரேஷின் முன் வைத்தார்.
 
அந்த வக்கீலின் பெயரைப் பார்த்ததுமே சுரேஷிற்குத் தூக்கி வாரிப்போட்டது. அவர் எடுக்கும் எந்தக் கேஸும் தோற்றுப்போனதாகச் சரித்திரமே இல்லை! அவர் கை வைத்தால் தப்பவே முடியாது என்பதை சுரேஷ் அறிவான்.
 
சுரேஷ் பதற்றத்துடன், "நான் எதுக்கு சைன் பண்ணணும்?" என்று யோசிக்க, விஜய் அவனைக் கூர்மையாகப் பார்த்தான்.
 
"என்னடா யோசனை? சைன் போடுறியா இல்லையா?" என்று அதட்டினான் விஜய் மாயவன்.
 
அதேநேரம் வக்கீல் இன்னொரு ஆவணத்தை விஜய்யிடம் நீட்டினார் அவன் அதை வாங்கி ஆத்மிகாவின் முன் வைத்து, "ஆத்மிகா, இதுல சைன் பண்ணு," என்றான்.
 
ஆத்மிகா அது என்ன ஏதென்று கூடப் பார்க்காமல் உடனடியாகப் பேனாவை எடுத்துச் கையெழுத்திட்டாள்.
வக்கீல் ஆச்சரியத்துடன், "ஹேய் ஆத்மிகா... என்னன்னு பார்க்காமயே சைன் பண்றீங்களே?" என்று கேட்டார்.
 
ஆத்மிகா நிமிர்ந்து விஜய்யின் கண்களை நேராகப் பார்த்தாள். அவளது விழிகளில் அளவற்ற நம்பிக்கை ததும்பி வழிந்தது.
 
"சார்... நான் இப்போ இந்த உலகத்திலேயே அதிகமா ஒருத்தரை நம்புறேன்னா... அது இவரைத்தான்! நிச்சயமா இவர் என் மனசுக்குத் தெரிஞ்சு எனக்கு எந்தக் கெடுதலும் பண்ண மாட்டாருனு எனக்குத் தோணுது சார்," என்று அழுத்தமாகக் கூறினாள்.
 
அவளது வார்த்தைகளைக் கேட்ட விஜய்யின் முகத்தில் ஒரு அழகான புன்னகை அரும்பியது. தன் மனதிற்குள், 'நான் அவ்வளவு நல்லவன் இல்லடி... பேட் பாய்!' என்று நினைத்துக் கொண்டாலும், அவளது நம்பிக்கை அவனுக்குள் ஒரு பெரிய நிறைவைக் கொடுத்தது.
 
வக்கீலும் விஜய்யைப் பார்த்தார். விஜய்யின் கண்களில் ஆத்மிகாவைப் பற்றிய காதலும், அக்கறையும், பாதுகாப்பும் மிளிர்ந்தது. இவளுக்கு விஜய்யிடம் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கிறது, அதேபோல விஜய்க்கு இவள் மீது உயிரையே வைக்கும் காதல் இருக்கிறது என்பதை வக்கீல் தெளிவாகப் புரிந்துகொண்டார்.
 
"சரி, சுரேஷ்... இப்போ நீ இந்த டாக்குமெண்ட்ல சைன் பண்ணலைனா... இந்த ஆதாரம் எல்லாம் நாளைக்கு காலையில போக வேண்டியவங்க கைக்குப் போகும். எது வசதி?" என்று விஜய் குரலை உயர்த்தாமல் மிரட்டினான்.
 
சுரேஷ் வக்கீலையும் விஜய்யையும் மாறி மாறிப் பார்த்து, "நான் பண்ணலைனா என்ன பண்ணுவீங்க?" என்று கோபமாகக் கேட்டான்.
 
விஜய் வக்கீலைப் பார்க்க, வக்கீல் தன் மடிக்கணினியைத் திறந்து சில வீடியோக்களையும் ஆவணங்களையும் சுரேஷின் கண் முன்னால் ஓட விட்டார்.
 
சுரேஷ் கம்பெனியில் செய்த கையாடல்கள், சட்டவிரோதமாக யாரிடமெல்லாம் லஞ்சம் வாங்கினான், எப்படிப்பட்ட மோசடிகளைச் செய்தான் என்ற அனைத்து டீடைல்ஸ், வீடியோ ஆதாரங்கள் அங்கே அக்குவேறாக ஆணிவேறாகப் பிரித்து வைக்கப்பட்டிருந்தன.
சுரேஷின் முகம் பயத்தில் வெளுத்துப் போனது. 
 
"இதெல்லாம்... இதெல்லாம் உங்களுக்கு எப்படி கிடைத்தது?" என்று திணறினான்.
 
"அதெல்லாம் அப்படித்தான்!" என்றான் விஜய் திமிராக.
வக்கீல் குறுக்கிட்டு, "என்ன சுரேஷ்... ஜெயிலுக்கு போய் களி சாப்பிட ஆசைப்படுறியா? இந்த கையாடல் கேஸ் எல்லாம் வெளியே வந்தா நீ ஜெயிலுக்குள்ள தான் இருப்ப. உன்னால் வெளியே வரவும் முடியாது, ஜாமீனும் கிடைக்காது! என்ன சொல்ற?" என்றார்.
 
சுரேஷ் விஜய்யைக் கோபமாக முறைத்துப் பார்த்தான். வேறு வழியே இல்லாமல், அந்த ஆவணங்களில் வேகவேகமாகக் கையெழுத்திட்டான். பேனாவைக் கீழே எறிந்துவிட்டு, "ஆத்மிகா... உன்னை நான் அப்புறம் பாத்துக்குறேன்!" என்று ஆத்திரத்துடன் கத்தினான்.
 
விஜய் நிமிர்ந்து சுரேஷின் கண்களை நேராகப் பார்த்து எச்சரித்தான்.
 
"டேய்! உன்னால இனி அவளோட நிழலைக் கூடத் தொட முடியாதுடா... நான் இருக்கிற வரைக்கும்!"
விஜய்யின் அந்த வார்த்தைகளில் இருந்த , அதிகாரமும், உரிமையும் ஆத்மிகா அப்போது தான் கவனித்தாள், அதிர்ந்து போய் அவனை பார்த்தாள்.
 
 
தொடரும்…
 
 

   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top