Share:
Notifications
Clear all

கிஷ்-மீ 2

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 225
Thread starter  

அத்தியாயம் 2

இதுல பத்து லட்சம் பணம் இருக்கு. கல்யாணம் என்ன தான் பொண்ணு வீட்டு ஆளுங்க பண்ணாலும் சில இடத்துல நம்மளும் பங்கு எடுத்துக்கணும். நான் பொண்ணோட அப்பா கிட்ட பேசிட்டேன். அவர் ஆபீஸ்ல தான் இருப்பார்.. கொண்டு போய் இதை கொடுத்துட்டு வந்துடுறியா?" என்றதும் "சரிங்க பெரியப்பா!" என்று அந்த பையை வாங்கிக் கொண்டான் கண்ணன்.

 

"என்னங்க நீங்க? அவனே சின்ன பையன் அவங்கிட்ட போயி இவ்ளோ பணத்த கொடுத்து விடுகிறீங்க?" என்று வந்தார் சங்கீதா. 

 

இவன் அம்மா என்று பல்லை கடிக்க அவன் தாடையை பாசமாக பிடித்து "அப்படி இல்லடா கண்ணா! காலம் கெட்டு கிடக்கு இல்லையா? அதைத்தான் சொன்னேன். அதுவும் இல்லாம அவன மட்டும் அனுப்புனீங்கன்னா அத்தனை மரியாதையா இருக்காது. நம் கடை ஆடிட்டர் ஆபீஸ் பக்கம் தானே? அப்படியே கொடுத்துட்டு இரண்டு பேரும் கடைக்கு கிளம்புங்க" என்றதும் மனைவி சொல்வது சரி என்று பட "சரி சங்கீ!" என்றார்.

 

கிளம்பும் அவரிடம் "ஏங்க.." என்று இவர் இழுக்க…

 

"சொல்லுங்க…" என்று அவரும் அதே போல இழுக்க..

 

"இல்ல கிருஷ்ணா கிட்ட… சொல்லாம…‌ இப்படி பண்ணுறது.. என்ன இருந்தாலும் வளர்ந்த பிள்ளை இல்லையா? ஒரு வார்த்தை அவன் கிட்ட…" என்று அவர் திக்கி திணறி கேட்கும் முன் மனைவியை முறைத்தார்.

 

"ஏற்கனவே ரெண்டு தடவை அவனது கல்யாணம் ஏற்பாடாகி நின்னு போச்சு! நிஜமாலுமே தானா தான் நின்னு போச்சா இல்ல உன் புள்ள தான் ஏதாவது கிறுக்குத்தனம் பண்ணி நிப்பாட்டுனானு எனக்கு இன்ன வரைக்கும் சந்தேகமா இருக்கு! அந்த கிறுக்கு பய புள்ள அப்படி செய்வதற்கும் வாய்ப்பு இருக்கு! அதனால இப்போதைக்கு அவன் கிட்ட வாயை திறக்காத! எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டு சொல்லிக்கலாம்"

என்று மனைவி இடம் கூறியவர் சின்ன மகனைப் பார்த்து,

 

"ஏன்டா கண்ணா.. உனக்கு அவன் ஃபாரின் வேலை முடிஞ்சு எப்ப ஊருக்கு வரானு தெரியுமா?" என்று கேட்டார்.

 

"அடுத்த மாசம் மொத வாரத்துல வந்துடுவேனு கிருஷ் சொன்னாப்பா.. இந்த மாசம் வேலை முடிஞ்சிடும்! சில வேலைகள் எல்லாம் இருக்கு முடிச்சிட்டு அடுத்த மாசம் ஐந்து தேதிக்குள் வந்துடுறேன்னு சொல்லி இருக்கான்" என்றான்.

 

"அப்ப சரி.. அஞ்சிலிருந்து பத்துக்குள்ள எந்த தேதி நல்லா இருக்குமோ.. அந்த தேதியே ஃபிக்ஸ் பண்ணிடலாம்" என்றார் தீனதயாளன்.

 

"ஏங்க.. அந்த பொண்ணுக்கும் ஒத்து வருமான்னு கேட்டுட்டு பண்ணுங்க! எல்லாம் உங்க இஷ்டப்படி தான் பண்ண வேண்டியது! ஒவ்வொண்ணத்துக்கும் நாம தான் சொல்லிக் கொடுக்கணும்! கடையை மட்டும் பார்த்துக்கிட்டா மட்டும் போதுமா… இந்த மாதிரி விஷயத்துல யாரு பார்த்து பார்த்து செய்யுறது?" என்று நொடித்துக் கொண்டவர் கணவன் அருந்தி விட்டு வைத்த காஃபி டம்ளரை உள்ளே எடுத்துச் சென்றார்.

 

"பாருடா உங்க அம்மாவ.. இதுதான் சாக்குனு என்னை எப்படி எல்லாம் பேசுறா பாரு.. இந்த பொம்பளைங்களே இப்படித்தான்!" என்று அவர் சத்தம் போட்டு பேச..

 

அவனோ "சத்தத்தை குறைங்க.. சத்தத்தை குறைங்கப்பா! மத்தியான சாப்பாடு வேணுமா இல்லையா?" என்றதும் "ஆமா டா மகனே!" என்று வெளியே கிளம்பி விட்டனர் அப்பாவும் மகனும்.

 

அது என்னவோ தன் மகனை விட கண்ணனிடம் சற்று இலகுவாக தான் இருப்பார் தீனதயாளன். இழந்துவிட்ட தம்பி மகன் என்ற பாசமா இல்லை தான் சொன்னதற்காகவே பிஸினஸ் மேனேஜ்மென்ட் படித்து தன்னுடனே டிபார்ட்மெண்ட் ஸ்டோர் பார்த்து கொள்கிறான் என்கிற எண்ணமா தெரியவில்லை!

 

ஆடிட்டர் ராஜநாராயணன்! 

 

சென்னையில் சொல்லிக் கொள்ளும் போல் இருக்கும் ஆடிட்டர்களில் அவரும் ஒருவர்.

தீனதயாளனுக்கு சமீபகாலமாக இவர் தான் ஆடிட்டிங் ஜிஎஸ்டி டேக்ஸ் எல்லாம் பார்ப்பது.

 

அந்த தொழில் முறை சம்பந்தம் இன்று அவர்களை சம்பந்திகளாய் ஆக்கியிருந்தது!!

 

ராஜநாராயணனின் மூத்த மகள் ராஜமீராவுக்கும் தீனதயாளனின் மூத்த மகன் வேதாந்த் கிருஷ்ணாவுக்கும்தான் திருமணம்!

 

"வாங்க.. வாங்க.. சம்பந்தி!" என்று வாய் நிறைய நாராயணன் அழைக்க..

 

"எப்பொழுதும் போல தீனதயாளனே கூப்பிடுங்க நாராயணன்" என்று பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் எப்பொழுதும் போல பேசும் தீனதயாளனை அவ்வளவு பிடித்தது. இந்த துறையில் வெகுகாலமாக இருக்கிறார் நாராயணன். எத்தனையோ நபர்களை பார்த்து பேசி பழக இருக்கிறார். ஆனால் தீனதயாளன் அப்போதும் இப்பொழுதும் ஒரே மாதிரி தான்! பணம் வந்தது என்று பெரிய கிரீடத்தை தலையில் சுமப்பவர் இல்லை. அதனாலேயே சமூகம் ஜாதி என்று அத்தனையும் கடந்து இன்று சம்பந்திகளாக போகின்றனர்!

 

கல்யாணத்திற்கு என்று ஒரு சிறு பகுதியை அவர் கொடுக்க "என்னது இது?" என்றதும் "இல்லை! இது முறை தானே மறுக்காமல் வாங்கிக்கோங்க நாராயணன்!" என்று கொடுத்தார் தீனதயாளன்.

 

"மருமக பொண்ணு என்ன சொல்லுது?" என்று தீனதயாளன் ஆர்வமாக கேட்க…

 

"ஊர் திருவிழாவுக்காக போனவ இன்னும் வீட்டுக்கு வரல சம்பந்தி! அவங்க மாமாவுக்கு அவ ஏக செல்லம்! இன்னும் ரெண்டு நாளுல வந்துருவா… அதுவும் இல்லாம நான் இவரு தான் மாப்பிள்ளைமானு சொன்னா.. அப்படியாப்பானு தலையை மட்டும் தான் ஆட்டுவா என் மக. மறுக்கவே மாட்டா.. என்‌ பேச்ச மீற மாட்டா..! அமைதின்னா அமைதி அப்படி ஒரு அமைதி..!” என்று பெண்ணை பற்றி பெருமையாக புகழ்ந்து நாராயணன் பேசிக் கொண்டிருக்க….

 

“டேய் வீரபாஞ்சான்.. அமைதியா இருக்க நாம‌ என்ன மௌன அஞ்சலி கூட்டமா போடுறோம்.. அய்யே... பெரிய காரியம் டே. சும்மா ட்ரம்ஸ் ஒரு பக்கம் அதிரணும்.. இந்த பக்கம் நம்ம பொன்னாத்தா டீம் சோக கானா பாட்ட பாடி களக்கட்டணும்..! இடையில நம்ம மங்கா அண்ட் டீம் ஒப்பாரி பாட்ட சும்மா ஹை பிட்சுல பாடணும்.. புர்யுதா டே”

 

“சர்தான்கா”

 

“ஹ்க்கான்.. அப்பால அல்லாத்துக்கும் ரெடி வாடா கய்த” என்று அவள் பேசி முடிக்க.. அவள் முன் வீரபத்ரன் போல ரௌத்திரமாய் நின்றார் ராஜநாராயணன்.

 

“இன்னா எழவு டி இது?” என்று அவர் ஆத்திரமாக பல்லை கடித்துக் கொண்டு கேட்க,

 

“அக்கான் நைனா.. எழவு வீட்டுக்கு தான் ப்ராக்டீஸ் போய்கினு இருக்கு” என்று அவள் கைகாட்டிய இடத்தில் பார்த்த நாராயணன் அரண்டே போனார். 

 

அங்கே பருத்த உருவத்தோடு நலுங்கிய உடைகளோடு பெரிய பொட்டு கலைந்த தலையோடு ட்ரெய்னிங் என்ற பெயரில் அமர்ந்திருந்த நாலு பெண்களை சற்று பயத்தோடு பார்த்தவர் நெஞ்சை ஓரமாக நீவிக்கொண்டே தன் அருகில் நின்ற தேசிகனை முறைத்தார்.

 

“நீ என்ன பண்ணிட்டு இருக்க தெரியுமா?” என்று அவர் அதட்டல் போட..

 

“நல்லா தெரியும் நைனா.. நான் ஈவன் ஆர்கனைசர்.!” என்று மோட்டுவளையை பார்த்து கெத்தாக கூறிய மகளை மேலே இருந்து கீழ் வரை பார்த்தார்.

 

லூசான டீசெர்ட் த்ரீ ஃபோர்த் ஷார்ட்ஸ் போட்டு தலைமுடியை தூக்கி உச்சியில் கொண்டையிட்டு இருந்தாள்.

 

“எல்லாமே நீ கொடுக்கும் செல்லம்தான்..! பாரு என்ன பண்ணிட்டு இருக்கா பாரு?? ஒழுங்கா பேசி அவளை வீட்டுக்கு அழைச்சிட்டு வர வேலைய பாரு.. நான் போறேன்.‌ இன்னும் கொஞ்ச நேரம் இங்க நின்னா எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்திடும்” என்று விறுவிறுவென்று நாராயணன் செல்ல அவர் பின்னே ஓடினார் தேசிகன்.

 

முன்னை விட எப்படியாவது தீனதயாளன் மகன் கிருஷூக்கு மகளை கட்டிக் கொடுக்கும் எண்ணம் வலுத்தது அப்போது தான்..!

 

அந்த நினைவில் தலையை உலுக்கிக் கொண்ட நாராயணன் “திருவிழா முடிஞ்சு வந்துருவா சம்பந்தி” என்று தொண்டை இருந்து வார்த்தைகளை கஷ்டப்பட்டு பேசினார்.

 

ஆனால் அவர் மகளோ..

“எம்மா.. மங்கா. இன்னா இப்படி மூக்க தொடைச்சிகினு இர்க்க.. அய்யே இது சரி வராது. நல்லா கண்ணுல தண்ணி கார்ப்பரேஷன் வாட்டர் கணக்கா கொட்டணும். புர்தா?”என்று‌ கத்திக் கொண்டிருந்தாள்.

 

“ஏக்கா பொன்மணி.. பேர்ல மட்டும் மணி வச்சிகினு இருந்தா பத்தாதுமே.. சும்மா கோவில் மணிக்கா வெங்கல குரல கத்தி கத்தி அழுகணும். எங்க அழுது காட்டு?” 

 

“இந்தா இத்து ஓகே வா பாரு கண்ணு..” என்ற பொன்மணி, 

 

//ராசாவே.. என் ராசாவே..

உன்ன நம்பி

இந்த ரோசாப்பு இருந்துச்சுங்களே..

 

ஒரு வார்த்த சொல்லாம கொள்ளாம போய்டிக..

என் உசுர வந்து உருக்குதுக ராசாவே..

 

நம் சொல்லாத உறவ ராசாவே..

இந்த ரோசா நெஞ்சோட வளத்தா..

 

அது தப்பான கருத்தா.. ஊரெல்லாம் பேசுமே.. ராசாவே//

 

என்று‌அந்த பொன்மணி பாடி வைக்க..

 

“இந்த வரிய எங்கோ நான் கேட்டு இருக்கேனே? எங்க…?” வெகுவாக அவள் யோசிக்க..

 

//ராசாவே

உன்ன நம்பி

இந்த ரோசாப்பு இருக்குதுங்க

 

ஒரு வார்த்த

சொல்லிட்டிங்க

அது உசுர வந்து உருக்குதுங்க

 

வந்து சொல்லாத உறவ

இவ நெஞ்சோட வளத்தா

 

அது தப்பான கருத்தா

தண்ணீரில் எழுத்தா..// “இந்த பாட்டு தான் பாப்பா” என்று பாடியபடியே உள்ளே வந்தார் அவளின் தாய்மாமன் தேசிகன்.

 

“அட ஆமாமில்ல.. ஏக்கா மணி உன்னான்ட என்னா சொன்னேன் நானு. நீ என்னா பண்ணிகீர.. ஒழுங்கா கானா பாடு”

 

“கண்ணு இப்ப எல்லாம் இந்த மாதிரி சினிமா பாட்ட‌ ஓல்டாவா மாத்தி பாடுறது தான் பேசனு” என்றார் அவர்.

 

“ஆமா.. பேசனு.. டம்ளரு.. குண்டானுட்டு போக்கா. ஒழுங்கா பாடு.. இல்லாட்டி துட்ட வெட்டிப்புடுவேன். பாத்துக்கோ” என்று கறாராய் பேசியவளை கண்டு புன்னகைத்தார் தேசிகன்.

 

“என்ன மாமா? இந்நேரத்துக்கு என்னை தேடி ட்ரெயினிங் இடத்திற்கு வந்திருக்க? என்ன விஷயம்?” என்று கேட்டபடி அங்கிருந்து டேபிளில் ஏறி உட்கார்ந்தாள். 

 

இவர்கள் இருவரையும் வாய்ப்பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்களை பார்த்து “ஒழுங்கா ப்ராக்டிஸ் பண்ணுங்க.. நான் வந்து திரும்பவும் அழ வைச்சு கேட்பேன். புர்யுதா?” என்று மிரட்டினாள்.

 

“ஏம்மா உனக்கு இந்த பொழப்பு? இந்த பொம்பளைங்கள வச்சுக்கிட்டு நீயும் கத்தி.. அவங்களும் கத்த வைச்சு.. இத பாரத்து உங்க அப்பாவும் கத்தி.. எவ்வளவு பெரிய ஆடிட்டர் அவரு?” தேசிகன் மருமகளின் இந்த கோலத்தைக் கண்டு சற்று வருத்தத்தோடு கேட்டார். 

 

“அவர பத்தி பேசாதீங்க மாமா..! எனக்கு என்ன தொழில் பிடிச்சதோ அதை தான் செய்ய முடியும். நான் ஈவண்ட் ஆர்கனைசர்” என்றாள் கெத்தாக..!

 

அவள் சொல்வது போல எல்லாவிதமான ஈவண்டுகளையும் அவள் குழுவோடு செய்வாள். சந்தோஷ காரியங்களுக்கு தனி டிபார்ட்மெண்ட்..! அதுபோல இம்மாதிரி பெரிய காரியங்களுக்கு தனி டிபார்ட்மென்ட்..!!

 

“பேருதான் பெத்த பேரு!! ஈவண்ட் ஆர்கனைசருனு பெயர வைச்சிக்கிட்டு ஒரு பர்த்டே பார்ட்டி.. எங்கேஜ்மென்ட் பார்ட்டி.. சங்கீத்.. மெஹந்தி இப்படி செஞ்சா கூட பரவாயில்ல‌.. செத்த வீட்டுக்கு எல்லாமா ஈவண்ட் ஆர்கனைஸ் பண்ணுவ? அது நினைச்சா தான் லைட்டா வருத்தமா இருக்கு” என்ற தேசிகன் மருமகளிடம் குறைபட்டார்.  

 

“மாமா.. என் நைனா அந்த நாராயணா தான் நான் செய்ற‌ சேவையை புரிஞ்சிக்கலைன்னா நீங்களுமா?”

 

“இது சேவையாமா?” என்றபடி அங்கிருந்த அவர்களை பார்த்துக் கொண்டு கேட்டார்.

 

ஒப்பாரி கானா பாட அனைவரும் தயார் நிலையில் இருக்க, கொஞ்சம் மிரண்டு‌ தான் போனார் அவர்களை கண்டு.

 

“பின்ன இல்லையா? நான் செய்யறது எவ்வளவு புனித தொழில் தெரியுமா? வெளிநாட்டில இருக்கிற புள்ளைங்க தன் அப்பா அம்மாவுக்கு இறுதி மரியாதை செய்ய முடியலன்னு எவ்வளவு வருத்தப்படுவாங்க? சில பேரால உண்மையாவே நேரா வர முடியாத சூழ்நிலை. அவங்களுக்கு இங்கிருந்தே நாங்கள் இதெல்லாம் காட்டுவோம்.‌ தட் மீன்ஸ்.. அழுகுறதுல இருந்து ஆரம்பிச்சு அவங்கள மயானத்தில் எரிச்சு அவங்க சாம்பல கரைக்கிற வரைக்கும் லைவ் வீடியோல காமிச்சு அவங்க மனச ஆறுதல் படுத்துறோம். அதே நேரம் இறந்தவங்களும் நமக்கு நாலு பேரு அழுகலையேன்னு பின்னால ஃபீல் பண்ண கூடாதுன்னு தான் இந்த அரேஞ்ச்மென்ட்..!” என்றவள் கைகாட்டிய பக்கம் தேசிகன் பார்க்க.. 

 

அந்த நாலு பேரும் தலையை விரித்து போட்டுக் கொண்டு மீரா சொன்ன அந்த ஒப்பாரி பாடலை பிராக்டிஸ் செய்து கொண்டிருந்தனர் பெரும் அழுகையோடு..!

 

“நீங்க இன்னும் வந்த விஷயத்த சொல்லல மாமா?” 

 

“அது ஒன்னுமில்லடா.. ஒரு விஷயம் சொல்லணும். அது சொன்ன உடனே நீ தாம் தூம்னு குதிப்ப.. அதான்..” என்று மெல்ல சிரித்தவர் பின்பு நாராயணன் சொன்னவற்றை கூறிவிட்டார்.

 

அவளோ "என்னது என்னை கேட்காம எனக்கு கல்யாணமா? மாமா சொல்லி வைங்க உங்க அய்த்தான் கிட்ட… நான் அந்த மாப்பிள்ளை பார்த்து ஓகே சொன்னா தான் அவனை என் கழுத்துல தாலி கட்ட விடுவேன்! இல்லைன்னா நடக்க போற ரணகளத்துக்கு நான் பொறுப்பில்ல!" என்று வீர தீரமாக பேசியவளை கண்டு முட்டி நின்ற சிரிப்பை அடக்கியப்படி நின்றார் மீராவின் தாய் யசோதையின் தம்பி தேசிகன்.

 

வீர புலியாய் பேசும் இவள்.. தந்தையை கண்டால் மீயாவ் என்று சத்தமிட்டு பதுங்கிக் கொள்ளும் வீட்டு பூனையாய் மாறிடுவாள் என்பது அவர் மட்டுமல்ல உலகம் அறிந்த ரகசியம்…!!

 

தொடரும்

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top