இராவணா 20

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 244
Thread starter  

அத்தியாயம் 20

 

“ஏதாவது அட்வைஸ் பண்ணா மட்டும் மூஞ்ச தூக்கி வச்சுக்க தெரியுதுல.. திட்டுனா உனக்கு கோவம் வருது இல்ல.. இப்ப நீ என்ன செஞ்சு வச்சிருக்க? கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா.?” கோபத்தில் கதிர்நயனன் கத்த..

 

“இல்ல மாமா.. அது வந்து.. நாங்க வந்து..” என்று ஆதிரா பேச முயல..

 

“என்ன வந்து போய்னு இழுத்திட்டு இருக்க” இருட்டிலே வைத்து பேச

 

“அது வந்து.. மாமா.. அக்கா இல்ல.. நாங்க மூணு பேரும்தான் சர்ப்ரைஸ் பண்ண..” என்று மறுபடியும் ஆதி இழுக்க..

 

“மூணு பேரையும் ஒண்ணா விட்டா இஷ்டத்துக்கு ஆட்டம் போடுவீங்களா? கொஞ்ச நேரத்துல மனுசனை பதற வச்சிட்டீங்க.. என்னமோ ஏதோனு பயந்து ஓடி வந்தா இங்கே கொண்டாட்டமா பண்றீங்க கொண்டாட்டம்..!” விடாமல் கத்தி பேசிட்டே இருந்தவனுக்கு எதிரில் பிரக்யா விசும்பும் சத்தம் கேட்டதும் அவனுக்கே ஒரு மாதிரியாகிவிட்டது. 

 

‘ச்ச.. காலையில தான் அக்காவும் திட்டினா.. இப்போ நானும் அவள திட்டுறேனே. வாயை கட்டுடா நயனா” என்று தனக்கு தானே கூறிக்கொண்டான்.

 

“நாங்க ஒன்னும் சும்மா ஆட்டம் போடல. உங்க பர்த்டே நாளைக்குல.. அதான் உங்களுக்கு சர்ப்ரைஸா ஏதாவது செய்யலாம்னு செஞ்சோம்” என்றாள் ஆதிரா முகத்தை தூக்கி வைத்துக்கொண்டே…

 

அதை கேட்டதும் கதிர்நயனனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.

 

சில நாட்கள் பிரக்யாவிடம் கடுமையாக நடந்துக் கொண்டாலும், உண்மையில் அவள் மீது அதீத பாசம் கொண்டவன் தான் நயனன்.

 

'கோபத்துல அதிக உரிமை எடுத்துக் கொண்டு, தேவையில்லாமல் உணர்ச்சிவசப்பட்டு அடித்து விட்டோமோ?' என நினைத்துக் கொண்டான்.

 

அந்த தருணத்தில் ஆர்யா அங்கிருந்த விளக்குகளை எல்லாம் போட.. அந்த இடமே மிகவும் வெளிச்சமாகியது. சில விளக்கு தோரணங்கள் ஆங்காங்கே சுற்றப்பட்டு இருந்தன. அதோடு சேர்த்து பல நிற பலூன்களும் கூடவே அங்கேங்கே அழகுற இருந்தன. அந்த டெரஸின் மையத்தில் வெட்டப்படுவதற்காக ஒரு ஃப்ரூட் சாலட் கேக் இருந்தது..

 

இதையெல்லாம் பார்த்து அவனுக்கு பெரும் குற்றவுணர்வாகி போக பிடரியை தேய்த்துக்கொண்டே பிரக்யாவை பார்த்தான்.

 

அவன் முன்னால் கண்ணில் நீர்கோர்த்தபடி சத்தம் வெளிவராமல் விசும்பியபடி நின்றுக் கொண்டிருந்தாள் பிரக்யா..

 

தன் பிறந்தநாளுகாக பார்த்து பார்த்து செய்தவளை அடித்து சங்கடப்படுத்தியதும் அவன் மனதை ஒருமாதிரி வருத்தியது.. உடனே சுதாரித்தவனாக அவளின் முகத்தை கையில் ஏந்திக் கொண்டு,

 

“சாரி சின்னு. இங்க பாரு.. அது ஏதோ ஒரு கோபத்துல...மாமா.. ரியலி ரியலி சாரி..! வேணும்னா மாமாவை ஒரு அடி அடிச்சிடுறியா?” என்று அவன் சமாதானம் செய்ய முயல.. 

 

அவன் கைகளை தட்டி விட்டவள், ‘போடா.. அடிச்சதும் அடிச்சுட்டு இப்போ வந்து சமாதானம் என்ன வேண்டி கிடக்கு..! ஒரு பொம்பள பிள்ளைய இப்படியா கைய நீட்டி அடிப்ப தடிமாடு..’ என்று மனதுக்குள் வண்ட வண்டையாக அவனை திட்டியவள், 

 

வெளி பார்வைக்கு அவனை முறைத்து “அக்காளுக்கும் தம்பிக்கும் இதே வேலை தானா? நான் என்ன சொல்ல வரேன் என்ன செய்றேன்னு புரியாம கையை நீட்ட வேண்டியது.. அடுத்த தடவை கையை நீட்டுங்க போலீஸ்ல புடிச்சு கொடுத்துடுறேன்” என்று முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு செல்லுபவளை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். 

 

“ரியலி.. சாரி டா சின்னு..!” 

 

அந்த அணைப்பில் 

பெரும் காமம் இல்லை.. 

துளி காதல் இல்லை..

பரிசுத்தமான அன்பு மட்டுமே..!

 

ஆனால் அதை எட்ட நின்று பார்த்திருந்த இரண்டு கண்களோ வேறு மாதிரியாக எடுத்துக் கொண்டது. 

 

“ஓகே.. நாளைக்கு ஃபுல்லா என்னோட ட்ரீட்டு தான்” என்று அக்கா மக்களை சமாதானப்படுத்தி அவர்களோடு அந்த நடு இரவில் ஃபுரூட் சாலடை உண்டு, சிறிது நேரம் பேசி விளையாடி அவளை சமாதானப்படுத்திய பின்னே தூங்க சென்றான்.

 

அடுத்து வந்த நீட் தேர்விலும் பிரக்யா அதிக மதிப்பெண்களை எடுக்க.. அபிராமி கூறுவதை எல்லாம் பொருட்படுத்தாமல் டெல்லியில் நல்ல மருத்துவக் கல்லூரியில் பிரக்யாவை சேர்த்தான் கதிர்நயனன்.

வழக்கம் போல நீலகண்டனை பிரக்யாவோடு சென்று பார்த்தவன் “பாரு.. என் அக்கா பொண்ணு இப்ப டாக்டர்” என்று பெருமைப்பட்டுக் கொண்டு அவர் முகம் சிறுப்பதை மனதிருப்தியோடு பார்த்து வந்தான். 

 

வழக்கம் போல கணவனுக்கு தெரியாமல் பூர்ணசுந்தரி பிரக்யாவுக்காக எடுத்து வைத்திருந்த சில உடைகளையும் பரிசு பொருட்களையும் கொடுத்தார். 

 

“என் வாழ்க்கையில் எல்லாமே உல்டாவே நடக்குது. பாசம் காட்ட வேண்டிய அப்பா வெறுப்பை காட்டறாரு.. வெறுப்பை காட்ட வேண்டிய சித்தி பாசம் காட்டுறாங்க..!” என்று விளையாட்டு குரலில் கூறினாலும், என்ன மறைத்தும் வருத்தம் எட்டிப் பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை. 

 

சிவஞானம் பர்வதத்தம்மாள் கதிர்நயனன் மூவருமே பிரக்யாவை அழைத்துச் சென்று, கல்லூரியில் சேர்த்து விட்டு.. விடுதி எல்லாம் சரி பார்த்து அவளுக்கு தேவையானவற்றையெல்லாம் பார்த்து பார்த்து செய்துவிட்டு பின் வந்தனர். 

 

டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு இரண்டையும் அவளிடம் கொடுத்தவன் “பெரும்பாலும் டெபிட் கார்டில் உனக்கு தேவையான பணம் இருக்கும். அப்படி அதையும் தாண்டி செலவாச்சினா.. கிரெடிட் கார்டு யூஸ் பண்ணிக்கோ சின்னு” என்றான்.

 

என்ன தான் முகத்தை கல்லு மாதிரி வைத்துக்கொண்டு பேசினாலும் அந்த கல்லுக்கு பின்னே உள்ள ஈரத்தை புரிந்துக் கொண்ட பாவையவளோ,

 

“அஸ்கு புஸ்கு.. ஃபர்ஸ்ட் கிரெடிட் கார்டில் எல்லாத்தையும் செலவு செஞ்சுட்டு, அப்புறம் தான் டெபிட் கார்டில் கை வைப்பேன்..!” என்று சிரிப்பை மறைத்து கூற, அவள் கன்னத்தை தட்டிய கதிர்நயனனோ “வாலு.. வாலு..! டேக் கேர்..!” என்றான்.

 

முன்னால் இரண்டடி வைத்தவன் திரும்பி அவளைப் பார்த்து “எந்நாளும் எந்நேரத்திலும் நீ பார்கவி பொண்ணுங்குறதை மறந்துடாதே..!” என்றான் அவள் கண்களை பார்த்து அழுத்தமாக..!

 

அதுவரை இலகுவாக நின்று மாமனையும் அம்மம்மா தாத்தாவையும் பார்த்திருந்தவள் அவனின் அந்த கடைசி சொல் கேட்டு உடல் விறைக்க அதே அழுத்தத்துடன் அவன் கண்களை பார்த்து “கண்டிப்பாக மாமா..!” என்றாள்.

 

திரும்பி வர வழி எல்லாம் பர்வதத்தம்மாள் முந்தானையில் மூக்கை உறிஞ்சிக் கொண்டே தான் வந்தார். 

 

சிவஞானம் எவ்வளவு சமாதானம் படுத்தியும், “என்ன இருந்தாலும் சின்னுவை இவ்வளவு தூரம் அனுப்பி இருக்க கூடாது” என்று கிளிப்பிள்ளை போல் அதையே சொல்லிக் கொண்டு அழுதவரை, அதற்கு மேல் சமாதானம் செய்ய முடியாமல், மகனை மனைவிக்கு அருகில் அமர்த்தி விட்டு இவர் விமானத்தின் ஜன்னலோரம் அமர்ந்து விட்டார்.

 

“ம்மா..” என்று கண்டிப்பான குரலில் கதிர்நயனன் அழைக்க..

 

“போடா.. என்ன இருந்தாலும் நீயும் ஆம்பள தானே? உனக்கும் சரி உங்க அப்பாவுக்கும் சரி பொம்பளைங்க மனசு உணர்வுகளை புரிஞ்சுக்கவே முடியாது. என் பொண்ணு தான் என் பக்கத்துல இல்ல.. என் பேத்தியையாவது என் கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்கணும்னு நினைச்சா.. அவளை கொண்டு வந்து இவ்வளவு தூரத்தில் படிக்க வச்சிட்ட” என்று மீண்டும் மெல்லிய குரலில் அழுதுக் கொண்டே இருந்தவரை தோளோடு அணைத்துக் கொண்டான் கதிர்நயனன்.

 

“மா.. நானும் அப்போதுல இருந்து கிளிப்பிள்ளைக்கு சொல்றது போல சொல்றேன் நீ கேட்க மாட்டேங்குற.. நம்ம பக்கத்துல இருந்து படிக்க வச்சா அவளை நிம்மதியா யாரும் படிக்க விட மாட்டாங்க.. முதல்ல உன் பெரிய மாப்பிள்ளை, ஏதாவது காரணம் சொல்லுவாரு இல்ல கல்யாண வயசாச்சு பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறேன்னு பெயர் பண்ணிக்கிட்டு கிறுக்கு வேலை பார்ப்பாரு.. அடுத்தது உன் ரெண்டாவது பொண்ணு.. சொல்லவே வேணாம், உனக்கே உன் பொண்ண பத்தி தெரியும். அவ என்ன செஞ்சாலும் அதுல ஒரு தப்பு குத்தத்தை சொல்லிக்கிட்டு இருக்குது. இப்படியே போச்சுனா அவ எப்படி நிம்மதியா படிக்க முடியும் சொல்லு?” என்று அன்னையின் தாடையை தன் புறம் திரும்பி கேட்க, அவருக்கும் புரியத்தான் செய்கிறது. 

 

ஆனால் பாசம் வைத்த பாழா போன மனது கேட்க மாட்டேன் என்கிறதே..!

 

“அவ ஒரு கிறுக்கி கண்ணுல மஞ்ச கண்ணாடியை போட்டுக்கிட்டு பார்க்குறவங்களுக்கெல்லாம் மஞ்சகாமாலை இருக்குனு சொல்லிட்டு திரியுறா.. என்னைக்கு அவ புரிஞ்சி நடந்துக்க போறாளோ தெரியல” என்று அங்கலாயித்தார்.

 

“யாரு கிறுக்கி உன் பொண்ணா? நல்லா சொன்ன போ அதால மத்தவங்க கிறுக்கன் ஆகாம இருந்தா சரி..!” சிரித்தான் நயனன்.

 

“ஆமா நெசமாவே அந்த விசாலினிய தான் எனக்கு பேசி முடிக்க போறீங்களா?” என்று சற்று அதிர்ச்சியோடு கேட்டான் அம்மாவை பார்த்து..

 

எதைப் பற்றி பேசினால் அம்மாவின் மனம் மாறும் என்று மகனுக்கு தெரியாதா என்ன??

 

“ஏன்யா.. அந்த பொண்ணுக்கு என்ன?” என்று முகத்தை நன்றாக துடைத்துக் கொண்டு மகனைப் பார்த்து சிரித்தார் பர்வதத்தம்மாள்.

 

“இல்ல ரொம்ப தீவிரமா அக்கா நம்ம வீட்டுக்கும் அவ வீட்டுக்கும் ஜாதகத்தை தூக்கி அலைஞ்சிக்கிட்டே இருக்குதேனு கேட்டேன்..”

 

“இன்னும் உனக்கு கல்யாணம் நோக்கம் வரலைன்னு நம்ம ஜோசியர் சொல்லிட்டாரு. அது உன் அக்கா காதுலேயும் நான் சொல்லிட்டேன். ஆனாலும் விடாம ரெண்டு பேருக்கும் பொருத்தம் பாரு அது இதுன்னு சொல்லிக்கிட்டே இருக்கா. இன்னும் உன் ஜாதகப்படி மூன்றரை நாலு வருஷம் உனக்கு போகணுமாம்” என்றார்.

 

“அப்பாடி..! அப்போ நாலு வருஷத்துக்கு பொண்டாட்டி தொல்லை எதுவும் இல்லாம 

நிம்மதியா இருக்கலாம்” என்றதும் மகனின் தோளில் தட்டியவர்,

 

“ஏன்யா பொண்டாட்டினா உங்களுக்கு தொல்லையா?” என்று இப்படியாக இருவரின் விவாதமும் திருச்சி வரும் வரை நடந்தது. 

 

பார்கவி பார்த்துக் கொண்டிருந்த ஆலைகள் மட்டுமல்லாது இவன் சில பண்ணைகளையும் புதிதாக ஆரம்பித்து நிர்வகிக்க ஆரம்பித்தான்.

 

தொழில் அம்மா அப்பா வீடு அக்காமார் மக்கள்.. என்று அடுத்த நாலு வருடமும் ஜெட்டாக தான் பறந்தது கதிர்நயனனுக்கு. 

 

அவனுக்கு மட்டுமல்ல பிரக்யாவுக்கும் தான்.

 

புது இடம்.. புது நண்பர்கள்.. புதுமொழி.. என்று அனைத்தும் அவளை சற்று மிரட்டி பார்த்தாலும் கதிர்நயனன் சொன்ன “பார்கவி பொண்ணு” என்று வார்த்தையை உள்ளுக்குள் உருப்போட்டுக் கொண்டே அனைத்தையும் தைரியமாக நிமிர்வாக கடந்து வந்தாள் பிரக்யா.

 

முதல் வருடம் மட்டுமே அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றாள். அடுத்தடுத்த வருடம் அது கூட இல்லை.

 

“அம்மம்மா எனக்கு லீவே இல்லை அது இது..” என்று அம்மம்மாவை சமாளித்துக் கொண்டிருந்தாள்.

 

அவளுக்கு இந்த மருத்துவத்துறை மிக மிக பிடித்திருந்தது..!

 

அதில் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள.. படித்து தெரிந்துக் கொள்ள.. பின் அவற்றை தெளிந்துக் கொள்ள என்று அந்த உலகம் அவளை வாரி சுருட்டிக் கொண்டது. சந்தோஷமாக, பெரும் ஆவலாக.. அந்த உலகத்தினுள் தன்னை மூழ்கடித்துக் கொண்டிருந்தாள் பிரக்யா..!!

 

இப்பொழுது பிரக்யா எம்.பி.பி.எஸ் முடித்து, ப்டியாட்ரிஷன் மேற்படிப்பில் இருந்தாள்.

 

மற்றவர்களுக்கு எல்லாம் வருடங்கள் வேகமாக ஓடியது போல தோன்றினாலும் அபிராமிக்கு மெதுவாக தான் சென்றது.

 

காரணம் தம்பியின் கல்யாணம் கல்லு போல ஒரே இடத்தில் கிடந்ததனால்..!

 

விசாலினிக்கு இவரே நம்பிக்கை கொடுத்து வைத்திருந்ததால் அவளுக்கு மற்ற இடத்தில் இருந்து வந்த நல்ல வாய்ப்புகளையும் அவள் பெற்றோர்கள் நிராகரித்தனர்.

 

ஒரு முறை தம்பியின் ஜாதகத்தையும் விசாலினியின் ஜாதகத்தையும் தனக்கு தெரிந்த ஜோசியரிடம் பொருத்தம் பார்க்க.. 

 

அந்த ஜாதகரோ “இந்த ஜாதகருக்கு இந்த பொண்ணு அமையுறது கஷ்டம் தான் மா” என்க,

 

அவர் முகம் சொல்லொண்ணா கோபத்தில் தகிக்க “நான் உங்களை பொருத்தம் தான் பார்க்க சொன்னேன். இது அமையுமா அமையாதானு உங்களை கேட்கல” என்றார்.

 

‘பெரிய இடத்து பொல்லாப்பு நமக்கு எதுக்கு?’ என்று நினைத்த ஜோசியர் “ரெண்டு பேருக்கும் ஏழு பொருத்தம் இருக்குமா" என்றார். அதுவே பெரும் சந்தோஷமாகி போனது அபிராமிக்கு. 

 

திரும்பவும் அப்பா அம்மாவிடம் வந்து “ஆறு வருஷம் முடிஞ்சிடுச்சு.. அவனுக்கு கல்யாண நோக்கம் வந்து இருக்கானு பாருங்க.. நான் போய் எங்க மாமியார் வழி ஜோசியர் கிட்ட கேட்டுட்டு வந்துட்டேன். அவர் ரெண்டு பேருக்கும் பொருத்தம் நல்லா இருக்கு பண்ணலாம்னு சொல்லிட்டாரு. எவ்வளவு நாளைக்கு அந்த பொண்ணையும் நான் காக்க வச்சிக்கிட்டே இருக்க?” என்று கடுப்பாக அவர் பேச..

 

சிவஞானம் மகளை உருத்து நோக்கி “நாங்க அந்த பொண்ண காக்க சொல்லவே இல்லையே மா. எங்க பிள்ளைக்கு கல்யாண நோக்கம் வரும் போது தான் நாங்க பார்க்க முடியும்னு சொன்னோமே..” என்று அழுத்தமாக கேட்க அதில் சற்று தடுமாறிய அபிராமி, 

 

“அது.. அது.. நான் தான் அவளை காத்திருக்க சொன்னேன்பா.. என் தம்பி கல்யாணத்துல எனக்கு உரிமை இல்லையா நான் பொண்ணு பார்க்க கூடாதா?’ என்று உரிமையை கையில் எடுத்த மகளை கண்டு “நயனன் வரட்டும் கேட்டு சொல்கிறேன்” என்றார் தந்தை. 

 

“அப்ப நானும் கதிர் வர வரைக்கும் வெயிட் பண்றேன். அவன் கிட்ட கேட்டுட்டே போறேன்” என்றார்.

 

“நீ கிளம்பு நாங்க பேசிட்டு சொல்றோம்” என்றார் தாய் அழுத்தமாக..

 

“என்னமோ போங்க” என்றவர் வீட்டுக்கு சென்றாலும் அவருக்கு நிம்மதியே இல்லை..!

 

இரவெல்லாம் வீட்டில் என்ன பேசிக்கொள்வார்கள், கல்யாணத்துக்கு சம்மதிப்பார்களா? விசா எங்க வீட்டு மருமகள் ஆவாளா? என்று நினைத்து தூங்காமலேயே கிடந்தார். 

 

இரவு வீட்டுக்கு வந்த மகனிடம் பெற்றோர்கள் திருமணத்தை பற்றி பேச.. அவனுக்கும் பெரிதாக எந்த எதிர்ப்பும் இல்லை.

 

“சரிமா பொண்ணு பாருங்க” என்றான் பொதுவாக..

 

“என்ன யா இப்படி சொல்ற உங்க அக்கா உனக்கு ஏற்கனவே பொண்ணு பார்த்து வச்சு, கட்டுனா நீ அவளை தான் கட்டணும்னு ஒத்தக்கால நின்னுட்டு இருக்காளே?” என்று தந்தை கிண்டலாக கேட்க..

 

“எவ அவ?” என்று கிண்டலாக கேட்டாலும், பெருமூச்சு விட்டவன் “நீங்களே பொண்ண பத்தி விசாரிங்க பா. உங்களுக்கும் அம்மாவுக்கும் அந்த பொண்ணு நம்ம குடும்பத்துக்கு ஒத்துவரும்னு தோணுச்சுன்னா.. தாராளமா நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். உங்க விருப்பம்தான்” என்ற மகனை பெருமிதத்தோடு பார்த்தனர் இருவரும். 

 

இவர்களும் அபிராமி ஏற்கனவே கொடுத்த விசாலினி ஜாதகத்தை தங்கள் ஜோசியரிடம் காண்பிக்க “இந்த பொண்ணுக்கும் உங்க பையனுக்கும் ஏழு பொருத்தம் இருக்குதான்… ஆனா.. இந்த பொண்ணு அமையும்னு சொல்ல முடியாது” என்றார். 

 

“ஆனா‌ உங்க பையனுக்கு பொண்ணு சொந்தத்துல தான் முடியும்” என்றும் கூறினார் பூடகமாக…

 

ஜோசியர் பொண்ணு சொந்தத்தில் அமையும் என்று கூறியதில் இருந்து இவர்கள் தங்கள் சொந்தத்தில் திருமண வயதில் உள்ள பெண்களை எல்லாம் யோசித்துப் பார்க்க, சிலது வயது ஒத்துவரவில்லை.. சிலது தோற்றம் படிப்பு இவை ஒத்துவரவில்லை.. சிலரின் குணமே ஒத்துவரவில்லை.. இவை எல்லாம் ஓரளவுக்கு ஒத்து வந்தது விசாலினிக்கு தான்..!

 

மகனிடமும் இதைப்பற்றி அனைத்தையும் கூறி விவாதித்தனர் பெற்றோர்கள்.

 

“சரி பா.. ஏதோ தெரியாத தேவதையை விட தெரிஞ்ச பேயே பரவால்ல” என்பது போல் தான் கதிர்நயனன் முடிவெடுத்தான்.  

 

மகன் மனைவியோடு பிள்ளைகளோடு பெருவாழ்வு வாழ வேண்டும் என்று அந்த பெருவுடையாரை வணங்கி.. அவர் தாள் பணிந்து, அதற்கு பின்னே விசாலினியை பெண் பார்க்கச் சென்று நிச்சயம் வரைக்கும் நாள் குறித்து வந்தனர். 

 

அப்புறம் என்ன.. ஆட்டம் பாட்டம் குறைவா என்ன? அதுவரை

விடுமுறைக்கு வர மாட்டேன் என்று சொன்ன பிரக்யாவும் மாமன் நிச்சயதார்த்தத்திற்காக ஒரு வாரம் விடுமுறையில் வந்தாள்.

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top