அத்தியாயம் 19
கதிர்நயனன் அபிராமிக்கு ஃபோன் செய்து பிரக்யா 12ஆம் தேர்வில் மாவட்ட அளவில் முதலாவதாக வந்திருப்பதாக கூற, “சந்தோஷம் டா” என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டார்.
நம் வீட்டு பிள்ளை.. ஏன் நமக்கு தெரிந்த பிள்ளை மாநில அளவில் முதலாவதாக வந்திருந்தால் கூட நாம் எவ்வளவு சந்தோஷமாக வாழ்த்துவோம். ஆனால் சொந்த அக்கா பெண்.. ஏனோ அவள் இவ்வளவு வெற்றி பெற்றது அபிராமியால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.
பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் தன் மக்களை நினைத்தார். அவர்கள் பொது தேர்வுகளில் இம்மாதிரி வெற்றி பெறுவார்களா? ஆனால் இவள் வந்துட்டாளே..! என்று பொறும மட்டுமே அவரால் முடிந்தது.
ஏனோ அபிராமிக்கு வளரும்போது பார்கவியின் மீது கொண்ட அந்த பொறாமை கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பாக மாறி இருந்தது. அது இப்பொழுது வளர்ந்து இளங்குமரியாக.. அழகியாக.. அக்கா சாயலில் இருக்கும் அவளின் மகள் மீது வன்மமாக மாறியது..!
இவர் பிரக்யாவை திட்டும்போது… குறை சொல்லும் பொழுது.. மலர்ந்து விகசித்திருக்கும் அழகு முகம் சட்டு என்று கூம்பி வருத்தத்துடனும்.. சில சமயம் இவரை கண்டாலே ‘ஐயோ என்ன திட்டுவாரோ?’ என்று பயத்தோடு அங்கும் இங்கும் அலைபாயுமே அதை காண அவ்வளவு பிடிக்கும் அபிராமிக்கு.
யார் செய்த வினையோ.. இல்லை விதியின் சதிராடலோ பிரக்யாவின் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஷார்ட் டைம் தான் போல..!
பழுத்த மரம் தான் கல்லடி படும் என்பது போல…!
அன்று வீட்டிற்கு அபிராமி தன் பிள்ளைகள் கணவனோடு வந்திருந்தார். காரணம் அப்போதுதான் படிப்பை முடித்து இருந்த அவரது ஒன்று விட்ட நாத்தனார் விசாலினியை தன் தம்பிக்கு பார்க்கலாம் என்ற நல்ல எண்ணம் அவருக்கு.
அபிராமி மாமியாரும் தூபம் போட்டு அனுப்பி இருக்க.. விசாலினி இங்க மருமகளாக வந்தால்.. அவளை தன்னோடு நெருக்கமாக வைத்துக் கொண்டால்.. பின்னால் பிரச்சனை இருக்காது என்ற சுயநலமும் கூட..!
“ஏம்மா.. நம்ம கதிருக்கு தான் 25 முடிஞ்சு 26 பிறக்கப்போகுதே அவனுக்கு இப்பவே பொண்ணு பார்த்தா என்ன?” என்றதும் பர்வதத்தம்மாள் அருகில் இருந்த கணவனை பார்க்க..
சிவஞானமும் இப்பொழுது 70 வயதை தொட்டு இருந்தார். அவரின் 40 வயதிற்குப் பின் தான் மகன் பிறந்திருந்தான் அல்லவா? அதனால் அவருக்கு வயோதிகம் எட்டிப் பார்த்திருந்தது.
சின்ன மகள் கூறுவதும் சரிதான் அவனுக்கு பெண் பார்க்கலாம் என்று யோசித்தவர், “நம்ம குடும்ப ஜோசியர் கிட்ட அவனுக்கு கல்யாணம் யோகம் வந்திருக்கானு பார்ப்போம் மா.. அதுக்கு அப்புறம் பார்க்க ஆரம்பிக்கலாம்” என்றார்.
“அப்பா.. அப்படியே நான் விசாலினி ஜாதகத்தையும் தரேன். ரெண்டு பேருக்கும் பொருத்தம் இருக்கானு பார்க்குறீங்களா?” என்றதும் கணவனும் மனைவியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டனர்.
மனைவியோ “என்னங்க இது அந்த பொண்ண கொண்டு வந்து வச்சா இவ ஆட்டம் இன்னும் அதிகமாகுமே?" என்று கணவனிடம் மெல்லிய குரலில் கேட்க..
“இரு பொருத்தம் தானே? பார்க்கட்டும்..! இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்திருந்தால்.. அதை யாராலும் மாற்ற முடியாது பரு” என்று அவரும் கூறி, “சரி மா. நல்ல நாள் பார்த்து எடுத்துட்டு வா” என்றார்.
தான் நினைத்து வந்த காரியம் இத்தனை சீக்கிரம் நிறைவேறும் என்று எதிர்பார்க்காத அபிராமியோ மகிழ்ச்சியில் திளைக்க..
“சரிப்பா நான் இப்பவே போய் மாமியார் கிட்ட பேசிட்டு வரேன்” என்றவர் ஃபோனை எடுத்துக் கொண்டு சற்று தள்ளி சென்றார்.
பிரக்யா பன்னிரண்டாம் வகுப்பு முடித்து வீட்டில் இருக்க.. ஆதிராவும் ஆர்யனும் அவளுக்கு ஐந்து வயது சிறியவர்கள்.. ஆனாலும் மூன்று பேரும் ஒன்று சேர்ந்தால் அங்கு வானர சேட்டைகளை நாம் கண்டுக்களிக்கலாம்..!
அதுபோலத்தான் மூவரும் விளையாடிக் கொண்டு இருந்தனர். சாஃப்டான பந்தினை வைத்து ஒருத்தரை குறிப் பார்த்து அடிக்க வேண்டும். அடிபட்டவர் அந்த பந்தினை எடுத்து மற்ற இருவரை குறி பார்த்து அடிக்க வேண்டும். இவ்வாறு மாறி மாறி மூவரும் சந்தோஷமாக விளையாடிக் கொண்டே இருக்கும் பொழுது, இம்முறை பந்து ஆர்யனிடம் சென்றது.
கடந்த நாலைந்து முறையாக ஆதிராவும் ஆர்யனும் தான் மாறி மாறி அவுட் ஆகியிருக்க.. இருவரிடமிருந்து லாவகமாக தப்பித்துக் கொண்ட பிரக்யாவை இம்முறை டார்கெட் செய்த ஆர்யன், “அக்கா இப்ப நீதான்..!” என்றவாறு ஒரு கையால் குறிப் பார்த்து மறு கையால் பந்தை ஓங்கிக் கொண்டே அவன் ஓடி வர..
தம்பியிடம் இருந்து தப்பிப்பதற்காக அங்கும் இங்கும் ஓடி தன் மீது பந்து படாதவாறு லாவகமாக வளைந்து நெளிந்து தப்பித்தவாறு இருவருக்கும் வவ்வளம் காட்டிக்கொண்டு சென்றவள், பின்னால் ஃபோன் பேசிக் கொண்டிருந்த அபிராமியை தெரியாமல் இடித்து விட்டாள்.
அதிலும் அவர் போன் பேசிக் கொண்டிருந்ததோ முக்கியமான விஷயம்.
“அத்தை எங்க வீட்ல கிட்டத்தட்ட ஓகே மாதிரி தான். நீங்க சின்ன அத்தை கிட்ட விசாவோட ஜாதகத்தை வாங்கி வைங்க. ஒரு நல்ல நாள் பார்த்து அப்பா கொண்டு வர சொல்லி இருக்காரு..” என்றதும்,
அந்த பக்கம் அவரும் தன் சந்தோஷத்தை தெரிவிக்க
“கண்டிப்பா அத்த.. விசா தான் எங்க வீட்டு மருமக. ஆனா அப்பா அம்மாவுக்கு கொஞ்சம் ஜோசியத்துல நம்பிக்கை அதிகம். பத்து பொருத்தத்திற்கு ஒரு ஏழு பொருந்தம் இருந்தா கூட போதும். நான் எப்படியாச்சும் சரி கட்டி கல்யாணத்தை முடித்து விடுவேன்..” என்று அவர் சொல்லி முடிக்கும் முன் அவர் மீது மோதியிருந்தாள் பிரக்யா.
‘நல்ல விஷயம் அதுவும் கல்யாண விஷயம் பேசும் பொழுது இப்படி இடைப்பட்ட போல தடுத்து விட்டாளே’ என்று கோபம் பெருக..
"ஏய்!" என்று கத்தினார்.
அதிலும் கூட அவரது விலை உயர்ந்த அலைப்பேசி கீழே விழுந்து அரை நொடியில் தன் உயிரை நிறுத்தி இருந்தது.
சித்தியின் அலறலில் தான் “அச்சச்சோ.. போச்சு..” என்று அதிர்ந்து பயந்து அவரை பார்த்தாள்.
அவர் என்ன பேசினார் என்பதெல்லாம் அவளுக்கு தெரியாது. ஆனால் கீழே விழுந்து உயிர் நீத்த ஃபோனை பார்த்து “போச்சுடா.. இன்னைக்கு செத்தேன்” என்று அவள் பயந்து நிற்க..
அவள் பின்னே ஓடிவந்த ஆர்யாவும் ஆதிராவும் பிரக்யாவின் இரு புறமும் நின்றுக் கொண்டு “அய்யய்யோ.. இன்னைக்கு அம்மா வீட்டுக்கு போய் நமக்கும் பூஜை பண்ணுவாங்களே.!” என்று பயந்து நின்று இருந்தனர்.
“அறிவு இருக்கா உனக்கு? ஆள் வளர்ந்த அளவுக்கு அறிவு வளரந்திருக்கா? ப்ளஸ் டூவில் நல்ல மார்க் வாங்கிட்டா மட்டும் போதுமா? எவ்ளோ முக்கியமான விஷயம் பேசிட்டு இருந்தேன். இந்த நேரத்துல இப்படி பண்ணி வச்சிருக்க.. நல்ல விஷயம் பேசும் போது அபசகுனமா பண்ணி வைச்சிட்டியே..! அதுசரி நீ இந்த வீட்ல இருக்கறதே பெரிய அபசகுனம் தான்” என்று வாய்க்கு வந்தபடி பேச, அங்கு வந்த சிவஞானம் மகளை முறைத்தார்.
“போதும் நிறுத்து அபிராமி. அவ இந்த வீட்டு மகாலட்சுமி. வாய்க்கு வந்தபடி உளறாத.. தெரியாம பண்ணுச்சுன்னா உன் இஷ்டப்படி பேசுவியா நீ? இன்னைக்கு இந்த விஷயம் பேச கடவுளே விருப்பப்படல போல.. அதான் அவ மூலமா தடங்கல் கொடுத்திருக்கிறாருனு தான் நினைக்கிறேன். இன்னொரு நாள் இதை பத்தி பேசலாம்” என்று பேத்தியை அங்கிருந்து அழைத்து சென்று விட்டார்.
“ச்சே..! ஒரு நல்ல விஷயம் நடக்கும் போது தடங்கல் ஏற்படுத்திட்டாளே!” என்று அத்தனை கோபமும் இப்பொழுது பிரக்யா மீது திரும்பியது அவருக்கு.
அது மட்டுமல்லாமல் தம்பி வரும் வரை காத்திருந்து அவன் வந்தவுடன் விசாலினி பற்றி கூறினார்.
அவனோ அனிச்சை செயலாக அன்னை தந்தையை பார்த்தான். அவர்கள் முகம் ஒளி இல்லாமல்.. ஏதும் கூறாமல் இருக்க..
“அதுக்கு என்ன அக்கா.. அப்பா அம்மா கிட்ட பேசிட்ட இல்ல. அவங்க இனி பார்த்துக்குவாங்க. நீ கவலையை விடு” என்றவன்,
“என்ன இன்னைக்கு மூணு பேரும் இவ்வளவு அமைதியா ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்கீங்க? உலகம் தாங்காதே..!” என்று பிள்ளைகள் பக்கம் போனான்.
ஆதிரா சின்ன குரலில் அனைத்தையும் கூறி விட, கண் கலங்க அமர்ந்திருந்த பிரக்யாவை கண்டவன், “அதுமட்டுமில்ல மாமா எங்கள அக்கா கூட சேரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. தாத்தா தான் எங்கள இங்கே உட்கார வச்சாங்க” என்று ஆர்யனும் அம்மா மீது குறை கூறினான். திரும்பி அக்காவை முறைத்தான்.
“சரி வாங்க மூணு பேரும் வெளியில போலாம்” என்று அழைத்துச் சென்றான்.
பிள்ளைகளுக்கு பிடித்த வண்ணம் ஐஸ்கிரீம் பீட்சா என்று வாங்கி கொடுத்து அன்றைய இரவு உணவை முடித்தே வீட்டுக்கு அழைத்து வந்தான்.
“அக்கா இன்னைக்கு தங்கிட்டு நாளைக்கு போ” என்று கூறியவன் பிள்ளைகளை கூட்டிக்கொண்டு மாடிக்கு சென்று விட்டான்.
தான் பிரக்யாவுடன் சேரக்கூடாது என்பதற்காகத்தான் தம்பி இப்படி செய்கிறான் என்று புரிந்துக் கொண்டார் அபிராமி. ரவீந்திரனும் “விசா கல்யாணம் வரைக்கும் கொஞ்சம் அமைதியாயிரு அபிராமி” என்று கூற ஆமோதிப்பாய் தலையாட்டியவர் அறைக்கு சென்று விட்டார்.
“சின்னு.. இவங்க ரெண்டு பேரையும் இன்னைக்கு உன் ரூம்ல தங்க வச்சுக்கோ.. ரொம்ப ஆட்டம் போடக்கூடாது சீக்கிரம் தூங்கிடணும். சரியா?” என்று சென்றான்.
'சித்தி பேசியதால் தான் வருந்துகிறோம் என்று அறிந்து தன் மனம் வருத்த படாதபடிக்கு வெளியில் கூட்டு சென்றார். போதாத குறைக்கு தம்பி தங்கைகளையும் தன்னுடனே வைத்துக் கொள்ள சொல்கிறார்.. மாமா கொஞ்சமே கொஞ்சம் நல்லவரு.. என்ன லேசா சிடுமூஞ்சி' என்று அந்த வயதிலும் அவளுக்கு மாமனை புரிய முறைப்போடு சொல்லி சென்றவனை புன்னகையோடு பார்த்தாள் பிரக்யா.
மறுநாள் கதிர்நயனனுக்கு பிறந்தநாள்.
“ஆதி ஆரு.. நாளைக்கு மாமாவுக்கு பர்த்டே.! நம்ம ஏதாவது சர்ப்ரைஸ் பண்ணுவோமா?” என்று கேட்டாள் பிரக்யா..
இந்த வயதில் இவர்களுக்கு சர்ப்ரைஸ் செய்வது பெரியவர்களுக்கு கிஃப்ட் கொடுப்பது போன்ற செயல்கள் மிக உற்சாகத்தை கொடுக்க.. சரி என்று இருவரும் தலையாட்ட.. மூவரும் என்ன சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே இருந்தனர்.
“ஒரு ஐடியா நாம கேக் ப்ரிப்பேர் பண்ணி மாமாவை கட் பண்ண சொல்லலாமா?” என்று கேட்டாள் ஆதிரா.
“போடி இதெல்லாம் ஒரு சர்ப்ரைஸா..
ரொம்ப போரிங்கான பழைய டெக்னிக்.!” என்று சிரித்தான் ஆர்யா..
“ஏன்டா பர்த்டேனா இப்படித்தானே சர்ப்ரைஸா கூட்டிட்டு போய் கேக் கட் பண்றது கிஃப்ட் கொடுக்கிறது இப்படி தானே டா இருக்கும்? வேற என்னடா புதுசா பண்ண முடியும்?” என்று தம்பியை பார்த்து கேட்டாள் பிரக்யா.
“அதைத்தான் யோசிக்கணும் அக்காமாரே..! ரெண்டு பேரும் யோசிங்க யோசிங்க” என்றவன் ஹாயாக பெட்டில் படுத்து விட..
“எங்கள யோசிக்க சொல்லிட்டு நீ மட்டும் ஹாயா படுத்துக்குவியா?” என்று இருபுறமும் இருவரும் சேர்ந்து அவனை தலையணையால் மொத்தினர்.
சிறு சண்டை பெரு விளையாட்டாய் போக மூவரும் மாத்தி மாத்தி சண்டை போட்டு அடித்து விளையாண்டு கலைத்து ஓய்ந்து போய் மூச்சு வாங்க அமர்ந்தனர்.
“வேணா.. இப்படி பண்ணலாமா திடீர்னு பிரக்யாவுக்கு உடம்பு முடியலன்னு மாமாவை கூட்டிட்டு வந்து மாமா ஷாக்கில் பார்ப்பார் நம்ம உடனே ஹாப்பி பர்த்டேன்னு பாடுவோமா?” என்றதும் பதறி விட்டாள் பிரக்யா.
“ஏன்டா பாவி.. இப்படி மட்டும் பண்ணுன அவ்வளவுதான். ஏற்கனவே என்னை வெட்டவா குத்தவானு பார்க்குறவரு வெட்டிட்டு தான் மறு வேலை பார்ப்பாரு.. போடா டேய்..! ஐடியா சொல்ல சொன்னா எனக்கு இவன் ஆப்பு வைக்கிறான்டி” என்று ஆதிராவிடம் குறைப்பட்டு கொண்டாள்.
“மாமாவுக்கு அப்போ என்ன புடிக்கும் அக்காடி?” என்று ஆதிரா கேட்க..
“மாமாவுக்கு என்ன புடிக்கணும்னு எனக்கு எப்படி தெரியும்?” என்றவள் வார்த்தையில் அவளைத்தான் அவனுக்கு பிடிக்கும் என்பது அவளுக்கே தெரியாது என்பதுதான் நிதர்சனம்..!
“சரி போ.. யோசிச்சு யோசிச்சு மூளை எல்லாம் ரொம்ப சூடாகிட்டு.. வாங்க கீழ போய் ஃப்ரிட்ஜ்ல அம்மம்மா எப்படியும் ஜூஸ் வச்சிருப்பாங்க அதை குடிச்சிட்டு ப்ரைனை கூல் பண்ணிட்டு வந்து யோசிப்போம்” என்று கூறி ஆர்யா முன்னால் செல்ல..
“சரியான தீனி பண்டாரம் டா நீ” என்று அவனை வம்பு இழுத்தபடி மூவரும் கீழே சென்றனர்.
இவர்கள் மூவரும் பதுங்கிப் பதுங்கி சமையலறை சென்று திருட்டுத்தனமாக ஜூஸ் எடுத்து குடித்துவிட்டு அங்கிருந்த பழங்களை பார்த்து பிரக்யாவுக்கு ஒரு ஐடியா தோன்றியது.
“ஃப்ருட்ஸ்ல மாமாவுக்கு பர்த்டே கேக் செய்து விஷ் பண்ணலாமா?” என்று கேட்டதும்..
“இதுவும் சுமாரான ஐடியா தான்” என்றவனின் முதுகில் குத்தியவள் “நீ ஒரு ஐடியாவும் சொல்லாம சொல்ற எங்கள குறை சொல்லிக்கிட்டே இருப்பியா? யூ இடியட்..!” என்று அவள் முறைக்க..
“சரி சரி இந்த ஐடியாவே பண்ணுவோம்” என்று மற்ற இருவரும் ஒத்துக்கொண்டனர்.
அங்கிருந்த பழங்களை எல்லாம் ஆதிரா கழுவி கொடுக்க.. அதை பிரக்யா சிறு சிறு துண்டுகளாக வெட்ட.. அவற்றை நான்கு பவுலில் சரியாக எண்ணி எண்ணி போட்டான் ஆர்யன்.
“டேய் மாமாவுக்கு ஒரே ஒரு பவுல்ல கொண்டு போகலாம்ன்னு சொன்னா எதுக்குடா இத்தனை பவுல்?” என்று பிரக்யா கேட்க..
“அப்போ மாமாவுக்கு ட்ரீட் வச்சா அவரு சாப்பிடுவதை பார்த்து எனக்கும் பசிக்கும் இல்ல.. நான் மட்டும் வாங்கி சாப்பிட்டால் என்னிடம் இருந்து நீங்க ரெண்டு பேரும் புடுங்கி தின்னுவீங்க. அதுக்கு தான் யாரும் சண்டை போடக்கூடாதுனு நாலு பவுல்” என்று விளக்கமளித்தவனை பார்த்து இருவரும் சிரித்தனர்.
“அக்கா டி பார்.. இவனை ஸ்கூல்ல மேக்ஸ் வரும்போது மட்டும் தெரியாது புரியலன்னு சொல்லுவான். இப்போ மட்டும் கணக்கச்சிதமா நாலு பவுலேயும் கரெக்ட்டா ஃப்ரூட்ஸ் கவுண்ட் பண்ணி போடுறான் பாரு” என்று ஆர்யனை ஓட்டிக்கொண்டே, கிரீம் சேர்த்து அவர்களுக்கு பிடித்த சாக்லேட் சாஸை மேலே ஊற்றி சிறிது நேரம் ஃப்ரீசரில் வைத்து கொஞ்சம் சில் ஆன பிறகு ஒரு ட்ரேயில் வைத்து மாடிக்கு எடுத்துச் சென்றனர்.
“இரு இரு என்கிட்ட சில திங்க்ஸ் இருக்கு. அதை வச்சு டெக்ரேஷன் பண்ணுவோம்” என்ற பிரக்யா அங்கே சில அலங்காரங்களை செய்தாள்.
“நீ போய் மாமாவை கூட்டிட்டு வா” என்றான் ஆர்யன்.
“எதே? மாமா ரூமுக்கு போகணுமா? ஐயய்யோ என்னால முடியாது..!” என்று பிரக்யா பின்வாங்க..
“இந்த ஆரு தான் ஒரு வேலையும் செய்யல.. இவனை அனுப்பி விடலாம்” என்று ஆர்யாவை அனுப்பி வைத்தனர்.
இந்தப் படுபாவியோ 'என்ன சொல்லி மாமாவை வர வைக்கலாம்?' என்று யோசித்தபடியே சென்றவன்
“ஐடியா.! எப்படியும் இவங்க தான் இல்லைல.. அக்காக்கு உடம்பு சரி இல்லைன்னு சொல்லி மாமாவை கூட்டிட்டு வரலாம்” என்று வேகமாக பட்டு பட்டு என்று கதிர்நயனனின் அறை கதவைத் தட்ட..
‘இந்த ராத்திரில யாரு?’ என்று கதவை திறந்த நயனன் வெளியே நின்று இருந்த மருமகனை பார்த்து “என்னடா ஆரு? என்ன ஆச்சு?” என்று யோசனையாக கேட்க..
“அது வந்து மாமா.. மாமா..பிரக்யா அக்கா..” என்று அவன் உளற,
பிரக்யாவுக்கு ஏதோ பிரச்சனையோ? உடம்பு ஏதும் சரியில்லையோ? அக்கா பேசியதை நினைத்து ஏதேனும் தன்னை வருத்திக் கொண்டாளோ? என்று பயம் தாக்க, “சொல்லு டா என்னடா ஆச்சு அவளுக்கு?” என்று பதட்டத்தோடு ஓடினான் நயனன்.
“மாமா அந்தப் பக்கம் இல்ல இங்கே டெரஸ் பக்கம்” என்று அவனை அந்த பக்கம் அழைத்துச் செல்ல…
“எதுக்கு டெரஸ் பக்கம் வந்தீங்க?” என்று ஆர்யனை திட்டியவாறே வந்தவன் அங்கு யாரும் இல்லாதது பார்த்து எங்க என்று கேட்க..
“ஹே வந்துட்டீங்களா மாமா.. சூப்பர் டா ஆரு..! ஹேப்பி பர்த்டே மாமோய்” சந்தோஷமாக சொல்லி வாழ்த்து பாட.. அவளோடு சேர்ந்து இருவரும் கோரஸ் பாட..
“நான் அவளுக்கு என்னமோ ஏதோனு பயந்து போய் வந்தா.. இங்க கொட்டமடிச்சிட்டுக்கிட்டு நிக்கிறா” அவளின் மேல் இருந்த கோ
பம் சுர்ரென்று தலைக்கு ஏற அவளின் முகத்தை பார்க்காமல் கன்னத்தில் ஓங்கி விட்டான் ஒரு அறை.. பலமாக..!
கதிர்நயனனின் இந்த அறையில் பயந்து போய் நின்றனர் மூவரும்..!
