இராவணா 18

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 year ago
Messages: 244
Thread starter  

அத்தியாயம் 18

 

 

15 வயது கூட நிரம்பியிராத இளம் பெண்..! தற்போது காணவில்லை அதுவும் காதலன்‌ உடன் தான் ஓடினாளா? என்ற சந்தேகம் அவர்களுக்கு. 

 

அதற்கு உதவிய மற்றொரு பெண்ணிடம் தங்கள் பெண் எங்கு என்று அடித்து உதைத்து மிரட்டி எப்படியாவது உண்மையை வாங்கி கொடுங்கள் என்று காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர் அப்பெண்ணின் பெற்றோர். கொஞ்சம் இருவரும் பெரிய பார்ட்டி தான். இருவருமே மருத்துவர்கள்..!

 

எளியவர்களை விட வலியவர்களுக்கு தான் வழிந்து வேகமாக செய்யும் சில காவல்துறை அதிகாரிகள் போல இந்த இன்ஸ்பெக்டரும் அவருடன் இருக்கும் இரண்டு கான்ஸ்டபிள்களும்.

 

எதோ சாதாரண வீட்டு பெண்ணாகத்தான் இருக்கும் என்று நினைத்து பிரக்யாவை அள்ளி வர ஆவண செய்ய.. ஆனால் அவர்களும் சற்று மேலிடம் என்பதால் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று அந்த பெற்றோரை அழைத்து வந்துவிட்டார் இன்ஸ்பெக்டர். 

 

மயக்கத்தில் கிடந்த பெண்ணை பார்த்து அனைவரும் ஒரு மாதிரியான திகிலில் இருக்க.. இன்ஸ்பெக்டர் வந்தவர்,

 

“எங்க அந்த பொண்ணு.. கூப்பிடுங்க இங்க?” என்று அதிகாரம் காட்ட..

 

கதிர் நயனனோ “என்ன சார் அக்யூஸ்ட்டை தேடுறீங்களா? வாரண்ட் இருக்கா?” என்று அவன் திருப்பி கேட்டதில் அவனை மேலும் கீழும் பார்த்த இன்ஸ்பெக்டர் அவன் அருகில் நின்றிருந்த வக்கீலை இனம் கண்டு கொண்டான். 

 

வரும்பொழுது கதிர்நயனன் அவனது நண்பனும் வக்கீலுமான சுதாகரனை அழைத்து வந்திருந்தான்.

 

சுதாகரனும் சும்மா இராமல் அந்த இரு காவலர்களையும் போட்டு படுத்தி எடுத்திருந்தான்.

 

கூடவே இன்ஸ்பெக்டரையும் பார்த்து “அது எப்படி நீங்க ஒரு சின்னப் பொண்ண.. அதுவும் ஒரு பெண் போலீஸை கூட அனுப்பாம இவங்க ரெண்டு பேரை அனுப்பி வச்சு கூப்பிட்டு வர சொல்ல முடியும்?” என்று வாதங்களை அடுக்கடுக்காக வைக்க.. நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்துக் கொண்டு இன்ஸ்பெக்டரோ,

 

“சார் ப்ளீஸ்..! இவங்க பொண்ணை காணல..”

 

“அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?” என்று பதில் அளித்த கதிர்நயனனிடம் நயந்து பேசி பிரக்யாவிடம் இருந்து எப்படியாவது உண்மையை வரவழைக்க கேட்டனர். 

 

ப்ரீத்தியின் பெற்றவர்களும் மருத்துவர் தான் என அறிந்து பிரக்யாவை பார்க்க சொன்னார் சிவஞானம். 

 

ப்ரீத்தியின் அன்னை அவளை சோதித்து “அதிர்ச்சியில் வந்த மயக்கம்” என்றார்.

 

சிறிது தண்ணீர் தெளித்து எழுப்ப, மெல்ல கண்விழித்து பார்த்த பிரக்யா, ப்ரீத்தியின் பெற்றோரை பார்த்ததும் இன்னும் பயந்து அருகில் இருந்த அம்மம்மாவிடம் ஒன்றினாள்.

 

“நீங்க பேசுங்க.. உங்க வீட்டுக்காரர் பேச வேணாம்..!” என்று கதிர்நயனன் கூற, இவரும் அவளின் மறுபுறம் அமர்ந்து அவளின் கையை மென்மையாக பற்றி,

 

“ப்ளீஸ் பிரக்யா உனக்கு தெரிஞ்ச உண்மைய சொல்லு? ப்ரீத்தி உன்னை மாதிரி சின்னப் பொண்ணு தானே? இந்த வயசுல லவ் மேரேஜ் இதெல்லாம் எப்படி செட் ஆகும்? அந்த பையனும் உங்க கூட ஸ்கூல்ல படிக்கிற பையனா? இல்ல வேறையா? இவ எங்கையாவது போய் வேற யார் கையிலாவது மாட்டிக்கிட்டா??” என்றதும் அவளுக்கும் உள்ளம் பதற ஆரம்பித்தது. 

 

“நிஜமா ஆன்ட்டி..! அவ லவ் பண்றானு எனக்கு தெரியவே தெரியாது. எங்க அப்பா அடிக்கடி வெளியூர் போறதுனால என் பாதுகாப்புக்காக எங்க தாத்தா எனக்கு ஒரு பட்டன் ஃபோன் வாங்கி தந்தார். அதுவும் ஸ்கூல்ல பர்மிஷன் ஓட தான் வாங்கி கொடுத்தாங்க.. நான் அதை எங்க கிளாஸ் மிஸ் கிட்ட கொடுத்து வைச்சிடுவேன். ஏதாவது ஃபோன் எனக்கு வந்தா மட்டும் தான் என்கிட்ட இன்ஃபார்ம் பண்ணுவாங்க. ஈவினிங் வரும்போது எடுத்துட்டு வந்துருவேன். ஒன் டைம் தான் என்கிட்ட ஃபோன் வாங்கி பேசினா மத்தபடி என்கிட்ட ஃபோன் வாங்கி யாருக்கும் பேசல ஆன்ட்டி. இதுதான் உண்மை ஆன்ட்டி..!” என்று அழுதபடியே கூறினாள். 

 

“ஆனா என் பொண்ணு விடிஞ்சது முதல் ஸ்கூல் விட்டு வந்து தூங்குற வரை பிரக்.. பிரக்னு உன் கிட்ட தானே பேசிக்கிட்டே இருப்பா.. அப்போ உனக்கு தெரியாம அவளிடம் எதுவும் ரகசியம் இருக்க முடியுமா? சொல்லு?” என்று‌ ப்ரீத்தியின் அம்மா கேட்க, குழம்பிப் போனாள் பிரக்யா.

 

எல்லோருமே திரும்பி அவளை பார்க்க அபிராமியோ “பொழுது விடிஞ்சா பொழுது போனா ஃபோனை எப்பொழுதும் கையில வச்சுக்கிட்டே இருந்தா.. இதான் நிலைமை..! சொல்லுடி வாயை திறந்து ஊமைகோட்டான். பாவம் ஒரு பொண்ணு அங்க உன்னால என்ன நிலைமையில் இருக்கோ” என்று கத்தினார். 

 

படிக்கிற வயதில் கொழுப்பெடுத்து போய் காதல் செய்து.. எவனுடன் ஓடிச் சென்ற பெண்ணுக்கு காட்டும் இரக்கத்தை கூட, தன் அக்கா மகளுக்கு காட்ட மறுத்தார் அபிராமி. 

 

என்னவோ இவள் தான் பிளான் போட்டு கொடுத்து நாடோடிகள் படத்தில் வருவதைப் போல இருவரையும் கோர்த்துவிட்டு ஊரை விட்டு அனுப்பியது போலவே அவர் பேச்சு இருந்தது. 

 

அப்பொழுதுதான் அவளுக்கு ஒன்று க்ளிக்காக “ஆன்ட்டி அவ யார் கூடவோ தான் ஓடிப்போனானு உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டாள்.

 

“எங்க வீட்ல சிசிடிவி கேமரா வச்சிருக்கோம். அதுல இன்னைக்கு நாங்க வேலைக்கு போனதுக்கு அப்புறம் ஒரு பையன் பைக்ல வந்தான். இவளும் ஒரு பேக் எடுத்துட்டு அந்த பையன் பின்னாடி ஏறி போனா.. அதுவும் திரும்பி திரும்பி பயத்துல பார்த்துக்கிட்டே போனா.. அந்த பையன் தலையில ஹெல்மெட் போட்டிருந்ததால யாருன்னு தெரியலமா. ஆனா என் கிட்ட காலையில உன்னை பார்க்க போறதா தான் ஃபோன் பண்ணி சொன்னா” என்றார். 

 

“ஆன்ட்டி நீங்க நினைக்கிற மாதிரி அவ என் கூட எப்பொழுதும் பேச மாட்டா. எப்பயாவது என்கிட்ட பேசுவா. ஒருவேளை பிரக்.. பிரக்னு சொல்றது.. எஸ் எங்க கிளாஸ்ல பிரகதீஸ்வரன்னு ஒரு பையன் இருக்கான். ஒருவேளை அவனா இருக்குமோ?” என்று அவள் சந்தேகமாக கூற, அப்படியும் இருக்குமோ என்று அனைவர் சிந்தனையும் அந்த பக்கம் சென்றது.

 

“அதான் எங்க அக்கா பொண்ண விசாரிச்சாச்சுல.. அவ சொன்னது போல விசாரிங்க.. முதல்ல இவங்க வீட்டு லேண்ட்லைன் நம்பரை டிரேஸ் பண்ணி அந்த பொண்ணு யாருக்கு அதிகமா பேசிருக்குன்னு பாருங்க. அதெல்லாம் விட்டுட்டு சின்னப் பொண்ணுனு பார்க்காம போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைச்சிட்டு போவீங்களா?” என்று ஆத்திரமாக கேட்ட கதிர்நயனனை அவனது நண்பன் சுதாகர் ஆறுதல் படுத்த காவல்துறையும் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு சென்றது. 

 

அந்தப் பெண் சென்றது என்னவோ காதலனுடன்..! அது அவர்கள் வீட்டு பாடு. ஆனால் அதன் பின் பெரும் இன்னலுக்கு உள்ளானது பிரக்யா தான்.

 

அன்று இரவு அனைவருமே அபிராமி வீட்டில் தங்கிவிட.. மறுநாள் காலையில் எழுந்து வந்தவளை கண்டு முறைத்தார் அபிராமி.

 

“உன்னால எவ்வளவு பிரச்சனை நேத்தி.. என் பிரண்ட்ஸ் முகத்துல இனி எப்படி நான் முழிப்பேன்னு தெரியல.. உனக்கு ஏன் டி இந்த தேவையில்லாத வேலை எல்லாம்” என்று செய்யாத தப்புக்கு அவளை நோக பேசினார். 

 

“இல்லை சித்தி..” பயந்து இருந்த பிரக்யா பேச இடம் கொடுக்காமல் அவர் பேச பேச அவள் உடம்பு தானாகவே நடுங்கியது. 

 

முதல் கோணல் முற்றும் கோணல் என்கிற மாதிரி.. அது முதல் பிரக்யா என்ன செய்தாலும் அவள் மீது ஏதோ ஒரு தவறை குற்றச்சாட்டை கூறிக் கொண்டே இருந்தார் அபிராமி. 

 

வெளிப்பார்வைக்கு என்னவோ அவர் அவளின் தப்பை திருத்துகிறார்.. அவளை கண்டிக்கிறார் என்பது போல தோற்றம் இருந்தாலும், உள்ளூற அபிராமிக்கு தெரிந்த ஒரு ரகசியம் இருந்தது. 

 

அது என்னவென்றால்.. பிரக்யா அப்படியே பார்கவியின் பிரதிபிம்பம்.

 

அழகு, நிறம், முடி என்று அனைத்துமே அப்படியே பார்கவியை உரித்து வைத்தது போலவே இருக்கும்.

 

மிடுக்கோடு வலம் வந்த அக்காவை அன்று அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

 

இன்று அதே உருவத்தில் தன்னை கண்டு பயப்படும் அக்காள் மகளிடம், அக்கா மீது கொண்ட வன்மத்தை கொஞ்சம் கொஞ்சமாக தீர்த்துக் கொள்ள முயன்றார் அபிராமி.

 

அது மட்டுமா?? விஷயம் கேள்விப்பட்டு மனைவியோடு தேனிலவை உல்லாசமாக கழித்து வீட்டுக்கு வந்து நீலகண்டனும் பெல்ட்டை உருவி மகளை வெளுத்து வாங்கி விட்டார். 

 

கணவனின் இந்த ஆக்ரோஷத்தை கண்டு அரண்டு போன பூர்ண சுந்தரி உடனடியாக கதிர்நயனனுக்கு அழைத்து “நயனா.. சீக்கிரம் வாப்பா அந்த பிள்ளை வந்து காப்பாத்துப்பா.. என்னால போய் குறுக்க நிக்கவே முடியல.. எனக்கு இரண்டு அடி கொடுத்துட்டாரு.. என்னாலேயே அடி தாங்க முடியல சீக்கிரம் வாப்பா..” என்று கணவனுக்கு தெரியாமல் கதறி அவனை வரவழைத்தார். 

 

நீலகண்டன் வீட்டுக்கு வந்து பார்த்தவனோ இங்கு தந்தையால் அடிக்கப்பட்டு திரும்பவும் மூர்ச்சையாகி கிடந்த பிரக்யாவை கண்டவன் “நீயெல்லாம் மனுஷனா ராட்சசனாயா.. இப்படி போட்டு சின்ன பிள்ளைய அடிச்சு வச்சிருக்க?” என்று மரியாதையை காற்றில் பறக்க விட்டு அவரின் சட்டையைப் பிடித்தான்.

 

“அவ என் பொண்ணு..! நான் என் பொண்ண என்ன வேணாலும் பண்ணுவேன். வளர்ந்திருக்கா பாரு அவங்க அம்மா மாதிரியே.. அவ்வளவு அழுத்தம் திமிரு” என்று உலகிலேயே இல்லாத மனைவியை மகளோடு ஒப்பிட்டு அவர் பேச.. ஏற்கனவே அக்கா மீது அவர் கொண்டுள்ள கோபத்தை தெரிந்தவன், எங்கே பிரக்யாவை இங்கு விட்டு வைத்தால் கண்டிப்பாக இம்மாதிரி தான் ஒவ்வொன்றிலும் சுட்டிக்காட்டுவார். அவளை ஒன்றும் இல்லாமல் ஆகிவிடுவார் என்று புரிந்துக் கொண்டான். 

 

அவர் தடுக்க தடுக்க பிரக்யாவை அள்ளிக்கொண்டு வந்தவன், அவர்களது குடும்ப மருத்துவரின்‌ வீட்டுக்கு அழைத்துச் சென்று வைத்தியம் பார்த்தான்.

 

அதன்பின் அவளை மருத்துவமனையில் சேர்த்து அவரிடம் மெடிக்கல் சர்டிஃபிகேட் வாங்கி, அதை தன் வக்கீல் நண்பன் சுதாகரன் மூலம் கோர்ட்டில் சமர்ப்பித்து பிரக்யாவின் கஸ்டடியை கோரினான்.

 

“அன்னை இல்லாமல் மறுமணம் செய்துக் கொண்ட தந்தையால் கொடுமைக்கு ஆளான இளம் பெண்” என்று கொட்டை எழுத்தில் பத்திரிக்கையிலேயே வந்துவிட்டது. 

 

“என்ன சார் இது?” என்று நீதிபதி கேட்க..

 

“அதில்ல யுவர் ஹானர்.. இவளால ஒரு பொண்ணு வீட்டை விட்டு ஓடிப்போய்..” என்று அந்த கதையை முடிக்க ஆயாசமாக நீதிபதி அவரை பார்த்து,

 

“உங்களுக்கே இதுல பிரக்யா மேல் தப்பு இல்லைன்னு தெரியலையா? ஓடிப்போனது யார் வீட்டு பொண்ணோ? உங்க பொண்ணு கிட்ட ஜஸ்ட் விசாரணை பண்ணி இருக்காங்க. அதுக்கு நீங்க என்னமோ தப்பு இவங்க பண்ணின மாதிரி இந்த பொண்ண போட்டு அடிச்சு இருக்கீங்க? அந்த பொண்ணோட தாய்மாமன் சொல்றது கரெக்ட் தான். இந்த பொண்ணு உங்களோட வளர்ந்தா இப்படி அடி வாங்கி தான் வாழ்நாள் ஃபுல்லா உணர்வு தொலைச்சு நடைப்பிணமா.. ஏன் ஒரு கட்டத்தில் உயிர் இழந்து கூட போகும்” என்றவர், 

 

“மாதம் ஒரு முறை அப்பா வீட்டிற்கு சென்று வருகிறாயா?” என்று பிரக்யாவிடம் நீதிபதி கேட்டதற்கு, நடுக்கத்தோடு அப்பாவை பார்த்தவள் மாட்டேன் என்று அவள் தலையசைக்க..

 

பெண்ணின் மனதை உணர்ந்த அந்த இரக்கமுள்ள நீதிபதியும் “நிஜமாகவே நீங்க அந்த பெண்ணுக்கு அப்பா தானா? இப்படி மாட்டை அடிச்ச மாதிரி அடிச்சு வச்சிருக்கீங்க? அந்த புள்ள பயந்து பார்க்குற பார்வை உங்களுக்கு மனதை பிசையல.. உங்க ரத்தம் தானே? இரத்தம் வழிய அப்படி அடிச்சு வச்சிருக்கீங்க?” என்று கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் இத்தனைக்கும் காரணம் மகள் தான் என்று அவமானமாக உணர்ந்தார்.

 

அப்புறம் என்ன நீதிமன்றத்தால் நீலகண்டனுக்கு எச்சரிக்கை விடப்பட்டு பிரக்யாவின் கஸ்டடி அவளது அம்மாவின் பெற்றோர்களான சிவஞானம் மற்றும் பர்வதத்தம்மாளிடம் ஒப்படைக்கப்பட்டது. 

 

அதனால் திருந்தி விட்டார் என்றெல்லாம் பொருள் இல்லை அவமானத்துக்கு காரணமான மச்சான் மீதும்.. மகள் மீதும் இன்னும் கோபம் தான் வந்தது.

 

ஆனால் தந்தையாக அவளுக்கு படிப்பு மற்றவற்றுக்கான செலவை இவர் பார்த்து ஆக வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட பணத்தை அவளது பேரில் வங்கி அக்கவுண்டில் போட சொன்னார். அதை கதிர்நயனன் மறுக்கவில்லை..!

 

ஆனால் அந்த பணத்தை அவன் தொடவே இல்லை..!

 

இப்படி மனதால் உடலால் யாரோ செய்த செயலால் இங்கே ரணப்பட்டு கிடந்தாள் பிரக்யா.

 

அந்த வருடம் பிரக்யாவால் பத்தாவது பரீட்சையை எழுத முடியவில்லை. அவளால் இயலவில்லை..!

 

ஏதோ ஒரு சிந்தனையோடு அமைதியாக இருந்தவளை கண்ட சிவஞானமும் பர்வதத்தம்மாளும் அவளை தேற்றுவதிலே குறியாக இருந்தனர். அன்பொழுக பேசி அரவணைப்பாய் நடந்துக் கொண்டாலும் அவள் மனது மாறவே இல்லை. 

 

“இவ இப்படியே இருந்தா சரிப்பட்டு வர மாட்டா மா” என்று கதிர்நயனன் மீண்டும் கண்டிப்பாக மாறி, “உங்கப்பன் சொன்னதை நிரூபிக்க போறியா?” என்று கேட்டதும் அவளுக்கு ரோஷம் பெருக, மாமனை முறைத்தாள்.

 

“இந்த ரோஷத்தை படிப்பில் காட்டு” என்று பிரைவேட் ஆக பத்தாவது பரீட்சை எழுத வைத்தான். பின் பெரும் பள்ளியில் சேர்த்து விட்டான். 

 

அவ்வப்போது வீட்டுக்கு வரும் அபிராமியோ அவளை குத்தலாக பேசுவதை நிறுத்தவில்லை

“இந்த முறையாச்சும் அவளை கேர்ள்ஸ் ஸ்கூலா பார்த்து சேர்த்து விடு” என்று குதர்க்கமாக கூறிச் செல்ல..

 

“அடுத்தவங்க பண்ணதுக்கு அவ என்ன பண்ணுவா?” என்று அக்காவின் பேச்சை கேட்காமல் இருபாலர் பள்ளியிலேயே சேர்த்தான். 

 

அதுவும் தஞ்சையில் இல்லை திருச்சியில் ரெசிடென்ஷன் ஸ்கூலில் சேர்த்தான். முதலில் பிடிக்காமல் இருந்தாலும் மெல்ல மெல்ல தனது கூட்டில் இருந்து வெளிவந்து அங்கு இருக்கும் மற்ற பிள்ளைகளோடு கலந்து மீண்டும் தேன் சிட்டாக வானில் பறந்தாள் சந்தோஷமாக பிரக்யா. 

 

வீட்டுக்கு வரும்போது அவள் ஆடி பாடி சந்தோசமாக இருக்க ..அதனை கண்டு சிவஞானமும் பர்வதத்தம்மாளும் சந்தோஷப்படுவார்கள். அவர்களால் அவளிடம் கண்டிப்பாக நடக்க முடியவில்லை. அதற்கு ஒட்டுமொத்தமாக அதனை தான் கையில் எடுத்துக் கொண்டான் கதிர்நயனன்.

 

அதனால் அவன் பைக் சத்தம் வீதியில் கேட்டாலே இவள் ஓடி விடுவாள் மாடிக்கு..!

 

“என்ன உங்க பேத்தி ஓடிட்டாளா என் பைக் சத்தத்தை கேட்டுட்டு?” என்று சிரிப்போடு வருபவன், அவளைக் கண்டால் மட்டும் முகத்தை சற்று முறைத்த மாதிரி வைத்துக் கொள்வான். 

 

“ஏன் டா பிள்ளை கிட்ட இப்படி நடக்குற?" என்று பெற்றோர் கேட்டாலும்,

 

“யார்கிட்டயாவது ஒருத்தர் கிட்டயாவது அவ கொஞ்சம் பயத்தோடு இருக்கட்டும். நானும் செல்லம் கொடுத்தா.. அப்புறம் ஓவரா ஆட்டம் போடுவா. ஆனாலும் உங்க பேத்தி படிப்பில் கெட்டி தான்” என்றான் பெருமையாக..!

 

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் திருச்சி மாவட்டத்தில் முதலாவதாக வந்திருந்தாள் பிரக்யா.

 

நீலகண்டன் முன் அழைத்துச் சென்று “பார் என் அக்கா மகளை..!” என்று பெருமையாக காட்டினான் கதிர்நயனன்.

 

“ஏதோ படிச்சா சரி” என்பது போல அவர் தலையசைத்து சென்று விட,

 

பூர்ணசுந்தரிக்கு அளவில்லாத சந்தோஷம். இத்தனை ஆண்டுகளில் அவளின் பாட்டியும் இறந்து விட, அவளுக்கு பரிசுகள் கொடுத்தார் பூர்ணசுந்த

ரி. கூடவே பூர்வாவிடமும் பேசிவிட்டு கையோடு அழைத்து வந்து விட்டான் அவளை.

 

ஆனால் அவளின் வெற்றியை கேட்ட அபிராமிக்கு தான் மனது ஆறவே இல்லை..!

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top