அத்தியாயம் 7
“இறங்கு உமை..!” என்றதும் பொம்மை போல இறங்கியவள் அந்த மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்லை ஆச்சரியத்தோடு பார்த்தாள்.
தஞ்சையில் பல்வேறு மருத்துவமனைகள் இத்தனை காலத்தில் முளை விட்டிருக்க… அதில் ஒன்று தான் பிரக் மருத்துவமனை..!
இதென்ன என் பெயரில்? என்று அவள் குழப்பத்துடன் பார்க்க...
“என்ன நின்னுட்டு ஹாஸ்பிடல் பேரை பார்த்துட்டு இருக்க? அப்படி எல்லாம் அவசரப்பட்டு அது உன் பேருனு நீயே தப்பா நினைச்சுக்காத..! இது நான் மட்டும் இல்ல இன்னும் மூணு டாக்டர்ஸ் சேர்ந்து கொலாப்ரேஷன்ல கட்டின ஹாஸ்பிட்டல்..! நீ என் பொண்டாட்டிங்கறதற்காக உன் பேரை நான் வைக்க முடியுமா?” என்றதும் அவள் முறைக்க..
“சில்.. சில்.. பிரகதீஸ்வரர் பெயர் வைக்கலாமா இல்ல பிரகன் நாயகி பெயர் வைக்கலாமானு எங்களுக்குள்ள ஒரே குழப்பம்..! அப்பதான் ரெண்டுத்துக்கும் பொதுவா பிரக்னு வச்சுக்கலாம்னு வச்சிட்டோம்..!” என்றவன் மருத்துவமனை பற்றி கதை சொல்லிக்கொண்டே செல்ல இவளும் தலையசைத்துக் கொண்டே அவனுடன் நடந்தாள்.
கதிர்நயனன் என்ற தங்க நியான் எழுத்துக்கள் பளபளத்த அறை கதவை திறந்து அவன் உள்ளே நுழைய இவளும் உள்ளே நுழைந்தாள் சிறு தயக்கத்தோடு..!
‘இவரு கொலாபிரேஷன்ல ஹாஸ்பிடல் கட்டி இருக்காரு.. பார்ட்னரா இருக்காரு.. அதுக்கு பிரக்னு பேர் வச்சிருக்காரு.. இந்த கதை எல்லாம் ஓகே.. ஆனா என்கிட்ட இந்த கதை எல்லாம் ஏன் சொல்றீங்க ஆபீஸர்?’ என்று கேட்க துடித்த நாக்கை அடக்கிக் கொண்டு அவன் முன் அமைதியாக நின்றாள்.
“அப்பப்பா.. சின்னு..! இந்த பவ்யம் அடக்கம் இதெல்லாம் பார்க்கும்போது..” என்று சிரிப்போடு அவளை ஏறிட்டவன் “உட்காரு..” என்றான் எதிரே இருந்த இருக்கையை காட்டி..!
அவள் இருக்கையில் அமர்ந்து அந்த அறையை அதன் உள் அமைப்பு வேலைபாடுகளை பார்த்துக் கொண்டிருக்க அதற்குள் இவன் யாருக்கோ அழைத்து இருந்தான்.
திரும்பவும் அழைப்பு வந்தவுடன் “வா..” என்று அவளை அழைத்துக்கொண்டு மற்றொரு மருத்துவரின் அறைக்குள் நுழைந்தான்.
“வெல்கம் கதிர்..! வெல்கம் மிஸ்ஸஸ் கதிர்..!” என்று இருவரையும் அந்த மத்திய வயது மருத்துவர் அழைக்க இவளும் தலையசைப்போடு அதை ஏற்றுக் கொண்டாள்.
“சார் பேரு ஜெகதீசன்..! இந்த ஹாஸ்பிடலோட சீனியர் டாக்டர்..! இவரும் பீடியாடிரிஷியன் தான்” என்றான் மனைவி புறம் திரும்பி..!
தன் துறையா என்று அகமகிழ்ந்தவள், இப்போது எழுந்து நின்று அவருக்கு வணக்கம் வைத்து அமர்ந்தாள்.
“நீங்க யூ.எஸ்ல ஒர்க் பண்ணதா சார் சொன்னாரு.. பிஜி அங்கதான் முடிச்சீங்களா?” என்று அவர் கேட்க..
“இல்லை சார்..! ஜிப்மர் பாண்டிச்சேரில ரெண்டு வருஷம் முடிச்சேன். அதுக்கப்புறம்..“ என்று தயங்கியவள் ஓரக் கண்ணால் கதிர்நயனனை பார்த்துவிட்டு, “அப்புறம் அப்கிரேட் ஆகி யூ.எஸ் போய்ட்டேன் சார். ஸ்டடிஸ் முடிச்சிட்டு அங்கே ஒர்க் கண்டினியூ பண்ணிட்டேன் சார்” என்றாள்.
“கிரேட்..! ஜிப்மர்ல எப்ப முடிச்சீங்க? அங்க..” என்று அவர் நண்பர்கள் சிலர் மருத்துவத் துறையிலும் மருத்துவ கல்லூரியிலும் வேலை பார்ப்பதை அவளோடு பகிர்ந்துக் கொள்ள..
அவளுக்கும் சிலரை தெரிந்து இருக்க.. அவளும் மகிழ்ச்சியோடு அதனை எல்லாம் பகிர்ந்துக் கொள்ள.. இருவருக்கும் சில பல நிமிடங்கள் இவ்வாறு பேச்சுவார்த்தை சென்றது..!
ஆனால் இதில் எதிலும் இடைகலக்காமல் அமைதியாக இருவரின் பேச்சு வார்த்தையை கவனித்துக் கொண்டிருந்தான் கதிர்நயனன்.
“நல்ல டேலெண்டெட் தான் கதிர் சார் உங்க வொய்ஃப். எப்போ ஜாயின் பண்றாங்க?” என்றதும் அவள் திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள்.
“இன்னைக்கு தான் சார்..! அதுக்குத்தானே நல்ல நாள் பார்த்து கூட்டிட்டு வந்து இருக்கேன். காலைல கோவில் எல்லாம் போயிட்டு..” என்றவன் மனைவியின் முக பாவங்களை கண்டு கொடுப்புக்குள் சிரித்தான்.
அவளோ 'அடப்பாவி மாமா.. அதுக்கு தான் கோவிலுக்கு கூட்டிட்டு போனியா?’ என்பது போல அவனை பார்த்தாள்.
“ஓ கிரேட்..! அப்போ இன்னைக்கு அவங்கள வேலையில சார்ஜ் எடுத்துக்க சொல்லுங்க..” என்றார் அவர்.
“ஓகே சார்..! ஜாயினிங் ஃபார்மாலிட்டிஸ் அட்மினிஸ்ட்ரேஷன்ல பார்த்துக்குவாங்க.. நானும் கிளம்புறேன் சார். ஃபார்ம் பார்க்குற வேலை இருக்கு.” என்றான்.
“ஷ்யூர்.. ஷ்யூர்..” என்று அவரும் எழுந்து இருவருக்கும் விடை கொடுத்தார். கூடவே வேறொரு அட்மினிஸ்ட்ரேஷனில் அழைத்து “ராதா.. இவங்க நம்ம கதிர்நயனன் சாரோட வொய்ஃப். ஆல்சோ பீடியாட்ரிஷியன் டாக்டர். இன்னிலிருந்து இங்க சார்ஜ் எடுத்துக்கிறாங்க..” என்றதும் அவளும் புன்னகையோடு பிரக்யா புறம் திரும்பி “வெல்கம் மேம்..!” என்றாள்.
“அவங்களுக்கு ரூம் ரெடியா இருக்குல்ல?” என்று ஜெகதீசன் கேட்க..
“எஸ் சார். கதிர் சார் முன்னமே இன்ஃபார்ம் பண்ணிட்டாங்க. எல்லாமே ரெடி..! பட் ஓபி அலாட்மென்ட் அந்த டைமிங்.. அதுதான் இன்னும் சொல்லல..!” என்று தயக்கத்தோடு இருவரையும் அவள் பார்த்தாள்.
கதிர்நயனனின் நயனங்களும் மனைவியைத்தான் நோக்கின..!
‘என்னை கேட்காமல் எனக்காக இங்கே அனைத்தையும் ஏற்பாடு செய்துட்டு.. இப்போ டைமிங் மட்டும் என்னை எதுக்கு பார்க்கிற?’ என்பது போல அவள் பார்வையாலே அவனை குத்திக் கிழிக்க..
‘சரி போ.. நீ சொல்லலனா அதையும் நானே சொல்லிட்டு போயிருறேன். இவ்ளோ செஞ்ச எனக்கு அதை செய்ய தெரியாதா?’ என்று அவனும் பதில் பார்வை பார்த்தவன்,
“ராதா.. மார்னிங் ஒன்பது மணிக்கு ஷார்ப்பா மேடம் வந்துருவாங்க.. அப்டு டூவல் ஆர் ஒன் வரைக்கும் இருக்கட்டும். ஈவ்னிங் சிக்ஸ் டு நைன்..!” அவளுக்கான நேரத்தையும் அவனே பிரித்து எடுத்து கூற கண்களில் அக்னி பறக்க அவனை அன்பாக பார்த்தாள் கதிர்நயனனின் காரிகை..!
“ஓகே சார்.. நான் மேடமோட ஓபி டைம் ரிஜிஸ்டர் பண்ணிட்டு வெளியில் டிஸ்ப்ளேக்கும் ஏற்பாடு பண்றேன்” என்று விட்டு ராதா சென்றுவிட..
ஜெகதீசனிடம் தலையாட்டி விட்டு இருவரும் வெளியில் வரும் பொழுது அவள் ஏதோ பேச வர, காரிடரிலிருந்த சிசிடிவி கேமராக்களை காட்டியவன்,
“எதா இருந்தாலும் உன் கேபினுக்கு போய் பேசிக்கலாம்” என்று அவளை அவளுக்கு என்று ஏற்பாடு செய்திருந்த கேபினுக்கு அழைத்து வந்தான்.
உள்ளே நுழைய முன் இரு என்று மணியை பார்த்தவன் “ஓகே இப்போ போகலாம்..!” என்று ஐந்து நிமிடம் கழித்து அவளை உள்ளே அழைத்து வந்தான்.
ஏன் என்று பார்த்தவளுக்கு “ராகு காலம்..!” என்றான் சிரிக்காமல்..!
‘உன்னை எப்ப கட்டினேனோ அப்பவே எனக்கு ஆரம்பிச்சுருச்சு..!’ என்று மைண்ட் வாய்ஸோடு உள்ளே நுழைந்தவளிடம்,
“கேபின் புடிச்சிருக்கா?” என்று அவன் கேட்க
“ஏன் இப்படி பண்றீங்க? சரியான அரக்கன்.. நீங்க..!” என்று அவள் கத்த..
“ஆஹான்..! அவ்வளோ தானா? எனி மோர் காம்ப்ளிமெண்ட்ஸ்?” என்று ஒற்றை கண்சிமிட்டி அவன் சிரிக்க இன்னும் பற்றிக் கொண்டு வந்தது பிரக்யாவுக்கு.
“அரக்கன், டீமன், ராட்சசன்.. இல்ல இல்ல இராவணன்..!” என்று ஏக பெருமூச்சோடு அவள் கூற..
“என்னது இராவணனா? நானா?” என்று போலியான திகைப்போடு அவளைப் பார்த்து கேட்டான் கதிர்நயனன்.
“ஆமா.. நீங்க வந்து.. அந்த அரக்கன் ராவணன் தான்..! இராவணன் சீதையை தூக்கிட்டு போன மாதிரி என்னை அமெரிக்காவுல இருந்து இங்க தூக்கிட்டு வந்துட்டீங்க.. உங்க இஷ்டத்துக்கு ஆட்டி படைக்கிறீங்க..!” என்று குற்றப்பாட்டு பாடினாள் அவள்.
“அடியே..! சின்னு..!” என்று சிரித்தவன், “இராவணன் தூக்கிட்டு போனது ராமனோட பொண்டாட்டிய டி.. நான் என் பொண்டாட்டிய தானே தூக்கிட்டு வந்தேன்..!” என்றவன் அதை நிரூபிக்கும் வகையில் இடையோடு அவளை இழுத்து வேகமாக அணைத்தான்.
அவனின் வலுவான பிடியிலிருந்து அவளால் ஒரு இன்ச் கூட நகர முடியவில்லை. தன் தளிர் கரங்களால் அவனது மார்பில் பட்டு பட்டு என்று அடித்தவளோ,
“இப்ப.. விடப் போறீங்களா இல்லையா?” என்று சிடுசிடுத்தாள்.
அவளின் சிடுசிடுப்பை எல்லாம் கண்டுகொள்ளாமல் அவளை
தன் இறுகிய அணைப்பிலேயே வைத்தவன், நெற்றியில் அழுத்தமாக தன் அதிரங்களைப் பதித்து “வாழ்த்துகள் மிஸ்ஸஸ் கதிர்நயனன்..! உங்க புதிய தொடக்கத்திற்கு..!” என்றான்.
இப்பொழுது இன்னும் அவளுக்கு ஆத்திரம் பெருக.. அவன் பிடியிலிருந்து விலகி அவனை தள்ளி விட்டவள், “சோ இதுதான் உங்க ப்ளான் இல்ல.. என்னை கொண்டு வந்து இங்க தள்ளிவிடணும்..!” என்று ஆத்திரத்தில் அருகில் இருந்த பொருட்களை எல்லாம் ஒவ்வொன்றாக அவன் மீது எடுத்து வீசினாள்.
"ஏய்.. சின்னு.. ஏய்.. சொன்னா கேளுடி..! அடங்கு டி..!” என்று சிரித்துக் கொண்டே சில பொருட்களில் இருந்து தப்பித்தவன் சில பொருட்களை அவளிடமிருந்து தப்புவித்தான்..!
“எப்பா.. பார்த்தாலும் பார்த்தேன்.. உங்க போல ஒரு கல் நெஞ்சுக்கார அரக்கனை நான் பார்க்கவே இல்லை..! நான்தான் இங்கு எதுவுமே வேணாம்னு தானே அங்க போனேன்.. ஏன் அங்கிருந்து என்னை கூட்டிட்டு வந்தீங்க? இங்க இந்த இடத்துக்கு என்னை கொண்டு வர என்ன எல்லாம் செஞ்சி வச்சியிருக்கீங்க நீங்க?” என்றாள் கோபம் தீராமல்..! உள்ளிருக்கும் ரணமும் தீராமல்..!
அவள் ஒவ்வொரு பொருளாக தூக்கிப் போட்டதில் உடலை வளைத்து நெளித்து தப்பித்துக் கொண்டே சிரிப்போடு அவளின் சிறுப்பிள்ளைத் தனத்தை கண்டு ரசித்தான் நயனன்.
“இங்க பாரு சின்னு..!"
“ஆஆஆஆ… கூப்பிடாதீங்க சின்னுனு என்னை கூப்பிடவே கூப்பிடாதீங்க..! இப்படி என்னை சின்ன பிள்ளை மாதிரியே ட்ரீட் பண்ணவே அந்த பேரை வச்சிருக்கீங்க எனக்கு நீங்க..!” என்று இன்னும் எகிறினாள் அவனிடம்.
அவனோ அவளை இழுத்து தன் நெஞ்சோடு இறுக்கமாக அணைத்து “ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்.. பேபி..” என்றான் முதுகை வருடியவாறு..!
அவனின் அணைப்பில் இருக்கவே கூடாது..! நான் இருக்க மாட்டேன்..! என்பதாய் அவனிடம் முரண்டு பிடித்து அவன் அணைப்பிலிருந்து வெளியேற திமிறிக் கொண்டிருந்தாள். அவனும் அவளை விடாமல் அழுத்தி பிடித்திருந்தான்.
சட்டென்று அவளுக்கு ஏதோ தோன்ற “எப்போ இந்த ஹாஸ்பிடலை வாங்கினீங்க?” அவன் அணைப்பிலிருந்தே தீர்க்கமாக அவனைப் பார்த்து கேட்டாள்.
கன்னக்குழியில் நாக்கை சுழட்டியவாறு அவளைப் பார்த்து சிரித்தவன் “வாங்கி 3 இயர்ஸ் ஆச்சு..!” என்றான்.
“அப்போ.. அப்போ.. என்னை யூ.எஸ் அனுப்புனதெல்லாம் சும்மா பேச்சுக்கு.. அப்படித்தானே? திரும்ப என்னை இங்கே கூப்பிட்டு வர பிளான்ல தான் இருந்து இருக்கீங்க? அப்படித்தானே?” என்றவள் அவனை சரியாக கணித்துக் கூற..
“எஸ்.. அஃப் கோர்ஸ்..!” என்று குறுஞ்சிரிப்பு முகத்தில் தவழ தலை அசைத்தவனை என்ன செய்யலாம் என்று அவ்வளவு கோபம் பெருகியது அவளுக்கு.
“இங்க பாரு சின்னு..!” என்று அவளை அமர வைத்து அருகிலேயே தானும் அமர்ந்தவன்,
“உன்னை நான் அமெரிக்காவுக்கு அனுப்பி வச்சேன்னா உன்னை அப்படியே ஒரேடியா அங்கேயே அனுப்பி வைக்கல..! கொஞ்ச நாள் எனக்கு டைம் தேவைப்பட்டுச்சு. உன்னை நீ மாத்திக்கவும், உன்னோட ஸ்டடீஸை கம்ப்ளீட் பண்ணவும் தான். அதே நேரத்துல உன்னோட வேரு இதுதான்..! இதை விட்டு எங்க போகணும்னு நினைக்கிற? எதற்கு ஓடி ஒளியணும்னு நினைக்கிற?” என்று அவன் சற்று ஆத்திரமாக அவளை பார்த்து கேட்க..
‘உனக்கு தெரியாதா?’ என்று கண்களில் அடிப்பட்ட ரணத்துடன் அவனைப் பார்த்தாள் பாவை.
“ஹேய் சின்னு..! இப்படி பார்க்காத டி..!” என்றவன் அவளின் தாடையை தன் இரு உள்ளங்கைகளில் ஏந்திக் கொண்டான்.
இப்போதெல்லாம் அதிகமாக அவன் பேச்சு உறவாய் உரிமையாய் வெளிப்படும் அந்த ‘டி’ கூட அவளுக்கு திகிலை தான் கொடுத்தது. அவன் கண்களை பார்க்காமல் இவள் கண்களை அழுந்த மூடிக்கொண்டாள்.
“டேய் மாமாவை பாருடா.. உனக்காக ஒரு ஹாஸ்பிடல் வாங்கலாம்னு ஆல்ரெடி பிளான்ல தான் இருந்தேன். அப்பதான் ஜெகதீசன் சார் அவங்க பிரண்ட்ஸ் என்கிட்ட இதை பத்தி பேசினாங்க.. எனக்கும் அது நல்ல ஐடியாவா தோணுச்சு.. ஓகே சொல்லிட்டேன்..!” என்று அசால்ட்டாக தோளை குலுக்கியவனை கூர்ந்து பார்த்தவள்,
“இதை இதைத்தான் சொன்னேன்... சரியான ராவணன் நீங்கன்னு..!” என்றவளின் குற்றப் பார்வையில் அவன் கொஞ்சம் கூட வருத்தப்படவே இல்லை. அதை கண்டதும் இன்னும் வலித்தது அவளுக்கு.
“என்னோட விருப்பு வெறுப்பு எதையும் கேட்கிறதில்ல.. எனக்கு பிடித்த இடத்தில் என்னை இருக்க விடுறதில்ல.. சின்ன வயசுல எங்க.. எங்க.. அப்பா கிட்ட இருந்து பிரிச்சு இங்க கூட்டிட்டு வந்தீங்க.. இப்போ எனக்கு புடிச்ச வேலைய செஞ்சுக்கிட்டு நான் பாட்டுக்கு நிம்மதியா இருந்தேன். அங்கே இருந்தும் என்னை இழுத்துட்டு வந்துட்டீங்க.. ஆக மொத்தம் நீங்க எனக்கு கொடுக்கிறது எல்லாம் சுதந்திர சந்தோஷ கூடு இல்ல.. அசோகவனம் தான்..!” என்றாள் முகத்தில் அத்தனை வலிகளோடு..!!
அவளின் வலியை பொறுக்காதவன் அவளை இழுத்து தன் நெஞ்சினில் சாய்த்துக்கொள்ள..
“விடுங்க.. விடுங்க.. நான் இங்க இருக்க மாட்டேன்” என்று அவள் விலக முயல.. அவன் இன்னும் அழுத்திக் கொள்ள.. அவனிடமிருந்து சிரமப்பட்டு விடுபட்டவள் தலை எல்லாம் கலைந்து ஒரு மாதிரி அலங்கோலமாக இருந்தாள்.
“இங்க பாரு சின்னு.. உங்க அப்பா பத்தி எல்லாம் இப்ப ஏன் பேசுற நீ? அதெல்லாம் முடிஞ்சு போன விஷயம்..!” என்று அவள் கண்களை பார்த்து அழுத்தம் திருத்தமாக கூற,
அவளும் மூக்கை உறிஞ்சிக் கொண்டு “என்னால.. இங்க இருக்க முடியாது.. இங்கே இருக்க முடியாது..! என்னை சீக்கிரம் யூ.எஸ் அனுப்பி வைங்க” என்றாள் அவன் புறம் திரும்பாமல்..
நயனனோ அவள் கைப்பற்றிய இழுக்க.. அதை தட்டிவிட்டு முகத்தை அவனுக்கு காட்டாமல் தன் வாழ்வில் விதி விளையாடியது கொஞ்சம் என்றால்.. இவனது சதிராட்டம் தான் அதிகமாக இருக்கிறது..! பொருபொரு என அமர்ந்திருந்தாள்.
அந்நேரம் பார்த்து கேபின் கதவு தட்டப்பட.. அவசர அவசரமாக தன்னை பார்த்தவள் வேகமாக தலையை கையால் கோதிக் கொண்டு உடையை சீர்படுத்திக் கொண்டிருக்கும்போதே.. இவன் எஸ் என்று கூறி விட,
உள்ளே நுழைந்தது ராதா தான். அறை இருந்த அழகிலும்.. அதிலும் இவர்கள் நிலையும் பார்த்தவள் ஒன்றும் கூற முடியாமல் ஒரு நிமிடம் திகைத்தே போனாள்.
“போச்சு.. போச்சு.. இந்த பொண்ணு ஏதோ தப்பு தப்பா நினைச்சுருச்சு போல..” என்று முணுமுணுத்தவள் ஓரக் கண்ணால் கணவனை முறைத்தாள்.
“என்ன விஷயம் ராதா சொல்லுங்க?” என்று கதிர்நயனன் அவளின் கவனத்தை திருப்ப..
“இல்ல சார்.. அது வந்து.. டாக்டர் ஜெகதீசன்.. அவருக்கு.. வந்த ஓபி பேஷண்ட்டை.. மேடமுக்கு மாத்தி விடவானு கேட்டாங்க? இன்னைக்கு ஃபர்ஸ்ட் டே இல்லையா? அதனால..” என்றாள் ஒரு வழியாக திக்கி திணறி..
“என் விஷயத்தை இனி நான் பார்த்துக் கொள்வேன் நீங்க பேசக்கூடாது..!” என்பது போல அவள் பார்வையில் சுருதி ஏற்ற..
சுற்றி முற்றி அறையைப் பார்த்தவன் அவள் இருந்த கோலத்தையும் பார்த்து ராதா ஏதும் தவறாக நினைத்துக் கொள்ள கூடாது என்று நினைத்து “இல்ல ராதா.. இன்னைக்கு வேண்டாம்..! மேடமுக்கு ஹோம் சிக்.. வீட்டுக்கு வருவேனு அவ்வளவு அடம் பிடிச்சுக்கிட்டு இருக்காங்க..” என்று இலகுவாக கூறி அறையையும் கண்களால் காட்டினான்.
அதில் ராதாவுக்குமே சிரிப்பு பீறிட்டது. ஆனால் சிரிக்க முடியாதே..! எதிரே இருப்பவன் மருத்துவமனை அட்மின் என்றால்.. அவளோ மருத்துவர்.. மிக உயரிய பதவியில் இருப்பவர்கள்..!
“ஓகே சார்.. நான் அப்ப போய் டாக்டர் கிட்ட இன்ஃபார்ம் பண்ணிடுறேன்” என்று அவள் வெளியே செல்ல..
“அப்பவே சொன்னேன்ல என் விஷயத்துல நீங்க தலையிடாதீங்கன்னு” என்று வார்த்தையை கடித்து துப்பியவள்,
“எக்ஸ்கியூஸ் மீ சிஸ்டர்..! நீங்க ஓபி பேஷண்ட் அனுப்புங்க. பட் 15 மினிட்ஸ் கழிச்சு..!” என்றதும் பிரக்யா அறியாமல் வெற்றி புன்னகை கதிர்நயனனின் நயனங்களில்..!!
“ஓகே சின்னு.. ஆல் த பெஸ்ட்..!” என்றவன் அதற்கு மேல் நின்றால் இவள் பேச்சை மாற்றிக் கொள்வாள் என்று வேகமாக வெளியேறி விட்டான்.
அதுபோல சரியாக ஒரு மணிக்கு வந்தான் அவளை அழைத்துச் செல்ல..
அவளும் “நான் என்ன சின்ன பிள்ளையா கொண்டு வந்து விட்டு கூட்டிட்டு போறதுக்கு..!” என்று முணுமுணுத்தவாறே அவனுடன் நடந்தாள்.
“வாடா.. வாடா.. ஹாஸ்பிட்டல் எப்படி இருந்துச்சு? வேலையெல்லாம் புடிச்சிருந்துச்சா?” என்று பர்வதத்தம்மாள் கேட்க..
“ஆக நீங்களும் க்ரைம் பார்ட்னர் இல்லையா உங்க புள்ளைக்கு?” என்று முகத்தை கடுப்பாக வைத்தவள்,
“மிஸ்ஸஸ் சிவஞானம்.. குளிச்சிட்டு வந்து உங்களை வைச்சிக்கிறேன்” என்று மாடி ஏறிச் சென்றவளை புன்னகையோடு பார்த்தனர் அம்மாவும் மகனும்.
“ம்மா.. உங்க பேத்தி பேக்..!” என்றதும் ஆமாம் என்றவர் கண்களிலும் லேசான கண்ணீர்.
அவள் வந்ததும் அவளோடு மதிய உணவை முடித்தான். ஆனால் ஒரு பேச்சு கூட அவன் பேசவில்லை. அவனைப் பற்றி அவள் பேச்சிய பேச்சை ரசித்தபடி..! உணவை ருசித்தபடி..!
அவர்களின் இனிய சூழலை கலைத்தது ஓர் அதிகார குரல்..!
“உனக்கும் என் பொண்ணுக்கும் தான் ஒத்து வரலன்னு அவ உன்னை விட்டு போய்ட்டா தானே..! நீ விசாலினியை கல்யாணம் பண்ணிக்க
போறதா தான் ஊர் பூரா பேச்சா இருக்கே.. அப்புறம் எதுக்கு என் பொண்ணை இன்னும் உன் வீட்டில் வச்சிருக்க.. என் வீட்டுக்கு அனுப்பு..!” என்று கர்ஜனையோடு வந்தது பிரக்யாவின் அப்பாவின் குரல்..!
