அத்தியாயம் 5
“பிரியா… எனக்கு என்னவோ சரியாப் படலடி!”
தன்னுடைய டேபிள் அமர்ந்திருந்த அனன்யா, கையில் இருந்த பேனாவைச் சுற்றிக்கொண்டே சொன்னாள்.
“என்னடி மறுபடியும் ஆரம்பிச்சிட்ட? நேத்திலிருந்து இதையேதான் சொல்லிட்டு இருக்க!”
“எங்க அப்பா ஆதித்யா சாரைப் பற்றி ஏதோ மறைக்கிறார். அவரைப் பார்த்தாலே பயப்படுற மாதிரி இருக்கு.”
பிரியா அவளுடைய கையைப் பிடித்தாள்.
“அனு, முதல்ல உன் அப்பா சொல்றதைக் கேட்போம். அப்புறம் ஆதித்யா சார் சொல்றதையும் கேட்போம். இரண்டு பேரும் என்ன மறைக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்கலாம்.”
“ஆனா என் மனசுக்குள்ள ஏதோ ஒரு பயம் இருக்கு, பிரியா.”
“என்ன பயம்?”
அனன்யா சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.
“எனக்குத் தெரியலடி. ஆதித்யா சாரைப் பார்த்தா அவரை நம்பலாம்னு தோணுது. ஆனா அந்த மெசேஜும், அப்பாவோட பயமும் என்னை யோசிக்க வைக்குது.”
பிரியா சிரித்தாள்.
“அடிப்பாவி! ரெண்டு நாள்லயே மேனேஜரை நம்ப ஆரம்பிச்சிட்டியா?”
“பிரியா!”
“சரிம்மா, சரி! காதல் எப்போ வரும்னு யாருக்கும் தெரியாது!”
“யாருக்கு காதல்?”
“உனக்குத்தான்!”
அனன்யா அவளைத் துரத்துவது போல எழுந்தாள்.
இருவரும் சிரித்துக்கொண்டிருந்த நேரத்தில்…
“மிஸ் அனன்யா !”
அந்தக் குரலைக் கேட்டதும் இருவரும் திரும்பினார்கள்.
ஆதித்யா!
பிரியா உடனே தன் இடத்திற்குச் சென்று அமர்ந்துகொண்டாள்.
அனன்யா அவனைப் பார்த்தாள்.
“சொல்லுங்க, சார்.”
“என் கேபினுக்கு வாங்க.”
அவள் பெருமூச்சு விட்டுக்கொண்டே அவனைப் பின்தொடர்ந்தாள்.
இந்த ஆளுக்கு வேற வேலையே இல்லையா? எப்போ பார்த்தாலும் என்னைக் கூப்பிட்டுட்டே இருக்காரு!
ஆனால் அவளுக்குள் ஒரு சிறிய சந்தோஷமும் இருந்தது.
அதை மட்டும் அவள் யாரிடமும் சொல்லத் தயாராக இல்லை.
---
“உட்காருங்க, அனன்யா.”
அவன் ஒரு ஃபைல் அவளிடம் நீட்டினான்.
“நம்ம கிளையன்ட் மீட்டிங் நாளைக்கு இருக்கு. பிரசன்டேஷன் ரெடியா?”
“கிட்டத்தட்ட முடிச்சிட்டேன், சார்.”
“குட் .”
அவள் எழுந்து செல்லத் தயாரானாள்.
“அனன்யா, ஒரு நிமிஷம்.”
“என்ன சார்?”
“நேத்து உங்க அப்பா என்ன சொன்னார்?”
அவள் அதிர்ச்சியடைந்தாள்.
“உங்களுக்கு எப்படி…?”
“உங்க முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது. நீங்க ஏதோ ஒரு விஷயத்தை நினைச்சு கவலைப்படுறீங்க.”
அனன்யா அவனைப் பார்த்தாள்.
அவனுடைய குரலில் வழக்கமான கண்டிப்பு இல்லை.
“எங்க அப்பா உங்க குடும்பத்தோட எந்தத் தொடர்பும் வேண்டாம்னு சொன்னார்.”
ஆதித்யா தலையைக் குனிந்தான்.
“எனக்குப் புரியுது.”
“உங்களுக்கு உண்மையிலேயே எதுவும் தெரியாதா, சார்?”
அவன் அவளுடைய கண்களைப் பார்த்தான்.
“எனக்குத் தெரிந்ததை எல்லாம் உன்கிட்ட சொல்லுவேன். ஆனால் இப்போ என்னிடம் முழுமையான பதில் இல்லை.”
அனன்யா அமைதியாக இருந்தாள்.
“நான் உங்க குடும்பத்தைப் பற்றி விசாரிக்க ஆரம்பிச்சிருக்கேன். உண்மை என்னன்னு கண்டுபிடிப்பேன்.”
“எதுக்காக, சார்? இது எங்க குடும்பப் பிரச்சினை.”
ஆதித்யா ஒரு நொடி தயங்கினான்.
“ஏன்னா, உங்களைப் பார்த்ததிலிருந்து இந்த விஷயம் என்னையும் பாதிக்க ஆரம்பிச்சிருக்கு.”
அவளுடைய இதயம் ஒரு நொடி துடிப்பதை மறந்தது போல இருந்தது.
“என்ன சொல்றீங்க, சார்?”
அவன் பார்வையைத் திருப்பிக்கொண்டான்.
“நான் சொன்னது… இந்தப் பிரச்சினையால உங்க வேலை பாதிக்கப்படக்கூடாது. அதைத்தான் சொன்னேன்.”
அனன்யா அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
“ஓஹோ! நான் வேற ஏதோ நினைச்சிட்டேன்!”
“என்ன நினைச்சீங்க?”
“அதெல்லாம் உங்களுக்குத் தேவையில்லாத விஷயம், சார்!”
அவள் சிரித்துக்கொண்டே வெளியேறினாள்.
ஆதித்யா அவள் சென்றதைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
இந்தப் பொண்ணு ஏன் என் மனசுக்குள்ள இவ்வளவு கேள்விகளை உருவாக்குறா?
---
கிளையன்ட் மீட்டிங்கிற்கான பிரசன்டேஷனைத் தயாரிக்க அனன்யாவும் ஆதித்யாவும் ஒரே அறையில் வேலை செய்துகொண்டிருந்தார்கள்.
“சார், இந்த ஐடியா எப்படி இருக்கு?”
அனன்யா லேப்டாப்பை அவன் பக்கம் திருப்பினாள்.
ஆதித்யா அதைப் பார்த்தான்.
“எஸ்ஸ்ல்லன்ட் !”
அவள் மகிழ்ச்சியில் சிரித்தாள்.
“உண்மையாவா, சார்?”
“ஆமாம். உங்களிடம் நல்ல கிரியேட்டிவிட்டி இருக்கு.”
“தேங்க் யூ!”
“ஆனா…”
அனன்யா உடனே அவனைப் பார்த்தாள்.
“சார்! மறுபடியும் ஆனா-வா?”
அவன் சிரித்தான்.
“இந்த முறை ஆனா இல்லை. நீங்க நல்லா வேலை செய்றீங்கன்னு சொல்றேன்.”
அவள் கண்களை விரித்தாள்.
“என்னது? நம்ம மேனேஜர் என்னைப் பாராட்டுறாரா? இதை நான் பிரியாவிடம் சொல்லணும்!”
அவள் போனை எடுக்க முயன்றாள்.
“அனன்யா!”
“சாரி, சார்!”
அவன் சிரித்தான்.
அவளும் சிரித்தாள்.
அந்த அறையில் சில நொடிகள் வேலை பற்றிய பேச்சு மறைந்து, இரண்டு பேருக்குள்ளும் ஒரு இயல்பான நெருக்கம் உருவானது.
அப்போது அனன்யாவின் மொபைல் ஒலித்தது.
அப்பாவிடமிருந்து அழைப்பு.
“அனு, இன்னைக்கு சீக்கிரம் வீட்டுக்கு வர முடியுமா?”
“என்னப்பா? ஏதாவது பிரச்சினையா?”
“இல்லம்மா. உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்.”
“சரி அப்பா. வேலை முடிஞ்சதும் வர்றேன்.”
அழைப்பை முடித்ததும் ஆதித்யா கேட்டான்.
“எல்லாம் சரியா?”
“தெரியல, சார். அப்பா ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொல்றார்.”
“சரி. ஏதாவது உதவி வேணும்னா சொல்லுங்க.”
அனன்யா அவனைப் பார்த்தாள்.
“நீங்க ஏன் எனக்கு இவ்வளவு உதவி செய்றீங்க, சார்?”
அவன் பதில் சொல்லாமல் சில நொடிகள் அவளைப் பார்த்தான்.
பிறகு மெதுவாகச் சொன்னான்.
“சில பேருக்கு உதவி செய்யணும்னு மனசு சொல்லும். அதுக்குக் காரணம் தேவை இல்லை.”
அவள் எதுவும் பேசவில்லை.
ஆனால் அந்த வார்த்தைகள் அவளுடைய மனதில் ஆழமாகப் பதிந்தன.
---
“அப்பா, என்ன விஷயம்? காலையிலிருந்து என்னை வரச் சொல்லிட்டே இருந்தீங்க!”
அனன்யா தன் அப்பாவின் அருகில் அமர்ந்தாள்.
ரவி அவளுடைய கையைப் பிடித்தார்.
“அனு, உனக்கு ஒரு விஷயம் தெரியணும்.”
“சொல்லுங்க, அப்பா.”
“ஆதித்யாவோட அப்பா… அவரு இறப்பதற்கு முன்னாடி ஒரு பெரிய பிரச்சினையில சிக்கியிருந்தார்.”
அனன்யா அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
“அந்தப் பிரச்சினையிலிருந்து அவரைக் காப்பாத்த நான் முயற்சி செய்தேன். ஆனால் என்னால முடியல.”
“என்ன பிரச்சினை, அப்பா?”
ரவி பெருமூச்சு விட்டார்.
“ஒரு பிசினஸ் ஒப்பந்தம். அதில் நடந்த சில விஷயங்களால் இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் பெரிய பிரச்சினை உருவானது. ஆதித்யாவோட அப்பா என்னை நம்பினார். ஆனால் அந்த ஒப்பந்தம் சம்பந்தமான டாக்குமெண்ட் காணாமல் போயிடுச்சு.”
“அதனாலதான் நீங்க பிரிஞ்சிட்டீங்களா?”
“ஆமாம். நான் அந்த டாக்குமெண்ட் திருடினேன்னு சிலர் நினைச்சாங்க.”
அனன்யா அதிர்ச்சியில் எழுந்தாள்.
“என்னது? நீங்களா?”
“நான் செய்யலம்மா. ஆனா அதை நிரூபிக்க முடியல.”
அவளுடைய கண்களில் கண்ணீர் திரண்டது.
“அப்பா, நீங்க ஏன் இத்தனை வருஷமா இதை மறைச்சீங்க?”
“உன்னுடைய வாழ்க்கையில் இந்தப் பிரச்சினை வரக்கூடாதுன்னு நினைச்சேன்.”
அவள் தன் அப்பாவைக் கட்டிப்பிடித்தாள்.
“நான் உங்களை நம்புறேன், அப்பா.”
ரவி அவளுடைய தலையை வருடினார்.
“அனு, இன்னொரு விஷயம்.”
“சொல்லுங்க.”
“ஆதித்யாவோட குடும்பத்தைப் பொறுத்தவரை கவனமா இரு. அந்த ஆவணம் இன்னும் யாரிடமோ இருக்கலாம். அதைத் தேடுறவங்க நம்மை மறுபடியும் பிரச்சினைக்குள் இழுக்கலாம்.”
அனன்யா தலையசைத்தாள்.
ஆனால் அவளுடைய மனதில் ஒரு முடிவு உருவாகிவிட்டது.
என் அப்பா குற்றமற்றவர் என்பதை நான் நிரூபிப்பேன். உண்மையைத் தெரிந்துகொள்ள ஆதித்யாவும் எனக்கு உதவ வேண்டும்.
---
அனன்யா தன் அறையில் அமர்ந்து கொண்டிருந்தபோது மொபைல் ஒலித்தது.
திரையில் தெரிந்த பெயரைப் பார்த்ததும் அவளுக்குள் ஒரு சிறிய மகிழ்ச்சி.
ஆதித்ய கல்லின்…
அவள் அழைப்பை எடுத்தாள்.
“ஹலோ, சார்.”
“அனன்யா, வீட்டுக்குப் போயிட்டீங்களா?”
“ஆமாம், சார்.”
“உங்க அப்பா எப்படி இருக்கார்?”
“நல்லா இருக்கார். ஆனா…”
“என்ன?”
அவள் தயங்கினாள்.
“என் அப்பா உங்க அப்பாவைப் பற்றிச் சில விஷயங்கள் சொன்னார்.”
ஆதித்யா அமைதியாக இருந்தான்.
“அந்தப் பழைய பிசினஸ் ஒப்பந்தம் பற்றியா?”
அனன்யா அதிர்ச்சியடைந்தாள்.
“உங்களுக்கு அது தெரியுமா?”
“கொஞ்சம் தெரியும். ஆனா முழு உண்மையும் தெரியாது.”
“அப்போ நாம உண்மையைக் கண்டுபிடிக்கலாமா?”
அந்தக் கேள்வியைக் கேட்டதும் ஆதித்யா சில நொடிகள் பேசவில்லை.
பிறகு அவன் உறுதியான குரலில் சொன்னான்.
“கண்டிப்பா. உங்க அப்பா குற்றமற்றவர்னு நிரூபிக்கத் தேவையான எல்லா முயற்சியும் செய்வோம்.”
அனன்யாவின் கண்களில் கண்ணீர் வந்தது.
“தேங்க்ஸ், சார்.”
“அனன்யா…”
“சொல்லுங்க.”
“என்னை நம்புங்க. நான் உங்களை ஏமாற்ற மாட்டேன்.”
அவள் மெதுவாகப் புன்னகைத்தாள்.
“நான் முயற்சி செய்றேன், சார்.”
அழைப்பு முடிந்தது.
இருவரும் தங்களுடைய அறைகளில் மொபைலைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்கள்.
இருவருடைய மனதிலும் ஒரே உணர்வு.
இப்போது அவர்களை இணைப்பது ஒரு ரகசியம் மட்டுமல்ல.
ஒருவர்மீது ஒருவர் வளரத் தொடங்கிய நம்பிக்கையும் கூட.
---
அதே இரவு — ஒரு மர்மமான அறை
“சார், அந்த இரண்டு பேரும் பேச ஆரம்பிச்சிட்டாங்க.”
“என்னது?”
“ஆமாம் சார். அனன்யாவும் ஆதித்யாவும் அந்தப் பழைய ஒப்பந்தத்தைப் பற்றி விசாரிக்கப் போறாங்க.”
சில நொடிகள் அமைதி.
பிறகு மறுமுனையில் இருந்தவர் கோபமாகச் சொன்னார்.
“அந்த ஆவணம் அவங்க கைக்குக் கிடைக்கவே கூடாது!”
“அதை எப்படி நிறுத்துவது, சார்?”
அந்த நபர் டேபிள் இருந்த ஒரு புகைப்படத்தை எடுத்தார்.
அதில் அனன்யாவின் அப்பாவும் ஆதித்யாவின் அப்பாவும் கைகுலுக்கிக்கொண்டிருந்தார்கள்.
“ரவி மீண்டும் உண்மையைப் பேச ஆரம்பிச்சா, நம்ம எல்லா ரகசியமும் வெளியே வந்துடும்.”
“அப்போ என்ன செய்யணும்?”
அந்த நபர் மெதுவாகச் சிரித்தார்.
“முதல்ல அனன்யாவை ஆதித்யாவிடமிருந்து பிரிக்கணும். அவங்க காதலிக்க ஆரம்பிச்சிட்டா, நம்ம திட்டம் முழுவதும் தோல்வியடைஞ்சிடும்.”
அவர் தன்னுடைய மொபைலை எடுத்தார்.
அடுத்த நிமிடம் அனன்யாவின் போனுக்கு ஒரு செய்தி சென்றது.
“ஆதித்யா உன்னிடம் ஒரு முக்கியமான உண்மையை மறைக்கிறான். நாளை காலை 10 மணிக்கு பழைய கம்பெனி கட்டிடத்துக்கு வா. உண்மை என்னன்னு உனக்கே தெரியும்.”
அனன்யா அந்தச் செய்தியைப் படித்தாள்.
அவளுடைய முகம் மாறியது.
ஆதித்யா உண்மையிலேயே என்னிடம் எதையாவது மறைக்கிறாரா?
அவளுடைய மனதில் மீண்டும் சந்தேகம் எழுந்தது.
அவள் பதில் அனுப்ப முயன்றாள்.
ஆனால் அதற்குள் அந்த எண் அணைக்கப்பட்டுவிட்டது.
தொடரும்… ❤️
