அத்தியாயம் 25
பதட்டத்தின் உச்சத்தில் ஹாஸ்பிட்டலில் நின்றிருந்தார் ப்ரணவ்..
அவர் நேராக வந்தது யாதிரா பிறந்த ஹாஸ்பிட்டலுக்குத் தான்..
அவருக்கு யாதிராவைப் பற்றி நிறைய தெரிய வேண்டும்.. சயந்தனிடம் கேட்டால், கண்டிப்பாக சொல்லமாட்டான் என்பதை அவர் தெரிந்தே வைத்திருந்தார்..
“சார்..” என அழைத்தபடி வந்தார், அந்த ஹாஸ்பிட்டலின் தலைமை நிர்வாகி.
“ம்ம்.. சொல்லுங்க டாக்டர், நான் கேட்ட டீடெய்ல் எல்லாம் கிடைச்சிதா?..”
“கிடைச்சுது சார்.. நீங்க சொல்லுற மாதிரி, மஹாலெட்சுமி - சந்தோஷ் தம்பதிக்கு இங்கே தான் குழந்தை பிறந்தது.. ஆனா..” என ஒரு நிமிடம் தயங்கி நிற்க,
“இங்கே பாருங்க டாக்டர், நான் எல்லா விஷயமும் தெரிஞ்சதுக்கப்புறம் தான் இங்கே வந்திருக்கேன்.. இது ஒரு கன்பார்மேஷன்க்காக மட்டும் தான்.. சோ என்கிட்ட மறைக்காம எல்லா விஷயத்தையும் சொல்லிடுங்க..” என்றார் கண்டிப்பான குரலில்,
“அவுங்களுக்குப் பிறந்தது பெண்குழந்தை இல்லை சார்.. ஆண்குழந்தை..” என்ற டாக்டரை கண்களை சுருக்கிப் பார்த்தார் ப்ரணவ்..
என்னதான் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் ஒன்றாக வந்தாலும், அவருக்கு சின்ன நப்பாசை.. மஹாலெட்சுமிக்குப் பிறந்தது தான் யாதிராவாக இருக்க வேண்டுமென்று.. அதனாலேயே, ஓடி வந்திருந்தார்..
“நிச்சயமா அது ஆண்குழந்தை தானா?..” என நம்ப முடியாமல் தான் கேட்டார்..
“நிச்சயமா சார்.. அதுவும் அந்தக் குழந்தை இறந்தேப் பிறந்திருக்கு.. தொப்புள்கொடி குழந்தையோட கழுத்தைச் சுத்தி கொஞ்சம் சிக்கலான பிரசவமா தான் சார் இருந்திருக்கு..” என ரிப்போர்ட்டை ப்ரணவ்விடம் கொடுத்தார்..
அதை வாசித்துப் பார்த்தவருக்கு இதயம் கனத்துப் போனது..
“ஓஹ்.. இறந்த குழந்தையை யார் வாங்குனா?..” எனக் கேட்டார் ப்ரணவ்..
“அது.. ரெக்கார்ட்ல இல்லை சார்.. யார் வாங்குனா?.. எங்கே கொண்டு போனாங்கன்னு எதுவும் இல்ல சார்..” என்றார் பவ்வியமாக,
“அது எப்படி ரெக்கார்ட் இல்லாம இருக்கும்?..” என்றவனுக்கு, இன்னும் குழப்பம் கூடியது தான் மிச்சம்..
சிறிது நேரம் ஏதோ யோசித்தவர், பட்டென்று டாக்டரின் புறம் திரும்பினார்..
“டாக்டர், மஹாலெட்சுமிக்கு பிரசவமான அதே நேரத்துல, வேற யாருக்காவது குழந்தை பிறந்ததா?.. எக்ஸாட்லி பெண் குழந்தை..”
“இருங்க சார்.. ரெக்கார்ட் பார்த்தா தெரியும்?..” என அவர் பேப்பரை புரட்டி எடுத்தார்..
சில நிமிடங்களிலேயே ப்ரணவ்வின் புறம் திரும்பினார்..
“ஆமா சார் பிறந்திருக்கு.. அரை மணி நேரத்துக்கு முன்னாடி ஒரு பிரசவம் ஆகியிருக்கு.. அந்தப் பொண்ணுக்கு பெண் குழந்தை சார்..” என்றார் டாக்டர்..
“ஓஹ்.. அந்தக் குழந்தை இப்போ எங்கே இருக்கு?.. என்ன பண்ணிட்டு இருக்கு?.. அந்தக் குழந்தையோட அம்மா - அப்பா பேர் என்ன?..” என வரிசையாக கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார் ப்ரணவ்..
“சார்.. கொஞ்சம் பொறுமையா பார்த்து சொல்லுறேன்.. அந்தப் பொண்ணு பேர் பிராச்சி.. வடநாட்டுப் பொண்ணு சார்.. குழந்தைப் பிறந்த கொஞ்ச நேரத்துலயே அந்தப் பொண்ணு பிராச்சி இறந்துட்டாங்க சார்..” என்றதும், ப்ரணவ்விற்கு ஒரு மாதிரியாகி விட்டது..
“இறந்துட்டாங்களா?..”
“ஆமா சார்.. அந்தப் பொண்ணு இங்கே ஹாஸ்பிட்டல்க்கு தனியா தான் வந்திருக்கா.. அட்டென்டர்னு யாருமே கிடையாது சார்.. பாவம் அநாதைப் பொண்ணு போல..” என சொல்லிக் கொண்டே போனவரைக் கண்டு இனம் புரியாத வலி ப்ரணவ்விற்குள்..
“ஓஹ்..” என்ற ப்ரணவ்விற்கு, மனது ஏனோ அதிவேகமாக அடித்துக் கொண்டது..
“அவுங்க அட்ரஸ் ஏதாவது கொடுத்திருக்காங்களா?..”
“இல்லை சார்.. ரெகுலரா செக்கப்க்கு வர்றவங்க இல்ல சார்.. அவசரத்துக்கு பிரசவ வலியில தான் வந்து சேர்ந்திருக்காங்க.. அதுனால அட்ரஸ் எதுவும் கேட்க முடியலை..
“ஹஸ்பென்ட் நேம் எதுவுமே சொல்லலையா?.. அவரைப் பார்த்தா, ஏதாவது தகவல் தெரியும்ல” என்றார் ஒரு வித புருவ சுழிப்புடன்,
“ஹஸ்பென்ட் நேம்..” என இழுத்த டாக்டர், பேப்பரைப் பார்த்துக் கொண்டே,
“கொடுத்திருக்கு சார்.. அந்தப் பொண்ணு ஹஸ்பென்ட் நேம் ஈஸ்வர ப்ரணவ்..” என சொல்லி முடித்த அடுத்த கணம், சேரை விட்டு எழுந்து விட்டார் ப்ரணவ்..
“வாட்ட்ட்.. ஈஸ்வர ப்ரணவ்வா..”
“ஆமா சார், ஹஸ்பென்ட் நேம்ல அந்தப் பேர் தான் போட்டிருக்கு.. என்னாச்சி சார்?.. ஏதாவது பிரச்சினையா?..” என்றார் தயங்கிக் கொண்டே,
“ஆமா பிரச்சினை தான்..” என்ற ப்ரணவ்விற்கு, ஒன்றுமே புரியவில்லை..
அனைத்தையும் அறிந்தவன் அவன் ஒருவனே.. ஆனால் வாயை திறக்க மாட்டேன் என்கிறானே..
பாவிப்பய.. இப்படி என்னைச் சுத்தல்ல விடுறானே.. என புலம்பிக் கொண்டே, சென்னையை நோக்கி வந்தார்..
அவருக்கு ஈஸ்வர ப்ரணவ் என்ற இடத்திலேயே சகலமும் மறந்துப் போனது..
எப்படி யார் அந்தப் பெண்?.. கணவன் என்ற இடத்தில் என் பேரை எதனால் போட வேண்டும்?..
பல குழப்பங்கள் அவரிடத்தில்.. தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது அவருக்கு..
சென்னைக்கு வந்தவர் முதலில் சந்தித்தது சந்தனமல்லியை தான்..
வழக்கம் போல் சந்திக்கும் காஃபி ஷாப்பிற்கே வர சொல்லி விட்டார்..
அங்கு நடந்ததை ஒன்று விடாமல் ஒப்பித்து விட்டார்..
கேட்டுக் கொண்டிருந்த சந்தனமல்லிக்கு ப்ரணவ்வின் மேல் தான் சந்தேகம் வந்தது..
“அப்போ, பிராச்சிங்குற பொண்ணு உங்களை ஹஸ்பென்ட்னு சொல்லி ஒரு பெண்குழந்தையை பெத்தெடுத்துட்டு இறந்தும் போயிருக்கா?..” என்றார் சந்தனமல்லி அழுத்தமாக,
“ஆமா.. ஆனா, அந்தப் பிராச்சி யாருன்னு?.. சத்தியமா எனக்குத் தெரியாது..” என்றார் ப்ரணவ்..
சிறிது நேரம் அங்கு அமைதி தான்.. இருவருமே எதுவுமே பேசவில்லை..
“ஏன் சார்?.. உங்களுக்கு எப்பவாது, தலையில அடிப்பட்டு அம்னீசியா அந்த மாதிரி ஏதாவது வந்திருக்கா சார்?..”
“அப்படியெல்லாம் ஒன்னுமில்லை.. நான்தான் கல்லுருண்டை மாதிரி சுத்தி வர்றேனே.. ஒரு தடவை ஆக்சிடெண்ட் ஆகி விலா எலும்பு, காலெல்லாம் முறிஞ்சிப் போய்க்கிடந்தேன்.. ஆனா தலையில எல்லாம் அடிபடலை..” என்றார் ப்ரணவ்..
“ஓஹ்..” என குவிந்த இதழ்களையே இப்பொழுதும் வெறித்துப் பார்த்தார் ப்ரணவ்..
“அப்போ எப்படி சார்?.. ஒரு பொண்ணு.. அதுவும் வடநாட்டுப் பொண்ணு.. தெளிவா உங்க பேர் சொல்லும்.. எனக்கென்னமோ உங்க மேல தான் சந்தேகமா இருக்கு?..” என்றார் சந்தனமல்லி..
“மல்லி.. ப்ளீஸ் லிசன்.. நான் எந்தத் தப்பும் பண்ணலை.. அந்தப் பிராச்சி யாருன்னு?.. எனக்கு சத்தியமா தெரியாது.. இதுவரைக்கும் நான் அவளைப் பார்த்ததுக்கூட இல்லை. நான் எப்படி, அந்தப் பொண்ணை தேடப் போறேன்னு தெரியலை..” என்றார் ப்ரணவ்..
அவரின் முகத்தில் அவ்வளவு வருத்தம்?..
“நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா?..”
“ம்ம்.. சொல்லுங்க..”
“வடநாட்டுல இருந்து வந்து மிஸ்ஸிங் கேஸை எடுத்துப் பாருங்க.. யாராவது ஒருத்தர்.. இப்படி ஒரு பொண்ணைக் காணோம்னு கம்ப்ளைன் பண்ணியிருக்காங்களான்னு பாருங்க?.. என்ற மல்லி ப்ரணவ் முகத்தையே பார்க்க, அதுவோ தவுசண்ட் வால்ட் பல்பாய் மின்ன ஆரம்பித்தது..
“கரெக்ட் மல்லி.. தாங்க்ஸ் மல்லி.. நிஜமாவே இது சூப்பர் ஐடியா..” என்றவர், சிரித்துக் கொண்டே அங்கிருந்து புறப்பட்டார்..
கிட்டத்தட்ட ஒரு வாரமாகியது.. மிஸ்ஸிங் கேஸைப் பற்றி கண்டெடுக்க..
அத்தனை ஸ்டேஷன்களையும் அலசி விட்டார்.. ஆனால் எதுவுமே கிடைக்கவில்லை..
“போச்சி டா..” என தலையில் கை வைக்காத குறையாக வைத்தவர்,
பத்து நாட்களுக்குப் பிறகே பிராச்சி என்கின்ற காணாமல் போன பெண்ணைப் பற்றி தெரிந்தது..
அறிந்த அடுத்த நொடியே சந்தனமல்லியை தேடி ஒடியிருந்தார் ப்ரணவ்..
பள்ளி முடிந்ததும், வெளியே வந்த சந்தனமல்லிக்கு அங்கு ப்ரணவ்வை பார்த்ததுமே திகைப்பு தான்..
“என்ன இங்கே வந்திருக்கீங்க?..”
“பிராச்சியோட ஊர் தெரிஞ்சிடுச்சிங்க..”
“மணிப்பூர்.. அது தான் பிராச்சியோட சொந்த ஊர்..”
“சூப்பர்ங்க.. அப்போ போய் விசாரிங்க..” என்று விட்டு சந்தனமல்லி நடக்கத் தொடங்க, அவருடன் சேரந்தே நடக்க ஆரம்பித்தார் ப்ரணவ்..
“எனக்கொரு ஹெல்ப் வேணும்ங்க..”
“ஹெல்ப்பா?.. நானா?..” என்றார் மல்லி..
“ஆமா, உங்களால மட்டும் தான் அது முடியும்?.. ப்ளீஸ்ங்க..” என கெஞ்சியவரைக் கண்டு கண்களை சுருக்கினார் மல்லி..
“என்னால என்னங்க முடியும்?..” என்ற மல்லியின் அருகில் வந்து நின்றவர்,
“என் கூட மணிப்பூர் வரைக்கும் வர முடியுமா?..” என பட்டென்று மனதில் இருப்பதை சொன்னவரைக் கண்டு திகைத்து விழித்தார் மல்லி..
“மணிப்பூர் வரைக்குமா?..” என கேட்ட மல்லியின் திகைத்த முகம், ப்ரணவ்வை என்னவோ செய்தது..
“கேட்டிருக்கக்கூடாதோ?.. அவசரப்பட்டு விட்டோமோ?..” என உள்ளுக்குள் தவித்துப் போனார்..
“சாரிங்க.. தெரியாம கேட்டுட்டேன்..” என ப்ரணவ்வின் வாடிய முகம், இவருக்குள் ஏதோ செய்தது..
“இல்லை இதுவரைக்கும் நான் வெளியூர்க்கு எல்லாம் பெருசா போனதில்லை.. திருப்பூர்.. திருப்பூரை விட்டா சென்னைன்னே இருந்துட்டேன்.. நீங்க திடீர்னு கேட்டதும், எனக்கு என்ன பதில் சொல்லுறதுன்னே தெரியலை.. வீட்டுல அபி வேற இருக்கான்.. அவனையும் பார்த்துக்கணும்..” என தன் மனதில் இருப்பதை அப்படியே சொல்லி விட்டார் மல்லி..
“அபியை மஹாவும், அஞ்சலி அக்காவும் நல்லா பார்த்துப்பாங்க.. அபியை பத்தி எதுவும் யோசிக்க வேண்டாம்.. நீங்க வந்தா, கொஞ்ச ஸ்ட்ராங்கா பீல் பண்ணுவேன்.. அதான் கூப்பிட்டேன்..” என்றவரைக் கண்டு பாவமாகிப் போனது மல்லிக்கு..
ஒரு வித நீண்ட தேடல் பயணம் அவரிடத்தில்.. அவருக்கு வழித்துணையாக தான் போகின்றோம், என்று மட்டும் நினைத்தவர்..
“சரி..” என தலையசைத்தார்..
வழித்துணையாக மட்டுமின்றி, அவரின் வாழ்க்கைத் துணையாகவும் வரப் போகிறார் என்பதை அவர் அறியவில்லை..
“அபி..” என மறுபடியும் ஒரு முறை கேட்டார் மல்லி..
“எங்க அக்கா பத்தி உங்களுக்குத் தெரியாது, அஞ்சலியும் சரி, மஹாவும் சரி.. அவ்வளவு நல்லா பார்த்துப்பாங்க.. நீங்க எதுக்கும் கவலைப்படாதிங்க..” என்ற ப்ரணவ்வின் வார்த்தையில், அவருடன் செல்ல ஆயத்தமானார் மல்லி..
“நான் அபிக்கிட்ட பேசிட்டு சொல்றேன் ப்ரணவ்..” என்றார் ஒரு வித தயக்கத்துடனே,
“ம்ம்..” என சொல்லி விட்டாலும், அவருக்குள் ஏனோ மனதில் சிறு கலக்கம்..
சந்தனமல்லி அபிஜித்திடம் அனைத்தையும் கூறி விட்டு, அவனின் முகத்தை தான் பார்த்தார்..
அவனின் முகமோ தீவிரமாக இருந்தது..
“என்ன யோசனை அபி?.. நான் போறதுல இஷ்டமில்லைன்னா, விடு.. நான் ப்ரணவ் சார்க்கிட்ட சொல்லிடுறேன்..”
“அச்சோ அம்மா..” என மல்லியின் கழுத்தை பின்புறத்தில் இருந்துக் கட்டிக் கொண்டு, “எனக்கும் யாதிரா கூட இருக்கப் பிடிக்கும்மா.. அவுங்க வீட்டுல தங்குறதுல எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.. ஆனா, அவுங்க ஏன் மா இப்படி இருக்காங்க..”
“யாரு டா?..” என்றார் மல்லி..
“அதான் மா, யாதிரா வீட்டுல.. அவ ரொம்ப டிப்ரஷன்ல இருக்கா ம்மா.. அதை யாருமே புரிஞ்சிக்க மாட்டேங்குற.. 17 வயசுப் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்களே, இவங்க எல்லாம் மனசுங்க..” என கோபத்தில் வெடித்தான் அபிஜித்..
“ நீ எப்போ டா, யாதிரா கூட நீ ப்ரண்டான?.. அம்மாக்கிட்ட சொல்லவே இல்லை பார்த்தீயா?.. ”
“அம்மா, அந்த சயந்தனைப் பார்த்தாலே எனக்கு ஆக மாட்டேங்குது.. அவன் இந்தப் பொண்ணை போட்டு டார்ச்சர் பண்றான்.. இவளும் மண்டையாட்டுறா.. இல்லைன்னா அழுவுறா?.. அதான் அன்னைக்கு அவக்கிட்ட போய் நீ அவனை லவ் பண்றீயான்னு கேட்டேன்..” என்றவனை அதிர்ந்துப் பார்த்தார் மல்லி..
“என்னடா, என்னவெல்லாமோ பேசி வச்சிருக்க?.. உன்னை திட்டிட்டாளா?..”
“இல்லைம்மா.. என் கூட நல்லா பேசுனா, பீச்சுக்கு எல்லாம் போனோம்..” என்றவன், அன்று நடந்ததை ஒன்று விடாமல் கூறி முடித்தான்..
“நீ யாதிராவுக்கு நல்லது பண்ணணும்னு தான் நினைக்கிற அபி.. ஆனா, சயந்தன்கிட்ட அதிகமா வச்சிக்காதே.. அவன் அந்தப் பொண்ணு மேல ஒரு வித அதிகமான அன்பு வச்சிருக்கான்..”
“நான் கூட யாதிரா சயந்தனைக் காதலிக்கிறான்னு தான் நினைச்சேன்.. ஆனா இல்லை போல.. ஒரு மாதிரி அழுத்தக்காரியா இருக்கா ம்மா.. எதுக்குமே பிடிக்கொடுக்க மாட்டேங்குறா.. அவளை எப்படியாவது சயந்தன்கிட்ட இருந்து பிரிக்கணும் மா.. அதுக்காகவே அவங்க வீட்டுக்குப் போறேன்..” என்ற அபிஜித்தின் தலையை வருடி விட்டார் மல்லி..
“இப்பவும் சொல்றேன் அபி.. சயந்தன்கிட்ட இருந்து தூரமா இரு..” என எச்சரித்து விட்டே ப்ரணவ்வுடன் புறப்பட்டார் மல்லி..
