37
“அப்பா ஒரு நிமிஷம் இருங்க..!" என்றவன் தென்னரசு முன்நின்று
“அரசு என் கண்ண பார்த்து சொல்லு நிஜமாவே உனக்கு மஹி மேல எந்த எண்ணமும் இல்லையா?” என்று அரசுவை கூர்ந்து பார்த்து கேட்க..
அவனோ தடுமாறினான். இதற்கு முன் கேட்டு இருந்தால் கூட ‘இல்லை.!’ என்று அடித்து சொல்லியிருப்பான்.
மஹிமா பேசியதெல்லாம் கூறும் பொழுது அவளுக்கு தன் மீது அத்தனை அன்பும் பாசமும் இருக்கிறது. ஆனால் ரதியை கொண்டு தள்ளி நிற்கிறாள். அவனுள்ளும் ஒரு தடுமாற்றம்.
“ஏன் டா நிஜமாவே அந்த பொண்ணு மேல உனக்கு எந்த விருப்பமும் இல்லாமல் தான் செயின் வாங்கும்போது கூடவே ஹார்ட்டின் போட்ட டாலரையும் சேர்த்து வாங்குனியா?” என்று அவன் காதில் சென்று முணுமுணுத்தான் கதிர்காமன்.
அதில் வெடுக்கென்று நிமிர்ந்து அண்ணனை பார்க்க கண்சிமிட்டி சிரித்தவன் “பேசுடா..! இன்னைக்கு இவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு நாளைக்கு மஹியை பார்த்து நீ வருத்தப்பட்டு, உன் வாழ்க்கையும் அவ வாழ்க்கையும் நீ சிக்கலாகிக்க கூடாது” என்று அவன் தோளை தட்ட..
“அது வந்து.. அது.. எனக்கும் மஹியை பிடிக்கும்” என்று இழுத்தவன்..
“ஆனா கல்யாண வரைக்கும் சிற்பிய கொண்டு வந்துட்டு இப்போ வேண்டாம்னு சொன்னா.. நாளைக்கு சிற்பியோட வாழ்க்கை..” என்று அவன் மெலிதாய் பேச..
“அட கூறுகெட்ட குப்பா..! அதுக்கு தானே டா நான் இத்தனை நாளா காத்திருக்கேன்.. அதை நான் பாத்துக்குறேன் டா” என்று பல்லை கடித்தான் கதிர்காமன்.
சற்றென்று எழுந்த ரதியோ அவன் முன் வந்து கோப ஆவேசமாய் நின்றவள்,
“நீங்க ஒன்னும் எனக்கு பாவம் பார்த்து வாழ்க்கை பிச்சை போட வேணாம். நீங்க பாவம் பார்க்குற இடத்துல நான் இல்லை புரிஞ்சுதா? உங்களுக்கு உங்க மனசுக்கு யார் விருப்பமோ.. அதை பெத்தவங்க கிட்ட சொல்லி, அவளைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்ங்குற தில்லு உங்களுக்கு இல்லைன்னா நீங்க எல்லாம் எதுக்கு ஆசை வைக்கிறீங்க?” என்று கேள்வி கணைகள் என்னவோ தென்னரசு பக்கம் இருக்க.. பார்வை அத்தனை அழுத்தமாய் கதிர்காமனை தான் பார்த்தது.
அவள் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்தவன் சற்றென்று அவள் கரத்தை பற்றி லோகநாதனிடம் இழுத்துச் சென்று “அத்தான் உங்க பெரிய பொண்ண எனக்கு கட்டிக் கொடுக்கிறீங்களா? எனக்கு ரதியை ரொம்ப பிடிக்கும்..!” என்று அழுத்தம் திருத்தமாய் அவன் கேட்க மீண்டும் ஒரு அதிர்ச்சி அலை அந்த குடும்பத்தினுள்..!
அதுவும் இல்லாமல் அனைவரும் இவளை சிற்பி என்று இங்கே அழைக்க.. ரதி என்று செல்ல பெயரோடு அவன் அழைத்தது அவளை உரிமையாய் கைப்பற்றி நின்ற விதமும் லோகநாதனை சம்மதமாய் தலை அசைக்க வைத்தது.
ஏற்கனவே மகள் இன்னொரு சித்தாரா இந்த குடும்பத்திற்கு வேணாம் என்று கூறி இருக்க கண்டிப்பாக தென்னரசுவை அவளுக்கு திருமணம் செய்து வைக்க அவர் முயல மாட்டார்.
‘அப்போ என் பெண்ணின் கதி? கல்யாணம் வரை வந்து நின்று போனால் என்ன பேசுவார்கள்?’ என்று தவித்து இருந்தவரின் தாகத்துக்கு தண்ணீராய் மாறிய கதிர்காமன் அவருக்கு தெய்வமாய் தெரிந்தான்.
அவர் பொண்ணு கிட்ட இவன் செய்த லீலை எல்லாம் தெரிந்தா அவனை தெய்வமாக்கி இருப்பாரு..!!
லோகநாதன் சம்மதம் வேண்டி தந்தையை பார்க்க.. வீரராகவனுக்கு மறுப்பில்லை. இரண்டுமே அவரது மகன் வழி பேத்திகள். செல்லப் போவதும் ஒரே குடும்பத்தில் தான். அதேபோல மூத்தவளே மூத்தவனுக்கும்.. இளையவளை இளையவனுக்கும் கொடுப்பது தவறு ஒன்றும் இல்லை என்று அவரும் தலையசைக்க..
அப்புறம் என்ன? ஒரு கல்யாணத்திற்கு வந்திருந்தவர்கள் இரண்டு கல்யாணத்தையும் அடுத்தடுத்து பார்த்து ஆனந்தம் கொண்டு ஆசீர்வாதங்களை அள்ளித் தெளித்து சென்றனர்..!
இதில் அதிர்ச்சியில் இருந்தது ரெண்டே ஜீவன்கள்..! ஒன்று ராகவ் நேற்று அவன் எதார்த்தமாக சொன்ன வார்த்தை பலித்து விட “எப்பற்ரா??!!” என்பது போல சுற்றிக் கொண்டிருந்தான்.
அடுத்து மஹிமா..!
‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும்’ என்பது போல என்ன நடந்தது? நிச்சயதார்த்தம் ஓலை அக்காவுக்கும் அரசு மாமாவுக்கும் வாசிச்சாங்க.. விருந்து நடந்துச்சு.. ரூமுக்கு போனோம்.. படுத்து தூங்கினோம்.. காலையில விழிச்சா.. இது என்னடா எனக்கு கல்யாணம்னு சொல்றீங்க? அதுவும் தென்னரசு மாமா கூட சொல்றீங்க? என்று குழம்பியவளுக்கு விடை தான் கிடைத்த பாடில்லை..!
அனைவரும் அரக்கப்பறக்க ஓடிக் கொண்டிருந்தார்கள். காரணம் ஒரு திருமணம் இரண்டு திருமணமாய் நடக்க இருக்க.. தென்னரசு திருமணத்திற்கு வாங்கியது போல விடியற்காலையிலேயே அவர்கள் எப்போதும் நகை வாங்கும் அதே நகைக்கடைக்காரரை எழுப்பி மற்றொரு தாலியை வாங்கி வந்து ரத்னவேலும் பார்கவியும் தங்கள் குலதெய்வ கோவிலில் வைத்து ஆசீர்வாதம் பண்ணி எடுத்து வர.. இங்கு அனைத்தும் தயாராக இருக்க முதலில் கதிர்காமன் ரதி சிற்பிகாவுக்கு திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
“ஒரே மேடையில ரெண்டு கல்யாணம் பண்ணா.. ஒன்னு வாழும்..! இன்னொன்னு வீழும்..!" என்று அங்கிருந்த பெருசில் ஏதோ ஒரு பெருசு தீயை கொளுத்தி போட அது வதந்தியாய் பரவ..
அதில் பயந்து போன பைரவி “நாம குலதெய்வ கோயில்ல வைச்சு அரசுக்கு கல்யாணம் பண்ணிடுவோமே..!” என்றார்.
சொந்த பந்தங்களை உறவுகளை காரிலும் பஸ்ஸிலும் அள்ளி போட்டுக்கொண்டு அவர்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று அங்கே திருமணத்தை முடித்து அதன் பின்னே இங்கே விருந்துக்காக அழைத்து வந்தனர்.
தென்னரசுக்கு இப்பொழுது மனதில் ஒரு நிம்மதி..!
இனி அவனது ஆழாக்கு அவனை விட்டு எப்பொழுதும் விலகிச் செல்ல மாட்டாள் என்ற எண்ணமே அவனுக்கு பெரும் நிம்மதியை தர, அதன் பின் தான் அவள் மீது அவன் வைத்திருந்த அந்த காதலையும் நேசத்தையும் புரிந்துக் கொண்டான்.
தக்க சமயத்தில் அதை உணர்ந்து இந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்திய ரதி அவனுக்கு தெய்வமாக தெரிந்தாள் என்றால்..
தன் மனதில் இருந்ததை அவன் வாங்கிய ஒரு செயின் மூலம் சுட்டிக்காட்டிய அண்ணன் தெய்வத்துக்கு எல்லாம் தெய்வமாக தெரிந்தான்..!
ஆனால்.. இந்தக் கதிர்காமானின் கள்ளத்தனம் தெரிந்தால்?
அட பார்த்துக்கலாம் விடுங்க..!
முதலிரவு அறைக்குள் நுழைந்தான் கதிர்காமன். அவ்வறையோ வெகு அமைதி..!
புதிய வாழ்க்கை துவங்கும் தருணத்துக்கு முன்னால் வரும் அந்த கனமான அமைதி..!
அந்த அறைக்குள் உள்ள
இரண்டு பேரும் தங்களோட சுவாச சத்தத்தையே கேட்கும் அளவுக்கு அமைதியாய் இருந்தது..!
கதிர்காமன் கண்களை சுழற்றி அவளை தேட, ரதி ஜன்னல் வழியே தெரிந்தவற்றை வெறித்துக் கொண்டிருந்தாள். கதிர்காமன் சிரித்துக்கொண்டான்.
“இவ ஜன்னல் வெளியே என்ன பார்க்கிறா?” மெல்ல கதவை தாழிட்டு அவளை நெருங்கினான்.
சாட்டின் இரவு உடையில் அவளது உடல் வனப்புகள் நெளிவுகள் அவனை கிறக்கமுற செய்ய "நாம சும்மா இருந்தாலும் இவ நம்மை சும்மா இருக்க விட மாட்டா போலயே.. டெம்ட் பண்றாளே!!" என்று நெற்றியை நீவிக் கொண்டு பார்வையை திருப்பிக் கொண்டவனால் வெகுநேரம் தாக்கு பிடிக்க முடியாமல் மீண்டும் விழிகளைத் திருப்பி அவளை தான் பார்த்தான்.
'ஆமாம் நான் ஏன் தயங்குறேன்? இனி அவள் என் மனைவி என்ற உரிமை இருக்கிறது தானே' என்று பின்புறம் இருந்து அவளை இறுக்கமாக அணைக்க.. முதலில் அந்த அணைப்பில் குழைந்தவள், அடுத்த நொடி அவனை தள்ளிவிட்டு திரும்பி பால்கனி நோக்கிச் சென்றாள்.
சட்டென்று அவள் கையை பிடித்து இழுக்க அவன் உடலோடு உடல் ஒட்டி நின்றாள். அவ்வளவு நெருக்கத்தில் அவனைப் பார்த்தவளுக்கு நடுக்கம் இன்னும் இன்னும் கூடவே செய்தது. அவளை மெல்ல தூக்கி கட்டிலில் அமர வைத்தான்..!
அவள் கட்டிலின் ஓரத்தில் தயக்கத்தோடு அமர்ந்திருந்தாள்.
அவள் தளிர் விரல்கள்
அவளுக்கே தெரியாமல் மெதுவா அவள் உடையின் ஓரத்தைச் சுருட்டிக்கிட்டிருந்தது..!
அவன் அவளை கவனித்தான். அவளது மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தது என்று காமனுக்கு நன்றாக புரிந்தது.
அவன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து
ஒரு சின்ன பெட்டியை எடுத்தான்.
அது பெரிய பரிசு பெட்டி இல்லை.
அதுக்குரிய ரிப்பன் இல்லை.
ஆனா அவன் கையில் இருந்த விதம்,
அது சாதாரணமான ஒன்றில்லை என்று அவளுக்கு கட்டியம் கூறியது..!
அதை அவள் முன்னால் நீட்டினான்..
“இது…” அவள் மெதுவா பேச ஆரம்பித்தவள் பேசவில்லை.
அவன் முகத்தில் குறுநகை..!
“முதல் கிஃப்ட்..!”
அவன் மெதுவா அவள் முன்னால் மடங்கினான். அவளது கண்கள் திடுக்கிட்டு விரிந்தது.
அவன் போல ஒருத்தன்.. திமிராகவும் நிமிர்வாகவும் இருப்பவன்..
தன் ஆளுமையால் எப்பவும் மேலிருந்து மற்றவர்களை கீழாக பார்ப்பவன்.. இப்படி அவள் முன்னால் மடங்குவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.
அவன் அந்த பரிசு பெட்டியை திறந்தான்.
உள்ளே தங்கத்தினாலான மெட்டிகள் மின்னின. அலங்காரம் அதிகம் இல்லை. ஆனா அவ் எளிமையே ஒரு உறுதியான உரிமையை எடுத்துக் கூறியது.
மெல்ல அவன் அவள் காலைக் கையில் பற்றினான்.
அந்த தொடுதல்.. அவளை திடுக்கிட வைக்கவில்லை..! மாறாக,
“நான் எப்போதும் உனக்கானவன்” என்று சொல்லும் உரிமை கூறியது.
மெதுவா.. அவள் விரல்களில் ஏற்கனவே இருந்து வெள்ளி மெட்டியை நீக்கிவிட்டு,
இந்த மெட்டியை அணிவித்தான்.
“ரிங்.. வேற ஜீவல்ஸ் யார் வேணாலும் கிப்ட் பண்ணலாம் ரதி.. ஆனா..” என்றவன் அவள் முகத்தைப் ஆழந்துப் பார்த்தான்.
“ஆனா இது.. நான் மட்டுமே கொடுக்கக்கூடிய உரிமையான கிஃப்ட். நாம் சேர்ந்து நடக்க போகும் இல்லற பாதைக்கான ஆரம்பம்..!” என்றவன் அவள் காலில் அழுத்தமாக முத்தம் வைத்தான்.
அம்முத்தத்தில் அவள் உடல் சிலிர்த்தது சிணுங்கியது. இப்படி எல்லாம் இவனுக்கு பேச தெரியுமா என்று அதிர்ச்சியாக பார்த்தாள்..!
மெல்ல குனிந்து கீழே பார்த்தாள்.
அந்த தங்க மெட்டி, அவளோட காலில் அவர்களின் பந்தத்திற்கு புதிய அடையாளாய்..!
“இது கட்டுப்பாடு இல்ல ரதிமா..”
அவன் குரல் சற்று தாழ்ந்தது. “நீ விரும்பி என்னோட நடக்கறதுக்கு
ஒரு சின்ன சின்னம்.” என்று குழைந்து வந்தது அவன் குரல்
அவள் கன்னத்தருகே..!
முதல் முறையா அவனோட குரல் மென்மையா வந்தது..!
அவள் மெதுவா தலையை உயர்த்தி அவனைப் பார்த்தாள். இப்போது அவள் கண்களில் தயக்கம் இல்லை.. அவன் மீதான கோபம் இல்லை..!
ஒரு புது வித நம்பிக்கை மட்டும்.
அந்த நிமிஷம் அவள் உணர்ந்தாள்,
இருவரின் தம்பத்தியத்தின் முதல் அடி.. அந்த அடியில்,
அவன் இருந்தான்..!
சட்டென அவள் உதட்டில் தன் உதட்டை உறவாட இவன் முனைய... அவளோ முகத்தை திருப்பி முத்தத்தை தவிர்க்க "என்னை தவிர்க்க முடியாது ரதி பேபி..!!" என்றவனின் மயக்கும் குரலில் அவள் திரும்ப, இப்போது வாகாக உறவாடியது உதடுகள் இரண்டும்.
அவனுக்குள் ஜில்லென ஒரு குளிர்ச்சியான உணர்ச்சி பரவ.. அவளை இன்னும் இறுக்கி நெருக்கமாக்கினான் அவளுக்கு.
இருவர் உதடுகளும் பொருந்திக் கொள்ள.. கண்கள் இரண்டும் ஒன்றோடொன்று பிணைந்துக் கொள்ள.. இருவர் இதயமும் அடுத்தவர் நெஞ்சினில் பலமாய் துடிக்க.. கைகள் இரண்டும் பெண்ணவளை இறுக்கி தழுவ..
அவளது கைகளை தன்னை சுற்றி படர விட்டுக் கொண்டவன், அவளது அழகிய இதழ்களை அவன் உதட்டருகில் கொண்டு வந்தவன், மெல்ல முணுமுணுத்தான்
"லவ் யூ ரதி.." என்று!!
அதற்கு பின்னான முத்தாடல்களுக்கும்..
உடலாடல்களுக்கும்.. பொறுப்பு துறப்பானது இருவருக்கும்.
"கதிர்.. கதிர்.." என்று கிறக்கமும் மயக்கமுமாக அவளது சிணுங்கலும் முனகலும் இடை விடாமல் அவன் செவிகளை அறைந்துக் கொண்டே இருந்தது அவ்விரவில்..
ரதியிடம் இருந்த தயக்கம்.. கூச்சம்.. நடுக்கம்.. பயம் எல்லாம் முற்றிலுமாக அவளை விட்டு நீக்கினான் தன் உதடுகளை கொண்டும்.. விரல்களை கொண்டும்..!
மெல்லினமாக ஆரம்பித்தவன் இடையிடையே வல்லினத்தை தத்தெடுத்து முழுவதுமாக வன்மைக்கு மாறினான்.
அவனது இத்தனை நாள் அவள் மீதான தாபம் மோகம் எல்லாம் சுனாமியாய் பொங்கி அவளை வாரி சுருட்டிக் கொள்ள.. அவனின் மோகநதியில் பயணித்தவள் சட்டென்று பிரிந்து எழுந்து அமர, மிட்டாய் பிடுங்கிய பிள்ளையாய் மிரண்டு விழித்து கோபங்கொண்டான் காமன்.
"ம்ப்ச்.. இப்போ என்னடி" என்று முற்றிலுமாக தாபம் வடியாத குரலில் அவன் கேட்க..
"அது.. அது.. வந்து.."
"என்ன வந்து போய்னு.. முதல்ல இப்போ வா.. வா டி!!" என்று அவன் அணைக்க முயல, குனிந்து நழுவி தப்பித்து ஒரு ஓரமாய் நின்றாள் ஏதோ வில்லனிடமிருந்து தப்பிக்கும் நாயகி போல..
உச்சியில் விர்ரென்று ஏறிய தாபம் இறங்க மறுக்க.. தன்னை மறுத்து போகும் பெண் மீது ஆணவனுக்கு ஈகோ சுள்லென்று ஏறியது உச்சிக்கு இப்போது.
கண்கள் இடுங்க அவளை பார்த்தவன், "அப்போ என் மேல உனக்கு காதல் இல்லை.. என் கையால எதுக்கு தாலி வாங்குன? என் கையில் எதுக்கு உருகி வழிஞ்ச? திகட்ட திகட்ட என் கிட்ட முத்தம் வாங்குனவ மொத்தமும் கொடுக்க முடியல.. ஏன்? ஏன்டி?" என்று அவன் கோபங்கொண்டு கத்த..
அதுவரை அமைதியாக இருந்தவள், "யோவ்.. மும்பை வடாபாவ் வாயை மூடு யா.. யாருக்கு.. யாருக்கு காதல் இல்லை? எனக்கா? உனக்கா?" என்று சிலிர்த்துக் கொண்டு நிமிர்ந்து நிற்கும் மனைவியை பார்த்தவன், "வடா பாவ்ஆ!!" என்று திகைத்தான்.
“அன்னைக்கு உங்ககிட்ட என்னை முதன்முதலா கொடுத்த போது அத்தனை காதலோடு தான் கொடுத்தேன். ஆனா நீ என்ன பண்ணுன? என்னை அதற்குப் பின்னும் டெய்லி இதே மாதிரி இருக்கலாமான்னு சொல்லி அந்த உறவை கொச்சைப்படுத்தின..” என்றதும்,
‘இவள் தன் மீது காதல் கொண்டாளா?’ என்று அந்த வார்த்தையிலே உறைந்து நின்றவன் “நிஜமா ரதி?” என்று அவளிடம் செல்ல முனைய.. அவளோ அவனை தடுத்து தள்ளி நின்று அவனை நெருங்க விடவில்லை.
“நீ எல்லாம் எனக்கு ஒரு ஆளா?” என்பது போல அவளை தொடையோடு தூக்கி தன் தோள் மீது போட்டுக் கொண்டவன் மஞ்சத்தில் கிடத்தி அவளை தன் வசமாக்கி அதன் பின்னேதான்,
அவள் மறைந்த அந்த ஆறு மாத காலமாக அவன் பட்ட பாட்டையும் அவளை தேடி அலைந்ததையும் அவள் மீது கொண்ட நேசத்தை உணர்ந்ததையும்.. இந்த ரதி இல்லாத காமன் தேவதாசாய் சுற்றி அலைந்ததையும்...
கூறக் கூற விழிவிரிய பார்த்திருந்தவளை நோக்கி “ஐ லவ் யூ ரதி..!” என்றவன் அதன் பின் அவளை ஆட்கொண்டான்
அவள் கண்களில் கண்ட காதலில் கட்டுண்டு..!
தொடரும்..
