36
மொத்த குடும்பமும் ஒருத்தனை சுற்றி வளைத்து நின்று கண்களாலேயே பொசுக்கிக் கொண்டு இருந்தார்கள்.
‘என்னடா தென்னரசுக்கு வந்த சோதனை.!’ என்று கதிர்காமனும் அதிர்ச்சியோடு பார்த்தான்..
பின் அது ஆனந்த அதிர்ச்சியாகி அங்கே நடப்பவற்றை பார்த்து இருந்தான்.
எப்படிடா இந்த கல்யாணத்தை நிறுத்துவது என்று யோசித்து யோசித்து மண்டை காய்ந்தவனுக்கு, அதுவும் இரண்டு குடும்பத்திலும் எந்த பிரச்சனையும் இல்லாமல்.. யார் மனசும் நோகாமல்.. ரதியின் திருமணத்தை நிறுத்தி அவளை எப்படி தன்னவள் ஆக்குவது என்று கிரிமினல் லாயர் கிரிமினலை விட கீழே இறங்கி யோசித்தும் ஒரு வழியும் புலப்படாமல் இருக்க..
இப்போ பழம் நழுவி பாலில் விழுந்தது போல இருந்தது வைரவேலுவின் பேச்சு.
ஆனாலும் தம்பியின் மீது குற்றமில்லை என்று அறிந்தவன் “மொதல்ல எல்லாரும் பேச்சை நிப்பாட்டுங்க..! இப்படி ஒருத்தனை சுத்தி எல்லாரும் நின்னு பேசிட்டு இருந்தா எப்படி? ஃபர்ஸ்ட் என்ன நடந்ததுனு தெளிவாக ஒரு ஆள் சொல்லுங்க?” என்றவன் பார்வை மறுந்தும் கூட ரதியின் பக்கம் திரும்பவில்லை..!
நல்லவனமாம்..!!
ஒரு பக்கம் சுலோச்சனா விடாமல் அழுதுக் கொண்டிருக்க.. பார்கவியின் பைரவியும் அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க.. இங்கே லோகநாதனுக்கு அடுத்து என்ன செய்வது என்றே தெரியாத அதிர்ச்சி நிலை.. முகத்தில் ஜீவன் இல்லாமல் அமர்ந்திருந்தார்.
இத்தனைக்கும் காரணமான மஹிமா அவ்விடத்திலேயே இல்லை ராகவ்வும் உறங்கச் சென்று இருந்தான்.
அடிக்கப் பாய்ந்த வைரவேலைப் பிடித்துக் கொண்ட கதிர்காமன் “சித்தப்பா ஃபர்ஸ்ட் கொஞ்சம் அமைதியா இருங்க.. என்ன நடந்ததுனு தெளிவாக சொல்லுங்க? சும்மா நீங்க பாட்டுக்கு அரசுவை தப்பு சொல்லாதீங்க..! நீங்க வளர்த்த புள்ள தப்பு செய்வானானு ஒரு நிமிஷம் நிதானிங்க” என்றான்.
ஆனாலும் கோபம் குறையாமல் மகனை முறைத்துக் கொண்டு தள்ளி அமர்ந்தார். ஆனால் அவர் முகத்தில் இருந்து இப்பொழுது வாய் திறக்க மாட்டார் என்று என்பதை புரிந்த கதிர்காமன் “நீங்க சொல்லுங்க பா” என்று அப்பாவிடம் தாவினான்.
“நான் சொல்றேன் கதிரு” என்று ஆரம்பித்தார் லோகநாதன்.
“விருந்து முடிஞ்சு வந்து நாங்க எல்லாம் படுக்க ஆயத்தமாயிட்டு இருக்கும்போது நாங்க இருந்த ரூம் கதவைத் தட்டி சிற்பி உள்ள வந்துச்சு.. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் தாத்தாவையும் கூட்டிட்டு வாங்கன்னு சொன்னா.. சரினு அப்பாவையும் அழைச்சிட்டு வந்தா.. நாளைக்கு நடக்க போற கல்யாணத்துல எனக்கு இஷ்டம் இல்லைனு ஒரே போடா போடுறா.. எங்களுக்கெல்லாம் அப்படியே ஷாக் ஆயிடுச்சு..!” என்றதும் ஆனந்த அதிர்ச்சியோடு ரதியை அவன் பார்க்க.. அவளோ கோர்த்து இருந்த கையை பார்த்தவாறு அமர்ந்து இருந்தாள்.
“என்ன சிற்பி சொல்ற? திடீர்னு வந்து இப்படி சொன்னின்னா என்ன அர்த்தம்? உன்னை கேட்டு தானே கல்யாணத்துக்கு ஏற்பாடு எல்லாம் பண்ணுனோம்? எல்லாத்துக்கும் சம்மதம் சொன்ன தானே? இதோ ஒரு நாளைக்கு கல்யாணம் நேரத்துல இப்ப திடீர்னு இஷ்டம் இல்லன்னு சொல்ற?” என்று சுலோச்சனா தான் பெரும் வருத்தத்தோடு ரதியிடம் கேட்டார்.
கல்யாண மாப்பிள்ளை பிறத்தி கிடையாது. அவரின் தம்பி. கூடவே மகள் போல் நினைக்கும் இவளையும் வற்புறுத்தி திருமணத்திற்கு வைத்து ஒத்துக் கொள்ள வைக்க முடியாது.. நாளை இவர்களுக்குள் ஏதாவது பிரச்சனை வந்தால்?? என்னெல்லாமோ சுலோச்சனாவின் எண்ணங்கள் ஓட அதில் எதிலுமே மஹிமா என்ற ஒருத்தி இல்லவே இல்லை..!
சற்று நேரம் மூச்சு இழுத்து விட்ட ரதி “நீங்க மஹிமா கிட்ட என்ன சொன்னீங்க?” என்றதும் இப்பொழுது வீரராகவன் மற்றும் லோகநாதனின் பார்வை சுலோச்சனாவை எரித்தது.
“அம்மாடி சிற்பி.. நான் ஒன்னும் தப்பா சொல்லல.. மாமானு எப்பொழுதுமே மஹி அரசு கிட்ட உரிமையா பேசுவா பழகுவா.. நாளைக்கு அவனுக்கு கல்யாணம் நடந்தா இதுபோலெல்லாம் இருக்கக் கூடாதுனு கொஞ்சம் அறிவுரை தான்டா சொன்னேன் தவிர.. வேற ஏதும் உன்னை பத்தி நான் தப்பா சொல்லல டா” என்றார் பரிதவிப்பாய்.
அவளும் தலையசைத்து “நீங்க தப்பா சொன்னீங்கனு நான் சொல்லவே இல்லையே..!” என்றதும் தான் சுலோச்சனாவுக்கு மனம் நிம்மதி அடைந்தது.
“என்னம்மா உன் பிரச்சனை கல்யாணம் பிடிக்கவில்லைங்குற? சுலோச்சனா உன்னை பத்தி தப்பா பேசலங்குற? பின்ன என்னதான் காரணம்? ஏன் இந்த கல்யாணம் வேணாம் உனக்கு?” என்று வீரராகவன் சற்று அதட்டலாக கேட்க..
“காரணம் மஹிமா தான்..!” என்றதும் இப்போதும் அனைவரும் திடுக்கிட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும்.. ஆண்களின் பார்வை சுலோச்சனாவை தான் குத்தியது.
“என்ன பொண்ண வளர்த்து வச்சிருக்குற நீ.!” என்று..!
அது என்னவோ இந்த அப்பாமார்கள் தான் பெண்களுக்கு அதிக செல்லத்தை கொடுத்து கெடுத்து வைப்பது..! அம்மாக்கள் திட்டினாலும் அப்படி தாங்குவது.. கடைசியில் அவள் ஒரு பிழை செய்து விட்டாள் என்றால்.. ‘என்ன பொண்ணு வளர்த்து வெச்சிருக்க நீ?’ என்று குற்றம் சாட்டுவதும் அவர்களாக தான் இருப்பார்கள்.
என்னங்டா உலகநியாயம் இது..!
“மஹியா? மஹி என்ன பண்ணினா? ஒருவேளை.. மஹிமா அரசுவை லவ் பண்றாளா?” என்று குரல் நடுங்க கேட்டார் சுலோச்சனா.
“இல்ல..! அதுக்கு மேல..! அவர் மேல அத்தனை பாசத்தையும் உரிமையையும் வச்சிருக்கா” என்றதும் தான் அவர்களுக்கு எல்லாம் ரயிலை விட வேகமாக துடித்துக் கொண்டிருந்த இதயம் நிதானப்பட்டது.
“அது ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்து ஒண்ணா வளர்ந்ததினால அப்படி இருக்கும். இதுக்கு போய் நீ கல்யாணம் வேணாம்னு சொல்லுவியா?” என்று மீண்டும் வீட்டுக்கு பெரியவராய் அதட்டல் போட்டார் வீரராகவன்.
“உங்களுக்கு தான் புரியல தாத்தா..! சின்ன வயசுல இருந்து மஹிமா மனசுல தென்னரசு மாமா மேல அளவு கடந்த அன்பும் பாசமும் இருக்கு. அது நேசமா மாறினது அவளுக்கு தெரியவே இல்லை..! இன்னைக்கு காலைல இருந்து அவ என்கிட்ட பேசுனது வச்சு சொல்றேன். கண்டிப்பா நீங்க வேற யாரையாவது அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்கன்னா.. அவரோட எல்லாம் சந்தோஷமா இருக்க முடியாது அவளால..! கூடவே அந்த மாப்பிள்ளை கிட்டயும் தென்னரசு மாமா கிட்ட உள்ள குணத்தை தான் அவ தேடுவா?” என்று நிதர்சனத்தை ரதி உரைக்க..
அனைவரும் இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்க்காமல் சமைந்து நின்றனர்.
“ஒருவேளை நீங்க ஏற்படுத்தி கொடுக்கிற வாழ்க்கை அவளுக்கு மனசுக்கு புடிக்காம போயிருச்சுனா.. ஒன்னு அவ தன் வாழ்க்கையை அழிச்சுக்குவா..! இல்லன்னா..” என்று அமைதி காத்தவள்,
எல்லாரையும் ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்து “என் வாழ்க்கையில நுழைஞ்சிடுவா” என்றதும் அனைவரும் திடுக்கிட்டனர்.
உடனே சுலோச்சனா பதறி ரதியின் கைகளைப் பற்றி “அப்படியெல்லாம் மஹி செய்ய மாட்டாடா.. அவ ரொம்ப நல்ல பொண்ணு” என்றார்.
“நானும் அவளை தப்பானவனு சொல்லல..! ஆனா காலம் யாரை எப்படி மாத்தும் சொல்ல முடியாது. தனக்கு புடிச்ச, தான் எதிர்பார்த்த வாழ்க்கை தனக்கு கிடைக்கல என்கிற விரக்தில அவ மனசு என்ன வேணாலும் பண்ணும். அதுக்கு ஏன் நம்ம இடம் கொடுக்கணும்னு தான் கேட்கிறேன்?” என்றவள் மெதுவாக அவர்களை எல்லாம் பார்த்து,
“இந்த குடும்பத்துக்கு ஒரு சித்தாரா போதும்..! இன்னொரு சித்தாரா வேணாம்..!” என்றாள் அழுத்தம் திருத்தமாக..!
அந்த வார்த்தையில் ஆடி போய் தொப்பென்று தந்தையின் அருகில் அமர்ந்த லோகநாதனின் கண்களோ கண்ணீரோடு தந்தையை குற்றம் சாட்டியது.
ரதியின் கையை பற்றி இருந்த சுலோச்சானவின் கைகள் நடுங்க ஆரம்பிக்க.. அவர் கையை இழுத்து பிடித்துக் கொண்டவள்,
“இதில் உங்க தப்பு எதுவும் இல்லை. நானே தானே முழு மனசா விட்டுக் கொடுக்கிறேன். என்ன இருந்தாலும் அவ என் தங்கச்சி இல்லையா? அதனால நீங்க ரத்னவேல் தாத்தாவை வர சொல்லி இப்பவே பேசிடுங்க..!” என்றாள்.
மஹிமா அவளிடம் பேசிய காரணங்கள் மட்டும் கிடையாது. அன்று இரவு தென்னரசுவின் அந்த உரிமையான செயலும் தான் ரதி இந்த முடிவெடுக்க காரணம்..!
‘ரெண்டு பேருக்கும் ஒருத்தர் மேல ஒருத்தருக்கு அத்தனை அன்பும் பாசமும் இருக்கு. அது நேசமும் உரிமையா இருக்கிறதை அவங்க புரிஞ்சுக்கல.!’ என்று ரதிக்கு நன்றாக புரிந்தது.
அதன்பின் சுலோச்சனா தன் தந்தைக்கு அழைத்து “அப்பா உடனடியாக அம்மா சித்தி சித்தப்பாவை கூட்டிட்டு இங்க வாங்க” என பதற்றத்தோடு கூற அவர்களும் பதறி அடித்துக் கொண்டு வர, விஷயம் என்னவென்று சொல்லப்பட்டதும், மகன்தான் இதற்கு காரணம் என்று வைரவேல் பொங்கிவிட்டார்.
லோகநாதன் அனைத்தும் கூறி முடித்ததும் தான் தென்னரசு மனதில் ஒரு ஆசுவாசம்..!
ரத்னவேலு “கண்டிப்பாக இந்த கல்யாணத்தை நிறுத்தி தென்னரசுவை மஹிமாவோடு கல்யாணம் பண்ணி வைக்க முடியாது. சிற்பி சுலோ மகளா இல்லைனாலும் எங்களுக்கு பேத்தி தான். நாளைக்கு இந்த ஊர் என்ன பேசும் தெரியுமா? மூத்ததாரத்து மகளை கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்துட்டு.. கடைசியா அவங்க சொந்த பேத்தியையே கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்கன்னு பேசும்.. தூற்றும்..!” என்று அவர் ஊர் நியாயத்தை பேச…
காதல் நியாயத்தை யார் பேசுவது?
வேற யார் கதிர்காமன் தான்..!
இதைவிட வேற நல்ல சந்தர்ப்
பம் வாய்க்குமா? யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் அழகாக சூழ்நிலையை தன் கையில் எடுத்துக்கொண்டு அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தாவிட்டால் அவன் எல்லாம் என்ன வக்கீல்?
தொடரும்..
