அத்தியாயம் 7
ஹாஸ்பிடலுக்குள் சிறு பதட்டத்துடன் உள்ளே நுழைந்தார் ப்ரணவ்.. மகாலெட்சுமி போன் செய்து, சயந்தனின் நடவடிக்கையை ஒன்று விடாமல் சொல்லிவிட, சற்று அதிர்ந்து தான் போனார்..
“அவனா இப்படி?..” என்ற எண்ணம் அவருக்கு வராமல் இல்லை.. சிறு வயதில் இருந்தே அவர் பார்த்து வளர்ந்த பையன் தான் சயந்தன்..
சிறு வயதிலேயே போலீஸ் யூனிபார்ம் மேல் அப்படியொரு க்ரஷ் அவனுக்கு.. ப்ரணவ்வின் ஆடையை அடிக்கடி மாற்றிக் கொண்டு சுற்றுவான்… அவனுடைய முதல் காதலி யார் என்று கேட்டால், தயங்காமல் சொல்வான் அவன் பார்க்கும் வேலை தான்..
அதற்கடுத்த நிலையில் தான் யாதிரா நின்றாள்..
யாதிராவிற்கு அடிபட்டிருக்கிறது? என்றவுடனே புறப்பட்டு வந்து விட்டார் ப்ரணவ்..
அவர் உள்ளே நுழையும் போது சட்டென்று ஒரு பெண்ணின் மீது மோதி விட்டார்..
“பார்த்து போங்க..” என்றவரின் பேச்சை அந்தப் பெண் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் விறுவிறுவென வெளியேறி ஓடிச் சென்றது..
கண்களில் கண்ணீருடன் ஓடிய பெண்ணைக் கண்டு சற்று இரக்கம் தான் வந்தது..
ஹாஸ்பிடலில் ஒருவர் அழுகிறார் என்றால் என்ன சொல்வது?.. அவருக்கு வேண்டப்பட்டவர்கள் உயிருக்குப் போராடுகிறார் என்று தானே அர்த்தம்.. அதை நினைத்துக் கொண்டே வரவேற்பறைக்குச் சென்றார்..
அப்பொழுது தான் போன் பேசுவதற்காக சந்தோஷ் வெளியே வந்தார்..
“ப்ரணவ்?..” என்றழைத்ததும் தான் தாமதம் வேகமாக சந்தோஷை நோக்கி நடைபோட்டார் அவர்..
“யாது பாப்பா.. எப்படி இருக்கா?.. உண்மையாவே அவன் தான் அடிச்சானா?” என்றார் ப்ரணவ் சற்று சந்தேகக்குரலில்..
யாதிராவின் மேல் தூசு பட்டாலே இவன் துடிப்பான், அவனா அவளை அடித்தது என சந்தேகம் தான் வந்தது..
“என்ன சொல்லுறது?.. அவனுக்குத் தான் கோபம் வந்தா, முன்னாடி யாரு நிற்கிறாங்கன்னே பார்க்க மாட்டானே.. நெத்தியில நல்லா அடிச்சிருக்கான் போல.. நாலு தையல் போட்டுட்டு இருக்காங்க.. வலிக்குது.. தாங்க முடியலைன்னு அழுவுறா.. அவ அழுகிறதைப் பார்த்து, லெட்சுமியும்.. அஞ்சலியும் அழுதுக்கிட்டு இருக்காங்க..” என சொல்லி முடித்த சந்தோஷிற்குமே கண்கள் கலங்கியது.
வீட்டிற்கே ஒற்றைப் பெண்.. ஆசையாக வளர்த்தனர் யாதிராவை.. ஈஸ்வர் குரூப்ஸ் கம்பெனியின் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் தலைமுறை அவள் தான்..
சயந்தன் ஆரம்பத்தில் இருந்தே தன் முடிவை சொல்லிவிட்டான்.. தொழிலுக்கு நான் வரவே மாட்டேன் என்று.. அடுத்ததாக அவர்களின் பார்வை பதிந்தது என்னவோ யாதிராவின் மீது தான்..
“சரி சந்தோஷ், கவலைப்படாதே.. சிக்கீரம் எல்லாமே சரியாயிடும்..” என்றவரின் கைப்பிடித்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்த தருணம், வரவேற்பறையில் கண்ணீருடன் அமர்ந்திருந்தாள் மீண்டும் அந்தப் பெண்..
அந்தப் பெண் தானே தன்னை இடித்துக் கொண்டு வெளியே சென்றது என சட்டென்று ஞாபகத்திற்கு வந்தது..
அவளின் கண்ணீர் சிந்திய கண்களை பார்க்கவே ஒரு வித பாவமாக இருந்தது அவருக்கு..
“என்ன பிரச்சினையாக இருக்கும்.. கணவருக்கு முடியாமல் சேர்த்திருக்கிறார்களாே?.” என அந்தப் பெண்ணின் வயதை நினைத்து ப்ரணவ்வே ஒன்றை யூகித்துக் கொண்டார்..
கிட்டத்தட்ட 40 வயதிற்குள் தான் இருக்கும் என்பது அவரின் அனுமானம்.. அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்த ப்ரணவ்வீன் செவிகளில்,
“யாதிராஆஆஆ வந்துட்டா..” என்ற சந்தோஷ் குரலில் ப்ரணவ்வின் கவனம் யாதிராவின் புறம் திரும்பியது..
“இப்போ வலி எப்படி டா இருக்கு?..” என்ற சந்தோஷை பார்த்து, ம்ம் எனும் விதமாய் தலையை மட்டும் ஆட்டினாள் யாதிரா..
ஆனால் அவள் பார்வையோ ஹாஸ்பிட்டலை தான் வட்டமடித்தது..
நிச்சயமாக அவன் இங்கு தானிருக்கிறான் என்பதை அவள் உள்ளூணர்வு உறுத்திட, அவளின் இம்சை நாயகன் அங்கு தான் இருந்தான்..
வரவேற்பறையில் அமர்ந்திருந்து ப்ரீ ஃபயர் விளையாடிக் கொண்டிருந்தான்..
அவள் அவனைப் பார்த்த அந்தக் கணமே, விளையாடுவதை நிறுத்தி விட்டு அவனும் எழுந்துப் பார்த்தான் அவளை..
விக்கித்துப் போனாள் யாதிரா..
அவன் தன்னைப் பார்ப்பான் என்பதை அவள் உணரவேயில்லை.. திருதிருவென விழிக்கும் தன் பார்வையை, அவனிடமிருந்து மறைக்க முடியாமல் போராடினாள்..
“போகலாமா?..” என்றார் சந்தோஷ்..
அவனைப் பார்த்த பயத்தில் அப்படியே மயங்கிச் சரிந்தாள் யாதிரா..
அவள் மயங்கவும் அங்கிருந்த தாதி ஒருவர், படுக்கையில் கிடத்தி அவளுக்கு குளூக்கோஸை ஏற்றிவிட்டு சென்று விட்டார்..
உடலில் பலம் இல்லாமல் மயங்கி இருக்கிறாள் என அனைவரும் நினைத்துக் கொண்டனர்.
யாதிராவைப் பார்த்துக் கொண்டே திரும்பிய ப்ரணவ்வின் பார்வையோ மறுபடியும் அந்தப் பெண் மேல் தான் படிந்தது..
“மிஸ்சஸ்..சந்தனமல்லி..” என்ற குரலில் விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள் சந்தனமல்லி..
அவளின் பார்வை வட்டத்துக்குள் ப்ரணவ் விழுந்தாலும், அதைக் கண்டுக் கொள்ளும் அவனுக்கில்லை..
அழுதழுது இமைகள் வீங்கிய கண்களை துடைத்துக் கொண்டே நிமிர்ந்தவள், தன்னை அழைத்த தாதியின் அருகில் ஓடினாள்..
“பீஸ் கட்டியாச்சா?..” என்றவரைக் கண்டு, கண்கள் கலங்க இல்லை எனும் விதமாய் தலையாட்டினார்..
“என்னங்க நீங்க?.. பீஸ் கட்டலைன்னா, நாங்க எப்படி ஆப்ரேஷன் ஆரம்பிக்கிறது.. போய் 3 லட்சத்தை கட்டிட்டு வாங்க..” என்ற தாதி சற்று கடுமையாக சொல்லி விட்டு சென்று விட்டார்..
புத்தி பேதலித்ததை போன்று அந்த இடத்திலேயே நின்றாள் சந்தனமல்லி..
அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ப்ரணவ்..
ஏனோ அந்தப் பெண்ணை விட்டு அங்குமிங்கும் பார்வையை திருப்ப முடியாமல் போராடிக் கொண்டிருந்த ப்ரணவ்வின் அருகில் வந்து நின்றான் சயந்தன்..
“என்ன மாமாோய்ய்ய.. அந்த ஆன்ட்டியை சைட் அடிக்கிறீயா?..”
“ச்சீய்ய்ய்.. வாயை மூடு டா, அந்தப் பொண்ணு அழுகிறதை பார்க்க பாவமா இருந்திருச்சு.. அவ்வளவு தான்.. சைட்டு, கியிட்டுன்னு சொன்ன கடவாப்பல்ல பேத்திடுவேன்..” என்ற ப்ரணவ்வின் கண்கள், மறுபடியும் சந்தனமல்லியை தான் பார்த்தது..
சந்தன நிறத்திற்கு ஏற்றாற் போன்று அழகிய பிங்க் கலர் சேலை அணிந்திருந்தாள்.. ஆனால் கண்களோ தாரை தாரையாக கண்ணீர் உகுத்தது..
“பாவமா பார்க்குற மாதிரி தெரியலையே.. அவுங்களையே முழுங்குற மாதிரி இல்ல பார்க்குற?..” என்றவனை பார்த்து சற்று பதறி விட்டார் ப்ரணவ்..
“டேய்ய்ய். என்ன டா பேசுற?.. அந்தப் பொண்ணு அழுகிறதைப் பார்க்க பாவமா இருந்திச்சுன்னு சொன்னது தப்பா?.. அவ புருஷன் காதுல விழுந்துடப் போகுது” என்றவர் அங்கிருந்த நழுவ முயன்றிட, அவரின் கையை இறுக்கமாக பிடித்திருந்தான் சயந்தன்..
“அந்த ஆன்ட்டியை பத்தின டீடெய்ல் வேணுமா?..” என்றான் சயந்தன், ப்ரணவ் காதில் கிசுகிசுப்பாக..
“இல்லை வேண்டாம்..” என நழுவப் போன ப்ரணவ்வை பிடித்தவன்,
“அந்த ஆன்ட்டி பேரு சந்தனமல்லி.. ஸ்கூல்ல டீச்சரா இருக்காங்க.. புருஷன் கிடையாது.. பையன் மட்டும் தான்.. அவனுக்கு சாயிந்திரம் போல ஆக்சிடெண்ட் ஆகிடுச்சி.. கொஞ்சம் சீரியஸ் தான் போல.. 7 லட்ச ரூபா கட்ட சொல்லியிருக்காங்க.. 4 லட்சம் கட்டிட்டாங்க.. இன்னும் 3 லட்சத்துக்கு போராடுறாங்க.. காசு இருக்கு.. ஆனா இப்போ எடுக்க முடியாம மாட்டிக்கிட்டாங்க..” என சொல்லி முடித்த சயந்தனை அதிர்ந்து பார்த்தார் ப்ரணவ்..
“உனக்கு எப்படிடா? அந்தப் பொண்ணை பத்தி தெரியும்?..” என புருவம் உயர்த்தி கேட்டார் ப்ரணவ்..
“பெரிய கமிஷனர்னு பெருமை பீத்திக்கிட்டா மட்டும் பத்தாது.. தன்னை சுற்றி நடக்கிறது அப்சர்வேஷன் பண்ண கத்துக்கணும்.. இதுவே தெரியலை.. நீயெல்லாம் என்ன தான் கமிஷனரோ..” என்றான் குத்தல் குரலில்..
“ஆமா.. ஆமா.. ரொம்ப அப்சர் வேஷன் பண்ணி தான் யாது பாப்பாவை மண்டையை பிளந்திருக்க..” என்றவர் வேண்டா வெறுப்பாக தான் அந்த இடத்தை விட்டு அகன்றார்..
மனதின் ஓரத்தில் சந்தனமல்லியும், அவன் பையனும் நீங்காத இடத்தைப் பெற்றிருந்ததை அவர் அறியவில்லை..
“நான் அவ மண்டையைப் பிளக்குறதுக்கு பதிலா, உங்க எல்லார் மண்டையும் பிளந்திருக்கணும்.. நிம்மதியா இருந்திருப்பேன்..” என கறுவிக் கொண்டே உள்ளே சென்றான் சயந்தன்..
சிறிது நேரம் யாதிராவை ஹாஸ்பிட்டலில் வைத்திருந்து குளூக்கோஸ் ஏற்றிய பின்பு வீட்டிற்கு செல்லலாம் என சொல்லிவிட்டனர்..
அத்தனை பேரும் ஹாஸ்பிட்டலில் பலியாக கிடந்தனர்.. அதில் ஒருவன் மட்டுமே மிஸ்சிங்..
வேறு யார் நம் தானை தலைவன் சயந்தன் மட்டுமே. வீட்டிற்கு சென்று நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்..
ப்ரணவ்வீற்கு அங்கு நிற்க முடியவில்லை.. ஏனோ சந்தனமல்லியை தேடி வாசம் பிடித்து செல்ல ஆரம்பித்தார்..
இதுவரை தோன்றாத உணர்வு அவருக்கு..
லேசாக ஐசியூ வை நோக்கி செல்ல ஆரம்பித்தார். அங்கு போடப்பட்டிருந்த சேரில் தான் அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தாள் சந்தனமல்லி..
“சந்தனமல்லி..” என்ற கம்பீரக்குரலில், மெல்ல ஏறிட்டுப் பார்த்தாள் மல்லி..
அழுதழுது வீங்கிய கண்களைப் பார்த்தவனுக்கு, நெஞ்சில் சுருக்கென்ற வலி..
“ஏதாவது பிரச்சினையா ங்க?..” என்றான் ஐசியூ வாசலை பார்த்துக் கொண்டே,
அதுவரை தன் துக்கத்தை தனக்குள்ளே அடக்கி வைத்த காரிகையவளோ, ம்ம்ம் எனும் விதமாய் தலையாட்டினாள்..
“என் பையனுக்கு ஆக்சிடெண்ட் ஆகிருச்சி.. உயிருக்குப் போராடுறான்..” என்றவள் நா தழுதழுத்தது..
“உங்களுக்கு சொந்தம்னு யாரும் இல்லையா?..” என்றவளை ஏறிட்டுப் பார்த்தவளின் விழிகளில் சற்று அனல் கூடியது..
“அவனுக்கு நான் சாெந்தம்.. எனக்கு அவன் சொந்தம்.. அவ்வளவு தான்” என்றாள் சற்று கரகரப்பான குரலில்..
“ஓஹ்.. இன்னும் 3 லட்சம் கட்டியாச்சா?..” என்றவனைப் பார்த்து இல்லை எனும் விதமாய் தலையாட்டினாள் சந்தனமல்லி..
என்கிட்ட காசு இருந்தும் என் பிள்ளையை காப்பாத்த முடியாத தவிக்கிறேன்.. என்றவளின் குரலே விரக்தியாக ஒலித்தது..
“நான் கொடுக்கவா?..” என்றவனின் கைகளை அப்படியே பிடித்துக் கொண்டாள்…
பதட்டத்திலும் பயத்திலும் தானாக அவளின் கைகள் நடுங்கியது..
“சார்.. சார்… நீங்க..” என்றவளின் முன்பாக கார்ட் ஒன்றை நீட்டினான்..
அவனையும், அவன் கொடுத்த கார்டையும் மாறி மாறி பார்த்தவள்,
“ரொம்ப தாங்க்ஸ் சார்.. நான் போய் கட்டிட்டு வந்துடுறேன்..” என சேலை தட்ட ஓடிப் போக முயன்றவளின் கைகளை அழுத்தமாக பற்றினான் ப்ரணவ்..
தன்னை அந்நிய ஆண் பிடித்திருக்கிறான் என்பதைக் கூட உணரும் நிலையில் அவளில்லை..
“சார்..” என்றாள் சிறு தயக்கத்துடன்.. எங்கே கார்டை மறுபடியும் வாங்கிக் கொள்வானோ என்ற பயம் தான் வந்தது அவளுக்கு..
“பின் நம்பர் வேண்டாமா?.” என்றவன், அவளோடு சேர்ந்து நடந்துச் சென்றான்..
அவளும் அவனுடன் தான் நடந்தாள்..
அவள் மனம், மூளை என எல்லாவற்றிலும் ஆக்கிரமித்திருந்த ஒரே ஆள் அவள் மகன் மட்டுமே..
ஆப்ரேஷனுக்கு தேவையான பணத்தை ப்ரணவ்வே கட்டி விட்டான்..
பணம் கட்டிய சிறிது நேரத்தில் ஆப்ரேஷன் தியேட்டற்கு அழைத்துச் சென்றனர்..
“சரிங்க நான் கிளம்புறேன்..” என அங்கிருந்த செல்ல முயன்ற ப்ரணவ்வின் முன்பாக வந்து நின்றாள் சந்தனமல்லி..
எனக்கு எதையும் இலவசமா வாங்கிப் பழக்கமில்லை.. உங்களோட பணத்தை நான் சிக்கீரமா கொடுத்துடுவேன்.. அதுவரைக்கும்..” என கருமணிகள் ஏதோஏதோ உருள, சட்டென்று கீழே குனிந்து தன்னைப் பார்த்தாள்..
11 பவுன் தாலிக்கொடி அவள் கழுத்தை சர்வ சுதந்திரமாக அலங்கரித்தது..
அதை தலைவழியாக கழற்றியவள், “இதை வச்சிக்கோங்க.. நான் இரண்டு நாளையில் பேங்க்ல இருந்து காசு எடுத்துடுவேன்.. அப்புறம் நான் இதை மீட்டுக்கிறேன்..” என்றவள், வேகமாக ஐசியூ அறையை நோக்கிச் சென்றாள்..
தன் கைகளில் இருந்த தாலிக்கொடியை உற்றுப் பார்த்தான் ப்ரணவ்.. வெறும் தாலிக்கொடி மட்டும் தான் இருந்தது.. அதில் சரடு இல்லை..
சமுதாயத்தில் இருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்காக மட்டும் இந்த தாலிக்கொடியை அணிந்திருக்கிறாள் என்பது புரிந்தது..
சிறு சிரிப்பும் வந்தது அந்நிலையிலும்.. அவனைப் பற்றி எதுவுமே அறியாமல் பணத்தை திருப்பி தருகிறேன் என சொல்லிவிட்டு சென்றவளைக் கண்டு இதழ்களில் அழகான சிரிப்பு அவனிடம்..
