6
ஸ்ரீராம் செய்த அலப்பறைகள் காரணமாக மறுநாள் ஆலமரத்தடி பஞ்சாயத்து கன்ஃபார்ம் ஆனது!!
அந்த ஊரின் உப நாட்டாமையும் சங்கரபாண்டியன் நண்பரான நாராயணன் தலைமையில் மறுநாள் பஞ்சாயத்து என்று தீர்ப்பாக.. அங்கே நீலாம்பரியின் வீட்டில்!!
"யாருக்கா அந்த ஆளு? வந்து நம்ம கிட்ட இப்படி நடந்துக்கிறாக? அதுவும் அவரு போட்டிருக்கிற டிரஸூம்.. பேசும் செந்தமிழும் பார்க்க சகிக்கல" என்று வேணி நீலாவிடம் புலம்பிக் கொண்டிருக்க..
மருதுவோ "இப்படி ஒரு ஆளு உன்ன தொல்லை பண்றானு என் கிட்ட நீ சொல்லவே இல்ல.. அப்பவே நான் ஒரு வழி பண்ணி இருப்பேன்ல" என்று சிறுபிள்ளை ஆனாலும் தமக்கைக்கு தமயனாக அவன் சீற.
"அடய் விடுங்கடா.. அந்த ஆளு நாட்டாமையோட பையன். ஊர்ல இருந்து வந்ததிலிருந்து இப்படிதான் கிறுக்குத் தனமாக ஏதாவது செஞ்சுகிட்டு இருக்கான். அன்னைக்கு அவனுக்கு பூச போட தான் நானு போனது. பூச போட்டுட்டு இருக்கம் போதே இப்படி கிறுக்குத்தனமாக பேசினான். கூடிய சீக்கிரம் எல்லாம் சரி ஆயிடும்.. நீங்க போய் படுங்க" என்றவள் மருது "அப்பாரு வந்துட்டாரா?" என்று கேட்க..
"அந்தாள அப்பானுலாம் கூப்பிடாத.. நம்ம வூட்டுல இவ்வளோ பிரச்சின நடந்துகிட்டு இருந்துச்சு.. ஊரே நம்ம வூட்டு முன்னாடி நின்னுக்கிட்டு இருக்கு, அந்த ஆளு குடிச்சிட்டு மல்லாந்த கடக்கிறாரு.. என்னைக்கு தான் திருந்த போறாரோ?" என்று தலையில் அடித்துக்கொண்டவன் வீட்டு ஹாலில் இருந்த கட்டிலில் படுத்துக் கொள்ள, வேணி உள்ளறையில் சென்று படுத்துக் கொண்டாள்.
தங்கையும் தம்பியும் உறங்கி விட்டதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு.. வெளியே வந்தவள் அப்பத்தாவைப் பார்க்க அவரும் ஆழ்ந்த உறக்கத்தில்..
சிறுது நேரம் தன்னை சமன்படுத்தி கொண்டு "அடேய் கீசா!!!!" என்று அவள் கத்த..
"என்ன நீலுக்குட்டி?" என்று அவள் முன்னே அடுத்த கணம் தோன்றிய கீசா அதன் பற்களை காட்டி சிரிக்க..
*அடேய் என்னடா பண்ணி வச்சிருக்க.. போயும் போயும் அந்த ஆளுகிட்ட என்னைய மாட்டி விட்டு இருக்க.. கிரகம் புடிச்சவனே!!இதோட எல்லாத்தையும் நிப்பாட்டிட்டு சொல்லிபுட்டேன்" என்று தன் ஒற்றை விரலைக் பத்திரம் காட்டி அவள் மிரட்ட..
அவள் என்னவோ அதை பாராட்டியதை போலவே வெட்கப்பட்டுக் கொண்டு "போதும் போதும் நீலுக்குட்டி.. அப்படி என்ன செஞ்சிட்டேனு நீ இந்த குதி குதிக்கிற.. லைட்டா லேஸூபாஸா தான் அவனை ஆட்டி வைத்தேன். அவன் தான் ஓவரா ஆக்ட் பண்றான். சத்தியமா நீலுக்குட்டி" என்று அவள் முன் தனது குட்டி கைகளை நீட்டி அதன் மீது சத்தியம் செய்து அப்பாவியாக கண்களை உருட்ட..
"திருட்டுத்தனமும் பண்ணிபுட்டு இப்ப அப்பாவி மாதிரி லுக்குவிட்டா உன்னைய நம்பிடுவேனா?" உன்னை நான் அறிவேன் என்று அதனை நீலாம்பரி முறைத்து பார்க்க..
உதட்டை கடித்தது அது, வெட்கத்தில் கைகள் கதகளி ஆட.. இரு கைகளையும் எடுத்துக் கும்பிட்டவள், "தயவு செய்து என் முன்னால வெட்கப்பட்டு தொலையாத.. என்னால தாங்க முடியல" என்று அதனிடம் காய்ந்தாள்.
"நீ அவன ஆட்டுவிக்கிறத கூட ஒரு வகையில நானு உன்னைய மன்னிச்சுடுவேன், ஆனா அவன செந்தமிழில் பேச வைக்கிற பாத்தியா?? அதுதாண்டா என்னால தாங்கிக்கவே முடியல!!" என்று அவள் காதை பொத்திக் கொண்டு கூற..
"நம் பண்டைய தமிழ் நீலுக்குட்டி" என்று அது கொஞ்சும் குரலில் பேச..
"பிச்சுப்புடுவேன் பிச்சு.. உன்னோட தமிழும் வேணாம்.. அவனும் வேணாம்.. ஒழுங்கா எல்லாரும் ஓடி போய்டுங்க" என்று அவள் விளாசு விளாசு என்று விளாசினாள். அதை எல்லாம் கண்டு கொண்டால் அது கீசாவே அல்லவே!!
மந்தகாசமான சிரிப்பு மட்டுமே கீசாவின் முகத்தில்!! அந்தச் சிரிப்பைக் கண்டு மேலும் அவளால் அதை வருத்தும்படியான சொற்களை உபயோகப்படுத்த முடியவில்லை. ஆனால் அதே சமயம் இது செய்யும் சேட்டைகளையும் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
"இங்க பாரு நாளைக்கு பஞ்சாயத்துல ஏக்கு மாக்கா அவன பேச வச்சு ஏதாவது பிளான் பண்ணி என்னைய மாட்டி விடலாம்னு மட்டும் நினைக்காத.. அப்புறம் நானு பொல்லாதவளா மாறிடுவேன்.. ஜாக்கிரத!!" என்று கண்களை விரித்து அவள் மிரட்டி விட்டு உள்ளே சென்று விட்டாள்.
"இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே!! அப்போ பலமா பண்ணிடுவோம்!!" என்று கண்களை விஷமமாக உருட்டி, இரு கைகளையும் நம்பியார் ஸ்டைலில் அது பிசைய..
இது செய்யும் சேட்டைகள் அனைத்தையும்
கண்களில் காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தது மோகினி.. தன்னைத் தவிர தன் இனத்தை சேர்ந்த வேறு ஒருத்தர் இங்கே இருப்பதை உணர்ந்த கீசன் சட்டென்று அவ்விடம் விட்டு மறைந்தது.
அதேநேரம் நாட்டாமை வீட்டில்..
வழக்கம் போல அங்கே நடந்தது எதுவும் அறியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் ஸ்ரீராமன். வெளியிலேயே நீலாம்பரி வீட்டில் நடந்த அனைத்தையும் அன்னையிடமும் மனைவியிடமும் கூறிவிட்டு குறுக்கும் நெடுக்கும் கோபத்துடன் நடந்து கொண்டிருந்தார் சங்கர பாண்டியன்..
நாச்சியோ பயந்து பயந்து கைகளை பிசைந்து கொண்டே அத்தையை பார்த்து கண்களாலேயே "நீங்க பேசுங்க" என்று கேட்க.. மற்ற நேரத்தில் மகனை அடக்கியாளும் சொர்ணமோ, கோபமாக இருக்கும் நேரத்தில் சற்று தள்ளியே இருப்பார். அதனால் மருமகளின் கண் ஜாடையை தவிர்த்து விட்டு அவரும் மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு நின்றார்.
தூங்கி எழுந்தவுடன் தன் உடையை பார்த்தவன் யாரு தனக்கு எந்த மாதிரி உடையை அணிவித்தது என்று கோபம் வர கழட்டி எறிந்துவிட்டு வழக்கமான காவி உடையை அணிந்து வெளியே வந்தான்.. கழுத்தில் உத்திராட்ச மாலையுடன்..
இவன் வந்ததை பார்த்தவர்களுக்கு மறுபடியுமா? என்று ஆயாசமாக இருந்தது.
இவனின் காவியையும் காதலையும் மாறி மாறி பார்த்து சோர்ந்து தான் போனார்கள்.
"அப்பத்தா யாரு இந்த டிரஸ் எல்லாம் போட்டு விட்டது. இனிமே இந்த மாதிரி எல்லாம் பண்ணாதீக" என்று விட்டு அவன் அறைக்குள் செல்ல முயல அவனைத் தடுத்து நிறுத்தினார் சங்கரபாண்டியன்.
"இன்னிக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியுமாடா?" என்று அதட்டலாக கேட்க..
" ஏதோ பூஜையில என்னைய உட்கார வைச்சுதிலிருந்து எனக்கு உடம்பெல்லாம் ஒரே டயட் தூங்கி தூங்கி எழுந்து இருக்கேன். வேற என்ன நடந்தது?" என்று அவன் கேட்க..
தன் தலையில் அடித்துக் கொண்டவர் "நாளைக்கு உன்ற மேல பஞ்சாயத்து அது தெரியுமா?" என்று கேட்க..
"என்னது!! பஞ்சாயத்தா? எதுக்கு? ஏன்?" என்று அவன் புரியாமல் விழித்தான்.
"நீ பண்ண காரியத்துக்கு பஞ்சாயத்து வைக்காம.. பின்ன கல்யாணமா பண்ணுவாக பேராண்டி?" என்று சொர்ணம் கூற... உடனே தன் காதுகளை இரு கையால் பொத்திக்கொண்ட ஸ்ரீராமன் "அபச்சாரம் அபச்சாரம்... அப்பத்தா இந்த மாதிரி எல்லாம் என்ற கிட்ட பேசாத.. அனுமான் பக்தன் கிட்ட கல்யாணத்தை பத்தி பேசுற நீ கொஞ்சமாவது உனக்கு கூறு இருக்கா.. ஜெய் பஜ்ரங்கபலி.. ஜெய் பஜ்ரங்கபலி" என்று அவன் சத்தமாக கைகளை மேலே உயர்த்தி கண்களை மூடி அவன் பாடினான்.
அதற்கு மேல் பொறுமை காக்க முடியாத சங்கரபாண்டி, அவனிடம் நெருங்கி அவன் கைகளை தட்டி விட்டு, காலையில் அவன் எழுந்து சென்றது முதல் பஞ்சாயத்துக்கு புராது சென்றது வரை அனைத்தையும் கூற..
"என்னது?" என்று அதிர்ச்சியில் சற்று நேரம் உறைந்தவன், பின்பு "எதுக்கு இப்படி எல்லாம் பொய் சொல்றீக? நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேனு சொன்னத்துக்காக நீங்க ஏதாவது பொண்ண செட் பண்ணி இந்த மாதிரி எல்லாம் பேச வைக்கிறீகளா?" என்று அவன் தந்தையும் சொர்ணத்தையும் மாறி மாறி பார்த்து கேட்க..
"அடிங்க.. நீ கல்யாணம் கட்டு இல்ல கட்டாம பிரமச்சாரியாக போ.. ஏன்டா ஊர்ல உள்ள பொண்ணு கைய புடிச்சி இழுத்து என்ற மானத்த வாங்குற.. நாளைக்கு பஞ்சாயத்து என்ன சொல்ல போறான்னு தெரியலையே" என்று அவனை முறைத்தவாறு அந்த காவி சட்டையை பார்த்து "முதல்ல இத கலட்டி தூக்கி எறிடா.. இல்ல" என்று விட்டு கோபமாக தன் அறைக்குள் சென்று விட்டார்.
அப்பத்தாவும் அன்னையும் நடுவில் ஸ்ரீராமனை அமர வைத்து..
"கண்ணா சொன்னா புரிஞ்சுக்கோ பா.. நீ இந்த காவி கட்டி இருக்கறதுனால தான் ஏதோ ஒன்னு ஆட்டிப்படைக்குது உனக்கே தெரியாம, என்னென்னமோ செய்யுது முதல்ல இதெல்லாம் மாத்திரு ராசா" என்று சொர்ணம் கூற..
"அதெல்லாம் முடியவே முடியாது அப்பத்தா.. நான் எப்பவுமே அந்த மாருதியின் பக்தன் தான்" என்று கூறியவன், மீண்டும் ஜெய் பஜ்ரங்கபலி என்று பாட ஆரம்பிக்க..
உள்ளே சென்ற கணவர் எங்கே திரும்ப வந்து விடுவாரோ என்று பயந்த நாச்சி சட்டென்று அவன் வாயை பொத்தினார்.
"சரி தம்பி.. நீயு உன்னோட பக்தியை விட வேணாம். ஆனா தயவு செய்து இந்த சட்டையைக் கழட்டிப் போடு.. ஊருக்குள்ள எல்லாரும் நீயு காவி கட்டிக்கிட்டு கசமுசா பண்றன்னு கிளப்பிவிட்டு இருக்கானுக.. இப்படியே போச்சுனா உன்ற அப்பாவோட மானம் மரியாதையோடு இந்த குடும்ப கவுரமும் சேர்ந்து போகும்.. புரிஞ்சுக்கோ ராசா.. நாங்க யாரும் உனக்கு கல்யாணம் பண்ண சொல்லி வற்புறுத்த மாட்டோம். ஆனா எல்லாரையும் போல உடுப்பு போடு" என்று தாய் கெஞ்ச.. அவனுக்குமே வந்த நாள் முதல் வித்தியாசமாக எல்லோரும் பார்க்கும் பார்வையில் கடுப்பாகத்தான் இருந்தது.
வெளிநாட்டிலிருந்த வரை அவரவர் உடை அவரவர் இஷ்டம். அடுத்தவர் யாரும் மூக்கை நுழைப்பது இல்லை அதில்.. ஆனால் நம் நாடு அது விதிவிலக்கு ஆயிற்றே!! அதுவும் கவுண்டம்பாளையம் போன்ற சிற்றூர்களில் இன்னும் அதிகம். எனவே சரி என்று ஒத்துக் கொண்டவன் உள்ளே சென்று விட..
நாச்சியும் சொர்ணமும் அவன் உள்ளே செல்வதையே தலையை சாய்த்து பார்த்துக் கொண்டே இருந்து, அவன் சென்றதும் அது வரை இழுத்து வைத்திருந்த மூச்சை விட்டபடி தங்களுக்குள் கைஃபை கொடுத்துக் கொண்டனர்.
"அப்பாடி!! ஒரு வழியாக அவனை சட்டைய மாத்தி வச்சாச்சு அடுத்து கொஞ்சம் கொஞ்சமாக இப்படியே பேசி பேசி அவன நம்ம வழிக்கு கொண்டு வந்துடனும் அய்த்த" என்று நாச்சி கூற..
"ஆமாண்டி நாச்சி.. நல்ல வேலை செஞ்சப்போ.. எப்படியோ அவனோட காவிக்கு விடுதலை கொடுத்தாச்சு" என்று சிரித்துக் கொண்டே படுக்க சென்றுவிட்டனர்.
மறுநாள் ஆல மரத்துக்கு அடியில் பஞ்சாயத்து கூடி இருந்தது!!
எப்பொழுதும் பஞ்சாயத்து என்றால் அதற்கு தீர்ப்பு சொல்லும் நாட்டாமையாக இருந்து பழகிய நம் சங்கரபாண்டியனுக்கு இதில் பெருத்த அவமானமாக இருந்தது. அதனால் தீர்ப்பு சொல்லும் இடத்தில் அமராமல் சற்று தள்ளி அமர்ந்திருந்தார்.
ஆனால் அதேசமயம் மகனை இந்த புதிய உடையில் பார்த்தவருக்கு சற்றே மனதில் நிம்மதி..
பஞ்சாயத்தில் நாராயணன் நடுநாயகமாக அமர்ந்திருந்த அருகில் இரண்டு மூன்று அல்லக்கைகள். ஒருபுறம் நீலாம்பரி எப்பொழுதும் இல்லாமல் சாதாரண புடவையில் நின்றிருந்தாள். அவளுக்கு எதிர்ப்புறம்.. இதுவரை வைத்திருந்த தாடியை எல்லாம் எடுத்து விட்டு சற்றே மீசையை முறுக்கி விட்டு, தனது கட்டுமஸ்து உடம்பை காட்டும் சற்று இறுகிய சட்டை அணிந்து.. கதர் வேஷ்டியோடு கன கம்பீரமாக நின்று கொண்டிருந்தான் ஸ்ரீராமன். ஆனால் உள்ளே கழுத்தில் துளசிமாலை அணிந்திருந்தான் யாரும் அறியாமல்.. அவ்வப்போது காற்றில் அலையும் தன் சிகையை கோதிக்கொண்டே அவன் நின்று விதம் அங்குள்ள கன்னிகளின் மனதை கவர்வதாய்.. யாரேனும் சற்று ஆர்வத்தோடு பார்த்தால், இவன் கண்களில் கனலை கக்கி அந்த பக்கமே திரும்பாமல் நின்றுகொண்டிருந்தான்.
இந்த குற்றச்சாட்டு எதுவுமே அவனுக்கு புரியவில்லை. ஆனால் தன்னை மீறி ஏதோ ஒன்று நடந்து இருப்பது மற்றும் புரிந்து கொண்டான். தன்முன் நிற்பவளை அவனுக்கு சற்றும் அடையாளமே தெரியவில்லை. அன்று தூக்கி உயர்த்திய கொண்டை, பெரிய பொட்டு கொசுவம் வைத்த சேலை கெண்டைக்கால் தெரிய என்று வந்திருந்தவள், இன்று சாதாரணமாக தழையத் தழைய புடவை கட்டி நீண்ட கூந்தலை கோடாலி முடிச்சிட்டு சிறிய பொட்டோடு அடக்க ஒடுக்கமாக நின்றிருந்தாள்.
தன் கூறு விழிகளால் அவளை அளவெடுத்த ஸ்ரீராமன், ஏதோ அவள்தான் இவன் மீது வீணாக பழி சுமத்தியது போல அவளை முறைத்துக் கொண்டே நின்றிருந்தான்.
வழக்கம்போல பஞ்சாயத்து ஆரம்பிக்க..
"தம்பி ஸ்ரீராமா.. இது போல பஞ்சாயத்துல நீ நிப்பனு நான் ஒரு நாளும் நினைச்சு கூட பார்க்கல.. உன்ற அப்பா என்ன மாதிரி ஆளு.. உன்ற வம்சம் எப்படியாப்பட்ட வம்சம்" என்று அவர் அடுக்கிக்கொண்டே போக, கையை உயர்த்தி நிறுத்தி அவரை "நிப்பாட்டுங்க" என்றவன்..
"தெரியதுல எப்பேர்பட்ட குடும்பம் என்ற குடும்பம்னு, அப்புறம் நான் செய்யாத தப்புக்கு என்னைய ஏன் இங்க நிக்க வைச்சு இருக்கீக" என்று அவன் கூற..
'இவன் என்னா எப்படி பேசுறான்? ஊரே பார்த்து இருக்கு இவன் கை பிடிச்சு இழுத்தத.. போதாக்குறைக்கு இவன அப்பனே சாட்சியாக இருக்கான், ஆனா முழு பூசணிக்காயை சோத்துல மறைச்ச மாதிரி அவன் ஒன்னுமே நடக்கலகிறானே' என்று புரியாமல் தலையை சொறிந்தவர் திரும்பி சங்கரபாண்டியனை பார்க்க, அவரோ 'நடத்து நடத்து இப்பதான் ஆரம்பிச்சிருக்கான் போக போக தெரியும்' என்றவாறு அமைதியாக அமர்ந்திருந்தார்.
"நீ என்ன புள்ள சொல்லுற?" என்று நீலாம்பரியை பார்த்து அவர் கேட்க..
"நான் என்னத்தங்கய்யா சொல்லுவேன்? இவரு ஊர்ல இருந்து வந்தது எப்படின்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். அவங்க வூட்ல இருந்து என்னைய குறிபார்க்க கூப்பிட்டாகலா? நானும் பார்த்து பூச போடனும் சொல்லி, பூச போட போனேனா?" என்றவள் தனது சேலை முந்தானையை எடுத்து மூக்கை அதில் துடைத்துக் கொண்டு..
" அப்போதிலிருந்து ஆரம்பிச்சுது இந்த ஆளு லொள்ளு. என்னைய பார்த்து தெரியாத பாசையில, புரியாத வார்த்தைகளா போட்டு என்னன்னவோ சொல்றாரு.. கட்டி கட்டி பிடிக்க வராரு.. தடுத்து பார்த்தேன் மனுஷன் கேட்கலையே.. நானு சொல்றது பொய்யுனா.. அவக குடும்பத்தில உள்ளவங்கள கேட்டுக்கோங்க?" என்று அழும் குரலில் கூறினாள்.
"அடிப்பாவி!! வாயைத் திறந்தாலே பொய்" என்றவன் "எங்க என்னைய பார்த்து சொல்லு? நான் உன்ற கைய பிடிச்சு இழுத்தேனா?" என்று அழுத்தமான குரலில் கேட்க, அவன் கண்களைப் பார்த்தவளுக்கு கொஞ்சம் குற்ற உணர்ச்சியாக தான் இருந்தது. இவன் சுயநினைவாக செய்யவில்லை தானே!! அனைத்தும் கீசாவின் செயல் அல்லவா!!
அதனால் அவள் அமைதியாக அவன் பார்வை தவிர்க்க... பின் கண்கள் சற்றே பயத்தில் விரிந்தது நீலாம்பரிக்கு, அவனருகே நின்று இருந்த கீசாவை பார்த்து!!
பின்னே விஷமமா குறும்பா என்று தெரியாத வகையில் ஒரு புன்னகையை கொடுத்துக்கொண்டே நின்ற கீசாவை பார்த்து தான் பயத்தில் உறைந்து நின்றாள் நீலாம்பரி!!
இந்நிலையில் கீசாவுடன் அவளால் பேசவும் முடியாது, பேசினால் இவளைத்தான் பைத்தியக்காரி என்று ஊரே பார்க்கும். ஏற்கனவே இவள் குறி சொல்கிறேன் என்ற பெயரில் ஊரை ஏமாற்றுகிறாள் என்ற பெயரும் உண்டு. இந்நிலையில் அதுவும் பஞ்சாயத்தில் நின்றுகொண்டு கீசாவை பார்த்து ஒரு முறைப்பு கூட அவளால் முடியாது.
அந்த கீசாவோ அவனது வலது பக்கத்தில் நின்று கொண்டு ஓரக்கண்ணால் நீலாம்பரியை பார்த்து தன் கையை அவனை நோக்கி நீட்ட.. நீலாபரியோ பதற.. வேண்டாம் வேண்டாம் என்று கண்களால் கெஞ்சினாள் அவள்.
வாலு பையன் கீசாவோ, தன் கை கால்களை உதறி நான் அப்படித்தான் செய்வேன் என்று மீண்டும் கையை அவனை நோக்கி நீட்ட.. ஒருவகையில் இதுவும் நன்மைதான் பஞ்சாயத்தில் அவனைப் பற்றி அனைவருக்கும் தெரிந்து போகும். ஆனால் பாவம் நாட்டாமைகாரர் அதற்குப்பின் நிலை என்ன ஆகும் என்று அவள் யோசிக்க ஒருபுறம் பயமும் மறுபுறம் வருத்தமாகவும் இருந்தது. ஆனால் கீஷ் பையன் (ம்ஹூம் செல்ல பெயர் வேற.. இந்த வாலுக்கு) இந்த மாதிரி வேலையெல்லாம் எதற்காக செய்கிறான் என்று அவளுக்கு புரியவில்லை.
மெல்ல மெல்ல கீசாவின் கை நெருங்கி ஸ்ரீ
ராமனை தொட்டேவிட்டது!!
அந்தோ பாவம் பஞ்சாயத்தில் உள்ள அனைவரும்!!
ஸ்ரீராமின் ஹாட் ரொமான்ஸ் பர்பாமன்ஸை காண ரெடியா??
சொக்க ரெடியா???
