ஆருயிர் 11
மறுநாளை அதிரதன் டச்சார்ஜ் ஆகி தன் வீட்டிற்கு சென்று விட்டான். ஆனால் மாலை போல் தான் சென்றான். அதுவரை அவனை அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தது யாழினி தான். யாழினியை தனியே விட மனமில்லாமல்… ஹீரோவும் நானே வில்லனும் நானே என்று பிதற்றும் இந்த முட்டாள் தொழிலதிபானிடம் விட்டு விட… அதுவும் தனியாக விட்டு விட அர்விக்கும் கொஞ்சம் கூட விருப்பமில்லை!!!
"அதிலும் இவனுக்காக தேவுடு காத்து நாம் காத்திருக்கணுமா? சாத்தியமேயில்ல!" என்று அவனுக்காக காத்திருக்கவும் அரவிந்துக்கு மனதில்லை. ஆனால் சாத்தியம் இல்லாததை மித்து என்ற ஒற்றை வார்த்தை அதையெல்லாம் சாத்தியமாக்கி இருக்க… கூண்டில் அடைக்கப்பட்ட அரிமாவாய் அந்த மருத்துவமனையின் வளாகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தான் அர்வி.
அதுவும் அதிரதன் டிசார்ஜ் ஆகி செல்லும்போது இவனைப் பார்த்து ஏளன புன்னகை சிந்தினான். கூடவே கூஜா தூக்கவும் வைத்தான். அவனுக்கு மருத்துவமனையில் கொடுத்த மருந்துகளை தூக்கிக் கொண்டு வருமாறு கட்டளையிட்டு முன்னே சென்ற அதிரதனை பார்த்த அர்விக்கு மனம் குமைந்தது!!
"இவன் மூக்கை உடைத்தது மட்டும் பத்தாது.. இவன் போலியாக கைக்கு கட்டு போட்டுக் கொண்டதை.. நிஜமாக போட வைத்திருக்க வேண்டும்" என்று பொரிந்து தள்ள மட்டுமே முடிந்தது!! 'எல்லாம் இந்த மித்துவால்…!' என்று கடைசியே வார்த்தை சத்தமாக கூறிக்கொண்டு அமைதியாக பின்னே நடந்தான்.
அதிரதன் கிளம்பும்போது யாழினியை ஒரு மார்க்கமாகவும் அரவிந்தை பல மார்க்கமாகவும் பார்த்துவிட்டு சென்றான். அந்த மார்க்கத்திற்கான காரணங்கள் விரைவிலேயே தெரிய வந்தது!!
யாழினியை வண்டியில் ஏற்றியவன் அவளை வீட்டில் இறக்கி விட்டு செல்ல முனைய… அவன் கைப்பற்றி தடுத்தாள் யாழினி!!
"அர்வி… கோபமா என் மேல?" என்று மெல்லிய குரலில் யாழினி கேட்க.. அவனோ இவள் பக்கம் கூட முகம் திருப்பவில்லை.
"புரிஞ்சுக்க டா.. அவரு கிட்ட நீ சாரி கேட்டது உனக்கு அவமானமா இருக்கலாம். ஆனால்… அந்த ஒத்த சாரி தான் உன் வாழ்க்கையை திருப்பிக் கொடுத்திருக்குனு நினைச்சுக்கோ!! நாமெல்லாம் மிடில் கிளாஸ் டா.. அவங்கள மாதிரி ஆட்களை எல்லாம் இப்போதைக்கு பகச்சிக்க கூடாது. அதுவும் இப்ப.. இப்பதான்.. நீ உன்னுடைய தொழில்ல முதல் அடியை எடுத்து வைத்திருக்கிற.. அதற்குள்ள அது சரிந்து விழக்கூடாது அர்வி!! துஷ்டன கண்டால் தூர விலகுங்குற மாதிரி நம்ம விலகி போயிடணும் அர்வி! அது தான் நம்ம வாழ்க்கைக்கு நல்லது!!" என்றதும் திரும்பி அவளை பார்த்து முறைத்தான்.
"அவன் என்ன எனக்கு மாமனா மச்சானா? அவன் கூட எனக்கு வாயக்கா வரப்பு தகராறா? எதுவுமே கிடையாது!! அந்த டேஷ்க்கும் எனக்கும் ஒரு உறவும் கிடையாது!! எல்லாம் உன்னால.. உன்னால.. மட்டும் தான்!! உன் கண்ணுல கண்ட அந்த பயம்.. அந்த தவிப்பு.. அதை என்னால பாக்க முடியல டி மித்து!! அதனால தான் அவன் மூக்கை பேத்தேன். அதுவும் அவன்தான் காரணம்னு என்னோட ஊகம் மட்டுமே.. அவன் தான் காரணம் என்று உண்மையிலேயே தெரிந்திருந்தால்… போலியாக கட்டு போட்டு இருந்தான் பாரு, அது உண்மையாய் இருந்திருக்கும். உன்னால அவன் தப்பிச்சான்" என்று கோபத்தை கட்டுப்படுத்த சிகையை கோதிக் கொண்டான்.
"அர்வி…." என்று யாழினி அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தாள் எனக்காகவா என்று!!
"என்னடி.. என்ன பெரிய தொழில்? உன்னைவிட இது ஒன்னும் எனக்கு முக்கியமில்லை. உன்னை ஒருத்தன் சீண்டுனா… அவனை செய்ய விட்டு நான் வாயை பொத்திகிட்டு கை காட்டிட்டு நிக்கணுமா? நான் என்ன பொட்டையா? முடியாது டி என்னால் முடியாது!! நீ வேணா இந்த சொசைட்டி.. பணக்காரன்.. தொழில்.. சர்வைவ்னு அவனுக்கு எல்லாம் தணிஞ்சு போலாம்!! என்னால எல்லாம் அப்படி போக முடியாது!! இந்த அர்வி யாருக்கும் எதுக்கும் தலைவணங்க மாட்டான்!! இந்த குட்டி சாத்தானை தவிர…" என்று அவள் தலையில் பின் பக்கம் ஓங்கி தட்டியவன், கோபத்தை எல்லாம் பைக்கின் ஆக்சிலேட்டரில் காட்டி ஒரு முறுக்கு முறுக்கி விட்டு பறந்து சென்றான்.
செல்லும் அவனை கண்களில் கண்ணீரோடு பார்த்தாள் யாழினி!!
அந்த கண்ணீருக்கு பின்னே நின்றது என்னவோ தன் மீது அவன் கொண்டுள்ள அந்த அன்பு!!
அர்வியின் அன்பு அப்படித்தான்.. அதிரடியானது.. ஆர்ப்பாட்டமானது அலாதியானது!!
கொஞ்சமும் கர்வம் இல்லாதது. வியாபாரத்தனம் அற்றது!! நீ இதை செய்தால் தான் உனக்கு என் அன்பை காட்டுவேன் என்று சுயநலமற்றது!!
இப்பொழுது மட்டுமல்ல சிறுவயதில் இருந்தே அவன் அப்படித்தான். அவளுக்காக எது வேண்டுமானாலும் செய்ய துணிந்தவன்!!
இவள மிஞ்சி மிஞ்சிப் போனால் அவனுக்காக சப்போர்ட் செய்திடுவாள்.. அவன் ஆற்றும் காரியங்களுக்கு கிரைம் பார்ட்னர் ஆக இருப்பாள் சில சமயம்… மற்றபடி இத்தனை வருடங்களில் அவனுக்காக யாழினி செய்தது என்றால்.. அது இந்த லோன் தான்!! ஆனாலும் அது செய்யவும் உண்மையான அன்பு வேண்டுமே??
இருவருமே ஒருவர் மீது ஒருவர் அளவற்ற அன்பு வைத்தவர்கள்.
இந்த அன்பானது ஒவ்வொருவரை பொறுத்து மாறும்!!
பொதுவாக உறவுகளற்ற ஒரு ஆண் பெண் அன்பென்றால்.. ஒன்று அது நட்பு!! இல்லையென்றால் அது காதல்!!
அவர்களுக்குள் நேசம் என்னும் விதை முளை விடவில்லை. அதனால் இது நட்பு என்ற வட்டத்துக்குள்ளையே அவர்கள் வாழ்ந்திருந்தனர். அந்த வட்டமும் விரிகோணமாக விரியும் காலம் வருமா??
வீட்டிற்கு வந்தவன் அன்று ஏதோ வேலை செய்ய விருப்பமே இல்லை ஏற்கனவே சோதனை ஓட்டம் முடிந்து விட்டது. மீண்டும் அதை ஒரு தரம் செய்து பார்க்க ஏனோ மனம் விருப்பம் கொள்ளவில்லை. மனம் முழுக்க ஒரு விதமான சிரிப்போடு தன்னை கடந்து சென்ற அதிரதனே நிறைந்திருந்தான்.
தலையை உலுக்கி கொண்டவன், சென்று உறங்கி விட்டான்.
அதன் பிறகு அவனது சாஃப்ட்வேரை பேட்டன் செய்ய தேவையான ஆவணங்களை எல்லாம் சேகரித்துக் கொண்டிருந்தான் அடுத்து வந்த நாட்களில்… மிக மிக முக்கியமான தருணம் அவனுக்கு.
யாழினி கூட ஒரு முறை அழைத்து "இன்னும் என் மேல் கோபமாடா?" என்றதும் "அடிப்போடி.. சாத்தானே.. பேட்டன் விஷயமா அலையுறேன்டி ரெஸ்டே இல்லை. வேலை முடிந்ததும் உன்னை வந்து பார்க்கிறேன். சின்னப்புள்ளத்தனமா அழுகாத… வரும்போது குச்சி மிட்டாய் குருவி ரொட்டி வாங்கிட்டு வரேன்" என்று அவன் நக்கல் வழிய எரிச்சலோடு பேச.. அவனது வேலை பளு புரிந்துகொண்டு இவளும் தொந்தரவு செய்யவில்லை.
ஆர்த்தியும் அடுத்து வந்த நாட்களில் வரவே இல்லை. "ஒருவேளை வேலை முடிந்து விட்டதால் அவள் வரவில்லை போல… முதலில் இந்த பேட்டன் வேலையை பார்ப்போம். அப்புறமா அவளை பார்த்துக்கொள்ளலாம்" என்று இவனும் அவளைப் பற்றிய நினைவுகள் இன்றி வேலை வேலை என்று சுற்றிக் கொண்டிருந்தான்.
ஒரு வழியாக பேட்டன்டுக்காக இவன் எல்லாம் சமர்ப்பித்து விட்டு அன்று இரவு வெகு ஆசுவாசமாக மொட்டை மாடி ஏறி வந்து யாழினி கதவை தட்டினான்.
அவளோ உள்ளுக்குள் குசு குசு என்று பேச.. இவனுக்கோ ஆச்சரியமானது.. "இந்த நைட்ல இந்த பிசாசு யார் கிட்ட பேசுது? அவளோட ஃப்ரெண்ட் பேய்கள் எதாவது இருக்குமோ?" என்றவன் படாரென்று கதவை திறக்க அவளோ பயந்து போனவள் ஃபோனை தவற விட்டாள்.
அலைப்புறுதலோடு கையை பிசைந்து கொண்டு நின்றிருந்தவளது தோற்றம்.. அவள் ஏதோ தவறு செய்வதாக புரிய.. கூர் பார்வையோடு "யாரடி போன்ல? யார் கூட பேசுற?" என்று கேட்டவனை பயத்தோடு பார்த்தாள்.
"அது வந்து…" என்று இழுத்தவள் "அதான்.. அதிரதன்…" என்றதும் அவனுக்கு இன்னும் கோபம் பெருக வெளியே சென்று நின்று விட்டான்.
கீழே விழுந்த போனை எடுத்து காதில் வைக்க.. அங்கே அந்தப் பக்கமும் அமைதி!! அந்த அமைதி எந்த புயலுக்கு முன் வரும் அமைதியோ? என்று இவள் உள்ளம் நடுங்க.. "நான் அப்புறம் பேசுறேன் சார்" என்றாள்.
"யாழ்..!!" என்று ஆழ்ந்த குரலில் அழைத்தவன் "இப்பவும் உனக்கு உன் பிரண்டு தான் முக்கியம் இல்லையா? நான் முக்கியம் இல்லை அல்லவா?" என்றவனின் குரல் இவளை என்னவோ செய்ய..
"சார்.. நீங்க உங்க லவ் சொல்லி இருக்கீங்க. என்னால இன்னும் அதுக்கான பதில் சொல்ல முடியல. அவன் பிரண்டு மட்டும் கிடையாது என் வெல்விஷர். ஏன் இந்த நேரத்தில் நான் இப்படி உங்க கூட பேசறது எங்க அம்மா அப்பாக்கு தெரிஞ்சா கூட இப்படி தான் கோபப்படுவார்கள். இதெல்லாம் மிடில் கிளாஸ் ஃபேமிலில முக்கியமா பாப்பாங்க சார்.. ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க! நான் அப்புறம் பேசுறேன்" என்றவள் ஃபோனை அவசரமாக கட் செய்து விட்டு, அதைவிட அவசரமாக ஓடி சென்று அங்கே அமர்ந்தவனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.
"சாரிடா.. சாரி.. உன்கிட்ட சொல்லி இருக்கணும். ஆனா என்னால அவரை அவாய்ட் பண்ண முடியல!! ஏதோ ஒன்னு.. ஆனா என்னனு புரியல" என்று குழந்தைத்தனமாக பேசியவரை கண்டவனுக்கு உள்ளுக்குள் வலித்தது.
'என்னால் இவள் ஏன் துன்பப்பட வேண்டும்? அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை ஏன் நான் தடுக்க வேண்டும்? உண்மையிலேயே அவன் மித்துவை காதலிக்கிறான் என்றால்.. என் நட்பு அதுக்கு குறுக்கே நிற்கிறது என்றால்… நான் என்ன செய்ய வேண்டும்? என் மித்துவுக்காக நான் ஒதுங்கி தான் போக வேண்டும்!!
ஆம்.. ஒதுங்க வேண்டும். ஒதுங்கிக் கொள்கிறேன்!!' என்று அந்த நிமிடம் முடிவு எடுத்தவன், அவளை தோளோடு அணைத்து "அப்படியெல்லாம் இல்லடா உனக்கு அவனை பிடிச்சிருந்தா எனக்கும் ஓகே தான். ஆனால் இந்த மிட்நைட் கால் எல்லாம் இப்போதைக்கு வேணாம். என் மித்து ரொம்ப நேர்மையானவ.. அவளிடம் இந்த குறுக்கு புத்தி எல்லாம் கிடையாதே??? ஒருவேளை சேர்வார் தோசமாக இருக்குமோ?" என்று அவன் தலையை சரித்து அவளைப் பார்த்து நக்கலாக சிரிக்க..
"சீ போ.. எருமை" என்று அவனை அடித்தாள்.
அதன்பின் இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்க ஒரு வாரமாக தவித்த மனதிற்கு.. தாகம் எடுத்த தொண்டைக்கு அமிர்தம் கிடைத்தது போல உணர்ந்தவன், அவளுக்கு விடை கொடுத்துவிட்டு தன் வீட்டிற்கு வந்து விட்டான்.
அதன்பின் இரண்டு நாட்களாக அவளை சென்று இவன் பார்க்கவில்லை. காரணம் பெரிதாக ஒன்றும் இல்லை. வேலையும் ஒன்றும் இல்லை. அவ்வப்போது அந்த பேட்டன் விஷயமாக ஆபீஸிற்கு சென்று அங்கு உள்ளவர்களுக்கு பணம் கொடுத்து சரி கட்டிக் கொண்டிருந்தான். மற்றபடி பெரிதாக வேலை இல்லை. ஆனாலும் மித்துவுக்காகவே அவளிடம் இருந்து இவனே தள்ளி நின்றான்.
ஆனால் பேட்டன் விஷயமாக இவன் அலைவதாக யாழினிக்கு அவ்வப்போது தெரியப்படுத்தினான் மெசேஜ் மூலமாக… அவளும் அதுவே உண்மை என்று நினைத்திருந்தாள்.
நான்கு நாள் கழித்து ஒரு மாலை பொழுது அவள் கால் செய்ய.. பார்க்கில் வெட்டியாக அமர்ந்து கடலையை கொறித்து வாயில் தள்ளிக் கொண்டு இருந்தவன் "சொல்லு மித்து?" என்றான்.
"பிஸியா இருக்கியா அர்வி? என்று அவள் கேட்டதும்… நெற்றி சுருங்க யோசித்தவன் "உனக்கு ஏதோ வேலையாகனும். அதை டைரக்டா சொல்லு டி குள்ளச்சி! அதனென்ன பிசியா இருக்கியான்னு கேட்குற? என்னைக்காவது நீ இந்த மாதிரி கேட்டு இருக்கியா? அப்போ இது ரொம்ப டெலிகேட்டான விஷயம்!! சரி சொல்லு.. என்ன ஹெல்ப் வேணும்?" என்றான் அவளை சரியாக கணித்து..
"அது.. அதிரதன் இன்னைக்கு எங்க ஸ்கூல் சாஃப்ட்வேர் ரிலீஸ் பண்றாரு.. அதுக்கு ஒரு சின்ன பார்ட்டி இருக்கு. என்னை கண்டிப்பா வரணும்னு சொல்றாரு.. அவரோட ஃபேமிலி கிட்ட இன்ட்ரொடியூஸ் பண்ணனும்னு சொல்றாரு.." என்றதும் ஒரு நிமிடம் யோசித்தவன் "மாமாவிற்கு தெரியுமா?" என்றான்.
"அய்யய்யோ.. அர்வி.. அப்பாவுக்கு தெரிஞ்சா கொன்னே போட்டுருவாரு டா!" என்று அந்த புறம் பதறினாள் யாழினி.
சன்ன சிரிப்பு அவனிடம்!!
"நீ பண்ற கிரைமுக்கு என்னையும் கூட்டு சேர்த்துகிற?" என்று அவன் போலி கோபம் காட்ட..
"என்ன இருந்தாலும் நீ தானே என் கிரைம் பார்ட்னர்!!" என்று அவள் கிளுக்கி சிரிக்க..
"சரி போகலாம்!" என்றான்.
அங்கேதான் இருவரின் தலையெழுத்தும் மாற போவதை அப்போது அவர்கள் அறியவில்லை!! அறிந்திருந்தால் செல்லாமல் இருந்திருப்பார்களோ?
யாழினி வரவை ஆவலாக எதிர்பார்த்த அதிரதன் அவளோடு சேர்ந்து வந்த அர்வியை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் அதை முகத்தில் காட்டாமல் மறைத்து விட்டு தலையை மட்டும் அசைத்தான் அதுவும் யாழினிக்காக…
"நான் இங்க ஓரமா இருக்கிறேன் மித்து நீ போ" என்றான்.
அழகிய தேவதையாக மெல்லிய எலுமிச்சை கலர் ஷிஃபான் சேரியில் அழகு மிளிற வந்திருந்தவளை கண்ணெடுக்காமல் பார்த்திருந்த அதிரதன், கண்களிலேயே தனது கருத்தை ஆழமாக அவளது உடலில் பதிய வைக்க கூசி சிலிர்த்தாள் பெண்.
அதன் பின் அவர்களது பள்ளிக்கான சாஃப்ட்வேர்கள் லான்ச் செய்ய.. அதை சுவாரஸ்யமில்லா சுவாரசியத்தோடு பார்த்திருந்தான் அர்வி.. அந்த கூட்டத்தின் கடைசி இருக்கையில் அமர்ந்து!!
"நான் மட்டுமல்ல… எனது தங்கை ஆரத்தியாவும் ஒரு புதிய சாப்ட்வேரை கண்டுபிடித்து அறிமுகப்படுத்த போறாங்க.. ஷி இஸ் ஃப்ரம் கேம்ப்ரிட்ஜ் யுனிவர்சிட்டி!! லெட்ஸ் வெல்கம் மை லவ்வபில் சிஸ்டர்" என்றவன் கைத்தட்டி ஆரவாரம் செய்ய கூட்டமும் கைதட்டியது!!
"இவனுக்கே இவ்வளவு தலை கனம். இவன் தங்கச்சிக்கு எவ்வளவு தலைக்கனமோ?" என்று அலட்சியமாக பார்த்தவனின் பார்வைகளில் விழுந்தாள் ஆர்த்தியாக இவளிடம் வேலை செய்த ஆரத்தியா!!
அதிர்ச்சியோடு கண் சிமிட்டாமல் அவளையே அர்வி பார்க்க.. அதே அதிர்ச்சியோடு ஆரத்தியாவை பார்த்த மேடையில் இருந்த யாழினி சற்றென்று திரும்பி நண்பனை கண்களால் துழாவி பார்த்தவள் அவனின் வெறுமையான கண்களை வலியோடு பார்த்தாள்.
ஆனால் அவர்களது அதிர்ச்சி அதோடு தீரவில்லை!!
ஆரத்தி தான் கண்டுபிடித்ததாக கூறிய சாப்ட்வேர் முழுக்க முழுக்க அர்வியின் அயராத உழைப்பால் செய்யப்பட்ட அதே சாஃப்ட்வேர்!!
ஏழை பணக்காரன் என்ற பாகுபாடில்லாமல் அனைவரும் பெறத்தக்க வகையில் செய்யப்பட்ட அவனது சாஃப்ட்வேர்.. இங்கே பணக்கார வர்க்கத்தின் கையில் சிக்கியது!!
அடுத்த கணம் தான் ஏமாற்றப்பட்டது முகத்தில் அறைய… கண்களில் வலி.. மனதில் ரௌத்திரத்தோடு.. அதி கோபத்தோடு மேடையை நோக்கி சென்றவன், அங்கே அமர்ந்து அவனையே கண்கள் கலங்க பார்த்திருந்த யாழினி பார்த்ததும் சட்டென்று நின்றது. அடுத்த கனம் அந்த அரங்கத்தை விட்டு வெளியேற இருந்தான் அரவிந்த்!!
