43
அன்று…
“இந்த நேரத்துல யாரு?” என்றப்படி தூக்க கலக்க விழிகளை தேய்த்தபடி கதவைத் திறந்த மேகலா,
கொட்டும் மழையில் நனைந்து அதுவும் பிள்ளையோடு நின்றிருந்த மகளை கண்டதும் திடுக்கிட்டார்.
அன்று “இவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன்” என்று வீம்போடு வீட்டை விட்டு வெளியே சென்று மகள்.. அதே வீம்போடு பெற்றவரின் வீட்டு படி ஏறவில்லை.
இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போதுதான் நேரில் பார்க்கிறார்.
ஒரே ஊர் என்பதால் அவ்வப்போது இருவரும் பார்த்துக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் ஏராளம் தான். அப்போதெல்லாம் மகளையும் பேத்தியையும் தூரம் இருந்தே பார்த்துவிட்டு மனதின் ஏக்கத்தை புதைத்து விட்டு கணவனுக்கு பயந்து அமைதியாக சென்று விடுவார்.
மேகவதனி காதல் தான் முக்கியம் என்று நிரஞ்சன் பின்னே சென்ற பின், உற்றார்கள் உறவினர்கள் முன்னே எத்தனை எத்தனை அவமானம்.. எத்தனை எத்தனை பேச்சுகள்.. எத்தனை எத்தனை தலை குனிவுகள்.. அத்தனையும் தாண்டி வாழத்தான் வேண்டும் என்ற நிலையில் அவர்களும் எப்படி பெண்ணை ஏற்றுக் கொள்வார்கள்?
‘தங்கள் பெண் எங்கோ நிம்மதியாக சந்தோஷமாக அவள் மனதுக்கு பிடித்தமானவரை திருமணம் செய்து குழந்தை குட்டியோடு நிம்மதியாக இருக்கிறாள்’ என்று மன நிம்மதியோடு இருந்த அன்னையின் முன்..
மகள், இப்படி கொட்டும் பேய் மழையில் நனைந்து.. அழுது வீங்கிய விழிகளோடு.. கையில் பிள்ளையோடு அர்த்த ராத்திரியில் வந்து கதவை தட்டினால் எப்படி இருக்குமாம்?
“வதனி..” என்று அவர் அலற.. உறங்கிக் கொண்டிருந்த தங்க பாஸ்கரனும்.. தன் அறையில் ஃபோனை பார்த்துக் கொண்டிருந்த விகர்த்தனனும் ஓடி வந்தனர்..!
“மா என்ன ஆச்சு? என்ன ஆச்சு மா?” என்று முதலில் ஓடிவந்தது விகர்த்தனன் தான்..
தன் அருகில் படுத்து இருந்த மனைவி திடீரென்று அலறும் சத்தம் கேட்டவுடன்.. எங்கோ விழுந்து விட்டாளோ.. ஏதேனும் அடிப்பட்டு விட்டதோ.. என்று பயந்து எழுந்தார். மூட்டு வலியால் சற்றென்று ஊன்றி நடக்க முடியாத காலை ஒரு நிமிடம் அழுத்தி ஊன்றி, வேகமாக வந்தார் தங்க பாஸ்கரன்.
இருவரும் கண்டது கண்களில் திகைப்போடு வாயில் கை வைத்தப்படி சிலையாய் நின்றிருந்த மேகலாவைத் தான்.
நல்ல வேலை கீழே எங்கும் விழவில்லை அம்மா என்று ஆசுவாசத்துடன் அவர் அருகே சென்றான் மகன்.
“அம்மா !?! என்னம்மா ஆச்சு?? ஏன்மா இப்படி பேய் அறைஞ்ச மாதிரி நிக்கிற? எதுக்கு இப்போ வாச கதவ வேற தொறந்து வச்சிட்டு நிக்கிற? சீரியல் பார்க்காத பார்க்காதனு சொன்னா கேக்குறியா நீ? எதையாவது பார்த்துட்டு எதையாவது கண்டு பயந்து அலறுற?” என்றப்படியே,
“கதவை பூட்டு மா” என்று வாசல் புறம் சென்றவன் அங்கு வதனியைக் கண்டவனுக்கும் ஏக அதிர்ச்சி தான். அதுவும் அவள் கையில் குழந்தை மழையில் நனைந்து விசும்பிக் கொண்டு இருந்தாள்.
“யாருடா? என்னடா? ஏன்டா அம்மாவும் பிள்ளையும் இப்படி நிக்கிறீங்க?” என்றபடி வந்த தங்க பாஸ்கரன் மகளைக் கண்டதும் திக் என்று ஆனது அவருக்கு.
எந்த தந்தைக்கு தான் மகள் மீது பிரியம் இல்லாமல் இருக்கும்?
என்ன தான் அவள் பிடிவாதக்காரியாக, தனக்கு பிடித்தவனோடு சென்றாலும்.. அதே பிடிவாதத்தை வாழ்வில் காட்டி கணவனோடு நன்றாக வாழ்கிறாள் என்று நெஞ்சில் ஓர் நிம்மதி இருந்தது.
அதையும் பிடுங்கி எறிந்தாற் போல இப்படி வந்து நிற்கும் மகளை நெஞ்சை நீவிக் கொண்டே பார்த்திருந்தார் தங்க பாஸ்கரன்.
“நான்.. நான்.. உள்ள வரலாமா?” என்று திக்கி திணறி கேட்கும் அக்காவை கண்டதும் விகர்த்தனனுக்கு மனம் பிசைந்தது. அதைவிட பெற்றவர்களுக்கோ அந்த மழையிலும் வயிறு பற்றி எரிந்தது.
“ஐயோ.. ஐயோ.. இதுக்கா ஒன்ன அருமை பெருமையா வளர்த்தேன்? இப்படி நடுநிசியில வந்து நிக்கவா உன்ன கஷ்டப்பட்டு வளர்த்தேன்?” என்று அவர் ஆரம்பிக்க..
“அம்மா சத்தம் போடாத.. பக்கத்துல எல்லாம் வீடு இருக்கு. நீ உள்ள வா வதனி” என்று அவன் அழைக்க.. அவள் கண்கள் இருவரையும் தவிர்த்து தந்தையை தான் பார்த்திருந்தது.
அந்த கண்களில் அப்படி என்ன இருந்தது? மன்னிப்பா? யாசிப்பா? குற்ற உணர்ச்சியா? வலியா? ரணமா? இதில் ஏதேனும் ஒன்றா இல்லை எல்லாமே கலந்தா? என்று பிரித்தெரிய முடியாமல் நின்றிருந்த மகளைப் பார்த்த, தங்க பாஸ்கரன் எதுவும் கூறாமல் அமைதியாக சென்று சோபாவில் அமர்ந்து கொண்டார்..
“இந்த நிலையிலும் உங்க அப்பாவுக்கு வீம்ப பாரு” என்று மகனிடம் மெல்லிய குரலில் கடிந்தவர் “நீ உள்ள வா” என்று மகளை கைபிடித்து உள்ளே இழுத்தார் மேகலா.
“குழந்தைய வாங்கு டா” என்று மகனிடம் கட்டளையிட அவன் மிருவை தூக்க.. அவளோ அன்னையிடமிருந்து பிரிந்து வர பயந்து மாமனிடம் திமிறினாள்.
“உஷ்.. மிரு.. மாமா டா.. மாமா தான் வா..” என்று அவன் குழந்தையை சமாதானப்படுத்தி தூக்க.. மெல்ல அவனை திரும்பிப் பார்த்தாள். பலமுறை தாய் தந்தையோடு செல்லும் போது வரும் போது பார்த்து இருக்கிறாள் அல்லவா ?
நொடியும் தாமதிக்காமல் “மாமாஆஆ” என்று அவன் மீது சாய்ந்து கட்டிக் கொண்டவள் அழ..
“சக்தி துண்டு எடுத்துட்டு வந்து தொட புள்ளய.. நனைஞ்சிருக்கா பாரு..” என்ற மேகலா சரசரவென்று தங்கள் அறைக்குள் நுழைந்து இரண்டு துண்டுகளை எடுத்துட்டு வந்து மகனிடம் ஒன்றை கொடுத்து பேத்தியை துடைக்க சொல்ல.. மற்றொன்றை மகளிடம் கொடுத்தார். அவளோ அப்படியே தந்தைக்கு எதிரே அவரை வெறித்தபடி நின்றிருந்தாள்.
மகனைப் போல் மனைவியைப் போல் தங்க பாஸ்கரனால் மகளிடம்
சற்றென்று பேசிவிட முடியவில்லை.. அவரும் அமைதியாக மகளை பார்த்துக் கொண்டே இருந்தார்.
“உங்கள கஷ்டப்படுத்திட்டு போனதுக்கு தான் அதே கஷ்டத்தை ஆண்டவன் எனக்கு கொடுத்திருக்கான். கர்மா பூம்பராங்கனு எங்கோ படிச்ச ஞாபகம்.. அது என் வாழ்க்கையில சரியா இருக்கு. உங்களுக்கு எவ்வளவு ரணத்தை கொடுத்தேனோ.. கடவுள் சரியான கறரார்.. கொஞ்சம் கூட குறைக்காமல் எனக்கும் கொடுத்துட்டார்” என்று அழுகையை அடக்கிக் கொண்டு அவள் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் பெற்றவர்களின் மனதிற்கு அத்தனை பெரும் வலியை கொடுத்தது.
“ஏன் டி பெத்தவங்க நாங்க புள்ளைங்க நல்லா இருக்க கூடாதுன்னு நினைப்போமா? என்னதான் எங்களுக்கு அவ்வளவு பிரச்சனை தலைகுனிவு வந்தாலும் நீ நல்லா இருக்க கூடாதுன்னு ஒரு நாள் கூட நாங்க நினைச்சது இல்லடி” என்று அழுகையோடு மகளை சாடினார் மேகலா.
விரக்தியாக அன்னையைப் பார்த்து சிரித்தவள் “நான் நல்லா இருக்க கூடாதுனு நீங்க நினைச்சீங்கனு எப்போ சொன்னேன்? என்னால நீங்க பட்ட வலிய, நான் அனுபவிச்சேனு சொன்னேன். கொஞ்ச நேரம் நான் தனியா இருக்கட்டுமா?” என்றவள் முன்பு அவளும் தம்பியும் பயன்படுத்திய அறையில் சென்று கதவடைத்துக்கொண்டாள்.
“என்னடா சக்தி.. என்னடா இவ இப்படி பண்றா? என்னடா நடந்திருக்கும்? இத்தனை வருஷம் நல்லா தானடா இருந்தாங்க.. இப்ப என் பொண்ணு இப்படி வந்து நிற்கிறாளே டா.. அதுவும் அர்த்த ராத்திரியில.. நான் என்னடா பண்ணுவேன்?” என்று புலம்பி தவித்தார் மேகலா.
அன்னை அல்லவா??
மேகலா வாய் விட்டு புலம்பி விட்டார். தங்க பாஸ்கரன் புலம்பவில்லை அவ்வளவுதான் வித்தியாசம். மற்றபடி மேகலாவின் நிலையில்தான் இருந்தார் அவரும்.
“இருங்க முதல்ல கதவை சாத்திட்டு வரேன்.. நீங்க பேசுறது அடுத்த வீட்டுக்கு எல்லாம் கேட்கும் போல..” என்று வாசல் கதவை அடைக்க சென்றவன், எதிரே இருளில் ஏதோ ஒரு உருவம் இருப்பதை பார்த்து போலீஸ்காரன் மூளை விரைக்க.. சற்று முன்னால் சென்று பார்த்தவன் திடுக்கிட்டான். ஏனெனில் அங்கே நின்று இருந்தது நிரஞ்சன்.
“இவரு ஏன் இங்கே நிக்குறாரு? எப்போது இருந்து இப்படி நிக்கிறாருனு தெரியலையே இவரோட சண்டை போட்டுட்டு தான் வந்துட்டாளா? என்ன பிரச்சனையா இருக்கும்?” என்று ஏதும் புரியாமல் இவர்கள் வாசலில் இருந்து சற்று தள்ளி நின்றிருந்த நிரஞ்சனை பார்த்தவாறே வந்து கதவடைத்தான்.
அதற்குள் மேகலா பேத்தியின் உடம்பு துடைத்து நனைந்த உடைகளை எல்லாம் மாற்றி விகர்த்தனின் ஒரு டி-ஷர்ட்டை அணிவித்து இருந்தார். அங்கே இங்கே லூசாக தொங்குவதை ஊக்குமாட்டி சரிபடுத்தி “நீ வா தங்க புள்ள” என்று பேத்தியை படுக்க வைத்தார்.
மழையில் நனைந்திருந்தது, ஏதோ பிரச்சினை பெற்றோர்க்குள் என்று அவர்களின் சத்தம் கண்டு அழுகை பயம் பலவகையான உணர்வுகளில் சிக்கி தவித்திருந்த மிருளாணினி ஆச்சியின் அரவணைப்பில் மெல்ல கண் அயர்ந்துவிட்டாள்.
“என்ன டா உள்ள போனவள இன்னும் காணும்?” என்று பதறினர் மூவருமே.
“நீ எதுக்கும் கதவை தட்டு டா சக்தி” என்று மேகலா புலம்ப..
“வதினி.. வதினி.. கதவ தொற.. கதவத் தொற” என்று வேகவேகமாக கதவை தட்டினான் விகர்த்தனன்.
சட்டென்று கதவை திறந்து வந்தவள் மூவரையும் ஒரு பார்வை பார்த்து “தற்கொலை எல்லாம் செஞ்சுக்க மாட்டேன்.. அதெல்லாம் எப்பவோ கடந்திட்டேன்.. பொண்ணுக்காக நான் வாழனும்னு இல்ல..” என்று உயிர் மரித்த குரலில் கூறியவள்,
“கொஞ்சம் நேரம் தனியா மட்டும் இருக்கேனே.. ப்ளீஸ்..” என்று கை கூப்பினாள்.
பெருமூச்சு ஒன்றை விட்டவன் உள்ளே சென்று தன் ஃபோனை மட்டும் எடுத்து வந்தான் விகர்த்தனன்.
“அம்மா நீ உள்ள போய் மிருவோட படுத்துக்குங்க.. நானும் அப்பாவும் இங்க படுத்துக்கிறோம்” என்றவன் பேசாமல் அமர்ந்திருக்கும் தந்தையை பார்த்தான். அவரோ அப்படியே தான் அமர்ந்திருக்க.. கண்களை காட்டி அன்னையை உள்ளே தூங்க அனுப்பியவன், தந்தையே கட்டாயப்படுத்தி தூங்க வைத்தான்.
ஆனால் அவனுக்கு தூக்கம் இல்லாமல் போனது அவ்விரவு. மீண்டும் மெல்ல ஓசைப் படாமல் கதவை திறந்து பார்க்க.. நிரஞ்சன் அங்கே தான் நின்று இருந்தான்.
