அழகன் 19
அன்று காங்கேயனை அழைத்து கொண்டு கால்நடை மருத்துவமனைக்கு வந்திருந்தாள் அங்கயற்கண்ணி.
“என்ன அக்காஆஆ.. உங்க தம்பிக்கு நல்லா இணையா துணையா பார்த்து சேர்த்து விட்டீங்களா?” நக்கல் தெறித்தது அவனின் குரலில்..!
“அதெல்லாம் நல்லாவே ஆச்சுது மாட்டு டாக்டரே..! நல்லா காறாம் பசுவா பார்த்து சேர்த்து விட்டாச்சு” என்றாள் அவனைப் பார்க்காமல் வேறு புறம் திரும்பி நின்று கொண்டு..!
“அதானே..! யார யாரு கூட இணை சேர்க்கணும்னு எல்லாம் உங்ககிட்ட தானே கத்துக்கணும்..! அதுல எல்லாம் நீங்க பிஹெச்டி வாங்கினவங்க இல்லையா?”
என்று வெளிப்படையாக கேட்டு
தன்னை சீண்டலாக பார்க்கும் சரபேந்திரனை கொஞ்சமும் அசராமல் அனல் காக்கும் பார்வை பார்த்தாள் அங்கயற்கண்ணி.
“மனுசன் தேன் அப்பப்போ நிறம் உரு மாறுறாய்ங்க.. ஆனா மாடு எல்லாம் அப்படி கிடையாதுல. அதுகளுக்கு மனுசங்கள மாதிரி சூட்சும புத்தியும்.. விட்டுட்டு ஓடற புத்தியும்.. துரோகம் பண்ற புத்தியும் கிடையாது” என்றாள் அவளும் அவனுக்கு சலிக்காமல் திருப்பிக் கொடுத்தபடி..!
“ஆஹான்.. அப்படியா? பார்த்தாலே தெரியது..!” அவளிடம் சற்று தள்ளி நின்றவன் அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தான்.
“ஆமா.. ஆமா. அன்னைக்கு போல இன்னைக்கும் நீ பொண்ணு மாறியே இருக்குறல்ல... பாரேன் இந்த கெட்டப்பையே நான் இப்போ தான் ரியலைஸ் பண்ணுறேன். இன்னைக்கு இந்த புது கெட்டப்புல யார ஏமாத்த போறிக டீச்சரம்மா?" என்றான் நக்கலாக.. அதில் கொள்ளை கொள்ளையாய் பொறாமையும் கோபமும் இருந்தது.
இன்று அவள் வேலை செய்யும் பள்ளிக்கூடத்தில் ஆண்டுவிழா அதற்காக அவள் கிளம்பி கொண்டிருக்கும் நேரத்தில் தான்..
வேலையாள் காங்கேயம் பற்றி வந்து கூறினான்.
சாப்பிடாமல் கொள்ளாமல் அடம் பிடித்துக் கொண்டு யாரையும் கிட்ட நெருங்க விடாமல் ஒரு மாதிரியாக கத்திக் கொண்டே இருந்தான் காங்கேயன்.
ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு என்று தனியாக கொட்டில் இருக்கிறது. அங்கே வேலை செய்ய நிறைய ஆட்களும் உள்ளனர். அங்கு வேலை செய்யும் வேலையாள் வந்து வீட்டில் கூற.. இவள் ஆண்டு விழாவிற்கு தோதாக பட்டுப் புடவை சன்னமான நகைகளோடு கிளம்பியிருந்தாள்.
“என்னாச்சு காங்கேயனுக்கு?” என்றபடி தன் அறையில் இருந்து வந்த மகளின் அழகு கோலத்தை தான் வீட்டில் இருந்த பெற்றோர் இருவரும் அத்தனை ஆசையாக பார்த்தனர்.
மகளின் அந்த அழகு கோலம் அழுக்கு பட வேண்டாம் என்ற எண்ணத்தில் போஸ்பாண்டி “நீ ஸ்கூலுக்கு போ ஆத்தா.. நான் இவன டாக்டர்ட்ட கூட்டிட்டு போறேன்” என்றார்.
“இல்லப்பா..! அவன் வரமாட்டியான். நானே அவன கூட்டிட்டு போறேன்
நீங்க கூட்டிட்டு போனீங்கன்னா உங்ககிட்ட சண்டித்தனம் பண்ணுவியான்.. சரியான அடாவடிப்பய..! அண்ணனும் காலையிலேயே கிளம்பி போயிடுச்சு இல்லன்னா அண்ணன் கிட்டயாவது சொல்லி இருக்கலாம்” என்றவள், வேகமாக கொட்டிலுக்கு சென்றாள். கிட்ட சென்று காங்கேயனை அவதானித்தாள்.
அவளுக்கு தெரிந்த சில பல வைத்திய முறைகளை செய்தும் அவனது அந்த சன்ன அழுகுரல் ஏனோ நிற்கவேயில்லை.
“என்னைக்கு இப்படி பண்ண மாட்டியான்.. ஏன் இன்னைக்கு இப்படி பண்றியான்?” என்று யோசித்தவள்,
நாமே அனுமானித்துக் கொண்டிருக்காமல் அவனை கால்நடை மருத்துவரிடம் காண்பித்து அபிப்ராயம் கேட்கலாம் என்று அழைத்து வந்தாள் சரபேந்திரனிடம்.
அழைத்து வரும்பொழுது அவளுக்கு ஒரு யோசனை. அன்னைக்கு போல இந்த காங்கேயன் குரலில் ஏதாவது வித்தியாசமாக தெரிகிறதா இணை சேர்வதற்கு? என்று அவனின் அந்த அழுகுரலை கூர்ந்து கேட்டு பார்த்தாள். நல்ல வேலையாக அப்படி எதுவும் இல்லை..!
“அன்னைக்கு அங்த சர்பம் சொன்னபோதே.. அப்பவே அப்பாரு கிட்ட சொல்லியாச்சு.. அப்பாவும் அதுக்கு ஏற்பாடு பண்ணிட்டாரே. அப்புறம் ஏன் இந்த காங்கேயன் இப்படி கத்திக்கிட்டே இருக்கியான்? என்னடா ஆச்சு உனக்கு?” என்று வரும் வழி எல்லாம் தம்பியிடம் அவள் பேசிக்கொண்டே வந்தாள்.
அவனும் அவளின் அருகாமையிலேயே எதுவுமே பேசாமல் அவளை உரசி உரசி நடந்து அமைதியாகவே வந்தான்.
ஆனால் பள்ளி ஆண்டு விழாவிற்காக பார்த்து பார்த்து அவள் கட்டிய சேலையை இவன் கேலிக்கூத்து போல சொல்வதைக் கண்டு அவளுக்கு ஆத்திரம் வந்தது. கடுப்பாக இருந்தது..! அதை எல்லாம் தாண்டி மனசு லேசாக வலித்தது.
‘இவன் என்னை நம்பவே மாட்டானா?’ என்று அத்தனை வருத்தமாக இருந்தது. அவள் மனதின் வலி அப்பட்டமாக அவள் கண்களில் தெரிந்தது.
ஆனால் தன் வலியை ரணத்தை வருத்தத்தை அவனிடம் காண்பித்துக் கொண்டால்.. அவள் அங்கயற்கண்ணியே கிடையாது..!
அவனும் அதைத்தான் எதிர்பார்க்கிறான் என்று அவளுக்கு தெரியும்.
‘யோவ் சர்பம்.. நீ எதிர்பார்த்ததை நான் உனக்கு தரவே மாட்டேன்யா. நான் அங்கயற்கண்ணியாக்கும்..!” என்று அவனை தீர்க்கமாக பார்த்தவள்,
பின்பு உதட்டை சுழித்து, “நான் என்ன எங்க ஊர் திருவிழாவில நடக்கிற ஆடலும் பாடலும் நிகழ்ச்சிக்காக கெட்டப் போட்டுருக்கேன்? மாட்டு டாக்டரே.. வேலைய மட்டும் பாருங்க மத்த வேலையில கண்ணுக்கு காது மூக்கை நுழைக்காதீரும்.. ஒருவேளை போல ஒரு வேள இருக்காது. ஏன்னா இது மதுர.. பார்த்து சூதானமா நடந்துக்கோய்ங்க” என்று கோபமாக கூறியவளோ அவனை எரிச்சல் மேலிட பார்த்தாள்.
"மதுரை மண்ணுல பிறந்துட்டா உனக்கு என்ன நீ கொண்டு வந்த மாடு மாதிரி உனக்கு தலையில ரெண்டு கொம்பா இருக்கு? ஒரு கவர்மெண்ட் டாக்டர்னு கூட பாக்காம மரியாதையில்லாம பேசுற.. இதுக்கு உன்மேல நான் கம்ப்ளைன்ட் கொடுப்பேன் தெரியுமா?’ என்றான் அவன், விரைப்பாக டாக்டர் கோட்டில் உள்ள பாக்கெட்டில் கைவிட்டபடி..!
“நீங்க மட்டும் யாரு கிட்ட பேசிட்டு இருக்குறீக மாட்டு டாக்டரே?? ஞாபகம் இருக்குங்களா? நாங்களும் அதே கவர்மெண்ட் எம்பிளாய் தேன். உங்கள மாதிரி டாக்டரு இன்ஜினியரிங் எல்லாத்தையும் உருவாக்கி அனுப்புற டீச்சர் அம்மாவாக்கும் நான். நீங்களும் பார்த்து பக்குவமா பேசுங்க.. அதே ரிப்போர்ட்ட நாங்களும் அனுப்பவோம்.. கவர்மெண்டுக்கு” என்றாள் அவனுக்கு குறையாது விரைப்பாக..!
என்னமோ இவர்கள் இரண்டு பேரும் புகார் கொடுத்ததும் அரசாங்கம் அதை தலைமேல் தூக்கிக் கொண்டு உடனே விசாரித்து நடவடிக்கை எடுப்பது போலத்தான் இவர்கள் பேச்சு இருந்தது.
அதுசரி.. கிடப்பில் கிடக்கும் எத்தனையோ அவசர வேலையையே பார்க்க மாட்டார்கள் மாண்புமிகு அரசாங்க அங்கித்தினர். இதில் இவர்கள் சொல்லவதையா செய்யப் போகிறார்கள்?
அட போங்கப்பா..!
‘இதோ.. இந்த பேச்சு.. கொஞ்சமும் விட்டுக் கொடுக்காத இந்த பேச்சு தான், அவளிடம் இன்னமும் என்னை கட்டிப்போட்டு வைத்திருக்கிறது’ என்று நினைத்தவன் மனதில் மெல்லிய மழைச்சாரலாய் காதல்..!
ஆம்.. அங்கயற்கண்ணி கொஞ்சமும் கூட விட்டுக் கொடுக்கவே மாட்டாள். அதற்காக அன்பு இல்லை. காதல் இல்லை என்றெல்லாம் கிடையாது. அதெல்லாம் கொள்ளை கொள்ளையாய் இருக்கிறது அவளுக்குள்..!
ஆனால் அவளை சீண்டி பார்த்தால் பதிலுக்கும் அவளும் சிங்கம் என சீறிவிடுவாள்.
“பொம்பள புள்ளையா அடக்க ஒடக்கமா இருக்காளா பாரு.. எப்பவும் வாய்க்கு வாய் பேசிகிட்டு” என்ற அங்கயற்கண்ணியை பரிகாசித்தான் சரபேந்திரன்.
“யோவ்.. மாட்டு டாக்டரே.. நீங்க பேசுறதுக்கு எதிர் பேச்சு பேசாம இருக்கிறதுக்கு நான் என்ன பொம்மையா? எங்க ஊர்ல பொண்ணுங்களுக்கு அப்பவே சுதந்திரம் கொடுத்துட்டாய்ங்க.. நாங்க யாருக்கும் யாரும் அடங்கி போகணும் அவசியம் இல்லை. அது கட்டுனவனே ஆனாலும்..!” என்றவள்,
“காங்கேயனுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி சும்மா அனத்திக்கிட்டே இருக்கியான்?” என்று கேட்டாள். முன்னிருந்து குரல் முற்றிலுமாக மாறி காங்கேயன் மீது அன்பும் அக்கறையும் கொண்ட அக்காவாய் இப்போது.
“ஏதோ சாப்பிட்டது அவனுக்கு செரிக்கல போல.. நீங்க சாப்பிடுற எல்லா ஐட்டத்தையும் அவனும் சாப்பிடனும்னு அவசியம் இல்ல” என்றவன்,
ஒரு மருந்தை அவளிடம் நீட்டி “இத வாழைப்பழத்தில் நடவுல வச்சு அவனுக்கு அப்படியே கொடுத்திடு.. இரண்டு வேலையும் கொடுக்கணும் மறக்க கூடாது..! வீட்ல உள்ள பழையது எல்லாம் கொண்டு போய் அவனுக்கு ஊத்தாதீங்க” என்று சில பல அறிவுரைகளை அவன் கூற, அதையெல்லாம் பொறுப்பாக கேட்டு தலையாட்டிக்கொண்டாள் மறுப்பேச்சு பேசாமல்..!
‘இந்த மாதிரியே எப்பவும் சொல் பேச்சு கேட்டு நடந்தா நல்லா தான் இருக்கும்.!’ என்றான் மனதுக்குள் பெருமூச்சு விட்டபடி..!
“இந்த பணிவு எப்போதும் இருந்தா சரி தான்..!” என்றான் அவளை அமர்த்தலாக பார்த்தப்படி..!
“அவ்வளவுதானா? இன்னும் வேற ஏதாவது கண்டிஷன்ஸ் எல்லாம் இருக்கா? அதையும் சொன்னீங்கன்னா..
அத மாதரி ஒரு பொண்ணு பார்த்துறலாம் நம்ம டாக்டருக்கு?” என்று கேட்டாள், சற்றே கேலியாக..
“பொண்ணு தானே? என்னோட விருப்பம் தானே? சொல்லிட்டா போச்சு..! ஆமா.. டீச்சர் அம்மா எப்போ மேரேஜ் புரோக்கர் ஆனீங்க?” என்றவன் அவளை சீண்டினான்.
“கொஞ்ச நாளா தேன். இப்படி ஊருல உள்ளவியங்களுக்கு பார்க்கும்போது எவனாவது நல்ல தெகிரியமா கட்டுன பொண்ண கண்கலங்கமா வருத்தப்படுத்தாத மாதிரி முக்கியமா நம்பிக்கை உள்ள ஒரு ஆம்பளைய கல்யாணம் பண்ணிக்கலாம்னு எண்ணத்தில் தேன்.. அப்படியே உங்களுக்காக மட்டும் ஃப்ரீ சர்வீஸா பண்றேன்?” என்றாள்.
“ம்ஹும்.. ஃப்ரீ சர்வீஸ்..??” என்றவன், அவளை மேலிருந்து ஒரு மார்க்கமாய் பார்த்து,
“உங்கள மாதரி அடங்காபிடாரியா இல்லமா.. குணவதியா இருந்தா நல்லா இருக்கும்ங்க” என்றான்.
“ஓஹ் குணவதியா? அவ்வளோ தானா?” என்று கேட்டாள்.
“அதுவே போதும். அப்படி ஒரு பொண்டாட்டி கெடச்சா ஆனந்தமா வாழ்ந்துடுவேன்.” என்றான் கண்கள் மின்ன..
“ஒஓ.. அமைதியான பொண்டாட்டி வேணுமா? ஆனா உங்க தலையெழுத்துல அப்படி எதுவும் இருக்கல போலையே?” என்று சொல்லிக்கொண்டே அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள்.
அவள் கண்கள் இரண்டும் கேலியில் மின்னின..!
“ம்ம்ம்.. விதியை மதியால் மாத்தலாம்னு எங்க ஊருல பெரியவங்க சொல்லி இருக்காங்க..” என்றான் அவனும் விடாமல்..!
“ஓஹ்.. அப்போ மதினு பேரு உள்ள பொண்ணா பார்த்துடுவோமா?”
“மதியா?”
“ஆமா.. இப்ப நீங்கதான சொன்னீக.. விதியை மதியால் வெல்லலாம்னு, அப்ப மதினு பேரு உள்ள பொண்ணாவே பார்த்துடலாம்..
என்ன டாக்டரே பேரு புடிச்சிருக்கா?”
“ஹ்ம்ம் ரொம்ப பிடிச்சிருக்கு.. சீக்கிரம் பொண்ண பார்த்து கொடுத்திங்கனா.. நானும் இந்த பிரம்மச்சாரி வேஷத்த முடிச்சிட்டு கல்யாணம் பண்ணிட்டு சாம்சார வாழ்க்கையில தொடகடீர்னு குதிப்பேன்” என்றான் அதி தீவிரமாக..!
‘வர வர இவனுக்கு வாய் ஓவரா போகுது. ஏதோ பேச்சுக்கு சொன்னா உண்மையாவே என்னை பொண்ணு பார்க்க சொல்றான். தேவையில்லாம பேசி என் நாக்கை புடுங்குறானே' என்று மனதிலேயே புலம்பியவள் அவனை கனல் கண்களால் பொசுக்கிக் கொண்டிருந்தாள்..
அதையேல்லாம் அலட்சியம் செய்த சரபேந்திரனோ "பதில் சொல்லுங்க புரோக்கர் மேடம்.. வாய்ல எதுவும் வாஸ்து சரியில்லையா?" என்று நக்கலாக கேட்டான்.
“கண்டிப்பாக.! உங்களுக்கு இல்லாததா? எங்க ஊரோட ஒரே மாட்டு டாக்டர் நீங்க.. யேன் தம்பி போல எத்தனை பேர நல்லா கவனிச்சு அனுப்புறீக அதுக்கு நாங்க பதிலுக்கு ஏதாவது செய்ய வேணாம்? எங்க அண்ணே எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறேனு சொல்லுது. கூடவே சேர்த்து உங்களுக்கும் ஒரு பொண்ணு பார்க்க சொல்லிட்டா போச்சு..! வரட்டா டாக்டரே..!” என்றவள் காங்கேயன் கயிற்றை பிடித்து ஒற்றை கையால் சுற்றிக்கொண்டு நடக்க… அவளை தான் அத்தனை ரசித்து பார்த்தான் சரபேந்திரன்.
“எப்படி பால் போட்டாலும் அசராம சிக்சராவே அடிக்கிறாளே.. கொஞ்சமாவது அவ கூட்டில் இருந்து வெளிவந்து, ‘நீதான் வேணும்.! நீ மட்டும் தான் வேணும்னு’ சொல்றாளா?” என்று டாக்டர் தான் மனதுக்குள் புலம்பி தவித்தான்.
கால்நடை மருத்துவமனை சாலையின் முன்னால் இருக்க, அதன் அருகில் காம்பவுண்ட் சுவற்றுக்கும் மருத்துவமனை வளாகத்திற்கு இடையே உள்ள இடத்தில் தான் மாடுகளை கட்டி வைத்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்வான் சரபேந்திரன்.
அவனுக்கு உதவியாக இருந்தவர்களோ இன்னும் காலை வேலைக்கே வந்து சேரவில்லை.
பெரும்பாலும் கால்நடை மருத்துவமனையில் அதிகமாக கூட்டமும் இராது. சுற்றி முற்றி ஒரு முறை பார்த்தவன், அவளை விட மனதில்லாமல் மீண்டும் அவளிடமே வம்பு வளர்த்தான்.
“வேணும்னா.. உங்களுக்கு ஒரு ஆப்பர் தரேனே டீசசரம்மா. நீங்க ஓகே சொல்லி பாருங்களேன் எனக்கு. உங்கள நானே கட்டிக்கிறேன்” என்றான் அவள் என்ன பதில் சொல்வாள் என்று தெரிந்து கொண்டே…!
“ஆஹா.. ரொம்ப தேன் ஆச.. ஆனா பாருங்க டாக்டரே, எனக்கு அப்படிப்பட்ட எண்ணம் இல்லை?” என்றாள், ‘போடா போடா உன்னை தெரியாத எனக்கு’ என்று மனதில் நினைத்துக் கொண்டு..!
“ஒரு சான்ஸ் தான் கொடுத்து பாருங்களேன் டீச்சர் அம்மா!” என்றான் தன்னிலை இருந்து அதாவது அவன் கோபத்திலிருந்து சற்று கீழே இறங்கி வந்து.. அது அவளுக்கும் புரிந்து தான் இருந்தது.
“ஒஹ்.. அப்போ டாக்டரு என்னைய கட்டிக்க ரெடியா இருக்கீரு?” என்று கேட்டாள் அவன் கண்களை ஆழ்ந்து பார்த்து.
“கட்டிக்கிட்டுமா?” என்றான் சற்றே அவளை நெருங்கி வந்து..!
“ம்ம்.. கட்டிக்கிட்டு?” சீண்டலாய் அவள்..!
“ம்ம்ம் கட்டிக்கிட்டு தான்?” அவளை தீண்ட பேராவலாய் அவன்..!
“என்னைய கேட்டா? டாக்டருக்கு அதுக்கு மேல எதுவும் தெரியாதோ?”
ஒயிலாய் அவள்..!
“தெரிஞ்சத எல்லாம் தெரியப்படுத்த நானும் ரெடி. இப்போ கட்டினா இப்பவே மொத ராத்திரி தான் டீச்சரம்மா..” அவள் மீது மையலாய் அவன்..!
“ச்சீ… பேச்ச பாரு..” என்றவள் அவன் கையில் அடித்தாள். உடனே அவள் கையை பிடித்து தன் விரல்களோடு அவளது விரல்களை கோர்த்தான் சரபேந்திரன்.
“விடுக.. விடுக.. இதென்ன பொது இடத்துல” என்றவள் அவன் கையை விட்டு விலக முயன்றாள். அவனோ விடாக்கண்டனாக விடவில்லை.
“ஐயோ விடுங்க.. யாராவது பார்த்துட போறாக” அவள் குரலில் ஒரு கிறக்கம் தெரிந்தது. அதனை அவன் அறியாமல் வேறு யார் அறிவார்?
“கனி….” மெதுவாக அவளை நோக்கி நெருங்கினான்.
நெருக்கமில்லா நெருக்கம்..!
உரசில்லா உரசல்..!
அனலாய் அவளுள் தகிக்க..
குளிர் பனியாய் அவன் உறைய..
சட்டென்று அவனை தள்ளிவிட்டாள்.
“தள்ளி போங்க ப்ளீஸ்.. இப்ப மட்டும் என்ன அக்கறை ஆசை எல்லாம். நான் தேன் வேற ஒருத்தனை தேடிப்போனவ தானே..! அதெல்லாம் இப்ப மறந்து போச்சா..” அன்று அவன் பேசி அமில வார்த்தைகளை கொஞ்சம் கூட மறக்காமல் அப்படியே திருப்பிக் கொடுத்தாள் அங்கயற்கண்ணி.
“ம்ப்ச்.. கனி.. இப்படி பேசாதடி..! வலிக்குது” என்று அவன் பேச்சை நீவ..
“ஏன் அன்னைக்கு நீ பேசுனது எனக்கு என்ன குளுகுளுன்னு இருந்துச்சா? நீங்க ஆம்பளைங்கள உங்க இஷ்டத்துக்கு கோபம் வந்தா அத நாங்க தாங்கணும்..! உங்களுக்கு காதல் வந்தா.. அப்போழும் நாங்க உங்க கூட ஒரசணும்..! உங்களுக்கு ஆசை வந்தா முந்தி விரிக்கணும்? அப்படித்தானே..! அதுக்கெல்லாம் இந்த அங்கயற்கண்ணி லாய்க்கு போட மாட்டா டாக்டரே..! வேற எவளாவது பார்த்துகிட்டு போயா சர்ப்பம்” என்று வேகமாக அங்கிருந்து அவள் செல்ல முயல..
“சாகுற வரைக்கும் தனியா இருந்தாலும் வேற ஒருத்திய எல்லாம் தேடிட்டு போக மாட்டேன். நீ சொன்ன மாதிரி கோபம் வந்தாலும்.. காதல் வந்தாலும்.. ஆசை வந்தாலும்.. ஒருத்தி கிட்ட தான் வருவேன்..! நல்லா கேட்டுக்கோ உன் ஒருத்தி கிட்ட மட்டும் தான் வருவேன்..!” என்றவன், முன்னே போய் கொண்டிருந்தவளின் கையை பிடித்து இழுத்தான். அவள் சட்டென அவன் மீது வந்து விழுந்தாள்.
அவள் கன்னத்தை பிடித்து அழுத்தி அ
வள் தலையை கொஞ்சம் திருப்பி பிடித்து அவளது இதழ்களை இறையாக்கினான்..!
அவனது,
பெரும் கோபத்துக்கு..
துளி கர்வத்துக்கு..
நனி காதலுக்கு..
வளர் நேசத்துக்கு..!
தொடரும்.
