சுற்றிலும் பல வண்ண விளக்குகள். அதன் நடுவே பெரிய நீருற்று. சிதறி விழும் நீர்த்துளியை விழிகள் கலங்க பார்த்து நின்றிருந்தாள். மனமோ குமைய ஓவென கேவி அழுதவள் தோளை தட்டினாள் தோழி.
"இப்போ எதுக்கு அழுதுட்டே வந்த? சொல்லு டி.."
அவள் தேம்பி அழ, "நிச்சயமே முடிஞ்சுடுச்சு.. இனி கல்யாணம்ன்னு நின்னுட்டே மணவறையை பாத்து கண்ட கனவு பலிச்சுடும்ன்னு மனசு துடிக்குதா? அப்போ என்ன வெங்காயத்துக்கு, விட்டுக் குடுத்த?
அதான் பாத்தேனே.. அப்படியே சிலை போல ஸ்டேஜ்ஜை பாத்துட்டு நிக்கிற. கல்யாணம் ஆகியிருந்தா தற்கொலை பண்ணிப்ப போல. எதுக்கு டி உனக்கு இந்த வீராப்பு? இப்போவும் ஒன்னும் கெட்டு போகல. பேசாம பிரதீஷ்க்கு போன் பண்ணி பேசு." என்றவள் அவளை அணைத்து ஆறுதல் கூற..
அவளோ விசும்பி அழுதப்படி அங்கிருந்து ஓட்டமாக ஓடி விட்டாள்.
நிச்சயம் முடிந்ததற்கே நின்று கொண்டே மணமேடையை கண்டு ஏதேதோ கற்பனை வரை சென்று விட்டாள். அதில் வந்த துக்கமும், கண்ணீரும் அவளை தனிமை தேடி ஓட வைத்தது.
பிரிவின் வலி சொல்லித் தீராது. கண்ணுக்குள் வைத்து ரசித்தவனுக்கு, கண் முன் திருமணம் என்றால் அவளால் மட்டுமல்ல எவராலும் ஏற்க முடியாது. திருமணம் செய்து கொள் என வாதாடி வழக்கிட்டவள் அழுது கொண்டே ஓடிச்சென்று மோதியது என்னவோ, மணமகன் மீதே.
மாடிப்படியில் இறங்கி வந்தவன் மீது, கண் மண் தெரியாது கால் போன போக்கில் அழுது கொண்டு வந்தவள், அவன் நெஞ்சில் மோதி அவனையும் தடுமாற வைக்க..
சிறு அதிர்விற்கு பின், எதிரே நிற்பவளை கண்டு திடுக்கிட்டான்.
குளமாக தேங்கிய விழிகள்.. வலியில் பேச துடித்துடித்த உதடுகள்.. கை கால்களோ வெலவெலத்து இருக்க..
அவள் அவளாக இல்லை என்பதை அறிந்தவன், "ராசிகா!" என அதே காதலோடு அழைத்தான்.
அவள் தான் அவ்வழைப்பில் உயிர் மடிந்து உயிர் பெற்றாள். சிறு இடைவெளியில் நின்றிருந்தவனை விழி வெட்டாமல் பார்த்து மெய் மறந்து நின்றவள் கண்கள் நீரை ஊற்றெடுத்தது.
எத்தனை முறை காதலோடு, கோவத்தோடு, கெஞ்சலோடு இப்பெயரை கூறியிருப்பான். இனி அதற்கான தருணம் வரப்போவதில்லை என உணர்ந்தவள், "ஸாரி.. பிரதீஷ்.." என்று அவன் உள்ளங்கை பற்றி அழுத்தம் தந்து கூற..
மணமகனோ மூர்ச்சையாகி போனான் அவள் ஸ்பரிசம் பட்டதில்.
அவள் மீது சொல்ல முடியாதளவு கோவம் தான். என்ன செய்வது காதலி கரைந்தாள் ஆடவன் மனம் ஏற்குமா?
அவனோ அவளை அணைக்க நெருங்க, "பிரதீஷ்.." என குரல் கேட்டதில் இருவரும் திகைத்து போய் மேல்படியை அண்ணாந்து பார்த்தனர். ஷியாம் தான் அவனை அழைத்திருந்தான். நல்லா வேளையாக அவன் அணைப்பை தடுத்திருந்தவன், ராசிகாவை முறைத்து பார்க்க அவளோ மணமகள் அறை நோக்கி வேகமாக படி ஏறி கடந்தாள்.
நண்பனை தனலாக பார்த்தப்படி கீழிறங்கி வந்தவனுக்கு அறைய வேண்டும் போல் இருந்தது.
"டேய் என்ன காரியம் பண்ண பாத்த? யாராவது பாத்தா என்ன ஆகியிருக்கும் தெரியுமா? விடிஞ்சா உனக்கு கல்யாணம். அவளை கட்டிப்பிடிக்க போற.
என்னடா நினைச்சுட்டுருக்க? வேண்டாம்ன்னு சொன்னவ, எதுக்கு உன்கிட்ட இப்போ நீலிக்கண்ணீர் வடிக்கிறா? ஓங்கி அறையனும் போல இருக்கு." என அவனும் கோவத்தில் வார்த்தையை விட..
"வார்த்தையை பார்த்து பேசு ஷியாம். நான் தாலி கட்டலைனாலும் அவ எனக்கு மனசளவுல பொண்டாட்டி தான்.." என்றவன் கூற்றில் திகைத்து நின்றவன், சாவியை எடுத்துக் கொண்டு எங்கு செல்கிறான் என புரியாமல் பார்த்தான்.
பிருந்தா அவளது தோழிகளுக்கு வெகு நேரமாக தண்ணி காட்டிக் கொண்டிருந்தாள். மாப்பிளை உறங்கி விட்டார் அது இதென காரணம் கூறி. எல்லோருக்கும் தோழி மற்றும் வருங்கால கணவனோடு ஒன்று சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொள்ளும் ஆசை. இருந்தால் தானே எடுக்க.
முதலில் அவன் மட்டும் தான் சென்றான். சிறிது நேரத்தில் அவர்களின் ஒட்டு மொத்த நண்பர்கள் கூட்டமும் யாதவ் வீட்டை நோக்கி படை எடுத்தது.
சில மணி நேரங்களுக்கு பின்..
பிருந்தா இடைவிடாது பிரதீஷிற்கு அழைக்க அவனோ அழைப்பை எர்க்கவில்லை. ஏற்கும் நிலையிலும் இல்லை. யாதவ் மனைவி தங்கை நேஹாவை இரண்டு நாட்களாக காணவில்லை என்பதால் அதற்கான விசாரணை நடந்தது.
அந்த விசாரணையை மேற்கொண்டதே ரோஹித் தான். எல்லோரும் பத்து தினங்களுக்கு முன் ஒன்றாக ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொண்டவர்களிடம் விசாரித்து விட்டு, கேஸை அடுத்து வேறு கோணத்தில் விசாரிக்க வேண்டுமென எம்.பியின் உத்தரவு.
இவ்விசாரணை கூட அவள் பற்றி வேறெதேனும் தகவல் தனிப்பட்ட முறையில் எவருக்கும் தெரியுமா என்பது தான். நேஹா ஏதோ திருமணத்திற்கு செல்கிறேன் என்று கூறி சென்றவள் அங்கு செல்லாது வேறெங்கு சென்றாள் என இதுவரை எவ்வித தகவல் இல்லை.
அவசரப்பட்டு எச்செய்தியும் ஊடகத்திற்கு தெரியாதபடி மறைமுக விசாரணை மட்டுமே நடந்தது. பிரதீஷிற்கு நேஹாவை பற்றி மற்றவர்களுக்கு தெரிந்தளவு கூட ஒன்றும் தெரியாது.
ஒரு ஃபார்மலிட்டிக்காக மட்டுமே அழைப்பு விடுத்ததாதல் அங்கு சென்றிருந்தான். சென்றவனும் இரவு 10 மணிக்கு மேல் மண்டபம் திரும்பி விட்டான்.
வந்தவன் சற்று தொலைவில் அவனுக்காக காத்துக் கொண்டிருந்த மணாளினியை கண்டும் காணாமல் செல்ல, அவளுக்கோ புசுபுசுவென கோவம் வந்தது.
நெடுநெடுவென அவனை நோக்கி நடந்து வந்தவள், "ஒரு நிமிஷம் நில்லுங்க!" என்றாள். அக்குரலில் அத்தனை காட்டம்.
அவன் ஆயாசமாக அவளை காண, "எங்க போயிட்டு வர்றீங்க?" என்றவளின் கேள்விக்கு சாமர்த்தியமாக பதில் அளித்து கடந்திருக்க..
"பார்ட்டியா? என்கொயரியா?" எனக் கேட்டாள் குத்தலாக.
இருக்க வேண்டிய குத்தல் தானே அவளுக்கும். எவ்வளவு நேரம் தான் தோழிகளை சமாதானம் செய்திருப்பாள். அதிலும் இந்த என்கொயரி ரூபியா தோழி மூலம் முன்பே அறிந்து கொண்டாள்.
ரூபியாவையும் நன்கு தெரியும். அவர்களின் பார்ட்னர்ஷிப் கம்பெனியில் தான் வேலை செய்கிறாள் பிருந்தா.
அவன் எதுவும் பேசாது மௌனமாக நிற்க, அவனை சோதிக்கத் துவங்கி விட்டாள். அதிலும் சில கேள்விகள் அவன் கோவத்தை தூண்டியது.
"என்கூட ஒரு காஃபி ஷாப் வர முடியல. பட் உங்கனால பிஸி டைம்ல பார்ட்டி வரை போய் வர முடியுது."
"பிருந்தா.. ஒன் செகண்ட் என்னை பேச விடுங்க.."
"என்ன பேச போறீங்க? ஹான்.. என்ன பேசணும் அதை சொல்லுங்க.."
"நீங்க தேவையில்லாம கோவப்படுறீங்க இப்போ. நான் சொல்ல வரதை கொஞ்சம் கேட்டுட்டு பேசுங்க.."
"கல்யாணத்துக்கு முன்னாடியே எவ்வளவு ஒளிவு மறைவு.. என் ஃபிரண்ட் அப்போவே சொன்னா.. நான் தான் உங்களை அநியாயத்துக்கு நம்பிட்டேன்..
விடிஞ்சா கல்யாணம்.. எங்க போறேன் வரேன்னு கூட சொல்ல வேணாம்.. ஆனால், ஏன் இல்லாத ஒன்னை சொல்லுறீங்க? உங்க ஃபிரண்ட்ஸ் கூட பார்ட்டி போக டைம் இருக்கு. காபி ஷாப் வர நேரமில்லை..
அதுவும் வேற ஒருத்தி உங்களை சச் எ ரொமான்டிக் பெர்சன்னு சொல்லுறா.."
அவளோ, கோவத்தில் வெடிக்க.. அவனுக்கோ இது எவள் கூறியிருப்பாள் என்னும் யோசனையே தலை தூக்கியது.
"இப்போ என்கொயரி! அதுவும் ஒரு பொண்ணு மிஸ்ஸிங் கேஸ். உங்க லட்சணம் ரொம்ப நல்லாருக்கு. இதுல என் மகன் அப்படி இப்படின்னு புகழ்ந்தாங்க உங்க வீட்டுல.
இதே நான் ஒரு என்கொயரிக்கு போயிட்டு வரேன் சும்மா விட்டுருவீங்களா? இல்லை உங்க வீட்டுல தான் எதுவும் சொல்லாம இருப்பாங்களா?
அப்போவே அந்த விஷயம் காதுக்கு வந்துச்சு.. வேணாம்ன்னு சொல்லாம.. எல்லாத்துக்கும் தலையை ஆட்டுனேன்.. இப்போ என் தலையில இடி விழுந்துடுச்சு.."
ஆடவனுக்கோ அவள் பேச பேச கோவம் தலைக்கேறியது. ஏதாவது பேச விட்டால் தானே? அவளே கேள்வியும் கேட்டு, பதிலும் கூறிக் கொள்கிறாள். அப்படியிருக்க, அவன் என்ன கூற முடியும்?
"என்ன காதுக்கு வந்துச்சு உங்களுக்கு? நீங்க நினைக்கிற மாதிரி என் சைட் எந்த மிஸ்டேக் இல்லை பிருந்தா. தேவையில்லாம எதுவும் இமேஜின் பண்ணாதீங்க.."
"யாரு நான்? தேவையில்லாம இமேஜின் பண்ணுறேனா? அப்போ உங்க மேல எந்த தப்பும் இல்லை?"
"நீங்க எதை கேட்கணுமோ நேரடியா கேளுங்க.."
அவளோ கேட்க வேண்டிய கேள்வியை மனதுக்குள் கேட்டுக்கொண்டே அவனை கூர் விழியால் ஆராய, "உங்களுக்கு இப்போ என்ன பிரச்சனை? எதுனாலும் சொல்லிடுங்க பிருந்தா." என்றான் மென்மையான குரலில்.
"சொல்ல என்ன இருக்கு? உங்கனால எனக்கு தான் அவுமனமா இருக்கு. எவ்வளவு நேரம் என் ஃபிரண்ட்ஸை சமாளிக்கிறது? இதுல நீங்க ஒரு மிஸ்ஸிங் கேஸ்க்கு என்கொயரி போயிட்டு வரீங்க. இதை என் ஃபிரண்ட் சொல்லுறா." என்றவள் முகம் அவனை கண்டு வெகுவாக கோண..
"என்மேல எந்த தப்பும் இல்லை. நீங்களா சூழ்நிலை புரியாம பேசாதீங்க.."
"ஆமா.. நான் தான் புரியாம பேசுறேன்.. ஒருநாள் எனக்காக நேரம் ஒதுக்கி வந்துருப்பீங்களா? ஆனா, பார்ட்டி போக நேரமிருக்கு.."
அவளது உதடுகளோ அவமானப்பட்ட வலியில், "சாடிஸ்ட்" என முணுமுணுத்தது.
"இப்போ என்ன சொன்னீங்க? சொல்லுங்க.." என்றவன் காது பாம்பு காது போல. அவள் கூறியது விழ, "பேசுறதுக்கு ஒரு லிமிட் இருக்கு." என அவன் எச்சரிக்க..
"உங்களுக்கு லிமிட் தெரியுமா?" என்றாள் சீற்றமாக..
"இப்போ என்ன உன் பிரச்சனை? நான் நின்னு பேசுறதே பெரிசு. சும்மா நானும் பாத்துட்டு இருக்கேன் நொய் நொய்ன்னு கேள்வியா கேக்குற. ஏன் போட்டோ எடுக்கும் போது எங்க தொலைஞ்சு போனாங்க உன் ஃபிரண்ட்ஸ்?" என்றவன் பட்டாசாக பொரிய..
"யூ சாவனிஸ்ட்.. உங்க சித்தி உங்களை பத்தி போன்ல சொன்னாங்க அப்போ நான் நம்பல. இப்போ நம்புறேன் அதை.. சே.. என்ன மனுஷன் நீங்க? காரணமில்லாம கத்துறீங்க.."
"எது காரணமில்லாம நான் கத்துறேனா?"
"ஆமா.. ஃபிரண்ட்ஸ் கூட சேர்ந்து ஒண்ணா கூத்தடிச்சுட்டு அந்த தப்பை மறைக்க கத்துறீங்க.. கத்தி பேசுனா மட்டும் உண்மை ஆகாது.." என்றவள் குரல் எகிற..
அவனோ ஓங்கிய கையை.. கன்னம் வரை கொண்டு சென்று விட்டு அடிக்காது கீழிறக்கினான் அவள் கூறிய வார்த்தையில்..
"எனக்கு இந்த கல்யாணமே வேணாம்.." என்றவள் விறுவிறுவென அறை நோக்கி ஓடினாள்.
அவன் எதையும் அலட்டிக் கொள்ளவில்லை. தலை வலி தாங்க முடியாமல் அறை நோக்கி சென்று விட்டான். எப்படியும் அவள் ஏதோ செய்ய போகிறாள் என்பது மட்டும் அறிந்து கொண்டான்.
இரவு வரை பொறுமை காத்த பச்சைக் கிளி, விடிந்ததும் முகுர்த்த நேரத்திற்கு முன்பு ஏழரை கூட்டி விட்டாள். கசங்கிய முகத்தோடு, கண்ணீர் வடிய அமர்ந்திருந்தாள். அறைக்கதவை தட்டி உள்ளே நுழைந்த வேதகி அவர்கள் அவள் வீற்றிருக்கும் நிலை கண்டு விக்கித்து நின்றார்.
எதையோ பறிகொடுத்தது போல் அமர்ந்திருந்தவளை வாரி அணைத்தவர், "என்ன ஆச்சு மா பிருந்தா? ஏன் இப்படி இருக்க?" என அவர் பதறி அணைத்துக் கொண்டு வினவ..
பச்சைக் கிளி பல்லக்கை கவிழ்த்து விட்டது!
"எனக்கு இந்த கல்யாணம் வேணாம்.. ப்ளீஸ்.. கல்யாணத்தை நிறுத்துங்க.." என்று அவள் கெஞ்ச..
அவரோ பதறி போய் என்ன ஏதேனே வினவ, நடந்ததை கூறினாள். அதில் அவருக்கு பிரதீஷ் மீது தவறு இருப்பதாக தோன்றவில்லை. சில நிமிடங்கள் அவளை போராடி சமன் செய்ய முயற்சிக்க, அவளோ பிடிவாதமாக இத்திருமணம் வேண்டாம் என்றாள்.
விஷயம் காட்டுத்தீ போல் பரவ.. நேற்றிரவு வரை ஆசுவாசம் அடைந்த பிரதீஷ் குடும்பத்தினர் உள்ளமெல்லாம் பதறி துடித்தது. அவர்களும் அவளிடம் கெஞ்சிட, பிரதீஷை பொறுக்கி ரேஞ்சில் பேசி விட்டாள்.
பெண்களோடு சேர்ந்து திருமணம் நிச்சயத்த பின்பு கூத்தடிக்க என்ன அவசியம் என அவனை தரைக்குறவாக உண்மையறியாது பேச, பிரதீஷ் அம்மா மற்றும் பாட்டிக்கு வெகுவாக சினம் மூண்டது.
அவர்களும் பிரதீஷை அழைத்து என்னவென விசாரிக்க, அவன் நடந்ததை உள்ளபடி கூறினான். ஆனால், அவள் அதை ஏற்றுக் கொள்வதாக இல்லாமல் இத்திருமணம் வேண்டாம் என்றாள்.
அதோடு நிறுத்திடாது, அவனது தகாத செயலால் தான் பெற்றோரே அவனை வெறுத்து வைத்திருக்கிறார்கள் என்றாள் ராணி அவர்களிடம்.
பிருந்தா பேச்சில் ஆவேசமடைந்த பிரதீஷ் வீட்டினர், இப்படியொரு பெண் தங்களுக்கு வேண்டாமென கூறியதோடு முதன்முறையாக சதாசிவம் அவர்களே மகனை ஒழுக்க சீலன் எனக் கூறி நெஞ்சை நிமிர்த்தி நின்றார்.
விழாக்கோலம் கொண்டிருந்த மண்டபமே களேபரம் ஆகிருப்பதில் அதிர்ந்து நின்றிருந்தாள் ராசிகா. இத்திருமணம் நடக்க தான் போராடியது, தன் காதலையெல்லாம் தூக்கி எறிந்ததை எண்ணி நொந்தவளுக்கே உடன் பிறப்பின் பழி பேச்சில் கோவம் வந்தது.
எல்லாம் தலைகீழாக மாறி விட்டதே என்னும் ரீதியில் ராசிகா உறைந்து நின்றிருக்க, பிரதீஷ் தான் தன்னை இந்நிலைக்கு ஆளாக்கி விட்டாளே என யோசித்து உலைக்களமாக கொதித்திருந்தான். இரு வீட்டாரும் மாறி மாறி தர்க்கம் செய்ய, எதுவும் முடிவுக்கு வரவில்லை.
யாதவ் அப்போது தான் ரோஹித்தோடு மண்டபம் வந்து சேர்ந்தான். மண்டபமே ரணகளமாகியிருப்பதில் அதிர்ச்சியுற்றவன், பிருந்தா அப்பா அம்மாவிடம் நடந்ததை விவிரித்தான்.
ரோஹித்தும் தன்னால் திருமணம் தடைப்பட்டு விட்டதே என நொந்து மன்னிப்பு கேட்க, "எனக்கு இந்த கல்யாணமே வேணாம்.. உங்க எல்லார்னால பட்ட அசிங்கம் போதும்.." என்றவன் ஒரு கும்பிடு போட்டு நகர்ந்து விட்டான்.
"ஸார்.. இது ஒரு சின்ன என்கொயரி அவ்வளவு தான். நடந்தது பிசினஸ் பார்ட்டி. அதுல கலந்துக்கிட்ட எல்லார்ட்டையும் என்கொயரி பண்ணுனோம்.
பிரதீஷ் கிட்ட நாங்க செப்பரேட்டா எதுவும் என்கொயரி நடத்தல.
இதை இவ்வளவு பெரிய இஸ்ஸு ஆக்கி, மேரேஜ் நிக்கிறளவு வந்துருந்தா நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன்." என்ற ரோஹித், பிருந்தாவையும் ஒரு பார்வை பார்க்க..
"இப்போ என்ன மா சொல்லுற? என் பேரன் ஏதோ சுத்துனான் செஞ்சான்னு பாத்த மாதிரி சொன்ன. அவன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க முடியுமா உன்னால?" என சாவித்திரி பாட்டி சீற்றமாக வினவ..
அவள் மட்டுமின்றி பெண் வீட்டார் யாராலும் பதிலளிக்க முடியவில்லை.
"அவனை பத்தி யாராவது ஒரு வார்த்தை பேசுனீங்க மரியாதை கெட்டுரும்!" என்றவர் விரலுயர்த்தி எச்சரித்து விட்டு பேரனைக் காண சென்றார்.
பிருந்தாவிற்கு தான் செய்ததது இதுவரை தவறு என தோன்றவில்லை. அவன் பேசியதற்கு தானும் பேசினேன். அவன் நடந்து கொண்டதும் அப்படி தான் என எண்ணியவள், "என்ன சொன்னாலும் எனக்கு இந்த கல்யாணம் வேணாம்ப்பா.." என்றவளை கண்டு எல்லோருக்கும் தலைகுனிவாகி போனது.
அம்மா, அப்பா, அத்தை எல்லோரும் முகுர்த்த நேரம் நெருங்கவிருப்பதை எண்ணி கெஞ்ச அவளோ பிடிவாதமாக மறுத்து விட்டாள். இதற்கு பின் இங்கென்ன வேலை நினைத்து, மாப்பிளை வீட்டினர் கிளம்பிட ஆயத்தமாகினர்.
பாவம் சண்முகம் அவர்களின் முகம் தான் சூடுப்பட்ட பூனை போல் இருந்தது. எண்ணியது ஈடேறாமல் போய் விட்டதே என்னும் கடுப்பில் என்ன செய்வதென புரியாதவர், பிருந்தாவிடம் பேசி பார்த்தார்.
"ப்ளீஸ்.. தாத்தா எனக்கு இந்த மேரேஜ் வேணாம். எனக்கும் அவங்களுக்கும் செட் ஆகாது. ஆரம்பமே இப்படியொரு பிரச்சனை. வாழ்க்கையை ஆரம்பிக்கும் போதே சந்தோஷத்தோடு ஆரம்பிக்கணும்.
இப்படி சண்டை சச்சரவுல ஆரம்பிச்சா நாளைக்கி இதையே நானோ, அவங்களோ பேச வேண்டியதா இருக்கும். அதுனால என்னை கட்டாயப்படுத்தாதீங்க.."
அவளின் பேச்சில் பன்மடங்கு கோவமடைந்தார் கௌதமன். அதே வேகத்தில் மகளை அடிக்க பாய, வேதகி அவர்கள் இடையில் நுழைய அடி விழாமல் போனது.
இருப்பினும் கணவன் மனைவிக்கு இடையே பெரும் சண்டையும் வாக்குவாதம் நிகழ்ந்தது. வழக்கம் போல் ராணியின் வளர்ப்பு சரியில்லை என அவர் துதி பாட, அவரோ பிருந்தாவிடம் மன்றாடி பார்த்தார்.
"மா.. என்னை கட்டாயப்படுத்தாதீங்க. அவரும் நானும் ஆரம்பத்துலயே அடிச்சுக்கிட்டு கல்யாணம் பண்ணிக்கணுமா? என்னை விட்டுருங்க மா.. ப்ளீஸ்.."
"உன் அப்பா கவுரவத்தை யோசிச்சு பாரு பிருந்தா. இப்படி பண்ணாதே. இதுல எங்களோட நிம்மதியும் இருக்கு. அந்த பையன் மேல எந்த தப்பும் இல்லை. பேசுனதுக்கு மன்னிப்புக் கேட்டு நீயே கல்யாணம் பண்ணிக்கோ.."
ராணி அவர்களும் கெஞ்ச அவள் மிஞ்சி தான் சென்றாள். பிரதீஷிடம் பாட்டியை தவிர யாரும் பேசவில்லை. பேசினால் இருக்கும் வெறியில் வாய்க்கு வந்தப்படி பேசுவான் எண்ணி மணமகன் அறைக்கு யாரும் செல்லவில்லை. குடும்பத்தார் தனித்து நின்று புலம்பி தவித்தது தான் மிச்சம்.
வெளியே வந்த சாவித்திரி பாட்டி வீட்டினர் அனைவரையும் விரோதிகளாக பார்த்தார். வந்திருந்த சொந்த பந்தங்களும் திருமணம் நடக்குமா நடக்காதா என சலசலத்துக் கொண்டனர்.
"ஏன் நிக்கிறீங்க? கிளம்புங்க.." என்றவரை சண்முகம் அவர்கள் பேச முடியாத நிலையில் மனைவியை ஏறிட்டார்.
"இனி கல்யாணம் கத்தரிக்காய்ன்னு அவன் கிட்ட பேசுனீங்க உங்க எல்லாருக்கும் அவ்வளவு தான் மரியாதை.." என எச்சரித்தவர், நேராக சென்றது என்னவோ கௌதமன் அவர்களிடம் நியாயம் கேட்கவே.
அதே போல் அவரும் தன் பேரனை இந்நிலைக்கு ஆளாக்கி விட்டீர்களே சந்தோஷமா இப்போது என்றவர் கையெடுத்து கும்பிட்டு விட்டு அங்கிருந்து நகர, "ஒரு நிமிஷம் மா.." என அழைத்தார் கௌதமன்.
"நான் ஒரே ஒரு தடவை.. மாப்பிளை கிட்ட பேசுறேன்!" என்றார் கமறிய குரலில்..
"என்ன பேசுனாலும் இந்த கல்யாணம் நடக்காது." என்றார் கறாராக சாவித்திரி பாட்டி.
பிரதீஷ் அறையில் இருந்து வெளியே வர அனைவரும் அவனை பாவமாக பார்த்தனர். நண்பர்கள் அவனுக்கு ஆறுதல் கூற நெருங்க, அவர்களிடம் சிறு விழியசைவை தந்து விட்டு அங்கிருந்து கடந்திடும் நேரம் எதிரே கௌதமன் வந்தார்.
"மாப்பிளை தம்பி என் பொண்ணு பேசுனதுக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்குறேன்.." என்றவர் கூப்பிய கரம் பற்றியவன்,
"எனக்கு அப்பா மாதிரி நீங்க. என்கிட்டே நீங்க மன்னிப்பு கேக்கலாமா? நான் எதுவும் பெரிசா எடுத்துக்கல. வீட்டுல உங்களை ஏதாவது தப்பா பேசிருந்தா மன்னிச்சுடுங்க.." என்றவன் பேச்சில் நெகிழ்ந்தவருக்கு விழியில் நீர் கரித்தது.
மூக்கை உறிஞ்சி அதை சமன் செய்தவர், "நீங்க மனசு வச்சா இந்த கல்யாணம் நடக்கும் தம்பி.." என்றவர் மீண்டும் கை கூப்ப, அப்போது தான் மணமகளாக அலங்காரம் செய்து மேடை நோக்கி அழைத்து வரப்பட்ட ராசிகாவை கண்டான்.
அவளை கண்டவன் விழிகள் அளவில்லா வியப்பில் விரிந்ததோடு இந்நிகழ்வு உண்மை தானா என நம்பவே சில நாழிகை தேவைப்பட்டது.
இருவரின் நேத்திரங்களும் தொலைவில் இருந்தப்படி பல சம்பாஷனை பேசிக்கொண்டது யாருக்கும் அறியா வண்ணம்.
அவளை கண்டவன் திகைத்து நிற்க, "தம்பி எனக்காக இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லுங்க!" என்றார் கெஞ்சலாக.
நேற்று வரை ஆடிய ஆட்டம் தவிடுபொடியாகியதில் சண்முகமும் அவர்களின் மகனும் விதிர்விதிர்த்து நின்றனர். யாரை விரட்டியடித்தனரோ அவளா மணப்பெண் என கொதித்து போன சதாசிவம், "உங்க வீட்டு சம்மந்தமே வேண்டாம்..." என உரக்க கூறி மகனிடம் பேசிக்கொண்டிருந்த கௌதமனை நோக்கி வந்தார்.
பிரதீஷ் அவரை திரும்பி முறைத்து பார்த்ததில், அவ்விடத்திலே நின்று விட்டார் அவனது அப்பா.
"மாப்பிள்ளை நாங்க பண்ணுன தப்பை நான் தான் சாரி செய்யணும்!"
ஒரு நொடி யோசித்தவன், "யாரையும் கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ண சொல்ல வேணாம். அவங்க கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க.." என்றான் ஏதோ அவளது மனதை படிக்காத நல்லவன் போல்.
அவன் கூறியது காதில் விழுந்த ராசிகாவவோ, 'நடிக்காதே டா.. ஏதோ நாடகமாடி கல்யாணத்தை நிறுத்தி, என்னை இப்படி நிக்க வச்சுட்ட..' என மனதோடு அவனை கடிந்தவளிடம், "உனக்கு சம்மதம் தானே மா?" என நயந்து வினவினார் வேதகி.
"நீங்க எது சொன்னாலும் எனக்கு சரி தான் அத்தை!" என்றாள் அவளும் அவனை முன் பின் அறியாதவள் போல்.
அவனது நண்பர்கள், அவர்களின் காதல் லீலை அறிந்தவர்களுக்கு தான் இந்நிகழ்வு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
சாவித்திரி பாட்டிக்கோ நெஞ்சம் குளிர்ந்தது. தன் பேரன் காதலித்தவளை கரம் பிடிக்க போகிறான் என்னும் நெகிழ்ச்சியில் இருந்தவர், அதை துளியும் வெளிக்காட்டதப்படி பேரனிடம் கெஞ்சுவது போல் பாசாங்கு செய்தார்.
பிருந்தா அப்போதும் தன் தங்கையை நோக்கி மறுப்பாக தலையசைத்தாள். இத்திருமணம் செய்து கொள்ளாதே என்று. அவள் அதையெல்லாம் கவனிக்கும் மன நிலையில் இல்லை.
அவளுக்கு நல்லது செய்து காதலை இழந்து விட்டோம். இனி யாருடைய அறிவுரையை கேட்க கூடாது என நினைத்தவள், அவனுக்காக மணவறை ஓரம் காத்துக் கொண்டிருந்தாள். அவனும் சில நொடிகளில் கிளம்பி வர, சொந்தபந்தங்கள் சுற்றத்தினர் இடையே எழுந்த சலசலப்பு இப்போது தான் தடைப்பட்டது.
பட்டு வேஷ்டி சட்டையில் வந்தவன் வேள்வியின் முன் அமர, அவளை அழைத்துக் கொண்டு அமர வைத்தார் வேதகி அவர்கள். எல்லோருக்கும் வருத்தம் தான். நடக்க வேண்டிய திருமணம் நின்று, ஏதேதோ நிகழ்ந்து விட்டதே என பெண் வீட்டினர் உள்ளம் குமுறியது.
இருப்பினும் தவறை சரி செய்ய வேறு வழியில்லை என நினைத்து மனதை தேற்றிக் கொண்டனர்.
ஐயர் சில நொடியில் கட்டிமேளம் என்றிட, கண் மூடி திறப்பதற்குள் அவள் கழுத்தில் நாணிட்டான் பிரதீஷ். அவனது தாத்தா, அப்பா முகமோ தோற்று போய் விட்டதில் சுருங்க, அன்னையின் உள்ளமோ இப்போது தான் குளிர்ந்தது.
'என்ன மா நடிக்கிறான்! எப்பா.. இவன் கிட்ட தான் இதெல்லாம் கத்துக்கணும் போல. நினைச்சதை நடத்திட்டான் இனி என்னெல்லாம் பேசி என் காதை செவிடாக்க போறானோ?' என புலம்பியவள், சுற்றி முற்றி பார்ப்பது போல் அவனை பார்க்க..
"இதுக்கெல்லாம் சேர்த்து மொத்தமா திருப்பி தரேன் டி.." என்றான் மெல்லிய குரலில்.
தேன்மழை💖
