5
செந்தமிழில் காதல் வசனங்கள் பேசி நிற்கும் தனது மகனை கண்ட சங்கரபாண்டியன் "ஸ்ரீராமா.. என்ற மகனே என்றா ஆச்சு உனக்கு? ஏன்டா இப்படி எல்லாம் பொம்பள பின்னாடி பேசிக்கிட்டு சுத்திகிட்டுயிருக்க" என்று அருகே நெருங்க..
"என்னை நெருங்காதீர்கள்!! நெருங்கினால் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது. என்னை என் காதலியிடம் இருந்து பிரிக்க பார்க்கிறீர்களா?" என்று அவரை கிட்டே நெருங்க விடாமல் வீர வசனம் பேசிக்கொண்டே அவன் நீலாம்பரியை சுற்றிவர, நீலாவோ அவன் கையில் சிக்காமல் ஓடிக் கொண்டே இருந்தாள் அந்த வீட்டைச் சுற்றி..
ஒருவழியாக சங்கரபாண்டியனும் முருகனும் சேர்ந்து அவனை பிடித்து மிகவும் கஷ்டப்பட்டு அவனது அறைக்குள் அழைத்து சென்று படுக்க வைத்து வெளியே பூட்டி விட்டு வந்தனர்.
பொதுவாக இந்த குறிபார்த்தல் பேயோட்டுதல் இதிலெல்லாம் அவ்வளவு நம்பிக்கையை சங்கரபாண்டினுக்கு கிடையாது. ஆனாலும் இன்று தன் மகன் செய்தது சற்றே அதிகப்படி தான் என்பதை உணர்ந்தவர், "ஏய் புள்ள நீலா.. என்ற மகன் செஞ்சது கொஞ்சம் அதிகப்படிதேன்.. தப்புதேன். நேத்து வரைக்கும் சாமியாடி கிட்டு இருந்தவன், ஏன் இப்படி திடீரென்று மாறுனானு எனக்கு தெரியவே இல்லை" என்று அவர் வருத்தப்பட்டுக் கொண்டிருக்க, நீலாம்பரியோ அவரது தோளில் அமர்ந்து இருந்த கீசாவை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அதுவும் அவரின் ஒவ்வொரு பேச்சுக்கும் பாவம் போல முக பாவனையில் வைத்துக் கொண்டு அவளை பார்த்தது உச்சு வேறு கொட்டியது..
"ஆனா கடைசியா என்ற புள்ள மாறிடுவானு நினைக்கிறேன்" என்ற பெற்றோருக்கும் சந்தோஷமே.. "நீ இதை எல்லாம் மனசுல வச்சிக்காத ஆத்தா.. ஏதோ தெரியாம பண்ணிட்டான்" என்று சொர்ணம் அவள் கையை பிடித்து வருத்தம் தெரிவிக்க..
"பரவால்ல அப்பத்தா.. நான் இந்த மாதிரி எல்லாம் எதிர்பார்க்கல.. அதான் பூச எல்லாம் நல்லபடியா முடிஞ்சிடுச்சே.. பூச கொஞ்சம் ஓவர் டோஸ் ஆயிடுச்சு போல அதனாலதான் இப்படி எல்லாம் நடந்துக்கிட்டாரு தூங்கி எழுந்திருச்சா சரியா போயிடும்.. பார்த்துக்கோங்க" என்று விட்டு நீலா கிளம்ப முனைய.. அவள் போகும் போது அவளுக்குத் தேவையான தட்சணைகளை மரியாதையுடன் வைத்து நாச்சி கொடுக்க சந்தோஷத்துடன் வாங்கிக் கொண்டு அவள் கிளம்பினான் கூடவே கீசாவும்...
அன்று தன்னுடன் வந்து கீசாவை அவள் கண்டுகொள்ளவே இல்லை. அன்று மட்டுமல்ல தொடர்ந்து இரண்டு நாட்கள் அப்படி ஒரு ஜீவன் அங்கே இருப்பதாகவே அவள் திரும்பிப் பார்க்கவில்லை. அதுவும் தன்னால மட்டும் அவளிடம் கெஞ்சி மன்னிப்பு கேட்டு இன்னும் என்ன என்ன சேட்டைகளை எல்லாம் செய்து பார்த்தும் இவள் அசைந்தாள் இல்லை..
அன்று காலை வேளை பூஜையில் அமர்ந்து இருக்கும் போது எப்பவும் தொந்தரவு செய்யாத கீசா, அன்று அவள் முன்னே நின்று "நீலுக்குட்டி கடைசியா கேட்கிறேன்.. என்கிட்ட பேசுவியா? மாட்டியா?" என்று கேட்க.. அவளோ வெகு சிரத்தையாக தான் வணங்கும் பத்திரகாளி அம்மனுக்கு பூக்களால் அர்ச்சித்து கொண்டிருந்தாள்.
"அப்போ என்கூட நீ பேச மாட்ட.. சரி உன்னை எப்படி பேச வைக்கணும்னு எனக்கு தெரியும்" என்று கூறியதும் அடுத்த நிமிடம் அவ்விடம் விட்டு மறைந்தது.
"இந்த கீஷ் எங்கே போயிருக்கும்? கோவிச்சு விட்டு மறுபடியும் அது இருந்த இடத்திற்கே போயிடுச்சா?" என்று இவள் இங்கே நினைத்திருக்க.. அதற்கு ஏறுமாறாக அது போய் நின்ற இடமோ நாட்டாமைக்கார வீடு..
அதுவும் ஸ்ரீராமன் அறையினுள்..
பூஜை முடிந்த மறுநாள் மதியம் வரை நல்லா தூங்கி எழுந்தான் ஸ்ரீராமன்.. முதல்நாள் நடந்த எதுவும் அவன் ஞாபகத்தில் இல்லை. அதனால் வழக்கம் போல எழுந்தவன் "என்ன இவ்ளோ நேரம் தூங்கி விட்டோம்" என்று தனக்கு தானே திட்டிவிட்டு குளியல் முடித்து, அதே காவி உடையில் மீண்டும் அனுமான் பக்தனாக மாறி தன் வீட்டு பூஜை அறையில் பூஜை செய்து கொண்டிருந்தான்.
அவன் தூக்கத்தை தொந்தரவு செய்யாமல் சொர்ணமும் சங்கரபாண்டியனும் வயலுக்கும் பண்ணைக்கும் சென்றுவிட.. நாச்சி மட்டுமே வீட்டில் இருந்தார் அந்நேரம்.
இவனை திரும்பவும் அதே காவி உடையில் பார்க்க அவருக்கு திக்கென்றது. வீட்டில் வேலைப்பார்க்கும் ஒருவனை விட்டு தனது அத்தையை அழைத்து வரச் சொன்னார். அதுவரை தன் மகனை எட்ட நின்று பார்த்துக் கொண்டே பதட்டமாகவே இருந்தார்.
இவன் பூஜை முடிக்கும் முன் சொர்ணம் வந்துவிட, "ஏண்டி என்னாச்சு? என்ற பேரன் எப்போ எப்படி இருக்கான்?" என்று அவர் கேட்க..
"தெரியல அய்த்த.. அவன் கிட்ட பேச்சு கொடுக்க பயந்து பயந்து வருது. அதான் ஓரமாக நிற்கிறேனுங்க" என்று அவரும் பயந்தபடியே சொல்ல..
"செத்த இரு" என்று மருமகளிடம் கை காட்டி விட்டு, மெதுவாக பூஜை அறை பக்கம் சென்று "ராசா.. ராமா.. ஸ்ரீராமா" என்று அவர் அழைக்க முதலில் அவன் திரும்பவே இல்லை..
"அச்சச்சோ நேத்தி மாதிரி அட்டூழியம் செய்ய போறானோ? பேர் சொல்லி கூப்பிட்டா கூட திரும்ப மாட்டேனுகிறானே?" என்று புலம்பிக்கொண்டே திரும்பவும் " ராசா.. ராமா" என்று இவர் அழைக்க..
அதற்குள் பூஜை முடித்தவன் "என்ன அப்பத்தா பூஜை செஞ்சுக்கிட்டு தான் இருக்கேன்.. சும்மா ராசா ராமானு கூப்பிட்டு கிட்டு இருக்க" என்று கூறிவிட்டு அன்னையை அருகில் வந்தவன் "பசிக்குது சாப்பாடு எடுத்து வைங்க" என்றான்.
"என்றா இவன்.. நேத்து நடந்த பாதிப்பு எதுவுமே இல்லாம.. அத பத்தி ஒன்னுமே சொல்லாம.. திரும்பவும் அந்த காவி உடையை மாட்டிகிட்டு நிற்கிறானே" என்று அந்த காவி உடையை பார்க்கப் பார்க்க அவருக்கு பற்றிக்கொண்டு வந்தது.
சாப்பிட்டவன் திரும்பவும் தன் அறையில் சென்று முடங்கி விட்டான். 'தனக்கு ஏன் உடம்பெல்லாம் இவ்வளவு வலிக்கிறது? அப்படியே என்ன செய்தோம் நேத்து? அந்த பூஜைக்கு இத்துணூண்டு துண்ட கட்டிட்டு அமர்ந்தது மட்டும் தான் நியாபகம் இருக்கு.. அப்புறம் என்ன நடந்தது?' என்று ஒன்றும் புரியாமல் சோர்வாக இருக்க படுத்துவிட்டான்.
"அதற்குள் சோர்வான எப்படி ராசா?" என்று அவன் தலைமாட்டில் உட்கார்ந்து தான் கீசா அவனைப் பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டிருந்தது.
மதியம் சொர்ணமும் நாச்சியும் திரும்பவும் காவி கட்டிக் கொண்டு ஸ்ரீராமன் வந்ததை நினைத்து வருத்தத்துடன் சாப்பிட்டுவிட்டு சற்று தலை சாய, விளக்கு வைக்கும் நேரத்திற்கு சற்று முன்னதாகவே வீட்டுக்கு வந்துவிட்டார் சங்கர பாண்டியன். அவருக்கு டீ எடுத்துக்கொண்டு வந்த நாச்சி முகம் சரி இல்லாமல் இருப்பதை பார்த்தவர், "என்ன அம்மணி என்ன ஆச்சு? ஏன் உன்ற முகம் வாட்டமா இருக்கு?" என்று கேட்க..
"ஒன்னும் இல்லைங்க மாமா" என்றவாறு டீயை அவரிடம் நீட்டினார்.
"உன்ற முகமே சரியில்லை அம்மணி" என்று தன்னருகில் மனைவியை அமரவைத்து "என்ன ஆச்சு? நேத்து நடந்த யோச்சிக்கிட்டு இருக்கியா? அதெல்லாம் தூங்கி எந்திரிச்சா சரியாகிடுவான்.. நேத்து ஏதோ அந்த பூசையில அவனுக்கு அப்படியே நடந்திருக்கும். அதுக்கு தான் இந்த பூசை குறி பாக்குறது எல்லாம் வேணாம் நான் தளபாட அடிச்சுகிட்டேன்.. நீங்க எங்கே கேட்டீங்க" என்று அவர் மனைவியை சமாதானம் செய்தார்.
"நம்ம புள்ள மாறிடுவாங்க தானே மாமா?" என்று கலங்கிய முகமாக கேட்டார் நாச்சி.
ஸ்ரீராமனுக்கு பின் எந்த குழந்தையும் அவருக்கு தங்கவில்லை. அதுவும் ஒற்றைப் பிள்ளை ஆண் பிள்ளை என்பதிலேயே சொர்ணமும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட, வீட்டின் ஒற்றை வாரிசு காவிக்கட்டி கொண்டு திரிந்தால் பெற்ற மனம் தவிக்க தானே செய்யும்.
மனைவியின் மனதை மாற்ற வேண்டி.. "என்ன அம்மணி அவன் இந்த வீட்டை வாரிசு.. நான் எப்படி என்ற பொண்டாட்டி பின்னாடி சுத்துறது போல.. அவனும் பாரு.. கூடிய சீக்கிரம் ஏதாவது பொண்ணு பின்னாலேயே சுத்துவான்" என்று மனைவியைத் தேற்றுவதற்காக சொல்ல ஆனால் அதையே நிரூபிப்பான் அவரது மகன் என்றா நினைத்தார்!!
மாடிப்படியில் இருந்து சத்தம் கேட்க நிமிர்ந்து பார்த்தவர் அதிர்ந்து தான் போனார்..
எண்பதுகளில் வரும் கதாநாயகர் போலவே பெரிய காலர் வைத்த சட்டையும்.. பெல்ஸ் பேண்டுமாக இறங்கி வந்தான் அவர்களின் சீமந்த புத்திரன்.. கையில் ஸ்டைலாக கண்ணாடி வேறு..
மெல்ல இறங்கி வந்தவன் தன் தந்தையும் தாயும் நோக்க.. காலடி சத்தத்தில் திரும்பிய நாச்சியோ அவனைக் கண்டு வாயைப் பிளந்து நின்றார்.
"என்றா இது கோலம்?" என்று சங்கரபாண்டியன் அதிர்ந்த வாக்கிலேயே கேட்க..
"அதுவா நான் என் காதலியை பார்க்க போகிறேன்.. வரட்டுமா?" என்றவாறு அவன் தந்தை அவனுக்காக பொள்ளாச்சியில் இருந்து வாங்கி வைத்திருந்தது வண்டியை கிளப்பிக்கொண்டு அவன் செல்ல..
"அச்சோ மாமா எங்க போறான்னு பாருங்க ஏதாவது எக்குத்தப்பா பண்ணி வைக்க போறான்" என்று நாச்சி அலற..
இவர்களின் சத்தத்தில் வெளியே வந்த சொர்ணமும் விஷயத்தை கேள்விப்பட்டு "மறுபடியும் அந்த சிரிக்கிய பார்க்கப் போய்ட்டானா? சீக்கிரம் போ டா சங்கரா!!" என்று மகனை விரட்டினர்..
நீலாம்பரியின் வீடு..
மாலை வேளை பூஜைக்கு அனைத்தையும் செய்துவிட்டு தன் ஆட்டத்தை ஆரம்பித்தாள் நீலாம்பரி, வந்தவர்களுக்கு குறி சொல்வது போல நடிப்பது!!
அவள் வீட்டின் வாயிலுக்கு நேராக தனது பைக்கை நிறுத்தி விட்டு அதன் மீது ஜாம்பவானாக அமர்ந்து வீட்டு வாயிலேயே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன் அதன்பின் தனது முடியை டிஆர் ஸ்டைலில் ஒரு சிலுப்பு சிலுப்பி அவள் வீட்டை நோக்கி நடந்தான்.
வெளியில் நின்றிருந்த வேணிக்கு இவன் யார் என்று தெரியவில்லை அதனால் இந்த காலத்தில் இவன் போட்டிருக்கும் பேண்ட் சட்டை பார்த்தவளுக்கு சிரிப்பு வர பத்திக்கொண்டு வந்தது. ஆனால் வந்தவன் பெரிய கஷ்டமராக இருந்தால் வரும் அமௌன்ட் எதுக்கு விட வேண்டும் என்று நினைத்தவள் அமைதியாக "ஆத்தா உள்ள பூசையில் இருக்காங்க இப்படி உட்காருங்க" என்று திண்ணையில் இருந்த இருக்கையை காட்டினாள்.
அவனோ அவளை மேலிருந்து கீழ்வரை பார்த்துவிட்டு "உங்களுக்கு தான் அவள் ஆத்தா!! நீங்க தான் அனுமதி வாங்கிட்டு போகணும் ஆனால் எனக்கு அவள் நீலுக்குட்டி" என்றுவிட்டு அவன் உள்ளே நுழைய வேணி தடுக்க.. அதற்குள் மருதுவும் வந்து "யார் சார் நீங்க? இங்க வந்து ஏன் சண்டை போடுறிங்க?" என்று பெரிய மனிதனாக கேள்வி கேட்க..
இருவரையும் ஒரு முறை மேலிருந்து கீழாக பார்த்தவன் "உங்க அத்தான்" என்க, அவர்கள் ஆவென்று வாயைப் பிளக்க அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உள்ளே நுழைந்து விட்டான்.
உள்ளே அவளும் அவள் முன் இருந்தவருக்கு உடம்பை ஆட்டி ஆட்டி அருள் வந்தவள் போல "பக்கிரிசாமி நீ பாவம் பண்ணிட்டடா.. பாவம் பண்ணிட்ட" என்று கூற..
இவனோ அவளுக்கு எதிரில் அமர்ந்து கண்களாலேயே அவளை கபளீகரம் செய்து கொண்டிருந்தான்.
அந்தப் பக்கிரிசாமி ஆகப்பட்டவன் "ஆத்தா என்ன மன்னிச்சிடு ஆத்தா இனிமே எந்த பாவத்தையும் செய்ய மாட்டேன், ஆனா இப்போ எந்த பாவத்தை நீ சொல்றனு தெரியலையே ஆத்தா" என்று அவன் அவள் காலில் விழுந்து கதற..
அவனிடம் போட்டு வாங்க நினைத்த நீலாம்பரிக்கு எதைச் சொல்வது என்று புரியாமல் சிறிது நேரம் திகைத்து விழிக்க.. அதைக் கண்டு கொண்டு ஸ்ரீராமனோ,
"அன்பே!! உன் காதல் கணைக்களுக்காக காத்துக் கொண்டிருக்கும் இந்த காதலனை கண்ணெடுத்தும் காண மாட்டாயோ?"
கண்ட பாவிகளுக்கு எல்லாம் குறி சொல்கிறாயே?" என்று கண்களால் விழுங்கிக் கொண்டே கேட்க..
"அடேய் பாதகா!! ஆத்தாவிடம் மரியாதையாக பேசு" என்று தன் விழிகளை பெரிதாக்கி அவனை மிரட்ட..
அருகிலிருந்த பக்கிரிசாமியோ இருவரையும் திரும்பத்திரும்ப பார்த்துக்கொண்டிருக்க.. "ஆத்தா இந்த அன்பனை ஏற்றுக் கொள்ளடி"
என்று கூற..
"ஐயோ!! ஐயோ!! இவன் இம்சை தாங்க முடியலையே!!" என்று மனதுக்குள் நொந்ததவள் பக்கிரிசாமியை பார்த்து "நீ போய்ட்டு நாளைக்கு வா மகனே!" என்று அவனை அனுப்பி வைத்தாள்.
அது பக்கிரிசாமி வெளியேறிவிட.. அதுக்கு என்று காத்திருந்தவன் போல பாய்ந்து நீலாம்பரி அவன் அணைக்க வர.. அவளோ அவனிடமிருந்து விலகி அந்த பூஜை அறையில் மறு பக்கத்தில் போய் நின்று கொண்டாள்.
"இங்க பாரு மரியாதையா போயிடு இல்ல" என்று அவனிடம் கூறிக்கொண்டே வழக்கமாக கீசா அமர்ந்திருக்கும் இடத்தை பார்க்க அதுவோ கள்ள சிரிப்புடன் அவளைப் பார்த்து சிரித்தது.
"அடேய் கீசா!!! நேத்திலிருந்து நீ வரலன்னு உன் மேல பாவப்பட்டேன் பாரு.. உன்னை" என்று மேலே பார்த்து அவள் கத்த.. "அன்பே நான் இருக்கும் போது அங்கே யாரிடம் பேசுகிறாய்? அன்பே நாம் இதழ்களை அணைத்து கொள்வோமா?" என்று கேட்க.. அவள் புரியாமல் விழிக்க.. ஒரு கையால் அவள் இடையை இறுக்க அணைத்து மறு கையால் அவளது தாடையை இறுக்கமாக பற்றி அழுத்தமாக முத்தம் கொடுத்தான் அவள் அதரங்களில்!!
ஆத்தாவோ ஷாக்காகி அசையாமல் நிற்க!!
முகத்தை மூடிக்கொண்ட கீசாவோ விரல் இடுக்குகள் வழியாக அவர்களை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தது.
அவள் அதரங்களில் லயித்து, உதடுகளை சுவைத்து, நாவோடு நர்த்தனமாடி ஒருவழியாக தன் ஆதாரங்களை பிரித்தவன் அவளை இறுக்க அணைத்துக் கொள்ள "விடுடா..விடுடா!!" என்று அவள் அலற..
வெளியில் இருந்த வேணியும் மருதுவும் ஓடி வந்து இவர்களை பார்த்து அதிர்ந்து தன் அக்காவை அவனிடமிருந்து பிரிக்க போராடினார்கள். ஆனால் ஸ்ரீராமன் அணைப்பு மிக வலிமையாக இருக்க அவர்களால் அசைக்கக்கூட முடியவில்லை.
அவள் மூச்சு வாங்குவது பார்த்தவன் போனால் போகுது என்று தனது அணைப்பை விலக்க, அவள் தன் தங்கை தம்பிகளுக்குப் பின்னே ஒளிந்து கொண்டு "முதல்ல இங்கேர்ந்து போ வீட்டுக்கு போ" என்று கத்தினாள்.
இவர்கள் பேசிக் கொண்டு பூஜை அறையில் இருந்து வெளியே திண்ணைக்கு வந்து விட..
அதற்குள் சங்கரபாண்டியனும் அவ்விடத்துக்கு வந்து சேர.. மகனின் செயலைப் பார்த்து தலையிலடித்துக் கொண்டவர் அவனருகே வந்து "ராமா ஒழுங்கா வீட்டுக்கு வா பொம்பளைகிட்ட பிரச்சனை பண்ணாதே" என்று அவன் கையை பிடித்து இழுக்க, சட்டென்று நீலாம்பரி கையை பிடித்தவன் விடவே இல்லை.
ஒருபுறம் ஸ்ரீராமன் நீலாம்பரி கையை பிடித்து இழுக்க.. மறு புறமும் வேணியும் மருதுவும் அவளை தங்கள் புறம் இழுக்க.. ஸ்ரீராமன் மறுகையை சங்கரபாண்டியன் பிடித்து இழுக்க..
அங்கே ஒரு அடிதடி கலாட்டாவே நடந்துகொண்டிருந்தது. சற்று நேரத்தில் ஊரே இவர்களின் வீட்டின் முன் கூடி இவர்களை பார்த்து வாய் மேல் கைவைத்து அதிர்ந்து நின்றது.
"டேய்.. இந்த பையன் வந்து இறங்கும்போது சாமியார் மாதிரி வந்து இறங்கினான்.. இப்ப என்னடா இந்த வேலை பார்குறான்?" என்று ஊருக்குள் ஒருத்தன் அதிர்ச்சியாய் கேட்க..
"அவன் கரெக்டா தான் டா இருக்கான். சாமியார் வேலைய தான் பாக்குறான்" என்று மற்றவன் கேலியாக பதிலளிக்க..
"நாட்டாம பையனே இப்படி செஞ்சா பொண்ணுங்களுக்கு இந்த ஊரில் என்னடா பாதுகாப்பு.. கூட்டங்கடா பஞ்சாயத்த!!" என்று கூட்டத்தில் சத்தம் வர..
நாளை ஆலமரத்து பஞ்சாயத்து கன்ஃபார்ம் ஆனது!!
"இதை!! இதைத்தான் எதிர்பார்த்தேன்!!" என்ற கீசா குத்தாட்டம் போட்டது!!
கீசாவின் குத்தாட்டத்தை காதலாக பார்த்தது இரண்டு கண்கள்!! அப்பார்வையின் சொந்தக்காரியின் பெயர் மோகினி..
யாரடி நீ மோகினி??
சொக்க ரெடியா??
