இதயம் 1

 

(@lovita-elsi)
Member Moderator
Joined: 2 months ago
Messages: 10
Thread starter  

வந்தாரை வாழ வைக்கும் சென்னை பட்டணம். உண்மை தான் உழைக்கும் ஜாதியை இன்றுவரை  இரு கரம் நீட்டி வாழ வைத்துக்கொண்டு தான் இருக்கிறது. 

 

அந்த காலைவேளையில், கூட்ட நெரிசலான சாலையில் சிறிது சிறிதாக ஒருத்தன் முன்னேறி கொண்டிருந்தான்..'அப்பப்பா, எப்படி இந்த இடம் மட்டும் இவ்ளோ டிராபிக் எத்தனை மணிக்கு வந்தாலும்' யோசித்தபடி கிடைக்குற கேப்ல் எல்லாம் வண்டியை செலுத்தினான்.

 

இத்தனைக்கும் அவன் எப்பொழுதும் வர டைம் இல்லை, இரவு வீடு திரும்ப நேரம் ஆனதால் காலையில் சிறிது நேரம் சென்றே சொல்வான்.

 

அவன், அந்த அவன் பெயர் கெளதம் ராட்லி (Gowtham Radley). வளர்ந்து கெட்டவன் -ஆறு அடி உயரம், அழுத்தம் நிறைந்தவன், அதே சமயம் ஆளுமையானவன், எதிலும் நேர்த்தியை எதிர் பார்ப்பவன். 

 

அப்பா ஹரிஷ் வேதநாயகம், அம்மா ரெஜினா. இருவரும் ஒரு கலை அறிவியல் கல்லூரியில் விரிவுரையாளர்கள். இவர்களின் வசிப்பிடம் கோயம்பத்தூர். இவனும் படித்தது எல்லாம் அங்கேயே உள்ள பிரசித்தி பெற்ற கல்லுரியில் தான். வழமை போல் பி. இ பட்டதாரி, படித்ததும் கேம்பசில் வேலையும் அதுவும் சென்னையில் கிடைத்து விடவே தன் ஜாகையை சென்னையில் மாற்றி அமைத்து கொண்டான். புகழ் பெற்ற மென் பொருள் நிறுவனத்தில் தான் வேலையும் கிடைத்திருந்தது.

 

பெற்றவர்களை சாராமல், சுயமாக சம்பாதித்து நிற்க வேண்டும் என்று விருப்பம். அதற்க்காக அவன் உழைத்தது மிக மிக அதிகம். அந்த உழைப்புக்கு ஏற்ற பலன் முதலில் அவனுக்கு கிடைக்கவில்லை, காரணம் எல்லாத் துறையிலும் இருக்கும் அரசியலே!!

 

ஆரம்பத்தில் தடுமாறினான் தான், ஆனால் போக போக, நேர்மையில் சிறிதும் தவறாமல் நெளிவு சுழிவுகளை மட்டும் கற்று கொண்டு, உழைப்பையும் மூலதனமாக போட்டு இப்பொழுது ப்ராஜெக்ட் மேனேஜர் என்கிற நிலையில் இருக்கிறான்.. 

 

இதோ ஆறு மாதம் முன் தான், தன் சேமிப்பில் இருந்தும், சிறிது லோன் வாங்கியும் அடையாரில் ஒரு அபார்ட்மெண்ட் வாங்கி இருந்தான். இரு படுக்கை அறை கொண்ட வீடு. வேலை பார்க்கும் ஸ்தலம் சோழிங்கநல்லூரில் இருந்தது. தினமும் தன் இரு சக்கர வண்டியிலே சென்று வந்து விடுவான். தன் சுய சம்பாத்தியத்தில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது அவனின் நீண்ட நாள் ஆசை. அந்த ஆசை நிறைவேறியதில் அவன் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. 

 

ஒரு வழியாக வாகனத்தை பார்க் செய்து, தான் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தான். பின் லிப்ட்ற்க்குள் நுழைந்து, அவனின் தளத்தின் எண்ணை அழுத்தி ஒரு ஓரமாக நின்று கொண்டான்.. 

 

யோசனை எல்லாம் இன்னைக்கு என்ன வேலைகள் இருக்கிறது என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றியே.அவன் மனதும் வஞ்சனை இன்றி பட்டியல் இட்டு கொண்டே சென்றது. 

 

பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்ன பண்ணுகிறார்கள் என்ற கவனம் சிறிதளவு கூட இல்லை. 

 

அதற்கு எல்லாம் மாறாக ஒருத்தி அவனை மட்டுமே பார்த்து கொண்டிருந்தாள், கமலி மரியா செபாஸ்டியன்.  இவனுக்கு அவளை தெரியுமா என்று கேட்டால் ஆம் தெரியும், பெண் பார்க்கும் படலத்தில் பேசி இருக்கிறான்.

 

என்னது பெண் பார்க்கும் படலாமா?

 

ஆமாம்,இருவருக்கும் நிச்சயம் ஆகி இரு மாதங்கள் கடந்து இருந்தது. கெளதமிற்கு பார்த்திருக்கும் பெண் தான் கமலி. இருவருக்கும் தான் வீட்டில் நிச்சயம் பண்ணியிருக்கிறார்கள்

 

அவனிற்கு தன்னை அடையாளம் தெரிந்தும் அதனை காட்டவில்லை என்பது அவளுக்கு மன சஞ்சலத்தை கொடுத்தது. அப்டியே ஓடி வந்து வலிந்து கொண்டு பேச வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை, எள் அளவாது சிரித்து இருக்கலாம் என்றே அவளின் எண்ணம். 

 

'ஹ்ம்ம், எதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும் கமலி' என்று தேற்றி தன் தளம் வரவும் இறங்கி கொண்டாள்.  

 

அவனும் அதே தளத்தில் தான் இறங்கினான். இருவரும் ஒரே டீம்ல் தான் வேலை செய்கின்றனர். இவள் இங்கே மாறி வந்து வேலை சேர்ந்து மூன்று மாதங்கள் தான் ஆகிறது. இரு மாதங்கள் ட்ரைனிங் என்று கடந்தது.இந்த ஒரு மாதமாக தான் இவன் ப்ராஜெக்ட்ல் இவளுக்கு ஒதிக்கீடு செய்திருந்தார்கள். 

 

இருந்தும் பேரளவுக்கு கூட எனக்கு உன்னை தெரியும் என்று காட்டிக்க விரும்பவில்லை. 

 

இருவரும் முன் நோக்கி நகர்ந்தாலும், நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தது!!!

 

சரியாக இரு மாதங்கள் முன்பு...!!!

 

"கமலி, உன்னை வரியானு கேக்கல, வந்து தான் ஆகணும்னு சொல்றேன் " என்றார் அவள் அன்னை நவரோஜினி. 

 

"ம்மா, முடியாதும்மா. எவ்ளோ கம்பெல் பண்ணாலும் என்னால வர முடியாதுன்னா முடியாது தான் "

 

"ஏன் முடியாது," நவரோஜினி 

 

"சும்மா சும்மா வந்து பொம்மை மாதிரி நிக்க முடியாது"  அவளும் பாவம் தானே எவ்ளோ நாற்களுக்கு தான் யாரோ ஒருவனை புடிக்க வைக்க அலங்காரம் பண்ணி கொண்டு நிற்க முடியும்.. முதல் முறை இருந்த துடிப்பு, பரவசம், நாணம் எதுவும் இப்போ அவளுக்கும் வரவில்லை.. 

 

கமலி, வயது 26. கோதுமை நிறம். பார்க்க ஹோம்லி என்றும் சொல்லலாம். அப்பா செபாஸ்டியன், அம்மா நவரோஜினி. ஊர் மதுரை, அப்பா விவசாயி... அம்மா ஆசிரியர். அக்கா ரோகினி, கல்யாணம் அதுவும் காதல் கல்யாணம் முடிந்து சென்னையில் தான் இருக்கிறாள்.  ஒரு பெண் பிள்ளை ஷீலா என்று பெயர். 

 

கமலிக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் ஆகிருந்தன. ஒன்றும் அமைந்தபாடு இல்லை. ஏனென்று கேட்டால் ஒரே காரணம் தான் 'ஹ்ம்ம், பொண்ணு அழகா தான் இருக்கா, ஆனாலும் இன்னும் கொஞ்சம் எதிர் பார்க்கிறோம்.. என்ன தான் இருந்தாலும் உங்க மகளுக்கு தானே செய்யறீங்க, இதல்லாம் பண்ணா தானே சபையில மரியாதையும் இருக்கும்" இதே வாக்கியங்களை அச்சு பிசகாமல் கேட்டு கேட்டு காது புளித்து விட்டே என்றே சொல்லலாம்!!! 

இந்த பிரச்சனை கடந்து அடுத்த படிக்கு முன்னேறினாலும், 'இவள் திருமணத்திற்கு பிறகும் என் வீட்டுக்கு நான் சிறிதளவு பணம் அனுப்புவேன்' என்று கூறியவுடன் வேண்டாம் என்று கூறியவர்களே அதிகம்!!

 

என்னை படிக்க வைத்தவர்களை, என்னை வளர்த்தவர்களை நான் பார்க்காமல் வேற யாரு பார்ப்பா என்ற எண்ணம் உண்டு.. அது என்ன ஒரு ஆணிற்க்கு மட்டும் தான் பெற்றவங்கள்னு இருக்காங்களா, எங்களுக்குலாம் இல்லையா? யார் ஒற்றுக்கொள்கிறார்களோ அவங்கள கல்யாணம் பண்ணிக்கிறேன் எவ்ளோ நாட்களானாலும் சரி என்று ஸ்திரமா நின்றுவிட்டாள். 

அது என்னவோ தெரியல இந்த விஷயத்தை மட்டும் சில ஆண்களால் ஒற்றுகொள்ளவே முடியவில்லை..

 

இது மட்டுமா, 25 வயதை கடந்து திருமணம் ஆகாமல் இருந்தாலே ஏதோ அதிசய பிறவி மாதிரியும், முதிர் கன்னி என்ற முத்திரையும், ஐயோ பாவம் இன்னும் திருமணம் ஆகலையா என்கிற பரிதாபம் தான் இருக்கிறது... இதற்கு எல்லாம் இந்த நாட்டில் மட்டும் புஞ்சமே இல்லை. 

 

ஒரு பெண் ஸ்திரமா நின்றாலும் கூட, அவள் பெற்றோரை நிற்க விடுவதும் இல்லை. 

 

 

அவளை புரிந்து கொண்டவராய் "இந்த முறை அப்படிலாம் ஆகாது, முடிவு பண்ணிட்டு தான் கூப்பிடறோம்"

 

"என்னது முடிவு பண்ணிடீங்களா? யார கேட்டு முடிவு பண்ணீங்க?"

 

"யாரடீ கேக்கணும்?"

 

"ம்மா, நீ என்னை கேட்ருக்கணும்மா.. நான் தானே சம்மந்தப்பட்ருக்கேன்? நா பார்க்க வேணாமா? எனக்கு புடிக்க வேண்டாமா?"

 

"கொஞ்சம் இருடி.. உனக்கு புடிக்கும், குடும்பம் ரொம்ப நல்ல குடும்பம். அவங்க வீட்ல உன்னை ரொம்ப புடிச்சு தான் கேக்குறாங்க.. கூடவே, நம்ம திராணிக்கு மேலே எதுவுமே கேக்கல. அதுவா தகஞ்சி வந்துருக்கு, வேணாம் சொல்லி கல்லை தூக்கி போட்டுராத" 

 

"ஏன் மா, கல்யாண சந்தையிலே, நா விலை போகலனு எப்டியாச்சும் தள்ளி விடலாம்னு முடிவு பண்ணிட்டியா?"

 

"வாயில அப்டியே ரெண்டு கொடுத்தனா? நாங்க ஏன்டீ அப்டி நினைக்க போறோம்"

 

"பின்ன என்னம்மா, உங்க இஷ்டத்துக்கு முடிவு பண்ணி வச்சிருக்கீங்க?"

 

"அப்பா வாக்கு கொடுத்துட்டாங்க, அப்பா சினேகிதர் தான் சம்மந்தி அண்ணா.. ஒரு கல்யாணத்துல பார்த்தோம், பேசுனோம், ரெண்டு வாரத்துல பதில் சொல்றேனு சொன்னாங்க.. போன வாரம் சரினு சொன்னதும், நாங்களும் சரினு சொல்லிட்டோம். மாப்பிளையயும் உன் ஆபீஸ்தான் போல.. நல்ல வேலை, பார்க்கவும் நல்லா இருக்கிறார்."

 

'ஹ்ம்க்கும், மாப்பிளை யாம் மாப்பிளை, இருங்க அவனை ஓட விடுறேன்' மனதில் மட்டுமே நினைத்து கொண்டாள்..பின்னே யார் அவள் அம்மாவிடம் வாங்கி கட்டி கொள்ளுவது..

 

"சரி வரேன், டிக்கெட் போட்ருப்பீங்களே.. எத்தனை மணிக்கு பஸ்?" 

 

"இன்னிக்கு 9 மணிக்கு.. அப்பா நம்பி அங்கிள் கிட்ட நேத்து நைட் சொல்லிட்டாங்க. நீ நேரமா ஆபீஸ் விட்டு கிளம்பிடு, பஸ் ஆஹ் விட்டுடாத.."

 

"ஆஹ் சரி சரி, வரேன்.. எனக்கு லேட் ஆகுது ஆபீஸ்க்கு . நான் நைட் பஸ் ஏறிட்டு போன் பண்றேன்ம்மா" என்று வைத்து விட்டாள்.. 

 

'சரி விடு கமலி, நம்ம கண்டிஷன்க்கு ஒத்து வந்தா தான் கல்யாணம்னு நிலையா நின்றுடனும்' என்று மனசை ஒரு நிலை படுத்தி கொண்டு அன்றைய தினத்தை சிறப்பாக முடித்து கொண்டு பேருந்தில் ஏறி மதுரை சென்றடைந்தாள்..

 

 

This thread was modified 2 months ago by Lovita Elsi

   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top